சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Sydney Film Festival 2001

"Art wedded to truth must, in the end, have its rewards"

சிட்னி திரைப்பட விழா 2001

"உண்மையோடு இணைந்திருக்கும் கலை, இறுதியில், அதன் மதிப்பைப் பெறும்"

The Apu Trilogy எழுத்தும்-இயக்கமும் சத்யஜித் ரே
By Richard Phillips
2 August 2001

Use this version to print | Send feedback

இந்த ஆண்டின் சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நினைவு கூரத்தக்க படங்களில் ஒன்றாக சத்யஜித்ரேயின் The Apu Trilogy (அப்புவின் மூன்று பாகங்கள்) --பதர் பாஞ்சாலி (1955), அபராஜிதோ (1956) மற்றும் அப்பு சன்சார் (1959)-- இடம் பெற்றிருந்தது. இது ஒரு வங்காள குடும்பத்தையும், அவர்களின் மகன் அப்புவின் வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகிறது. தன்னுடைய சிறுவயதில் ஒரு கிராமப்புறத்தில் வாழும் அப்பு, இளம்வயதில் அங்கிருந்து வெளியேறி பெனாரசிற்கு வருகிறான். பின்னர் இளைஞனாக இருக்கும் போது, அங்கிருந்து கல்கத்தாவில் திருமணத்திற்காக அவர்களின் குடும்பம் இடம் பெயர்கிறது. Merchant-Ivory அமைப்பால் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மூன்று படங்களிலும், புதிய துணைத்தலைப்புகளும், டிஜிட்டல் இசைக்கலவையும், சிறப்பார்ந்த ரவிசங்கரின் இசைப்பதிப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இயக்குனரான சத்யஜித்ரேயினால் உருவாக்கப்பட்ட The Apu Trilogy, அந்த காலக்கட்டத்தில் மிக ஆழ்ந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கேற்ப சினிமாவை மாற்றி அமைக்க உதவியதுடன், சர்வதேச அளவிலும் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி ஊக்குவித்தது. ஜப்பானின் தலைச்சிறந்த இயக்குனரான அகிரா குரோசவா, "ரேயின் சினிமாவைப் பார்க்கவில்லை என்றால் உலகில் சூரியனை அல்லது நிலவை பார்க்காமல் இருப்பதைப் போன்றதாகும்" என்று குறிப்பிடும் அளவிற்கு ரேயின் படைப்பு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

1921இல் ஒரு வேறுபட்ட புத்திஜீவித குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்த ரே, கலை, இலக்கியம், இசை ஆகியவற்றால் சூழ்ந்திருந்த சூழ்நிலையில் வளர்ந்தார். இந்தியாவின் சமூக சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்திலும், மற்றும் அதன் முன்னணி கவிஞரும், நாடக ஆசிரியருமான ரவீந்தரநாத் தாகூரோடும் நெருக்கமாக ஈடுபாடு கொண்டிருந்த அவரின் தந்தையும், தாத்தாவும் ஓவியர்களாகவும், பதிப்பகத்தாராகவும் இருந்தார்கள். புத்தகங்களும் எழுதியிருக்கும் அவர்கள், சிறுவர் கதைகள் மற்றும் பாடல்களையும் படைத்திருக்கிறார்கள். ரேயின் அன்னை முறையாக பாடல் பாடக்கற்ற பாடகியாவார். மேலும் ஏனைய உறவினர்களும் விஞ்ஞானிகளாகவும், புகைப்பட வல்லுனர்களாகவும், கலைஞர்களாகவும் மற்றும் இயற்பியலாளர்களாகவும் இருந்தார்கள். ஆரம்ப நாட்களில் மேற்கத்திய தொல்சீர் (classical) இசை மற்றும் சினிமாவில் ரே மிகவும் ஆர்வம் காட்டினார். தனது இளம் வயதில் நூற்றுக்கணக்கான படங்களை, குறிப்பாக அமெரிக்கப் படங்களைப் பார்த்த அவர், பில்லி வேல்டர் உட்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கும், இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதினார்.

பௌதீகம் மற்றும் பொருளாதாரத்தை முதன்மையாக கொண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், பிரபல வங்காள கலைஞர்களான பினோடி பிஹாரி மற்றும் நண்தாலா போஸ் ஆகியோரின்கீழ் ரே நுண்கலை மற்றும் கிராபிக் வடிவமைப்பைக் (graphic design) கற்பதற்காக காலாபவனில் உள்ள சாய்நிகேதன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிஹாரி அவருக்கு சீன மற்றும் ஜப்பானிய வரைகலையையும், நேர்த்தியான கையெழுத்து உத்திகளையும் கற்றுத்தந்தார். 1942இல் கல்கத்தா திரும்பிய ரே, அதற்கடுத்த ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் விளம்பர நிறுவனத்தில் ஒரு கிராபிக் வடிவமைப்பாளர் மற்றும் படைப்பாளராக பணியில் அமர்ந்தார்.

