சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Mass roundup in Sri Lankan capital: a sharp warning to the working class

இலங்கை தலைநகரில் வெகுஜனங்களை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தமை தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை

By the Socialist Equality Party (Sri Lanka)
13 July 2010

Use this version to print | Send feedback

ஜூலை 3 அன்று, கொழும்பு புறநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள் மீது நடத்தப்பட்ட இராணுவ-பொலிஸ் தாக்குதல் இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். மட்டக்குளி பிரதேசத்தில் வயதுவந்தோர் அனைவரையும் சுற்றிவளைப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள “பொருளாதார யுத்தத்தில்” சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக முன்கொணரப்பட்டுவரும் பொலிஸ்-அரச வழிமுறைகளை அம்பலப்படுத்துகின்றன.

ஒரு இளம் முச்சக்கரவண்டி சாரதியை பலாத்காரமாக கைது செய்து அவரை மோசமாக தாக்கியதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு எதிராக இந்த ஆத்திரமூட்டலை பொலிசார் முன்னெடுத்தனர். பிரதேச பொலிஸ் நிலையத்தின் மூன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தபோது, கலகம் அடக்கும் பொலிசாரையும் படையினரையும் உடனடியாக அங்கு அனுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களை தாக்கினர். வன்முறையில் இறங்கிய பொலிசாரும் இராணுவத்தினரும் வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியதோடு உள்ளூர்வாசிகளை அடித்து அச்சுறுத்தினர்.

அடுத்தநாள், சுமார் 8,000 பிரதேசவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டு மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதோடு அவர்களில் 200க்கும் மேற்பட்டவர்களை அங்கு முகமூடி அணிந்து நின்ற சிலர் காட்டிக்கொடுத்தனர். பின்னர் அவர்களை பொலிசார் கைது செய்தனர். இந்த வெகுஜன கைதுகளை பொலிசாரால் நியாயப்படுத்த முடியாமல் போனதால், 176 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், 31 பேரை “மேலதிக விசாரணைக்காக” தடுத்து வைத்தது.

அத்தியாவசிய பொருட்களின் வரியை கூட்டி, அரசாங்கத் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிறுத்தத்தை நீடிப்பதன் மூலமும் மின்சாரம், எண்ணெய் மற்றும் துறைமுகக் கூட்டுத்தாபனங்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களுக்கான மானியங்களை வெட்டித்தள்ளுவதன் மூலமும் நேரடியாக தொழிலாளர்களின் செலவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க வாக்குறுதியளித்து, சர்வதேச நாணய நிதியத்திடம் அங்கீகரம் பெற்றுக்கொண்ட வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்து ஐந்தே நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பெருந்தொகையான வேலை இழப்புக்களுக்கு வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, விலைவாசி அதிகரித்த போதிலும், வேலைக்கு பணம் என்பவை போன்ற அரசாங்கத்தின் அற்ப நலன்புரி வேலைத்திட்டங்களுக்கு மேலதிக நிதிகள் வழங்கப்படப் போவதில்லை.

இத்தகைய தாக்குதல்களை தொழிலாளர்கள் எதிர்ப்பது தவிர்க்க முடியாததாக இருப்பதோடு வர்க்கப் போராட்டமும் வெடிக்கும். மட்டக்குளி தாக்குதலானது உழைக்கும் மக்களை அச்சுறுத்தி பயமுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறை வழிமுறைகள் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரில் இருந்து தொடங்கி, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. யுத்த காலம் பூராவும், தமிழ் கிராமங்கள் தொகை தொகையான கைதுகளுக்காக சுற்றிவளைக்கப்பட்டதோடு, புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகியும் ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் எஞ்சியுள்ளனர்.

மட்டக்குளியில் அரசாங்கத்தின் நடவடிக்கையை அடுத்து, அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் அதை ஆதரித்து ஒரு ஆசிரியர் தலைப்பை வெளியிட்டிருந்தது. “கலகக் கும்பலின் ஆட்சி” என தலைப்பிடப்பட்டிருந்த அந்த ஆசிரியர் தலையங்கம்: “ஆத்திரமடைந்த கலகக் கும்பலால் பொலிஸ் நிலையங்கள் தாக்கப்படுவது இந்த நாட்டில் பொதுவானதாகி வருகின்றது. ஆகையால், விவகாரம் கை நழுவி சமுதாயத்தை அராஜகம் ஆட்சி செய்வதற்கு முன்னதாக இந்த நிகழ்வுகளை அதிகாரிகள் அக்கறையுடன் நோக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என பிரகடனம் செய்துள்ளது.

