World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Bangladesh: The execution of Mujibur Rahman's killers

வங்க தேசம்: முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்

By Wije Dias
17 February 2010

Use this version to print | Send feedback

வங்க தேசத்தின் முதல் பிரதம மந்திரியான ஷேக் முஜிபர் ரஹ்மானை ஆகஸ்ட் 1975ல் படுகொலை செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருந்த ஐந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் டாக்கா மத்திய சிறையில் ஜனவரி 28ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இரு நாட்களுக்கு பின்னர் தற்போதைய பிரதம மந்திரியான அவருடைய மகள் ஷேக் ஹசினா வஜெட் ஆளும் அவாமி லீக் தொண்டர்கள் 10,000 பேர் கலந்துகொண்ட பேரணியில் "நம் நாட்டின் நிறுவக தந்தையின் படுகொலை சாபம் இந்த தூக்குத் தண்டனைகளால் நீங்கியது" என்றார்.

தன்னுடைய ஆட்சிக்கு ஆதரவு குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஹசினா தூக்கிலிடுதலை பயன்படுத்தி தன்னுடைய ஆதரவளர்களை அவாமி லீக்கை வலுப்படுத்துமாறு கூறினார். இந்நிகழ்வு பற்றி தன்னுடைய "திருப்தியை" மட்டும் தெரிவிக்காமல், "என் அரசாங்கத்தின் ஒரு பெரும் செயல்" என்று குறிப்பிட்டார். அவருடைய தகப்பனார் ''பங்கபந்துவின் (வங்கத்தின் நண்பர் என்று அறியப்பட்டிருந்தவர்) உணர்வில் நின்று'' கட்சித் தொண்டர்கள் தியாகங்கள் செய்யவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசம் பாக்கிஸ்தானில் இருந்து ஒரு தனி நாடாக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்னமும் நாட்டின் மகத்தான பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் தொடர்ந்து உள்ளதுடன், இதன் ஆண்டு சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $450 தான். மக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி சந்தையில் உலக நிதிய நெருக்கடியின் பாதிப்பு படர்ந்துள்ளதால், ஆலை மூடல்கள் ஏற்பட்டு, வேலையின்மை பெருகியுள்ளது.

நாட்டின் வரலாறே தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகள் மற்றும் ஜனநாயக விருப்புகளை தேசிய முதலாளித்துவம் இயல்பாகவே தீர்க்கமுடியாதற்கான சான்று ஆகும். தன்னுடைய அரசியல் நிலப்பாட்டை உயர்த்திக் கொள்ளுவதற்கு, ஹசினா இப்பொழுது தன்னுடைய தகப்பனார் மற்றும் அவாமீ லீக் பற்றி சிறந்த சித்திரத்தை தீட்டுகிறார். ஆனால் மக்கள் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளை முஜிபர் ரஹ்மான் தீர்ப்பதற்கு அடைந்த தோல்வி மற்றும் ஆட்சியில் இருந்த பெருகிய ஜனநாயக விரோத வழிவகைகள்தான் 1975ல் இராணுவ ஆட்சி மாற்றம் மற்றும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமாயின.

1971க்கு முன்பு வங்கதேசம் கிழக்கு பாக்கிஸ்தான் என்று அறியப்பட்டிருந்தது. இது மேற்கு பாக்கிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து இந்திய நிலப்பகுதியைக் கடந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இத்தகைய பகுத்தறிவிற்குப் பொருந்தாத ஏற்பாடு துணைக்கண்டத்தை அதிர்வில் ஆழ்த்தியிருந்த சுதந்திர இயக்கத்தை உருக்குலைக்கும் வகையில் 1947ல் பிரிட்டனும் இந்திய முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து உருவாக்கிய பிற்போக்குத்தனமான வகுப்புவாத பிரிவினையின் விளைவு ஆகும்.

