சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Leon Trotsky’s Analysis of the Emerging Global Role of US Capitalism

அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சியுறும் உலகளாவிய பாத்திரம் குறித்த லியோன் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு

By Nick Beams
24 November 2010

Use this version to print | Send feedback

நவம்பர் 18-21 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஸ்லேவிய, கிழக்கு ஐரோப்பிய மற்றும் யூரோஆசிய கல்விக் கழகத்தின் (முன்னர் ஸ்லேவியக் கல்வி முன்னேற்றத்திற்கான அமெரிக்க கழகம் என இருந்தது) 42வது வருடாந்திரக் கூட்டத்தில்லியோன் ட்ரொட்ஸ்கியின் கலாச்சார, பொருளாதார மற்றும் பூகோள-மூலோபாய சிந்தனை: அவரது படுகொலைக்கு 70 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மீளாய்வு என்ற விடயத்தின் மீதான ஒரு கருத்துக்குழுவை உலக சோசலிச வலைத் தளம் ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 1,400 வரலாற்றாசிரியர்கள், அரசியல் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் இலக்கிய அறிஞர்கள் ஏராளமான தலைப்புகளின் கீழ் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

உலக சோலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய முதல் ஆய்வறிக்கை நேற்று வெளியானது. இரண்டாவதாக, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலரும் உ.சோ... சர்வதேச ஆசிரியர் குழுவின் அங்கத்தவருமான நிக் பீம்ஸ் வழங்கிய ஆய்வறிக்கை இப்போது இங்கே வழங்கப்படுகிறது. மெஹ்ரிங் புக்ஸ் தனது புத்தகங்களை காட்சி அரங்கில் வைத்திருந்தது.

ட்ரொட்ஸ்கியின் அனைத்து தத்துவார்த்த வேலைகளிலும் போலவே, அமெரிக்காவையும் மற்றும் உலகளாவிய முக்கியத்துவமான நிலைக்கான அதன் எழுச்சியையும் குறித்த அவரது ஆய்வு மற்றும் பகுப்பும் உலக சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கை அபிவிருத்தி செய்வதுடன் பிணைந்துபட்டிருந்தது.  

அனைத்திற்கும் மேலாய், ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியை உலகப் புரட்சியின் ஆரம்ப வெடிப்பாய் கருதினார். 1905ல் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவம், உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகள் ஆழமடைவதன் மீதான பகுப்பாய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் மார்க்சிச இயக்கத்தை எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளை ஆராய்ந்தது.   

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் குறிப்பிட்டதைப் போல, “ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறை ஒரு பிரமிக்கத்தக்க தத்துவார்த்த திருப்புமுனையை பிரதிநிதித்துவம் செய்தது. எப்படி மனிதகுலத்திற்கு 1905ன் இன்னொரு பரிசான ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம், மனிதன் பிரபஞ்சத்தைக் கண்டு வந்த கருத்துச் சட்டகத்தை அடிப்படையான வகையிலும் திரும்பவியலாத வகையிலும் மாற்றி, செவ்வியல் நியூட்டனிய இயற்பியலின் கட்டுகளுக்குள் பதில் காண முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒரு வழியை வழங்கியதோ, அதேவகையில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவமானது புரட்சிகர நிகழ்முறைகள் கண்டுணரப்பட்ட பகுப்பாய்வுக்கான முன்னோக்கை அடிப்படையாக மாற்றியது. 1905க்கு முன்னதாக, புரட்சிகளின் அபிவிருத்தி என்பது தேசிய நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சியாக கருதப்பட்டது, அவற்றின் முடிவு அதன் உள்முக சமூக-பொருளாதார கட்டமைப்பு மற்றும் உறவுகளின் தர்க்கத்தால் நிர்ணயிக்கப்படும். ட்ரொட்ஸ்கி இன்னொரு அணுகுமுறையை முன்மொழிந்தார்: நவீன சகாப்தத்தில் புரட்சியை அடிப்படையாய், அரசியல்ரீதியாக தேசிய அரசுகளில் வேரூன்றிய வர்க்க சமுதாயமாக இருப்பதில் இருந்து உலகரீதியாக ஒருங்கிணைந்த பொருளாதாரத்தையும் மற்றும் சர்வதேசரீதியாக ஐக்கியப்பட்ட மனிதகுலத்தையும் அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியுறும் ஒரு வர்க்கமற்ற சமுதாயமாக சமூகரீதியாக உருமாறுவதற்கான ஒரு உலக-வரலாற்று வளர்ச்சிப் போக்காய் புரிந்து கொள்வது.”என்பதே அது[1]

1917ன் ஆரம்பத்தில் வெடித்த ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கிளர்ச்சிப் போராட்டத்தை அரசியல் அதிகாரத்திற்கான யதார்த்தத்திலான வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கு போல்ஷிவிக் கட்சிக்கு பாதை திறந்து விட்ட முக்கியமான மூலோபாய கருத்தாக்கமாய் நிரந்தரப் புரட்சித் தத்துவம் நிரூபணமானது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய வருடங்களில் தொடங்கி, பின் அந்த சண்டையின் இறுதிக் காலகட்டத்தில் மீண்டும் எழுந்து, பின் 1917 அக்டோபருக்குபின் ஆழமுற்று விரிவடைந்த ஒரு சர்வதேச மேலெழுச்சியின் உச்சமாக ரஷ்யப் புரட்சி இருந்தது. 

