World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US consolidates occupation of Iraq

அமெரிக்கா ஈராக்கிய ஆக்கிரமிப்பை பலப்படுத்துகிறது

Peter Symonds
9 June 2010

Back to screen version

ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானத்தில் அதன் போரை விரிவுபடுத்துகையில், மிக எச்சரிக்கையுடன் ஈராக் ஒரு வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. ஈராக்கில் உள்ள உயர் அமெரிக்கத் தளபதி ஜெனரல் ரேமண்ட் ஒடியர்னோ கடந்த வெள்ளியன்று அந்நாடு “ஒரு முறையான, நம்பகத் தன்மையுடைய தேர்தலை” நடத்தியது, அதன் பாதுகாப்புப் படைகள் முன்னேறிவிட்டன, அனைத்து அமெரிக்க போர்த் துருப்புக்களையும் ஈராக்கில் இருந்து செப்டம்பர் 1 ஐ ஒட்டி திரும்பப் பெறுவதற்கான திட்டங்கள் “தயாரிப்பில்” உள்ளன என்று அறிவித்தார்.

வெஸ்ட் பாயின்ட் இராணுவ உயர்கூடத்தில் கடந்த மாதக் கடைசியில் பேசிய ஜனாதிபதி ஒபாமா இன்னும் ஆர்வத்துடன் அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறுகையில், “ஒரு வலுவான அமெரிக்க சாதாரண குடிமக்கள் தொகுப்பு அங்கு ஈராக்கியர்கள் அரசியல், பொருளாதார பலப்படுத்த உதவுவர்”, அது “இறைமை பெற்ற, உறுதியான, தன்னிறைவுடைய ஜனநாயக ஈராக்கை” நிறுவ உதவும் என்றார்.

உண்மையோ முற்றிலும் மாறானது. செப்டம்பர் காலக் கெடுவிற்குப் பின்னரும், அமெரிக்க இராணுவம் ஒரு பெரிய இராணுவ நிலைப்பாடான 50,000 துருப்புக்கள் “போரில் ஈடுபடாத”, “பயிற்சி” பங்கிற்கு என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டு பாக்தாத்தின் கைப்பாவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்த தக்க வைக்கப்படும்; அங்கு தேர்தல்கள் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இனிமேல்தான் அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தன்மை மாறிக் கொண்டு வரும்போது, அதன் அடிப்படை நோக்கம் —நாட்டை உறுதியாக அமெரிக்க மேலாதிக்கத்தில் வைப்பது— சிறிதும் மாறாமல் உள்ளது.

கடந்த வெள்ளியன்று வெளியிட்ட கருத்துக்களில், ஜெனரல் ஒடியர்னோ “திரும்பச் செல்வது” என்பது கெடுவிற்கு முன்னரே நடைபெறுகிறது என்று அறிவித்தார் —600,000 கொள்கலங்கள் மற்றும் 18,000 வாகனங்கள் திரும்பிவிட்டன, தளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 500ல் இருந்து 126 க்குக் குறைந்து செப்டம்பர் 1 ஐ ஒட்டி 94 என்று குறைந்துவிடும். ஆனால் உண்மையில் நடப்பது, திரும்பப் பெறுதல் அல்ல, அமெரிக்கத் துருப்புக்கள் நாட்டை நீண்ட காலம் ஆக்கிரமிப்பதற்கான தயாரிப்பு பற்றிய பரந்த ஒருங்கிணைப்புத்தான்.

Stars and Stripes செய்தித் தாள் ஜூன் 1ம் திகதி நவம்பர் 2008 ல் ஏற்கப்பட்ட அமெரிக்க-ஈராக்கிய உடன்பாடு, திரும்பப் பெறுவது பற்றிய விதிகள் அடங்கியதை தொடர்ந்து, அடிப்படைக் கட்டுமான பணியில் மகத்தான விரிவாக்கம் நடந்துள்ளது என்று தெரிவிக்கிறது. “மொத்தத்தில் இராணுவம் தளக் கட்டமைப்பு திட்டங்களில் 2009ம் ஆண்டு 496 மில்லியன் டாலரை செலவழித்தது; இது போர் தொடங்கியதில் இருந்து ஒரு ஆண்டின் மிக அதிக செலவு ஆகும்; 2004ல் இருந்து ஈராக்கில் அமெரிக்க தளங்களுக்காக செலவிடப்பட்ட 2.1 பில்லியன் டாலரில் கிட்டத்தட்ட கால் பகுதி ஆகும். இன்னும் ஒரு 323 மில்லியன் டாலர் மதிப்புடைய திட்டங்கள் இந்த ஆண்டு முடிக்கப்பட உள்ளன.”