அந்த செய்தித் தாள் ஏற்றுக்கொண்டவாறே, கொழும்பில் மட்டுமன்றி தீவு பூராவும் பொலிஸ் கொடுமைகளுக்கு எதிராக சாதாரண மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள், வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறை தொடர்பாக வளர்ச்சிகண்டுள்ள எதிர்ப்பு மற்றும் பகைமையின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்குளியில் அரசாங்கம் திட்மிட்டு நடத்திய சம்பவங்கள், சமூகப் போராட்டங்கள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு அனுப்புவதையே இலக்காகக் கொண்டதாகும்.

அரசாங்கத்தின் வழிமுறைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து வலதுசாரி சிங்கள வாரப் பத்திரிகையான இரிதா திவயின “சமிட்புர போதைப்பொருள் வியாபாரிகளின் மட்டக்குளி நடவடிக்கை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. “மட்டக்குளி பொலிஸ் நிலையத்தை தாக்கிய போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக கிரிமினல் கும்பலொன்று பொலிஸ் நிலையத்தையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தால் முழு பொலிஸ் திணைக்களமே அதிர்ந்து போயுள்ளது,” என அது கூறிக்கொண்டது.

பொலிஸ் நிலையத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்ய தமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்திய இத்தகைய நசுக்கப்பட்ட மக்களை ஊடகங்களும் அரசாங்கமும் “கலகக் கும்பல்”, “போதைப் பொருள் வியாபாரிகள்” மற்றும் பாதாள உலக கிரிமினல்கள்” என இழிவாக ஏசுவது, அவர்கள் பொலிஸ் ஒடுக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு சாதாரணமாக கோரிக்கை விடுத்த காரணத்துக்காகவே ஆகும். இது போலவே, யுத்த காலத்தின் போதும், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவதற்கு எதிராகப் போராடியவர்களையும் “பயங்கரவாதிகள்” அல்லது “பயங்கரவாத ஆதரவாளர்கள்” என வகைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அவர்களை அச்சுறுத்த மீண்டும் மீண்டும் முயற்சித்தது. கொழும்பு குடிசைகளில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இதே போன்ற முத்திரைகள் குத்தப்பட்டுவருகின்றன.

சக்திவாய்ந்த பொருளாதார நலன்களே இத்தகைய அபிவிருத்திகளுக்கு உந்துசக்தியாக உள்ளன. கொழும்பில் உள்ள அரை மில்லியனுக்கும் மேற்பட்ட குடிசைவாசிகளை வெளியேற்றி அவர்களது நிலங்களை முதலீட்டாளர்களுக்கும் பெரும் சொத்து உற்பத்தியாளர்களுக்கும் கையளிக்கும் அரசாங்கத்தின் தீட்டத்தின் கீழ் இலக்குவைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டக்குளியும் அடங்கும். இராஜபக்ஷ குறிப்பிடத்தக்க வகையில், புலிகளுக்கு எதிரான இறுதி நான்கு ஆண்டுகால இரத்தம் தோய்ந்த யுத்தத்துக்கு தலைமை வகித்த முக்கிய புள்ளிகளில் ஒருவரும், தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையை கொண்டுவந்தார்.

மட்டக்குளி சம்பவம் தொடர்பாக சகல எதிர்க் கட்சிகளும் அமைதிகாப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியோ (யூ.என்.பி.) அல்லது சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியோ (ஜே.வி.பி.) அதை எதிர்க்கவில்லை. அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தனது தாக்குதல்களை முன்னெடுக்கும் போதும் அவர்கள் இதே நிலைப்பாட்டையே எடுப்பார்கள். இந்தக் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தை ஆதரித்தது போலவே, அரசாங்கத்தின் சந்தை-சார்பு பொருளாதார திட்டம் அல்லது அதன் பொலிஸ்-அரச வழிமுறைகள் சம்பந்தமாக எந்தவொரு அடிப்படை வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை.

