World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Jyoti Basu: elder statesman of Indian Stalinism dies at 95

ஜோதி பாசு: இந்திய ஸ்ராலினிசத்தின் மூத்த அரசியல்வாதி 95 வயதில் காலமானார்

By Kranti Kumara and Keith Jones
19 January 2010

Use this version to print | Send feedback

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸிட்-CPI(M)) முதுபெரும் தலைவரும், கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்தவருமான ஜோதி பாசு ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 95.

மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சர் பதவியில் இருந்த பாசு 2000 ஆண்டில் ஓய்வு பெற்றாலும், இந்திய அரசியலில் அவருடைய கடைசி சில மாதங்கள் வரை அவர் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.

பெருவணிகத்தினரால் 1991க்கு பின்னரான புதிய தாராள பொருளாதார "சீர்திருத்த" வேலைத்திட்டம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டாளி என்பவைகளுக்கு சிற்பி என்று பாராட்டப்படுபவரும், முழு இந்திய அரசியல் உயரடுக்கையும் வழிநடத்துபவருமான இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங், பாசுவை புகழ்ந்தார். "திரு. பாசுவுடன் நான் நீண்ட நாட்கள் தொடர்புடையவன். என் வாழ்வில் பல நேரங்களிலும் அவருடைய கூர்மையான ஆலோசனைகளுக்கு பல துறைகளிலும் நாடியுள்ளேன்; அவை மேற்கு வங்கத்தை பொறுத்ததாயினும், தேசிய முக்கியத்துவம் உடைய பிரச்சினைகளாயினும் சரி" என்று சிங் கூறினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாசுவை "சமூக நீதி, சமத்துவத்திற்காக போரிட்ட வீரர்...எல்லாவற்றையும் விட தேசிய நலனை முன்னதாக நிறுத்தியவர்" என்று பாராட்டினார். "அவருடைய தேர்ந்த கருத்துக்களும் ஆழ்ந்த அனுபவங்களும் பெரிதும் மதிக்கப்பட்டன." என்றார்.

தன்னுடைய வாழ்வில் பாசுவின் பாதிப்பை முன்னாள் பிரதம மந்திரியான தன் மாமியார் மற்றும் படுகொலைக்குட்பட்ட முன்னாள் பிரதமர், அவருடை கணவர் ராஜிவ் காந்தி ஆகியோரின் பாதிப்புடன் காந்தி ஒப்பிட்டார். "இந்திராஜி மற்றும் ராஜிவ்ஜியுடன் பாசுவை நான் உயர் ஸ்தானத்தில் வைத்துள்ளேன்."

CPM ன் மூத்த தலைவருக்கு தொழில்துறை பெரும் தலைவர்கள் மற்றும் ஹிந்து மேலாதிக்க BJP உட்பட இந்திய ஸ்தாபனத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்தியாவின் மிக முக்கிய பல்தேசிய நிறுவனமான டாட்டா இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ரடன் டாட்டா பாசுவை, "மேற்கு வங்கத்தினதும், இந்திய நாட்டினதும் பெரும் தலைவர்" என்று அறிவித்தார்.

பெரும் RPG குழுமத்தின் ஓய்வு பெற்ற தலைவர் R.P.Goenka, "இந்தியா ஜோதி பாசுவின் மரணத்தினால் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்றார்.

இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் தலைவர் வேணு சீனிவாசன், பாசுவை இந்தியாவின் "உயர்ந்த தலைவர்களில்" ஒருவர் என்று விவரித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, பாசு 2004ல் காங்கிரஸ் தலைமையில் UPA அமைக்கப்படுவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தார் எனக் குறிப்பிட்டார்; பல பிரதேச, மாறுபட்ட கருத்துடைய மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை CPM தலைமையிலான இடது முன்னணியில் சேரும்படி செய்து ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உதவினார். பாசுவின் வலியுறுத்தலின் பேரில்தான் CPM நான்கு ஆண்டுகளுக்கு வலதுசாரி சமூகப் பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளை தொடர்ந்திருந்த UPA க்கு ஆதரவு கொடுத்தது--முன்னைய BJP ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கம் தொடர்ந்திருந்த கொள்கைகளில் இருந்து அதிக வேறுபாடு இல்லாதவை என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்களே ஒப்புக் கொண்டனர்.