மொத்த அமெரிக்கத் தளங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பென்டகன் “நீடித்த நிலைப்பாட்டு நிலையங்கள் என்று அறியப்படுபவற்றை நிறுவிக் கொண்டு உள்ளது—இதில் நான்கு முக்கிய தளங்கள் அடங்கியுள்ளன—வடக்கில் Joint Base Balad, தெற்கு ஈராக்கில் Camp Adder, மேற்கில் Al-Asad விமானத் தளம் மற்றும் பாக்தான் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி Victory Base Complex ஆகியவையே அவை. இவை பரந்த கோட்டைகள் நிறைந்த நிலையங்கள் ஆகும்—பாலட்டில் மட்டும் இப்பொழுது 20,000 துருப்புக்களுக்கு மேல் உள்ளனர். நீடித்து இருக்கும் 50,000 துருப்புக்களைத் தவிர, செப்டம்பர் 1க்குப் பின்னர் ஒப்பந்தக்காரர்களுடைய 65,000 துருப்புக்கள் இருப்பர்.

2008 ஒப்பந்தப்படி, அமெரிக்க இராணுவம் உள்நாட்டுப் பாதுகாப்பு செயற்பாடுகளை ஈராக்கியத் துருப்புக்களிடம் கடந்த ஆண்டு ஒப்படைத்தது. ஆனால் “பயிற்சி”, “ஆதரவளித்தல்” என்ற பெயரில் இராணுவம், பொலிஸ் மீது கடுமையான மேற்பார்வையைத் தக்கவைத்துள்ளது. மேலும் ஈராக்கிய அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அமெரிக்கத் துருப்புக்களின் உதவியை “வேண்டலாம்”. அமெரிக்கத் துருப்பினரக்கு ஜூன் 1 அன்று ஒடியர்னோ ஒரு கடிதத்தில் விளக்கியபடி, அமெரிக்கப் போர்த்துருப்புக்கள் நீங்கியபின்னரும், “நாம் தொடர்ந்து பங்காளித்தன பயங்கரவாத-எதிர் செயல்களை நடத்தி, ஈராக்கிப் பாதுகாப்புப்படைகளுக்கு உதவ போரில் ஈடுபடும் துருப்புகளை அளித்து தீவிரவாதிகளின் வலைப்பின்னல்கள் மீது அழுத்தத்தைத் தொடர்வோம்.”

2008 உடன்பாடானது, டிசம்பர் 31, 2011 ஐ அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் ஈராக்கை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது; ஆனால் இப்பொழுது கட்டப்படும் மிகப் பெரிய அமெரிக்கத் தளங்கள் இனி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ள Strategic Framework Agreement ன் கீழ் நீண்டகாலம் அமெரிக்க இராணுவங்கள் நீடிக்கும் என்பதைக் குறிக்கின்றன. Stars and Stripes சுட்டிக் காட்டியுள்ளதுபோல், “ஈராக்கிய விமானப் படையின் ஆரம்ப கட்ட நிலையில்…. ஈராக்கிய அரசாங்கம், ஒரு அமெரிக்க பயிற்சிப் படை நாட்டில் 2011 க்குப் பின்னரும் இருக்க வேண்டும் என்று கோரலாம், அந்த இடமும் அநேகமாக பலாட்டாக இருக்கும்”.

துருப்புக்கள் திரும்பப் பெறுவதுடன், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை மையம் கொண்ட குடிமக்கள் செயற்பாடுகள் வளர்ச்சிக்கும் வகை செய்யப்படுகிறது. புதிய தூதரகம், கோட்டைப் பகுதியான பசுமைப் பகுதியில் உள்ளது, உலகிலேயே மிகப் பெரியதும், அதிக செலவில் கட்டப்பட்டதும் ஆகும். ஜனவரி 2009ல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் 21 கட்டிடங்கள் உள்ளன, இது 0.4 சதுர கிலோ மீட்டர் இடத்தை ஆக்கிரமிக்கிறது, 1,000 வாடிக்கையான ஊழியர்கள் மற்றும் 3,000 கூடுதல் ஊழியர்களுக்கு வீடுகளையும் கொண்டுள்ளது. தூதரகத்தின் இரண்டாம் உயர் அதிகாரியான காமெரோன் மன்டர் Washington Post இடம் கடந்த மாதம் கூறியது: “எங்கள் உறுதிப்பாடு இராணுவம் கொண்டுள்ள எண்ணிக்கைத் தரத்திலோ, பணத்திலோ இல்லை. ஆனால் இது அசாதாரண முறையில் கணிசமாக இருக்கும்.”

