World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: Tamil politicians line up behind warmongers

இலங்கை தேர்தல்: தமிழ் அரசியல்வாதிகள் போர் முழக்கக்காரர்களின் பின்னால் அணி திறள்கின்றனர்

By Subash Somachandran
11 January 2010

Use this version to print | Send feedback

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அரசியல் ஊதுகுழலாக செயல்பட்டு வந்த கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) ஜனவரி 26-ல் நாட்டின் ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கிறது. இது அதன் சொந்த அரசியலை மோசமான முறையில் குற்றம்சாட்டுவதற்கு ஒப்பானது.

ஜூலை 2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் மீண்டும் தொடங்கப்பட்டு கடந்த மே மாதத்தில் LTTE யின் தோல்வியில் முடிவடைந்த உள்நாட்டுப்போரை ஈவிரக்கமற்றமுறையில் நடத்தியதற்கு நாட்டின் உயர்ந்த ஜெனரலாக இருந்த பொன்சேகா பொறுப்பாளியாவார். எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) ஆகியவற்றின் - ''பொதுவேட்பாளரான'' பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க அந்த கட்சியின் பெரும்பான்மையினர் தீர்மானித்திருப்பதாக TNA தலைவர் ஆர். சம்மந்தன் கடந்தவாரம் அறிவித்தார். ஊடகச்செய்திகளின்படி முரண்பாடுள்ள TNA பாராளுமன்ற உறுப்பினர்களின் பலர் இராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கின்றனர்.

குற்றவியல் போரை நடத்திய இரண்டுபேரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் இப்போது TNA பிளவுண்டுள்ளது. இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா இரண்டுபேருமே போர்குற்றங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை மிகப்பெருமளவில் துஷ்பிரயோகம் செய்ததற்கும் பொறுப்பாளிகள் ஆவார். ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின்படி 7,000க்கும் அதிகமான மக்கள் போரின் கடைசிமாதங்களில் LTTE கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். தமிழர்கள் என்ற சாதாரண அடிப்படையிலும், LTTEயின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர் என்பதற்காகவும் சுமார் 280,000 போர் அகதிகளை தடுப்புமுகாம்களில் வைத்திருப்பதை ஜனாதிபதியும் அவரது ஜெனரலும் முன்னின்று செய்தார்கள்.

பொன்சேகாவிற்கு ஆதரவை நியாயப்படுத்தும் அதன் இரண்டுபக்க அறிக்கையில், போர் பற்றியோ அல்லது LTTE க்கு அது முன்பு அளித்த ஆதரவுபற்றியோ நேரடிக்குறிப்பு எதையும் TNA செய்யவில்லை. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான - ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ் மற்றும் கே.சிவனேசன்- ஆகிய மூவரும் கொலைசெய்யப்பட்டது பற்றி அது குறிப்பிட்டது. ஆனால் பொன்சேகாவும், இராஜபக்ஷவும் பொறுப்பாளிகளாக இருக்கும் இராணுவத்தின் உடந்தையுடன் செயல்பட்டுவந்த கொலைகார படைகளினால் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை குறிப்பிடவில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அவ்வாறான பாணியில் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது ''காணாமல் போனார்கள்''.

தமிழ்மக்களுக்கு ''உடனடியாக அக்கறையுள்ள விஷயங்கள்'', குறிப்பாக ''ஒரு நீடித்திருக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான'' தேவை என்று அவர் விவரித்தனவற்றின் மீது TNA தலைவர் சம்மந்தன் குவிமையப்படுத்தினார். ''அரசியல் தீர்வு'' என்பதன் மூலமாக TNA அர்த்தப்படுத்துவது என்னவென்றால் தமிழ் மேல்தட்டினரின் தேவையை பூர்த்திசெய்யக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை கொழும்பு அரசியல் நிறுவனத்துடன் ஏற்படுத்துவது ஆகும். அது 26 வருட போரினால் தமது வாழ்க்கைகளின் வேர்கள் அறுக்கப்பட்ட தமிழ்மக்களின் உடனடியான சமூகத்தேவைகளுக்கு, அல்லது முதன்முதலாக மோதலுக்கு வழிவகுத்த உத்தியோகப்பூர்வமாக பலமாக நிலைநாட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்கொள்ளும் சம்பந்தமாக எதையும் கொண்டிருக்கவில்லை.

TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதானமான இரண்டு வேட்பாளர்களில் யாருக்குமே ஆதரவளிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் ''பொன்சேகாவிற்கு ஓட்டு அளிப்பதன் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள வகையில் இராஜபக்ஷவை தோற்கடிக்கமுடியும்'' என்று பெரும்பான்மையினர் தீர்மானித்திருப்பதாகவும் சம்பந்தன் பாதுகாப்பான முறையில் விளக்கினார். அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அவர் அரசியல் தீர்வுக்கு எந்த முன்னேற்றத்தையும் காட்டாத இராஜபக்ஷவிற்கு எதிராக பொன்சேகாவை ''குறைந்த தீமையாக'' காட்ட முயற்சித்தார். கைப்பற்றப்பட்ட L.T.T.E யின் பிரதேசத்தில் சிங்கள குறியேற்றங்களை செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் விமர்சித்தார். அந்த நடவடிக்கையானது வறிய சிங்கள மற்றும் தமிழ் விவசாயிகளை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி வகுப்புவாத பதட்டங்களை மட்டும்தான் அதிகரிக்கச்செய்யும்.

மறுபக்கத்தில், பொன்சேகா ''நிலவும் நிலைமையை புரிந்துகொள்வதுடன்'', ''சகஜ நிலைமையை மீட்பதற்கும், நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் ஒரு அரசியல் தீர்வின் தேவையை ஏற்றுக்கொண்டுள்ளார்'' என்கிறார் சம்பந்தன். தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் முயற்சியில் கடந்தவாரம் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உயர் பாதுகாப்பு வலையங்களை மட்டுப்படுத்த, பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர மற்றும் தமிழ் மக்களை மறுபடி குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்.

இப்படியான வாக்குறுதிகள், பயணக் கட்டுப்பாடுகளை மற்றும் ஊரடங்கு சட்டங்களை தளர்த்துவது உட்பட தமிழ் சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் இராஜபக்ஷவின் முயற்சிகள் நம்பத்தகுந்தவையாக இல்லாதிருப்பதைப் போலவே இருக்கின்றன. தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் தறுவாயில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் ''சுதந்திரமாக'' வெளியேறலாம் என்று ஜனாதிபதி அறிவித்தார். தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு சிறிய உதவிகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ்தான் வைக்கப்பட்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. மேலும் சுமார் 100,000 மக்கள் வளங்கள் இல்லாமையினாலும் திரும்பி செல்வதற்கு இடம் இல்லாமையினாலும் முகாம்களிலேயே இன்னும் இருக்கின்றனர்.

இராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது பொன்சேகா ''குறைந்த தீமையை'' பிரதிநிதிப்படுத்துவதாக கூறுவது மோசடித்தனமாகும். ஜெனரல், அவரது ஈவிரக்கமின்மைக்கும் வகுப்புவாத கண்ணோட்டங்களுக்கும் பிரபல்யமானவர். அவர் 2008-ல் ஒரு கனடா பத்திரிகைக்கு கூறியதாவது: ''இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று நான் பலமாக நம்புகிறேன், ஆனால் அங்கே சிறுபான்மை சமூகங்கள் உள்ளன, அவர்களை நமது மக்கள் போல் நாம் நடத்துகிறோம்... அவர்கள் இந்த நாட்டில் நம்முடன் வாழலாம். ஆனால் அவர்கள், ஒரு சிறும்பான்மையாக இருக்கிறார்கள் என்ற சாக்குப்போக்கில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை கோர முயற்சி செய்யக்கூடாது.'' அவர் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக இப்போது கூறுகிறார்.

மிகவும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், தேர்தல் முடிந்த உடனேயே - பொன்சேகா அல்லது ராஜபக்ஷ யார் வென்றாலும் சரி - உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரங்களின் மீது ஒரு மிகப்பெரும் அளவிலான தாக்குதல் தொடுக்கப்படும் என்ற உண்மையை மூடிமறைப்பதற்காக அனைத்து வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல்கள், மற்றும் பொது செலவுகளில் ஆழமான வெட்டுகள் உட்பட தொலைவீச்சு கொண்ட மறுசீரமைப்பு திட்டங்கள், நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. இந்த தொழிலாள வர்க்க - விரோத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்காக அரசு இயந்திரத்தை பிரயோகிக்கும் திறனை பொன்சேகா அதிகமாக கொண்டிருப்பதாக ஆளும் தட்டின் பிரிவினர் கருதுவதனால், அவருக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

பொன்சேகாவிற்கு பின்னால் TNA அணிதிரள்வது அல்லது அதன் சிறுபான்மையைப் பொறுத்தவரையில் இராஜபக்ஷவிற்கு பின்னால் அணிதிரள்வது என்பது அதன் சொந்த அரசியலின் அல்லது LTTE யின் அரசியலின் மரணமுடிவை கோடிட்டுக்காட்டுகிறது. தீவின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் ஒரு தனியான முதலாளித்துவ அரசை அமைப்பதற்கான LTTE யின் கோரிக்கை, எப்போதும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்ததேயன்றி தமிழ் மக்களுடையதை அல்ல. அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்களை அடுத்து உக்கிரம் அடைந்த சர்வதேச அழுத்தத்தின் கீழ் தனி ஈழத்திற்கான கோரிக்கையை கைவிட்ட LTTE, 2002ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நுழைந்தது.

பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புக்கள் திறக்கப்படுவதாக கண்டு அதை சாதகமாக்கிக் கொள்வதற்காக பல்வேறு முதலாளித்துவ தமிழ்கட்சிகள் 2001ல் ஒன்று சேர்ந்து TNA வை உருவாக்கினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்பட்டவை வெற்றி கண்டிருக்குமாயின், முக்கியமான அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும். தென் ஆசியாவில் முதலீட்டிற்கான ஒரு மையமாக தீவை மாற்றுவதற்கு கொழும்பு அரசாங்கம் முயற்சிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும், தொழில் வியாபாரிகளும், ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தரகர்களாகவும், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் ஆட்களாகவும் இருந்திருப்பார்கள். வேறுவார்த்தைகளில் கூறுவதாயின், சிங்கள மற்றும் தமிழ் மேல்தட்டினர் தொழிலாள வர்க்கத்தை தாம் பரஸ்பரமாக சுரண்டுவதற்கான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டிற்காக காத்திருந்தனர்.

1948 சுதந்திரத்திலிருந்து கொழும்பு அரசியல்வாதிகளின் மூட்டை மூட்டையான இருப்பாக இருந்துவந்த வகுப்புவாத அரசியலுக்குள் சமாதான நிகழ்வுப்போக்கு என்று அழைக்கப்பட்டவை மூழ்கடிக்கப்பட்டன. மறுபோரை நோக்கிய சறுக்கலுக்கான தெளிவான அறிகுறி இருக்கும் போது, 2005 ஜனாதிபதி தேர்தல்களை பகிஷ்கரிக்கும்படி LTTE ஆணையிட்டது. அதன்மூலமாக ஒரு சிறிய இடைவெளியில் இராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு உதவியது. இராஜபக்ஷ மேலும் மேலும் அப்பட்டமாக போருக்கு தயார் செய்த போது சமாதான வார்த்தைகளை மீண்டும் தொடங்கும்படி ''சர்வதேச சமூகத்திற்கு'' LTTE விண்ணப்பித்தது, ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் இந்தியா அனைத்துமே இராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தன.

இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எந்த ஒரு அரசியல் விண்ணப்பமும் செய்வதற்கான அதன் உள்ளார்ந்த (organic) திறனின்மையிலிருந்து LTTE யின் இராணுவத்தோல்வி ஊற்றெடுத்தது. தமிழ் மக்கள் மத்தியில் அதற்குள்ள ஆதரவு வீழ்ச்சி கண்டபோது அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி அது நசுக்கியது. நிச்சயமாக LTTE யின் வீழ்ச்சி பற்றி TNA எந்த ஆய்வும் செய்யவில்லை. ஆனால், திரும்பவும் கொழும்பு அரசியல் நிறுவனத்துடன் தன்னை ஒன்றிணைத்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. ஒரு தனி அரசு அல்லது அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் என்பதைவிட அதிகமாக தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை ஒரு ''அரசியல் தீர்வின்'' மூலமாக பாதுகாப்பதற்காக இராஜபக்ஷவுடனும், அரசாங்கத்துடனும் TNA தலைவர்கள் குலாவல்களில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான TNA தலைவர்கள் பொன்சேகா அல்லது இராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கையில் ஒரு அதிருப்தியடைந்த TNA பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பழைய தீவிரவாதிகளான நவசமசமாஜ கட்சியின் (NSSP) ஆதரவுடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது வேலைத்திட்டமானது, TNA விலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. ஒரு கூட்டாட்சி கட்டமைப்பினுள் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தும் ஒரு அரசியல் தீர்வு தான். இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா மீது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் உக்கிரமான விரோதத்தை சாதகமாக்கிக்கொள்ள சிவாஜிலிங்கம் இலகுவாக முயற்சிக்கிறார். அதன்மூலம், யார் வெற்றிக்கண்டாலும் அடுத்து வரவிருக்கும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை பேரத்தில் நன்றாக ஈடுபடமுடியும் என்பதற்காகும்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக இந்த தேர்தலில் போராடுவது சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே ஆகும். சோ.ச.க வேட்பாளரான விஜே டயஸ் பின் வருமாறு எச்சரித்துள்ளார், அதாவது போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் சிறும்பான்மையினரை ஒடுக்குதல் மூலமாக அடையப்படும் தற்காலிகமான அமைதியானது எதிர்கால வகுப்புவாத பதட்டத்திற்கும், மோதலுக்கும்தான் வழிவகுக்கும், அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்கள் போரை தொடங்குவதற்கும், மற்றும் தொடர்வதற்கும் பொறுப்பாளிகளாக இருக்கும் அதே சமயம், LTTE யின் வகுப்புவாத அரசியலும் மற்றும் ்வழிமுறைகளும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு மட்டும்தான் உதவிசெய்துள்ளன.

26 வருட போர் முழுமையாக இலங்கை முதலாளித்துவத்தின் மீது குற்றம் சுமத்துகிறது. அது உழைக்கும் மக்களுக்கு அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு உள்ளார்ந்த ரீதியில் திறனற்றது. தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்கும்படியும் தமது பொதுவான வர்க்க நலன்களுக்காக போராடுவதற்காக ஐக்கியப்படும்படியும், தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க அழைப்பு விடுக்கிறது. ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான பரந்த போராட்டத்தின் பகுதியாக அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்ய திறனுள்ள சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டும்தான். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்துவது, பாரபட்சமான மற்றும் ஒடுக்குமுறையான சட்டம் மற்றும் நெறிமுறைகளை ஒழிப்பது, போர் வலையங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தமது சிதைக்கப்பட்ட வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக கோடிக்காணக்கான ரூபாய்களை ஒதுக்குவது போன்றவற்றை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

நமது வேட்பாளரான விஜே டயஸுக்கு ஆதரவளிக்கும் படியும் மற்றும் கட்சியின் பிரச்சார இயக்கங்களில் செயலூக்கத்துடன் பங்கெடுக்கும் படியும் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.