World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka SEP holds successful meeting in Jaffna

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாகக் கூட்டத்தை நடத்தியது

By our our correspondent
21 January 2010

Use this version to print | Send feedback

Jaffna meeting
சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனவரி 17ம் தேதி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாநிலத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் ஜனவரி 26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரும் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான விஜே டயஸ் உரையாற்றினார்.

தொழிலாளர்கள், மீனவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என நூறு பேருக்கும் மேலானவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். பார்வையாளர்களில் பலரும் இளைஞர்கள், பாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். இது தமிழ் மக்களிடைய நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறது. தமிழ் தேசியவாதம் திவாலான பின்னணியில், கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் இராணுவத் தோல்வியை அடைந்த பின்னணியில் ஒரு மாற்றீட்டைக் காண விரும்புகின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் வட மாகாணத்தில் 1960களின் கடைசிப் பகுதியில் இருந்தே இனவாத போர்க்காலம் உட்பட தமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. ஆனால் மிகப் பெரிய இராணுவ பிரசன்னமும், அரசாங்கத்தின் விரோதிகள் மீதான அரசாங்கம் ஆதரவு கொடுத்த தாக்குதல் மற்றும் அதனது சோசலிச அடிப்படையிலான எதிர்ப்பாளர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தண்டித்ததை அடுத்தும், சோசலிச சமத்துவக் கட்சிக்கு பொதுக் கூட்டங்களை நடத்தவும் வெளிப்படையான அரசியல் வேலைகளை செய்யவும் முடியாமல் போயிற்று.

சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தி.சம்பந்தன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஏனைய 21 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மாறுபட்ட முறையில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விஜே டயஸ் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் உலக சோசலிச அடிப்படையில் ஒரு வேத்ைதிட்டத்தை முன்வைத்துள்ளார் என்று அவர் கூறினார்.

தி.சம்பந்தன் மேலும் கூறியதாவது: "ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இத் தேர்தலுக்கு அழைப்புவிட்டுள்ளார். அதற்குக் காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தன்னுடைய கரங்களை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதுதான். அதிக ஊதியம் கோரி எதிர்ப்புக்களை ஆரம்பித்த துறைமுகம், பெட்ரோலியத் துறை, மின்விசைப் பிரிவுத் தொழிலாளர்களுக்கு எதிராக அவர் அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தியதற்கு சான்றுகள் உள்ளன.

தமிழ் மக்களை காப்பதாகக் கூறும் அனைத்து தமிழ் கட்சிகளும் இரு முக்கிய வேட்பாளர்களான இராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவருக்குப் பின் ஆதரவாகத் திரண்டுள்ளன என்று சம்பந்தன் விளக்கினார். இருவருமே மிருகத்தனமான, இனவாதப் போருக்கு தலைவர்கள். இப் போரானது ஆயிரக்கணக்கான நிரபராதிகளை கொன்றுள்ளதுடன், நூறாயிரக்கணக்கானவர்களை இடம் பெயரச் செய்ததோடு கடும்சிறை முகாம்களில் கணிசமான தமிழ் மக்களை தடுத்து வைத்ததில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

Jaffna audience
யாழ்ப்பாணக் கூட்டத்தில் ஒரு பிரிவு

அடுத்த பேச்சாளரான மீன்பிடி தொழிலாளியும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினருமான ம.முருகானந்தன் பின்வருமாறு கூறினார்: "ஒரு சில வாக்குகளை பெறுவதற்காக நாம் இந்தத் தேர்தலில் தலையிடவில்லை. எங்கள் வேட்பாளர் ஜனாதிபதியாக வருவார் என்ற போலி நம்பிக்கையும் எங்களுக்குக் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை மக்களுக்கு முன்வைத்து விவாதிக்கவும் கட்சிக்கு புதிய காரியாளர்களை வென்றெடுக்கவும்தான் இத்தேர்தலில் பங்கு பெற்றுகிறோம். கட்சியை கட்டமைப்பது, அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் உலக நெருக்கடியைச் சமாளிக்க அவசியமானது. அதன் முக்கிய வெளிப்பாடு ஏற்கனவே இலங்கையில் காணப்படலாம். எதிர்வரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை தேவை."

கூட்டத்தின் முக்கிய உரையை விஜே டயஸ் ஆற்றினார். புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் A-9 சாலை வழியே யாழ்ப்பாணத்தை அடையும் முன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையாக இருந்த வன்னியைக் கடக்கும்போது தான் கண்டதை அவர் விளக்கினார். "இச்சாலையில் ஒரு கட்டிடம் கூட விழாமல் இல்லை. ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் கழிப்பறைகள்தான் அருகில் கட்டிடங்கள் இல்லாமல் உள்ளன. மற்றவை மறைந்துவிட்டன. அங்கு இருந்த வீடுகளில் வசித்த மக்கள், ஆடவர், பெண்கள், குழந்தைகளின் நிலை என்ன ஆயிற்று? எவரும் இதற்கு விடையளிப்பதில்லை."

"பல ஆண்டுகள் குடிபெயர்ந்தபின், தாங்கள் வசித்து வந்த இடத்திற்கு திரும்பியவர்கள், தங்கள் நிலங்கள் இராணுவத்தின் உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை காண்கின்றனர். அவர்கள் உதவி நிறுவனங்கள் அளித்த பொலித்தீன் தகடுகளை வைத்து மூடப்பட்ட தற்காலிக குடிசைகளில் வசிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர்."

"26 ஆண்டுகள் நீடித்த தமிழ் எதிர்ப்பு போரின் குருதிக் கறை படிந்த அடையாளங்கள்தான் இவை. போரை தொடர்ந்து எதிர்க்கும் ஒரே அமைப்பு என்ற முறையில் மட்டும் சோசலிச சமத்துவ கட்சி இந்தக் கொடூரத்தை கண்டிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இதை கொழும்பு ஆளும்தட்டின் போர் என்றும் சிங்கள மக்கள் நடத்தும் போர் அல்ல என்றும் கூறியதுடன் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் நிபந்தனையற்ற முறையில் வெளியேற வேண்டும் என்றும் கோரினோம்."

இதன்பின் எப்படி புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) உறுப்பினர் என்ற முறையில் யாழ்ப்பாணத்திற்கு பலமுறை வந்து 1985க்கு முன் டஜன் கணக்கான கூட்டங்களில் பல தொழிலாளர்கள், மீனவர், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களில் பேசியதை நினைவு கூர்ந்தார். சிங்கள, தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஐக்கியப்பட்டு போராடுவதை தடுக்கத்தான் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன 1983ல் போரைத் தொடக்கினார். இலங்கை பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ உற்பத்தி முறையுடன் ஒருங்ணைக்கும் நோக்கத்தில் திறந்த சந்தைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியபோது இதுவும் தொடங்கியது. இதற்கு அடுத்த கால் நூற்றாண்டில் இனவாதப்போர் வடக்கில் தமிழ் பெரும்பான்மையினரினதும் மற்றும் தெற்கில் சிங்கள பெரும்பான்மையினரினதும் வர்க்கப் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு வழிவகையாயிற்று.

கடந்த ஆண்டு மே மாதம் முடிவுற்ற போர் இன்னமும் தீவின் சாதாரண மக்களின் எந்தப் பிரிவிற்கும் நிம்மதியைக் கொண்டுவந்துவிடவில்லை. ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்படவில்லை. இராஜபக்ஷ அரசாங்கம் உறுதியளித்திருந்த செழுமைக்கான அடையாளத்தையும் காண்பதற்கில்லை. வடக்கும் கிழக்கும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை இழப்புக்கள், உதவித் தொகைக் குறைப்புக்கள், விலைவாசி உயர்வுகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் நடத்தும் மக்களின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக அவசரகால சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் மக்கள் அனுபவித்த தொடர்ந்த இடர்பாடுகளை டயஸ் சுட்டிக் காட்டினார். "உள்நாட்டில் குடிபெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. ஜனாதிபதி இராஜபக்ஷவால் அறிவிக்கப்பட்ட கிழக்கின் உதயம் (Nagenahira Navodaya), வடக்கின் வசந்தம் (Uthuru Wasnathaya) என்ற அபிவிருத்தித் திட்டங்கள் மோசடியானவை, மக்களுக்கு வளமையையோ ஜனநாயகத்தையோ கொண்டுவரப்போவதில்லை. இராணுவ அடக்குமுறை தொடர்கிறது. அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இளைஞர்கள் பரந்த வேலையின்மையைத்தான் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்திற்கு வந்தால், தடியடிகளையும் கண்ணீர்ப்புகையையும் எதிர்கொள்கின்றனர். பெருகிய தேர்தல் வன்முறைகள், தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் வரவிருக்கும் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக முன்னோடியில்லாத அளவிற்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

டயஸ் கடந்த செப்டம்பர் மாதம் 500,000 தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அவர்களுடைய கெளரவமான ஊதியத்திற்கான போராட்டத்தை காட்டிக்கொடுத்ததற்கு எதிரான எதிர்ப்புக்கள் நடத்தியதின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். இது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் மீதான தாக்குதலின் முதல் அடிதான் என்று அவர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி ஒன்று மட்டுந்தான் தலையிட்டு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு மாற்றீட்டு வேலைத்திட்டத்தை முன்வைத்தது. தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது; அதுதான் முழு இலங்கை உயரடுக்கின் வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கவும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் தாக்குதலாகவும் இருக்கும். நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனவில் உள்ள பல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் எப்படி முதல் நடவடிக்கைக் குழுவை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஆதரவுடன் ஆரம்பித்தனர் என விளக்கினார். மற்றய தோட்டத் தொழிலாளர்களுக்கும் முழுத் தொழிலாளர்களுக்கும் விடுத்த அவர்களுடைய முறையீடு நகரத் தொழிலாளர்கள் உட்பட பல பிரிவுகளின் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.

