சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

11-The World Socialist Web Site

உலக சோசலிச வலைத் தளம்

Use this version to print 

277. 1998ம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்தமை, ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் இன்னுமொரு முக்கிய திருப்புமுனையை இந்த முன்முயற்சி குறித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான 1985-86 பிளவிற்குப் பின்னர் அரசியல்ரீதியாக ஐக்கியப்பட்டதொரு உலகக் கட்சியின் அபிவிருத்தியானது ஒட்டுமொத்தமாக உலக இயக்கத்திற்கு, மிக உயர்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த மட்டத்தில் ஒருங்கிணைந்து அன்றாட பணிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கியது. முதல்முறையாக, அனைத்துலகக் குழு தனது சொந்த தனித்துவமான உலக பிரசன்னத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது. கழகங்களை கட்சிகளாக மாற்றுவதற்கு அவசியமானதும் அதன் நாளாந்த நடைமுறைகளில் மாற்றங்களை செய்வதற்கும் சாதனமாக இணைய தளத்தில் உள்ளடங்கியிருந்த புதிய தொழில்நுட்பங்களின் அபிவிருத்தியை அது ஏற்றுக்கொண்டது. ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே, உலக சோசலிச வலைத் தளம் தன்னை ஒரு சர்வதேசிய அரசியல் மற்றும் புத்திஜீவித சக்தியாக ஸ்தாபித்துக் கொண்டதோடு, பெருகும் ஒரு உலகளாவிய வாசகர் கூட்டத்திடையே சர்வதேச சோசலிசத்தின் உத்தியோகபூர்வ குரலாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

278. அனைத்துலகக் குழு "தொழிலாள வர்க்கத்தை கைவிட்டு விட்டது" என்றும் அது "இணைய வெளியில் கலைக்கப்பட்டு விட்டது" என்றும் குட்டி முதலாளித்துவ போக்குகளிடம் இருந்த குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்த நிலையில், தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக வேறு எந்த அமைப்புக்கும் முன்னதாக, உலக சோசலிச வலைத் தளத்தின் சாத்தியத்திறனை அனைத்துலகக் குழு முன்னறிவுடன் மதிப்பீடு செய்ததானது திட்டவட்டமான அரசியல் கருத்தாக்கங்களில் வேரூன்றியிருந்தது. 1998 ஜூலையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 18வது பேரவைக்கு டேவிட் நோர்த் அளித்த அறிக்கையில் இவை விரிவாகக் கூறப்பட்டிருந்தன: "(1) தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் மூலோபாயத்திற்கும் தந்திரோபாய ஒழுங்கமைப்புக்குமான அடிப்படையாக சர்வதேசியவாதத்தின் முன்னுரிமை மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தல். (2) தொழிலாள வர்க்கத்தில் பிற்போக்குவாத தொழிலாளர் அதிகாரத்துவங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நிகழ்த்தப்படும் போராட்டத்தின் சமரசமற்ற தன்மை. (3) ஒரு புதிய சர்வதேசிய புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான அவசியமான புத்திஜீவித (மற்றும் 'சிந்தனைரீதியான' என்றும் சேர்த்துக் கொள்ள முடியும்) முன்னிபந்தனை தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு உண்மையான சோசலிச அரசியல் கலாச்சாரத்திற்கு புத்துயிரூட்டுவதன் மேல்வைக்கப்பட்ட முக்கியத்துவம். இது சோசலிசப் புரட்சிக்கான அடிப்படையான புத்திஜீவித சாரமும் முன்நிபந்தனையும் ஆகும். (4) முதலாளித்துவ நெருக்கடியின் அபிவிருத்தி, வர்க்க போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சி தொடர்பாக தன்னிச்சைவாதம் மற்றும் அரசியல் விதிவசவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம்."

279. உலக சோசலிச வலைத் தளம் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காவிலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க குழுவின் அங்கத்தவர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்படுவதுடன், அது தனது ஆரம்ப புள்ளியாக வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச தன்மையை எடுத்துள்ளது. இது ஒவ்வொரு நாடுகளினதும் அரசியல் அபிவிருத்தியை முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் அடித்தளத்திலிருந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் அரசியல் பணிகளை ஆய்வு செய்கின்றது. இந்த முன்னோக்கின் அடித்தளத்தில் இருந்து சகலவித சோவினிசத்தையும் தேசியவாதத்தையும் முற்று முழுதாக எதிர்க்கின்றது. உலக சோசலிச வலைத் தளம் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அரசியல் அறிவூட்டுவதற்கும் என்றுமில்லாதவாறு ஒரு சாதனமாக அமையுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடுகடந்த நிறுவனங்கள் தேசிய எல்லைகளை கடந்து தொழிலாளர்களுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒழுங்கமைப்பதுபோல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை இணைக்க இது உதவி செய்யும். இது சகல நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி அவர்களது அனுபவங்களை ஒப்பிட்டு பார்த்து பொதுவான மூலோபாயம் ஒன்றை உருவாக்குவதற்கு உதவியளிக்கும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இணையங்களின் விரிவாக்கத்தைப்போல் உலக சோசலிச வலைத்தளத்திற்கு வரும் உலக வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது. ஒரு துரிதமான பூகோளரீதியான தொடர்பு சாதனம் என்ற வகையில் இணையம் அதியுயர் ஜனநாயகத்தையும் புரட்சிகர உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்களில் இருந்து உலகத்தின் புத்திஜீவித்தனமான வளங்களை பாரியளவிலான வாசகர்கள் பெற்றுக்கொள்வதற்கான வழியை உருவாக்கியுள்ளது. 15ம் நூற்றாண்டில் குட்டன்பேர்க் அச்சுத் தொழிலை கண்டுபிடித்ததானது தனிமனித வாழ்வின் மீது தேவாலயங்களின் கட்டுப்பாட்டை உடைப்பதற்கும், நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டுவதற்கும், இறுதியாக பிரெஞ்சு புரட்சியின் புத்தொழிமயமாக்கலிலும் பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கத்துடன் தோன்றிய பாரிய கலாச்சார எழுச்சியை பேணுவதற்கும் உதவியது. எனவே இப்பொழுது இணையம் புரட்சிகர சிந்தனையை புத்துயிப்பு அளிப்பதற்கு உதவியளிக்க முடியும். ஆகையால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இத் தொழில்நுட்பத்தை உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுதலை செய்யும் கருவியாக பிரயோகிக்க முனைகின்றது.[104]