உண்மை கூறப்பட வேண்டுமானால், கடந்த இரு தசாப்தங்களில் நான்கு முறை, 1989, 1991, 1996, 2004 ஆகியவற்றில், பாசுவும் CPM பொலிட்பீரோவும் இந்தியாவின் தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் முக்கிய, ஏன் மிக இன்றியமையாத பங்கைக் கொண்டிருந்தன என்றே கூறவேண்டும்.

1996ல் ஐக்கிய முன்னணி-இடது அரசாங்கம் என்று அழைக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு பாசு கிட்டத்தட்ட பிரதமராக ஆகியிருக்கக் கூடும். அவர் பதவி ஏற்பது CPM பொலிட்பீரோவின் பெரும்பான்மையினரால் தடைக்கு உட்பட்டது; அவர்கள் அரசாங்கத்தில் பங்கு கொள்வதற்கு எதிராக வாக்களித்தனர். மாறாக CPM, ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு "வெளியில் இருந்து" ஆதரவைக் கொடுத்தது; அதே நேரத்தில் கலவையாக இருந்த ஐக்கிய முன்னணி கூட்டுக்கு அரசாங்க கொள்கையை நிர்ணயிப்பதிலும் உதவிற்று.

பல ஆண்டுகளுக்கு பின்னர் 1996 பொலிட்பீரோவின் வாக்களிப்பை பாசு "ஒரு பெரும் வரலாற்றுத் தவறு" என்று குறிப்பிட்டார்.

கடந்த வசந்தகாலத்தில் கட்சியின் சமீபத்திய மாநாட்டில், CPM ன் தலைமையானது பாசு பொலிட்பீரோவின் வாடிக்கையான உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியதை ஒப்புக் கொண்டது; அவர் தொடர்ந்து CPM ன் உயர்மட்டத் தலைமையில் 45 ஆண்டுகளாக, அதாவது CPI கட்சியிலிருந்து 1964ல் பிரிந்ததிலிருந்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். ஆயினும் கூட "பொலிட்பீரோவிற்கு சிறப்பு அழைப்பாளர்" என்ற நிலையை ஏற்று செயலாற்ற துாண்டப்பட்டார்.

ஜோதி கிரண் பாசு ஜூலை 8, 1914ல் முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்புதான் ஒரு வசதியுடைய கல்கத்தா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஒரு டாக்டர் ஆவார்; கிழக்கு வங்க நிலச்சுவான்தாரரின் மகளான அவர் தாயார் ஒரு மரபார்ந்த இல்லத்தரசியாவார். தனியார் சிறந்த ஆங்கிலப் பள்ளிகளில் பாசு பயின்றார்; இறுதியில் பி.ஏ.(சிறப்பு) பட்டத்தை கல்கத்தா பல்கலைக்கழக மாநிலக் கல்லூரியில் இருந்து பெற்றார்.

1935 ம் ஆண்டு பாசு இங்கிலாந்திற்கு சென்று சட்டம் படித்து பாரிஸ்டர் ஆவதற்குச் சென்றார். அங்கு வந்தவுடன் அவர் மாணவர்களிடையே இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டு இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்குள் உட்பட்டார்.

தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில் இந்திய தேசியவாதத்தில் இருந்து மார்க்சிசத்திற்கு மாறியது பற்றி வெளிப்படையாக பாசு அதிகம் கூறவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவரும் வருங்கால சுதந்திர இந்தியாவின் பிரதமராக வந்தவரும் இங்கிலாந்திற்கு பல முறை வந்திருந்தவருமான ஜவஹர்லால் நேருவுடன் ஒருமுறை நடத்திய உரையாடலை, ஏற்கனவே அவர் ஸ்ராலினிச இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பை கொண்ட பின்னர் நடந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

"நேருவிடம் நான் சோசலிசத்தை நம்புகிறேன் என்று கூறியது நினைவில் உள்ளது. நேரு அதற்கு 'நம்முடைய முதல் பணி இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெறுவது. நீங்கள் இதற்கு உடன்படுகிறீர்களா?' நான் ஏற்புடையது என்று கூறி [இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த] வரவேற்பு விழாவிற்கு அவரை அழைத்தேன்."

இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியினால் ஈர்க்கப்பட்ட பாசு 1930 களின் நடுப்பகுதி, கடைசிப் பகுதிகளில் அரசியல் பயிற்சியும் பெற்றார். அது மக்கள் முன்னணியின் உச்சக்கால கட்டமாகும்; அப்பொழுது சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் ஆர்வமிக்க பாராட்டுடன் மாஸ்கோ விசாரணைகளுக்கு ஒருங்கிணைத்து, லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்யவும் தயாரிப்புக்களை நடத்தி வந்தது; மக்கள் முன்னணி என்ற பெயரில் ஜனநாயக ஏகாதிபத்தியவாதிகளுடன் புகழ்பெற்ற பாசிச எதிர்ப்பு கூட்டணியை அமைத்து ஐரோப்பிய புரட்சிகளை நெரித்துக் கொண்டிருந்தது; மிகத் தெளிவாக, அவலமாக ஸ்பெயின் நாட்டில் இது நடந்தேறியது.

பாசுவின் கருத்துப்படி அவருடை முக்கிய ஆசான்கள் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரி பொல்லிட்டும் மற்றவர்கள் ஸ்ராலினின் ஆதரவாளர்களான ரஜனி பாம் தத், கிளெமென்ஸ் தத் போன்றவர்கள் ஆவார்கள்.

இவர்களால் அறிவுறுத்தப்பட்ட அரசியலின் மையக்கருத்து ஸ்ராலினிச கோட்பாடான "தனியொரு நாட்டில் சோசலிசம்" மற்றும் ஸ்ராலினிச-மென்ஷிவிக் இருகட்ட புரட்சிக் கோட்பாடு ஆகியவை ஆகும்--பிந்தையதின்படி கால தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சியுற்ற இந்தியா போன்ற நாடுகளில், மார்க்சிஸ்ட்டுக்களின் பணி தேசிய முதலாளித்துவத்திற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற உதவுவது ஆகும். 1917 ரஷ்ய புரட்சியின் சரியான அனுபவம் மற்றும் 1927ல் முதலாளித்துவ கோமின்டாங் சீனப் புரட்சியை நசுக்கியது ஆகியவற்றை புறக்கணித்த விதமானது, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி முடியும் வரை, முதலாளித்துவம் பலப்படுத்தப்பட்டு, இறுதியில் சோசலிசம் "கனிவதற்கான" நிலைமை வரும் வரை தலைமைக்கு சவால் விடக்கூடாது சவால் விடமுடியாது என்று வலியுறுத்தினார்கள்.

1941 ஆரம்பத்தில் பாசு இந்தியாவிற்கு திரும்பிவந்ததுடன், பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPI) ல் இணைந்தார். இவர் திரும்பிய வேளையில்தான், நாஜிக்கள் சோவியத் ஒன்றியத்தின்மீது படையெடுத்தனர்; CPI ஆனது பிரிட்டிஷ் போர் முயற்சிக்கு வலுவான ஆதரவு கொடுத்துடன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டமானது சேர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் சோவியத்துடன் கொண்டிருக்கும் இராணுவக் கூட்டை தடைக்கு உட்படுத்தாத வகையில் ஒத்திப் போட வேண்டும் என்றும் கூறியது. அதன் போர் ஆதரவு மற்றும் பிரிட்டிஷ் ஆதரவு நிலையை ஒட்டி, முதல் தடவையாக வரலாற்றில் CPI அதன் பெயரிலேயே அரசியல் செயற்பாட்டை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன் முதல் செயற்பாடுகளில் ஒன்று 1942 வெள்ளயனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்ததாகும். அந்த இயக்கமானது காங்கிரஸ் கட்சி வெகுஜன மக்கள் ஒத்துழையாமை பிரச்சாரமாக நடத்தியது. அது விரைவில் காங்கிரஸ் தலைமையில் இருந்து நழுவி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி எழுச்சியாயிற்று, பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் படைகள் அதை அடக்கக் குவிக்கப்பட்டன.

