சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

3-The Communist Party of Australia

ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி

Use this version to print 

53. 1919ம் ஆண்டில் மூன்றாம் (கம்யூனிச) அகிலம் ஸ்தாபகம் செய்யப்பட்டதற்கு பிரதிபலிப்பாக, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் இருந்த தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபிக்க தொடங்கினர். அக்டோபர் 30, 1920ல் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியை (CPA) ஸ்தாபிப்பதில் ஆஸ்திரேலிய சோசலிஸ்ட் கட்சி, IWW உறுப்பினர்கள், சமீபத்திய தொழிற்துறை வளர்ச்சி சமயத்தில் NSW இன் தலைமைப் பொறுப்புகளுக்கு வந்திருந்த போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு குழு ஆகிய மூன்று போக்குகள் ஒன்றுசேர்ந்தன.

54. இக் கட்சி ஸ்தாபகம் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தில் முக்கியமானதொரு முன்நோக்கிய அடியை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டும்தான். தேசியவாத சூழலின் அழுத்தங்கள் தங்களை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்துடன், ஆதிக்கம் செலுத்திய தொழிற்சங்கவாத மற்றும் அமைப்புரீதியான கருத்தாங்களில் இவை பிரதிபலித்தன. 1916-1920களின் தொழிலாள வர்க்க எழுச்சி நிலைமைகளில், கட்சி கட்டுவது என்பது, தேசிய சந்தர்ப்பவாதத்தின் நிலவும் வடிவங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் வழியாக தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வது மற்றும் அரசியல் ரீதியாக ஆஸ்திரேலிய தொழிற்கட்சி மற்றும் தொழிலாளர் வாதத்தை அம்பலப்படுத்துவது ஆகியவற்றைக் காட்டிலும், நடப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் தலைமையைக் கைப்பற்றுவதான வழியில் சிந்திக்கப்பட்டது. டிசம்பர் 24, 1920 இல் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கான செயல்திட்ட அறிக்கை சோசலிசப் புரட்சியை ஏறக்குறைய முழுமையாய் அமைப்புரீதியான வகையில் சிந்தித்தது. வெகுஜனங்களை அடக்கிவைத்த அமைப்பு வடிவங்களின் வழியாக முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தை பிடித்திருந்தது, இதனால் தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியை நடத்தும் அளவுக்கு இன்னும் கூடுதலான அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலை, மில் மற்றும் பட்டறையிலும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதாக அறிவித்தது, இதன்மூலம், ஒவ்வொரு தொழிற்சாலை பிரச்சினை மற்றும் தொழிலாளர்களின் சிக்கல்களையும் "சோசலிசப் புரட்சி என்னும் ஒரே முடிவை மனதில் கொண்டும், அந்த ஒரே முடிவுக்கு தொழிலாளர்களின் ஒவ்வொரு தன்னியல்பான நடவடிக்கையை பயன்படுத்த முயலும் வகையிலும்" கொண்டு செலுத்தவும் கட்டுப்படுத்தவுமான ஒரு நிலை அதற்குக் கிடைக்கும். நடப்பு கைத்தொழில் சங்கங்களை "இன்னும் சமீபத்திய முன்னேற்றங்களுடனான திறம் படைத்த தொழிற்சாலை சங்கங்களை"க் கொண்டு இடம்பெயர்க்கவும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்தது, அது சோசலிச புரட்சிகர வெகுஜன நடவடிக்கைக்கு "கூடுதல் அனுகூலமுற்றதாய் இருக்கும்".[21]

55. ஆரம்ப கால ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாய் தான் இருந்தது என்றாலும், ஆழமான முதலாளித்துவ நலன்களை பிரதிபலித்துக் கொண்டிருந்த தொழிற்கட்சி அது முன்வைத்த அச்சுறுத்தலின் சாத்தியப்பாடுகள் குறித்து கூர்மையாய் உணர்ந்திருந்தது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் புரட்சிகர உணர்வுகள் பெருகி வந்ததை அடுத்து, தாங்கள் ஒரு சோசலிச இலட்சியத்தை கையிலெடுக்காவிட்டால் தமது கட்சி உடைந்து போய் விடும் என்று தொழிற் கட்சித் தலைவர்கள் அஞ்சினர். தொழிற் கட்சியின் தேசிய நிர்வாகியின் முன்முயற்சியின் மூலம் ஜூன் 1921ல் கூட்டப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஒரு தேசிய மாநாடு, "தொழிற்துறை, உற்பத்தி, விநியோகம் மற்றும் பரிவர்த்தனை ஆகியவற்றின் சமூகமயமாக்கம் தான் தொழிற்கட்சியின் இலட்சியம்" என்று தீர்மானமிட்டது. அக்டோபரில் நடந்த ஒரு தேசிய ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு புதிய இலட்சியத்தை ஏற்றுக் கொண்டது, ஆனால் அதற்குப் பின் அதை புதைகுழிக்குள் தள்ளி விட்டது. தொழிற் கட்சி தலைமையை பொறுத்தவரை, இக்கொள்கையின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவது அல்ல மாறாக அப்படியொரு நிகழ்வை எப்பாடுபட்டேனும் தடுப்பது தான். விக்டோரியப் பிரதிநிதியும் எதிர்கால தொழிற் கட்சியின் பிரதமருமான ஜேம்ஸ் ஸ்கலின் வார்த்தைகளில் கூறுவதானால்: "உலகமெங்கிலும் முதலாளித்துவ அமைப்பு நொருங்கிக் கொண்டிருக்கிறது. ஏதாவது செய்யப்படாவிட்டால், குழப்பம் உச்சத்தை எட்டும், அது வலுக்கட்டாயமாய் புரட்சியை கொண்டுவந்து விடும், அதனையே நாம் தவிர்க்க முயல்கிறோம்". சோசலிச இலட்சியம் கட்சியின் உண்மையான போராட்ட தளமாக இருக்கக் கூடாது, ஆனால் அது வெறுமனே ஒரு "இலட்சியமாக"த் திகழும். 1905ம் ஆண்டின் இனவாத இலட்சியம் தான் போராட்ட தளமாகத் தொடரும்.[22]

56. தனது முதல் இரண்டு வருட இருப்பின் சமயத்தில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு போட்டிக் கன்னைகளாய் பிளவுபட்டிருந்தது, இரண்டுமே கம்யூனிச அகிலத்திடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்த்தன. "வேலைத்திட்டம், கொள்கை அல்லது தந்திரோபாயத்தில்" இரண்டு குழுக்கள் இடையேயும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால் அவை ஒன்றுபட வேண்டும் என்று 1921ம் ஆண்டில் கம்யூனிச அகிலத்தில் இருந்தான தீர்மானம் தெரிவித்ததை அடுத்து, ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கம்யூனிச அகிலத்தின் ஆஸ்திரேலிய பிரிவாக ஆகஸ்ட் 1922ல் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கப் பெற்றது.

57. நவம்பர் 1922 இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் நான்காவது காங்கிரசு, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்குநிலை மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தில் அதன் போராட்டத்திற்காக அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்சினைகளை விவாதித்தது: பசிபிக் பிராந்தியத்தின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியம் மற்றும் தொழிற் கட்சியை அம்பலப்படுத்தி வர்க்க-நனவுள்ள தொழிலாளர்களை அதில் இருந்து வென்றெடுக்கக் கூடிய தந்திரோபாயத்தை அபிவிருத்தி செய்வது.

