World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Clinton speech underlines US-China tensions

கிளின்டனின் உரை அமெரிக்க-சீன அழுத்தங்களை எடுத்துக் காட்டுகிறது

By John Chan
15 January 2010

Back to screen version

செவ்வாயன்று ஹவாயில் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் கொடுத்த முக்கிய உரை ஆசிய-பசிபிக் பகுதியிலும், சர்வதேச அளவிலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெருகியுள்ள போட்டியை எடுத்துக்காட்டியுள்ளது. பாப்புவா நியூகினி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திராலியாவிற்கு ஒரு பயணத்தை தொடங்க கிளின்டன் ஹவாய் வந்திருந்தார். சீனா முக்கிய விடயமாக விவாதிக்கப்படவிருந்தது. ஆனால் இப்பயணம் ஹைட்டி நிலநடுக்கத்தை அடுத்து இரத்து செய்யப்பட்டுவிட்டது.

அவருடைய பயணத்திற்கு முன்னதாக ஒபாமா நிர்வாகம் தைவானுக்கு தரையில் இருந்து வானில் தாக்கும் நவீன Patriot-3 ஏவுகணைகள் விற்பனைக்கு ஒப்புதல் கொடுத்திருந்தது. 2008ல் ஒரு உடன்பாட்டின் பகுதியாக புஷ் நிர்வாகத்தால் இது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும், வெள்ளை மாளிகை விற்பனையை தொடர்தல் என்பது பெய்ஜிங்கில் இருந்து எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. சீனா திங்களன்று தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு முறை ஒன்றைச் சோதித்தது. இது அண்டவெளிப்பகுதியில் ஒரு ஏவுகணையை அழித்தது. சீனப் பரிசோதனை தைவான் ஆயுத விற்பனையுடன் தொடர்புடையது என்பதை பெய்ஜிங் மறுத்தது. ஆனால் இது சீனாவின் பெருகும் இராணுவத் திறன் பற்றி பெய்ஜிங் அனுப்பும் தெளிவான செய்தியாகும்.

பெய்ஜிங்கிற்கு எரிச்சல் கொடுத்த மற்றொரு நடவடிக்கையாக ஒபாமா சமீபத்தில் தான் தலாய் லாமாவைச் சந்திக்க இருக்கும் முடிவை அறிவித்தார். கடந்த ஆண்டு அவரைப் பார்க்கவில்லை என்று எடுத்த முடிவிற்கு இது மாறானது ஆகும். செய்தி ஊடகத்திடம் பேசிய கிளின்டன் இந்தப் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் திபெத் மீது சீனாவின் இறைமையை அமெரிக்க அங்கீகரிக்கிறது என்றாலும், "நாம் பண்பாட்டு, மத மரியாதை, தன்னாட்சிக்கான நியாயபூர்வமான உந்துதல் ஆகியவற்றை அங்கீகரிக்கிறோம்." என்றார்.

வணிகத் துறையில் அமெரிக்க சீன உறவுகள் மோசம் அடைந்துள்ளன. வாஷிங்டன் டயர்களில் இருந்து எஃகுப் பொருட்கள் வரை சீன இறக்குமதி பொருட்களை குவிப்பதற்கு எதிரான காப்புவரிகளை சுமத்தியுள்ளது. சீனாவிற்கு கடந்த நவம்பர் மாதம் ஒபாமா சென்றிருந்தபோது, சீனத் தலைவர்களை அவர் டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பை உயர்த்த அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவர் கருத்து அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டது. டிசம்பர் கடைசியில் அமெரிக்கா சீன எஃகு குழாய்கள்மீது 15 சதவிகித காப்பு வரி அபராதத்தை நியாயமற்ற மானியத்தொகைகள் கொடுப்பதாகக் கூறி விதித்துள்ளது.

பெய்ஜிங்கின் இணைய தளத்தின் மீதான கடுமையான கட்டுப்பாட்டை ஒட்டி சீனாவில் இருந்து வெளியேறும் கூகிளின் அச்சுறுத்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, கிளின்டன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இப்பிரச்சினை பற்றி "தன்னுடைய தீவிர கவலைகளை" அவர் வெளிப்படுத்துவதாகக்கூறி, "சீன அரசாங்கம் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். அவருடைய அறிக்கை வாஷிங்டன் இணைய தள தணிக்கை உட்பட சீனாவில் மனித உரிமைகள் பற்றிய தன்னுடைய வார்த்தைஜால தாக்குதலை அதிகரிக்கும் என்பதையும் இதுவரை அதிகம் பொருட்படுத்தாத பிரச்சினைகளை கவனத்திற் கொள்ளும் என்றும் குறிப்பு காட்டுகிறது.

