சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Fight against university privatization

இலங்கை: பல்கலைக்கழக தனியார்மயமாக்கத்துக்கு எதிராகப் போராடு

Statement of the International Students for Social Equality
2 November 2010

Use this version to print | Send feedback

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ) அமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழி திறப்பதற்காக இந்த மாதம் இலங்கை அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய உயர் கல்வி சட்டத்தை எதிர்க்குமாறு மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. இந்த புதிய சட்டம் இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு உள்ள வாய்ப்புக்களை மேலும் குறைப்பதோடு நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளையும் மோசமாக்கும்.

புதிய சட்டங்களுக்கான தயாரிப்புகள், தனியார்மயத்தை எதிர்த்து அண்மைய வாரங்களில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களுடன் சேர்ந்தே வந்துள்ளது. மொத்தமாக பேராதனை, ருஹுனு, ரஜரட்ட மற்றும் ஜயவர்தன பல்கலைக்கழகங்களில் 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதற்காக கடந்த ஏப்பிரலில் பல்கலைக்கழக அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்ட சட்டங்களின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 200 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் உதுல் பிரேமரட்னவை பொலிஸ் கைது செய்தது.

ஐ.எஸ்.எஸ்.ஈ. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இனவாத அரசியலை சமரசமற்று எதிர்த்த போதிலும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறும் ஐ.எஸ்.எஸ்.ஈ. கோரிக்கை விடுக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமது அரசியல் எதிரிகளின் மீது பல்கலைக்கழகங்களுக்குள் குண்டர் நடவடிக்கையை மேற்கொள்வதில் பேர்போனதாகும். இந்த நடவடிக்கைகளே அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு சாக்குப்போக்கை வழங்குகின்றன. எவ்வாறெனினும், இந்தக் கைதுகள், மாணவர்களை அச்சுறுத்துவது, அரசியல் நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் தனியார்மயமாக்க நடவடிக்கைகள் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதையும் பெரும் இலக்காகக் கொண்டுள்ளது.

பகிரங்கப்படுத்தப்படாத இந்த புதிய சட்டமானது, தனியார் பல்கலைக்கழகங்கள் சம்பந்தமான பிரிவு எதையும் கொண்டிராத 1978 பல்கலைக்கழக சட்டத்தை மாற்றுவதற்கேயாகும். வடகொழும்பு மருத்துவக் கல்லூரி என்ற ஒரு தனியார் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு 1980ல் எடுக்கப்பட்ட முன்னைய முயற்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்துடன், அதனால் வழங்கப்படும் பட்டங்களின் பெறுமதி பற்றிய கேள்விகளும் எழுந்தன. அந்தக் கல்லூரி பின்னர் களனிப் பல்கலைக்கழத்தின் குடையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

புதிய சட்டம் தனியார் பல்கலைக்கழகங்களின் வருகைக்கு வழி திறக்கும் என்பதை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெளிவுபடுத்திவிட்டார். இலங்கை-ஆஸ்திரேலியா-நியுஸிலாந்து வர்த்தக சபையில் அக்டோபர் 19 உரையாற்றிய அவர், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் பெய்ஜிங் அரச பல்கலைக்கழகம் உட்பட 15 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் தனியார் வசதிகளை ஏற்படுத்துவதற்கான கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

உயர் கல்வி செயலாளர் சுனில் நவரட்ன, தனது திணைக்களமும் முதலீட்டுச் சபையும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு “ஒரே இடத்தில் பலதைப் பெறும்” வசதியை வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தார். அவர்கள் மாணவர்களின் கட்டணத்தில் கட்டுபாட்டுகளுக்கு உள்ளாக மாட்டார்கள் மற்றும் அவர்களுக்கு இலவச நிலமும் வரிச் சலுகைகளும் வழங்கப்படும்.

இந்தச் சட்டத்தை நியாயப்படுத்திய திசாநாயக்க, அரசுக்குச் சொந்தமான 15 பல்கலைக்கழங்களை முன்னேற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும் என்ற காரணத்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தலையீட்டை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அரச பல்கலைக்கழக கல்வியை நலிவுறச் செய்வதற்கு அரசாங்கம் எண்ணுகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதே இந்தக் கருத்தாகும். இதன் விளைவு இரு வர்க்க பல்கலைக்கழங்களாகும்: பெரும்பான்மையான மாணவர்களுக்கு நிதி வழங்கப்படும், கூட்டம் நிறைந்த பல்கலைக்கழங்களும், பணம் செலவழிக்கக் கூடியவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள்.