போர் முடிந்தவுடன், இந்தியாவானது தொழிலாளர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தால் அதிர்வுற்றது; இவை ஆரம்ப கட்ட புரட்சிகர எழுச்சித் தன்மையை கொண்டிருந்தன. CPI ஆனது பல தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய நிலையில், அது தன் செல்வாக்கில் இருந்தவர்களை காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக் மீது தேசிய ஜனநாயக புரட்சிக்கு தலைமை தாங்குவதற்கு அழுத்தம் கொடுத்தது. இதன் விளைவாக, தேசிய முதலாளித்துவம் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடிந்தது; இறுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் உடன்பாட்டை கண்டது; அதன்படி காலனித்துவ அரச இயந்திரத்தை அது பெற்று, அதன் சொத்துக்களையும் செல்வத்தையும் பாதுகாத்து காப்பாற்றிக் கொண்டது; அதே நேரத்தில் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினைகளையும் இந்திய உழைக்கும் மக்களையும் அடக்குமுறையில் அடக்கி வைத்திருந்தது--ஏகாதிபத்திய அடக்குமுறையில் இருந்து சுதந்திரம், நிலப்பிரபுத்துவம், சாதியம் ஆகியவற்றை அகற்றுதல் மற்றும் தெற்கு ஆசியாவை தன்விருப்பத்தின் பேரில் ஒன்றுபடுத்துதல் ஆகியவைகள்--அழுகி இல்லாமல்செய்ய அனுமதிக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் உலகப் போர் இறுதியில், பாசு ரயில்வேத் தொழிற்சங்க அதிகாரியானார்; 1946ல் வங்காள சட்டமன்றத்தில் "தொழிலாளர்களுக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (இது காலனித்துவ காலத்தில் நடத்தப்பட்ட தேர்தல், அதில் ஆண்களில் பத்தில் ஒருவருக்கு வாக்குரிமை இருக்கும்). CPI உடைய பிற்போக்குத்தன கோரிக்கையான பாக்கிஸ்தானுக்கான கோரிக்கை அதாவது துணைக்கண்டத்தை வகுப்புவாத முறையில் பிரித்தல்--அதாவது முற்போக்காக இருந்தது என்பதும் மேலும் முஸ்லிம்களின் "சுய நிர்ணயத்திற்காக" போராடுவதன் பிரதிபலிப்பு என்று கூறுவது--என்பவைகளை ஏற்று பாசு 1947ல் வங்க மாநிலம் பிரிக்கப்படுவதற்கு, அப்பிரச்சினை சட்டமன்றத்தில் வந்தபோது, வாக்களித்தார்; பாதிப் பகுதி இந்தியாவிற்கு சென்றது, மற்றொரு பாதிப் பகுதி பாக்கிஸ்தானுக்கு சென்றது.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்கு பாசு சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த 1951-52 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் CPI குழுவிற்கு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்; CPI மற்றும் பின்னர் CPM ன் மேற்கு வங்க சட்டமன்றக் கட்சிக் குழுவிற்கு ஓய்வு பெறும் வரை, 2000 ஆண்டு வரை தலைவராக இருந்தார்.

1960 களின் ஆரம்பப்பகுதியில் CPI கூடுதலான நெருக்கடியில் இருந்தது. கணிசமான அளவிற்கு இந்த நெருக்கடி காங்கிரஸ் கட்சியுடன் கட்சித் தலைமை கொண்டிருந்த நெருக்கமான உறவுகளில் ஆழ்ந்திருக்கையில், கேரளாவில் CPI தலைமையிலான அரசாங்கத்தை காங்கிரஸ் ஆட்சி அகற்றியபின்னரும் கூட என்று இருந்த நிலையில், 1962 சீன-இந்திய எல்லைப் போர் மற்றும் சீன-சோவியத் பிளவுகள் நெருக்கடியை அதிகரித்தன.

வெளிப்டையாக கணிசமான தயக்கத்துடன் பாசு 1964ல் கருத்துவேறுபாடு கொண்டவர்களுடன் சேர்ந்து வெளியேறினார். CPM இன் பொலிட்பீரோவிற்கு கட்சி ஆரம்பித்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். "திருத்தல்வாத" CPI க்கு எதிர்ப்புக் காட்டிய மையங்களில் மேற்கு வங்கம் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது; பாசுவின் பாராளுமன்ற வாழ்க்கை அவர் புதிய கட்சியில் சேர்ந்திராவிட்டால் தீவிரமான பாதிப்பிற்கு உட்பட்டிருக்கும்.