இதே போல், மட்டக்குளியில் பொலிஸ்-இராணுவ வன்முறைகள் மற்றும் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னால் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் முழுமையாக மௌனம் காக்கின்றன. மாறாக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் சம்பந்தமான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களை திசை திருப்ப மற்றும் தடம்புறளச் செய்ய அவர்கள் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு வருடத்துக்கு முன்னரே யுத்தம் முடிவடைந்த போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் அதன் இராணுவ இயந்திரத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றது. வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு இன்னமும் 15 வீதத்தை விழுங்குகிறது. அதே சமயம், கிட்டத்தட்ட சகல அவசரகால விதிகளும் அமுலில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு படைகளுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மேலும் எதேச்சதிகார ஆட்சியை நோக்கி வெளிப்படையாக நகரும் இராஜபக்ஷ, முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளதோடு கால எல்லையின்றி ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட தன்னை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களையும் பிரேரிக்கின்றார்.

இலங்கையில் பொலிஸ்-அரசு தலைநீட்டுவதானது சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளின் ஒரு முன்னேற்றமான வெளிப்பாடாகும். பெரும் வங்கிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் கட்டளைகளால் இயக்கப்படும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்கள், பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதன் பேரில் மேலும் மேலும் அரச ஒடுக்குமுறையை நாடுகின்றன.

இந்த மாற்றத்தை குறிக்கும் வகையில், கடந்த மாதம் டொரன்டோவில் ஜீ 20 மாநாடு நடந்த போது, ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மீது பாய்வதற்காக கனேடிய அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொலிசாரை அணிதிரட்டியிருந்தது. 2008-09ல் நிதி முறைமையை தூக்கி நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிணையெடுப்பு மற்றும் ஊக்கப் பொதி வழங்கும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பிரமாண்டமான பொதுக் கடனை மீண்டும் செலுத்துவதற்காகத் திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவே இந்த வருடாந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.

உழைக்கும் மக்கள் தம்மைச் சூழ அபிவிருத்தி அடையும் ஆபத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தசாப்தத்துக்கு முன்னர், மட்டக்குளியில் நடந்தது போன்று பாதுகாப்பற்ற மக்கள் மீதான தாக்குதலை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். இன்று, முன்னர் ஜனநாயக உரிமைகளை காப்பதாக கூறிக்கொண்ட பழைய கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அனைத்தும் அரசாங்கத்துடன் அணிசேர்ந்துகொண்டுள்ளன. முழு தொழிலாள வர்க்கத்தினதும் இன்றியமையாத ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்டத்தின் பாகமாக, குடிசைவாசிகளின் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு, தொழிற்சங்கங்களதும் முன்னாள் தீவிரவாதிகளதும் வெட்கம் கெட்ட, கோழைத்தனமான மற்றும் ஒத்துழைப்புவாதத்துக்கு எதிராக, தொழிலாளர்களும் இளைஞர்களும் தாங்களாகவே முன்வர வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மட்டக்குளியில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், பிரதேசம்பூராவும் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட சேத்தத்துக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோருமாறு தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. வேலைத் தளங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு இந்தத் தாக்குதலின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் உட்பொருள் பற்றிக் கலந்துரையாட கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தில் வெற்றி பெற்ற இராஜபக்ஷ அரசாங்கம், பிரமாண்டமாக பலப்படுத்தப்பட்ட இராணுவ இயலுமையுடன் தெற்கில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் வறியவர்களின் மீது திரும்பும் என உலக சோசலிச வலைத் தளமும் சோ.ச.க. யும் தொடர்ந்தும் எச்சரித்து வந்துள்ளன. யுத்தத்தை எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பியழைக்க இடைவிடாது கோரிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காக்கும் போராட்டம், அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கம் மற்றும் முன்னாள் தீவிரவாதிகள் போன்ற உட்பட அரசாங்கத்தின் முண்டுகோள்களுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை இன்றியமையாததாக்குகிறது. ஒரு சில செல்வந்தர்களின் நன்மைக்காக அன்றி, சமுதாயத்தின் பரந்த பெரும்பான்மையினரின் நன்மைக்காக பொருளாதாரத்தை மீளமைக்க ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இதற்கு இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்துகாகப் போராடும், இனப் பாகுபாடுகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.