திரைப்படங்களில் ஆர்வம் அதிகமான நிலையில், ஹாலிவுட் திரைப்படங்கள், ஐரோப்பிய மற்றும் ரஷ்ய திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகளை ஏற்பாடு செய்து, 1947இல் கல்கத்தா திரைப்படக் கழகத்தை (Calcutta Film Society) உருவாக்க ரே உதவினார். திரைப்பட விமர்சனங்கள் எழுத தொடங்கிய அவர், 1948இல் "இந்திய திரைப்படங்களில் என்ன தவறு இருக்கிறது" (What is wrong with Indian Films) என்று தலைப்பிட்ட ஒரு சிறிய ஆனால் முன்னோக்குமிக்க கருத்தை வெளியிட்டார். அது இந்திய சினிமாவில் இனிமையான இசையின் மற்றும் மத மெய்யுணர்வாதத்தின் ஆக்கிரமிப்பை விமர்ச்சித்தது. அது குறிப்பிட்டதாவது: "வாழ்க்கையே சினிமாவின் மூலப்பொருளாக இருக்கிறது. ஓவியம், இசை மற்றும் கவிதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நாடு, திரைப்பட தயாரிப்பாளர்களை சரியாக கொண்டு செல்ல தவறுவதென்பது நம்புவதற்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஒருவர், அவருடைய கண்களையும், காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும், அவ்வளவு தான், இதன் மூலம் அவரால் சாதிக்க முடியும்."

இந்த கட்டுரையை எழுதிய பின்னர் வெகு விரைவிலேயே, ரே பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஜோன் ரேனுவாவை சந்தித்தார். ரே அவரின் சொந்த படங்களை உருவாக்க அவரை ரேனுவா ஊக்கப்படுத்தினார். 1950இல் திறமைமிகுந்த அந்த 29 வயது படைப்பாளி, அந்த விளம்பர நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஆறு மாதங்கள் பணியாற்ற இலண்டனுக்கு அனுப்பப்பட்டார். அங்கே ரே, விட்டோரி டி சிகோவின் The Bicycle Thief (1948) மற்றும் ஏனைய பல இத்தாலிய நவ-யதார்த்த தொல்சீர் சினிமாக்கள் உட்பட பல திரைப்படங்களைப் பார்ப்பதிலேயே அவரின் பெரும்பாலான ஓய்வு நேரத்தைச் செலவிட்டார்.

ரேயிடமும், ஏனைய திரைப்பட இயக்குனர்களிடமும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்த இத்தாலிய நவ-யதார்த்தவாதம், அதன் இயற்கையான ஆவணப்பட மாதிரியையும், ஒரேயிட படப்பிடிப்பையும், இலக்கிய நடை பேச்சுவழக்கு இல்லாமல் நடைமுறை பேச்சுமுறையையும், முக்கியமாக உத்தியோகப்பூர்வமற்ற நடிகர்களைப் பயன்படுத்துவதையும் கொண்டிருந்தது. ஒரு ஏழை இத்தாலிய மனிதரின் கடுமையான முயற்சிகளையும், வேலை வேண்டும் என்பதற்காக திருட்டுப்போன தந்தையின் மிதிவண்டியை மீட்டெடுக்க அவர் மகனின் முயற்சிகளையும் டி சிகாவின் திரைப்படங்கள் எடுத்துக்காட்டின.

1951ஆம் ஆண்டு கட்டுரையில் ரே எழுதியதாவது: "The Bicycle Thief திரைப்படம் சினிமா அடிப்படைகளின் வெற்றிகரமான மறுகண்டுபிடிப்பாகும். மேலும் அதன் கருவில் இருக்கும் எளிமையான உலகியியல்தன்மை, அதைக் கையாண்டிருக்கும் துல்லியம், அதன் குறைந்த செலவிலான தயாரிப்பு ஆகியவை இந்திய திரைப்பட இயக்குனர்கள் ஆராய்வதற்குரிய முன்மாதிரியான படமாக அதை எடுத்துக்காட்டுகிறது."