போல்ஷிவிக்குகள் எதிர்பார்த்ததைப் போல் ரஷ்யாவின் புரட்சிக்குப் பின்னர் புரட்சிகர போராட்டங்கள் எழுந்தன, ஆனால் அவை பின் தள்ளப்பட்டன. புற நிலைமைகள் சாதகமாய் இல்லாதது இதன் காரணமல்ல, மாறாக அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்கவும் ஒழுங்கமைக்கவும் போல்ஷிவிக்குகளுடன் ஒப்பிடத்தக்க எந்தவொரு கட்சியும் இல்லாததே காரணம் ஆகும்.

ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதுகையில், ”போருக்குப் பிந்தைய வெகுஜன எழுச்சி ஏற்கனவே பின்சரியத் தொடங்கும் வரைக்கும், இளம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அரைகுறை வெளிவரையாகவும் கூட ஒரு வடிவத்தை எடுக்காமல் இருந்தன. [2]

போருக்குப் பிந்தைய புரட்சிகர மேலெழுச்சி சரியத் தொடங்கியிருந்த நிலையில் (எல்லாவற்றுக்கும் மேலாய் ஜேர்மனியில் மார்ச் நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இது அடையாளப்பட்டது) 1921 ஜூன் - ஜூலையில் நடந்த கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ் ஒரு புதிய நோக்குநிலையை எடுத்தது. அதிகாரத்துக்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஐக்கிய முன்னணி என்னும் தந்திரோபாயத்தின் மூலமும் இடைமருவு கோரிக்கைகளின் ஒரு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் மூலமும் இளம் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெகுஜனங்களை வென்றெடுக்க வேண்டும் என்பதே அது.

1923 ஜனவரியில் ரூர் (Ruhr) பிரதேசம் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் அரசியல் அதிகாரத்தை வெல்வதை மீண்டுமொரு முறை ஜேர்மனியின் திட்டநிரலில் வைத்தது. ஆனால் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தனது பணியை புதிய சூழ்நிலையைச் சந்திக்கும் வகையில் நோக்குநிலை அமைக்கத் தவறியது. அதிகாரத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை தொடக்குவதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அதனைக் கைவிட்டது. கட்சியின் தலைவரான ஹேன்ரிச் பிராண்ட்லர் பின்னர் இவ்வாறு விளக்குகையில் தான் 1923 கிளர்ச்சிக்கான தயாரிப்புகளை எதிர்க்கவில்லை என்கிற அதே சமயத்தில் நிலைமை கூர்மையாய் புரட்சிகரமுற்றதாக நான் காணவில்லை என்றார். [3] ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் இந்த ஊசலாட்டங்கள் ஜேர்மனியின் அக்டோபர் அரசியல் படுதோல்வியில் முடிவதைக் கண்டது.

ஜேர்மன் புரட்சி தோல்வியுற்றதானது போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் முதலாளித்துவ ஸ்திரப்படலுக்கான ஒரு காலகட்டத்திற்குப் பாதை திறந்தது. இதில் அமெரிக்கா தான் தலைமையான பொருளாதார மற்றும் அரசியல் பாத்திரத்தை ஆற்றியது. 1924ல், பொருட்களை விலைகுறைக்கும் (deflationary)  வேலைத்திட்டத்தின் மூலம் ஜேர்மன் நாணயத்தையும் பொருளாதாரத்தையும் மறுஸ்திரம் செய்வதற்கான டாவேஸ் திட்டம், மற்றும் அமெரிக்காவிடம் இருந்து பெரும் கடனுதவிகள் வழங்கப்பட்டது ஆகியவையெல்லாம் ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகளின் தலைவர்களை ஒரு புதிய யதார்த்தத்துக்கு நேருக்கு நேராய் கொண்டு வந்து நிறுத்தியது. அது என்னவென்றால் பொருளாதார, மற்றும் எனவே அரசியல் அதிகாரமானது அட்லாண்டிக் கடந்த பரந்த நகர்வைக் கண்டிருப்பது (முதலாம் உலகப் போர் வெடித்த தசாப்தத்தில் இது நிகழ்ந்திருந்தது) என்பதே.

உடனடியாக, உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் இந்த புதிய காரணியின் தாக்கங்களை ட்ரொட்ஸ்கி ஆராயத் தொடங்கினார். 

1917ன் முதல் மாதங்களில் அவர் நியூயோர்க்கில் கொஞ்ச காலத்தை கழித்திருந்த காரணத்தால் அமெரிக்காவின் முக்கியத்துவம் குறித்த அவரது உணர்திறன் அதிகமாய் இருந்தது. நவீன காலத்தின் மிகுந்த வெளிப்பாடுற்ற இந்த மாநகரத்திற்கு விஜயம் செய்த மற்றவர்களைப் போலவே, ட்ரொட்ஸ்கியும் அதனை உருவாக்கியிருந்த பொருளாதாரத்தின் இயங்குவேகத்திலும் சக்தியினாலும் பாதிக்கப்பட தவறவில்லை. ஒரு குறுகிய காலத்திற்கு மனிதனின் தலைவிதி வார்த்தெடுக்கப்படும் வார்ப்பாலைக்குள் தான் எட்டிப் பார்க்க முடிந்ததாக அவர் பின்னர் எழுதினார். [4]

அமெரிக்காவின் எழுச்சி பல தொடர்ச்சியான அடிப்படைக் கேள்விகளை எழுப்பியது. ஐரோப்பிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கிற்கும் மற்றும் ஐரோப்பிய அரசுகளிடையேயான அதன் உறவுகளுக்கும் இதன் தாக்கங்கள் என்ன? அமெரிக்க தலையீட்டின் ஆரம்ப வடிவம் ஜேர்மன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடனுதவி வழங்குவது மற்றும் அரசியல் சமநிலையை மீட்சி செய்வது என இணக்கத்தின் வடிவில் தான் இருந்தது, ஆனால் அதன் நீண்ட கால தாக்கங்கள் என்னவாக இருக்கும்? இந்த மாற்றத்தின் பின்னால் இருந்த உந்துசக்திகள் எவை, அவை எங்கே இட்டுச் செல்லும்? உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கு அமெரிக்காவின் வெளிப்படையான பொருளாதார வளர்ச்சியின் தாக்கங்கள் என்னவாய் இருந்தன?    

