சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Mass protests continue in Indian-held Kashmir

இந்தியா வசமுள்ள காஷ்மீரில் தொடரும் வெகுசன ஆர்ப்பாட்டங்கள்

By Arun Kumar and Kranti Kumara
19 August 2010

Use this version to print | Send feedback

இந்தியாவின் வடபகுதியில் முஸ்லிம் பெரும்பான்மை மக்களைக் கொண்ட ஒரே மாநிலமான ஜம்மு-காஷ்மீர் என்றழைக்கப்படும் காஷ்மீரில், ஊரடங்கு உத்தரவு உட்பட, பரவலாக பொதுமக்கள் கைது செய்யப்படுதல், ஆர்ப்பாட்டங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு என அரச அடக்குமுறை நீடித்தாலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

ஜூன் மத்தியில் இருந்து இதுவரை அலை போன்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 58 ஆர்ப்பாட்டக்காரர்களை இந்திய பரா இராணுவ மத்திய ரிசேவ் படையினரும் (CRPF), மாநில போலீசாரும் சுட்டுக் கொன்றுள்ளனர் (80 அல்லது அதற்கும் அதிகமானோர் இறந்தததாக தகவல்கள் கூறுகின்றன). மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 11ந் தேதி 17வயது வாலிபர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இப் போராட்டம் தொடங்கியது.

இந்தப் படுகொலைக்கு காரணமான மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், இறுதி மரண ஊர்வலத்தின் மீதும் CRPF மற்றும் மாநில போலீசார் தங்கள் இஷ்டம்போல் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு மாநில அரசாங்கமும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமும் முழு அதிகார அனுமதி அளித்துள்ளது.

இப்போராட்டத்தின் போது மூர்க்கத்தனமான அரச வன்முறைகளே மேலும் கிளர்ச்சி தொடர்வதற்கான ஒரு முக்கிய காரணியாக ஆகியுள்ளது. பாதுகாப்பு படையினக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே 900க்கும் மேற்பட்ட மோதல்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு அடிக்கடி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளிகள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், அவ்வப்போது கிடைக்கும் சொற்ப வருவாயையும் இழக்க நேரிட்டதால் அவர்களின் கோபம் மேலும் கிளர்ந்தெழுந்தது.

ஆர்ப்பாட்டங்களின் போது நிகழ்ந்த தொடர் கல்லெறிச் சம்பவங்கள், பாகிஸ்தான் ஆதரவு, தனி-காஷ்மீர் கோரும் பிரிவினைவாத தீவிரவாதிகள் ஆகியோர் பின்னணியில் இருந்து செயல்படுவதையே எடுத்துக்காட்டுகிறது என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டி, தங்கள் அடக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முயலுகின்றனர். ஆனால், இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடைபெற்றுவரும் மோதல்களில் ஒரு போலீஸ்காரர் அல்லது பரா இராணுவச் சிப்பாய் கூட கொல்லப்படவில்லை.

மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக உயிரிழந்தது கடைசியாக கடந்த ஆகஸ்ட் 17 செவ்வாயன்று ஏற்பட்ட சம்பவமாகும். அவர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.

ஆகஸ்ட் 13ந் தேதியன்று புனித ரமலான் மாதம் தொடங்கிய பின்னரும், இங்கு அரச வன்முறைக்கு முடிவேதும் ஏற்படவில்லை

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்னர் வெடித்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 3 இளைஞர்களும், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக ஒரு நிராயுதபாணியான ஆர்ப்பாட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்றனர். இந்த இரு நாள் அரச வன்முறையின் விளைவின் காரணமாக 6 பேர் கொல்லப்பட்டும் 70 பேர் காயமடைந்ததை இது ஏற்படுத்தியது.

இம்மாநிலத்தில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் போராட்டங்களை இளைஞர்கள் தான் முன்னின்று நடத்தியுள்ளதுடன் இவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். ஆனால் மாநிலத்தில் இந்திய ஆட்சிக்கு மரபுரீதியான எதிர்ப்பின் மையமாகவுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு பரந்தளவிலான மக்கள் பகுதியினர் இதில் பங்குபற்றியிருந்தனர். முதியோர், பெண்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருமே இதில் அடங்குவார்கள்.

தேசிய மாநாட்டுக் கட்சி (காஷ்மீர்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை தலைமை தாங்கும் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகஸ்ட் 5ம் தேதியன்று மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்திக்க அங்கு சென்றபோது, ஆத்திரமடைந்த காயமடைந்தவர்களின் உறவினர்களால் அவர் தாக்கப்பட்டார். `இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?’ என காயமடைந்தவரின் தாயார் ஒருவர் உமர் அப்துல்லாவைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் முதலமைச்சரின் சட்டை கொலரை இறுக்கப் பிடித்து அவரை குலுக்கினார். கடைசியில் கைகலப்பு முற்றிப்போய் நிலைமை களேபரமாகியதால் பாதுகாவலர்கள் குறுக்கிட்டு அப்துல்லாவை பத்திரமாக அழைத்துச் சென்று, தயாராக நின்றிருந்த ஹெலிகாப்டரில் அவரை அனுப்பிவைத்தனர்.

இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளின் பொதுமக்கள் எதிர்ப்பு நிலையானது பல தசாப்தங்களாக ஒரு போலீஸ் அரசிற்கு இன்றியமையாத அடக்குமுறையின் தோற்றம் தான் பொதுமக்களின் சீற்றத்தை வலுவடையச் செய்துள்ளது.

10 மில்லியன் மக்களுக்கு சற்று கூடுதலான தொகை மட்டுமே கொண்ட ஜம்மு-காஷ்மீரில், கடந்த இருபது ஆண்டுகளில், அரை மில்லியனுக்கும் அதிகமான இராணுவ படையினரை இந்திய அரசு ஈடுபடுத்தியுள்ளது. உலகிலேயே இராணுவக் குவிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரில், ஒவ்வொரு 20 பேருக்கும் தலா ஒரு இராணுவம் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தானிய ஆதரவு எழுச்சியை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு சித்திரவதை, பாலியல் வல்லுறவு, விசாரணைகளற்ற மரணதண்டனைகள், ``காணாமற்போகச் செய்தல்’’, காரணமின்றிக் கைது செய்தல் என போலீஸ், பரா இராணுவப் படையினர் மற்றும் இந்திய இராணுவப் படையினரைக் கொண்டு மிருகத்தனமான வன்முறையைக் கட்டவிழ்ப்பது ஆகியவைகள் மத்திய அரசாங்கத்தினுடைய மீண்டும் மீண்டும் தேர்தல் மோசடி செய்வதை மட்டுமே இலாபமடைவதற்கு இட்டுச் செல்லுகிறது.

இதுவரை இந்த யுத்தத்தில் 47,000க்கும் மேற்பட்ட நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000-ஐத் தாண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இரு கொடூரமான ஜனநாயக விரோதச் சட்டங்களை தங்களுக்கு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்புப் படையினர் இஷ்டம்போல் தண்டனையிலிருந்து தப்பித்துச் செயல்படுகின்றனர். இந்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்கீழ், எழுச்சியை ஒடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநில படையினர் எந்தக் குற்றச் செயலையும் புரிய தடையில்லை. அதேபோல, ஜம்மு-காஷ்மீர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம்.

பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் `இயல்பு நிலை’ திரும்ப பாடுபட்டு வருவதாகக் கூறிவரும் இந்திய அரசுக்கு பொதுமக்களின் ஆத்திரம் பேரிடியாக விழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் வழக்கமாக இந்திய அரசுக்கு ஊதுகுழலாகச் செயல்படும் பத்திரிகைகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை ஆகஸ்ட் 1ந் தேதி தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில், `காஷ்மீர் மக்கள் மாநில நிர்வாகத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவது அவர்களின் வெறுப்புணர்வு மற்றும் எதிர்ப்பின் உண்மையான வெளிப்பாடாகும். பாகிஸ்தானின் அறிவுரைப்படி அதிருப்தியான கூலிக்கு வேலை செய்யும் பிரிவினைவாதக் குழுக்கள் இதைத் தூண்டிவிட்டுள்ளதாகக் கருதக்கூடாது.’ என்று அறிவுரை கூறியுள்ளது.