2006ல் மொத்த தேசிய உற்பத்தியில் 2.67 வீதமாக இருந்த கல்விக்கான அரசாங்க செலவு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இனவாத யுத்தத்துக்கான இராணுவச் செலவை ஊதிப்பெருக்கச் செய்த 2009ல் 2.08 வீதமாக குறைந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் இந்த மாத வரவு செலவுத் திட்டத்தில் புதிய செலவு வெட்டுக்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் நிறைந்த விரிவுரை மண்டபங்கள், ஊழியர்கள், பரிசோதனை நிலையங்கள் பற்றாக்குறை, நூலகம் மற்றும் ஏனைய வசதிகளின் பற்றாக்குறை உட்பட ஏற்கனவே கொடுமையான நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். உதாரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் நூலகத்தில், 8,200 மாணவர் தொகைக்கு 800 இடங்களையே கொண்டுள்ளது. அங்கு தங்குமிடப் பற்றாக்குறை நிலவுவதால் அதிகளவிலான மாணவர்கள் தனியார் தங்குமிடங்களில் உள்ளனர். அநேகமான மாணவர்கள் தகுதி பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் 2,500 ரூபா (22 அமெரிக்க டொலர்) மாதக் கொடுப்பணவில் வறுமையில் வாழ்கின்றனர்.

தற்போது பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் நன்மையடைவார்கள் என்ற திசாநாயக்கவின் கூற்று ஒரு பொய்யாகும். தனியார் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணங்கள், அநேகமான இளைஞர்களால் எட்ட முடியாததாக இருக்கும். குறிப்பிட்ட வீதத்திலான மாணவர்களுக்கு இலவச நுழைவுக்காக பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் எதிர்பார்த்த போதிலும், அதுவும் நிச்சயமற்றதாகும். அரசாங்கத்தின் மிகையான குறிக்கோள், இலங்கையை “ஆசியாவின் அறிவு மையமாக” மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதாகும்.

மாணவர்கள் மத்தியில் பரந்தளவு எதிர்ப்பு வரும் என்பதையிட்டு விழிப்பாக உள்ள அரசாங்கம், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராகின்றது. பொலிசாருடனான மோதல்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வன்முறை என கூறப்படுவதை பயன்படுத்தி, சகல மாணவர்களதும் எதிர்ப்பை கொடுமையாக நசுக்குவதற்கு இராஜபக்ஷ தயாராகி வருகின்றார்.

அக்டோபர் 26 அன்று, தனியார்மயமாக்கத்தை எதிர்க்கும் மாணவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்காக பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார். “80,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை குழப்புவதற்காக அரசியல் நோக்கம் கொண்ட சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் முயற்சிப்பதோடு அந்த முறைகேடான மாணவர்கள் மீது நாட்டில் வழக்கத்தில் உள்ள சட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

ஊடங்களுடன் பேசிய உயர் கல்வி செயலாளர் நவரட்ன, இராஜபக்ஷவின் கருத்துக்களின் உந்துதலை சுட்டிக்காட்டினார்: அங்கு [பல்கலைக்கழகங்களில்] அரசாங்கத் தலையீட்டின் அளவு, கடந்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அவர்கள் கிளிநொச்சியில் [புலிகளின் நிர்வாக மையம்] தலையிட்டது போன்றதாகும்,” என்றார்.