அத்துடன் இறுதியாக மிக முக்கியமான மூலோபாய கேள்வி என்னவென்றால், அமெரிக்காவின் மற்றும் அதன் பொருளாதார இயங்குவேகத்தின் எழுச்சி என்பது ரஷ்யப் புரட்சி உரிய காலத்திற்கு முந்தியது என்பதைக் குறித்ததா?

இந்த கேள்விகளுக்குள் போகும் முன்னதாக, ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு வழிமுறை குறித்த ஒரு பொதுவான புள்ளியைக் கூறி விடுகிறேன். ட்ரொட்ஸ்கி காலத்தின் மற்ற ஒவ்வொரு மார்க்சிஸ்டுடன் ஒப்பிடும்போதும் அவரது இந்த வழிமுறை மிகத் தனித்துவமான அம்சமாக விளங்கியதோடு அவை ட்ரொட்ஸ்கியை தற்போதைய வரலாற்று சகாப்தத்திற்கு மிகவும் பொருந்தியவராகவும் ஆக்குகிறது.

ட்ரொட்ஸ்கி தனது பூகோள-அரசியல் பகுப்பாய்வுக்கு, உலகப் பொருளாதாரத்திற்கும் (அதாவது உற்பத்தி சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தி) முதலாளித்துவத்தின் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலமைந்த முரண்பாட்டின் மீதான ஆய்வை அடித்தளமாய்க் கொண்டார். ட்ரொட்ஸ்கியைப் பொருத்தவரை, பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளிடையேயான மோதல் என்பது வெறுமனே பல்வேறு எதிரெதிர் தரப்புகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் மோதலின் விளைவு மட்டுமல்ல (இதனை அவர் விரிவாகவும் விளக்கினார்) மாறாக, அனைத்திற்கும் மேலாய், இன்னும் மிக அடிப்படையான ஒன்றின் வெளிப்பாடு ஆகும்.

முதலாம் உலகப் போரின் மத்தியில் அவர் எழுதினார்: “ஏகாதிபத்தியம் என்பது, தேசம் மற்றும் அரசின் நெருக்கும் தளைகளில் இருந்து விடுபட்டு  மனிதப் பொருளாதாரத்தை உலக அளவில் கட்டுமானம் செய்யும் பொருளாதார அபிவிருத்தியிலான ஒரு முற்போக்கான போக்கின்  கொள்ளையடிக்கும் முதலாளித்துவ வெளிப்பாட்டையே பிரதிநிதித்துவம் செய்கிறது.” [5] இங்கே தான் சோசலிசத்திற்கான புறநிலை அவசியம் தங்கியிருக்கிறது. ஏனென்றால் ஒட்டுமொத்த மனித கலாச்சாரத்தையும் இப்போது அச்சுறுத்திய முரண்பாடுகளில் இருந்து வெளிவருவதற்கு இது ஒன்று தான் வழியாகும்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து தான் அமெரிக்காவின் எழுச்சி மற்றும் அதன் உலகளாவிய பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு நடந்தது. 1922ன் இறுதியில், அப்போது தான் அவரது கவனம் போருக்குப் பிந்தைய நிலைமை மாற்றங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருந்த நிலையில், அவர் நிகழ்த்திய ஒரு உரையில், சமீப காலத்தில் தான் கம்யூனிச அகிலம் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஐரோப்பிய முதலாளித்துவம் சிதைந்துபோய் விட்டிருந்தது என்று கூறியது சரியென்ற போதிலும், அமெரிக்கா விடயத்தில் அதே வசனத்தைப் பாவிக்க முடியாது. உண்மையில், அமெரிக்க முதலாளித்துவம் செழித்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்த அவதானம் கேள்வியை அர்த்தமற்றதாக செய்து விடவில்லை....அது பகுப்பாய்வின் தொடக்கப் புள்ளி மட்டுமே. அமெரிக்க எழுச்சியின் தாக்கங்கள் ஐரோப்பாவுக்கு என்னவாக இருந்தது, உலகத்திற்கு என்னவாக இருந்தது? என்பதே அக்கேள்வியாக அமைந்தது.

1924 ஜூலை 28 அன்று, டாவேஸ் திட்டத்தின் கீழ் ஜேர்மனியின் மறுஸ்திரப்படலை ஒட்டி, உலக அபிவிருத்தியின் முன்னோக்கு என்ற தலைப்பில் வழங்கிய ஒரு முக்கிய உரையில் இந்த கேள்வியை ட்ரொட்ஸ்கி மீள்பார்வை செய்தார். அமெரிக்கா தனது எதிரிகளை விட பாரிய அளவில் மிக அதிக வலிமை கொண்டதாக ஆகியிருந்ததை (இங்கிலாந்து தனது உச்ச சமயத்தில் கொண்டிருந்ததை விடவும் அதிகமாக) கவனத்துக்கு கொண்டுவருவதில் இருந்து அவர் தொடங்கினார். இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியலில் ஒரு மையமான காரணி என்று அவர் வலியுறுத்தினார். இதனை ஒப்புக் கொள்ளாமல், எதனையுமே புரிந்து கொள்ள முடியாது.  