இந்தப் பின்னணியில், ஹவாயில் East West Centre இல் கிளின்டனுடைய உரை ஆசியாவில் சீனாவின் பெருகும் செல்வக்கை எதிர்க்கும் ஒபாமா நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை உயர்த்திக் காட்டுகிறது. அவர் அறிவித்தார்: "இந்த நிர்வாகம் தொடங்கியபோது அமெரிக்கா ஆசியாவில் மீண்டும் கூடுதல் ஈடுபாடு பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இருந்ததாக நான் நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் மீண்டும் நீடிப்பதற்கு வந்துள்ளோம் என்பதை அடிக்கோடிட விரும்புகிறேன்." அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் முன்னதாக "அமெரிக்கா ஒன்றும் ஆசியாவிற்கு வருகை தந்து செல்லும் சக்தி இல்லை, இங்கேயே நீடிக்கும் சக்தி ஆகும்." என்று கூறியதையும் அவர் அடிக்கோடிட்டார்.

ஆசிய-பசிபிக் வட்டார அமைப்புக்களில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியான் நாடுகள் (ASEAN) இல் புஷ் நிர்வாகம் பங்கு பெறாதது குறித்து கிளின்டன் குறைகூறினார். "தென்கிழக்கு ஆசியாவிற்கு உரிய மரியாதை கொடுத்து ஈடுபாடு கொள்ளாதது, சீனாவை கடந்த தசாப்தத்தில் தன் செல்வாக்கை திறமையுடன் அதிகரிக்க அனுமதித்துள்ளது." "எனவேதான் நான் வெளிவிவகார செயலர் ஆனவுடன் அமெரிக்கா மீண்டும் வரும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன்." என்றார். (See: "Clinton's ASEAN appearance signals US ‘back in Asia'")

சீனா பற்றிய அமெரிக்க கவலைகள் இருநாடுகளின் ஒப்புமையிலான பொருளாதார மாற்றங்களை பிரதிபலிக்கிறது. அமெரிக்கா, உலகப் பொருளாதார நெருக்கடியின் மையத்தில் இருக்கும் நிலையில், சீனா வளர்ச்சி அடைந்து வருகிறது. சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி அமெரிக்காவைவிட மிகக் குறைந்ததுதான். ஆனால் அது இந்த ஆண்டு உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை ஜப்பானில் இருந்த எடுத்துக் கொள்ள இருக்கிறது. மேலும் தன்னுடைய நட்பான நாடுகளாக இருக்ககூடியவற்றிற்கு அதிக பொருளாதார ஊக்கங்களை கொடுக்கும் வலுவான நிலையில் சீனா உள்ளது. ஒரு சீன-ASEAN தடையற்ற வணிக உடன்பாடு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது உலகின் மூன்றாம் பெரிய தடையற்ற வர்த்தக முகாமாகும். தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்கச் செல்வாக்கை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

தன்னுடைய உரையில் கிளின்டன் இன்னும் ஆக்கிரோஷமான இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய ஒபாமா நிர்வாத்தின் விருப்பத்தை அடையாளம் காட்டினார். அமெரிக்கா அனைத்து முக்கிய வட்டார அரங்குகளிலும், ASEAN+3, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உட்பட, "தீவிர பங்கைக்கொள்ளும்" என்று அவர் அறிவித்தார். ASEAN+3 என்பது ASEAN நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை கொண்ட முழு ஆசிய அமைப்பு ஆகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ரஷ்யாவாலும் சீனாவாலும் மத்திய ஆசியாவில் பெருகிய அமெரிக்க ஈடுபாட்டை எதிர்கொள்வதற்கு 2001ல் அமைக்கப்பட்டது.

"இப்பகுதியின் வருங்காலம் அமெரிக்காவை நம்பியுள்ளது" என்று வெளிவிவகார செயலர் வலியுறுத்தினார். ஆசிய நாடுகள் தங்கள் நலன்களை ஒட்டி அமெரிக்காவை "இயக்கம் மிகுந்த பங்காளியாகவும், உறுதியான இராணுவச் செல்வாக்குடைய நாடாகவும்" கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்றார். ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் வாஷிங்டனின் முறையான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இருப்பதை குறிப்பிட்டு, இது ஆசியாவில் அமெரிக்க கொள்கையின் முக்கிய தூண் என்று கூறினார்.