"தற்போதிருக்கும் நுட்பத்திற்கான குருட்டுத்தனமான வழிபாடு, நம்முடைய இயக்குனர்கள் மத்தியில் உண்மையான ஈடுபாட்டில் இருக்கும் வறுமையையே எடுத்துக்காட்டுகிறது," என்று எழுதிய ரே, தொடர்ந்து எழுதுகையில், "ஒரு பிரபலமான ஊடகம், சிறந்த வகையிலான ஈடுபாட்டை வாழ்க்கையிலிருந்தும், அதற்குள் இருக்கும் அதன் வேர்களில் இருந்தும் பெற வேண்டும். அனைத்து தொழில்நுட்ப மேற்பூச்சு வேலைகளும் கருவின் செயற்கைத்தன்மையும், கையாள்வதில் இருக்கும் நேர்மையின்மையையும் எடுத்துக்காட்டும். திரைப்பட இயக்குனர்கள் வாழ்க்கையின் பக்கம், யதார்த்தத்தின் பக்கம் திரும்ப வேண்டும். டிமெல்லி [Cecil B.] கிடையாது, டி சிகா அவர்களுடைய முன்மாதிரியாக இருக்க வேண்டும்."

ஒற்றையடி பாதை பாடல்

பிபூதிபூஷன் பாந்திபாத்யாயவினால் எழுத்தப்பட்ட சுயசரிதை போன்ற பிரபல புதினமான பதர் பாஞ்சாலியின் (ஒற்றையடி பாதை பாடல்) குழந்தைகளுக்கான பதிப்பை எழுத 1945இல் ரே கேட்டுக்கொள்ளப்பட்டார். டி சிகாவின் திரைப்படத்தால் கவர்ந்திழுக்கப்பட்டிருந்த ரே, அந்த நாவலின் கருவையே அவருடைய முதல் படமாக உருவாக்க முடிவெடுத்தார். மேலும் இலண்டனில் இருந்து இந்தியா வருவதற்கான இரண்டு வார கப்பல் பயணத்திலேயே படப்பிடிப்பிற்கான கோர்வைகளையும், அதன் தயாரிப்பிற்கான ஓர் அடிப்படை திட்டத்தையும் தயாரித்து கொண்டார்.

1950இல் பதர் பாஞ்சாலியின் பணிகள் தொடங்கிய போதும், 1952 அக்டோபர் வரையில் முதல் அடி கூட படமாக்கப்படாமல் இருந்தது. பின்னர் இது அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளின் வாரயிறுதி நாட்களிலும், விடுமுறைகளிலும் தொடர்ந்தது. முக்கியமாக திரைப்பட அனுபவமல்லாத கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் ஒரு குறைந்தபட்ச நிதி வசதியையே இந்த தயாரிப்பு கொண்டிருந்தது. உண்மையில், ரேயின் ஒளிப்பதிவு கலைஞரான சப்ரதா மித்ரா அதற்கு முன்னால் வரை ஒரு திரைப்படத்தை ஒருபோதும் உருவாக்கி இருக்கவே இல்லை. எடிட்டர், கலை இயக்குனர் மற்றும் 80 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற ஒரேயொரு பழைய நடிகையான சுனிபாலா தேவி ஆகியோர் மட்டும் தான் திரைப்பட அனுபவம் பெற்றிருந்த கலைஞர்களாக இருந்தார்கள். ரேயின் நிதி வசதிகள் எல்லாம் தீர்ந்து போய், மேற்கு வங்காள அரசாங்கத்தின் மானியத்துடன் ஒரு வருடத்திற்குப் பின்னால், இறுதியில் அந்த படம் முடிக்கப்பட்டது. அது 1955 ஆகஸ்டில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு, அங்கே விழாவில் சிறந்த மனித ஆவணப்பட விருதை (Best Human Document Award) வென்றது. இந்த சர்வதேச அங்கீகாரம் ரேயை விளம்பர நிறுவனத்திலிருந்து வெளியேற அனுமதித்தது. அவருடைய எஞ்சிய வாழ்நாளை திரைப்பட இயக்கத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும், கலைக்காகவும் அர்ப்பணித்தார்.

1900களின் தொடக்க காலத்தை மையமாக கொண்ட பதர் பாஞ்சாலி, ஒரு சாதாரண கதையைக் கொண்டிருந்தது. வங்காளத்தின் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஓர் ஏழை பிராமண குடும்பத்தின் வாழ்க்கையையும், காலத்தையும் மற்றும் அவர்களின் ஒரே மகனான அப்புவின் பிறப்பு மற்றும் குழந்தை பருவத்தையும் மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. உண்மையில், அந்த படத்தில் தொடர்ச்சியாக வெட்டுப்பட்ட, தொடர்ந்து இணைக்கப்பட்டிராத ஒப்பனை வேலைகள் பல இருந்தன. ஒரு கவிஞராக வேண்டும் என்று கனவு காணும் குடும்பத்தலைவரான ஹரிஹர் (கணு பானர்ஜி), அவருடைய கருவுற்ற மனைவி சர்பஜெயா (கருணா பானர்ஜி) மற்றும் அவருடைய மகள் துர்கா (உமா தாஸ் குப்தா) ஆகியோருடன் பனாரஸிலிருந்து அவருடைய மூதாதையர்கள் வாழ்ந்த சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். அந்த குடும்பம், ஒரு வயதான அத்தை, இந்திர் தக்ரனையும் (சுனிபாலா தேவி) கவனித்து வருகிறது.