58. பசிபிக் பிராந்தியத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை விவாதித்த காங்கிரசுத் தீர்மானம் ஒன்று ஏகாதிபத்தியத்திற்குள் போட்டி பொறாமைகள் பெருகிவருவதையும், "சர்வதேசப் புரட்சியால் முன்கூட்டி தடுத்து நிறுத்தப்படாவிட்டால், இந்த முறை பசிபிக்கில்" ஒரு புதிய உலகப் போருக்கான அபாயம் தோன்றியிருப்பதையும் சுட்டிக் காட்டியது. இந்த போர் 1914-1918 போரை விடவும் கூடுதல் பேரழிவு தரத்தக்கதாய் இருக்கும் என்று அது எச்சரித்தது. "வரவிருக்கும் அபாயத்தை மனதில் நிறுத்தி", அந்த தீர்மானம் தொடர்ந்தது, "ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா கம்யூனிஸ்ட் கட்சிகள் வெறுமனே போருக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டும் செய்துகொண்டிருக்கக் கூடாது, மாறாக தொழிலாளர் இயக்கத்தை தமது நாடுகளில் சிதறடிப்பதற்கு தேசியவாத மற்றும் இனவாத குரோதங்களை சுரண்டுவதற்கு முதலாளித்துவத்திற்கு ஏதுவாக்கக் கூடிய காரணிகளை அகற்றுவதற்கு தம்மால் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும். குடியேற்ற பிரச்சினை மற்றும் மலிவுழைப்பு நிறத் தொழிலாளர் பிரச்சினை ஆகியவை இந்தக் காரணிகள். பசிபிக்கின் தெற்கு பகுதியில் சர்க்கரை ஆலைகளில் பணியாற்ற சீனா மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் நிறத் தொழிலாளர்களில் அநேகமானோர் இன்னமும் கால ஒப்பந்த தொழிலாளர் பணியமர்த்த முறையில் தான் கூலிக்கு அமர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மையானது ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்கள், குடியேற்றம் மற்றும் நிற தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்தக் கோருவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு நாடுகளிலும் இது நிகழ்கிறது. இந்த கட்டுப்பாட்டு சட்டங்கள் நிற மற்றும் வெள்ளைத் தொழிலாளர்கள் இடையே குரோதத்தை ஆழப்படுத்துவதோடு, தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கியத்தையும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்துகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டும், அத்துடன் தங்களது நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினரிடம், இத்தகைய சட்டங்கள் இனவாத வஞ்சத்தைப் பற்றவைத்து தொலைநோக்கில் அவர்கள் மீதே திரும்பிப் பாயும் என்பதை விளக்க வேண்டும். மலிவுழைப்பு நிறத் தொழிலாளர்களை இலவசமாக இறக்குமதி செய்வது, அதன் மூலம் வெள்ளைத் தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைப்பது ஆகிய தங்களது நலன்களின் அடிப்படையில் முதலாளிகள் இந்த கட்டுப்பாட்டுச் சட்டங்களை எதிர்க்கின்றனர். தாக்குதல் நடத்தும் முதலாளித்துவ நோக்கம் உரிய முறையில் கையாளப்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி தான் உள்ளது - குடியேற்ற தொழிலாளர்கள் இங்கிருக்கும் வெள்ளை தொழிலாளர் தொழிற்சங்கங்களில் இணைய வேண்டும். அதே சமயத்தில், நிறத் தொழிலாளர்களின் ஊதியம் வெள்ளைத் தொழிலாளர்களின் ஊதிய அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இத்தகையதொரு நடவடிக்கை முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதோடு சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கு எந்த இன பேதமும் இல்லை என்பதை நிறத் தொழிலாளர்களுக்கு வரைபடரீதியாக விளங்கப்படுத்துவதாகவும் அமையும்." புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதும், "பசிபிக்கில் அனைத்து இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான ஐக்கியப்பாட்டை ஏற்படுத்துவதற்கான" சிறந்த அமைப்புரீதியான வழிமுறைகளை சிந்திப்பதும் அவசியமாகும் என்றும் அந்த தீர்மானம் தொடர்ந்து கூறியது.[23]

59. முன்னதாக, ஜூன் 1921 இல், போருக்குப் பிந்தைய உடனடியான புரட்சிகர எழுச்சி தணிந்திருந்ததையடுத்து, கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரசு "ஐக்கிய முன்னணி" என்னும் தந்திரோபாயத்தை முன்னெடுத்திருந்தது. தங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்தவும் தொழிலாளர்களை ஒரு புரட்சிகர முன்னோக்கிற்கு வென்றெடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் செயல்பாட்டில் சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் ஒரு இணைந்த போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைக்கும். ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் என்பது சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் பாத்திரத்தை அம்பலப்படுத்தி அவர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டது என லெனினும் ட்ரொட்ஸ்கியும் விளக்கினர். இந்த தந்திரோபாயம் நான்காவது காங்கிரசில் இன்னும் அபிவிருத்தி செய்யப்பட்டது, அதில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரத்தியேகமான சூழ்நிலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, இங்கு தொழிற் கட்சிகள் மற்ற அமைப்புகளை தங்களுடன் இணைந்து கொள்ள அனுமதித்தன. இவற்றின் விடயங்களில், ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் எந்த வகையில் செயல்படுத்தப்பட முடியும் என்பதை கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு (ECCI) விவரித்தது: "ஆஸ்திரேலிய தொழிற் கட்சி தனது பிரிட்டிஷ் சகாவை விடவும் இன்னும் வெளிப்படையாக சம அளவுக்கு குட்டி-முதலாளித்துவ, சீர்திருத்தவாத தலைவர்களின் ஒரு குழுவுடன் ஒரு தொழிற்சங்க கட்சியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாதும், வெகுஜனங்களும் பாரியளவில் தொழிற்கட்சியுடன் தான் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படியானால், உழைக்கும் வெகுஜனங்கள் கம்யூனிசத்திற்கு வென்றெடுக்கப்பட வேண்டுமானால், இந்த வெகுஜனக் கட்சிக்குள் நாம் வேலை செய்தாக வேண்டும் என்று அர்த்தமாகுமா? கம்யூனிச அகிலம் இந்த பிரச்சினைக்கு ஆம் என்பதாய் பதிலளிக்கிறது. தொழிற் கட்சி இணைவது கம்யூனிஸ்ட் கட்சியின் அபிவிருத்திக்கு பரந்த முன்னோக்குகளை திறந்து விடுகிறது, அத்துடன் தொழிற் கட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் அனுதாபிகளுக்கு தங்களது புரட்சிகர விருப்பங்களுக்கு நடைமுறை பயன்பாட்டைக் கண்டறிவதற்கான சாத்தியத்தையும் வழங்குகிறது. தொழிற் கட்சியின் சந்தர்ப்பவாத தலைவர்களின் முகமூடிகளை அவர்களை பின்பற்றும் வெகுஜனங்களின் முன்பாக சிறந்த மற்றும் நேரடியான வழியில் கிழிப்பதற்கும், இத்தகைய தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளுக்காக ஒருபோதும் போராட மாட்டார்கள் என்பதை தொழிற் கட்சியின் சாமானிய உறுப்பினர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குமான வாய்ப்பையும் இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதலாய் வழங்குகிறது. இன்னொரு பக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வர்க்கப் போராட்டத்தின் முன்நோக்கி-செலுத்தும் ஒரே அங்கம் என்பது மட்டுமல்ல, வெகுஜனங்களின் அனைத்து போராட்டங்களிலும் கைகொடுக்கின்ற, அவர்களின் எல்லா துன்பங்களிலும் துயரங்களிலும் தயக்கமின்றி பங்கெடுக்கின்ற ஒரே கட்சியும் அது தான் என்பதில் வெகுஜனங்களும் தங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும். இந்த வகையில் மட்டும் தான் தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும், சந்தர்ப்பவாத தலைவர்களை தனிமைப்படுத்தி அவர்களை வெகுஜனங்களில் இருந்து பிரித்தெடுப்பதும் சாத்தியமாகும்." அதே சமயத்தில் கடிதம் வலியுறுத்தியது: "ஐக்கிய முன்னணி என்பது சமரச ஒப்பந்தம் அல்ல. பாட்டாளி வர்க்க போராட்டத்தில் அது வெறுமனே ஒரு யுக்தி தான். அது தன்னளவில் ஒரு முடிவு அல்ல, மாறாக வெகுஜனங்களை புரட்சிகரமாக்கும் நிகழ்முறையை முடுக்கி விடுவதற்கான ஒரு கருவியாகும்." [24]

60. கம்யூனிச அகிலம் மற்றும் அதன் பிரிவுகள் எதிர்கொள்ளும் கடமைகள் குறித்த பகிரங்க விவாதம் நடைபெற முடிந்த கடைசி காங்கிரசு நான்காம் காங்கிரசு தான். அக்டோபர் 1923 இல், ஜேர்மன் புரட்சி தோற்கடிக்கப்பட்டதானது ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய புரட்சிகர எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது, இது சோவியத் ஒன்றியம் மற்றும் சோவிய யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஜோசப் ஸ்ராலின் தலைமையின் கீழ் பழமைவாத மற்றும் தேசியவாத போக்குகள் உடனடியாக வலிமைப்படுத்தப்பட இட்டுச் சென்றது. ஸ்ராலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட தாக்குதலில் இது வெளிப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதல் அக்டோபர் புரட்சியில் வடிவம் பெற்றிருந்த சர்வதேசியவாதத்திற்கு அரசியல்ரீதியாய் குரோதமுற்ற ஒரு உதயமாகும் அதிகாரத்துவத்தின் அரசியல் கண்ணோட்டத்தை பிரதிபலித்தது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு பெருகியமுறையில் அதிகாரத்துவமயமாவதற்கு எதிராய் உள்கட்சி ஜனநாயகத்திற்காக போராடுவதற்கும், சோவியத் ஒன்றியத்திலும் கம்யூனிச அகிலத்திலும் ஸ்ராலினின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கைகளை மாற்றவும் ட்ரொட்ஸ்கியும் அவருக்கு பின்நின்றவர்களும் இடது எதிர்ப்பாளர்கள் அணியை உருவாக்கினர். கம்யூனிச அகிலத்துக்குள்ளான விவாதம் அடக்கி வைக்கப்பட்டது; ஒவ்வொரு பிரச்சினையும் பெருகிய முறையில் "ட்ரொட்ஸ்கிசவாதத்திற்கு" எதிரான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கப்பட்டது.

61. ஜேர்மன் புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின் குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கு, அங்கும் சர்வதேசரீதியாகவும், சூழ்நிலை குறித்த தவறானதொரு முன்னோக்கினை கம்யூனிச அகிலம் பராமரித்து வந்தது, புரட்சிகர போராட்டங்கள் இன்னும் வரவிருப்பதாக அது வலியுறுத்தி வந்தது. உண்மையில், ஜேர்மன் புரட்சியின் தோல்வி ஒப்பீட்டளவில் முதலாளித்துவம் ஸ்திரமுறுவதற்கான ஒரு காலகட்டத்தை அழைத்து வந்திருந்தது. ஆனால் இதை ஒப்புக்கொள்வதென்றால், அது 1923ல், குறிப்பாக அக்டோபரின் அதிமுக்கிய நாட்களில், கம்யூனிச அகிலம் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டினது தலைமைகளின் பாத்திரத்தையும் முழுமையாய் ஆய்வுக்குட்படுத்துவதாகி விடும். அதற்குப் பதிலாய், 1924ம் ஆண்டில், ட்ரொட்ஸ்கியின் அக்டோபரின் படிப்பினைகள் வெளியானதற்காக அவர் மீது ஒரு கடுமையான தாக்குதலை ஸ்ராலினிஸ்டுகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர், இப்புத்தகம் ரஷ்ய புரட்சி மற்றும் ஜேர்மன் படுதோல்வி இரண்டின் அனுபவங்களையும் விமர்சனரீதியான பார்வையில் திறனாய்வு செய்தது.

62. சோவியத் ஒன்றியத்துக்குள்ளான அரசியல் சீரழிவு என்பது, இறுதிப் பகுப்பாய்வில், உலக ஏகாதிபத்தியத்தால் இளம் தொழிலாளர் அரசின் மீது செலுத்தப்பட்ட அழுத்தங்களின் - எல்லாவற்றுக்கும் மேலாய் ஜேர்மனியில் தோல்வி மற்றும் ஐரோப்பாவில் பிற புரட்சிகரப் போராட்டங்களின் தோல்வியால் அதன் தனிமைப்படுத்தப்படல் - ஒரு விளைபொருள் ஆகும். வளர்ந்து கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவ சாதியின் தாக்கமானது கம்யூனிச அகிலத்திற்கும், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட உலகெங்கிலுமான இளம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பேரழிவுதருவதாய் அமைந்தது. அவர்கள் இப்போது உலக சூழ்நிலை குறித்த ஒரு சரியான புரிதலின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு மார்க்சிச காரியாளருக்கு பயிற்சியளித்து கற்பிப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகும் முன்னரே அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

63. ஆஸ்திரேலியாவில், சர்வதேச சூழ்நிலையிலான மாற்றத்திற்கு - போருக்குப் பிந்தைய எழுச்சி தணிந்தது - ஆஸ்திரேலிய தொழிற் கட்சி வலதுநோக்கிய ஒரு கூரிய திருப்பம் மூலம் பதிலிறுப்பு செய்தது. ஐக்கிய முன்னணி உபாய முன்முயற்சியை செயல்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜாக் கார்டனின் தலைமையின் கீழ், NSW தொழிற் கட்சியுடன் அதன் 1923 மாநில மாநாட்டில் கூட்டிணைந்து கொண்டது. அதே வருடத்தின் பிற்பகுதியில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான சங்கத்தின் ஆதரவை இழந்தது, வலது-சாரி தொழிற்கட்சியின் நாடாளுமன்ற தலைமை தாக்குவதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை மாநில நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேற்றியது. 1924ம் ஆண்டின் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி மாநில மாநாடு நாடாளுமன்ற தலைமைக்கு ஆதரவளித்தது, அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி கிளைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த அனுபவத்தில் இருந்து ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எந்த பலன்களையும் பெறவில்லை. இதற்குக் காரணம் அதன் தலைமையானது கூட்டிணைப்பை ஒரு அமைப்பு ரீதியான யுக்தியாகக் கருதியதே அன்றி தொழிற் கட்சி தலைமையின் வர்க்க தன்மை குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு கற்பிப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. போருக்கு பிந்தைய அரசியல்-மறுஸ்திரப்படல் அங்கத்துவர்களின் எண்ணிக்கையில் ஒரு சரிவுக்கு இட்டுச் சென்றது, அத்துடன் கம்யூனிச அகிலத்துடனான தொடர்புகளும் எப்போதாவது நிகழும் ஒன்றாய் ஆயின. 1924ம் ஆண்டின் கம்யூனிச அகிலத்தின் ஐந்தாவது காங்கிரசில் எந்த ஆஸ்திரேலிய பிரதிநிதியும் பங்கேற்கவில்லை, 1925ல் கட்சியின் கையிருப்புகள் தொடர்ந்து வீழ்ச்சியுற்றன. 1925ம் ஆண்டின் NSW மாநிலத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த பத்திரிகையின் ஆசிரியர் கட்சியை கலைப்பதற்கு முன்மொழிந்தார். டிசம்பர் 1926 இல், அதன் மிக முக்கிய தலைவரான ஜாக் கார்டன், அவர் இனியும் ஒரு உறுப்பினராக இருக்கவில்லை என்று கூறிய ஒரு செய்தித்தாளின் கூற்றை மறுப்பதற்கு மறுத்ததை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கார்டன் தொழிற் கட்சியில் இணைந்து விட்டார், அங்கு அவர் அதன் வலது-சாரித் தலைவரான ஜாக் லாங்கின் வலக்கரமாய் ஆகிவிட்டார். 1926ம் ஆண்டின் இறுதியில், ஸ்தாபிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஏறக்குறைய எவரும் இல்லாது போன்றதொரு நிலை வந்திருந்தது.

64. ஏப்ரல் 1926ல், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆபத்தான நிலை கம்யூனிச அகிலத்தில் விவாதப் பொருளாய் வந்தது. ஆஸ்திரேலிய சூழ்நிலை மீதான அறிக்கை கட்சி எதிர்கொண்ட சில சிக்கல்களை சுட்டிக்காட்டியது. ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம் "மற்ற கண்டங்களின் பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து ஏறக்குறைய முழுமையாய் துண்டிக்கப்பட்டிருந்தது", இந்த தனிமைப்படுத்தல் தொழிற் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த "குட்டி-முதலாளித்துவ சிந்தனையுடைய, சிறுகைத்தொழில் நோக்குடைய பிரிவுகளின்" பிடியை பராமரிக்க உதவியது என்பதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது. "'வெள்ளை ஆஸ்திரேலியா சுலோகம், தொழிலாளர் இயக்கத்தில் தேசியவாத சித்தாந்தத்தில் மூழ்கிய, மற்றும் நிறத் தொழிலாளர்களிடம் இருந்தும் பொதுவாக வெளிநாட்டு பாட்டாளி வர்க்கத்திடம் இருந்தும் பிரபுத்துவ கர்வத்துடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முற்படுகின்ற அனைத்து பிற்போக்குவாத கூறுகளினது அணிவகுக்கும் கூச்சலாய் சேவை செய்கிறது" என்றும் அது தொடர்ந்து தெரிவித்தது. தொழிற் கட்சியும் தேசியவாத கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் வெள்ளை ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கையிலெடுத்தன, அதனை சிறந்த வகையில் பாதுகாக்கப் போவது யார் என்பதை ஸ்தாபிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டன. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படியாக இனவாதக் கொள்கையை எதிர்த்தது என்றாலும், ஒரு தெளிவான வித்தியாசப்படுத்தலை செய்ய அது தயங்கியது. "ஆஸ்திரேலியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் நிறத் தொழிலாளர்களை இறக்குமதி செய்வதை" அது கண்டனம் செய்தது, மலிவுழைப்பு தொழிலாளர்களால் ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு நேரும் அச்சுறுத்தல் "நிற வித்தியாசமற்றது" என்று கூறி அதற்கு ஒரு மேலதிக தகுதியும் சேர்த்துக் கொண்டது.[25]

65. கம்யூனிச அகிலத்தின் ஆறாவது காங்கிரசு "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான பரப்புரையை புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றது, ஒன்பது வருடங்களுக்கு முன் மூன்றாம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு அடித்தளமாய் அமைந்திருந்த சர்வதேசியவாத முன்னோக்கினை வெளிப்படையாய் மறுதலித்தது. முதன்முறையாய் 1924ல் முன்னெடுக்கப்பட்டிருந்த "தனியொரு நாட்டில் சோசலிசம்" எனும் ஸ்ராலினிச தத்துவம் இப்போது உத்தியோகபூர்வ கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிப்ரவரி 1928ல், "மூன்றாவது காலகட்டம்" ஒன்று திறந்திருப்பதை கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக்குழு அறிவித்தது. முதலாவது 1917 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான முதலாளித்துவ நெருக்கடி, இரண்டாவது அதனைத் தொடர்ந்த தற்காலிக மறுஸ்திரமுறல். இப்போது, முதலாளித்துவத்தின் நெருக்கடி முன்னெப்போதையும் விட ஆழமுற்றுக் கொண்டே செல்கிற, வெகுஜனங்கள் தொடர்ந்து தீவிரமயப்படுகிற ஒரு மூன்றாவது காலகட்டம் தொடங்கியிருந்தது. சமூக ஜனநாயக மற்றும் தொழிற்கட்சிகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தை வென்றெடுப்பதுடன் தொடர்புபட்ட தந்திரோபாயம் மற்றும் மூலோபாயம் பற்றிய அத்தனை சிக்கல்களும், வெறுமனே, தீவிரப்பட்டதாய் ஒலிக்கும் சுலோகங்களை முழங்குவதை கொண்டு இடம்பெயர்க்கப்பட்டன. இந்தக் கொள்கையானது தொழிலாள வர்க்கத்தின் மீது இழைக்கப்பட்ட மிகப்பெரும் தோல்விக்கு, முக்கியமாக ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்ததற்கு நேரடியாய் அழைத்துச் செல்வதானது. ஆஸ்திரேலியாவில் இது, பெருமந்த நிலையால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த ஆழமுற்றுக் கொண்டிருந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சியிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கான போராட்டத்தை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக கைவிடுவதற்கு இட்டுச் சென்றது.

பெருமந்த நிலையும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் "மூன்றாம் காலகட்ட" நிலைப்பாடும்

66. அக்டோபர் 1929ல் நிகழ்ந்த வோல் ஸ்ட்ரீட் நிலைகுலைவு முதலாளித்துவத்தின் வரலாற்றில் மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்தைக் குறித்தது. மூன்று வருட இடைவெளிக்குள், உலக வர்த்தகமானது மூன்றில் இரண்டு பங்கு சரிந்து போனது, தொழில்துறை உற்பத்தி பாதியாய் சரிந்தது. மில்லியன்கணக்கானோர் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டனர் என்பதால் பாரிய வேலைவாய்ப்பின்மை ஒவ்வொரு பெரிய முதலாளித்துவ நாட்டையும் தாக்கியது, இரண்டு பெரும் தொழில்துறை பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் வேலையின்மை விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கு உயர்ந்தது. பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கமைப்பில் தனியார் இலாப அமைப்புத் தான் மிக உயர்ந்ததான, சொல்லப் போனால் ஒரே சாத்தியமான வடிவம் என தொடர்ந்து வாதாடி வரக் கூடிய அதன் பாதுகாவலர்கள் பரிந்துரைத்த அனைத்து மருந்துகளுக்கும் மிகச் சக்திவாய்ந்த மறுதலிப்பாக பெருமந்தம் இருந்தது, இன்னும் இருந்து வருகிறது. இந்த துன்பியலுக்கும் அது கொடுத்த பயங்கரங்களுக்கும் - பாசிசம், சமூகத் துயரங்கள் மற்றும் இறுதியாய் போர் - முதலாளித்துவம் தப்பிப் பிழைக்க முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச தலைமைகள் தொழிலாள வர்க்கத்திற்கு செய்த காட்டிக் கொடுப்புகள் தான்.

67. மந்தநிலையின் தோற்றமானது ஜேர்மனியில் செப்டம்பர் 1930 தேர்தல்களில் துரிதமான ஒரு அரசியல் பாதிப்பைக் கொண்டிருந்தது. பாராளுமன்றத்தில் (ரைய்க்ஸ்டாகில்) வெறும் 12 உறுப்பினர்களில் இருந்து நாஜி கட்சி இப்போது 100க்கும் அதிகமான உறுப்பினர்களை பெற்றது. சமூக ஜனநாயகவாதிகளை "சமூக பாசிஸ்டுகள்" என முத்திரை குத்திய கம்யூனிச அகிலத்தின் "மூன்றாம் காலகட்ட" நிலைப்பாட்டை எதிர்த்த ட்ரொட்ஸ்கி, நாஜி அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு ஐக்கிய முன்னணியை அபிவிருத்திசெய்ய அழைப்பு விடுத்தார். நாஜிக்களின் நோக்கம் ஒட்டுமொத்த தொழிலாளர் இயக்கத்தை நாசம் செய்வதாகும் என்று எச்சரித்த ட்ரொட்ஸ்கி, தேர்தலுக்கு பிந்தைய தனது முதல் அறிக்கையில் பின்வருமாறு எழுதினார்: "தற்காத்துக் கொள்ளும் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்றால் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரோடு நெருங்கிய தொடர்புள்ள கொள்கை வேண்டும் என்பதோடு பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக சமூக ஜனநாயக மற்றும் கட்சிசாரா தொழிலாளர்களுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். இந்த அச்சுறுத்தலை மறுப்பது, அதனை குறைமதிப்பீடு செய்வது, அதனை முக்கியமாய்க் கருதத் தவறுவது எல்லாம் ஜேர்மனியில் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிராக இன்று இழைக்கப்படும் மாபெரும் குற்றமாக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி எதனைப் பாதுகாக்கும்? வைய்மார் அரசியலமைப்பையா? இல்லை, அந்த வேலையை பிராண்ட்லரிடம் விட்டு விடுவோம். ஜேர்மன் அரசில் தொழிலாள வர்க்கம் சமாளித்து வென்றிருக்கக் கூடிய சடத்துவ மற்றும் அறநிலை நிலைகளைப் பாதுகாப்பதற்குத் தான் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விட வேண்டும். தொழிலாளர்களின் அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், செய்தித்தாள்கள், அச்சு ஆலைகள், கிளப்கள், நூலகங்கள், இன்ன பிறவற்றின் தலைவிதியில் இது மிக நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் தங்களது சமூக ஜனநாயகக் கட்சி சகாக்களிடம் கூற வேண்டியது இது தான்: நமது கட்சிகளின் கொள்கைகள் சமரசமற்ற வகையில் எதிரானவை; ஆனால் இன்றிரவு பாசிஸ்டுகள் உங்களது அமைப்பின் கூடத்தை நொருக்க வருகிறார்கள் என்றால், உங்களைக் காப்பாற்ற ஆயுதங்களை கையிலேந்தி நாங்கள் ஓடி வருவோம். எங்களது அமைப்பு அச்சுறுத்தப்பட்டால் நீங்களும் எங்களுக்கு உதவி செய்ய ஓடி வருவீர்கள் என்று எங்களுக்கு உறுதியளிப்பீர்களா?’ நடப்பு காலகட்டத்தில் நமது கொள்கையின் மிக அத்தியாவசியமான அம்சம் இது தான். அனைத்து பிரச்சாரங்களும் இந்த முக்கிய அம்சத்தின் மீது நிற்க வேண்டும்."[26]

68. மிகவும் இடதுசாரி வகையாக தீவிரவாத வகையாகத் தென்பட்ட ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் காலகட்ட நிலைப்பாடு உண்மையில் அதீத செயல்பாட்டின்மையின் ஒரு வடிவமாகும், "ஹிட்லருக்குப் பின்னர், எங்களது முறை" என்னும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் சுலோகத்தில் இது சுருங்க வெளிப்பட்டது. துரோகமிழைக்கும் சமூக ஜனநாயக தலைவர்களை அம்பலப்படுத்துவதற்கான போராட்டத்தை கைவிட்டு, அதில் இன்னும் இருந்த மில்லியன்கணக்கான தொழிலாளர்களை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை ஒரு அதிகாரத்துவ காலக்கெடுவைக் கொண்டு இடம்பெயர்த்தது. உலகில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த தொழிலாளர் இயக்கத்தை இது பிளவுபடுத்தி, ஜனவரி 1933ல் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர பாதையைத் திறந்து விட்டது.

69. ஆஸ்திரேலியாவில், மூன்றாம் காலகட்ட நிலைப்பாடானது, தொழிலாளர்களின் பரந்த தட்டினர் பெருகிய முறையில் போர்க்குணம் மிக்க போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதொரு சரியான தருணத்தில், தொழிற்கட்சியை அம்பலப்படுத்துவதற்கான எந்தவொரு போராட்டத்தில் இருந்தும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி பங்குபெறாது விலகிக் கொள்ள வழிவகுத்தது. 1929ல், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமேயில்லாததிருந்த நிலையில் இருந்து, வேலைநிறுத்த நடவடிக்கையானது பெரும் போருக்குப் பிந்தைய எழுச்சி ஆண்டான 1919ல் எட்டியிருந்த மட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டத்தை எட்டியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் அக்டோபர் 1929 தேசிய தேர்தல்களில் ஸ்கலின் தொழிற்கட்சி அரசாங்கம் மிகப்பெரும் வெற்றி பெற்றதில் அரசியல்ரீதியாக வெளிப்படுத்தப்பட்டது. பழமைவாத பிரதமர் ஸ்ரான்லி ப்ரூஸ் தனது தொகுதியை இழந்தார். ஆழமுறும் உலகளாவிய நெருக்கடி சூழல் ஒன்றில் தொழிற்கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதென்பது - முதலாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு பின் அதிகாரத்தை பிடித்த முதலாவது - தொழிற் கட்சியினரை அம்பலப்படுத்துவதற்கும் மிகவும் போர்க்குணம் மிக்க வர்க்க-நனவுடனான தொழிலாளர்களை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வென்றெடுப்பதற்கும் புதிய நிலைமைகளை உருவாக்கியது. தொழிற் கட்சியையும், அதனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை "சமூக பாசிஸ்டுகள்" என்று கண்டனம் செய்தது இத்தகையதொரு போராட்டத்தை முற்றிலும் கைவிடுவதைக் குறித்தது.

70. மூன்றாம் காலகட்ட நிலைப்பாடு ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு தலையீட்டின் வழியே கொண்டு வரப்பட்டிருந்தது. கட்சியின் மத்திய குழுவுக்கு, தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சியை ஆதரிக்கும் அதன் முடிவை விமர்சித்து, ஒரு பகிரங்க கடிதம் அனுப்பப்பட்டது. இந்த முடிவு, ஆஸ்திரேலிய முதலாளித்துவம் தீவிரமுறும் வர்க்க குரோதங்களால் அடையாளப்படும் "மூன்றாவது கட்டத்தை"க் கடந்து கொண்டிருந்தது என்பதை புரிந்து கொள்ள தவறியிருந்ததாய் அந்த கடிதம் கூறியது. "தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகமிழைக்கும் சமூக-பாசிச பாத்திரத்தை" இரக்கமின்றி கிழித்தெறிந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிஒரு புரட்சிகர கட்சியாக தனது பாத்திரத்தை பூர்த்தி செய்ய முடியும். ....."கட்சி தனது 1928 டிசம்பர் மாநாட்டில் கூட தொழிற் கட்சி குறித்த ஒரு முறையான அரசியல் மதிப்பீட்டை அளிக்க முடியவில்லை, அதன் அடிப்படையான சமூக-பாசிச குணம் குறித்து, நடப்பு சூழ்நிலையில் அதன் மூர்க்கமான எதிர்-புரட்சி பாத்திரம் குறித்து வரையறை செய்ய முடியவில்லை. கட்சியின் தேர்தலின் போதான தந்திரோபாயங்களை பார்த்தால் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி இன்னும் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு தான் உள்ளது என்பதான கருத்தை அது இன்னும் கொண்டிருப்பதாய் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அக்கட்சியின் கடந்த கால வரலாறு, அது அரசாங்கத்தில் பங்குபெற்ற போதும் சரி வெளியில் இருந்த போதும் சரி, ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் கருவியாகத் தான் இருந்துள்ளதை நிரூபிக்கிறது. ...ஆஸ்திரேலிய தொழிற் கட்சியைப் பொறுத்தவரை அது ஏற்கனவே முதலாளித்துவத்தின் பக்கம் சென்று விட்டது, எந்த வகையிலும் அதனை ஆதரிப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளை ஆதரிப்பதாகத் தான் பொருள். எனவே, சென்ற தேர்தல்களில் தொழிற் கட்சியை ஆதரிப்பதற்கு உங்களது மத்திய நிறைவேற்றுக் குழுவின் பெரும்பான்மையினர் செய்த முடிவானது பயங்கர வலது நோக்கிய விலக்கத்திற்கான அப்பட்டமானதொரு உதாரணமாகும், இது கடுமையான கண்டனத்திற்கு தகுதிப்பட்டது."[27]

71. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கொண்டிருந்த பிரச்சினை, ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் வேலைத்திட்டத்தின் முதலாளித்துவ குணாம்சத்தையோ அல்லது முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாப்பதில் தொழிற் கட்சி அரசாங்கங்களின் பாத்திரத்தையோ அது புரிந்து கொள்ளத் தவறியிருந்தது என்பதல்ல, மாறாக அதிலிருந்து தொழிலாள வர்க்கத்தை எப்படி பிரிப்பது என்பது தான். 15 வருடங்களுக்கும் அதிகமாக மத்திய ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அதிகாரத்தில் இருந்திருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரின் விசுவாசத்தை இது பெற்றிருந்தது, மிகவும் போர்க்குணம் மிக்க தட்டுகள் சிலவும் இதில் அடங்கும், அவர்கள் முதலாளித்துவத்தின் ஆழமுறும் தாக்குதலுக்கு எதிராக இது சோசலிச கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். NSW இல் 1920களின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சமூக சேவைகள் மூலம் லாங்கின் மாநில தொழிற்கட்சி அரசாங்கம் இந்த பிரமைகளை ஒட்டவைத்திருந்தது.

72. தொழிற் கட்சி குறித்த பிரமைகள், அது ஏதோ ஒரு வகையில் புதிய தலைமையின் ஊடாக ஒரு புரட்சிகர கட்சியாக உருமாற்றப்பட்டு விட முடியும் என்பது உள்பட, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்தன என்றால், கம்யூனிச அகிலத்தின் 1924ம் ஆண்டின் மாநாட்டை தொடர்ந்த அதன் கொள்கைகளால் அவை ஊக்கம் பெற்றதும் முக்கியமானதொரு காரணமாகும். அந்த காங்கிரசு செய்த பிழையான பகுப்பாய்வு - அதாவது 1923 ஜேர்மன் புரட்சி தோற்கடிக்கப்பட்டு விட்ட பின்னரும் ஒரு புதிய புரட்சிகர எழுச்சி உடனடியாய் வரவிருப்பதாகக் கருதியது - தொடர்ச்சியான தவறான மதிப்பீடுகளுக்கு இட்டுச் சென்றது. உலக நிலைமைகள் குறித்த தனது பகுப்பாய்வு உண்மை நிலைமைகளுக்கு முரண்பட்டதாய் அமைந்திருப்பதைக் கண்டதும், கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக்குழு, கற்பனையான காரணிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டியதானது, இல்லாத இடங்களில் எல்லாம் புரட்சிகர சக்திகளையும் அடையாளங்களையும் அது கண்டுபிடித்தது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். அமெரிக்காவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கான கம்யூனிச அகில பிரதிநிதியான ஜோன் பெப்பர் (இவரும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கான பொறுப்பாளர்களில் ஒருவர்) அமெரிக்க விவசாயி-தொழிலாளி கட்சி "முன்னெப்போதையும் விட தீவிரமுற்று" வருவதாகவும் கம்யூனிஸ்ட்டுகளை நெருங்கிக் கொண்டு இருக்கின்றனர் என்ற ஒரு கருத்தை பரப்புரை செய்தார். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டினார், பிரிட்டனில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனமானது அதனை "கூடுதல் வலுவானதொரு காரணியை"க் கொண்டு இடம்பெயர்க்கும் யோசனைக்கு வழிவகுத்தது, இது பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் போக்குகள் மீதான ஒரு தவறான மதிப்பீட்டிற்கும், புரட்சி தன் நுழைவாயிலை "பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் குறுகிய வழியே அல்லாமல் தொழிற்சங்கவாதத்தின் அகன்ற பாதைகள் வழியே" காண்பது என்கிற யோசனைக்கும் இட்டுச் சென்றது. பிரகடனப்படுத்தவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா விஷயத்திலும் இதே பொதுவான போக்கைத் தான் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கொண்டிருந்தது. அக்டோபர் 1927ல் விநியோகித்த தீர்மானத்தின் படி, தொழிற் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒரு பரப்புரை மேற்கொள்ளும் "கடமைப்பாடு" தங்களுக்கு இருப்பதாக அது வலியுறுத்தியது, அத்துடன் "தொழிற் கட்சியினர் என்கின்ற போர்வையில் இருந்து கொண்டு ஆஸ்திரேலிய முதலாளித்துவ நலன்களை சற்றேறக் குறைய திறம்பட பாதுகாக்கக் கற்றுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள், முன்னாள்-அமைச்சர்கள் மற்றும் அனைத்து பிற அதிகாரிகளையும் தொழிற்கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் தொழிலாளர்களின் பெரும்பிரிவுகளும் தொழிற்சங்கங்களின் முதலாவதும் முதன்மையானதுமான உறுப்பினர்களும் மேற்கொள்ளா விட்டால் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி என்று அழைக்கப்படுவதானது ஒரு தனித்துவமான தொழிற்கட்சியாகவே முடியாது" என்றும் அது கூறியது.[28]

73. ஒரு புதிய தலைமை மட்டும் நிறுவப்பட்டு விட்டால் தொழிற் கட்சியை எப்படியோ உருமாற்றி விடலாம் என்பதான ஒரு கருத்தை விளம்பரப்படுத்தி விட்டு, கம்யூனிச அகிலம் ஒரு தீவிர பல்டியடித்தது, ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் "சமூக பாசிசத்திற்கு" கடுமையான கண்டனங்களை அது கோரியது. ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்ததைப் போல: "யதார்த்தத்தில் தொழிலாளர்களை அவர்களது தலைவர்களிடம் இருந்து பிரித்தெடுப்பது எவ்வாறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ... இந்த கட்டம் தவிர்க்கப்பட முடியாது. இந்த புதிய புரட்சிகர சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கு வாழ்வா சாவா என்கிற விடயமாக இருக்கும் ஒரு சமயத்தில், செயல்பாட்டில் இருக்கும் சமூக ஜனநாயக தொழிலாளர்களுக்கு தங்களது அமைப்புகளின் மதிப்பினை பரிசோதனை செய்வதற்கு நாம் உதவ வேண்டும்." அத்தகையதொரு அணுகுமுறை இப்போது "சமூக பாசிஸ்டுகள்" மற்றும் முதலாளித்துவத்திற்கான ஆதரவு என்பதாய் கண்டனம் செய்யப்பட்டது.[29]

74. கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் (ECCI) பகிரங்கக் கடிதம் தொழிலாளர் வாராந்திரப் பத்திரிகை 1929, டிசம்பர் 26 பதிப்பில் வெளியானதை தொடர்ந்து, மாத இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிகாங்கிரசு, வெளியேறும் தலைமையை "துரோகம் மற்றும் திவால்நிலை" க்காக கண்டித்து "புதிய நிலைப்பாட்டுக்கு" தனது "மாறா விசுவாசத்தை" அறிவித்த ஒரு புதிய தலைமையை நிறுவியது. ஆயினும் கம்யூனிச அகிலம் முழுத் திருப்தியுறவில்லை, ஆஸ்திரேலிய கட்சியை ஒழுங்கமைக்க அமெரிக்காவில் இருந்து ஹாரி எம்.விக்ஸ் (ஹெர்பெர்ட் மூர் என அறியப்படுபவர்) மார்ச் 1930ல் அனுப்பி வைக்கப்பட்டார். FBI உளவாளியாகவும் முகவராகவும் வெகு காலம் இருந்து வந்திருந்த விக்ஸ் (இது பின்னாளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது) அடுத்த வருடத்தில் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார், அதன் வேலைத்திட்டம் மற்றும் அரசியலமைப்பை திருத்தி எழுதினார், தொடர்ச்சியான வெளியேற்றங்கள் மற்றும் பதவியிறக்கங்கள் மூலம் தலைமையை மறுஒழுங்கு செய்தார். ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் சர்வதேச நிகழ்முறை ஒன்றின் பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பாளர்களை அடக்கி லியோன் ட்ரொட்ஸ்கியை வெளியேற்றியிருந்த நிலையில், கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச தலைமையால் எந்த பிரிவிலும் ஒரு சுயாதீனமான தலைமையை சகித்துக் கொள்ள முடியவில்லை. ட்ரொட்ஸ்கி கூறியது போல: "சுயாதீனமான, தத்துவரீதியாய் உறுதியுற்ற, மற்றும் நெகிழ்வற்ற எந்த ஒன்றையும் இது அகற்றுகிறது, துடைத்தெறிகிறது, சிதைக்கிறது, காலின் கீழ் போட்டு நசுக்குகிறது. அதற்குத் தேவை இணக்கவாதிகள். அதிக சிக்கலின்றி அவர்களை அது கண்டறிகிறது, அவர்களை குழுவாக்குகிறது, அவர்களை ஆயுதபாணியாக்குகிறது." 1929ல் CPA இன் தலைமைக்குள் கொண்டு வரப்பட்ட குழுவாக்கமானது அடுத்த பல தசாப்தங்களுக்கு மாறாமல் தொடர்வதாய் ஆனது, ஸ்ராலினிச ஆட்சியால் உத்தரவிடப்படும் ஒவ்வொரு அதிகாரத்துவ யுக்தியையும் ஒவ்வொரு "புதிய நிலைப்பாட்டுக்குமான" ஒட்டுமொத்த விசுவாசத்தை அறிவித்தபடி பின்பற்றிக் கொண்டே அவை தொடர்ந்தன..[30]

75. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசமயமாக்கமும் "சமூக பாசிஸ்ட்" நிலைப்பாட்டை எடுத்ததும் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் முன்னெப்போதையும் விட ஆழ்ந்ததொரு பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கிய சமயத்தில் நடந்தது. இது கட்சியை தொழிலாள வர்க்கத்தில் உள்ள வெகுஜன இயக்கங்களில் இருந்து தனிமைப்படுத்தியதோடு தொழிற் கட்சியின் பொறுப்புகளில் இடது நோக்கிய நகர்வுகளில் இருந்து அதனைத் துண்டித்தது, குறிப்பாக NSW, ஆஸ்திரேலிய தொழிற் கட்சியில் "சமூகமயமாக்க பிரிவுகளை" ச் சுற்றி அமைந்த இயக்கம் மற்றும் மாநில தலைவர் ஜாக் லாங்கை நீக்கியதை தொடர்ந்து வந்த கிளர்ச்சி ஆகியவை.

76. உலகளாவிய மந்தம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை வெகுவிரைவில் பிடித்துக்கொண்டது. ஏற்றுமதி வருவாய் கால்பகுதி வீழ்ச்சியுற்றது, வெளிநாட்டு கடன்கள் வற்றிப்போயின, 1929ம் ஆண்டின் இறுதியில் 12 சதவீதத்தை எட்டியிருந்த வேலைவாய்ப்பின்மை 1931-32 இல் துரிதமாய் 30 சதவீதத்தை எட்டியது. முதலாம் உலகப் போர் காலம் போலவே, மத்திய தொழிற் கட்சி அரசாங்கம், வங்கிகள் மற்றும் நிதி மூலதனத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதன் மூலம் பதிலிறுப்பு செய்தது. மாநில அரசாங்கங்களுடன் சேர்ந்து கொண்டு, ஊதியங்கள் மற்றும் அரசாங்க செலவினத்தை வெட்டுவதற்கான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கோரிக்கைகளை அது ஏற்றுக் கொண்டது. அக்காலகட்டத்தில் நிலவிய வர்க்க மற்றும் அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பு குறித்து ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு முன்னணி நாடாளுமன்ற செய்தியறை செய்தியாளர் பதிவு செய்தார்: "ஸ்கலின் அரசாங்கத்தின் கதையின் பின்புலத்தில் ஆஸ்திரேலியாவின் படுமோசமான மந்த காலத்தின் படுமோசமான காலகட்டம் அமைந்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சலனமற்ற கான்பெராவின் அன்றாட வாழ்க்கை என்பது ஆபத்தானதாகவும் பெரு நகரங்களில் கலவரங்கள் குறித்த வதந்திகளால் நிரம்பியதாகவும் ஆன ஒரு காலகட்டம் அது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, மற்றும் துன்பத்தால் மனிதனின் பொறுமையின்மை கடும் உச்சத்திற்கு எழுப்பப்பட்டது. பல மாதங்களுக்கு, ஒவ்வொரு மணி நேரமும் கான்பெரா ஒரு பெரும் கிளர்ச்சிக்கான அலைகளின் அச்சுறுத்தலை கொண்டிருந்தது. ரோத்பரி சுரங்கத் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அவர்கள் இரக்கமற்ற தடியடிச் சட்டத்தால் தடுத்து நிறுத்தப்படும் வரை, ஆயுதமேந்திய தொழிற்சாலைப் போரின் விளிம்பில் அபாயநிலையில் அலைந்து கொண்டிருந்தனர். பசிவெறியில் இருந்த வேலைவாய்ப்பற்றோர், தங்களது இந்த நிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்களே காரணம் என்று கூறி அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கி பழிவாங்கும் வெறியுடன், கான்பெராவுக்கு பேரணி நடத்த அச்சுறுத்தினர். இராணுவப் படைகள் திறந்த வெளியில் அணிவகுப்பு நடத்தின, இரகசியமாய் கூடின. காற்றே ஒரு கனமான அச்சுறுத்தலுடன் தான் அலைந்தது. இன்று, இந்த விஷயங்கள் எல்லாம் மிகையுணர்ச்சி நாடகம் போல் உண்மையல்லாததாய் தோன்றுமளவுக்கு மனித மனம் வெகு பக்குவப்பட்டதாய் ஆகியிருக்கிறது. உண்மையில் அவையெல்லாம் பயங்கரமான யதார்த்தம் என்பதை மக்கள் நினைவு கூர்வது நன்று."[31]

77. தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கம் தொழிற் கட்சியில் பிரதிபலித்தது. ஏப்ரல் 1930ல், அப்போது அதிகாரத்தில் இல்லாமலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது பிடியைப் பராமரிக்கும் பதட்டத்துடனும் இருந்த NSW தொழிற் கட்சியின் லாங் தலைமை, "கட்சியின் முதலாவதும் முதன்மையானதுமான தளமான தொழில்துறையை சமூகமயமாக்குவது என்பதை பரப்புவதற்கு வழிகளையும் வகைகளையும் வகுப்பதற்கான" சமூகமயமாக்கல் பிரிவுகளை (Socialisation Units) அமைத்தது. உள்ளூர் கிளைகளுக்கு தீங்கிழைக்காத பிரச்சார துணைகளாகத் தான் சமூகமயமாக்கல் பிரிவுகளை லாங் தலைமை கருதியது. ஆனால் பெரும் தொழிலாள வர்க்க பகுதிகளில் அவை இணைப்பு கொண்டிருந்த கட்சி கிளையைக் காட்டிலும் பெரிதாய் வளர்ச்சியுற்றன, "நமது காலத்தில் சோசலிச" கோரிக்கைக்கு ஆதரவு வளர்ந்தது. இந்த இயக்கத்தின் உச்சத்தில், சிட்னியை சுற்றி 250 கிளைகளில் 178க்கு சமூகமயமாக்கல் பிரிவுகள் இணைக்கப்பட்டன, அத்துடன் அமைப்பின் செய்தித்தாளான சோசலிச அழைப்பு (Socialisation Call) சுமார் 40,000 பிரதிகள் விநியோகமானது.

78. அக்டோபர் 1930 NSW மாநிலத் தேர்தல்களில், மத்திய அரசாங்கத்தின் செலவின வெட்டுகளையும் வங்கிகளின் கோரிக்கைகளையும் கண்டித்தததை அடுத்து லாங் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரது முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகும் தீவிரமயமாக்கத்தைக் கட்டுப்படுத்துவதாய் இருந்தது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், தொழில்துறை மற்றும் வங்கிகளைக் கைப்பற்றுவதற்கும் சமூகமயமாக்க இயக்கத்தில் இருந்து எழுந்த அழைப்புகள் மீது தாக்குதல் தொடுத்த அவர் அறிவித்தார்: "புரட்சி வந்திருக்கிறது- இப்போது போராடப் பெற்று வருகின்றது, வருங்காலத்திலும் கொஞ்ச தூரம் இது தொடர்ந்து செல்லும். நமது வீதிகளில் தடைகள் எழுப்பப்படாமலேயே இது வந்திருக்கிறது, ஆனால் இப்பாதையில் தொழிலாளர் இயக்கம் எப்போதும் அது நாடாளுமன்ற சட்டம் வழியே வரும் என சொல்லி வந்திருக்கிறது."

79. லாங்கிற்கு மாபெரும் உதவி ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி மூலம் வழங்கப்பட்டது, சமூகமயமாக்கல் பிரிவுகளின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்களை "இடதுசாரி சமூக பாசிஸ்டுகள்" என்று அது கண்டனம் செய்ததோடு, பாசிச புதிய படையின் தாக்குதல்களில் இருந்து ஆஸ்திரேலிய தொழிற் கட்சி கூட்டங்களைப் பாதுகாக்க தொழிலாளர் படையின் உறுப்பினர்களும் உருவாக்கப்பட்டனர். தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைமையுடன் தொழிலாள வர்க்கம் தீவிர மோதலுக்கு வந்த அந்த சரியான தருணத்தில், அதனை அம்பலப்படுத்துவதற்கான எந்த போராட்டத்தையும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி கைவிட்டது. "தொழிற்சாலைப் போராட்டங்களில் அதிகாரிகளைப் போரிடச் செய்வோம் என்னும் சுலோகம் இப்போது பயனொழிந்து போய் விட்டது என்பதை நமது கட்சி சரியான வகையில் உணர்ந்திருக்கிறது" என்று தொழிலாளர் வாராந்திர இதழ் நவம்பர் 1930ல் அறிவித்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சமூகமயமாக்கல் பிரிவுகளில் செயலூக்கத்துடன் இருந்தனர் ஆனால் அவர்கள் சோசலிசம் தொழிற்கட்சியின் வழியே நனவாக முடியும் என்கிற கருத்தாக்கத்தின் பின்னால் சிறைப்பட்டுக் கிடந்தனர். ஸ்ராலினிஸ்டுக்களால் கண்டிக்கப்பட்டு மாற்று முன்னோக்கு ஒன்றும் இல்லாத நிலையில், 1933ல் லாங் இன் அமைப்புகள் இந்த பிரிவுகளை அகற்றியபோது அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

80. பின்னர் 1931ல், வட்டி விகிதங்களைக் குறைக்காதவரை பிரிட்டிஷ் வங்கிகளுக்கு கடன்களுக்கான செலுத்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பெடரல் ஸ்கலின் தொழிற் கட்சி அரசாங்கத்திடம் லாங் கோரினார். மத்திய அரசாங்கத்திடம் இருந்தான பணத்தை அது நிறுத்தி வைத்தது சட்டவிரோத செயல் என்ற காரணத்தைக் கூறி, மே 1932ல், லாங்கின் NSW மாநில அரசாங்கம், NSW ஆளுநரான சேர் பிலிப் காம் மூலம் நீக்கப்பட்டது. தனது நீக்கத்தை ஏற்றுக் கொண்ட லாங், ஒவ்வொரு தொழிற் கட்சி அரசியல்வாதியின் அடிப்படையான நீடித்துவாழும் குணநலனாக இருக்கும், முதலாளித்துவ அரசுக்கான விசுவாசத்தை பிரகடனப்படுத்தினார்: "எனது முடிவை எடுப்பதில் எனது மனதில் மிகப் பிரதானமாய் வந்து போனது நான் எப்போதும் சட்டம் ஒழுங்கின் பக்கமே நின்று வந்திருக்கிறேன், எந்த வகை வன்முறையையும் எதிர்த்தே வந்திருக்கிறேன் என்கின்ற உண்மையாகும். நாங்கள் ஆளுநரை மறுத்து நடந்தால், அவர் யாருடைய பிரதிநிதியாக இருக்கிறாரோ அந்த அரசரின் அதிகாரத்தை மறுத்து நடப்பதாய் அமையும். பிரிட்டிஷ் கடற்படைக்கான ஒரு பகிரங்க அழைப்பாக அது கருதப்பட்டு, நகரில் குண்டு வீசுவதற்கு பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் சிட்னிக்கு வந்து சேருவதில் வந்து முடியலாம். எனவே உள்நாட்டுப் போர் ஏற்பட்டு சிட்னி வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதைக் காட்டிலும், பதவிநீக்கத்தை ஏற்றுக் கொள்ள நான் தீர்மானித்திருக்கிறேன்." லாங்கின் பிரதான கவலையாக இருந்தது பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் அல்ல, மாறாக அவர் எதனைத் தடுப்பதற்கு கடுமையாக உழைத்திருந்தாரோ, அந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கிளர்ச்சி குறித்த அச்சம் தான். அவர் பதவிநீக்கப்பட்டதற்கு பதிலிறுப்பாக சிட்னியில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அணிதிரண்டு ஊர்வலம் நடத்திய சமயத்தில், அவர்களிடம் லாங் கூறியது போய் தேர்தலில் வாக்கு போடுங்கள் என்பதே.

81. லாங் நீக்கப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப் பெரும் ஒன்றாகும். ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாய் ஒதுங்கிக் கொண்டது. கடன் மறுதலிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து "தொழிலாள வர்க்கத்திற்கு எந்த கவலையும் இல்லை" என்று அறிவித்த அது லாங் நீக்கப்பட்டதை எதிர்த்த தொழிலாளர்களை "சமூக பாசிஸ்டுகள்" என்று கூறி கண்டனம் செய்தது. தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் தீவிரமயப்படுவது மற்றும் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடி வெடித்ததான நிலைமைகளில், தொழிற்கட்சி தலைமை கட்டுப்பாடு கொண்டிருப்பதை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்து கொண்டது.

தொடரும்.

அடிக்குறிப்புகள்

21. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கான அறிக்கை’, டிசம்பர் 24, 1920, பார்த்தது பிப்ரவரி 15, 2010.

22. இயன் டர்னர், தொழில்துறை தொழிலாளர் மற்றும் அரசியல், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், கான்பெரா, 1965, ப.224.

23. ‘கிழக்கத்திய பிரச்சினை மீதான ஆய்வறிக்கைகள்’, கம்யூனிச அகிலத்தின் நான்காவது காங்கிரசு, டிசம்பர் 5, 1922, மூன்றாம் அகிலத்தின் முதல் நான்கு காங்கிரசுகளின் ஆய்வறிக்கைகள், தீர்மானங்கள் மற்றும் செயல்திட்ட அறிக்கைகள், இங்க் லிங்க்ஸ், லண்டன், 1980, பக். 417-418.

24. ECCI இல் இருந்து CPA க்கான கடிதம்’, எமது மாறா விசுவாசம், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாஸ்கோ இடையிலான உறவுகள் மீதான ஒரு ஆவணப்பட கணக்கெடுப்பு, 1920-1940, டேவிட் லோவெல் & கெவின் விண்டில் (எட்ஸ்), ANU E பிரஸ், கான்பெரா, 2008, பக். 153-158.

25. ‘ஆஸ்திரேலிய பிரச்சினை’, ECCI தீர்மானம், எமது மாறா விசுவாசம், op. cit., பக். 217-220.

26.லியோன் ட்ரொட்ஸ்கி, ‘கம்யூனிச அகிலத்தில் திருப்பம்’, ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம், பென்குவின், ஹேமாண்ட்ஸ்வொர்த், 1971, பக். 29.

27. ‘ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் CEC பகிரங்க கடிதம், அக்டோபர் 13, 1929’, எமது மாறா விசுவாசம், op. cit., பக். 285.28. ’ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் கடமைகள் மீதான தீர்மானம்’, எமது மாறா விசுவாசம், op. cit., பக்.23.

29. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘பாசிசத்திற்கு எதிரான ஒரு தொழிலாளர் ஐக்கிய முன்னணிக்காக’, ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம், op. cit., 105.

30. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘கம்யூனிச அகிலத்திற்கு இன்று தலைமை நடத்துவது யார்?’ இடது எதிர்ப்பாளர்களுக்கான சவால், 1928-29, பாத்ஃபைண்டர், நியூயார்க், 1981, ப. 202.

31. வாரென் டென்னிங், காகஸ் நெருக்கடி: ஸ்கலின் அரசாங்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஹேல் மற்றும் அயர்ன்மாங்கர், சிட்னி, 1982, பக்.24.

32. ‘திரு.லாங்: புரட்சி வந்து விட்டது’, சிட்னி மார்னிங் ஹெரால்டு, 5 அக்டோபர், 1931.

33. கெரால்டு ஸ்டோன், 1932, பான் மாக்மில்லன், மெல்போர்ன், 2005, ப.293