இக்கருத்துக்கள் அமெரிக்கா பெய்ஜிங்கை அதன் பொருளாதார வலிமையை பயன்படுத்தி இப்பகுதியில் இருந்து அமெரிக்காவை ஒதுக்க அனுமதிக்காது மற்றும் சீனாவை இராணுவரீதியாக கட்டுப்படுத்தும் என்ற தகவலை கொடுக்க முற்படுகின்றன. திங்களன்று செய்தியாளர்களுக்கு கூறிய கருத்துக்களில் கிளின்டன் இன்னும் வெளிப்படையாக, "சீனா 21ம் நூற்றாண்டின் எழுச்சி பெற்று வரும் சக்தி என்பதை அனைவரும் அறிவர். ஆனால் மக்கள் அமெரிக்காவும் ஆசியாவில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் சீனா எழுச்சி பெருகையில், அமெரிக்க சமாதான சக்தியாக விளங்க விரும்புகின்றனர்''.

"ஒரு சமாதான சக்தி" என்பதில் இருந்து முற்றிலும் தொலைவில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு இரு சக்திகளுக்கும் இடையே மோதல்ககளின் ஆபத்தைத்தான் எழுப்பியுள்ளது. பொருளாதார வலிமை குன்றிய நிலையில், வாஷிங்டன் தன் இராணுவ வலிமையை பெருகிய முறையில் தன் நலன்களை விரிவாக்கப் பயன்படுத்துகிறது. ஆசியாவில் அது கொண்டுள்ள உடன்பாடுகள் நீண்டகால அமெரிக்க மூலோபாயமான சீனாவை சுற்றி நட்பு நாடுகள், மூலோபாப் பங்காளிகள், இராணுவத் தளங்களை கொள்ளுதல் என்று உள்ளன. 2006ல் திட்டமிட்டபடி அமெரிக்க அதன் 11 விமானத் தளங்கள் உள்ள கப்பல்களையும் அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொகுப்பில் 60 சதவிகிதத்தையும் இந்த ஆண்டு பசிபிக்கில் நிலைநிறுத்தி, அதன் மூலோபாயக் குவிப்பை அட்லான்டிக்கில் இருந்து மாற்றிக் கொள்ளும்.