புதிதாக சுதந்திரம் அடைந்த ஹிந்து மேலாதிக்கம் உள்ள இந்தியா, முஸ்லிம் மேலாதிக்கம் உள்ள பாக்கிஸ்தான் இரண்டும் மேற்கில் பஞ்சாபிலும், கிழக்கில் வங்கத்திலும் ஒருதலைப்பட்சமான எல்லைப்பிரிவினை அடிப்படையாக கொண்டிருந்தன. அந்தப் பிரிவினை வன்முறைக்கு வழிவகுத்து நூறாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்தது. மூன்று நாடுகளாகப் பிரித்தல், அதில் சுதந்திர வங்கம் கிழக்கில் இருக்கும் என்ற திட்டம் இந்திய தேசிய காங்கிரசால் எதிர்க்கப்பட்டது. அது கல்கத்தா பெரு நகரம் உட்பட அதிகம் ஹிந்து மக்கள் வாழ்ந்த வங்கப்பகுதி இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI Bolshevik-Leninist Party of India) ஒன்றுதான் இந்தியப் பிரிவினையை எதிர்த்து துணைக்கண்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒரு சோசலிச முன்னோக்கில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்ற போராடியது. மார்ச் 1948ல் மார்க்சிஸ்ட்டாக இருந்தபோது BLPI தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா கல்கத்தாவில் மார்ச் 1948ல் அனைத்து வங்க மாணவர் கூட்டமைப்பில் பேசுகையில் கீழ்க்கண்ட தொலை நோக்குடைய எச்சரிக்கையை விடுத்தார்:

"பிரிவினையின் பெரும் துன்பம் அதை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்ட இலக்கில் இருந்து குறிப்பாக வெளிவந்துள்ளது. இந்தியா என்னும் உயிர்வாழும் உடலில் இக்கொடூரப் பிரிவினை ஒருபுறமும், இரு வாழும் "தேசியங்கள்" (பஞ்சாபிய, வங்க தேசியங்கள்) மறுபறுமும், வகுப்பவாதத்திற்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டு, பின்னர் சுதந்திரத்திற்கு வகை செய்யும் என்றும் கூறப்பட்டது. இரு கருத்துக்களும் தவறு என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஒருவிதத்தில் பெரும்பாலான மக்கள் ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலிக்குள் மீண்டும் தள்ளுவது என்றுதான் உள்ளது (இதைப் பின்னர் பார்ப்போம்). மற்றொரு விதத்தில் இது இரு நாடுகளையும் ஒன்றோடொன்று எப்பொழுதும் போர்முனையை சிந்திக்க வைப்பது ஒன்றுதான் உள்நாட்டு சமூக இடர்ப்பாடுகளில் இருந்து திசை திருப்பி ஏமாற்றுவது என்பதை நிரூபித்துள்ளது."

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பற்றி நடந்த மூன்று போர்களில் முதலாவதின்போது இந்த உரை நிகழ்த்தப்பட்டது.

பாக்கிஸ்தான் கிழக்கு, மேற்கு பிரிவுகளுக்கு இடையே இருந்த அரசியல் பிளவு அரசாங்க மொழி பிரச்சினையிலேயே உடனே வெளிப்பட்டது. கிழக்கு பாக்கிஸ்தானில் வங்க மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையில் இருந்த நிலையில், மேற்கு பாக்கிஸ்தானின் ஆளும் உயரடுக்குகள் உருது ஒன்றுதான் அரசாங்க மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வங்க மொழி உருதுவுடன் சம அந்தஸ்து பெற வேண்டும் என்று விடுத்த அழைப்பு பரந்தளவில் கிழக்கு பாக்கிஸ்தானில் நிலவியது. வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் 1952ல் அதிகரித்தபோது, டாக்கா ஆர்ப்பாட்டம் ஒன்றை அரசாங்கம் வன்முறையை கைக்கொண்டு, ஐந்து பேர்களைக் கொன்றும் பலரை காயப்படுத்தியும் ஒடுக்கியது.