CPM ன் நிறுவன ஆவணம் மென்ஷிவிக்-ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சி தத்துவத்திற்கு நிலையான உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தியது. பெரு முதலாளித்துவம் உட்பட இந்திய முதலாளித்துவத்தின் பிரிவுகள் ஏகாதிபத்தியத்துடன் மோதலுக்குள் தள்ளப்படும் என்றும், "அரசாங்க அதிகாரத்திற்கு எதிராக வரும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்றும்" அதையொட்டி "மக்களுடைய ஜனநாயக முன்னணியில் ஒரு இடத்தைப் பெறலாம்" என்றும் கூறியது.

CPI உறுப்பினர்களில் மாவோயிச கோட்பாடுகளான நீடித்த விவசாயிகளை அடிப்படையாக கொண்ட கெரில்லா போர்தான் ஜனநாயகப் புரட்சியை வெற்றிக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் என்று கருதியவர்கள் CPM ஸ்தாபிதத்தில் பங்கு பெற்றனர். ஆனால் புதிய கட்சி மாவோயிசத்தை தழுவாதது ஒரு புறம் இருக்க, சீனாவுடன்கூட இணைந்து கொள்ளவில்லை.

மாறாக, CPM ஒரு சுயாதீன, இந்திய தேசியவாத பாதையை பின்பற்றிக் கொண்டு, அதன் ஆதரவு மொஸ்கோவிற்கோ, பெய்ஜிங்கிற்கோ இல்லை என்று அறிவித்தது. பிளவிற்கு முன் இருந்த CPI போல், இது தன் குவிப்பை பாராளுமன்ற அரசியல், தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆகியவற்றில் காட்டி, கூட்டுப் பேரம் பேசுவதில் வரம்புகளை ஒப்புக் கொள்ளுவது இருக்கும் என்றும் கூறியது.

1960 களின் கடைசிப்பகுதியில், மேற்கு வங்கம் மற்றும் பெருகிய முறையில் இந்தியா முழுவதும் சமூகப் போராட்டங்களால் மீண்டும் அதிர்வுற்றது.

மாவோயிஸ்ட்டுக்கள் CPM ல் இருந்து பிரிந்து CPI (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அமைத்தனர்; மேற்கு வங்கத்தில் ஒரு தொலைவில் உள்ள கிராமமான நக்சல்பாரியில் "மக்கள் யுத்தத்தை" தூண்டிவிட முற்பட்டதற்குப் பின்னர் இது நடந்தது.

தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிக்கும் போராட்டத்திற்கு முதுகைக் காட்டிவிட்டு, உழைப்பாளிகளின் அரசியல் தலைமையை அது ஏற்கும் விதத்தில் பயிற்சி கொடுக்காமல், மாவோயிஸ்ட்டுக்கள் நிலச் சுவான்தார்கள் மற்றும் பிற சிறு அடக்குமுறையாளர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு தூண்டிவிட்டனர். இன்னும் அதிக அரசியல் அழிப்புத் தன்மையாக, அவர்கள் CPI மற்றும் CPM கட்சியினர் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த தந்திரோபாயங்கள் அரசியல் குழப்பத்தை அதிகரிக்கவும் அரசாங்கத்திற்கு முழு அடக்குமுறையை செலுத்த போலிக்காரணத்தையும் கொடுக்கத்தான் உதவின.

தங்கள் பங்கிற்கு CPI மற்றும் CPM இரண்டும் நக்சலிசத்தை அகற்றுவதற்கான இந்திய முதலாளித்துவ அரசாங்க முயற்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டவிதத்தில் இதை எதிர்கொண்டன. 1967-68 மற்றும் 1969-70 ஆகிய ஆண்டுகளில் CPM மற்றும் CPI இரண்டும் குறுகிய காலம் மட்டுமே இருந்த மேற்கு வங்க ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் பங்கு கொண்டிருந்தன. இவற்றில் பல தங்களை சுயமாக அறிவித்துக் கொண்ட சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஒரு பிரிவான வங்ககள காங்கிரஸ் ஆகியவையும் இருந்தன. இரு அரசாங்கங்களிலும் பாசு ஒரு வங்காள காங்கிரஸ் முதல் மந்திரிக்கு துணைவராக இருந்தார்.

இறுதியில் CPI மற்றும் வங்காள காங்கிரஸ் கட்சி இரண்டுமே இந்திரா காந்தியுடனும் காங்கிரஸ் கட்சித் தலைமையுடனும் சமாதானமாயின. இதன்பின்னர் CPM ஆனது ஒரு CPM தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கத்திற்கு பாராளுமன்ற ஆதரவைத் திரட்டிக் கொடுக்க முடியவில்லை.

இவருடைய ஸ்ராலினிசத்தை பாராட்டுபவர்கள் கூற்றுப்படி, பாசுவின் மிகப் பெரிய சாதனை, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் சிற்பி என்ற முறையில் 1977ல் முதலில் பதவிக்கு மாநில தேர்தல்களை அடுத்து வந்தபோது அது இன்று வரை தடையின்றி தொடர்ந்து மாநிலத்தை ஆள்கிறது என்பதாகும்.

ஆனால் இடது முன்னணியின் வெற்றி பாசுவிற்கும் CPM தலைமைக்கும் ஒரு அதிர்ச்சியாக வந்தது. அவர்கள் ஜனதா கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டை 1977 மேற்கு வங்க தேர்தல்களில் அமைக்க தயாராக இருந்தனர்; அக்கூட்டில் இந்திரா காந்தியின் எதிர்ப்பாளர்கள், ஹிந்து தேசியவாதிகள் போன்றோர் அடங்கிருந்தனர், 1977ல் இந்திரா காந்தி இரண்டு ஆண்டுகள் நெருக்கடி காலத்தை அகற்றியபின் உருவாக்கப்பட்டது. ஜனதா வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடக்கூட அவர்கள் அனுமதிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைகள் ஜனதா தலைமை இன்னும் கடுமையான பேரத்தை பெற விரும்புகையில் முறிந்தன.

இன்னும் அடிப்படையாக, முன்னைய காலம் முழுவதும் CPM ஆனது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நெருக்கடி கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தாழ்ந்து நடக்க உழைத்தது; அவ்விதத்தில் அதன் தந்திர உத்திகள் பல முதலாளித்துவ கட்சிகளுடன் இருந்து, 1977ம் ஆண்டு ஜனதா கட்சி தேர்தல்களில் வெற்றிபெறவும் வழிவகுத்தது. இதையொட்டி முதலாளித்துவம் இந்திய நாட்டில் முன்னைய தசாப்தத்தில் படர்ந்திருந்த சமூக அமைதியின்மையை சமாளிக்க முடிந்தது. ஸ்ராலினிச CPI ஐ பொறுத்தவரையில், அதாவது மேற்கு வங்க இடது முன்னணியில் CPMன் பங்காளியாக இருந்தவர்கள், இது இந்திரா காந்தியையும் காங்கிரஸ் அரசாங்கத்தையும் அவை 1975-75 ரயில்வே வேலைநிறுத்தத்தை உடைத்து நெருக்கடியை சுமத்தியபோதும் ஆதரித்தது.

மற்றொரு கருத்தும் கூறப்பட வேண்டும்: இந்திய முதலாளித்துவம் CPM தலைமையில் இடது முன்னணி அரசாங்கத்தை ஏற்கத் தயார் என இருந்தது என்றால், அதற்குக் காரணம் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இரக்கமற்ற முறையில் "தேசிய நலன்களுக்காக" தங்கள் பாதுகாப்பை நிரூபித்து, 1960 களின் கடைசிப் பகுதி, 1970 களின் ஆரம்ப பகுதியில் நக்சலைட்டுக்களை அரசாங்கம் அடங்குவதற்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்தனர்.

ஜோதி பாசுவின் முதலமைச்சர் காலத்தில், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் அதன் பதவி ஆண்டுகளின் முதல் பகுதியில் சில சீர்திருத்தங்களை கொண்டுவந்தது; குறிப்பிடத்தக்க வகையில் விவசாயிகளின் கணிசமான பிரிவுகளுக்கு நலன்கொடுத்த விதத்தில் நிலச்சீர்திருத்தம் இருந்தது.

ஆனால் இந்திய முதலாளித்துவம் தன்னுடைய வரலாற்று மூலோபாயமான அரசாங்கத் தலைமையில் தேசிய பொருளாதார வளர்ச்சி என்பதைக் கைவிட்டு ஏற்றுமதி வழியிலான வளர்ச்சியை தழுவியபோது, மேற்கு வங்க அரசாங்கம் விரைவில் அதே பாதையில் ஈடுபட்டு தனியார்மயம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் பாதையைத் தழுவி, சட்டபூர்வமாக தகவல் தொழில்நுட்பம், அது தொடர்புடைய தொழில்களில் வேலைநிறுத்தங்களை தடைசெய்ததுடன், மற்றய விதங்களிலும் பெருவணிகக் கொள்கைகளை தொடர்ந்தது.