1898 ஆம் ஆண்டில் இருந்து செயலூக்கமிக்க உலகக் கொள்கையின் பாதையில் அமெரிக்கா  காலடி எடுத்து வைக்கத் தொடங்கியமை உள்நாட்டுப் போரின் முடிவு மற்றும் தொழிற்துறை வடக்கின் வெற்றி இவற்றைத் தொடர்ந்து வந்த பரந்த பொருளாதார உருமாற்றத்தின் விளைவாய் நிகழ்ந்திருந்தது. ஆயினும், நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, இயங்குவேகத்துடன் திகழ்ந்த அமெரிக்க முதலாளித்துவம் வட அமெரிக்க கண்டத்தின் கட்டமைப்பையும் தாண்டி வளர்ச்சி கண்டிருந்தது. முதலாம் உலகப் போர் வெடித்தபோது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும், ஐரோப்பிய பித்தர்களின் இரத்தத்தை டாலர்களாக மாற்றுவதுடன் அமெரிக்கர்கள் திருப்தி கொண்டு விட்டிருந்தனர் என ட்ரொட்ஸ்கி விளக்கினார். ஆனால் ஜேர்மன் வெற்றி பெறுவதற்கான ஒரு சாத்தியம் எழுந்த சமயத்தில், தனது மிக அபாயகரமான எதிரியாகும் சாத்தியத்திறன் கொண்ட நாட்டின் அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டது.

ஒட்டுமொத்த கண்டத்தின் பரந்த மூலவளங்களால் ஆஸ்தியளிக்கப்பட்ட அனுகூலங்களுடன் அமெரிக்க முதலாளித்துவம் எந்த தனிச்சிறப்பான நிலைமைகளின் கீழ்  அபிவிருத்தியுற்றிருந்ததோ, அந்த நிலைமைகள் தங்களை தத்துவார்த்தரீதியாக எங்ஙனம் வெளிப்படுத்தியிருந்தன என்பதையும் ட்ரொட்ஸ்கி காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம், அதனது கொள்ளைக்காரத்தனத்துடனும் மற்றும் குற்றவியல் தன்மை பெற்றதாயும் இருந்த அதே நேரத்தில், சமாதானப் பதாகையின் கீழ் உலக அரங்கில் அதனால் தலையீடு செய்ய முடிந்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் கீழ் உழைப்புசக்தி பரந்த உயர்ந்த உற்பத்தித்திறன் கொண்டிருந்ததால் அது சுதந்திரம்”, “திறந்த கதவு”, “கடல்களின் சுதந்திரம்”, “தேசங்களின் சுய-நிர்ணயம்”, “பின்இணைப்புகள் இன்மை இன்னும் இதுபோன்ற பல சுலோகங்களை ஊக்கிவிட முடிந்தது. இந்த படோடோப கூற்றுகள் எல்லாம் இருந்தபோதிலும், உலகத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் மறுஒழுங்கு செய்வதற்குக் குறைவான எதிலும் அமெரிக்கா முனையவில்லை.

பெருமந்த நிலையின் தோற்றங்கள், மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நாம் பயனுள்ள முறையில் ஆராயலாம்.

முதலாவதற்கு வருகிறேன். 1926 பிப்ரவரியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்ற தலைப்பில் ட்ரொட்ஸ்கி வழங்கிய ஒரு முக்கிய உரையில் அமெரிக்காவின் எழுச்சி குறித்த அவரது பகுப்பாய்வை ஆழப்படுத்தினார். அதன் முடிவில், ஒரு மையமான வரலாற்றுக் கேள்வியை அவர் எழுப்பினார்: ரஷ்யப் புரட்சி தனக்கு அடித்தளமாய்க் கொண்டிருந்த உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கு என்பது தற்போதைய சூழ்நிலையால் செல்தகமையை இழந்திருக்கிறதா?

"உலக அளவில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்கிறதும், அத்துடன் மனிதகுலத்தை முன்னோக்கி அழைத்துச் செல்கிறதுமான திறனை முதலாளித்துவம் இன்னமும் கொண்டிருக்கிறதா? இது ஒரு அடிப்படையான கேள்வி. ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்துக்கு, கிழக்கத்திய நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஒட்டுமொத்த உலகத்திற்கு, அத்துடன் முதலாவதும் முதன்மையானதுமாய், சோவியத் ஒன்றியத்தின் தலைவிதிக்கு இக்கேள்வி தீர்மானமான முக்கியத்துவம் படைத்ததாகும். ஒரு முற்போக்கான வரலாற்று இலக்கை பூர்த்தி செய்வதாய் இருக்கிறதான, மக்களின் செல்வங்களை அதிகரிப்பதான, அவர்களது உழைப்பை கூடுதல் உற்பத்தித் திறனுடையதாய் ஆக்குகிறதான திறனை முதலாளித்துவம் இப்போதும் கொண்டிருக்குமானால், அதன் அர்த்தம் நாம், அதாவது சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி காலத்திற்கு முந்தியே அதன் கூட்டுப் பாடலை பாடியிருந்தோம்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சோசலிசத்தைக் கட்ட முயலுவதற்கு அதிகாரத்தைக் கைப்பற்ற நாம் அவசரப்பட்டு விட்டோம் என்பதையே அது குறிப்பதாய் அமையும். ஏனென்றால், மார்க்ஸ் விளக்கியது போல, எந்த சமூக அமைப்பும் அதில் பொதிந்த அத்தனை சாத்தியக்கூறுகளையும் ஆற்றலிழக்கமுன் மறைவதில்லை. நமக்கு முன்னால் புதிய பொருளாதாரச் சூழ்நிலையானது விரிந்து கொண்டிருப்பதை பார்த்துக்  கொண்டிருக்கும் நிலையில், அனைத்து முதலாளித்துவ மனிதகுலத்தின் மீதும் அமெரிக்க மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சக்திகளின் இடையுறவிலான தீவிரமான மாற்றங்களின் நிலையில் நாம் இக்கேள்வியை புதிதாக முன்வைக்க வேண்டியிருக்கிறது: முதலாளித்துவம் அதன் காலத்தை வாழ்ந்து முடித்து விட்டதா அல்லது அதற்கு முன்னதாக இன்னமும் ஒரு முற்போக்கான இயங்குவதற்கான ஒரு  முன்னோக்கு இருக்கிறதா?”[6]