ஏகாதிபத்திய போரும் நவ-காலனியாதிக்கமும்

280. ஏகாதிபத்திய போரின் வெடிப்பும் அதைத் தொடர்ந்த சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவை உருவாக்கிய பிரதிபலிப்புகளும், "ஒருசில 'முன்னேறிய' நாடுகளால் உலகின் பெரும்பான்மையான மக்கள் காலனித்துவ ஒடுக்குமுறைக்கும் நிதிரீதியான ஒடுக்குதலுக்கும் ஆளாக்கின்ற ஒரு உலக அமைப்பாக முதலாளித்துவம் வளர்ந்திருக்கிறது" என்கிற லெனினின் பகுப்பாய்வை அடிக்கோடிட்டுக் காட்டின. 1990ல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போர் தொடங்கிய போது, செல்வம் கொழிக்கும் இயற்கை வள ஆதாரங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் தனது பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடக்கிய தொடர்ச்சியான இராணுவத் தலையீடுகளில் முதலாவதற்கு ஹாக்கின் தொழிற்கட்சி அரசாங்கம் தான் ஓடிவந்து முதலில் கையெழுத்திட்டது. இதன்மூலம் அமெரிக்க கூட்டை பராமரிப்பதற்காக அதனுடன் அடியொற்றி நடக்க தொழிற் கட்சி தயாராக இருக்கிறது என்பதை அது சுட்டிக் காட்டியது. 1999ம் ஆண்டில் கொசோவோவுக்காக சேர்பியாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டில் ஒரு அதிகரிப்பை அடையாளப்படுத்தியது. "படுகொலைக்கு பின்னர்: பால்கன் போரின் அரசியல் படிப்பினைகள்" (After the slaughter: political lessons of the Balkan War) என்னும் ஜூன் 1999 அறிக்கையில் நோர்த் எழுதினார்: "தனது அதிகாரத்தை துரிதமாக கிழக்கு நோக்கி நடைமுறைப்படுத்துவதற்கு புதிதாய் சுதந்திரம் பெற்றிருக்கும் முன்னைய சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த மத்திய ஆசிய குடியரசுகளில் இருக்கும் பரந்த பயன்படுத்தப்படாத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கையிருப்புகளின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், சோவியத் உருக்குலைவால் உருவான அதிகார வெற்றிடத்தை சுரண்டுவதற்கான ஆர்வத்துடன் அமெரிக்கா இருந்தது. இந்த புதிய பூகோள-அரசியல் சூழநிலைக்குள், மத்திய ஆசியாவை நோக்கி ஏகாதிபத்திய சக்தியின், குறிப்பாக அமெரிக்க சக்தியின், நோக்கத்திற்ன்கான ஒரு முக்கிய தகவுப்பொருத்தமான இடமாக பால்கன் பகுதிகள் தனித்துவமான மூலோபாய முக்கியத்துவம் பெற்றன. இந்த இடத்தில் தான் அமெரிக்காவிற்கும் மிலோசெவிக்கின் ஆட்சிக்கும் இடையிலான மோதலின் மூலகாரணம் அமைந்திருக்கிறது." போருக்கான நியாயப்படுத்தலை பிரிட்டிஷ் தொழிற் கட்சி பிரதமரான டோனி பிளேயர் தனது வார்த்தை ஜாலத்துடன் வெளிப்படுத்தினார். "நன்னெறிசார்ந்த ஏகாதிபத்தியம்" என்னும் தனது புதிய சித்தாந்தத்தில், பனிப்போருக்கு பிந்தைய பூகோளமயமாக்கப்பட்ட உலகத்தில் தேசிய இறையாண்மை என்னும் தத்துவத்தை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு "பரஸ்பர சுய நலன்களும் நாம் போற்றி மகிழும் மதிப்பீடுகளை பாதுகாப்பதற்கான அறநெறி நோக்கமும் பக்குவமாய் கலந்த கலவை" மூலம் வழிநடத்தப்படும் ஒரு புதிய கட்டமைப்பு ஸ்தாப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.[105]

281. ஏகாதிபத்திய போர் மற்றும் காலனித்துவவாதத்திற்கு எதிராக பேர்லினில் 1991ம் ஆண்டு நவம்பரில் நடந்த தனது மாநாட்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நவ-காலனித்துவ வாதத்திற்கான திருப்பத்தை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது. "நேற்றைய காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்படும்" வகையில் "ஏகாதிபத்தியவாதிகளால் உலகம் மீண்டும் பிரிக்கப்படுவதன்" ஆரம்பத்தை வளைகுடாப் போர் அடையாளப்படுத்தியது. அமெரிக்க தலைமையிலான தாக்குதலில் பரந்த பங்கேற்பு இருந்ததன் பின்னால், "ஈராக்கிற்கு எதிரான போர் காலனித்துவ கொள்கையின் மறுஎழுச்சிக்கு அங்கீகாரமளிக்கும் என்பதில் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுக்குக்கும் இடையே ஒரு கூறப்படாத புரிந்துணர்வு" இருந்தது விளங்கப்பட்டது. ஒரு சிறிய ஏகாதிபத்திய சக்தியாக இருந்த ஆஸ்திரேலியா இந்த நிகழ்முறையின் ஒரு பகுதியாக இருந்தது. 1999ல், இந்தோனேசியாவில் சுகார்ட்டோ ஆட்சி நிலைகுலைந்ததை அடுத்து, அந்த பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களில் தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவும், மற்ற சக்திகளின், குறிப்பாக சீனா மற்றும் போர்த்துக்கலின், தலையீட்டை தடுக்கவுமான நோக்கத்துடன் கிழக்கு தீமூரில் ஒரு இராணுவ தலையீட்டிற்கும் ஏற்பாடு செய்தது.

282. கிழக்கு தீமூர் தலையீட்டில் மிகமுக்கிய அரசியல் அம்சமாய் அமைந்தது என்னவென்றால் ஆஸ்திரேலிய துருப்புகளின் தலையீட்டைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம் நடுத்தர வர்க்கத்தின் "இடதுசாரி" போக்குகள் ஆற்றிய பாத்திரமாகும். கிழக்கு தீமூர் மக்களை இந்தோனேசிய இராணுவக் குழுக்களின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்கு இந்த தலையீடு அவசியம் என்று அவர்கள் நியாயப்படுத்தினர். ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் அத்தியாவசிய முக்கியத்துவத்தை ஆஸ்திரேலியன் ஃபைனான்சியல் ரிவ்யூ ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டது: "வியட்நாமின் விளைவால் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கையை முன்மொழிவதற்கு அரசாங்கங்களுக்கு அரசியல்ரீதியாய் சாத்தியமில்லாது ஆனது. ....இந்த பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளும் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கை பற்றி உள்நாட்டிலிருந்த தடையை பற்றிய விவாதத்தை வலிமைப்படுத்தியுள்ளன....தீமூரில் நடவடிக்கை கோரும் அழைப்புகள் வஞ்சகப்புகழ்ச்சியானவை, ஏனென்றால் இராணுவத்தை தளர்ச்சியுறச் செய்யும் அரசியல் சூழலுக்கு உரம்போட்டவர்களில் பலரும் தான் ஆஸ்திரேலியா அங்கு தலையீடு செய்ய வேண்டும் என்று உரக்கக் கோருபவர்களாய் இருக்கிறார்கள். ஆயுதங்களுக்கான இந்த அழைப்பு, பல தசாப்த காலங்களில் முதன்முறையாக, ஆஸ்திரேலியா தனது பிராந்தியத்திற்கு வெளியே இராணுவ தலையீடு செய்யக்கூடியதாக இருக்கவேண்டும் என்கின்ற யோசனைக்கு பரந்த அங்கீகாரம் அளித்திருக்கிறது. இது, பாதுகாப்பு செலவினத்தின் அதிகரிப்புக்கு சாதகமாய் மட்டுமன்றி, பாதுகாப்பு படையின் கட்டமைப்பையே மாற்றுவதற்கும் சாதகமாக உள்நாட்டு கருத்தொருமிப்பை கட்டும் சாத்தியத்தை எழுப்புகிறது. நடுத்தர வர்க்கத்தின் "இடது" குழுக்கள் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்திற்கான ஒரு முக்கியமான அரசியல் தூணாக செயல்பட்டது இது முதல்முறையும் அல்ல கடைசி முறையும் அல்ல.

283. இந்த தீவுக்கூட்டம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த முன்னோக்கின் அவசியம், கிழக்கு தீமூர் தலையீடு தொடங்கியது முதலான தசாப்தத்தில் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்தை பாதுகாப்பது என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, கிழக்கு தீமூர் ஆஸ்திரேலியாவின் ஏறக்குறைய ஒரு பாதிக் காலனியாக, ஆஸ்திரேலியாவின் உத்தரவில் எந்த நேரமும் அங்கு ஆட்சி மாற முடியும் என்கிற நிலையில் உள்ளது.

284. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தாலும் ஆதரவளிக்கப்பட்ட கிழக்கு தீமூர் தலையீடு ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்திய நலன்கள் மறுஉத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதையும் அதன் இராணுவ வலிமை வலுவூட்டப்படுவதையும் அடையாளப்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு தலைமை நடத்திய முன்னாள் பாதுகாப்பு படை தலைவரான மேஜர் ஜெனரல் பீட்டர் காஸ்கிரோவ் கூறினார்: "மிக சமீபத்திய இராணுவ வரலாற்றில், நாம் பின்பற்றுபவர்களின் தேசமாக இருந்து வந்திருக்கிறோம். கிழக்கு தீமூர் நாம் தலைமை நடத்துவதற்கான அவசியத்தை உருவாக்கியது - நாம் உத்தரவுகள் கொடுத்தது மட்டுமல்லாமல் படைகள், எரிபொருள் மற்றும் திட்டமிடலையும் ஏராளமாய் கொடுத்திருந்தோம்." கிழக்கு தீமூரில் தனது பசிவெறி தூண்டிவிடப்பட்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் தனது இலட்சியங்களை விரிவுபடுத்துகிறது. ஆஸ்திரேலியா "மிக வலிமையான" நிலையில் திகழ்வதாக அறிவித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவுனர், அந்நாடு "உலக வேலைகளையும் செய்ய வேண்டும்" என்றும் "ஆஸ்திரேலியா இந்த பிராந்தியத்தில் மரியாதைக்குரிய ஒரு நாடு" என்பதை தீமூர் நடவடிக்கை காட்டியிருப்பதாகவும் வலியுறுத்தினார். உண்மையில், பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலிய இலட்சியங்கள் அமெரிக்காவின் ஆதரவைச் சார்ந்தததாகும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் "உதவி அதிகாரியாக (துணை ஷெரீபாக)" மரியாதை அளிக்கப்படுவதற்கு கைமாறாய், உலகெங்கிலுமான அமெரிக்க இராணுவத்தின் சாகசங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஆஸ்திரேலியா வழங்குகிறது. கிழக்கு தீமூர் தலையீட்டிற்குப் பின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலான அமெரிக்க தலையீடுகளில் ஆஸ்திரேலிய துருப்புகள் நிலைநிறுத்தப்படுவது வந்தது, அதனைத் தொடர்ந்து 2003ம் ஆண்டில் சாலமன் தீவுகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏறக்குறைய கையகப்படுத்திக் கொண்டது.

285. பனிப் போரின் முடிவு அமைதியைக் கொண்டு வரவில்லை, மாறாக ஏகாதிபத்திய சக்திகளின் ஒவ்வொன்றும் தனது போட்டி நாடுகளுக்கு எதிராய் தனது சொந்த நலன்களை முன்னெடுக்க சண்டையிடுவதால் போர்கள் மற்றும் இராணுவவாதத்தின் ஒரு புதிய சகாப்தத்தை தான் கொண்டு வந்திருக்கிறது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்கிற பதாகையின் கீழ், மத்திய ஆசியாவின் வள ஆதாரங்களின், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு, மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதன் மூலம் தனது உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்தில் நேர்ந்த வீழ்ச்சியை ஈடுசெய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் விழைகிறது. அது தான் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின் பின்னால், ஈராக்கிற்கு எதிரான போரின் பின்னால், ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் பின்னால், பாகிஸ்தானில் இராணுவ நடவடிக்கையின் பின்னால் மற்றும் யேமனில் தலையீட்டிற்கான நடவடிக்கைகளின் பின்னால் அமைந்திருக்கும் திட்டமாகும். இதுநாள் வரை பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது, ஆனால், 20ம் நூற்றாண்டின் வரலாறு விளங்கப்படுத்துவதைப் போல, அத்தகையதொரு மோதல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தவிர்க்கமுடியாததாகும், அது ஒரு மூன்றாம் உலகப் போர் அபாயத்தை உருவாக்கும். போரையும் மனித நாகரிகத்திற்கு முன்னால் அது நிறுத்தக் கூடிய அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழிவகை அது எழக் காரணமாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிவது தான். எனவே, போருக்கு எதிரான போராட்டம் என்பது, ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படுவதை நோக்கி அது செலுத்தப்படும் மட்டத்திற்குத் தான், முன்னேறிச் செல்ல முடியும். அது தான், 2003ல் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக வெடித்த தீவிர எதிர்ப்பு இயக்கத்தின் முதன்மையான படிப்பினையாகும். உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்கள் போருக்கெதிரான தங்கள் குரலை உலகளாவிய வகையில் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுத்தினர், இது வரலாற்றில் இத்தகைய அணிதிரட்டலில் மிகப் பெரியதாகும். இந்த மில்லியன்கணக்கான மக்களை ஊக்குவித்த போர் எதிர்ப்பு மனோநிலை அப்படியே தான் இருக்கிறது. ஆனால் 2003 இயக்கம் தோல்வியுற்றது அதன் காரணம், உத்தியோகபூர்வ அரசியல் எந்திரத்தின் மீது, எல்லாவற்றிற்கும் மேலாய், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் மீது போதுமான அழுத்தம் கொடுத்தால் போர் தடுக்கப்பட்டு விட முடியும் என்பது போன்ற ஒரு அழிவூட்டும் அரசியல் பிரமையால் அது தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்தது தான். நடப்பு அரசியல் ஒழுங்கினை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட, அதற்கு அழுத்தம்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிராத ஒரு சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டும் தான் போருக்கு எதிரான போராட்டம் முன்னோக்கி செல்ல முடியும் என்பது தான் பெற்றுக் கொள்வதற்கான படிப்பினை ஆகும்.

ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

286. கடந்த மூன்று தசாப்த காலங்களில் உற்பத்தி மற்றும் நிதியின் பூகோளமயமாக்கல் முதலாளித்துவ அமைப்பின் அனைத்து வரலாற்று முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தி சோசலிச புரட்சிக்கான ஒரு புதிய சகாப்தத்திற்கான புற நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு செய்த பகுப்பாய்வை 2007-2008ல் வெடித்த உலக நிதி நெருக்கடி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல், இந்த நிகழ்முறைகள் ஆஸ்திரேலிய பிரத்தியேகவாதத்தின் சடத்துவ அடித்தளங்களை தகர்த்திருப்பதோடு, இப்போது கட்டவிழ்த்து விடப்படும் உலகளாவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளின் சுழலுக்குள் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கமும் உள்ளிழுக்கப்படும் என்பதையும் உறுதி செய்திருக்கின்றன. இன்னும் பெரிய சமூக போராட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது, வர்க்க போராட்டத்தின் நியதிகள் எப்படியோ நிறுத்தப்பட்டு விட்டன அல்லது வெல்லப்பட்டு விட்டன என்பதைக் குறிக்கவில்லை. அதற்கு நேரெதிராய், குவியும் சமூக மற்றும் பொருளாதார பதட்டங்கள் நடப்பு மரத்துப்போன அரசியல் அமைப்பிற்குள்ளாக எந்த வடிகாலையும் காண முடியாது என்கிற உண்மையைத் தான் அது சுட்டிக் காட்டுகிறது. தற்போதைய மேலெழுந்தவாரியான ஸ்திரநிலை எவ்வளவு நீடிக்கிறதோ, அரசியல் வெடிப்பும் அந்த அளவுக்கு பலமானதாக இருக்கும். இது நடப்பிலுள்ள அரசியல் கட்டமைப்புகளின் வழியாக ஸ்தாபனங்கள் வழியாக நடைபெறாது, மாறாக அவற்றுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் வடிவத்தை எடுக்கும், சமூகத்தின் முழுமையான மறுஒழுங்கமைப்பையும் அதனை மேற்கொள்வதற்கு புதிய ஸ்தாபனங்களை கட்டுவதையும் நோக்கம் கொண்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கிற்கான அவசியத்தை அது முன்வைக்கும். இந்த புதிய காலகட்டத்திற்காக தயாரிப்பு செய்வதை நோக்கியே சோசலிச சமத்துவக் கட்சியின் அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன.

287.எதிர்வரும் கொந்தளிப்புகள், ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் வெகு மையத்தில் அமைந்திருக்கும் குவியும் பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளின் ஒரு தொடர்ச்சியால் எண்ணெய் ஊற்றப்படும். இது அனைத்து பொருளாதார மற்றும் வர்க்க உறவுகளிலும் விளைவுகளைக் கொண்டிருக்கும்.

288. ஆஸ்திரேலிய பிரத்தியேகவாத கற்பனைக்கு புத்துயிரூட்ட செய்த சமீபத்திய முயற்சியாக, ஆஸ்திரேலிய வங்கிக் கட்டுப்பாடுகள் தான் தேசிய நிதி அமைப்பை உலகளாவிய நெருக்கடியின் மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாத்தது என்கிற கூற்றுகள் எல்லாம் இருந்த போதிலும், 2008 அக்டோபரில் ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் திவால் நிலையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது, காரணம் அது சார்ந்திருந்த சர்வதேச நிதியாதாரங்கள் வற்றிப்போய் விட்டிருந்தது தான். சர்வதேச சந்தைகளில் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் அரசாங்கம் முழு உத்தரவாதம் அளித்த பின்னர்தான், அந்த நிதிகள் எல்லாம் மீண்டும் பாயத் தொடங்கி, "பெரும் நான்கு" வங்கிகளுக்கு அவற்றின் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமாய் இருந்த சர்வதேச கடன்களை புரட்டுவதற்கு உதவின. இதன் விளைவாய், ஜூலை 2009 வாக்கில், உலகின் மொத்த அரசாங்க உத்தரவாத வங்கிக் கடனில் 10 சதவீத பங்களிப்பை ஆஸ்திரேலிய வங்கிகள் கொண்டிருந்தன, உலக வங்கித்துறையில் ஆஸ்திரேலிய வங்கிகளின் பங்கைக் கொண்டு பார்த்தால் இது மிக அதிகமானதொரு விகித அளவாகும். தேசிய கட்டுப்பாடு பாதுகாப்பை வழங்கியிருந்தது என்று கூறுவதற்கு அப்பாற்பட்டு, உலகளாவிய நிதி நெருக்கடியானது ஆஸ்திரேலியாவுக்கு 1890கள் மற்றும் 1930களிலான ஆரம்ப நெருக்கடி சமயங்களில் போன்ற அதே பாதிப்பை, அதாவது அயல்நாட்டு கடனில் நிலைக்குலைவின் வடிவத்தில், அளித்தது.

289. உலகளாவிய நிதிமயமாக்கலின் அழுத்தங்களின் கீழ், கடந்த இரண்டு தசாப்த காலங்களில் ஆஸ்திரேலியாவின் பெரிய வங்கிகள் சர்வதேச நிதிச் சந்தைகளை சார்ந்திருப்பது பன்மடங்கு வீதத்தில் அதிகரித்துள்ளது. வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் திரட்டல் 1990ம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து, 2000ல் 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, பின் 2007 இல் 357 பில்லியன் டாலர்களாய் அதிகரித்து விட்டிருந்தது, இது ஆஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 30 சதவீதமாகும். ஆனால் துரிதமாக எதிர்திசையில் மூலதனம் பாயத் தொடங்கியதும் ஒரே இரவுக்குள் ஆஸ்திரேலிய நிதியமைப்பு திவால் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதை நிதி நெருக்கடி மிகத்தெளிவாய் வெளிப்படுத்தியது.

290. உலக நிதி முறைமையுடன் ஆஸ்திரேலிய வங்கிகள் முன்னெப்போதையும் விட பிணைந்து இருப்பதும், அவற்றைச் சார்ந்திருப்பதும், கடந்த மூன்று தசாப்தங்களில் ஆஸ்திரேலிய பொருளாதாரக் கட்டமைப்பை உருமாற்றியிருக்கக் கூடிய நிதிமயமாக்கல் நிகழ்வுப்போக்கின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. உற்பத்தித் துறையின் மொத்தப் பகுதிகளும், அமெரிக்காவில் நிகழ்ந்ததுடன் ஒப்பிடும் அளவுக்கான ஒரு பெரிய அளவில், அழிக்கப்பட்டு விட்டன. 1975 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 20.2 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக சரிந்து போனது. அதே சமயத்தில் நிதி மற்றும் காப்பீடு மற்றும் சொத்து மற்றும் வர்த்தக சேவைகள் எல்லாம் இணைந்து 15.3 சதவீதத்தில் இருந்து 23.2 சதவீதமாக அதிகரித்திருந்தது. 1984ம் ஆண்டு வரையிலும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு தான் எந்த துறையையும் விட அதிகமானதாய் இருந்தது, ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் அது தொழிலாளர் எண்ணிக்கை வீதத்தில் 17.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்திற்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது.

291. அதே காலத்தில், நிதியத்துறை பாரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 1990 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிர்வாகத்தின் கீழிருந்த நிதிகள் வருடத்திற்கு 12.5 சதவீதம் என்கிற விகிதத்தில் பெருகி 1.7 டிரில்லியன் டாலர் தொகையாக விரிவாக்கம் பெற்றன. 1970களின் இறுதி வரையிலும், நிதிச் சொத்துகளின் அளவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீத அளவுக்கு இருந்தது. 1990களின் ஆரம்ப சமயத்தில், இந்த விகிதாசாரம் ஏறக்குறைய இரண்டு மடங்காய் அதிகரித்து விட்டிருந்தது. மீண்டும் அதிகரித்து 2005 வாக்கில் ஏறக்குறைய 350 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது.

292. நிதிச் செல்வத்தின் இந்த பலமான கட்டமைப்பு கூடுதல் ஒட்டுண்ணி வகையாய் ஆகி பொருளாதார புற்றுநோயாய் செயல்பட்டது. நிதி ஆதாயங்களின் திரட்டல் என்பது தொழில்துறை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை சார்ந்திருப்பது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, பெருகிய முறையில் வர்த்தக ரீதியான சொத்து மதிப்புகளின், எல்லாவற்றிற்கும் மேலாய் வீட்டுத்துறையின் சொத்து மதிப்புகளின் அதிகரிப்பை சார்ந்திருப்பதானது. வீட்டு சந்தையில் நிதிகளின் பாய்வை அடுத்து, வீட்டு விலைகள் 1995 முதல் 2007 வரையான காலத்தில் சராசரியாக 169 சதவீதம் உயர்ந்திருந்தன. இது வங்கிகள் மற்றும் பிற நிதி செயல்பாட்டாளர்களின் வட்டி வருவாயிலும் அதே விகிதாச்சாரத்திலான அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது. ஆனால் சொத்து மதிப்புகளின் அதிகரிப்பு என்பது, உலக நிதி அமைப்புக்குள் இருந்து ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்குள்ளாக தொடர்ந்து நிதியாதாரங்கள் பாய்வதை சார்ந்திருந்தது. அந்த பாய்வு நின்று போனால், மொத்த நிதி முறைமையும் உருக்குலைந்து போகும் அபாயத்தை எதிர்கொள்வதாகும். ஆஸ்திரேலிய பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் சீனா மீதான சார்பு மிகக் குறிப்பிடத்தக்க சாத்தியமான தூண்டுவிசைகளில் ஒன்றாக இருக்கிறது. 1997-98 ஆசிய பொருளாதார நெருக்கடி காலம் முதல், சீனாவுக்கு தாதுக்கள் ஏற்றுமதி - குறிப்பாக இரும்பு தாது மற்றும் நிலக்கரி - செய்வதன் மூலமாக உருவாகும் வருவாய், வரி அமைப்பின் மூலமான அரசாங்க வருவாய்க்கு ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்து வருகிறது. சீனாவுடனான அதன் வர்த்தக உறவுகளால் ஆஸ்திரேலிய சொத்துகளை நோக்கி நகர்ந்த சர்வதேச நிதியால் இது நிதியஅமைப்பின் அச்சாணியாக மாறியிருக்கிறது. ஆனால், சீன பொருளாதாரத்தில் ஒரு மந்தமோ, அல்லது வளர்ச்சியில் ஒரு சரிவோ நிகழ்ந்தால் கூட, அதனால் விளையும் உலகளாவிய நெருக்கடி ஆஸ்திரேலிய பொருளாதாரம் முழுவதிலும் வெடிப்பு மிகுந்த விசையுடன் அதிர்வுகளை ஏற்படுத்தும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2007-2008 நிதி முறிவின் ஆரம்ப பாதிப்பில் இருந்து சற்று தனித்து தப்பித்துக் கொள்ள காரணமாய் இருந்த அதே உறவுகள் தான் ஒரு பொருளாதார நிலைமுறிவின் கடத்தும் இயங்குமுறைகளாக மாறும்.

293. நிதிமயமாக்கத்தின் அதிகரிப்பு ஒரு பேரழிவூட்டும் சமூக நெருக்கடிக்கு அடிப்படையை உருவாக்கியிருக்கிறது, ஏனெனில் மக்கள்தொகையின் வெகு பெரும் பிரிவினர் கடனில் ஆழமாக மூழ்கியுள்ளனர். வீட்டுகடன் 1970களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக இருந்தது அதிகரித்து, 1990ம் ஆண்டில் 30 சதவீதமாக உயர்ந்து இன்று சுமார் 100 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது. கடந்த மூன்று தசாப்த காலங்களில் உண்மையான ஊதிய தேக்கத்தின் பாதிப்பில் தாக்குப்பிடிப்பதற்கு தொழிலாள வர்க்க குடும்பங்கள் செய்த பிரயத்தனங்களால் 1996 மற்றும் 2007ம் ஆண்டுகளுக்கு இடையே, கடன் அட்டை கடன் அளவு 460 சதவீதம் அதிகரித்துள்ளதோடு ஒட்டுமொத்த வீட்டுக்கடனும் 340 சதவீதம் அதிகரித்துள்ளது.

294. கடன்பட்டநிலையின் வளர்ச்சியை தனது விளைபொருளாய்க் கொண்டிருக்கும் பொருளாதார "மறுகட்டுமானம்" ஒரு சமநீதிச் சமுதாயமாக ஆஸ்திரேலியாவின் பிரமையை எல்லா காலத்திற்குமாய் அழித்திருக்கிறது. இப்போது, முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் என்று அழைக்கப்படுவனவற்றுள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏற்றத்தாழ்வுற்றதாகவும் சமூகரீதியாக மிகவும் துருவப்படுத்தப்பட்டதாகவும் இந்நாடு விளங்குகிறது. சமநீதிச் சமுதாயம் என்பது எப்போதும் ஒரு கற்பனையாகத் தான் இருந்து வந்திருந்தது என்றபோதிலும், வருவாய் ஏற்றத்தாழ்வில் ஒரு சரிவு 1915 முதல் 1965ம் ஆண்டு வரையான காலத்தில் இருந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாய் 1981 வரை தொடர்ந்தது. அதன்பின், சமூகத்தின் செல்வச் செழிப்பான பிரிவுகளுக்கும் எஞ்சிய மக்களுக்குமான பிளவு அதிகரித்தது. 1990களின் நிறைவுக்குள்ளாக, மேல்மட்டத்திலிருக்கும் 20 சதவீதம் பேர் மொத்த வருவாயில் சுமார் 50 சதவீதத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் - அதாவது கீழ்மட்டத்தில் இருக்கும் 80 சதவீதம் பேர் சம்பாதிப்பதை. 1986 முதல் '96 வரையான காலகட்டத்தில், மேல்மட்ட 200 குடும்பங்களின் செல்வம் 7.3 பில்லியன் டாலரில் இருந்து 37.3 பில்லியன் டாலர்களாய் அதிகரித்தது. 1992ம் ஆண்டில், முன்னணி 50 நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஒரு நிர்வாகியின் சம்பளம் ஒரு சராசரி தொழிலாளரின் வருவாயைக் காட்டிலும் 27 மடங்கு அதிகமானதாய் இருந்தது. 2002 வாக்கில் அது 98 மடங்கு அதிகரித்திருந்தது. மத்திய வங்கியின் கூற்றின் படி, மக்கள்தொகையில் செல்வமிக்க 20 சதவீதம் பேர் சொத்துகளில் சுமார் 67 சதவீதத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் மிக வறுமை கொண்ட 20 சதவீதம் பேர் வெறும் 0.2 சதவீத சொத்துகளையே கொண்டிருக்கின்றனர். இன்னொரு ஆய்வு கண்டறிந்ததன் படி, மேலே இருக்கும் 10 சதவீதம் பேர் மொத்த செல்வத்தில் சுமார் 45 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றனர். மேலே இருக்கும் 50 சதவீதம் பேர் 90 சதவீதத்திற்கும் அதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். எஞ்சிய 50 சதவீதம் பேருக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான செல்வமே எஞ்சியிருக்கிறது. வருவாய் பகிர்வு என்பது மேலும் மேலும் சீரற்றதாக ஆகியிருக்கிறது. மேல்மட்டத்தில் இருக்கும் 1 சதவீதமானோரின் வருவாய் 1980ம் ஆண்டில் மொத்த வருவாயில் 5 சதவீதமாக இருந்தது 2002ம் ஆண்டில் 9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் மேலே இருக்கும் 0.5 சதவீதம் பேரின் வருவாய் மொத்த வருவாயில் 2.95 சதவீதத்தில் இருந்து 6 சதவீதத்திற்கு பாய்ச்சல் கண்டிருக்கிறது. 1970ம் ஆண்டிலிருந்தான மூன்று தசாப்தங்களில், வறுமையில் வாழும் குடும்பங்களின் அளவு இருமடங்குக்கும் அதிகமாகி இருக்கிறது. 1970ல், குடும்பத்தினரில் 3 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் சமூகப் பாதுகாப்பு ஆதாயங்களை நம்பி இருந்தனர். 1997-98க்குள்ளாக, இந்த விகிதம் 20 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது, அந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாக, பாரமரிப்பு நிலையங்களில் உள்ள குழந்தைகளில் 17.4 சதவீதம் பேர் வறுமையில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

295. கடந்த மூன்று தசாப்தங்கள் மில்லியன்கணக்கான தொழிலாளர்களின் வேலைநிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. ஏறக்குறைய தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பகுதி-நேர தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது 1974ம் ஆண்டில் 11.4 சதவீதமாக இருந்து 1996 இல் 24.1 சதவீதமாக அதிகரித்து இந்நிலைக்கு வந்திருந்தது. "வளைந்துகொடுக்கும்" வேலை நிலைமைகளை உருவாக்குவதற்கான பல ஆண்டுகால "மறுகட்டமைப்பிற்கு" பின்னர், பெரிய முதலாளித்துவ நாடுகளில் மிக உயர்ந்த பகுதி நேர வேலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாய் ஆஸ்திரேலியா இருக்கிறது. இளம் தொழிலாளர்களில் இந்த விகிதம் இன்னும் அதிகமாய் இருக்கிறது: 15 முதல் 19 வயதுக்குள்ளான தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பகுதி நேர தொழிலாளர்கள். இரண்டு வகை அடுக்காக தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். பல புதிய இளம் தொழிலாளர்கள் விளிம்புநிலை பகுதிநேர வேலைகளுக்குள் தள்ளப்படுகின்றனர். இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தற்காலிக தொழிலாளர்கள் இருப்பதுடன், இவர்களது சம்பளம் குறைவானதுடன், வேலை நிலைமைகளும் மோசமானதாய் இருக்கின்றது.

296. இங்குதான் ரூட் தொழிற்கட்சி அரசாங்கம் 2007 இல் அதிகாரத்துக்கு வருவதன் வரலாற்று முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. ஹாக் மற்றும் கீட்டிங் செய்ததற்கு பின் பொருளாதார மறுகட்டமைப்பின் அடுத்த "அலையை" நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்ததின் பேரில், முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகளின் ஆதரவோடு தொழிற் கட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டது. தனக்கு முந்தைய ஃபிரேசர் அரசாங்கம் போல, 2007க்குள் ஹோவார்டு அரசாங்கம் உறுதிகுலைய தொடங்கியிருந்தது; அதன் ஆரம்பகட்ட கடுமையான வரவு-செலவுத் திட்ட வெட்டுகள் மற்றும் 1990களின் பிற்பகுதியில் பிற்போக்குத்தனமான பொருட்கள் மற்றும் சேவைகள் சட்டம் (GST) ஆகியவற்றுக்குப் பின்னர் பெரு வர்த்தகங்களுக்கு அவசியமாய் இருந்த நிகழ்ச்சிநிரலை செயல்படுத்துவதில் அது திறமற்றதாய் நிரூபணமுற்றிருந்தது. கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல், ஒவ்வொரு பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பு காலகட்டத்திலும் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் தேசிய அரசுக்கான அத்தியாவசியமான கட்சியாக, குழுக்கள் ரீதியாக பிளவுபட்ட பழமைவாத கூட்டணிக் கட்சிகளை காட்டிலும், தொழிற்கட்சியை தான் தன்னுடைய வர்க்க நலன்களைக் காப்பதற்கு நம்பியிருந்தது. 1930களின் பெருமந்த காலத்திற்கு பிறகான மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மீண்டுமொரு முறை தொழிற் கட்சிக்கு ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது; தொழிலாள வர்க்கத்தின் நலன்களை நேரடியாகப் பலியிட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு முட்டுக் கொடுக்கும் பொறுப்பு. இதற்கு பொருளாதார மற்றும் வர்க்க உறவுகளை பலாத்காரமான முறையில் "மறுசீரமைப்பதற்கு"க் குறைந்த எதுவும் அவசியப்படாது. ரூடின் தொழிற் கட்சி அரசாங்கம் லிபரல்களுக்கான ஒரு "முற்போக்கு" மாற்றும் அல்ல, அல்லது அதற்குக் "குறைந்தபட்ச தீமை"யும் அல்ல, மாறாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆளும் மேற்குடியின் நேரடிக் கருவியாகும். அரசு எந்திரம் மற்றும் சட்ட அமைப்பில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் நெடுந்தூரம் செல்லும் மாற்றங்கள் இது எவ்வாறு செய்யப்படவிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றன.

297. ஹோவார்ட் அரசாங்கத்தின் வேலைத் தெரிவுகள் (Work Choices) திருத்தங்களுக்கு பரவலான கடுமையான எதிர்ப்புகள் இருந்த போதிலும், தொழிற் கட்சி தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை ஏற்கனவே தனது நேர்மையான வேலைக்கான ஆஸ்திரேலிய சட்டங்களின் (Fair Work Australia) கீழ் வலுப்படுத்தியிருந்தது. தங்களின் நலன்களைக் காப்பதற்கு தொழிலாளர்கள் மேற்கொள்ளும் ஏறக்குறைய எந்த தொழிற்துறை நடவடிக்கைகளுமே சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டு அரசின் நடவடிக்கைக்கு ஆளாகும் வகையிலோ அல்லது பெரும் இழப்புகளை காரணமாகக் கூறி சிவில் வழக்குகள் மூலம் உரிமையாளர்கள் மூலமான நடவடிக்கைக்கு ஆளாகும் வகையிலோ ஆகும் வண்ணம் இத்தகைய புதிய சட்டங்கள் இருந்தன.

298. அதேபோல், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்கிற பதாகையின் கீழ் 2001க்கு பின்னர் ஹோவார்ட் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் மேலே கட்டியெழுப்புகிற விதமாய், தொழிற் கட்சி போலிஸ்-உளவுத்துறை-இராணுவ எந்திரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் போலவே, பயங்கரவாதத்தை விடவும் பொருளாதார நெருக்கடி தான் "தேசிய பாதுகாப்பு"க்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஆகியிருப்பதாக உளவுத்துறை குறித்திருக்கிறது. "வளர்ந்த" நாடுகளில் "ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் கலகங்கள்" பெருகுவதை சுட்டிக்காட்டியிருக்கும் ஆஸ்திரேலிய மத்திய போலிஸ் (AFP) பொருளாதார ஸ்திரமின்மையும் அதிருப்தியும் தான் "தேசியப் பாதுகாப்பு"க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை முன்நிறுத்தத்தக்கவை என வலியுறுத்திக் காட்டுகின்றது. 2001க்குப் பிந்தைய பயங்கரவாத எதிர்ப்பின் அடிப்படையிலான வெகு ஆழ்ந்த அதிகாரங்கள் சட்ட அமைப்பு முழுவதிலும் நீட்டிக்கப்படுகின்றன. இவை "தீவிர குற்றவியல் நடவடிக்கை"க்கு எதிராக போராடுவது மற்றும் "பொதுஜன சட்டம் மற்றும் ஒழுங்கை" பாதுகாப்பது என்கின்ற பெயரில் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்துவிடுகின்றன. "பயங்கரவாதம்" என்கிற பதத்தின் வரையறை ஏற்கனவே பரந்த வகையில் விரிவுபடுத்தப்பட்டு எண்ணிலடங்கா சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு விட்டன. விசாரணயின்றி கைதுக்கு வகை செய்வது, குறிப்பிட்ட குழுக்களை தடைசெய்வதற்கான நிர்வாக அதிகாரங்களை உருவாக்குவது, மற்றும் பாதி இரகசிய விசாரணைகளை அனுமதிப்பது ஆகியவற்றின் மூலம் அரசியல் அதிருப்திக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்பட முடியும். புனையப்பட்ட "பயங்கரவாத எச்சரிக்கை"யின் என்ற சாக்கில் அனைத்து நாடாளுமன்ற கட்சிகளின் ஆதரவுடனும் 2005ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மாற்றங்கள், ஒரு ஸ்தூலமான பயங்கரவாதத் திட்டத்திற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாமலேயே "பயங்கரவாத" குற்றங்களுக்காக வழக்கு தொடுக்கப்படுவதற்கு அனுமதிக்கிறது. ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடுகளை எதிர்ப்பதை ஆதரவளிப்பதையும் ஆட்சியெதிர்ப்புக் கிளர்ச்சியாக கருதும் வகையில் அதன் வரையறை திருத்தப்பட்டிருக்கிறது. "உள்நாட்டு வன்முறை", "காமன்வெல்த் நலன்களின்" பாதுகாப்பு ஆகிய அருவமான காரணங்களைக் கூறி உள்நாட்டிற்குள் இராணுவத்தை அழைக்க புதிய சட்டங்கள் மத்திய அரசாங்கம், கவர்னர்-ஜெனரல் அல்லது ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை தலைவருக்கு அனுமதி செய்கின்றன. அழைக்கப்பட்டு விட்டார்களாயின், அந்த இராணுவ அதிகாரிகளுக்கு தீவிர படை வலிமையை பயன்படுத்துவது, விசாரணை செய்வது, வளாகங்களில் சோதனை செய்வது, ஆவணங்களை கைப்பற்றுவது ஆகியவை உள்பட பரந்த அதிகாரங்கள் வந்து சேருகின்றன.

299. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்குப் பின் கண்டிராத இராணுவமயமாக்க அளவுடன் கைகோர்த்த வகையில் மேற்கொள்ளப்படுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், கிழக்கு தீமூர் மற்றும் சாலமன் தீவுகளில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிரான நவ காலனித்துவ தலையீடுகளுக்கு துருப்புகள் அமர்த்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச நீர்ப்பரப்புகளில் அகதிகளின் படகுகளை கடற்படை போர்க்கப்பல்கள் தடுத்து நிறுத்துகின்றன அல்லது திருப்பி அனுப்புகின்றன. உள்நாட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் SAS பங்கேற்கிறது, அச்சமயத்தில் இராணுவம் வழக்கமாக பெரும் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அத்துடன் வறுமைப்பட்ட பூர்வீக குடிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் வடக்கு பிராந்திய "தலையீட்டிலும்" பங்குபெறுகிறது. ஹோவார்டின் கீழ் இருந்ததை விட மிக அதிகமானதொரு அளவில் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கான நிதியாதாரத்தை தொழிற்கட்சி அதிகரித்துள்ளது. 2009-2010 நிதிநிலை அறிக்கையில் AFPக்கான மொத்த வள ஆதாரங்கள் 50 சதவீதமும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்புக்கான (ASIO) வள ஆதாரங்கள் 60 சதவீதமும் அதிகரிக்கப்பட்டிருந்தன. பூர்விக குடிகள், ஆஸ்திரேலியாவின் "பாதுகாப்புக்குட்பட்ட பகுதிகளின்" அகதிகள் மற்றும் குடிமக்கள் ஆகிய சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினருக்கு எதிராகத் தான் இப்போது இந்த அதிகரிக்கப்பட்ட அரசு அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, என்றாலும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எழும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக போராட்டங்களை இரக்கமின்றி அடக்கவும் அவை தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

300. பசுமைக் கட்சிவாதிகள் உள்பட ஒட்டுமொத்த உத்தியோகப்பூர்வ அரசியல் கட்டமைப்பும் இந்த நடவடிக்கைகளில் அடிப்படையில் ஒருமனதுடன் இருப்பது என்பது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்குமாக ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்குள்ளாக எந்த குறிப்பிடத்தக்க பிரிவினரும் இனியும் இல்லை என்பதையே அடையாளம் காட்டுகிறது.

301. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் துரிதமாய் மீண்டும் எழுந்திருப்பதற்கு தனது சொந்த அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலமாக ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் பிரதிபலித்துள்ளது. இவை இரண்டையுமே, ஆசிய பசிபிக் பகுதி முழுவதிலும் ஒருதரப்பான வகையில், போருக்குப் பிந்தைய தனது கூட்டணி பங்காளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் செய்திருக்கிறது. தனது பூகோள-மூலோபாய "செல்வாக்கு கோளத்தில்" ஆஸ்திரேலியாவின் பெருகிய மூர்க்கமான தலையீடுகளுக்கு ஆதாரவளமளிக்கும் அவசியத்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய விரிவாக்கத்தை இராணுவம் பெற்றிருப்பதாக தொழிற் கட்சி அரசாங்கத்தின் 2009 பாதுகாப்பு வெள்ளை அறிக்கை அறிவித்தது. ஈராக்கில் இருந்து ஆஸ்திரேலிய தரைப் படைகளை திரும்பப் பெறுவதான (கடற்படைகள் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் இருக்கும்) ரூட் அரசாங்கத்தின் முடிவு அங்கு அமெரிக்கா தலைமையிலான குற்றவகைப் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அமைந்ததல்ல, மாறாக ஒபாமா நிர்வாகத்தின் தந்திரோபாய மாற்றத்திற்கு தகுந்த வகையில் ஆஸ்திரேலிய கொள்கையையும் சீரமைவு செய்து கொள்ளும் பொருட்டே. மத்திய ஆசியாவில் தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவ செயல்பாடுகள் மறுகவனத்தைப் பதிக்கும் வேளையில், ரூட்டும் அதேபோல் ஆப்கானிஸ்தானுக்குள் ஆஸ்திரேலிய துருப்புகள் நிலைநிறுத்தத்தை அதிகரித்திருக்கிறார். பதிலாக ஆஸ்திரேலியாவின் தெற்கு பசிபிக் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவு கிட்டும்.

302. ஆஸ்திரேலிய இராணுவம் கடந்த ஒரு தசாப்த காலமாய் கிழக்கு தீமூரை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது, சாலமன் தீவுகளை 2003ம் ஆண்டில் இருந்து ஆக்கிரமித்துள்ளது, இரண்டு நாடுகளிலுமே ஆஸ்திரேலிய அரசாங்கம் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. இதனிடையே இராணுவம், போலிஸ் மற்றும் மற்ற அரசாங்க அதிகாரிகள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் தனது சொந்த "சிறப்புப் பகுதி" என்றும் பெருகிய முறையில் "ஸ்திரமற்ற வளையம்" என்றும் கருதப்படுகிற பகுதிகளில் தனது வலிமையான இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோக்கம் மனிதாபிமான ரீதியானதல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான ஒரு போட்டிக்களமாக துரிதமாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் இலாபம் தரும் நிதி மற்றும் புவி-அரசியல் நலன்களைப் பாதுகாப்பது தான். சீன பொருளாதாரம் துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில் - 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஏறக்குறைய இருமடங்குக்கும் அதிகமாய் வளர்ச்சி கண்டிருக்கிறது - உலகெங்கிலும் இருந்து கச்சாப் பொருட்கள் வருவதற்கான அதன் சார்பு முக்கியமான தேசிய நலன் விடயமாக ஆகியிருக்கிறது. சீன போக்குவரத்து பாதைகளின் பாதுகாப்பு, ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் தனது தளங்களையும் மற்றும் செல்வாக்கு பிராந்தியங்களையும் கொண்ட ஒரு நீலக் கடல் கடற்படைக்கான அவசியத்தை சீன ஆட்சியின் முன் எழுப்புகிறது. மீண்டுமொரு முறை ஒரு எழுச்சியுறும் ஆசிய சக்தி பசிபிக்கை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுகிறது. ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, இது தீவிர மூலோபாய குழப்பத்தை முன்நிறுத்துகிறது. நெடுங்கால வரலாற்று ரீதியான மூலோபாய ரீதியான நலன்கள் அதனை அமெரிக்காவின் பக்கம் இழுக்கின்றன. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய பொருளாதாரமோ முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் சீனாவை சார்ந்ததாய் ஆகியிருக்கிறது.

303. சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதட்டம் அதிகரித்திருப்பது என்பது, இந்தியாவின் எழுச்சி, ஜப்பானின் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை உட்பட சிக்கலான போட்டிகளின் வலைப்பின்னலில் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக பல துன்பவியல் கொதிமுனைகளை உருவாக்கும் சாத்தியத்தை உண்டாக்குகிறது.

304. உலகளாவிய பொருளாதார முறிவு, அதிகரிக்கும் அரசியல் ஸ்திரமின்மை, இராணுவ வன்முறையின் வெடிப்பு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், ஆழமுறும் சமூக சமத்துவமின்மை, மற்றும் பெருகும் வறுமை ஆகியவை எல்லாம் வர்க்க மோதல் பகிரங்கமாய் மறுஎழுச்சி கொள்வதற்கான புற நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. வரலாற்று மற்றும் சர்வதேசிய பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்முறைகளின் சிக்கலான பிணைந்த செயல்பாடுகளால் தொழிலாள வர்க்கம் பின்னே தள்ளப்பட்டு வரலாற்றில் குறைந்த அளவிலான செயலூக்கமிக்க போராட்டத்தை பதிவு செய்த கடந்த காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் விளையும் சவால்களை சந்திப்பதற்கு அரசியல், தத்துவார்த்த மற்றும் அமைப்புரீதியான அதன் பணிகளில் ஒவ்வொரு அம்சத்திலும் தயாரிப்பு செய்ய வேண்டியது தான் சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய பணியாக இருக்கிறது.

305. அனைத்திற்கும் மேலாய், தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர, அதாவது விஞ்ஞான சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதை நோக்கி சோசலிச சமத்துவக் கட்சி நோக்குநிலையாக கொண்டுள்ளது. சக்திவாய்ந்த புறநிலை போக்குகள் அத்தகையதொரு அபிவிருத்திக்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய முதலாளித்துவ அரசைக் காப்பாற்றி வந்த அரசியல் கட்சிகளுக்கான செயலூக்கமிக்க பாரிய ஆதரவு ஏற்கனவே நொருங்கிப் போய் உத்தியோகபூர்வ அரசியலுக்கும் சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கும் இடையில் ஒரு அகன்ற இடைவெளியை திறந்து விட்டிருக்கிறது.

306. அரசியல்ரீதியாய் அபாயமான இந்த சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்தை சிக்க வைப்பதற்குரிய புதிய அரசியல் வகைமுறைகளை உருவாக்குவதை விடவும் வேறெந்த பெரிய அவசியமும் ஆளும்தட்டிற்கு இல்லை. இதுவே பல்வேறு "முன்னாள்-இடது" நடுத்தர வர்க்க போக்குகள் ஒரு புதிய மறுகுழுவாக்கத்திற்கு அலைவதின் முக்கியத்துவமாகும். அந்த விடயத்திற்காக தான் அவர்கள் ஒரு சமயத்தில் தாராளவாத மற்றும் தொழிற் கட்சிகளின் விமர்சகராய் காட்டிக் கொண்ட ஒரு முதலாளித்துவ கட்சியும், அடிப்படையில் இலாப அமைப்பையும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் பாதுகாக்க உறுதிப்பாடு கொண்ட பசுமைக் கட்சியை ஒரு "முற்போக்கான" மாற்று என்று கூறி வளர்த்து விடுகிறார்கள். உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியல் கட்டமைப்புக்குள் நுழைவதற்கான ஒரு வாகனத்தை உருவாக்குவது தான் அவர்களது தந்திர வேலைகளின் நோக்கம். ஒரு சமயத்தில் பப்லோவாதக் குழுவாக இருந்த ஜனநாயக சோசலிச முன்னோக்குக் கட்சி (முன்னதாக சோசலிச தொழிலாளர் கட்சி, பின் ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி) இந்த அமைப்புகளுக்கெல்லாம் பொதுவாக இருக்கும் மனோநிலை குறித்து தெளிவாய் பேசுகிறது. பிரான்சில் 2009 பிப்ரவரியில் ஸ்தாபகமான புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் (NPA) வழியில், தன்னை சோசலிஸ்ட் கூட்டணிக்குள் கலைத்துக் கொள்ள முடிவு செய்த நிலையில், தான் இனியும் "மார்க்சிச" அடையாள அரசியலால் "காலக்கிரமப்படி சூழப்பட்டதாய்" இருக்கவில்லை என அறிவித்தது, மார்க்சிசத்திற்கான எந்த அடையாளத்தையும் தூக்கியெறிவதன் மூலம் புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு எதிரான சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் பயன்பாடு குறித்த பழைய விவாதத்தை அவசியமில்லாமல் செய்து கொள்ள அதனால் முடியும். ஜனநாயக சோசலிச கட்சியின் (DSP) பரிணாம வளர்ச்சியானது பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நா.அ.அ.கு மேற்கொண்ட நெடிய போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்கள் மீது தாக்குதல் தொடுத்த திருத்தல்வாதம் ஏகாதிபத்தியத்தின் ஆழமான நலன்களை பிரதிபலித்தது என்கிற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மதிப்பீட்டையும் நிரூபணம் செய்திருக்கிறது.

307. தனது அரசியல் அபிவிருத்தி மீது இத்தகைய பெரும் சேதத்தை உருவாக்கும் பாதிப்பைக் கொண்டிருந்த பிற்போக்குவாத, தேசியவாத கருத்தியலை வெல்வதற்கு ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு புற நிலைமைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில், மிகவும் வர்க்க நனவுள்ள தொழிலாளர்களில் பலருக்கும் கூட, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் நோக்குநிலை உலக பொருளாதாரம் மற்றும் உலக அரசியலால் தீர்மானிக்கப்படத் தக்கதாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. இன்றோ, பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய ஒருங்குபட்டதாக அமைந்து, அது நூற்றாண்டின் முக்கால் பகுதி காலத்தின் மிகப்பெரிய நிதி முறிவில் முடிந்திருப்பதும், இரண்டாம் பெருமந்த நிலை மற்றும் மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தல் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதும், தேசிய நிலைமைகளை காட்டிலும் உலக பொருளாதாரத்தின் மேலாதிக்கம் தான் வாழ்க்கையின் அப்பட்டமான உண்மையாக இருக்கிறது.

308. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தியின் தர்க்கவியல் நிதர்சனமாக பகிரங்கமான வர்க்க மோதலை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், புற நிலைமைகளின் முதிர்ச்சிக்கும் தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் அரசியல் நனவின் தற்போதைய மட்டத்திற்கும் ஒரு பரந்த இடைவெளி இருந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மார்க்சிச, அதாவது விஞ்ஞான சோசலிச, நனவை அபிவிருத்தி செய்வதற்கான பொறுமையான அதே சமயத்தில் தளர்ச்சியற்ற போராட்டத்தினை புரட்சிகர கட்சி நடத்தியாக வேண்டியிருக்கிறது. இந்த வழியில் மட்டும் தான், முதலாளித்துவ ஒழுங்கின் அத்தனை தூண்களான தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பசுமைக் கட்சியினர் மற்றும் பல்வேறு குட்டி முதலாளித்துவ போக்குகளின் ஆதிக்கம் வெல்லப்பட முடியும். உடனடி அரசியல் சூழ்நிலையின் ஏற்ற இறக்கங்கள் என்னவாக இருந்தாலும் சரி, அவை அபிவிருத்தியின் புறநிலையான, வரலாற்று ரீதியான போக்குகளின் நனவான வெளிப்பாடே என்பதைப் புரிந்து கொள்வது இந்த போராட்டத்திற்கு கணக்கிலடங்கா வலுவைக் கொடுக்கும்.

309. வர்க்க போராட்டத்தின் அனைத்து வழிமுறைகளையும் வளர்த்தெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி முனையும் என்பதோடு தொழிலாள வர்க்கம் தனது நலன்களை முன்னெடுப்பதற்கு கருவியாய் செயல்படத்தக்க புதிய சுயாதீனமான அமைப்புகளை அபிவிருத்தி செய்வதையும் ஊக்குவிக்கும். ஆனால் அதன் அடிப்படைப் பாத்திரம் தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் புரட்சிகரக் கடமைகள் குறித்த ஒரு புரிதலை கொண்டு வருவதாகும். வரலாறு ஒரு தீர்மானமான திருப்பு முனையை எட்டியிருக்கிறது. வெகுஜன மக்களின் நேரடியான தலையீடு மட்டுமே, தற்போதைய பிற்போக்குவாத நாற்றமெடுக்கும் சமூக ஒழுங்கினை, அது மனித குலத்தை பெருந்துயரில் தள்ளும் முன்னதாக, துடைத்துத் தூக்கியெறிய முடியும். இங்கு தான் புரட்சிகரக் கட்சியின் முக்கியத்துவம் அமைந்திருக்கிறது: இதனைக் கருவியாய் கொண்டு தான் தொழிலாள வர்க்கம் தனது வரலாற்று மற்றும் சர்வதேசிய புரட்சிகர பாத்திரம் குறித்து நனவு கொண்டதாய் ஆகிறது. அதன்மூலம் தனது சகாப்த கடமையான உலக சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு ஆயுதபாணியாகிறது. தீவிரமான புரட்சிகர கொந்தளிப்புகளுக்கு தேவையான புறநிலை முன்னவசியங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புரட்சிக்கு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ளடங்கியுள்ள மாபெரும் கோட்பாடுகள் மற்றும் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையிலும் நனவிலும் ஒரு மாற்றம் அவசியமாய் இருக்கிறது.

நிறைவுற்றது.

அடிக்குறிப்புகள்

104. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள், பக் 154-155.

105. டேவிட் நோர்த், 'படுகொலைக்கு பின்னர்: பால்கன் போரின் அரசியல் படிப்பினைகள்', உலக சோசலிச வலைத் தளம், ஜூன் 14, 1999. பார்வையிடப்பட்டது பிப்ரவரி 17, 2010.

106. 'அதிகமாய் செலவிடுவதில் அர்த்தம் உள்ளது', ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூ, செப்டம்பர் 15, 1999.