சில முக்கியமான திட்டங்கள் பற்றியும் போஸ்ட் எழுதியுள்ளது; இவை தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது; அதில் “உளவுத் தகவல் சேகரிப்பு, இராணுவம் அழைக்கும் “தீமை நிறைந்த ஈரானியச் செயல்வாக்கை” எதிர்த்து நிற்றல், பல்லாயிரக்கணக்கான முன்னாள் எழுச்சியாளர்களை இராணுவம் சுன்னி துணை இராணுவக் குழுக்கள் என்று சேர்த்தவர்களை முழுமையாக இணைத்தல் ஆகியவை இருக்கும்.” வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இராணுவம் 2003 படையெடுப்பில் இருந்து தன் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக வாஷிங்டன் பயன்படுத்தியுள்ள குறுகிய இனப்பிளவுகளை திரித்தல், கண்காணித்தல் ஆகியவை தீவிரமாக இருக்கும்.

எழுச்சியை “முடிவிற்கு” கொண்டுவருதல் என்று பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை தம்பட்டம் அடிப்பதற்கு பின்னே அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பை இரக்கமற்ற முறையில் நசுக்குதல், ஒரு மில்லியனுக்கும் மேலான இறப்புக்களைக் கொடுத்தவை, மற்றும் இரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது, பல்லாயிரக்கணக்கானவர்கள் காவலில் வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவது ஆகியவை இருந்தன. ஈராக்கிய “ஜனநாயகம்” ஒரு பொலிஸ் அரச கருவியைத்தான் நம்பியுள்ளது; அது அமெரிக்க இராணுவத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டு சீராக வைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் “நெறியான நம்பகத் தன்மை” இருந்தது என்பது, ஆக்கிரமிப்பை ஏற்ற கட்சிகள், அரசியல் வாதிகள் ஆகியோர் மட்டுமே பங்கு பற்றியதாகும்.

ஏழாண்டுகள் நடைபெற்ற போர் ஈராக்கிய மக்கள் மீது பேரழிவுப் பாதிப்பைக் கொடுத்துள்ளது. வேலையின்மையும், திறமைக்கு ஏற்ற வேலைகள் கிடைக்காத நிலைமையும் உயர்ந்த அளவில் உள்ளன. கடந்த மாதத்திய Brookings Iraq Index கருத்துப்படி கடந்த ஆண்டு நிலவரத்தில் மக்களில் 20 சதவிகிதத்தினருக்குத்தான் முறையான சுகாதாரத்திற்கு வாய்ப்பு உள்ளது, 45 சதவிகிதத்தினருக்குத்தான் தூய்மையான நீர் கிடைக்கிறது; 50 சதவிகிதத்தினருக்குத்தான் நாள் ஒன்றிற்கு 12 மணி நேரத்திற்கு அதிகமான மின்விசை கிடைக்கிறது, 50 சதவிகிதத்தினருக்குத்தான் போதிய வீட்டு வசதி உள்ளது, 30 சதவிகிதத்தினருக்குத்தான் மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. 2007ம் ஆண்டு உலக வங்கியின் அளவை ஒன்று மக்களில் 23 சதவிகிதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், நாள் ஒன்றிற்கு 2.20 அமெரிக்க டாலர்களைவிடக் குறைவாக சம்பாதிக்கின்றனர் என்றும் கூறுகிறது.

ஈராக் மீது குற்றம் சார்ந்த அமெரிக்கப் படையெடுப்பு ஈராக்கிய மக்களுக்கு உதவுவதை நோக்கம் கொண்டது அல்ல. மாறாக அதன் நோக்கம் நாட்டை அடிமைப்படுத்துவதாகும்; இதையொட்டி அதன் பரந்த விசை இருப்புக்கள் மீது கட்டுப்பாட்டை நிறுவ முடியும், நாட்டை மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் பரந்த அமெரிக்க மூலோபாய இலக்குகளுக்காக ஒரு தளமாக ஏற்படுத்த முடியும். ஈராக்கில் குருதியை கொட்டி எதிர்ப்பை அடக்கியபின், ஒபாமா நிர்வாகம் அதன் துருப்புக்களை வெளியேற்றுவது அதன் நவகாலனித்துவப் போரை ஆப்கானிஸ்தானத்தில் விரிவுபடுத்தவும், உலகின் ஏனைய பகுதிகளில் புதிய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு தயார்செய்வதற்கும் ஆகும்.இங்கு விட்டுச் செல்லவிருக்கும் மிக அதிக அமெரிக்க குடிமக்கள் மற்றும் இராணுவக் கருவிகள் பாக்தாத்தின் அதிகார நெம்புகோல்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவர். அமெரிக்க நலன்கள் நிறைந்தவற்றில் ஈராக்கிய அரசாங்கத்தை மிரட்டி அடிபணிய வைக்கும், நாட்டின் வளரும் குறுகிய குழுவாத அழுத்தங்கள் மீது கவனமான பார்வையைக் கொள்ளும், மற்றும் அமெரிக்கத் துருப்புக்கள் விரைவில் திரும்புவதற்குக் கதவைத் திறந்து வைக்கும்.