கடன்களை அடைப்பதற்காக அந்த நிலத்தின் ஒரு பகுதி விற்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீடும் மிகவும் பழுதுபட்டு இருந்தது. ஓர் உள்ளூர் நிலச்சுவான்தாருக்காக எப்போதாவது புத்தக ஒழுங்கமைப்புப் பணியைப் பெறும் ஹரிஹர், முழு-நேர வேலைக்காக அதிகபட்ச நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பழத்தோட்டங்களில் இருந்து பழங்களைத் திருடும் குறும்புத்தனமான துர்கா, அவற்றை இந்திருக்கு அளிக்கிறாள். இதனால் அண்டை வீட்டாருக்கும், சர்பஜெயா மற்றும் இந்திருக்கும் இடையில் சச்சரவுகளை உருவாக்குகிறாள். அந்த இளம் சிறுமியை ஊக்குவிப்பதற்காக கடிந்துகொள்ளப்பட்டதால் வீட்டைவிட்டு வெளியேறும் இந்திர், பின்னர் அப்புவின் பிறந்தநாளையொட்டி மீண்டும் குடும்பத்தில் வந்து இணைகிறார்.

பதர் பாஞ்சாலி இந்த ஏழை குடும்பத்தின் சோதனைகளையும், கொடுந்துன்பங்களையும் எடுத்துக்காட்டுகிறது: அப்புவின் ஆரம்பகால பள்ளி ஆண்டுகள், அவனுடைய தங்கை துர்காவுடனான அவனின் நெருங்கிய உறவு, அருகிலிருக்கும் காட்டிலும், வயலிலும் அவர்களின் வீரதீர விளையாட்டுக்கள் ஆகியவை அவனுடைய (அப்பு - சுபிர் பானர்ஜி) நனவுபூர்வமான முதல் அனுபவங்களாக இருக்கின்றன. ரேயின் எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஆனால் பல உலகளாவிய கருக்களின் ஆழமான கலைத்துவ வெளிப்பாடுகளே இந்தப் படத்தின் அடி ஆழத்தில் பலமாக இருக்கிறது. அவர் வாழ்வுக்கும் சாவுக்கும், வயதானவர்களுக்கும் இளம் வயதினருக்கும் இடையிலான தொடர்புகளை மிக கவனமாக கையாள்கிறார். அத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாழ்விற்கு இடையிலான பதட்டங்களையும், அது புதிய தொழில்நுட்பத்தால் ---மின்சாரம் மற்றும் ரயில்வே ஆகியவை--- எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதையும் மிக நுட்பமாக குறிப்பிட்டு காட்டுகிறார்.

இந்திருடைய வாழ்நாளின் இறுதி சிக்கலான சம்பவங்களை வெட்டும் ஒரு நினைவுக்கூரத்தக்க காட்சியில், எப்போதும் சண்டையிட்டு கொண்டிருக்கும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெகு தூரத்தில் விளையாடி கொண்டிருக்கிறார்கள். அங்கே அவர்கள் உயர் மின்னழுத்த மின்சார கோபுரத்திற்கு அருகில் வருகின்றனர். கம்பிகளில் இருந்து வரும் சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் நீண்ட புற்கள் வழியாக நடக்கிறார்கள், தூரத்தில் போகும் இரயிலின் புகையைப் பார்க்கிறார்கள், அவர்கள் ரயில்வே தண்டவாளத்திற்கு ஓடுகிறார்கள். இதற்கு முன்னர் அவர்களின் வாழ்க்கையில் எப்போதாவது பின்புல சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்த இரயில், அதன் அனைத்து சக்தியோடு காணப்படுகிறது. இது அவர்களின் அப்போதைய நிலைமைக்குப் பின்னால் இருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இரயிலினால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருந்ததில் அவர்கள் தங்களின் சண்டையை மறந்துவிட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வரும் போது, இந்திர் இறந்து விட்டிருப்பதையும், சிதை எரிக்கப்பட்டு கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

இந்திரின் மரணம், மழையில் விளையாடியதால் காய்ச்சல் ஏற்பட்டு, தந்தைக்காக காத்திருந்து அவர் வருவதற்கு முன்பாகவே இறந்து போகும் துர்காவின் பரிதாபகரமான இழப்பு உட்பட பல ஆழமான துக்கங்களினூடாக சில அசாதாரண மகிழ்ச்சிகரமான காட்சிகளையும் பத்தர் பாஞ்சாலி கொண்டிருக்கிறது.