வங்க மொழி இயக்கம் அவாமி முஸ்லிம் லீக் அமைப்பதற்கு முன்னோடியாக இருந்தது. பின்னர் இது அவாமி லீக் என்று மறு பெயரிடப்பட்டது. மொழிப் பிரச்சினை தவிர, கட்சி கிழக்கு பாக்கிஸ்தானுக்கு கூடுதலான தன்னாட்சி, பொருளாதார சுதந்திரத்தை நாடியது. அரசாங்க அதிகாரத்தின் பெரும்பகுதியும், இராணுவத்தின் பெரும்பான்மையும் மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து வந்துடன், அரச முதலீடும் நிதியளிப்பும் மேற்கு பாக்கிஸ்தானிற்கு கூடுதல் நலன்கள் கொடுக்கப்பட்டன. பாக்கிஸ்தானின் இரு பிரிவிற்குள்ளும், இடையேயும் வெடிப்புத்தன்மை நிறைந்த அரசியல், சமூக அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் இராணுவம் 1958ல் தலைமைத் தளபதி அயூப் கான் இன் கீழ் அதிகாரத்தை கைப்பற்றியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான பொருளாதார உயர்ச்சி உடைந்ததை அடுத்து ஏற்பட்ட சர்வதேச எழுச்சி அலையின் ஒரு பகுதியாக 1960களின் கடைசிப் பகுதியில் இருந்து தெற்கு ஆசியா அரசியல் நெருக்கடிகள், சமூகப் போராட்டங்கள் ஆகிவற்றால் அதிர்விற்கு உட்பட்டது. 1968-69ல் ஒரு புதிய அரசியல் அமைதியின்மை அலை, பாக்கிஸ்தானுக்குள் மக்கள் வேலைநிறுத்தங்கள், மாணவர்கள் எதிர்ப்புக்கள் இவற்றை அடக்கியமை அயுப் கானை பதவியை விட்டு இறங்கச் செய்தது. படைத் தலைமைத் தளபதி யாஹ்யா கான் இவருக்கு பதிலாக பதவிக்கு வந்தார். அவர் அரசியல் நடவடிக்கைகள் மீது இருந்த தடையை அகற்றி ஒரு தேசிய தேர்தலையும் அறிவித்தார். அது 1970 டிசம்பரில் நடைபெற்றது. தேசிய சட்டமன்றத்தில் மொத்த 300 இடங்களில் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 162ல் அவாமி லீக் 160ல் வெற்றி பெற்றது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி இஸ்லாமாபாத் அரசியல், இராணுவ அமைப்பினுள் அரசியல் நெருக்கடி ஒன்றை தூண்டியது.

ஒரு சமரச முயற்சி தோல்வி அடைந்ததை அடத்து யாஹ்யா கான் மார்ச் 1971ல் மிருகத்தன வன்முறையை ஏவினார். இது ஆயுதமேந்திய எழுச்சியை தூண்டியதுடன், 1.5 மில்லினுக்கும் மேற்பட்ட அகதிகள் அண்டை நாடான இந்தியாவிற்கு சென்றனர். 100,000 முக்தி பாகினிக்கள் அல்லது சுதந்திரப் போராட்டக்காரர்கள், இந்திய உதவியுடன், பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டனர். பல மாதங்கள் இது நீடித்தது. டிசம்பர் 1971ல் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இந்திய அரசாங்கம் இந்தியாவின் மீது பாக்கிஸ்தான் விமானத் தாக்குதல்களை வாய்ப்பாக பயன்படுத்தி கிழக்கு பாக்கிஸ்தான் மீது முழு அளவுப் போரை தொடக்கினார்.

கிழக்கு பாக்கிஸ்தானில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்திய தலையீடு நிகழ்ந்துவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது முற்போக்குத்தனமான சுதந்திர இயக்கம் எல்லை கடந்து இந்தியாவிற்குள் வந்து ஒன்றுபட்ட சுதந்திர வங்க கோரிக்கைகளை தூண்டிவிடக்கூடாது என்ற நோக்கத்தை கொண்டிருந்தது. முக்தி பாஹினி பிரிவுகளும் அவற்றின் ஆதரவாளர்களும் ஏற்கனவே பழைமைவாத அவாமி லீக் தலைமையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகத் தொடங்கியிருந்தனர்.

எல்லை கடந்த, இந்தி மேற்கு வங்க மாநிலம் 1960 களின் நடுப்பகுதியில் இருந்து தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களின் பெருகிய சமூகப் போராட்டங்களினால் அதிர்ச்சி அடைந்திருந்தது. வங்கதேசப் போர் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டு காந்தி அரசாங்கம் மேற்கு வங்கத்தில் குறுக்கிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) பெரும் பங்காளியாக இருந்த கூட்டணி அரசாங்கத்தை முன்கூட்டிக் கவிழ்த்து, மாநிலத்தை ஜனாதிபதி அல்லது மத்திய அரசாங்க ஆட்சியின்கீழ் இருத்தியது.

.கிழக்குப் பாக்கிஸ்தானில் இந்திய இராணுவம் விரைவில் பாக்கிஸ்தானிய இராணுவத்தை முறியடித்தது. 1972 ஜனவரி மாதம் முஜிபர் ரஹ்மான் பாக்கிஸ்தானியச் சிறை ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய சுதந்திர வங்கதேசத்தின் தலைவராவதற்கு திரும்பினார். ஆனால் புதிய நாடு அதனது பாக்கிஸ்தான் மேற்குப் பகுதியில் இருந்து மட்டுமின்றி, பாதி வங்க மக்கள் வசித்த இந்தியாவில் இருந்தும் பிரிக்கப்பட்டிருந்தது. இது விரைவில் கடக்க முடியாத பொருளாதார, சமூக நெருக்கடியை ஏற்படுத்தியது.

நாடு போரினால் பேரழிவிற்கு உட்பட்டது. பாக்கிஸ்தானிய அதிகாரிகள், படையினர்கள் வெளியேறிவிட்டதால் அரசாங்கக் அமைப்பு சிதைந்திருந்தது. 1973ஐ ஒட்டி விவசாய, தொழில்துறை உற்பத்தி போருக்கு முந்தைய தரங்களில் 84, 66 சதவிகிதத்தில்தான் இருந்தன. 1974ல் நாட்டை ஒரு பேரழிவிற்குட்படுத்திய பஞ்சம் தாக்கியது. ஒரு மதிப்பீட்டின்படி இதனால் 1.5 மில்லியன் மக்கள் இறந்தனர்.

நாட்டின் அணிசேரா இயக்க இந்தியாவுடனான உறவுகளைக் கொண்ட வங்கதேசம் அமெரிக்காவின் விரோதத்தையும் எதிர்கொண்டது. அவாமி லீக்கின் சோசலிச வனப்புரைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தின. 1974 பஞ்சத்தின் இடையே அமெரிக்கா உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கு தடை விதித்தது. கியூபாவிற்கு 5 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சணல் ஏற்றுமதி செய்ததற்கு இது பதிலடி என்று கூறப்பட்டது. எழுச்சி பெறும் வங்கதேச முதலாளித்துவத்தை பிரதிபலித்த அவாமி லீக் மக்கள் சீற்றத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் உறுதிமொழி கூறப்பட்ட நிலச் சீர்திருத்தங்களை நடத்தவில்லை. அதன் தேசியமயமாக்கப்பட்ட தொழில்களை ஊழல் நிறைந்த முறையில் நிர்வகித்ததும், அச்சுறுத்தி, குண்டர் முறையை கையாண்டு பணத்தை சேகரித்ததும் மக்கள் சீற்றத்தை பெருக்கியது.

அரசியல் எதிர்ப்பு பெருகியபோது, முஜிபர் ரஹ்மான் டிசம்பர் 1974ல் அவசரகால நிலைமையை அறிவித்து அனைத்து அடிப்படை அரசியல் அமைப்பு உரிமைகளையும் செயலற்றதாக்கினார். 1975 ஆரம்பத்தில் அவர் தன்னுடைய ஆட்சியை ஒருங்கிணைக்கும் விதத்தில் ஒற்றைக் கட்சி ஜனாதிபதி முறையை, தானே நாட்டின் தலைவர் என்ற விதத்தில் கொண்டுவந்தார். அவாமி லீக்கின் ஊழல், இந்தியாவுடன் முஜிபுரின் உறவுகள் பற்றி இராணுவத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தி, ஆண்டு இறுதியில் இளநிலை அதிகாரிகள் ஆட்சிசதி செய்யும் அளவிற்கு கொந்தளித்தது. ஜனாதிபதி, அவருடைய மனைவி, மகன்கள், மருகள்கள் ஆகியோர் ஆகஸ்ட் 15, 1975 அன்று கொல்லப்பட்டனர். தற்போதைய பிரதம மந்தரி உட்பட அவருடைய இரு மகள்களும் அப்பொழுது ஜேர்மனியில் இருந்தனர்.

கொலைகாரர்களின் விதி அதைத் தொடர்ந்த ஆட்சிகளுடன் பிணைந்திருந்தது. குறுகியகாலத்திற்கு இருந்த முஷ்டாக் அஹமதின் அரசாங்கம் முஜிபுரின் கொலைகாரர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து ஒரு ஆணையை வெளியிட்டது. லெப்டினென்ட் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் (ஜியா), லெப்டினென்ட் ஜெனரல் ஹுசைன் முகம்மத் எர்ஷத் ஆகியோரின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளும் ஆணையை மாற்ற முயற்சி எடுக்கவில்லை. எர்ஷத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், ஜியாவால் நிறுவப்பட்டு அவருடைய விதவை காலேடா ஜியா தலைமையில் இருந்த வங்கதேச தேசியக்கட்சி (BNP) 1991ல் தேர்தலில் வெற்றி பெற்றாலும், முஜிபுரைக் கொன்றவர்களை நீதிக்கு முன் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

1996ல் அவாமி லீக் பதவிக்கு வந்தபின், ஷேக் ஹஸினா பொதுமன்னிப்பு ஆணையை அகற்றி தன் தந்தையைப் படுகொலை செய்தவர்கள் வழக்கை எதிர்கொள்ள வகை செய்தார். ஒரு டாக்கா நீதிமன்றம் 1998ல் 15 பேர் மீது மரண தண்டனை விதித்தது. அவர்களுள் முன்று பேர் பின்னர் உயர்நீதி மன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2001ல் அவாமி லீக் பதவியைவிட்டு நீங்கியதில் சட்ட வழிவகை தடைக்கு உட்பட்டு, 2008ல் பெரிய வெற்றியை அடைந்தபின் மீண்டும் தொடர்ந்தது. கடந்த மாதம் தூக்கிலிடப்பட்ட ஐந்துபேரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். ஒருவர் லிபியாவில் இறந்துவிட்டார்.

வங்கதேசத்தை நிறுவியவரின் புகழை வளர்ப்பதற்கு தூக்குத் தண்டனைகளை அவாமி லீக் பயன்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள் மக்களை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார, சமூக நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நயமற்ற முயற்சி ஆகும். வங்கத்தின் தேசியவாதத்தின் முட்டுச்சந்தி துணைக்கண்டம் முழுவதிலும் முதலாளித்துவ பிரிவினைவாத இயங்கங்களின் திவால்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவை 1947 பிரிவினையைத் தொடர்ந்து தோற்றுவிக்கப்பட்ட நாடுகள் மூலம் உள்ளூர், வட்டார ஆளும் உயரடுக்குகளுக்கு ஆதரவைக் கொடுக்க முற்படுகின்றன. வங்கம் நிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும், துணைக்கண்ட பிரிவினைக்கு 60 ஆண்டுகளுக்கு பின்னரும், BLBI முன்வைத்த திட்டம், இன்று சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் வேலைத்திட்டம் ஒன்றுதான் முற்போக்கான வழியைக் காட்டுகிறது. அதாவது துணைக்கண்டம் மற்றும் சர்வதேசமெங்கிலும் ஒரு சோசலிச முன்னோக்கில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு அரசியல் இயக்கத்திற்கான போராட்டம் தேவையாகும்.