ஐரோப்பாவிற்கு, இந்த கேள்வி நிச்சயமாக எதிர்மறையான பதிலையே பெற்றது. ஆனால் அமெரிக்காவில் இந்த சித்திரம் வேறுபட்டதாய் தோன்றியது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பெரும் பகுதிகளில் முதலாளித்துவம் இன்னும் வலுப்பெறவே தொடங்கியிருக்கவில்லை.

உலகப் பொருளாதாரத்தை இந்த வகையில் பிரிக்கும்போது, முதலாளித்துவம் ஆற்றுவதற்கு இன்னும் ஒரு முற்போக்கான பாத்திரம் இருந்ததாகவே தோற்றமளித்தது. ஆனால் இத்தகைய ஒரு வழிமுறை தவறானது. எப்படி 1905ல் ரஷ்யப் புரட்சியானது ஒரு தேசிய நிகழ்வாய் புரிந்து கொள்ளப்பட முடியாது என்றிருந்ததோ, அதுபோல் தான் அமெரிக்க எழுச்சியும்.

அமெரிக்கா இனியும் சுய-சார்புடையதாய் இல்லை. அதனைத் தனியாக வைத்து பார்க்க முடியாது ஏனென்றால் அமெரிக்க விரிவாக்கம் என்பது உலக சமநிலையைச் சார்ந்திருந்தது. ஐரோப்பா அமெரிக்காவைச் சார்ந்திருந்தது, ஆனால் அமெரிக்கா, பதிலாய், ஐரோப்பாவைச் சார்ந்திருந்தது.

அமெரிக்கா மொத்த உலகத்தையும் தன்னைச் சார்ந்திருக்கும் வகையில் எந்த அளவு அதிகமாய் கொண்டு வருகிறதோ அந்த அளவுக்கு அது மொத்த உலகத்தையும் அதன் அனைத்து முரண்பாடுகள் மற்றும் அச்சுறுத்தும் கிளர்ச்சிகளுடன் சார்ந்திருப்பதாய் ஆகிறது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். [7]

இந்த உரைக்குப் பின்னர் நான்கு வருட காலத்திற்குள் தொடங்கவிருந்த முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார நிலைக்குலைவான பெருமந்த நிலையை புரிந்து கொள்வதற்கு ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறை அத்தியாவசியமானது.

அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு தலைவரான பென் பெர்னான்கே பெருமந்த நிலையின் மூலங்களை (இதனை அவர் பொருளாதாரத்தின் புரிதலுக்கு நழுவும் புனிதப்பாத்திரம் என அழைக்கிறார்) விளங்கிக் கொள்வதில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டிருக்கிறார். அவர் மில்டன் ஃபிரைடுமேனை படிப்பதைக் குறைத்து ட்ரொட்ஸ்கியை அதிகமாய்ப் படித்திருந்தால் நிச்சயமாக அவருக்குக் கூடுதலான வெற்றி கிடைத்திருக்கும் என்பதை நான் துணிச்சலுடன் அவருக்கு ஆலோசிக்கிறேன். காரணம் என்னவென்றால், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் மையப்பொருளாய் இருந்த ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையிலான இடையுறவு மற்றும் முரண்பாடுகள் தான் கனகச்சிதமாக பெருமந்த நிலையின் தோற்றுவாய்களைக் காண்பதற்கான இடமாய் இருக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவமானது, அசெம்பிளி லைன் உற்பத்தி முறையின் மூலமாக (இதனை ட்ரொட்ஸ்கி கன்வேயர் முறை என்று குறிப்பிட்டார்) உழைப்பின் உற்பத்தித் திறனை முன்கண்டிராத மட்டத்திற்கு அபிவிருத்தி செய்திருந்தது. ஆனால் ஐரோப்பாவில் இந்த அபிவிருத்தியை பிரதியெடுக்க முடியவில்லை. இங்கே, உற்பத்தி சக்திகள் அமெரிக்காவில் போல விரிவடைவதற்கான இடத்தைக் கொண்டிருக்கவில்லை (எப்படிப் பார்த்தாலும் பெரும் உற்பத்திக்கு பெரும் சந்தை அவசியமாய் இருக்கிறதல்லவா) மாறாக அவை ஐரோப்பிய தேசிய-அரசு அமைப்புமுறையின் சுருள்களுக்குள் சிக்குண்டு சிறைபட்டுக் கிடந்தது. ஐரோப்பிய தேசிய-அரசுகளின் குறுகிய கட்டமைப்புக்குள் முதலாளித்துவம் மூச்சுத்திணறியதால் தான் முதலாம் உலகப் போர் வெடித்தது. ஆனால் நான்கு வருட கால அழிவு மற்றும் வறுமைக்குப் பின்னர், வெர்செயில்ஸ் ஒப்பந்தமானது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விட்டிருந்தது. 

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்த சூழ்நிலையை ஆராய இன்னும் கொஞ்சம் உள்ளே போகலாம். உபரி மதிப்பானது ஒரு இடத்தில் நுகரப்பட வேண்டுமாயின் இன்னொரு இடத்தில் அது பிழிந்தெடுக்கப்பட வேண்டும் என்று மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டார். இதன் மூலம் அவர் அர்த்தப்படுத்தியது, மூலதனத் திரட்டல் என்பது தனிநபரின் (ஒரு தனி நிறுவனத்துக்கோ அல்லது ஒரு ஒற்றை முதலாளித்துவ பொருளாதாரத்திற்கோ கூட இந்த வகையில் எந்த பெரிய மட்டத்திற்குத் தோன்றினாலும்) பிரச்சினையல்ல, மாறாக அது ஒரு சமூக நிகழ்வுப்போக்கு என்பதை. அமெரிக்க முதலாளித்துவமானது கன்வேயர் முறையின் மூலமாக உபரி மதிப்பின் பிழிவையும் மூலதனத் திரட்டையும் புதிய மட்டங்களுக்கு உயர்த்தியது. ஆனால் இந்த அபிவிருத்தி ஐரோப்பாவிற்கு பொருத்தமற்றதாக இருந்தது.

இவ்வாறாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் மிகப்பெரும் இயக்க ஆற்றல்  எல்லாம் இருந்தபோதிலும், திரட்டல் நிகழ்வுப்போக்கு ஒரு உலக அளவில் முன்னேற முடியாமல் இருந்தது. அதனால் தான், ஐரோப்பாவை மறுஸ்திரம் செய்வதற்கு டாவேஸ் திட்டம் தொடக்கப்பட்ட வெறும் ஆறே ஆண்டுகளின் பின், உலக முதலாளித்துவப் பொருளாதாரமானது பெருமந்தநிலைக்குள் மூழ்கி, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய தனது இரண்டு மிக முன்னேறிய பாகங்களில் பேரழிவான பின்விளைவுகளையும் கொண்டுவந்தது. 

அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சியானது, அது தன்னைச் சுற்றி அமைதிவாதம் என்னும் புனிதஅங்கியைச் சுற்றிக் கொண்டிருந்த போதிலும், ஒரு புதிய உலகப் போரின் வெடிப்பின் விளைவு 1914-18ஐ விடவும் பெரிய அளவினதாக இருக்கும் என்பதை வெகு ஆரம்பத்திலேயே ட்ரொட்ஸ்கி தெளிவாய் கூறி விட்டார்.

உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்காவின் வேலைத்திட்டம் என்பது அட்லாண்டிக் மற்றும் பசிபிக்கை களமாய்க் கொண்டு நடைபெறக் கூடிய மிகப் பெரும் சர்வதேச நாய்ச்சண்டைக்கான தயாரிப்பினை வழங்கும் ஒரு முன்னோக்காகத் தான் இருக்கிறது. ஏனென்றால் அனைத்து நாடுகளின் முதலாளித்துவமும் சொன்னவுடன் பின்னால் போய் விடுவார்கள், சண்டையில்லாமல் அமெரிக்காவின் ஏவலாட்களாக மாறுவார்கள் என்று சிந்திப்பது கடினம்....முரண்பாடுகள் மிகமிகப் பெரியவையாய் இருக்கின்றன, வேட்கைகள் மிகவும் தணிக்க முடியாதவையாக இருக்கின்றன...”[8]

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் தான் பிரதான பிரிவுக் கோடு இருக்கும் என்று ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கி கருதினார். நிகழ்வுகள் துல்லியமாய் இந்த வடிவத்தை எடுக்கவில்லை. ஆனால், ஒரு கணிப்பு எந்த அளவுக்கு குறிப்பிட்டதாய் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நிபந்தனைக்குட்பட்டதாகவும் இருக்கும் என்கிற அம்சத்தின் படி, அவரது பகுப்பாய்வின் அடிப்படை சட்டகத்தை ஒருவர் எடுத்துப் பார்த்தால், அப்போது ட்ரொட்ஸ்கியின் அடிப்படை முன்னோக்கு முழுமையாக சரிபார்க்கப்பட்டதை உணரலாம். அத்துடன், இரண்டாம் உலகப் போரின் முடிவைக் கொண்டு பார்த்தால், ‘போர் எந்த வடிவத்தில் எழுந்தாலும், அமெரிக்கா பிரிட்டனின் மரபுவழியில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனையும் என்கிற அவரது கணிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் துல்லியமானதாய் நிரூபணமானது.

1928ல் கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டத்தை (புகாரின் மற்றும் ஸ்ராலினால் தயாரிக்கப்பட்டது) ட்ரொட்ஸ்கி ஒரு சுட்டெரிக்கின்ற வெகு ஆழத்திற்கு எட்டுகிற ஒரு விமர்சனத்திற்கு ஆட்படுத்தினார். முதலாவது வரைவில் அமெரிக்காவின் பெயரும் கூட குறிப்பிடப்படவில்லை. இரண்டாவது ஒரு சில வெற்று பொதுமைப்படுத்தல்களைத் தவிர அமெரிக்காவின் உலக மேலாதிக்க எழுச்சியின் மூலோபாய தாக்கங்கள் குறித்த எந்த மதிப்பீட்டையும் செய்வதற்குத் தவறியது.

அமெரிக்காவின் இரக்கமற்ற எழுச்சியும், ஐரோப்பாவை இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட பங்கீடுகளுக்கு -குறைத்ததும் அரசுகளிடையேயான உறவுகளில் ஒரு அசுரத்தனமான கூர்மைப்படலுக்கு அழைத்துச் செல்லும்... இராணுவ மோதலின் ஆவேசமான இழுப்புகளும் உடன்வரும். ஏனென்றால் அரசுகளும் அதேபோல் வர்க்கங்களும் ஒரு படோடோபமான அதிகரிக்கின்ற பங்கீடுகளை காட்டிலும் ஒரு அற்பமான குறைந்து கொண்டே போகும் ஒரு பங்கீட்டுக்கு இன்னும் தீவிரத்துடன் சண்டையிடும் என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.[9]

ஐரோப்பாவினுள்ள அரச முரண்பாடுகளின்  உள்முகமான சச்சரவுகள், தொடர்ந்து கூடுதலாய் மையத்தில் குவித்து அமைந்திருக்கும் வட அமெரிக்க குடியரசை நோக்கிய எந்த வகை தீவிரமான மற்றும் வெற்றிகரமான எதிர்ப்பையும் நம்பிக்கையற்றதாய் ஆக்குகின்றன என்பதையும்; அத்துடன் ஐரோப்பிய குழப்பத்தை ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் மூலமாகத் தீர்ப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதற் கடமைகளில் ஒன்று என்பதையும் வரைவு விளக்கவில்லை என்று விவரித்தார். [10]

கம்யூனிச அகிலத்திற்கு ஒரு முன்னோக்கை அபிவிருத்தி செய்வதே ட்ரொட்ஸ்கியின் கவலையாய் இருந்தது. ஆனால் அவர் எழுப்பிய பிரச்சினை, அதாவது வட அமெரிக்க குடியரசால் ஐரோப்பிய சக்திகளின் மீது செலுத்தப்பட்ட பிரம்மாண்டமான அழுத்தம், பிற வட்டங்களின் விவாதப் பொருளாய் இருந்தது.

உதாரணமாக, அடோல்ஃப் ஹிட்லரின் 1928ல் எழுதிமுடிந்து வெளிவராத இரண்டாவது புத்தகம் புத்தகத்தில் இது தான் மையக் கருவாய் இருந்தது. சோவியத் ஒன்றியத்தை வெற்றிகண்டு காலனியாக்குவதன் மூலம் பெறப்படுகிற மூலவளங்களைக் கொண்டு அமெரிக்காவை எதிர்ப்பதற்கு அவசியமான ஒரு ஸ்திரமான அடித்தளத்தை உருவாக்கலாம். அதற்கான ஒரு ஜேர்மன் சாம்ராஜ்யத்தை நிறுவுவதன் மூலம் ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் குழப்பங்களை தீர்க்கலாம் என்று ஹிட்லர் அறிவுறுத்தினார். இது ஐந்து வருடங்களுக்குள் ஜேர்மன் ஏகாதபத்தியத்தின் வேலைத்திட்டமானது.

வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ் குறிப்பிடுவது போல: “தேசிய சோசலிசத்தின் மூலாதாரம் என்னவென்றால், செல்வம் கொழிக்கும் ஆங்கிலம்-பேசும் நாடுகள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒரு உலகளாவிய பொருளாதார ஒழுங்கிற்குள் ஜேர்மனிக்கான ஒரு இடத்தை அமைதியாக ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும், இந்த ஒழுங்கினை நோக்கிய ஒரு தீரமிக்க பாரிய சவாலை முன்நிறுத்துவதற்கு தனது மக்களின் அடக்கி வைக்கப்பட்டிருந்த வெறுப்புணர்ச்சியை அணிதிரட்டுவதில் ஹிட்லர் முனைந்தார். ஐரோப்பிய நாடுகள் முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் உலகளாவிய அளவில் செய்ததை மீண்டும் செய்கையில், ஜேர்மனி தனது சொந்த ஏகாதிபத்திய பின்னிலத்தை உருவாக்கும்; கிழக்கில் தனது கடைசி நிலப் பறிமுதல் மூலம் உள்நாட்டில் வளமைக்கான தன்னிறைவு அடிப்படையை உருவாக்கும் என்பதோடு வரவிருக்கும் அமெரிக்காவுடனான வல்லரசுப் போட்டியில் தாக்குப் பிடிப்பதற்கு அவசியமான தளத்தையும் உருவாக்கும். இவ்வாறாக, உலக முதலாளித்துவத்தின் சமனற்ற அபிவிருத்தியால் கிளறப்பட்ட பதற்றங்களுக்கு (உண்மையில் இப்பதட்டங்கள் இன்றளவும் நம்முடன் உள்ளன) ஒரு புத்திசாலித்தனமான பதிலிறுப்பாக ஹிட்லர் ஆட்சியின் மூர்க்கத்தனத்திற்கு காரண விளக்கம் கூற முடியும்.” [11]

ஜேர்மனியில் நாஜி வெற்றியைத் தொடர்ந்து, ட்ரொட்ஸ்கி ஒரு புதிய உலகப் போருக்கான சாத்தியக் கூறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். அத்துடன் யுத்தம் எப்படித் தொடங்கினாலும் அமெரிக்கா தலையீடு செய்ய நிர்ப்பந்தமுறும் என்றார்.

1934ல் Foreign Affairs என்கிற இதழில் வெளிவந்ததேசியவாதமும் பொருளாதார வாழ்வும் என்கிற அவரது மிகச் சிறப்பான கட்டுரையில் ட்ரொட்ஸ்கி அமெரிக்காவைப் போருக்குள் செலுத்துகிற சக்திகளை பற்றி குறிப்பிட்டார். அமெரிக்க முதலாளித்துவமானது உழைப்பின் உற்பத்தித் திறனை புதிய உயரங்களுக்கு அபிவிருத்தி செய்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் மற்றும் ஆசியாவில் எங்கெல்லாம் உலகின் மிக முன்னேறிய தொழில்நுட்பமானது அதன் பாதையில் அரசுகளின் நடவடிக்கைகளால் மறிக்கப்பட்டதோ, அந்த நடவடிக்கைகள் மிகக் குறைந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த சூழ்நிலை காலவரையின்றி தொடர முடியாது.