ஜனவரி 2008ல் பாசு தனக்குப் பின் பதவிக்கு வந்த, தற்போதைய மேற்கு வங்க முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜிக்கு வலுவான ஆதரவு கொடுத்தார்; பட்டாச்சார்ஜி தன் அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்புக் கொள்கையை பாதுகாத்தபோது, அதுவும் போலீசும் குண்டர்கள் வன்முறையும் பயன்படுத்தப்பட்டு சிறப்பு பொருளாதாரப் மண்டலங்கள் உருவாக்கப்படுவதற்கு நிலங்கள் அபகரிக்கப்பட்டபோது, முதலாளித்துவ தொழில்மயமாக்குதலுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்று அவர் வலியுறுத்தி இதற்கு ஆதரவு கொடுத்தார்.

தனக்குப் பின் பதவிக்கு வந்த, தன் அரசியல் மாணவனை பாதுகாக்கும் விதத்தில் பாசு கூறினார்: "இக்கட்டத்தில் சோசலிசம் அடையக்கூடியது அல்ல. நாம் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம்; அதனால் மாநில அரசாங்கம் பொதுநலத் திட்டங்களை தொடரும்போது தனியார் மூலதனம் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது."

அவர் மேலும் கூறினார்: "சோசலிசம் நெடுந் தொலைவில் உள்ளது. சோசலிசம் எமது நிகழ்ச்சி நிரலில் உள்ளது; எமது கட்சி ஆவணத்திலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் முதலாளித்துவம் வருங்காலத்தில் கட்டாயமாகத் தொடரும்." இச்சொற்கள் செப்டம்பர் 2008ல் வோல் ஸ்ட்ரீட் கரைதல் என்ற வரலாற்றுத் தன்மை மிகுந்த முதலாளித்துவ முறிவிற்கு எட்டு மாதங்கள் முன்பு கூறப்பட்டது என்பதை அறியும்போது, இந்த ஸ்ராலினிச மூத்த அரசியல்வாதியின் இத்தகைய அரசியல் குருட்டுத்தனம் இன்னும் அதிகமான முறையில் வெளிப்படையாகிறது.

பாசு மீது இந்திய அரசியல் ஸ்தாபனம் குவிக்கும் பாராட்டுக்கள், அவற்றின் முன்னோக்கில் இருந்து முற்றிலும் ஏற்கத் தக்கவையே.

CPM ன் முக்கிய தலைவர் என்ற முறையில், குறிப்பாக அவருடைய வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளில் பாசு தொழிலாள வர்க்கத்தை அரசியல் அளவில் அடக்கி, முதலாளித்துவ அமைப்புமுறை பல நெருக்கடிகளை எதிர்கொள்ள உதவியதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்--அரசாங்கத் தலைமையில் முதலாளித்தவ அமைப்புமுறையின் வளர்ச்சி முறியும் நிலையில் காங்கிரஸ் கட்சி அரசியலில் முடங்கிப் போவது வரை நெருக்கடிகள் இருந்தன; புதிய தாராளவாத "சீர்திருத்தம்" தோற்றுவித்த சமூக நெருக்கடியில் இருந்து வகுப்புவாத, சாதி உணர்வு நிறைந்த அரசியலை சமூக அதிருப்தியை கட்டுப்படுத்தும் வழிவகையாக பயன்படுத்திய விதம் வரை அவர் உதவியிருந்தார்.

வரவிருக்கும் வாரங்களில் உலக சோசலிச வலைத் தளம் பாசுவின் அரசியல் வாழ்வைப் பற்றி இன்னும் வெளிக்கொண்டுவர உள்ளது; ஏனெனில் இந்திய ஸ்ராலினிசம் முதலாளித்துவ ஆட்சிக்கு இந்தியாவில் முட்டுக் கொடுத்த பங்கு அம்பலப்படுத்தப்படுவது இந்திய தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர சோசலிசக் கட்சியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது ஆகும்.