இரு ஆண்டுகள் முன்னதாக பதவிக்காலத்திற்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல்களுக்கு இராஜபக்ஷ அழைப்புவிடுத்ததே கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாரிப்புக்களை நடத்துவதற்குத்தான் என்று டயஸ் விளக்கினார்.

"ஆனால் ஆளும் உயரடுக்கும், பெருவணிகத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தங்களுக்கு இன்னமும் கூடுதலான இரக்கமற்ற, உறுதியான அரசாங்கம் வேண்டுமென நினைக்கின்றன. இராணுவத்தின் ஆதரவைப் பெற்றுள்ள சரத் பொன்சேகா, இப்பிரிவுகளால் நிலைமையைச் சமாளிக்க ஆதரவு கொடுக்கப்படுகிறார்.

"ஜனவரி 26க்கு பின்னர் எவர் அதிகாரத்திற்கு வந்தாலும், சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் இன்னும் இரக்கமற்ற, சர்வாதிகார, முதலாளித்துவ ஆட்சியைத்தான் இந்நாட்டில் எதிர்கொள்ளுவர்" என்று டயஸ் எச்சரித்தார்.

"சாத்தியமான ஒரே மாற்றீடு சோசலிச சமத்துவக் கட்சியால்தான் முன்வைக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ, நாங்கள், தேசியவாத பிரிவினை வேலைத் திட்டத்தை நிராகரித்ததோடு பிற்போக்குவாத இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தோம். சிங்கள, தமிழ் முதலாளித்துவத்திற்கு எதிரான அந்த வர்க்க ஐக்கியத்தை கொண்டுவருவதற்குத்தான் நாங்கள் வடக்கில் இருந்தும் கிழக்கில் இருந்தும் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. எனவே சிங்கள உயரடுக்கு போல் உழைக்கும் மக்கள் ஐக்கியப்படுவதை அது கடுமையாக எதிர்த்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குரலாக ஒலித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), இப்பொழுது பொன்சேகாவிற்கு ஆதரவாக நின்று தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அவருடைய ஆட்சியின் கீழ் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கும் மோசடியைச் செய்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இத்தகைய பிற்போக்குத்தன நடவடிக்கைகளை நிராகரிக்குமாறு தமிழ் மக்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுகின்றது.

"கா.சிவாஜிலிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவுத் தலைவர், சுயேட்சை வேட்பாளராக நிற்பவர்) நவ சம சமாஜக் கட்சி (NSSP) தலைவர் விக்கிரமபாகு கருணரத்னவுடன் வாக்குப் பகிர்வு உடன்பாட்டை கொண்டுள்ளார். அவர் 1960களின் தொடக்கத்தில் இருந்தே முதலாளித்துவக் கட்சிகளின் இனவாத அரசியல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்த வரலாற்றை கொண்ட மாற்றமுடியாத சந்தர்ப்பவாதியாவார். தன்னுடைய சமீபத்திய கூத்தாடித்தனத்தில் ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) தலைவர் சிறிதுங்க ஜயசூர்யாவுடனும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுடனும் "சுதந்திரத்திற்கான அரங்கு" என்பதில் இணைந்து கொண்டுள்ளார்.

"வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையில், பொதுமக்களின் பொருளாதார அல்லது ஜனநாயகக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியாது. எனவேதான் தொழிலாள வர்க்கம் சர்வதேச சோசலிசத்திற்காக போராட வேண்டும். இலங்கையில் சிங்கள, தமிழ் தொழிலாளிகள் உலகம் முழுவதுமுள்ள தமது சர்வதேச வர்க்க சகோதரர்களுடன் ஸ்ரீலங்கா, ஈழ சோசலிசக் குடியரசு ஒன்றுக்காக தெற்கு ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஐக்கியப்பட வேண்டும். இதுதான் எமது வேலைத்திட்டம்" என்று தன்னுடைய உரையை முடிக்கையில் டயஸ் கூறினார். "இத்தேர்தலில் இந்த வேலைத்திட்டத்தையே நாம் முன்வைக்கின்றோம். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இதை நன்கு படித்து சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டமைக்க வேண்டும்."

இதைத் தொடர்ந்து ஆர்வம் மிகுந்த கேள்வி-பதில் நிகழ்வு தொடங்கியது. எழுப்பப்பட்ட வினாக்களில், போர்க்குற்றங்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் போர்க்குற்றங்கள் செய்தவர்கள் எப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்? ஐக்கிய ஸ்ரீலங்கா, ஈழ சோசலிசக் குடியரசு என சோசலிச சமத்துவக் கட்சி விடுத்துள்ள அழைப்பின் பொருள் என்ன? போன்றவை அவற்றில் இருந்தன.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் நிதிக்காக 4,000 ரூபாய்கள் வழங்கினர். இது கிட்டத்தட்ட ஒரு தொழிலாளியின் ஒரு மாத ஊதியத்திற்கு சமமாகும். இராணுவத்தால் சேதப்படுத்தபட்ட யாழ்ப்பாணப் பகுதியில் மக்கள் எதிர்கொண்டுள்ள மிகக் கடுமையான சூழ்நிலையில் இது கணிசமான நிதியாகும்.