பத்தர் பாஞ்சாலியின் வெற்றியைத் தொடர்ந்து ரே, உடனடியாக அபராஜித்தோவின் (The Unvanquished) பணிகளைத் தொடங்கினார். 1956இல் முடிக்கப்பட்ட இந்த படமும் பண்டிபாத்யாயவின் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இது 1957 வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை வென்றது. கதையளவில் இந்த படம் மிகவும் சிக்கலாக இருந்தாலும், பத்தர் பாஞ்சாலியோடு ஒப்பிடும் போது பாத்திரப்படைப்பில் இந்திய சினிமா நடிகர்கள் மத்தியில் புதிய தரங்களை அமைத்து கொடுத்தது.

1920களின் காலகட்டத்தில், புனித நகரமான பனாரஸில் கங்கையிலிருந்து அபராஜித்தோ தொடங்குகிறது. துர்காவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்திருந்த அந்த குடும்பம் இங்கே நகர்ந்திருந்தது. அந்த புனித நதியைப் பார்வையிட வரும் புனிதயாத்ரிகர்களுக்கு இந்து புராணங்களை எடுத்துக்கூறியும், மத ஆபரணங்களை விற்பனை செய்தும் ஹரிஹர் அவருடைய மனைவி சர்பஜெயாவையும், 10 வயது நிரம்பிய அப்புவையும் (சமரன் கோஷல்) காப்பாற்றி வருகிறார். குடும்பமும் தொடர்ந்து வறுமையில் இருக்கிறது என்பதுடன், ஹரிஹரின் உடல்நிலையும் மோசமடைந்து வந்த நிலையிலும், நகர்ப்புற வாழ்க்கையில் உற்சாகமடைந்திருந்த மற்றும் ஊக்கம் பெற்றிருந்த மகனுடனும், மனைவியுடனும் சேர்ந்திருப்பதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். இருந்தாலும், ஹரிஹர் ஒருநாள் நதிப்படியில் ஏறி வரும்போது தவறிவிழுந்து, காய்ச்சலால் அவதிப்பட்டு விரைவில் இறந்து போகும் போது துக்கம் வெடிக்கிறது.

தனது கணவரையும், தனது ஒரே மகளையும் இழந்த சர்பஜெயா வங்காளத்தில் இருக்கும் தன்னுடைய மாமாவின் வீட்டிற்குத் திரும்ப முடிவெடுக்கிறார். அங்கே அப்பு உள்ளூர் பள்ளியில் அவனுடைய கல்வியைத் தொடர்கிறான். அப்புவிற்கும் (இப்போது சாண்டி குப்தா இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்), அவனுடைய அன்னைக்கும் இடையிலான தொடர்பு மாறுவதே அபராஜித்தோவின் மையக்கருவாக இருக்கிறது. ஆண்டுகள் ஓடுகின்றன, கல்கத்தா கல்லூரியில் ஒரு புலமைப் பரிசை வெல்லும் அப்பு, கிராமத்தை விட்டு புறப்படுகிறான். சர்பஜெயா தன்னுடைய மகனை நினைத்து பெருமிதப்படுகிறார். ஆனால், அவன் இல்லாத போது தன்னை யார் கவனித்து கொள்வார்கள் என்று கவலைப்படுகிறார்.

படத்தின் இறுதி பகுதி கல்கத்தாவில் அவனுடைய பள்ளி தோழர்களுடன் அப்புவின் வாழ்க்கை மாறுகிறது. விடுமுறைகளில் அவனுடைய அன்னையுடன் கிராமத்தில் இருப்பதை அப்பு வெறுப்பாக உணர்கிறான். அப்பு அவனுடைய அன்னையின் தனிமை மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் ஏளனங்களைப் பற்றி நனவின்றி இருக்கிறான். தனக்கு கடிதம் எழுதாததற்காக அவனைக் கடிந்து கொள்ளும் சர்பஜெயா, அவருடைய தனிமையால் நொந்து போகிறார். பின்னர் அந்த இளைஞன் இந்த உலகில் அவனுடைய சொந்த வழியை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதை அங்கீகரிக்கிறார். பதர் பாஞ்சாலியில் இருப்பதைப் போலவே, இந்த படத்திலும் இரயில் முக்கியத்துவம் பெறுகிறது. இரயில், அப்புவைப் பொறுத்த வரையில் வெளியுலகத்திற்கு எடுத்துச்செல்லும் அவனுடைய வாழ்க்கைப்பாதையாக இருக்கிறது. சர்பஜெயாவைப் பொறுத்த வரையில், அப்புவை அவனுடைய சிலநாள் விடுமுறைக்குக் கிராமத்திற்குத் திரும்ப கூட்டி வரும் ஒரு நம்பிக்கை வாகனமாக இருக்கிறது.

1959இல் மூன்று தொகுப்புகளின் இறுதி படைப்பான அப்பு சன்சாரை உருவாக்க முடிவெடுப்பதற்கு முன்னால், 1957 மற்றும் 1959க்கு இடையில் பராஸ் பத்தர் (மெய்யியலாளரின் கல்) மற்றும் ஜல்சாகார் (இசை அரங்கம்) ஆகிய இரண்டு படங்களை ரே தயாரித்தார். இந்த படத்தில் இருபதுகளின் மத்தியில் இருக்கும் அப்பு (சௌமித்ரா சாட்டர்ஜி) படிப்பை முடித்துவிட்டிருக்கிறார். வேலையில்லாமல் இருந்தாலும் கூட, ஓர் எழுத்தாளராக முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கல்கத்தாவின் இரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் ஒரு சிறிய அறையில் வசிக்கும் அப்பு, அவருடைய ஒரு பள்ளிக்கூட நண்பன் புளூவின் (ஸ்வபான் முகர்ஜி) செல்வாக்கில், அங்கே நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறான். எவ்வாறிருப்பினும், மணமகன் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்ததால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் மணப்பெண்ணான அபர்ணாவின் (ஷர்மிளா தாகூர்) திருமணம் இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்படுகிறது. ஒரு புதிய மணமகனை உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அவர்களின் பாரம்பரியத்தில், அபர்ணா அவளின் வாழ்க்கை முழுவதும் பழிச்சொல்லுக்கு உள்ளாவாள் என்ற நிலைமை இருக்கிறது. அப்பு மணமகனாக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறான். ஆரம்பத்தில் சிறிது மறுப்பு தெரிவித்தாலும் கூட, பின்னர் அதற்கு அவனும் ஒத்துக் கொள்கிறான். காதல்வயப்படும் புதிதாக திருமணமான இந்த இளம் தம்பதியினர் கல்கத்தா திரும்புகிறார்கள். அபர்ணா கருவுறுகிறாள். ஆனால், ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்து அவள் இறந்து போகும் போது, மீண்டும் சோகம் கவ்வுகிறது.

கோபத்தோடும் குழப்பத்தோடும் அப்பு தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு அந்த குழந்தை தான் காரணம் என்று கடிந்து கொண்டு, அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான எந்த பொறுப்பையும் ஏற்க மறுக்கிறான். ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் ஐந்து ஆண்டுகள் நாடுமுழுவதும் அங்குமிங்குமாக அலைந்த பின்னர், இறுதியில் அவன் தன்னுடைய மகனைப் பார்க்க திரும்பி வருகிறான். அவனுடைய உறவினர்கள் திட்டினாலும், அந்தக் குழந்தை முதலில் அவனை நிராகரித்தாலும், பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அந்த இளங்குழந்தைக்கான பொறுப்பையும், முழு கவனிப்பையும் ஏற்பதாக அப்பு உறுதிமொழி அளிக்கிறான்.

The Apu Trilogyஇன் கலைத்துவ அழகை விவரிப்பது கடினம். அதில் ஏதோவொரு வகை மலைப்புண்டாக்கும் கவிநயமான மற்றும் எப்போதிருக்கும் கற்பனை நயம் இருக்கிறது. அது ஒருவரின் உடனடி நினைவிலிருந்து படத்தின் கதையின் குறிப்பிட்ட பகுதிகள் மறந்துபோன பின்னரும் கூட நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. பத்தர் பாஞ்சாலியில் அப்பு மற்றும் துர்கா இருவரும் கிராமத்திற்கு வெளியே இரயிலை பார்ப்பது, அல்லது முதல் மழையில் துர்கா சந்தோஷமான நடனமாடுவது, அபராஜித்தோவில் மகன் வெகுநாட்களுக்கு வீட்டில் இல்லாமல் போய்விடுவதை சர்பஜெயா உணர்ச்சிகரமான வலியுடன் சொல்ல முயல்வது, மற்றும் அப்பு சன்சாரில் புதிதாக திருமணமான அப்பு மற்றும் அபர்ணாவின் அசாதாரண நெருக்கமான உறவு ஆகியவை சிறந்த காட்சிகளாகும்.

ஒரு சிறிய தொழிற்சாலையில் மேலாளருடனான அப்புவின் நேர்காணல், அப்பு சன்சாரின் மறக்கமுடியாத பல காட்சிகளில் மற்றொன்றாகும். உணவு பாத்திரங்களின் அட்டைக் காகிதத்தில் எழுதுவது தான் வேலை. அப்பு பணியிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்கும் இருண்ட, அழுக்கு நிறைந்த நரகத்தைப் பார்ப்பது போல நேர்காணல் முடிகிறது. எதையும் சொல்லாமல், படம் வெறுமனே நகர்கிறது. ஒரு தொழிலாளரின் வெறுமையான பார்வை, அந்த ஆன்மாவை அழிக்கும் வேலையைப் பற்றி மட்டுமல்லாமல், மாறாக இந்த துன்பத்தை உருவாக்கும் அமைப்புமுறையைப் பற்றி, ஆயிரம் வார்த்தைகளால் சொல்லும் வசனத்தை விட அதிகமாக பேசுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த திரைப்படங்களின் சிறப்பு, கவித்துவமான ஒளிப்பதிவு, நடிக-நடிகையரின் நேர்மையான நடிப்பு மற்றும் ரவிசங்கரின் ஆழமான இசை ஆகியவற்றால் மட்டுமின்றி, ரே கையாளும் உலகளாவிய கருத்திலும், அவருடைய அடிக்கோடிடும் நேர்மறைச் சிந்தனையிலும் தங்கி இருக்கிறது. இந்த மூன்று பாகங்களில் அசாதாரண சோக காட்சிகள் இருந்தபோதினும், ரேயின் கதாபாத்திரங்கள் எவ்வளவு தான் சிரமங்களை எதிர்கொண்டாலும் மனித உறவுகளை உண்மையாக பாதுகாப்பதற்கான போராட்டம் அனைத்துவகையான கஷ்டங்களையும் தாண்டிவரும் என்ற நம்பிக்கை உணர்வை ரே எப்போதும் அளிக்கிறார். பதர் பாஞ்சாலி மற்றும் அபராஜித்தோவின் ஆரம்ப வெற்றி குறித்து 1958இல் ரே குறிப்பிடுகையில், "தனிப்பட்ட முறையில் என்னுடைய முதல் இரண்டு படங்களின் மூலம் நான் அதிருஷ்டத்தைப் பெற்றிருக்கிறேன். ஆனால், எது நிஜமான அவசியம், எது நிஜமாகவே உற்சாகப்படுத்தக் கூடியதென்றால் அது உடனடியாக கிடைக்கும் வெற்றியல்ல, மாறாக ஒரு கலைஞனாக நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின், அதாவது 'உண்மையைக் கொண்டிருக்கும் கலை, இறுதியில், அதற்குரிய பாராட்டுக்களைப் பெறும்' என்ற நம்பிக்கையின் இறுதி வெற்றியில் தான் இருக்கிறது" என்றார்.

தாக்குதலுக்கு உள்ளாகும் ரேயின் கலைத்துவ மரபு

இந்த இயக்குனரின் சினிமா படைப்புகள் மீதான ஒரு விரிவான கண்ணோட்டத்தை இங்கே அளிப்பது சாத்தியமல்ல. உண்மையில் அப்புவின் மூன்று தொகுப்பு என்பது, உண்மையிலேயே வித்தியாசமான பல விஷயங்கள் பற்றிய ரேயின் பல சிறந்த படங்களில் முதன்மையானதாக இருக்கிறது. பின்னிணைப்பாக கூற வேண்டுமானால், வெகுஜன கருத்துக்களின் தடுமாற்றத்தை நிராகரித்த, முற்றிலும் சுயாதீனமாக இருந்த இந்த இயக்குனர், ஒரு பல்திறன் வாய்ந்த கலைஞராக இருந்தார். தம்முடைய சொந்த திரைக்கதைகளையும் எழுதியிருந்த அவர், பல பாடல்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். அவருடைய பல படங்களில் அவர் ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டிருந்தார். குழந்தைகளுக்கான பல புத்தகங்கள், நாவல்கள், துப்பறியும் கதைகள் மற்றும் விஞ்ஞான திகில் படைப்புகள் ஆகியவற்றையும் கூட எழுதிய அவர், தம்முடைய இறுதி நாட்கள் வரையில் எழுத்துப்பணியாற்றிக் கொண்டிருந்தார்.

1992இல் இறப்பதற்கு முன்னால், வாழ்நாள் முழுமைக்குமான ஆஸ்கார் விருதைப் பெறுவதற்கு சற்று முன்னர் வரையில், வங்காள மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் வரலாற்றின் பல்வேறு கட்டங்களைப் பற்றி ---கிராமப்புற ஏழைகள், நகர்புற மத்தியதர வர்க்கங்கள் மற்றும் செல்வந்தர்கள் பற்றி--- அவர் 29 திரைப்படங்களையும், பல ஆவணப்படங்களையும் செய்திருந்தார். அவற்றில் சில: The Goddess (1960), Three Daughters (1961), The Lonely Wife (1964), The Hero (1966), Days and Nights in the Forest (1969), Distant Thunder (1973), The Chess Players (1977), The Home and the World (1984), An Enemy of the People (1989), Branches of the Tree (1991) and The Stranger (1991).

சர்வதேச விமர்சகர்களால் இந்த நூற்றாண்டின் முன்னணி திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக மிகச் சரியாக பாராட்டப்பட்ட ரே, அவருடைய சொந்த நாட்டில் இழிவுபடுத்தும் பலரை எதிர்கொள்ள நேரிட்டது. 1980களில், முன்னாள் திரைப்பட நட்சத்திரமும், பாராளுமன்ற உறுப்பினருமான நர்கிஸ் தத் அவரை இந்திய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். "வெளிநாட்டு இரசிகர்களுக்கு இந்தியாவின் ஏழ்மையின் படங்களை ஏற்றுமதி செய்கிறார்" என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்து மேலாதிக்கவாதிகளின் கோபத்திற்கும் ரே ஆளானார். அவர் ஒரு "கீழ்த்திசை மொழிப்புலமையாளர்" (Orientalist), அல்லது இந்திய கலாச்சாரத்தை கைவிட்ட ஒரு மேற்கத்திய மோகம் கொண்ட இந்தியர் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

வெளிநாட்டு தாக்கங்கள் மற்றும் பிற மதங்களைக் காரணம் காட்டி அனைத்து இந்திய சமூக கொடுமைகளையும் குற்றஞ்சாட்டும் மற்றும் இந்தியா ஒரு பிரத்யோக இந்து நாடாக வேண்டும் என்று வலியுறுத்திய இந்து அடிப்படைவாதிகளின் எழுச்சியுடன் இந்த கடுமையான விமர்சனங்கள் பொருந்தி நின்றன. கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் இந்திய சமுதாயத்தின் மீதான வலதுசாரி இனவெறிப் பார்வையை வெட்ட விரும்பும் அல்லது அதை விமர்சிக்க விரும்பும் வரலாற்றாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து ஒடுக்க விரும்பும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூலமாக இந்த தீவிரவாதிகள் இன்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற "விமர்சகர்கள்" சத்யஜித் ரேயிடம் சிறிதும் தடுமாற்றம் காட்டுவதில்லை. முக்கிய பிரமுகர்களாக இருந்த ஒரு குடும்பத்தில் படிப்பிக்கப்பட்ட ஒருவரும், வங்காள மறுமலர்ச்சிக்காலம் என்று கூறப்படுகிற காலத்தில், ஜாதி அமைப்பையும், குழந்தை திருமணத்தையும், சதி (கணவரை இழந்த பெண்ணை எரிக்கும் சடங்கு) மற்றும் ஏனைய பிற பிற்போக்கான பழக்கங்களையும் முடிவுக்கு கொண்டு வர போராடிய ஒருவரான ரேயிற்கு, கலைத்துவ படைப்புகளில் ஓர் இந்து அல்லது தேசியவாத அணுகுமுறை இருப்பதாக குறை கூறுபவர்களோடு செலவிட நேரம் இருக்கவில்லை.

கலை சிந்தனைக்காக மனிதயின விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தின் உயர்ந்த வெளிப்பாடுகளை---ஐரோப்பிய அறிவொளியிலிருந்தும், ஆசிய கைத்திறனிலிருந்தும், மேற்கத்திய தொல்சீர் இசையிலிருந்தும், ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் இருந்தும் உயர்ந்த வெளிப்பாடுகளை ரே எடுத்தாண்டார். இந்த முற்போக்கான மற்றும் முற்றிலும் உள்ளடங்கிய பார்வை அவருடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்பட்டது. மேலும் அது ஈடு இணையற்ற நேர்மையையும், ஒருங்கிணைவையும் அளித்தது. ஒரு சிறந்த சினிமா "அதன் பிராந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய கலைநயத்தின், உலகளாவிய உணர்வுகளின் தளத்தை எட்டும் திறனைப் பெற்றிருக்கும்" என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டிருந்தார். இது தான் The Apu Trilogyஇன் ஆழமான வெற்றியாக இருக்கிறது. மேலும் இது ஏன் இன்றைய இந்து அடிப்படைவாதிகளுக்கு சாபமாக இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.