சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Unions sell out contract workers strike at lignite mining company

இந்தியா: லிக்னைட் சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் விலை பேசப்பட்டது

By Satish Simon and Arun Kumar
17 November 2010

Use this version to print | Send feedback

தென்னிந்தியாவில் மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் (NLC) 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் நடத்தி வந்த 39 நாள் வேலைநிறுத்தம், அப்போது தான் நிரந்தரத் தொழிலாளர்களிடம் இருந்து கணிசமான ஆதரவைப் பெறத் தொடங்கியிருந்ததொரு சமயத்தில், விலைபேசப்பட்டு விற்கப்பட்டது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போதும் நிரந்தரத் தொழிலாளர்கள் பெறுவதில் ஒரு சிறு பாகத்தையே பெறும் நிலையில் விட்டு விடுகின்ற, அத்துடன் நிரந்தரத் தொழிலாளர்களாக்கும் அவர்களது கோரிக்கையை அப்படியே முழுக்க கைகழுவுவதாக இருக்கின்ற ஒரு ஒப்பந்தத்தை லிக்னைட் சுரங்க மற்றும் மின்சார நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களிடையே மிகப் பெரிய சங்கமாக இருக்கும் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) மற்றும் சிஐடியு, மற்றும் மூன்று பிற சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் NLC இல் பல வருடங்களாக, பல தசாப்தங்களாகக் கூட, வேலை பார்த்து வருகின்றனர்.

ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஆகியவை முறையே ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவற்றுடன் இணைந்தவை ஆகும்.

அக்டோபர் 27 அன்று கையெழுத்தான ஒப்பந்த ஏற்பாட்டின் கீழ், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்தை மாதத்திற்கு 1,560 ரூபாய் (35 அமெரிக்க டாலர்) வரை உயர்த்த NLC ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் அமைந்திருக்கும் தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தால் அமைக்கப்பட்ட தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (LPF) மற்றும் தலித் சிறுத்தைகள் சங்கம் ஆகியவை அக்டோபர் 10 அன்று வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர்கள் மீது திணிக்க முயன்று தோற்ற பரிதாபகரமான ஊதிய அதிகரிப்பை விடவும் இது வெறும் 520 ரூபாய் (11 அமெரிக்க டாலர்) மட்டுமே அதிகம்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை வகைப்பாட்டைப் பொறுத்து, 1,560 ரூபாய் உயர்வு என்பது 30-50 சதவீத ஊதிய அதிகரிப்பு என்கிற அதே சமயத்தில், ஸ்ராலினிச சங்கங்கள் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தமானது அவர்களை இப்போதும் “நிரந்தர”த் தொழிலாளர்கள் பெறுவதில் ஆறில் ஒரு பங்குக்கும் கீழாய் தான் ஊதியம் பெறும் நிலையில் விட்டு விடுகிறது.

தமிழ்நாட்டின் நெய்வேலியில் திறந்தவெளி சுரங்கங்களைச் சுற்றி அமைந்திருக்கும் லிக்னைட் அகழ்வு மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான NLC 14,000 ”நிரந்தர”த் தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. தனது இலாபங்களை வருடத்திற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களாக தொடர்ந்து பராமரிக்க, நிறுவனம் பல தசாப்தங்களாக தனது தொழிலாளர்களில் ஏறக்குறைய பாதிப் பேரை ஒப்பந்தத் தொழிலாளர்களாய் வைத்துள்ளது. இவர்களுக்கு மிகக் குறைவாக ஊதியம் வழங்குவதோடு, முறையான ஓய்வூதியங்கள், சுகாதாரக் காப்பீடு மற்றும் பிற சலுகைகள் இல்லாது செய்து விடுகிறது.

தொழிலாளர்களை குறைந்த ஊதியம் பெறும் “நிரந்தர”த் தொழிலாளர்கள் என்றும் இன்னும் மிக மிருகத்தனமாய் சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றும் தன்னிச்சையாய் பிரிப்பது என்பது இந்தியாவில் தனியார் நிறுவனங்களாய் இருந்தாலும் சரி அல்லது அரசாங்க நிறுவனங்களாய் இருந்தாலும் சரி இயல்பான நிர்ணயமாக மேலும் மேலும் ஆகிக் கொண்டு வருகிறது.

