சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK students and academics voice anger at tuition fee hikes

இங்கிலாந்து மாணவர்களும் கல்வியாளர்களும் கல்விக்கட்டண உயர்வு குறித்த கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்

By our reporters
12 November 2010

Use this version to print | Send feedback

பல்கலைக்கழக கட்டணங்கள் வருடத்திற்கு £9,000 ஆக அதிகரித்துள்ளதையும் நிதியாதாரத்திலான கடுமையான வெட்டுகளையும் எதிர்த்து புதனன்று நடந்த போராட்டத்தில் மாணவர்களும் கல்வியாளர்களுமாய் 50,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மில்பாங்க் டவரில் அமைந்திருக்கும் டோரி கட்சியின் தலைமையகத்தை ஆக்கிரமித்ததற்கு போலிஸ் படைவலிமை மூலம் பதிலிறுப்பு செய்யப்பட்டதன் பின்னர் கன்சர்வேட்டிவ்-லிபரல் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான கோபம் வெடித்து எழுந்தது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் டோரி தலைமையகத்தின் வெளியே திரண்டுள்ளனர்

முகப்புக் கண்ணாடி நொருக்கப்பட்டு கட்டிடத்தின் உள்ளே ஆக்கிரமித்திருந்த நூற்றுக்கணக்கானோரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகப்படுத்தினர். போலிஸ் 30 பேரை கைது செய்தது, இன்னும் பலரை தாக்கியது.

தேசிய மாணவர் சங்கமும் (NUS) பல்கலைக்கழக மற்றும் கல்லூரி சங்கமும் (UCU) இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

எதிர்பார்க்கத்தக்க வகையில், டோரி தலைமையகத்தில் நடந்த போராட்டத்தைக் கண்டித்த ஊடக பின்பாட்டுடன் NUS உடனடியாய் இணைந்து கொண்டது. இது “அவமானகரமானது, ஆபத்தானது, எதிர்மறையான பலனை அளிக்கத்தக்கது” என்று NUS தலைவர் ஆரோன் போர்ட்டர் வருணித்தார். ஆனாலும் பலரும் இணையத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள், அரசாங்கத்தின் பரந்த சிக்கன வேலைத்திட்டம் குறித்த தங்களது சொந்த கோபத்தின் ஒரு பகுதியையேனும் இப்போராட்டம் வெளிப்படுத்தியதாக தெரிவித்தன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் பேசினர்.


ஹன்னா (வலது), தர்ஷி (இடப்பக்கம் இருந்து இரண்டாவது) மற்றும் நண்பர்கள்

லண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தான ஒரு நண்பர்கள் குழுவுடன் ஹன்னா நின்றிருந்தார். அவர் கூறினார்: “ஒவ்வொருவரையும் போலவே நாங்களும் இந்த வெட்டுகளுடன் உடன்படவில்லை என்பதாலேயே இங்கு நின்று கொண்டிருக்கிறோம். கலைப் பிரிவுகள் பெரும்பாலும் கவனியாது விடப்படுகின்றன, எனவே இந்த வெட்டுகள் அதனை இன்னும் மோசமாக்கும். இது உண்மையிலேயே நல்ல செய்தி அல்ல.

“ஈராக் போருக்கு எதிராகத் திரண்டதைப் போல மற்ற ஆர்ப்பாட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். மில்லியன்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள், ஆயினும் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை, ஆனாலும் நீங்கள் நிமிர்ந்து நிற்கத் தான் வேண்டும். இந்த நாட்டில் பேச்சு சுதந்திரத்திற்காகத் தான் நாம் பிரசித்தி பெற்றிருக்கிறோம். அவர்கள் இந்த விடயங்களை எல்லாம் வெட்டக் கூடாது.”

தர்ஷி ஷா மேலும் கூறினார்: “அவர்கள் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் இனி யாருமே பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியாது என ஆகி விடும். ஏற்கனவே £24,000 அளவுக்கு கடன் சுமையுடன் தான் நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டே வெளியே வருகிறீர்கள். கடனுதவிகள் பெறுவது என்பது கடினமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக நீங்கள் லண்டனிலோ அல்லது அதனைச் சுற்றிய பகுதிகளிலோ இருந்தால். உங்களால் பல்கலைக்கழகம் செல்ல முடியாது போகும், இங்கே வாழ்வதைப் பற்றியே நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டாம்!

“எதிர்காலம் பிரகாசமாய் இல்லை. வேலைகளுக்குப் போக கல்வி அவசியம் என்று சொல்லும் அவர்கள், பின் கல்வியில் வெட்டுகளை அமலாக்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் விரும்பும் வேலைக்கான கல்வியை நீங்கள் பின் எவ்வாறு பெற முடியும்? ஒரு விடயத்தில் உங்களுக்குத் திறமைகள் அவசியமானால் அப்போது நீங்கள் நிச்சயமாக பல்கலைக்கழகத்திற்கு போய்த் தான் தீர வேண்டும்.


ராபர்ட் ஹெட்

சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஹெட் கூறினார்: “எங்களுக்கு இது பெரிதான பாதிப்பில்லை, ஆனால் பல்கலைக்கழகத்திற்கு வரவிருக்கும் வருங்கால மாணவர்களுக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வருங்காலத்தில் உயர் கல்விக்கு எந்த தடைகளும் இருக்கக் கூடாது என்றும் நாங்கள் விரும்புகிறோம். விடயங்களை மாற்ற வேண்டும் என்றால் ஒட்டுமொத்தமாய் அணிதிரள வேண்டும். தொழிலாள வர்க்க மேம்பாட்டிற்கும், வரி சமத்துவத்திற்கும் நான் ஆதரவாய் நிற்கிறேன்.

“இன்று இங்கே எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது ஒரு பற்றியெரியும் பிரச்சினையாகும். ஈராக் போர் விடயம் போல் கலைந்து போவதற்கு இதனை நாங்கள் விட மாட்டோம். இதனை சரிய விட மாட்டோம். வெறுமனே மாணவர்கள் மட்டுமல்ல, மாணவர் அல்லாதோர், கல்வியாளர்கள், மற்றும் பொது வட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவருமே இது குறித்து உணர்ச்சி பொங்க நிற்கின்றனர்.

“வங்கிகளின் பிணையெடுப்பு வெறுப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது. உலகெங்கும் இது நிகழ்ந்தது. அவர்கள் சமூகத்திற்கு உதவியாய் எதனையும் செய்யவில்லை. அவர்கள் தங்களது சொந்த மேம்பாட்டுக்காகத் தான் உழைக்கிறார்களே அன்றி தாங்கள் வாழும் பகுதிகளுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ அல்ல. எனவே அவர்களின் தடித்த கொடுப்பனவுகள் சகித்துக் கொள்ள முடியாதவை.”


பேராசிரியர் நிகோலோ டில்

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகோலோ டில் கூறினார்: ”அரசாங்கம் பல்கலைக்கழக கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யும் உத்தேசிக்கும் விடயங்கள் முற்றிலுமாய் ஏற்கத்தகாதவை என்பதை அவர்களுக்குக் காட்டுவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். இந்த நாட்டில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மட்டும் அவர்கள் அழிக்கவில்லை, மாறாக கல்வி வேண்டி நிற்கும் நூறாயிரக்கணக்கான இளைஞர்களையும் அவர்கள் பலவீனமடையச் செய்கின்றனர்.

“”சாத்தியமான அனைத்து உத்திகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். இது ஒன்று மட்டும் தான், ஆனாலும் கல்வியை தனியார்மயமாக்குவதில் அடிப்படையாக ஒரு நவதாரளவாத வேலைத்திட்டத்தின் மூலமாக அவர்கள் நிர்ப்பந்தம் செய்யும் விதத்திற்கு எந்த அளவு மக்களிடம் கோபம் இருக்கிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்வது மிக முக்கியமானது ஆகும்.

“கடந்த 20 ஆண்டுகள் கொஞ்சம் ஸ்திரநிலையைக் கண்டிருந்தன, ஆனாலும் இப்போது ஒவ்வொருவருக்குமே அதீத ஸ்திரமற்ற நிலை மற்றும் நிச்சயமற்ற நிலை நிலவும் ஒரு காலகட்டத்திற்குள் நாம் இப்போது நுழைந்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இந்த மாற்றத்தின் தாக்கம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. எங்களது பல்கலைக்கழகம் சென்ற ஆண்டில் எல்லா மட்டத்திலும் (அதாவது ஆசிரியர்களில், நிர்வாகப் பணிகளில் மற்றும் பிற பிரிவுகளில் இருந்தும்) 10 சதவீத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. மிகை ஊழியர் எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர் என்றாலும் 10 சதவீத வேலைகள் திறம்பட வெட்டப்பட்டிருந்தன. எனது துறையில் எங்களது ஆசிரியர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரை நாங்கள் இழந்திருக்கிறோம். இது எங்களது வேலையிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.


மாணவர்கள் தர்ணாவில் ஈடுபடுகின்றனர்

”சிக்கன நடவடிக்கைகள் என்பவை பரந்த நவதாராளவாத திட்டத்தின் பகுதியாகும். இதில் பொதுச் சேவைகளில் பெரும் வெட்டுகளை அமல்படுத்தும் வங்கிகளின் நடத்தையை (இது தான் அவை எப்போதும் செய்ய விரும்புவது) அரசாங்கம் அனுகூலமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு அவசியம் என்றும் வேறு மாற்று இல்லை என்றும் நம்மிடம் கூறப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசியல் தெரிவு தான்.

“இது வெறுமனே கல்வி குறித்ததல்ல என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். இது பொதுத் துறை குறித்த விடயமாகும். கல்வியாக இருந்தாலும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களாய் இருந்தாலும் சமத்துவத்தை உறுதி செய்வது என்பதே பிரச்சினையாக உள்ளது. பிரான்சில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றி விடவில்லை. ஜனநாயக அதிருப்திக் குரல்களுக்கு அதிகமாய் கவனம் செலுத்தாத அரசாங்கங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த லிசா கூறினார்: “ஒரு நல்ல காரணத்திற்காக என்பதால் நான் இதில் பங்குபெறுகிறேன். பல்கலைக்கழக கல்வி என்பது உண்மையிலேயே முக்கியமான ஒன்றாகும். மக்களின் ஆதரவைக் காண்பித்து அரசாங்கம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைக் காண வேண்டும். அவர்களுக்கு நாம் வாக்களித்தோம், நமக்காகத் தான் அவர்கள் உள்ளனர் என்பதை அவர்கள் நமக்கு உணர்த்தாத பட்சத்தில் இனியும் அவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

”நான் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகம் என்னும் ஒரு கலைக் கல்லூரியில் இருந்து வருகிறேன். ஒரு சாதாரண பல்கலைக்கழகத்தை விடவும் அதிகமாக எங்கள் பல்கலைக்கழகத்திற்கு இந்த வெட்டுகளால் பாதிப்பு அதிகம். ஏனென்றால் ஏறக்குறைய எங்களின் அனைத்து பாடங்களுமே கலை மற்று மானுடவியல் சம்பந்தப்பட்டவை. இந்த உத்தி வேலை செய்யவில்லை என்றால், இன்னும் திறம்பட்டதான வழிகளை உருவாக்கக் கூடிய உத்திகளை நாம் மறுபடியும் சிந்திக்க வேண்டும். நான் ஒரு ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்வதென்பது இதுவே முதல்முறையாகும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாத ஒரு நாட்டில் இருந்து நான் வருகிறேன்! உங்களது வேலைத்திட்டம் நன்றாய் உள்ளது. உங்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு கிட்டும் என்று நான் நம்புகிறேன்.”


ரமா

பாத்தில் இருந்து வந்த டமா இவ்வாறு கூறினார்: “உயர் கல்வி அமைப்பில் செய்யப்படும் மாற்றங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். கட்டண அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஆலோசிக்கும் வெட்டுகள் இவற்றில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. நான் கலை மற்றும் மானுடவியல் கல்லூரியான கோல்ட்ஸ்மித்ஸில் படிக்கிறேன். இந்த பாடங்கள் திட பாடங்கள் இல்லை என்பதால் அவர்கள் ஆசிரியர்களுக்கான நிதியாதாரத்தில் 100 சதவீதத்தையும் இழக்கவிருக்கின்றனர்.

“கல்வி என்பது அதற்கு செலவிடத்தக்கோருக்கு மட்டுமன்றி ஒவ்வொருவருக்கும் இலவசமாய் கிட்ட வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இது ஏதோ உயர் ஊதிய வேலையைப் பெறுவதற்கான அல்லது சந்தைபடுத்தல் துறையில் செல்வதற்கு பட்டதாரி திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான அல்லது வேறெதெற்குமான விடயம் குறித்தது மட்டும் அல்ல. இது கற்கும் விருப்பம் குறித்தது. மிக முக்கியமான ஏராளமான பாடப்பிரிவுகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மூடல்கள் தொடர்ந்து நடக்குமானால் ஏராளமான பேர் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான ஊக்கத்தைக் கைவிட்டு தாங்கள் விரும்பிய விடயங்களைத் தொடரவிடாமல் செய்து விடும்.

”மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு உணர்த்தும், அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் பெரும் அளவே எவ்வளவு பேர் இதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது, லிபரல் ஜனநாயகக் கட்சியினர் உண்மையில் கட்டணங்களை உயர்த்தாதிருக்க உறுதியளித்தனர் என்கிற உண்மையும் மறக்கக் கூடியது அல்ல. இதற்கு நாம் அவர்களைப் பிடிப்போம். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டமும் சரி மற்றும் நடந்து கொண்டிருக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களும் சரி இந்த நாட்டின் மக்கள் தாங்கள் கொஞ்சமும் மகிழ்ச்சியாய் இல்லை என்பதைக் காட்டுவதற்குச் செய்யும் ஒரு நெடிய பிரச்சாரத்தின் ஆரம்ப தொடக்கங்கள் மட்டுமே என்றே நான் கருதுகிறேன். அரசாங்கத்தின் மனதை இது மாற்றும் என்றும் மக்களின் குரலுக்கு அவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

”இதில் நாம் அனைவரும் ஒன்றாய் நிற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் நாங்கள் இல்லை. இங்கே யார் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் காண முடியும். வங்கிகளும் பெரு வணிகங்களும் அல்ல. எனவே, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம் என்பதையும் ஒரு போராட்டமின்றி அதனை நடக்க விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதையும் இது போன்ற கூடுதலான அழுத்தங்கள் எல்லாம் அவர்களுக்குக் காட்டும் என்று நான் கருதுகிறேன்.

20 வருடங்களாக உரையாசிரியராகப் பணியாற்றும் லிண்டா கூறினார்: “கல்வியை தனியார்மயமாக்குவதை நான் எதிர்க்கிறேன். பணக்கார மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், இவர்கள் மட்டுமன்றி பிரிட்டனின் ஏழை உழைக்கும் மக்களின் குடும்பங்களில் இருந்து வரும் ஏராளமான மாணவர்கள் என பல்தரப்பட்ட மாணவர்களும் பயிலும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து நான் வருகிறேன். அதனால் இந்த வெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பினை நான் அறிவேன். ஏழை மாணவர்கள் இனி பல்கலைக்கழகத்திற்கு வர இயலப் போவதில்லை. அதனால் தான் இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன்.

“கொஞ்சம் கொஞ்சமாய் தனியார்மயமாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் உள்ளே வந்து பல்கலைக்கழகங்களை கையிலெடுத்துக் கொண்டு இலாபகரமான படிப்புகளை நடத்தப் போவதாகவே நான் கருதுகிறேன். எனது பாடமான மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் இதில் அச்சுறுத்தலுக்கு ஆளாகும், ஏனென்றால் இது இலாபமளிக்காத பாடப் பிரிவாகப் பார்க்கப்படும்.

“இந்த வெட்டுகள் கல்வியின் தரத்தைப் பாதிக்கும். நான் வேலைபார்க்கும் பல்கலைக்கழகம் ஏற்கனவே வெட்டுகளை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது, அது வேலையையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நீங்கள் மாணவர்களுக்கு கொடுக்க விரும்பிய கல்வியை உங்களால் வழங்கவியலாது போய்விடும். கற்பிப்பதற்கான மணித்தியாலங்கள் இல்லை, ஆராய்ச்சி என்பது இலாபகரமான பகுதிகளுக்குள்ளாக செலுத்தப்படுவதால் உண்மையில் ஆசிரியப் பணி தான் பாதிப்புக்குள்ளாகிறது.”