சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: 13,000 contract workers strike at lignite mine and power-company

இந்தியா: லிக்னைட் சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தம்

By Sathish Simon and Arun Kumar
23 October 2010

Use this version to print | Send feedback

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வரும் வேலைநிறுத்தம் அக்டோபர் 21 அன்று தனது இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

என்.எல்.சி.யின் 14,000 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்வதற்கு சங்கங்கள் மறுத்து விட்ட நிலையிலும், அரசாங்கமும் சரி எதிர்க்கட்சிகளும் சரி போராடும் தொழிலாளர்களை நிரந்தரமாக மலிவு ஊதியத் தொழிலாளர்களாகவே விட்டுவிடுவதற்கு வகை செய்வதான ஒரு உடன்பாட்டை அவர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிகள் செய்கின்ற நிலையிலும், மிகக் குறைந்த ஊதியம் அளிக்கப்பட்டு வெகுவாய் சுரண்டப்பட்டு வந்த அத்தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தில் மகத்தான உறுதியைக் காட்டி வருகின்றனர்.


வேலைநிறுத்தம் செய்யும் நெய்வேலி லிக்னைட் நிறுவன தொழிலாளர்கள்

நெய்வேலி நிறுவனம் லிக்னைட் சுரங்கத் தொழிலிலும் மின்சார உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் நெய்வேலியில் உள்ள திறந்த-துளை சுரங்கங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. தமிழ்நாட்டிற்கும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அதன் அண்டை மாநிலங்களுக்கும் இது தான் முக்கியமான மின்சார விநியோகப் புள்ளியாக விளங்குகிறது. அத்துடன் இது இந்தியாவின் மிக உயர்ந்த இலாபமீட்டும் பொதுத் துறை நிறுவனங்களில் (PSU) ஒன்றாகும். சென்ற மார்ச் 31 உடன் முடிவடைந்த 2009-10 நிதியாண்டில், என்.எல்.சி. 78 பில்லியன் ரூபாய்களை ஈட்டியிருந்தது, அதாவது 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பத்து கோரிக்கைகள் கொண்ட பட்டியலை வலியுறுத்தி செப்டம்பர் 20 அன்று 13,000 என்.எல்.சி. தொழிலாளர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடக்கினர். நிறுவனத்தின் “நிரந்தர”த் தொழிலாளர்களுக்கு நிகரான ஊதியம், சங்க அங்கீகாரம் மற்றும் நிரந்தர வேலை ஆகியவை இந்த பட்டியலில் அடங்குபவை.

சென்னையில் இருந்து தெற்கில் 200கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நெய்வேலியிலும், அதேபோல் நெய்வேலி அமைந்திருக்கக் கூடிய கடலூர் மாவட்டத்திலும் உள்ளூர் மக்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு பரவலான ஆதரவளித்துள்ளனர். கடந்த நான்கு வார காலங்களில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பல்வேறு போர்க்குணம் மிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர், சாலை மற்றும் ரயில் மறியல்களும் செய்தனர். அக்டோபர் 9 அன்று என்.எல்.சி. பேருந்துகளை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் மீது வெளிப்படையான போலிஸ் தாக்குதல், அக்டோபர் 1 அன்று ஒரு மின் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற இரண்டு ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது ஆகியவை உட்பட மிருகத்தனமான போலிஸ் அடக்குமுறைக்கு முகம் கொடுத்த நிலையிலும் அவர்கள் இப்போராட்டங்களை நடத்தினர்.

அக்டோபர் 19 அன்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த மாவட்ட அளவிலான பந்த்திற்கு (பொது வேலைநிறுத்தம்), 3,000 போலிசார் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் தமிழ்நாட்டின் திமுக மாநில அரசாங்கத்தின் அமைச்சர்கள் வேலைநிறுத்தத்திற்கு-எதிராக வேண்டுகோள்கள் வைத்த நிலையிலும், கடலூர் மாவட்டம் முழுவதும் வலிமையான ஆதரவு கிட்டியது.

திமுக ஆதரவு சங்கமான தொழிலாளர் முற்போக்கு முன்னணி (LPF) ஆரம்பத்தில் வேலைநிறுத்தத்தில் இணைந்தது. ஆனால் திமுகவுடனான கூட்டால் (இக்கட்சி தமிழகத்தில் அரசாங்கம் அமைத்துள்ளதுடன் இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறது) வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சிகளில் இப்போது LPF முன்னே நிற்கிறது.

வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை ஒப்பந்தத் தொழிலாளர்களால் தாங்க முடியாது என்று கூறி, வேலை நிறுத்தத்தை முடிப்பதற்கு என்.எல்.சி. ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்புடன் LPF அக்டோபர் 10 அன்று ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மாதாந்திர ஊதியத்தை வெறும் 1,040 ரூபாய் ($23) அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் அழைத்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் (பெருவாரியான LPF உறுப்பினர்களும் இதில் உண்டு) இந்த அடகுவைப்பை நிராகரிக்க வாக்களித்தனர். ஆயினும் வேலைநிறுத்தத்தை பலவீனப்படுத்துவதற்கான இன்னுமொரு முயற்சியாக LPFஐச் சேர்ந்த சிலர் மட்டும் வேலைக்குத் திரும்பினர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு (சுரங்கத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பிற துணைப் பணித் தொழிலாளர்கள்) மாதம் 3,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) முதல் 4,500 ரூபாய் (100 அமெரிக்க டாலர்) வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த தொகை அதே வேலையைச் செய்யும் “நிரந்தர”த் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் நெய்வேலிக்கு சென்றபோது, அங்கு இரண்டு தசாப்தங்களுக்கு என்.எல்.சி. வேலைகளில் பங்குபெற்றிருந்தும் இன்னும் “நிரந்தர” தொழிலாளர்கள் என்னும் அந்தஸ்து மறுக்கப்படும் பல்வேறு தொழிலாளர்களுடன் அவர்கள் பேசினர்.

1992ல் அவரது 18வது வயதில் என்.எல்.சி. நிறுவனம் அவரது விவசாய நிலத்தைப் பறித்துக் கொண்ட பின் வேலைக்குச் சேர்ந்தவர் கருணா. இப்போது பதினெட்டு வருடங்களாகியும் இன்னும் அவர் ஒரு ஒப்பந்தத் தொழிலாளராகவே இருக்கிறார். கருணா சொல்கிறார்: “வேலையும் நிதி இழப்பீடும் அளிப்பதாக உறுதியளித்து எனது நிலத்தை என்.எல்.சி. எடுத்துக் கொண்டது, இழப்பீட்டுத் தொகை சந்தை விலைக்கும் மிகக் குறைந்த தொகையாகும். நான் வேலை பார்க்க வந்த சமயத்தில் எனது ஒருநாள் கூலி 30 ரூபாயாக இருந்தது. இப்போது கையில் வாங்குவது 198 ரூபாய். நான்கு பிள்ளைகளை வைத்துக் கொண்டு, இந்த குறைந்த சம்பளத்தில் எங்கள் குடும்பத்தை ஓட்டுவது சாத்தியமில்லாதது.”

”எல்லா ஒப்பந்த தொழிலாளர்களைப் போலவே எனக்கும் ஒரு மாதத்தில் 26 ஷிப்டுகளுக்குப் பதிலாய் 20 ஷிப்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. ஏனென்றால் ஒரு மாதத்தில் எனக்கு 26 ஷிப்டுகள் கிடைத்து விட்டால், அப்போது ஒரு நிரந்தரத் தொழிலாளருக்கான தகுதி எனக்குக் கிட்டி விடும். அதனைத் தடுப்பதற்குத் தான் என்.எல்.சி. நிர்வாகம் விரும்புகிறது.”

தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றிக் கூறிய கருணா, “நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தொழிலாளர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.

மிரட்டி வேலைக்குத் திரும்பச் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் முயன்றதாக கருணா (நிர்வாகம் பழிவாங்கக் கூடும் என்ற அச்சத்தில் தனது முழுப் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கருணா கேட்டுக் கொண்டார்) தெரிவித்தார். மேலாளர்கள் தொழிலாளர்களை தொலைபேசியில் அழைத்தும் கடுமையாகத் தூற்றி வருவதாக அவர் கூறினார்.