சீனாவில் எழுச்சி பெற்றுவரும் இராணுவ வலிமை பற்றி பென்டகன் நன்கு அறியும். அமெரிக்க கடற்படை உளவுத்துறை அலுவகம் சமீபத்தில் செய்த மதிப்பீடு ஒன்று சீனாவின் கடற்படை விரிவாக்கம் அடுத்த 10-15 ஆண்டுகளில் மிக அதிமாக இருக்கும் என்றும் "ஒன்று அல்லது இரு விமானத்தள கப்பல்களும்" இருக்கும். 75 நீர்மூழ்கிக் கப்பல்கள் தைவான், தெற்கு சீனக் கடலுக்கு அப்பால் சீனாவின் முக்கிய கடற்பாதைகளை பாதுகாக்க, குறிப்பாக மத்திய கிழக்கு, ஆபிரிக்க பாதைகளை பாதுகாக்க இருக்கும் என்று கூறியுள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெருகியுள்ள போட்டி பகுதி முழுவதிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் சீனாவுடனான பொருளாதார உறவுகளை அமெரிக்காவுடனான உறவுகளை தக்க வைத்துக் கொள்ளும் அக்கறைகளுடன் சமச்சீர் நிலையில் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. இப்பிரச்சினைகள் ஆஸ்திரேலியாவில் கிளின்டனின் விவாதங்களில் மேலாதிக்கத்தை கொண்டிருந்திருக்கும்; அது பெருமளவில் தாதுப் பொருட்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் அதிகம் நம்பியுள்ளது. ஆனால் அமெரிக்காவை இராணுவ உடன்பாட்டிற்கு நம்பியுள்ளது. அதுவும் தான் அண்டை தீவு நாடுகளில் குறிக்கிடும்போது குறிப்பாக அமெரிக்க ஆதரவை நம்பியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆசியாவில் அமெரிக்க மூலோபாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஜப்பானும் இந்த சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. ஹவாயில் இருக்கும்போது கிளின்டன் ஜப்பானிய வெளியுறவு மந்திரி கட்சூயா ஒகாடாவைச் சந்தித்து செப்டம்பரில் அதிகாரத்திற்கு வந்துள்ள ஜனநாயகக் கட்சி அரசாங்கத்துடன் உறவுகளை சீரமைக்க முற்பட்டார். ஜப்பானின் பனிப்போர்க்காலத்தில் அமெரிக்க கூட்டை நம்பியிருந்த முந்தைய லிபரல் டெமக்ராடிக் கட்சி அரசாங்கங்களை போல் இல்லாமல் பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா டோக்கியோ ஆசியாவில் இன்னும் பெரிய பங்கைக் கொள்ள வேண்டும், குறிப்பாக பெய்ஜிங்குடன் உறுதியான உறவுகளை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜப்பானும் சீனாவுடனான வணிகம், முதலீடு பற்றி கூடுதல் நம்பகத்தன்மை கொண்டுள்ளது. சீனாதான் தற்பொழுது ஜப்பானின் மிகப் பெரிய வணிகப் பங்காளி நாடு ஆகும். உலகப் பொருளாதார நெருக்கடி ஜப்பானின் ஏற்றுமதித் தொழில்களை சிதைத்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள்படி ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.1 சதவிகிதமாக 2009 மூன்றாம் காலாண்டுக் காலத்தில் 2008ல் அதே காலத்தில் இருந்ததைவிடக் குறைந்து போயிற்று. ஹடோயமா அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடனும் தென்கொரியாவுடனும் நாணய மாற்று முறையை நிறுவி, ஆசிய நாணயங்களை உறுதிப்படுத்த உடன்பாட்டைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் ஹடோயமா தான் ஜப்பானின் மூலோபாய அமெரிக்க கூட்டை மறுசீரமைப்பதாக குறிப்புக் காட்டியுள்ளார். ஜப்பானில் நிறைய அமெரிக்க இராணுவ பிரசன்னம் இருப்பதற்கு அழுத்தங்கள் வந்துள்ளன. அவருடைய அரசாங்கம் 2006 உடன்பாடு ஒன்று மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது. அதன்படி அமெரிக்க கடற்படை விமானத்தளம் ஓகினாவாவில் இருப்பது வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். ஆனால் வாஷிங்டன் இந்த உடன்பாட்டைத் திருத்த மறுத்துள்ளது.

2006 ஒப்பந்தப்படி நடப்பதற்கு ஒகாடாவிற்கு நம்பிக்கை கொடுப்பதில் கிளின்டன் தோல்வியுற்றார். கடந்த டிசம்பர் மாதம் ஹடோயமா மே மாதம் வரை காத்திருந்து இப்பிரச்சினை பற்றி முடிவெடுப்பதாகக் கூறியதை தான் "மதிப்பதாக" அவர் செய்தியாளர்களிடம் கூற நேர்ந்தது. முன்பு கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா டோக்கியோவிற்கு வந்திருந்தபோது இப்பிரச்சினையை தீர்க்க மறுத்தவிதத்தில் ஹடோயமா ஒபாமாவிற்கு மூக்குடைப்பு கொடுத்தார்.

ஆண்டு நடுவில் மேல் மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஹடோயமா ஜப்பானில் பரந்த அளவில் உள்ள அமெரிக்க இராணுவ இருப்பு, வாஷிங்டன் ஈராக், ஆப்கானிய போர்களில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்புக்களுக்கு அழைப்புவிட்டுள்ளார். 1960களில் வாஷிங்டனும் டோக்கியோவும் கையெழுத்திட்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்தை பற்றிய அறிக்கையை அரசாங்கம் இம்மாதம் வெளியிட உள்ளது. அதன்படி அமெரிக்க அணுவாயுதப் போர்க்கப்பல்கள் ஜப்பானில் தங்கள் ஆயுதங்கள் பற்றி அறிவிக்காமல் நிறுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்க ஜப்பான் உறவில் இன்னும் அதிக சுமைகளைக் கொடுக்கும்.

ஒபாமா நிர்வாகம் "மீண்டும் ஆசியாவில்" என்னும் கொள்கையை தொடர்கையில், சீனாவுடனான அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து அப்பகுதி முழுவதிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் சங்கடங்களை அதிகரிக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved