சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

1-The Historical and International Foundations of the Socialist Equality Party (Australia)

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள்

27 பிப்ரவரி 2010

Use this version to print 

உலக சோசலிச வலைத் தளம், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணம் ஜனவரி 21-25 வரை சிட்னியில் நடந்த கட்சியின் ஸ்தாபக காங்கிரசில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ முறிவும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபகமும்

1. அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசு நடந்து முடிந்து, ஐரோப்பா மற்றும் தெற்கு ஆசியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளால் ஸ்தாபக காங்கிரசுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசானது நடைபெறுகிறது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும் தான் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு காலம்கடந்து உயிர்வாழும் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிந்து சர்வதேசிய சோசலிசத்தின் அடிப்படையில் மனிதகுலத்தின் வருங்கால அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு அவசியமான வேலைத்திட்டத்தையும் அமைப்பையும் வழங்கும் ஒரே அரசியல் கட்சி ஆகும். 2007-2008 இல் ஆரம்பித்த உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரங்கேறிய உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவுக்கும் மற்றும் அதனால் போர்கள் மற்றும் புரட்சிகரப் போராட்டங்களுக்கான புதிய காலகட்டத்தை திறந்துவிட்டுள்ளமைக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்புத்தான் இந்த பொது முன்னெடுப்புகளாகும். நூற்றாண்டுக்கும் மேலான போராட்டங்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்து சர்வதேச சோசலிச இயக்கத்தால் ஈர்த்தெடுக்கப்பட்ட வரலாற்றுப் படிப்பினைகளை அவை அடித்தளமாக கொண்டுள்ளன.

2. 20ம் நூற்றாண்டில் முதலாளித்துவ அமைப்பை உலுக்கி, பாரிய வேலைவாய்ப்பின்மை, பாசிசம் மற்றும் போருக்கு வழிவகுத்த அனைத்து முரண்பாடுகளும் 21ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் தீவிரத்தின் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன. முன்னைவிடவும் கூடுதலான மோசமான வடிவங்களை எடுக்கும் இந்த முரண்பாடுகள் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புக்கும் இடையிலான மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் இடையிலான தீர்க்கவியலாத மோதலில் இருந்து தோன்றுகின்றன. முதலாளித்துவம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலம் தூக்கியெறியப்படுவதற்கான புறநிலை நிபந்தனைகளை அவை உருவாக்கியிருக்கின்றன.

3. காலநிலை மாற்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அபாயங்களுக்கு கீழும் இதே முரண்பாடுகள் தான் உள்ளன. பெருநிறுவன இலாபம் மனித தேவைகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றதான மற்றும் போட்டி தேசிய அரசுகளின் மோதலுறும் நலன்கள் உலகப் பொருளாதாரம் பகுத்தறிவான முறையில் மறுஒழுங்கமைவதை சாத்தியமில்லாமல் ஆக்குகின்றதான முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் இந்த அபாயங்கள் எல்லாம் கவனமாக கையாளப்படவோ அல்லது தீர்க்கப்படவோ முடியாது.

4. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவாக 1972ல் ஸ்தாபிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடிக்கு தீர்வு நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நோக்குநிலையும் ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக அதன் கோட்பாட்டு ரீதியான போராட்டமும் 1960கள் மற்றும் 1970களில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சி மூலம் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தனது பக்கம் வென்றெடுத்தது. இப்போது, ஏறக்குறைய நான்கு தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில், புரட்சிகர கொந்தளிப்பின் ஒரு புதிய காலகட்டத்தால் முன்நிறுத்தப்படும் பணிகளை எதிர்கொள்ள சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்படுகின்றது.

5. சோசலிச சமத்துவக் கட்சியின் மூலோபாயம் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் புறநிலை தர்க்கத்தின் மீது அடித்தளமாக கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தயார்படுத்துவதும், அதன் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதும் ஒரு புதிய வெகுஜன புரட்சிகர கட்சியைக் கட்டுவதும் தான் அதன் அடிப்படைப் பணியாகும். சிதைந்து கொண்டிருக்கும் துரோகப்பாத்திரம் வகித்த தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச அமைப்புகளின் எச்சசொச்சங்களுக்கும், அதன்மூலம் முதலாளித்துவ ஒழுங்கிற்கு, தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்ய தலைப்படும் பல்வேறு குட்டி-முதலாளித்துவ போக்குகளுக்கு எதிராகத் தான் இது நடைபெற முடியும். பிரெஞ்சு பப்லோவாத அமைப்பான புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (LCR) "புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி" (NPA) என்று அழைக்கப்படும் ஒன்றுக்குள் தன்னை கலைத்துக் கொள்வதற்காக புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடனான எந்த தொடர்பையும் பகிரங்கமாய் கைவிட்டிருப்பதையும், அது ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்து சர்வதேசியவாதத்தை மறுதலித்திருப்பதையும் குட்டி முதலாளித்துவ முன்னாள்-"இடது" அமைப்புகள் அனைத்தும் தங்களுக்கான முன்மாதிரியாக அறிவித்துள்ளன.

6. ஆஸ்திரேலிய தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு முழுவதிலும், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பல்வேறு முன்னாள்-தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு, ஆஸ்திரேலிய தனிச்சிறப்புவாதம் என்னும் கட்டுக்கதையை சோசலிச நனவு அபிவிருத்திக்கு எதிரானதாக ஊக்குவித்துக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் அவர்கள் ஆஸ்திரேலியாவை ‘உழைக்கும் மனிதனின் சொர்க்கம்’, இங்கு வர்க்க போராட்ட விதிகள் பொருந்தாது என்றனர். இன்று, நூற்றாண்டின் மூன்று காலாண்டு காலத்தில் மிகப்பெரியதான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆஸ்திரேலியா "தனிச்சிறப்பானது" அது புயலுக்குத் "தாக்குப் பிடித்து விட்டது" என்கிற மாயையை அவர்கள் மீண்டும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். 2007-2008ல் ஆரம்பித்த உலகளாவிய நிதி நெருக்கடியின் முதல் கட்டம் கடந்து விட்டிருக்கிறது என்றாலும், உலகப் பொருளாதாரமோ அல்லது ஆஸ்திரேலிய முதலாளித்துவமோ கடந்த காலத்திற்கு திரும்ப முடியவில்லை. பொருளாதார மற்றும் வர்க்க உறவுகளிலான ஒரு பரந்த "மறுகட்டமைப்பு" உலக அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அது தொழிலாள வர்க்கத்தை அரசியல் போராட்டத்திற்குள் தள்ளும். உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்கிற தலைப்பில் 1988ம் ஆண்டில் வெளியிட்ட தனது முன்னோக்குகள் தீர்மானத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வரவிருக்கும் கொந்தளிப்புகள் முன்வைக்கும் பணிகளை தெளிவாக எடுத்துரைத்தது: "எந்த ஒரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு போராட்டமும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை உலகளவில் திரட்டுவதை இலட்சியமாய் கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயத்தை அது அடிப்படையாய் கொண்டிராத பட்சத்தில், அதன் இறுதி விடுதலைக்கு தயாரிப்பது இருக்கட்டும், நிலைத்து நிற்கக்கூடிய முன்னேற்றங்களைக் கூட உருவாக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் இந்த அவசியமான ஐக்கியமானது ஒரு தனித்துவமான சர்வதேச பாட்டாளி வர்க்க, அதாவது ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவதன் மூலம் தான் சாதிக்கப்பட முடியும். இத்தகைய ஒரே ஒரு கட்சி தான் உள்ளது. தசாப்தங்களாக தளர்ச்சியற்ற சித்தாந்த மற்றும் அரசியல் போராட்டங்களால் உருவாகிய கட்சி லியோன் ட்ரொட்ஸ்கி 1938ம் ஆண்டில் நிறுவிய நான்காம் அகிலம் ஆகும், இன்று அது அனைத்துலகக் குழுவால் தலைமை தாங்கி நடத்தப்படுகிறது." [1]

2007-2008 நிதிய உடைவு

7. 2007-2008 நிதி உடைவு என்பது ஏதோ தற்காலிகமாக நிகழ்ந்த, பழைய நிலைமைக்கு திரும்பி விடக் கூடிய ஒரு சரிவு அல்ல. மாறாக, இந்த நிலைமுறிவு ஊடாக உலக முதலாளித்துவம் ஒரு பாரிய மறுகட்டமைப்பை நிகழ்த்துவதற்கான ஒரு வடிவமாகி, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் இருக்கும் சமூக மற்றும் அரசியல் உறவுகளைப் பாதிப்பது மட்டுமல்லாது, பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கின்றது. இது ஒன்று முதலாளித்துவ வழியிலோ அல்லது சோசலிச வழியிலோ தான் தீர்க்கப்பட்டாக வேண்டும். முதலாளித்துவ தீர்வு என்பது உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பாரியளவு குறைப்பதையும், அத்துடன் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை அபிவிருத்தி செய்வதையும் உள்ளடக்கியிருக்கிறது. அதே சமயத்தில், சந்தைகள், இலாபங்கள் மற்றும் மூலவள ஆதாரங்களுக்கான தீவிரமான போராட்டம் என்பது மூன்றாவது ஏகாதிபத்திய உலகப் போர் வெடிப்பதற்கான அச்சுறுத்தலை முன்வைக்கின்றது. சோசலிசத் தீர்வு என்பது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதையும், அனைத்து தொழில், நிதி மற்றும் இயற்கை வளங்களின் மீதும் பொது உடமையாக்குவதும் மற்றும் அவற்றின்மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதையும் கோருகிறது. இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிட்ட உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கான அடிப்படையை உருவாக்கும்.

8. நெருக்கடியின் வடிவம் - அமெரிக்க நிதி அமைப்பின் உடைவு தற்செயலானது அல்ல. இது 1970களின் ஆரம்பத்தில் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சி முடிந்த காலகட்டம் வரை செல்கின்ற அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியில் இந்த நிகழ்வுப்போக்கு ஒரு பண்புரீதியான திருப்பத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த உருமாற்றம் தொலைதூர விளைவுகளை கொண்ட தாக்கங்களை கொண்டிருக்கிறது. பல தசாப்த காலங்களாக, அதன் பொருளாதார வலிமையே அமெரிக்க முதலாளித்துவம் உலக முதலாளித்துவ ஒழுங்கின் தலைமை ஸ்திர ஒழுங்கமைப்பாளராக செயல்படுவதற்கு வழிவகுத்து கொடுத்திருந்தது. இன்று அதுதான், ஸ்திரமின்மையின் தலைமை ஆதாரமாகியிருக்கிறது. 1928ல், அப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏறுமுகத்தில் இருந்த ஒரு சமயத்தில், அதன் தவிர்க்கவியலாத வீழ்ச்சியின் பின்விளைவுகளை லியோன் ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்: "அமெரிக்காவின் மேலாதிக்கமானது, எழுச்சிக் காலகட்டத்தை காட்டிலும் நெருக்கடிக் காலகட்டத்தில் இன்னும் முழுமையாக, இன்னும் வெளிப்படையாக, இன்னும் ஈவிரக்கமற்று செயல்படும். அமெரிக்கா தனது சிரமங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் வெளிவருவதற்கு முதன்மையாக ஐரோப்பாவின் நலன்களைப் பலியிட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைப்படும், இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அல்லது ஐரோப்பாவிலேயே நடந்தாலும் சரி, அல்லது இது அமைதியாகவோ அல்லது போர் மூலமாகவோ நடந்தேறினாலும் சரி." [2]

9. இருபது வருடங்களுக்கு முன்னதாக முதலாளித்துவமும் அதன் செய்தித் தொடர்பாளர்களும், சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் உருக்குலைவை முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் என்பதாய் புகழ்பாடினர். இத்தகையதொரு அரசியல் முன்னோக்கு இதற்கு முன்னொருபோதும் இவ்வளவு தீர்மானமாகவும், துரிதமாகவும் மறுக்கப்படவில்லை. பேர்லின் சுவர் வீழ்ந்து வெறும் மூன்று மாத காலங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிப்ரவரி 1990ல் விளக்கியது போல, "ஒட்டுமொத்தமாய் உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்தியில் இருந்து பிரித்து கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் சிதைவானது விளக்கப்பட முடியாதது. கிழக்கு ஐரோப்பாவின் சமூகக் கொந்தளிப்புகள் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியை மட்டும் வெளிப்படுத்தவில்லை; உலக ஏகாதிபத்தியத்தின் பொது நெருக்கடி மீதான மிகவும் முன்னேறிய அரசியல் வெளிப்பாடாக அவை அமைகின்றன.... இந்த ஆட்சிகளின் உருக்குலைவானது ஒட்டுமொத்தமாக போருக்குப் பிந்தைய ஒழுங்கும் உடைந்து போனதை அடையாளப்படுத்துகிறது." [3] இந்த ஆய்வு முழுமையாய் நிரூபணமுற்றுள்ளது.

10. அமைதி மற்றும் செழிப்பின் ஒரு புதிய காலகட்டத்திற்கு தலைமை தாங்குவது என்பதில் இருந்து வெகு அப்பாற்பட்டு, அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் மறைவை தனது ஒப்பீட்டளவிலான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு தனது இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்த கிடைத்த வாய்ப்பாக பற்றிக் கொண்டது. 1990-2001 வளைகுடாப் போர் தொடங்கி, யூரோ ஆசிய பரப்பில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், இயற்கை வளங்களின் மீது -எல்லாவற்றிற்கும் மேலாய் எண்ணெய் மற்றும் எரிவாயு- கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக பல போர்களை முன்னெடுத்து வந்துள்ளது. செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் என்பது இராணுவத் தாக்குதலை தொடர்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும், 2001 இல் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, இதனைத் தொடர்ந்து 2003 இல் ஈராக்கிற்கு எதிரான போர் மற்றும் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஒபாமா நிர்வாகம் போரைத் தீவிரப்படுத்தியுள்ளமைக்கும் ஒரு போலிச்சாட்டாகத்தான் இருந்து வந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதல்கள், 1930களில் நாஜி ஆட்சியின் செயல்பாடுகளை தவிர வேறெதனையும் ஒத்திருக்க முடியாது. அப்போது அந்த ஆட்சியும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் போட்டியாளர்களை விடவும் உயர்ந்து நிற்பதற்காக, மூலப்பொருட்களையும் சந்தைகளையும் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியான இராணுவ போர் ஆத்திரமூட்டல்களை தொடக்கியது.

11. நடப்பு சர்வதேச சூழ்நிலையானது முதலாம் உலகப் போர் சமயத்தில் லெனின் முன்வைத்த பகுப்பாய்வை நினைவுக்குக் கொண்டுவருகிறது. முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர அமைதி என்பதே இருக்க முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார், ஏனென்றால் முதலாளித்துவ பொருளாதாரமே சீரற்றமுறையில் தான் அபிவிருத்தியுறுகிறது என்பதால் ஏகாதிபத்திய சக்திகளின் இடைத்தொடர்பு நிலையும் தொடர்ந்து மாறுகிறது. இதனால், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் தழுவியதொரு பொதுவான கூட்டணி இருக்கிறதென்றால், அது "தவிர்க்கவியலாமல் போர்களுக்கு இடையிலமைந்த காலகட்டத்தின் ‘போர் நிறுத்தத்திற்கான கூட்டு என்பதற்கு மேலானதாக எதுவும்" இல்லை என்றார். போருக்குப் பிந்தைய ஒப்பீட்டளவில் ஸ்திரமான சகாப்தமும் மற்றும் "மேற்கத்திய கூட்டணி" என்று அழைக்கப்பட்டதும் இரண்டாம் உலகப் போரின் வெற்றியாளரான அமெரிக்காவின் மிதமிஞ்சிய பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தின் மீது அடித்தளத்தில் அமைந்தது. இப்போது சக்திகளின் சமநிலை மாறியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தனது பழைய எதிரிகளோடு சேர்ந்து, புதியவற்றின் எழுச்சியையும், குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவின் எழுச்சியையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்கிறது. பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் நலன்களின் மோதலால் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில், மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில் மற்றும் இந்திய பெருங்கடலைச் சுற்றிய பகுதிகளில் தொடர்ச்சியான பல வெடிப்புப் புள்ளிகள் உருவாகியுள்ளன. மேலும், பனிப்போர் முடிவுற்றதானது, இரண்டு உலகப் போர்களுக்கு வித்திட்ட போட்டி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை அடக்கி வைத்திருந்த அரசியல் இயங்குமுறைகளை அகற்றியிருக்கிறது.

12. 2007-2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடி 1930களின் நிலைக்குலைவுக்கு பின்னர் ஒருபோதும் கண்டிராத அளவில் பொருளாதார வீழ்ச்சியை தொடக்கி வைத்துள்ளது. 2009ம் ஆண்டின் முதல் மாதங்களில், உலக பங்குச் சந்தைகள், தொழிற்துறை உற்பத்தி மற்றும் உலக வர்த்தகம் எல்லாமே பெருமந்த நிலையின் இதே காலகட்டத்தை காட்டிலும் ஒரு துரிதமான வேகத்தில் வீழ்ச்சி கண்டன. பெரும் முதலாளித்துவ அரசாங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட முன்கண்டிராத பெரும் பொருளாதார மற்றும் நிதி மீட்புத் தொகுப்புகள் மூலமாகத் தான் இந்த சீர்குலைவு மெதுவாகி இருக்கின்றது. எவ்வாறிருந்தபோதிலும், இந்த மீட்புத் தொகைகளின் அளவு இந்நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் அளவிற்கு இருக்கிறது - பிரிட்டனில், இந்த தொகை ஏறக்குறைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்காகும், அமெரிக்காவில் வங்கிகள் மற்றும் பிற நிதி ஸ்தாபனங்களுக்கு அரசாங்கம் உறுதியளித்துள்ள தொகை திகைக்க வைக்கும் 23.7 ட்ரில்லியன் டாலர் தொகையாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 150 சதவீதத்திற்கும் அதிகம். அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிதிய அமைப்பிற்குள் 3 ட்ரில்லியன் டாலர் தொகையை செலுத்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் நிதி வள ஆதாரங்களின் ஒரு மாபெரும் திரட்டலை ஏற்பாடு செய்த பின்னரும் கூட, நிதி அழிவிற்கு இட்டுச் சென்ற அடித்தளத்திலுள்ள முரண்பாடுகளில் எதுவும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

13. இந்த நெருக்கடி எழுவதற்கு மூலகாரணமாக அமைந்த முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த ஒரு பகுப்பாய்வு மூலமாக மட்டுமே அதன் புரட்சிகர முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், பரவலும் அசாதாரணமான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்சென்றிருந்த நிலைமைகளின் கீழ், 20ம் நூற்றாண்டு கொண்டாட்டங்களுடனும் அமைதி மற்றும் செழுமைக்கான வாக்குறுதிகளுடனும் தொடங்கியது. ஆயினும், 1914ல் முதல் உலகப் போர் வெடித்ததானது இந்த அழகிய சகாப்தம் (Belle époque) குறித்த மாயைகளை துரிதமாய் தகர்த்தது. வருடக்கணக்கான மனச்சோர்வு, பாசிசம் மற்றும் பொருளாதார நெருக்கடியை பின்தொடர்ந்து, அது 1939ல் முதலாவதை விடவும் கூடுதல் பேரழிவை தந்த இரண்டாவது ஏகாதிபத்திய போர் வெடிப்பில் வந்து முடிந்தது. முதலாளித்துவ அமைப்பு உயிர் பிழைத்தது என்றால் அதற்கான காரணம் அதன் உள்ளார்ந்த வலிமை அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகள் எல்லாம் முதலில் சமூக ஜனநாயகக் கட்சியாலும் அதன்பின் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தாலும் அதன் பின் உலகெங்கிலுமான ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டதினால் ஆகும். இரண்டு உலகப் போர்களில் 90 மில்லியன் மக்கள் உயிர்நீத்து உற்பத்தி சக்திகள் எடுத்துரைக்கமுடியாத பேரழிவுக்கு உட்பட்ட பின்னர் தான் முதலாளித்துவ வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ், ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் சமநிலையை ஸ்தாபிக்க முடிந்தது.

14. ஆனால் இந்த சமநிலையால் சாத்தியமாக்கப்பட்ட அதே பொருளாதார விரிவாக்கமே அச்சமநிலையை குலைப்பதற்கான நிலைமைகளையும் உருவாக்கியது. அமெரிக்க பொருளாதாரத்தின் செழுமைக்கு முக்கியமானதாக இருந்த ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முதலாளித்துவ மீட்சியானது அதன் மேலாதிக்க வியாபகத்திற்கே குழிபறித்தது. ஆகஸ்ட் 1971ல், அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க டாலருக்கான தங்க ஆதரவை நீக்கினார், இது போருக்குப் பிந்தைய பிரெட்டன் வூட்ஸ் நிதி அமைப்பு காலாவதியாகி 1974-75ம் ஆண்டின் பெருமந்த நிலைக்கு வழிவகுத்தது. போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் முடிவை இது அடையாளப்படுத்தியது. அதே சமயத்தில், 1968-75 காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர எழுச்சியால் உலக முதலாளித்துவம் உலுக்கப்பட்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச தலைமைகளின் கூட்டிணைவால் மட்டுமே அன்று இது உயிர் பிழைத்ததுடன், அது நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தை மறுதலித்து தொழிலாள வர்க்கத்தை அதன் பழைய தேசிய அடிப்படையிலான கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அடிபணியச் செய்த பப்லோவாத திருத்தல்வாத சக்திகளால் உதவியளிக்கப்பட்டது.

15. தனது அரசியல் ஆட்சியை அமெரிக்க தலைமையின் கீழ் மீள் ஸ்தாபகம் செய்து கொண்ட முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு இரக்கமற்ற தாக்குதலுடன் இணைந்த ஒரு நீண்டகால விளைவுகளை கொண்ட பொருளாதார மறுகட்டுமானத்தின் வழியே 1970களின் பொருளாதார நெருக்கடிக்கான பதிலிறுப்பை செய்தது. இந்த நடவடிக்கைகளின் வெகு மையத்தில் அமைந்திருந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கல் நிகழ்வுப்போக்கு, 1990களில் சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் பெருகிய முதலீடுகள், புதிய உற்பத்தி வசதிகளின் வளர்ச்சி ஆகியவற்றுடன் துரிதமுற்றது. விளைவு, கடந்த மூன்று தசாப்த காலங்களில் உலகத் தொழிலாள வர்க்கம் முன்கண்டிராத ஒரு பிரம்மாண்டமான அளவில் விரிவாக்கம் கண்டுள்ளது. ஆயினும், உலக மூலதனத்தால் சீனா, இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவில் மலிவு உழைப்பு சுரண்டப்பட்டது உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி விடவில்லை. மாறாக, அது புதிய வெடிப்புமிகுந்த முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது. அமெரிக்காவில் நிதிமயமாக்கம் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் மொத்த தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டு விட்டன. 1990கள் மற்றும் புதிய நூற்றாண்டின் நுழைவுக் காலத்தில், அமெரிக்கா செலுத்துமதி நிலுவையின் குவிப்பைக் காண, இதைச் சரிக்கட்டுவதற்கான நிதியாதாரம் கிழக்கு ஆசியாவில் இருந்தான மூலதன உள்ளீடுகளில் இருந்து (முதலில் ஜப்பானில் இருந்து பின்னர் சீனாவில் இருந்து) கிடைக்க வேண்டியதாய் இருந்ததால் உலகளாவிய நிதிய சமநிலையின்மை அதிகரித்தன. டாலர் உலக நாணயமாக செயல்படுவது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலையில், உலகின் மிகவும் கடன்பட்டதொரு முதலாளித்துவ நாட்டினுடைய நாணயமாகவும் அது இருக்கிறது. ஒரு பக்கத்தில், உலகளாவிய மூலதனம் ஸ்திரப்படல் என்பது சீனா மற்றும் மற்ற போலிஸ்-அரசு ஆட்சிகள் பல மில்லியன் எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்கத்தை அடக்கும் திறனை எந்த மட்டத்திற்கு பெற்றுள்ளன என்பதையும், அதன் மூலம் உபரி மதிப்பு உலக நிதி அமைப்பின் இறுகிப் போன இரத்த நாளங்களுக்குள் தொடர்ந்து பாய்ச்சப்படுவதை உறுதி செய்வதையும் சார்ந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில், மலிவு உழைப்பு நாடுகளின் ஆட்சிகளோ தங்களது துரித பொருளாதார வளர்ச்சி பராமரிக்கப்படும் வகையில் உலக சந்தைக்கு தங்களின் ஏற்றுமதிகள் தொடர்ந்து விரிவாக்கம் பெறுவதையும் அதன்மூலம் சொந்த நாட்டில் அச்சுறுத்தலாய் அமையும் பெருகி வரும் வர்க்க முரண்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதையும் சார்ந்துள்ளன.

16. 2007-2008ல் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியானது 1970களிலான பொருளாதார நெருக்கடிகளுக்கு பதிலிறுப்பாய் அபிவிருத்தி செய்யப்பட்ட உலகப் பொருளாதார மறுகட்டுமானத்தின் விளைவு ஆகும். பிரெட்டன் வூட்ஸ் நிதி அமைப்பின் உடைவு மற்றும் நிலையான நாணய பரிவர்த்தனை உறவுகள் முடிவுக்கு வந்தது ஆகியவற்றின் பொருள் என்னவென்றால் உலகளாவிய அளவில் ஸ்திரமான மதிப்பு அளவீடு இல்லை என்பதாகும். ஆரம்பத்தில் இந்த பிரச்சினையை வெல்வதற்கான முயற்சியாக நிதிய அமைப்புகள் (Financial derivatives) உருவாக்கப்பட்டன. ஆனால், முதலாளித்துவ வரலாற்றில் மற்ற அனைத்து நிதி சாதனங்களைப் போலவே, அவையும் இலாபம் மற்றும் ஊகத்திற்கான ஒரு புதிய ஆதாரமாகின. இதனையடுத்து சர்வதேச நிதி பரிவர்த்தனைகளின் விரிவாக்கமானது சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வளர்ச்சியை விட மிதமிஞ்சி வளர்ந்தது. இது தவிர, இலாப விகித வீழ்ச்சியின் ஒரு விளைவாக பெரிய முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியின் நாடுகடத்தலானது (Outsourcing) இந்த பொருளாதாரங்களில் நிதிச் செயற்பாடுகள் -பங்குகள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற நிதிய சொத்துகள் ஆகியவற்றிலான வர்த்தகம்- இலாபம் திரட்டுவதில் முன்னெப்போதையும் விட ஒரு பெரும் பாத்திரத்தை ஏற்றிருந்ததை அர்த்தப்படுத்தியது. செல்வ திரட்சியானது உற்பத்தியில் இருந்து பிரிக்கப்பட்டு விட்டதால், அமெரிக்க பொருளாதாரமும், அத்துடன் ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரமும், பெருகிய முறையில் ஊக வணிக நிதிக் குமிழிகளை சார்ந்திருப்பதாயின. 2007ல் தொடங்கி உலகளாவிய முறிவினை தோற்றுவித்த வீட்டு அடமானக்கடன் நெருக்கடி என்று சொல்லப்படுவதானது, வங்கிகளும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனங்களும் மக்களில் வறுமை நிலையில் இருக்கும் தட்டுகளில் இருந்து செல்வத்தை சுரண்ட மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து விளைந்த ஒன்றாகும். இது ஏதோ, இல்லாவிட்டால் ஆரோக்கியமாய் இருந்திருக்கக் கூடிய ஒரு நிதி அமைப்பில் தொற்றிக் கொண்ட தொற்றுநோயல்ல. அமெரிக்காவையும் உலக முதலாளித்துவத்தையும் முந்தைய மூன்று தசாப்த காலங்களில் காப்பாற்றி வந்திருந்த நிதி இயங்குமுறைகளின் விளைவாகும் இது.

17. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் நெருக்கடிக்கு அளிக்கும் பதிலிறுப்பானது, வரலாற்றின் மாபெரும் செல்வம் மற்றும் வருமான குவிப்பில் வேரூன்றிய இரக்கமற்றதொரு வர்க்க தர்க்கத்தால் உந்தப்படுகிறது. நிதிமயமாக்கம் மேலும் மேலும் எழுச்சியுற்றதும் சமூக சமத்துவமின்மையின் திகைப்பூட்டும் வளர்ச்சியும் ஜனநாயக வடிவங்களின் சீரழிவிற்கு இட்டுச் சென்றுள்ளது. உலகப் பொருளாதாரமானது ட்ரில்லியன் கணக்கான தொகைகளை மேற்பார்வையிடும் ஒரு வெகு சிறிய எண்ணிக்கையிலான நிதிய உயர் அடுக்கினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையையும் நலன்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் -உலகளாவிய பில்லியனர்கள்- சுமார் 1000 பேரின் மொத்த சொத்து மதிப்பு கீழிருக்கும் 2.5 பில்லியன் மக்களினுடையதை விடவும் சுமார் இருமடங்காய் உள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உலக மக்கள் தொகையில் 0.000015 சதவீத எண்ணிக்கையிலிருப்போர் வறுமைநிலையில் இருக்கும் 40 சதவீதம் பேர் கொண்டிருப்பதை விட இருமடங்கு கொண்டிருக்கின்றனர். உலக மக்கள் தொகையில் பெரும் செல்வந்தர்களில் தலைமையில் இருக்கும் 2 சதவீதம் பேர் உலக சொத்துகளில் பாதியைக் கொண்டிருக்கின்றனர். தலைமை 100 நிதி நிறுவனங்கள் சுமார் 43 ட்ரில்லியன் டாலர் தொகையை அல்லது உலகின் மொத்த நிதி சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கை கையாளுகின்றன. சில ஆயிர பெருநிறுவன நிர்வாகிகள் தான் மொத்தம் 100 ட்ரில்லியன் டாலர் தொகை அல்லது உலகின் மொத்த சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர்.

18. எல்லா இடங்களிலும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள் சமூகத்தின் மிக உச்சத்தில் இருக்கும் செல்வத்தின் இந்த தீவிரக் குவிப்பால் தடுக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் ஆழமாகியிருக்கும் நிதிய உயர் அடுக்கினரின் சக்திக்கு அடிபணியச் செய்யப்படுகிறது. எப்படி பிரான்சில் பிரபுக்கள் மற்றும் நிலச்சுவான்தார் வர்க்கத்தின் ஆதிக்கத்தின் காரணத்தினால் பழைய ஆட்சியை (Ancien Régime) சீர்திருத்துவது என்பது சாத்தியமில்லை என நிரூபணமாகி 1789ல் ஒரு சமூகப் புரட்சிக்கு அவசியம் ஏற்பட்டு நவீன யுகத்திற்கு கதவு திறந்ததோ, அதைப் போலவே இன்றைய சமூக ஒழுங்கும் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தால் தூக்கியெறியப்படுவதை தவிர சமூக மறு-ஒழுங்கமைவுக்கு வேறு எந்த பகுத்தறிவுற்ற வழியும் இல்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகளால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. 75 ஆண்டுகளில் மிகப் பெரியதொரு நிதி நெருக்கடி நிகழ்ந்து உச்சமட்டத்தில் சந்தேகத்திற்கிடமான அரை-குற்றவியல் நடவடிக்கைகள் அம்பலப்பட்டும் கூட, எந்தவொரு நிர்வாகி கூட இதுவரை பொறுப்பு சுமத்தப்பட்டு முன்னே நிறுத்தப்படவில்லை. அதற்கும் மேலாய், நிதிய உயர் அடுக்கினரே வங்கிகள் மற்றும் நிதி அமைப்புக்கான "சீர்திருத்தத்திற்கு" திட்டங்கள் வகுப்பதில் ஒரு மையப் பாத்திரத்தையும் ஆற்றியிருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளின் நிதி நடைமுறைகள் முன்பு போலவே தொடர்கின்றன, அதாவது இன்னொரு உடைவுக்கு தயாரிப்பு நிகழ்கின்றது. வளங்களைக் கொள்ளையடிப்பது என்பது குறைச்சலில்லாமல் தொடர்கிறது. அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து மீட்புத் தொகையில் பெரும் பகுதியைப் பெற்ற 20 நிதி நிறுவனங்களின் ஐந்து தலைமை நிர்வாகிகள் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 3.2 பில்லியன் டாலர் தொகையை ஊதியமாய் பெற்றிருக்கின்றனர். இந்த குழுவினர் வெறும் மூன்று வருடங்களில் சம்பாதித்ததை நூறு அமெரிக்க தொழிலாளர்கள் சம்பாதிக்க வேண்டுமானால் அவர்கள் ஆயிரம் ஆண்டு காலம் உழைக்க வேண்டியிருக்கும்.

19. உலக முதலாளித்துவ அமைப்பிற்கு சமநிலையை மீட்டெடுக்கக் கூடிய சமூகரீதியாய் நடுநிலையான கொள்கைகள் கொண்ட பிரிவுகள் எதுவும் இல்லை. தொழிலாள வர்க்கம் தனது சொந்த தீர்வினை முன்னெடுத்தாக வேண்டும். தனது மூலோபாய அனுபவங்களில் இருந்து - எல்லாவற்றிற்கும் மேலாய், 1968-75 இல் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருந்து அது தடுக்கப்பட்ட சமயத்தில் வந்த சர்வதேச எழுச்சி மற்றும் 1980களில் சூழ்ந்த கடுமையான தோல்விகள் - படிப்பினைகளை அது வரைந்தாக வேண்டும். அந்த தோல்விகள் ஒரு ஆழமான வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. அவை தொழிலாள வர்க்கத்தின் நடப்பு தலைமைகளின் துரோக குணத்தை மட்டுமன்றி, பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி சகாப்தத்தில் தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டம் எல்லாம் அனைத்து சாத்தியப்பாடுகளையும் இழந்து விட்டது என்பதையும் வெளிப்படுத்தின.

20. தொழிலாளர் இயக்கத்தின் அதிகாரத்துவ எந்திரங்கள் - சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் - இலாப அமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் முறைப்படி அடக்கி வந்தமையால் கடந்த 20 ஆண்டுகள் வர்க்கப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டிருக்கின்றன. தங்களது பழைய அமைப்புகள் எல்லாம் முதலாளித்துவ வர்க்கத்தின் பகிரங்கமான முகவர்களாக உருமாறியிருப்பதை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் பெரும் பிரிவினர் தங்களுடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு தனித்தனி தீர்வுகளை எதிர்பார்த்துள்ளனர். அது இனியும் சாத்தியமில்லாது ஆகும் சூழ்நிலைகளின் கீழ், புதிய சமூகப் போராட்டங்கள் அபிவிருத்தியுற தொடங்குகின்றன, இவை தொலைதூர தாக்கம் கொண்ட அரசியல் பரிமாணங்களை பெருகிய முறையில் எடுக்கும். புரட்சிகர கொந்தளிப்பின் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பிக்க தொடங்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி கடுமையாய் சரிந்து அல்லது எதிர்மறையாய் சென்று, ஒரே சமயத்தில் என்பதை விட கொஞ்சம் கொஞ்சமாய் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, சமூக நிலைமைகளில் தொடர்ச்சியானதொரு வீழ்ச்சி நேரும்போது ஒரு புரட்சிகர சூழ்நிலைக்கான புறநிலை முன்நிபந்தனைகள் எழுகின்றன. ஆயினும், அகநிலை நிலைமைகள் மாறும் போது தான், அதாவது தொழிலாள வர்க்கத்தின் உளவியலிலும் அரசியல் கண்ணோட்டத்திலும் பண்புரீதியான ஒரு மாற்றம் நிகழும் போது மட்டும் தான் ஒரு புரட்சிகர சூழ்நிலை அபிவிருத்தியுற முடியும். அது தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அரசியல் தளத்தில் பரந்த மாற்றங்கள் - கடந்த 30 ஆண்டுகளில் கட்டப்பட்ட "சுதந்திர சந்தை" குறித்த மொத்தக் கருத்தியல் சித்திரத்தின் உருக்குலைவும் முக்கியத்துவம் குறைந்ததல்ல - வெகுஜன நனவு தீவிரப்படுவதற்கான புறநிலைமைகளை உருவாக்குகின்றன.

21. சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசு, முன்னுள்ள புதிய காலகட்டத்திற்கான தீர்மானமான தயாரிப்பு ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட புரட்சிகர கட்சியை கட்டுவதற்கான அவசியமான அஸ்திவாரங்களை இது அமைக்கிறது. 2008ல் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) இன் ஸ்தாபக காங்கிரசு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்னும் ஆவணத்தில் வடிவம் பெற்றுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் மூலோபாய அனுபவங்களில் இக்கட்சி வேரூன்றியுள்ளது. இந்த தீர்மானம் தெளிவுபடுத்துவது போல: "வேலைத்திட்டம் மற்றும் பணிகளின் அத்தியாவசிய பிரச்சினைகளில் கட்சிக்குள்ளான அரசியல் உடன்பாடு என்பது 20ம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் அவற்றின் மைய மூலோபாய படிப்பினைகள் குறித்த ஒரு பொதுவான மதிப்பீடு இன்றி சாதிக்கப்பட முடியாது." [4] கடந்த நூறாண்டு காலத்தில் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் பெற்றெடுத்த படிப்பினைகள் இந்த முக்கியமான சர்வதேச அனுபவத்தின் பகுதியை உருவாக்குகின்றன. அவற்றை நனவுடன் உட்கிரகிப்பதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கு அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதோடு ஒரு புதிய புரட்சிகர கட்சி ஸ்தாபிக்கப்படவும் கட்டப்படவும் முடியும். தொடரும்....

அடிக்குறிப்புகள்

1. உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகள் தீர்மானம், லேபர் பப்ளிகேஷன்ஸ், டெட்ராய்ட், 1988, பக். 7-8.

2. லியோன் ட்ரொட்ஸ்கி, லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலம், நியூ பார்க், லண்டன், 1974, பக். 8

3. ’போருக்குப் பிந்தைய ஒழுங்கின் முறிவும் சோசலிசப் புரட்சிக்கான சாத்தியக்கூறுகளும்’, நான்காம் அகிலம், தொகுதி. 18, எண். 1, பக். 228

4. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று & சர்வதேச அடித்தளங்கள், மெஹ்ரிங் புக்ஸ், ஓக் பார்க், 2008, பக். 2