தங்களது ஏழு வார கால வேலைநிறுத்தத்தின் போது NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் மகத்தான உறுதியைக் காட்டினர். தீவிரமான பொருளாதார அழுத்தம் மற்றும் தமிழகத்தின் திமுக அரசாங்கம் ஏற்பாடு செய்த போலிஸ் அடக்குமுறை ஆகியவற்றையும் பொருட்படுத்தாது அவர்கள் மின்னாலைகளுக்கு முன் சாலை மறியல்களுக்கும் மற்றும் எதிர்ப்புப் பேரணிகளுக்கும் ஏற்பாடு செய்தனர். இறுதியாக, திமுகவுடன் இணைந்த LPF வேலைநிறுத்தத்தை உடைக்க முயன்றது. இந்த சங்கமும் தலித் சிறுத்தைகள் சங்கமும் அக்டோபர் 10 ஒன்று நிர்வாகத்துடன் தனியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்த போது, LPF சங்கத்தைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தை பகிரங்கமாய் முதுகில் குத்தும் விதமாக வேலைக்குத் திரும்பினர்.

LPF NLC நிர்வாகம் மற்றும் திமுக அரசாங்கத்தின் அணியில் பகிரங்கமாய் சேர்ந்து கொண்ட அதே சமயத்தில், மற்ற சங்கங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தை முறைப்படி தனிமைப்படுத்தின. நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் சேர அழைப்பு விடுவதற்கு அவை மறுத்தன. இதேபோல், நிரந்தரத் தொழிலாளர்கள் சென்ற ஜூலையில் தங்களது ஒரு வார கால வேலைநிறுத்தத்தை முன்வைத்த சமயத்தில், NLC இன் செயல்பாடுகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையில் இருக்க வேண்டும் என்று இவை கட்டளையிட்டிருந்தன.

எப்படியிருப்பினும், இந்த வேலைநிறுத்தம் நெய்வேலிக்குள்ளாகவும் நெய்வேலி அமைந்திருக்கும் கடலூர் மாவட்டத்திலும் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றது. எதிர்க்கட்சிகள் அக்டோபர் 19 அன்று அழைப்பு விடுத்திருந்த மாவட்ட அளவிலான பந்த் (பொது வேலைநிறுத்தம்), 3,000 போலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போதும், திமுக அமைச்சர்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக கோரிக்கை விடுத்திருந்த போதும், கடலூர் முழுவதும் வலுவான ஆதரவைப் பெற்றிருந்தது.

அக்டோபர் 22 அன்று, சுமார் 750 நிரந்தரத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களுடனான தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக பொது இடத்தில் ஒரு உண்ணாவிரதத்தைத் தொடக்கினர். தொழிலாளர்களின் போர்க்குண மனோநிலை பெருகிச் செல்வதைக் கண்டு அஞ்சிய சங்கங்கள், வேலைநிறுத்தத்தை திடுதிப்பென முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, தாங்கள் இணைந்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆசிகளுடன், ஒரு கூட்டுச் சதியைத் தொடக்கின. அதுதான், அக்டோபர் 27 விலைபேசல் ஆகும்.

இந்த சதி குறித்து உலக சோலிச வலைத் தளம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது: “என்.எல்.சி.யின் 14,000 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்வதற்கு சங்கங்கள் மறுத்து விட்ட நிலையிலும், அரசாங்கமும் சரி எதிர்க்கட்சிகளும் சரி போராடும் தொழிலாளர்களை நிரந்தரமாக மலிவு ஊதியத் தொழிலாளர்களாகவே விட்டுவிடுவதற்கு வகை செய்வதான ஒரு உடன்பாட்டை அவர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிகள் செய்கின்ற நிலையிலும், மிகக் குறைந்த ஊதியம் அளிக்கப்பட்டு வெகுவாய் சுரண்டப்பட்டு வந்த அத்தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தில் மகத்தான உறுதியைக் காட்டி வருகின்றனர்.” (காணவும், ”இந்தியா: லிக்னைட் சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தம்”)

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகளின் மாநிலச் செயலாளர்களான, தா. பாண்டியன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முறையே LPF கையெழுத்திட்டிருந்த அக்டோபர் 10 ஒப்பந்தத்தைக் கண்டனம் செய்திருந்தனர்.

ஸ்ராலினிஸ்டுகளின் அதற்கடுத்த நடவடிக்கைகள், அதாவது வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்த அவர்கள் மறுத்தது; இந்திய முதலாளித்துவத்தின் பெருவணிக ஆதரவான “புதிய பொருளாதார மூலோபாய”த்தின் சிற்பியான பிரதமர் மன்மோகன்சிங் இந்த பிரச்சினையில் தலையீடு செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்பதான அவர்களின் விண்ணப்பங்கள்; LPF ஆலோசித்ததை விடவும் சற்று லேசாய் மேம்பட்டதொரு ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டது, இவையெல்லாம் அடிக்கோடிட்டு காட்டுவது என்னவென்றால், ஸ்ராலினிச சங்கங்களை நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான மத்தியஸ்தர்களாக அங்கீகரிக்காதது மட்டுமே அக்டோபர் 10 ஒப்பந்தத்தில் அவர்களின் பிரதான ஆட்சேபனையாக இருந்திருக்கிறது என்பது தான்.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் இருக்கும் அதிகரித்த எண்ணிக்கையிலான நாடுகடந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது அவற்றுக்கு உற்பத்தி செய்து அளிக்கிற உற்பத்தி தொழிற்சாலைகளில் நடந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களின் ஒரு பேரலையுடன் NLC தொழிலாளர்கள் போராட்டத்தை ஒன்றிணைப்பதற்கு ஸ்ராலினிச கட்சிகளும் அவற்றின் சங்கங்களும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது.

அக்டோபர் 22 அன்று, திமுக அரசாங்கத்தின் “தொழிலாளர் விரோத தொழிற்சங்க விரோத கொள்கைகளுக்கு” எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஸ்ராலினிச கட்சிகள் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. NLC தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாநில அளவில் ஒருநாள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விட இருப்பதாக, மாநிலத் தலைநகரான சென்னையில் நடந்த பேரணியில், சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் வீராவேசமாய் சவால் விட்டார். “ஆர்ப்பாட்டங்கள் இப்போது கடலூர் மற்றும் [அதனையடுத்த] காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குள் தான் இருக்கிறது. ஒரு மாநில அளவிலான வேலைநிறுத்தத்திற்கு எங்களைத் தள்ளாதீர்கள்” என்றார் ராமகிருஷ்ணன். இதனிடையே, சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.கே.ரங்கராஜன் மிகக் கவலை கலந்த அக்கறையுடன், இடது கட்சிகள் அந்நிய முதலீட்டிற்கு எதிரானவை அல்ல என்றும் மாறாக முதலாளிகள் “தொழிலாளர் சடட்ங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் மதிக்க வேண்டும்” என்று மட்டுமே அவை விரும்புகின்றன என்றும் தெளிவுபடுத்தினார்.


ஓடிவரும் நீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத “தொழிலாளர் குடியிருப்புகளில்” தான் NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேடையில் ஸ்ராலினிச தலைவர்களுடன் ஒரு அஇஅதிமுக பிரதிநிதியும் சேர்ந்து கொண்டார். இக்கட்சி தான் சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது படுபயங்கர வேலைநிறுத்த-தடுப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியதோடு 200,000 அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு துப்பாக்கி சூடுகளையும் கருங்காலிகளையும் பயன்படுத்தியது. ”மக்கள் பிரச்சினைகளுக்காக” போராடுவதில் தன்னுடன் கைகோர்க்க அஇஅதிமுகவின் தலைவரான முன்னாள் திரை நட்சத்திரம் ஜெயலலிதாவுக்கு சிபிஐ (எம்) கட்சி விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற மாநிலத் தேர்தல்களில் வலதுசாரி அஇஅதிமுகவுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு ஸ்ராலினிஸ்டுகள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி அவர்களை தொழிற்சங்க கூட்டு பேரம் என்னும் விலங்கு மூலம் கட்டிப்போட்டு தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான இயக்கத்தின் குரல்வளையையும் நெறிப்பதற்கு தீர்மானத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் தேவைப்படுமாயின், அஇஅதிமுகவின் மனதை மாற்ற அவர்கள் செய்யும் முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் குழு ஒன்று நெய்வேலி சென்றபோது, அக்டோபர் 27 விலை பேசலால் கோபமுற்றிருந்த பல தொழிலாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

water
ஒரு பெண் குடிநீர் பிடிக்கிறார்

”திருப்தியில்லாமல் தான் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியிருக்கின்றனர்” என்று ஒரு தொழிலாளி கூறினார். நிர்வாக நடவடிக்கையின் அச்சுறுத்தலால் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். “எனவே தன்னிச்சையான ஒரு வெடிப்பு திடீரென நிகழும். அந்த நேரத்தில் யார் தலைமையேற்க முன்வந்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்தப் படையும் அந்தத் தலைமையின் பின் நிற்கும். தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி ஆளுவதிலும் எங்களை கசக்கிப் பிழிந்து சுரண்டுவதிலும் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் வேலையை எடுத்துக் கொண்டிருக்கின்றன.”

நிரந்தரத் தொழிலாளரானாலும் சரி ஒப்பந்தத் தொழிலாளரானாலும் சரி NLC தொழிலாளர்களில் பலரும் வாழ்கின்ற மிகப் பரிதாபகரமான நிலைமைகளைக் குறித்தும் இன்னும் கூடுதலாக உ.சோ.வ.த. செய்தியாளர்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

கடந்த நாற்பது வருடங்களில் NLC நிலங்களில் தாங்களே கட்டிய கூரை வேய்ந்த வீடுகளில் சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். நிலத்துக்கான வாடகையை நிறுவனம் அவர்களிடம் இருந்து வசூலிக்கிறது. இது ஒன்பது மாத காலங்களுக்கு 5,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய்கள் வரை வித்தியாசப்படுகின்றது. ஆயினும் அதற்கடுத்து, குடியிருப்பவர்களுக்கு ஓடுநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட வழங்குவதற்கு அது எதுவும் செய்திருக்கவில்லை.

bill
NLC நிலங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களுக்கு “தற்காலிக” மின் இணைப்புகளுக்கு உள்ளூர் டவுன்ஷிப் எக்கச்சக்க கட்டணங்களை வசூலிக்கிறது. ஒரு “பிளாக்” அல்லது கூரை வீடுகளின் ஒரு தொகுப்பிற்கு 96,000 ரூபாய்க்கும் (2,130 அமெரிக்க டாலர்கள்) அதிகமாக வந்திருக்கும் ஒரு பில் இதோ:

எந்த சுத்த அல்லது சுகாதார வசதிகளும் கிடையாது. மக்கள் மின்சாரத்திற்கு பணம் செலுத்தினாலும், போதுமான விநியோகம் இல்லை. அதாவது ஒரு பகுதியில் மின்சாரம் வரும் இன்னொரு பகுதி “இருளில்-மூழ்கும்” என்கிற நிலைக்கு குடியிருப்புவாசிகள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். பள்ளிக் குழந்தைகள் மங்கிய வெளிச்சத்தில் படிக்கத் தள்ளப்படுவதால் அவர்களுக்குப் பார்வைக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. ஆனாலும், சற்றுத் தொலைவில், தனது மேலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களுக்கு NLC ஒதுக்கியிருக்கும் பகுதியில் டென்னிஸ் மைதானங்களும் மற்ற வசதிகளும் ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன.

சமீபத்தில் தனது நிலங்களில் வாழும் தொழிலாளர்களை ஆக்கிரமிப்புக்காரர்கள், ”சமூக விரோதிகள்” மற்றும் ”சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள்” என்று NLC நிர்வாகம் முத்திரை குத்தியுள்ளது. அவர்களைக் காலி செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

”தொழிலாளர் குடியிருப்பு” என்பதாக அழைக்கப்படுவதில் வசிக்கும் பலரும், தங்களை வெளியேற்ற அச்சுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும், மத்திய அரசுக்குச் சொந்தமான NLC நிறுவனமும் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்க அதிகாரிகளும் தங்கள் மீது மோசமான வாழ்க்கை நிலைமைகளை திணிப்பதை எதிர்த்தும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களைப் புறக்கணிக்கும் எண்ணம் கொண்டிருப்பதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கட்டுரையாசிரியர்கள் இவற்றையும் பரிந்துரைக்கின்றனர்:

நோக்கியா அசெம்பிளி-லைன் ஆலையில் இந்திய தொழிலாளர் உயிரிழக்கச் செய்யப்பட்டார்

இந்தியா: தொழிலாளர்களை உளவுபார்ப்பதை அதிகரிக்க போலிஸ் அதிகாரி உறுதியெடுக்கிறார்