லக்பிம செய்திப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில், மாணவர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலை கோடிட்டுக் காட்டிய உயர் கல்வி அமைச்சர் திசாநாயக்க, 1989ல் தியனமன் சதுக்கத்தில் மாணவர்களதும் தொழிலாளர்களதும் வெகுஜன எதிர்ப்புக்கு சீன அரசாங்கம் எப்படி பதிலடி கொடுத்தது என்பதை நினைவூட்டினார். “நாட்டின் பல்கலைக்கழக முறைமையை காக்க” இரண்டு அல்லது மூன்றாயிரம் மாணவர்களையேனும் இடைநிறுத்த அரசாங்கம் தயங்காது, என அவர் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களால் பொதுக் கல்வியை தனியாக பாதுகாத்துக்கொள்ள முடியாது. அவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை-சார்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில் தொழில், நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இது சோசலிச கொள்கையின் அடிப்படையில் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாளர்களதும் இளைஞர்களதும் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாகும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஜே.வி.பி. யும் அடிக்கடி சோசலிச வார்த்தைகளை வீசினாலும், அவர்கள் அத்தகைய போராட்டத்தை எதிர்ப்பவர்கள். மாணவர்களின் போராட்டத்தால் அரசாங்கத்துக்கு அதன் திட்டங்களை சுருட்டிக்கொள்ள அழுத்தம் கொடுக்க முடியும் என்ற அழிவுகரமான மாயையை அ.ப.மா.ஒ. முன்னிலைப்படுத்தும் அதே வேளை, ஜே.வி.பி. “இலவச கல்வியை பாதுகாப்பதற்கான தேசிய மையம்” என்ற அமைப்பை ஸ்தாபிப்பதன் ஊடாக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பி.) ஒரு எதிர்ப்புக் கூட்டணியை அமைப்பதை பிரேரித்துள்ளது. 1977ல் ஆட்சிக்கு வந்ததையடுத்து, தனது திறந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுத்த, பெரும் வர்த்தகர்களின் வெளிப்படையான கட்சியான யூ.என்.பி. தான் இலவச பொதுக் கல்வி மீதான தாக்குதல்களை ஆரம்பித்தமைக்கு பொறுப்பாளியாகும்.

மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் இருந்து ஏற்கனவே ஜே.வி.பி. பின்வாங்கி வருகின்றது. அரசாங்கமும் ஊடகங்களும் அ.ப.மா.ஒ. மீது அவதூறுகளை சுமத்திய நிலைமையில், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க, மாணவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி அங்கீகரிப்பதில்லை என கடந்த வாரம் பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்தார். “தனியார் பல்கலைக்கழங்கள் அமைப்பை அங்கீகரிப்பது பற்றி ஜே.வி.பி. அக்கறைகாட்டினாலும், வறிய மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி நிலைமையின் காரணமாக அதை அங்கீகரிக்க முடியாதுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

“வறிய மக்கள்” பற்றிய இந்த கவலை ஒரு வெற்றுப் பாசாங்காகும். 2004ல் இன்னுமொரு சுற்று மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்களை அமுல்படுத்திய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை வகித்தனர். 2005ல் ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்த ஜே.வி.பி., புலிகளுக்கு எதிரான அவரது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது. 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த மோதல் காலம் பூராவும், கல்வி உட்பட சகலதையும் யுத்த முயற்சிகளுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என அ.ப.மா.ஒ. மற்றும் ஜே.வி.பி. யும் வாதிட்டன.

இலவசக் கல்வியை காப்பதற்கான எந்தவொரு அரசியல் போராட்டத்தினதும் ஆரம்ப புள்ளி, ஜே.வி.பி. மற்றும் அதன் மாணவர் அமைப்பு உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கட்சிகளிடம் இருந்தும் முழுமையாக பிரிவதாகும். இலங்கையிலும் உலகம் பூராவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது நடத்தப்பட்டுவரும் பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமே கல்வி மீதான தாக்குதலாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை இளைஞர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றன. இலவசக் கல்விக்கான மாணவர்களின் போராட்டம், இலாப முறைமைக்கு எதிராக இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கமொன்றை கட்டியெழுப்புவதுடன் முழுமையாகப் பிணைந்துள்ளது.

கல்வியை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இலவச, உயர் தரத்திலான கல்வியை வழங்குவதற்கு பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவை. ஒருசில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மை வெகுஜனங்களின் எரியும் சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதற்கு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்கான சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். இதுவே ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும். பல்கலைக்கழகங்களிலும் தீவு பூராவும் ஐ.எஸ்.எஸ்.ஈ. யை கட்டியெழுப்புவதன் மூலம் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாம் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.