என்.எல்.சி.யில் 28 வருடங்களாக அதாவது 1982 முதல் வேலைபார்த்து வரும் ஒரு 55 வயது ஒப்பந்தத் தொழிலாளியிடமும் உ.சோ.வ.த. செய்தியாளர்கள் பேசினர். இன்னும் மூன்று வருடங்களில் அவர் சட்டபூர்வமாக “ஓய்வு” வயதை எட்டி விடுவார், ஆனால் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாக அவர் பேசுவதற்கு ஓய்வூதிய அல்லது பிற நல உதவிகள் எதுவும் கிடையாது. ஆயினும் ஒரு ஏமாற்றான சேமநல நிதிக்காக அவரது மற்றும் பிற தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பணம் வழக்கமாய் பிடித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த தொழிலாளியின் வாடி வதங்கி வளைந்திருந்த தோற்றமே சுரங்கத்தில் தசாப்தக் கணக்கில் வேலை பார்த்திருந்தது அவரது உடல்நலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடினமான ஹெல்மெட்டுகள், ஷூக்கள் மற்றும் கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு சாதனங்கள் கூட வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், வேலை நேரத்தில் அவர்கள் காயமடைந்தால் முறையான மருத்துவச் சிகிச்சை இத்தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

ஜீவா தொழிற்சங்கம் தான் 8,000 உறுப்பினர்களுடன் ஒப்பந்தத் தொழிலாளர்களின் மிகப் பெரிய தொழிற்சங்கமாகும். இது, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) ஆதரவுடனான அனைத்து இந்திய தொழிற் சங்க பேரவை (ஏஐடியுசி) என்னும் தொழிற்சங்க கூட்டமைப்புடன் சேர்ந்ததாகும். திமுகவின் LPF மற்றும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்டு) சேர்ந்த இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) ஆகியவை உட்பட இன்னும் ஏழு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றுள்ளன. இதே சங்கங்கள் தான் என்.எல்.சி.யின் நிரந்தரத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றாலும் இவற்றில் ஒரு சங்கம் கூட அவர்களை வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான வேலை நடவடிக்கையை எடுக்க அழைப்பு விடவில்லை. இதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமும் மற்றும் மாநில அரசாங்கமும் நடத்தும் அடக்குமுறைப் பிரச்சாரத்தை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்கள் தனியே போராட அவை விட்டு விட்டன.

நெடுங்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் இந்த கொள்கை என்.எல்.சி.க்கு அசாதாரண இலாபம் ஈட்டித் தரும் ஒன்றாக நிரூபணமாகி வந்துள்ளது. சென்ற ஜூலை மாதத்தில் 14,000 நிரந்தரத் தொழிலாளர்கள் ஆறு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கிய போது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையில் தொடருமாறு அவர்களிடம் கூறப்பட்டது.

சந்தை-ஆதரவுக் கொள்கைகளை நோக்கிய இந்தியாவின் 1991 ஆம் ஆண்டுத் திருப்பத்தை வடிவமைத்த கட்டுமான நிபுணரும் தனியார்மயமாக்கத்தை வலிமையாக உபதேசிப்பவருமான பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்சினையில் தலையிடுவதற்கு அவருக்கு நெருக்குதலளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகளும் அவற்றைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் (சிபிஐ மற்றும் அதன் தொழிற்சங்கமான ஏஐடியுசி மற்றும் சிபிஎம் மற்றும் அதன் தொழிற்சங்கமான சிஐடியு ஆகியவையும் இதில் அடங்கும்) தொழிலாளர்களை வலியுறுத்தி வருகின்றன. என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான சிபிஐ கட்சியைச் சேர்ந்த சங்கத்தின் தலைவர் பி.குப்புசாமி மன்மோகன் சிங்கிற்கு ஒரு பரிதாபமூட்டும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வெறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கும் குப்புசாமி, “என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இதேமாதிரியான ஒன்றை பிரதமர் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

தமிழக அரசியலில் திமுகவின் முக்கிய எதிரியான அதிமுகவின் பிரதிநிதிகள் உட்பட எதிர்க் கட்சித் தலைவர்களின் ஒரு குழு வெள்ளியன்று மாலை என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கையும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வாலையும் சந்தித்துப் பேசுவதாக தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீப மாதங்களில் “மக்கள் போராட்டங்களில்” தன்னுடன் சேர்ந்து போராடுவதற்கு முன்னாள் பிரபல சினிமா நட்சத்திரமான ஜெயலலிதா தலைமையிலான வலதுசாரி அதிமுக கட்சியை ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தலில் அதிமுகவுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைப்பது தான் இதன் உண்மையான நோக்கம். சென்றமுறை அதிமுக அதிகாரத்தில் இருந்தபோது, கருங்காலிகளை அமர்த்தியும், தொழிலாளர்களைக் கைது செய்தும், துப்பாக்கிச் சூடுகள் நடத்தியும் 200,000 அரசாங்க ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை உடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பாதி தனியார்மயமாக்கப்பட்டு விட்ட பல பொதுத் துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. இன்னும் தனியார்மயமாக்கத்தை செயல்படுத்தவே காங்கிரஸ்-தலைமையிலான மத்திய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதையும் அவர்களுக்கு “நிரந்தர”த் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் வழங்குவதையும் எப்பாடுபட்டேனும் தடுக்கும் தீர்மானத்துடன் தான் என்.எல்.சி. நிர்வாகம் உள்ளது. ஏனென்றால் இவற்றைச் செய்தால் நிறுவனத்தின் இலாபங்கள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பைக் குறைத்து விடும்.

2006 ஜூலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் என்.எல்.சி. மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டத்தை முன்னெடுத்தது. என்.எல்.சி. தொழிலாளர்கள் இத்திட்டத்திற்கு எதிராக போர்க்குணத்துடன் வேலைநிறுத்தத்தில் இறங்கினால் அதன் பாதிப்பு கடுமையாய் இருக்கும் என்று அஞ்சிய திமுக மத்திய அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மிரட்டிய பின்னர், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. (இந்தியா: UPA அரசாங்கம் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் திட்டங்களை நிறுத்தி வைக்கத் தள்ளப்பட்டது).

ஆயினும் இப்போது இந்தியாவின் பெருகிச் செல்லும் நிதிப் பற்றாக்குறை குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை தணிக்கும் பொருட்டு எடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைத் தொகுப்பின் பாகமாக இந்த பங்கு விற்பனையை முன்கொண்டு செல்லும் தீர்மானத்துடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மொத்தமும் இருக்கிறது.

என்.எல்.சி. வேலைநிறுத்தம் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் பெருகி வரும் தொழிலாளர் போராட்ட அலையின் ஒரு பகுதி ஆகும். இந்த புதிய போர்க்குணம் குறித்த ஆளும் வர்க்கத்தின் கவலையை அக்டோபர் 17 அன்று வந்த பிடிஐ செய்தி எதிரொலித்தது. ”இந்தியாவின் ’டெட்ராயிட்’டை தொழிலாளர் போராட்டங்கள் உலுக்குகின்றன” என்ற தலைப்பில் வந்த அந்த செய்தியின் ஒரு பகுதி இப்படிச் சொல்கிறது: “வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவில் இங்கு அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் இந்நகரம் [தமிழக தலைநகரமான சென்னை] இந்தியாவின் டெட்ராயிட் என அறியப்பட வந்திருக்கிறது. ஆனால் பல தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள் அந்தப் பெருமையை வெலவெலக்கச் செய்து, தொழிற்துறை அமைதியை கேள்விக்குறியாக்கி உள்ளன.” அந்த செய்தி அதன்பின், சென்னையில் அல்லது அருகில், என்.எல்.சி., ஹூண்டாய் மற்றும் நோக்கியா ஆலைகள், மற்றும் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட சமீபத்தில் வேலைநிறுத்தம் நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் ஏராளமான இடங்களைக் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவின் ஆளும் மேற்தட்டின் அதே கவலைகளையே பகிர்ந்து கொள்ளும் ஸ்ராலினிச கட்சிகளும் அவற்றின் சங்கங்களும் எனவே என்.எல்.சி. தொழிலாளர் போராட்டங்களைத் தனிமைப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் தீர்மானத்துடன் இருக்கின்றன. இதற்காகத் தான் மன்மோகன் சிங் மற்றும் திமுக அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரும் அவற்றின் விண்ணப்பங்களும், என்.எல்.சி.யின் நிரந்தர ஊழியர்களும் கூட சேர்ந்து விடாத வண்ணம் வேலைநிறுத்தம் எந்த வகையிலும் விரிவடைவதற்கு அவை காட்டும் எதிர்ப்பும் ஆகும்.