World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's low voter turnout: A sign of coming class battles

இலங்கையில் குறைவான வாக்களிப்பு: எதிர்வரும் வர்க்க யுத்தத்திற்கான அறிகுறி

By K. Ratnayake
17 April 2010

Use this version to print | Send feedback

இலங்கையில் கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதளவு வாக்களிப்பு குறைவாக இருந்தமை, முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் வெகுஜனங்கள் கொண்டுள்ள அதிருப்தியின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியதால், கொழும்பு ஆளும் வட்டாரத்தில் பீதி கிளம்பியுள்ளது. பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் அரைவாசிப் பேர், அதாவது 52 வீதமானவர்களே வாக்குப்பெட்டிகளை நிரப்பியிருந்தனர். இது 1989ல் இடம்பெற்ற குறைவான வாக்களிப்பை விட 12 வீதம் குறைவானதாகும். யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு வெறும் 23 வீதமாக இருந்தது.

இந்தப் பெறுபேறுகள் பிரதிபலிக்கும் பரந்த அரசியல் அந்நியமாதலை மறைக்க கொழும்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. போதுமானளவு தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை என ஆரம்பத்தில் எதிர்க் கட்சிகள் மீது குற்றஞ்சாட்டிய பின்னர், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும, "அரசியல் மற்றும் சமூக ஸ்திரத் தன்மையுடன் நாட்டில் சாதாரண நிலைமை" நிலவுவதற்கான ஆதாரமே இந்த குறைவான வாக்களிப்பு என கடந்த சனிக்கிழமை பிரகடனம் செய்ததோடு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கத் தேர்தல்களிலும் இதே போன்ற தரவுகள் இருந்ததாக தெரிவித்தார்.

அலகப்பெரும தெரிவிப்பது போல், பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் அரசியல் உறவுகள் மற்றும் சமூக பதட்டங்கள் இல்லாமல் இல்லை என்ற உண்மைக்கும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில், இலங்கை தேர்தல் முடிவுகள் சாதாரண நிலைமையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது --2004ல் நடந்த முந்தைய பொதுத் தேர்தலில் 76 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர். அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், பதிவு செய்த வாக்காளர்களில் முக்கால் பகுதியினரே அந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய எதிர்க் கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் மேலும் பாதாளமாக இருந்தது.

ஒரு சுயாதீனக் குரலாக காட்டிக்கொள்ளும் சண்டே டைம்ஸ் பத்திரிகை, கடந்த வாரக் கடைசியில் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தை இந்தப் பிரச்சினைக்காக அர்ப்பணித்திருந்தது. "மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது" மற்றும் "அரசாங்கம் உரிமை கோரும் மக்களின் ஆணை, ஒரு விவாதத்துக்குரிய புள்ளியாக இன்னமும் இருக்கின்றது," என்ற உண்மையை அது புலம்பியது. குண்டர் தாக்குதல் மற்றும் அரச இயந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு ஆகிய எதிர்க் கட்சிகளால் கூறப்பட்ட சாக்குப் போக்குகளை கவனத்தில் கொண்ட அது, பின்னர் அத்தகைய "துஷ்பிரயோகங்கள் புதியவை அல்ல" என சரியாக சுட்டிக் காட்டியிருந்தது. அதன் சொந்த விளக்கம் சாதாரணமானது: "வாக்காளர்களின் சோர்வு--மற்றும் அக்கறையின்மையும் இறுதியாக அவற்றின் வெளிப்பாட்டை கண்டன." வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அண்மைய மாதங்களில் நடந்த மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களால் களைப்புற்ற வாக்காளர்களே குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் என்பதாகும்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியை பற்றி கொஞ்சம் விமர்சனம் கொண்டுள்ள சண்டே லீடர் பத்திரிகை, தொடர்ந்தும் சோர்வை வெளிப்படுத்தியது. "ஜனநாயகம் இறந்துவிட்டது" என்ற தலைப்பில் கடந்த வாரக் கடைசியில் அது வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம், "ஒரே கட்சி, அல்லது மிகவும் சரியாக சொன்னால், ஒரே குடும்பம்" ஆட்சி செய்வது ஒரு சாதனை, என தெரிவித்துள்ளது. "மற்றும் நாட்டின் பிரஜைகளுக்கு ஒரு தேர்வுதான் உள்ளது. அவர்கள் ஆளும் குடும்பத்துக்கு தமது விசுவாசத்தை, அடிபணிவை மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும், அல்லது கைது, சாவு அல்லது முற்றிலும் பொருத்தமற்ற மோசமான அதிகாரமின்மையின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும்." புறமுதுகில் அதுவும் வாக்காளர்களை குற்றஞ்சாட்டியது. "மக்களின் இதயத்திலும் மனங்களிலும் மீண்டும் ஜனநாயகம் ஒரு பிடிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே" அது புதுப்பிக்கப்படும் என அது குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தமது ஜனநாயக கருத்துக்கள் நசுக்கப்படுவதற்கு அனுமதித்தமைக்காக, "ஜனநாயகத்தின் சாவுக்கு" சாதாரண மக்கள் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதாகும்.

இத்தகைய அனைத்து உருக்குலைந்த விளக்கமளிப்புகளும் --அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகளின் சுயதிருப்தி விளக்கங்கள் மற்றும் இலங்கை தாராளவாதத்தின் இரத்தச்சோகை பிரதிநிதிகளின் இருண்ட தோல்விவாதம் இரண்டும்-- அடிப்படை விடயத்தை மூடிமறைக்க திட்டமிடப்பட்டவை. இதற்கு வாக்காளர்களின் "சோர்வு" அல்லது ஜனநாயக உணர்வு குறைவாக இருப்பதோ காரணமல்ல. மாறாக, எந்தவொரு முதலாளித்துவ கட்சிகளால், அல்லது பாராளுமன்ற தேர்தல்களின் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமுறைகளின் ஊடாக தமது தேவைகள் இட்டு நிரப்பப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும். பெரும்பாலானவர்கள் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் தமது அந்நியப்படுதல், அதிருப்தி மற்றும் சீற்றத்தை பதிவுசெய்துள்ளனர்.

அரசியல் ஸ்தாபனத்தின் மீதான பகைமையின் ஆழம், ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல் மற்றும் தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகும். யூ.என்.பி. மற்றும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற இலங்கை முதலாளித்துவத்தின் இரு நிறுவனக் கட்சிகளுக்கான ஆதரவானது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள், இந்தக் கட்சிகளது தொடர்ச்சியான சந்தை சார்பு வேலைத் திட்டம், பெரும் சமூக சமத்துவமின்மை ஆகிய சிரமங்களால் அரித்துப்போனது. 1990களில், அநேகமானவர்கள் கண்டனத்துக்காக சிங்கள பேரினவாத ஜே.வி.பி.க்கு வாக்களித்த போதிலும், 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட பின்னர், ஜே.வி.பி. ஒரு மாற்றீடு என்ற நிலையில் இருந்து கவிழ்ந்தது.

இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை பெரும்பாலானவர்கள் எதிர்த்த அதே வேளை, கடந்த மே மாதம் புலிகள் தோல்வியடைந்தமை, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை இலகுவாக்கவும் வழியமைக்கும் என பரந்தளவில் எதிர்பார்த்தனர். எவ்வாறெனினும், "சமாதானம் மற்றும் சுபீட்சம்" பற்றிய இராஜபக்ஷவின் வாக்குறுதிகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக சமத்துவமின்மை ஆழமடைந்துள்ளது. ஜனத்தொகையில் 15 வீதமானவர்கள் மிக ஏழ்மையான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். பொருளாதாரம் கடனில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு புதிய "பொருளாதார யுத்தத்தை" அறிவித்த இராஜபக்ஷ, அவசரகால சட்டத்தை நீட்டித்ததோடு சம்பள உயர்வு கோரி போராடிய தொழிலாளர் பகுதியினர் மீதும் பாய்ந்தார். யுத்தத்தை ஆதரித்த எதிர்க் கட்சிகள், இராஜபக்ஷவின் வர்த்தக சார்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் எந்தவித முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தமிழ் சிறுபான்மையினரைப் பொறுத்தளவில், யுத்தத்தின் முடிவானது ஒரு அழிவுகரமான இடராகும். இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களில் அடைக்கப்பட்டனர். அங்கு இன்னமும் 80,000 பேர் உள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பூராவும் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்போது கொழும்பு ஸ்தாபனத்துடன் மீண்டும் ஒருங்கிணைகின்றது. யாழ்ப்பாணத்தில் ஆகவும் வாக்களிப்பு குறைவாக இருந்தமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக உணரப்பட்டுள்ள அதிருப்தியின் அளவைக் குறிக்கின்றது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் உயிரைப் பலிகொண்ட கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தமைக்குப் பொறுப்பாக இருந்த ஜெனரலான, எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஆதரித்ததை அடுத்தே இந்த நிலைமை வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்தவாரத்தில் இடம்பெற்ற குறைவான வாக்களிப்பின் மூலம் வாக்காளர்களால் வெளிப்படுத்தப்பட்ட மிகவும் அடிப்படையான பகைமை, எதிர்வரும் வர்க்க மோதல்களுக்கான அறிகுறியாகும். கிரேக்கம், ஐரோப்பா மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது சமதரப்பினரைப் போல், இலங்கையில் உள்ள தொழிலாளர்களும், மோசமடைந்துவரும் பூகோள பொருளாதார நெருக்கடிக்கு உழைக்கும் மக்கள் விலை கொடுக்க வேண்டும் என நிதிய மூலதனம் கோருகின்ற நிலையில், வாழ்க்கைத் தரத்தின் மீது புதிய மோசமான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் முதலாவது நடவடிக்கை, அடுத்த ஆண்டு வரவு செலவு பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க சிக்கன நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கோரிக்கையை அமுல்படுத்துவதாகவே இருக்கும்.

தேர்தலில் பிரச்சாரம் செய்த சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் புதிய பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை மற்றும் அவர்கள் தமது வர்க்க நலன்களை காக்கப் போராடுவர் என உறுதியாக நம்பியது. உணர்ச்சியின்றி, அக்கறையின்றி அல்லது சோர்ந்து இருப்பதற்கு மாறாக, இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாறு உண்டு --1940களில் பிரமாண்டமான பொது வேலை நிறுத்தம் மற்றும் தீவின் ஆளும் வர்க்கத்தின் அடித்தளத்தையே ஆட்டுவித்த 1953 ஹர்த்தால் முதல் அந்த வரலாறு தொடங்குகிறது. தமது அடிப்படை உரிமைகளை காக்க தொழிலாளர்களின் உறுதிப்பாட்டில் குறைவு இல்லாத போதிலும், தமது பழைய தலைமைத்துவங்களின் துரோகத்தில் இருந்து ஊற்றெடுக்கும் தீர்க்கமான அரசியல் தடைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

இதுவரை, உயர்ந்த வாக்காளர் புறக்கணிப்பு, தற்போதுள்ள எந்தவொரு கட்சியும் உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, இந்த முடிவு வரவேற்கப்படவேண்டியது என்பது அடிப்படையில் அடையாளங் காணப்பட்டுள்ளதை பிரதிபலிக்கின்றது. ஆனால், அவர்களால் வெளிப்படுத்தப்படும் அந்நியப்படுதல், எதிர்ப்பு மற்றும் சீற்றம் மட்டும் போதாது. அரசாங்கம் ஒரு மோசமான புதிய பொருளாதார தாக்குதல்களை திட்டமிட்டுக்கொண்டிருப்பதோடு எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக தனது இருப்பில் உள்ள சகல ஒடுக்குமுறை நடவடிக்கையையும் பயன்படுத்தத் தயங்காது. தொழிலாள வர்க்கம் அதற்கேற்றவாறு, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் ரீதியில் தயாராக வேண்டும். பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பொறுப்பான இந்த முதலாளித்துவ முறைமையுடன் தொழிலாளர்களை கட்டிவைத்திருக்கும் சகல கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகளில் இருந்து முழுமையாக உடைத்துக்கொண்டால் மட்டுமே தொழிலாளர்களால் தமது வர்க்க நலன்களுக்காகப் போராட முடியும்.

அரசியல் தட்டுக்கள் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பு, அவர்களது நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசியல் கட்சியை கட்டியெழுப்புவதற்காக இன்னமும் மாற்றம்பெறாமல் இருப்பதே, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்தாகும். ஒப்பீட்டளவில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள், அதாவது தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்க நனவுள்ள பிரதிநிதிகள், சோசலிசத்துக்காக மற்றும் அனைத்துலக மாற்றீட்டுக்காகப் போராடும் ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். எதிர்வரும் வர்க்கப் போராட்டத்துக்கு இன்றியமையாத தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது, இப்போது அவசர பணியாகியுள்ளது. முதலாளித்துவத்தின் கொள்ளையடிப்புக்களுக்கு எதிரான ஒரு வழியைத் தேடும் தொழிலாளர்களை மற்றும் இளைஞர்களை, எமது வேலைத்திட்டத்தை வாசிக்குமாறும் எமது கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.