ட்ரொட்ஸ்கி எழுதினார்: “விரைவிலோ அல்லது சற்று காலம் தள்ளியோ, அமெரிக்க முதலாளித்துவமானது நமது ஒட்டுமொத்த கோளத்தின் நீள அகலத்திலும் தனக்கான பாதைகளைத் திறந்தாக வேண்டும். என்ன வழிமுறைகளில்? எல்லா வழிமுறைகளிலும். உற்பத்தித் திறனின் மிக உயர்ந்த துணைக்காரணம் என்பது அழிப்பிற்கான மிக உயர்ந்த துணைக்காரணத்தையும் குறிப்பிட்டு காட்டுகிறது. நான் போரை உபதேசிக்கிறேனா? கொஞ்சம் கூட இல்லை. நான் எதனையும் உபதேசிக்கவில்லை. உலக சூழ்நிலையை பகுத்தாய்ந்து பொருளாதார இயக்கவியலின் விதிகளில் இருந்தான முடிவுகளை வரைவதற்குத் தான் நான் முயன்று கொண்டிருக்கிறேன்.” [12]

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்கா, தொழிலாள வர்க்கத்தின் போருக்குப் பிந்தைய எழுச்சியை ஒடுக்குவதில் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆற்றிய முக்கியமான பாத்திரத்தைப் பின்தொடர்ந்து, உலக முதலாளித்துவ ஒழுங்கை ஸ்திரப்படுத்த முடிந்தது. அதன் கூடுதல் உற்பத்தித் திறன் கொண்ட வழிமுறைகள் மற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் பரவியது முதலாளித்துவ மேலெழுச்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்கான அடிப்படையை வழங்கியது.

ஆனால் கடந்த 30 ஆண்டு காலங்களில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது, முதலில் சார்பியல்ரீதியாகவும் இப்போது முற்றுமுதல்ரீதியாகவும். இந்த பொருளாதார உண்மை 2008இன் பொருளாதார உருக்குலைவுக்குப் பின்னர் வெளிப்படையானது. அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சியின் வெடிப்புமிகுந்த தாக்கங்களை ட்ரொட்ஸ்கி வரைந்து காட்டியிருந்தார். அதன் வீழ்ச்சி குறித்து அவர் ஏதாவது சொல்வதற்கு இருந்ததா? நிச்சயமாக.

80க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்: “நெருக்கடியின் காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கமானது எழுச்சிக் காலகட்டத்தை விடவும் இன்னும் கூடுதல் முழுமையாக, கூடுதல் வெளிப்படையாக, கூடுதலாய் இரக்கமின்றி செயல்படும்.”[13] தனது எதிரிகளை, எல்லாவற்றுக்கும் முதன்மையாய் ஐரோப்பாவில் உள்ள எதிரிகளை, அமைதியான முறையிலோ அல்லது போரின் மூலமாகவோ பலியாக்கி தனது நோயடைந்த நிலையிலிருந்து விடுபட அமெரிக்கா முனையும் என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். இன்று அதன் எதிரிகளை நாம் ஆசியாவிலும் சேர்த்துக் கொள்ள முடியும். வர்த்தகம், நாணய மதிப்பு அளவுகள் செலுத்துமதி நிலுவை பற்றாக்குறைகள் ஆகியவற்றில் ஆழமடைந்து கொண்டிருக்கும் மோதல்களும், அதேபோல் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் பெருகிய மூர்க்கத்தனத்துடனான இராணுவ நடவடிக்கைகளும், அத்துடன் இப்போது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பகிரங்கமான இராஜதந்திர மற்றும் இராணுவ காய்நகர்த்தல்களும் சுட்டிக் காட்டும் உண்மை என்னவென்றால், ட்ரொட்ஸ்கி தனது முன்னோக்கின் ஆழமான மையத்தில் இருத்திய உலகப் பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறை ஆகியவற்றுக்கு இடையிலான அதே முரண்பாட்டினால் உந்தப்பட்டு உலக வரலாற்றின் ஒரு புதிய கிளர்ச்சிகரமான, புரட்சிகர காலகட்டம் தொடங்கியிருக்கிறது என்பதே.  

Notes:

[1] “Toward a reconsideration of Trotsky’s legacy and his place in the history of the 20th century”, David North, available at http://www.wsws.org/articles/2001/jun2001/dn-j29.shtml

[2] The First Five Years of the Communist International, Leon Trotsky, Volume I, New Park Publications, London (1973), p. 1

[3] “Dialogue With Heinrich Brandler”, Marxism, Wars & Revolutions, Isaac Deutscher, Verso, London (1984) p. 162

[4] My Life, Leon Trotsky, Penguin Harmondsworth (1975), p. 288

[5] “Imperialism and the National Idea”, Leon Trotsky in Lenin’s Struggle for a Revolutionary International, Monad Press, New York (1984)

[6] Europe and America, Leon Trotsky, Pathfinder Press, New York (2003), p. 78

[7] Op cit, p. 81

[8] Op cit, p. 37

[9] The Third International After Lenin, Leon Trotsky, New Park Publications, London (1973), p. 6

[10] ibid

[11] The Wages of Destruction, Adam Tooze, Allen Lane, London (2006)

[12] “Nationalism and Economic Life”, Writings of Leon Trotsky 1933-34, Leon Trotsky, Pathfinder Press, New York, (1972), pp. 161-162

[13] The Third International After Lenin, Leon Trotsky, New Park Publications, London (1973), p.