’பீதியும், விரக்தியும் அடைந்த போலீசார் கண்மூடித்தனமாக மரணம் விளைவிக்கக் கூடிய ஆயுதபலத்தைப் பிரயோகித்ததால்தான் காஷ்மீர் வீதிகளில் படுகொலைகள் நிகழ்ந்தனவே தவிர, மக்களின் போராட்டங்கள் அதிகாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியதால் அல்ல’ என இந்து நாளிதழ் தன் பங்குக்கு மாநில அரசாங்கத்தைச் சாடியதோடு, வன்முறையை வேண்டுமென்றே துண்டிவிட்டதாகவும் கூறியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆகஸ்ட் 14 அன்று `காஷ்மீரில் நிச்சயமற்றநிலை’ என்ற தலைப்பிலான கட்டுரையின் முடிவில், `இளம் தலைமுறையினர் காஷ்மீர் வீதிகளில் இறங்கிப் போராடியதற்கு ஆத்திரம் காரணமல்ல. அவர்கள் நன்கு விஷயமறிந்தவர்கள், தீவிரமயப்படுத்தப்பட்டுள்ளனர். அக்காலத் தலைமுறையினரை போலன்றி இவர்கள் நன்கு படித்த, சர்வதேச பிரச்சனைகள், நிலைப்பாடுகளை அறிந்தவர்கள். இவைகளை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இது போன்ற சமூக வலைப்பின்னல்களில் காணமுடியும். யாரும் அதை மறுக்க முடியாது. காஷ்மீர் பிரச்சனையில் விளையாடிக் கொண்டிருந்த காலமெல்லாம் கடந்துவிட்டது’ என்று எழுதப்பட்டுள்ளது.

`உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு’ என்பதற்கு முன்னுதாரணம் மற்றும் `அமெரிக்காவின் இயற்கையான தோழன்’ என இந்தியாவைக் குறிப்பிடும் ஒபாமா நிர்வாகத்துக்கும், புஷ் நிர்வாகத்துக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வழக்கமாக ஒப்புவிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் இப்பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒர் உயர்ந்த மூலோபாய பிராந்திய எல்லையில் இருப்பதால் ஜம்மு-காஷ்மீர் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. மேற்குக் கரையிலும், காஸா பகுதியிலும் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைப் போல, ஜம்மு-காஷ்மீர் அலைபோன்ற போராட்டங்களும் ‘காஷ்மீர் இன்ரிபடா’ போல் இருக்கிறது என்று டைம்ஸ் அறிக்கை விவரித்துள்ளது.

எதிர்பார்த்ததைப் போலவே, பாகிஸ்தான் தான் இந்தப் போராட்டத்துக்கு காரணம் என இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியது.

கடந்த 2008 நவம்பரில் மும்பையில் கமாண்டோப் படை பாணியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் காஷ்மீர் கிளர்ச்சிப் பின்னணியில் இருந்து நடத்துகிறது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜூன் இறுதியில் கூறியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய், பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு ஆகஸ்ட் 6ந் தேதியன்று பதிலளித்த சிதம்பரம், பாகிஸ்தான் தான் காஷ்மீர் போராட்டத்துக்கு காரணம் என திட்டவட்டமாக குற்றம் சாட்டினார். தனது அறிக்கையில் சிதம்பரம் கூறியதாவது:

`ஜம்மு-காஷ்மீர் நிகழ்வுகளில் செல்வாக்குச் செலுத்தும் அதனுடைய மூலோபாயத்தினை பாகிஸ்தான் மாற்றிக் கொண்டுவிட்டதாக தெரிகிறது. பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்திவிட்டால் அதிகமான பலன் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் மக்களின் மனதையும் இதயத்தையும் வெல்வதன் மூலம் அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும் என திடமாக நம்புகிறேன்’ என்றார் சிதம்பரம்.

ஆனால் காஷ்மீர் மக்களின் `மனதையும், இதயத்தையும் வெல்வது' எப்படி என்பதை இந்திய அரசாங்கம் அன்றைய தினமே நடத்திக் காட்டிவிட்டது. அதிரடிப் படையின் 3 கம்பெனிகளை, அதாவது ஏறத்தாழ 300 படையினர்களை மாநிலத்திற்கு இந்திய அரசாங்கம் அனுப்பிவைத்தது. இதே பகுதிக்குத்தான் ஆகஸ்ட் தொடக்கத்தில் மேலும் 21 கம்பெனி பரா இராணுவப் படையினரை அரசாங்கம் அனுப்பிவைத்தது

பூகோள நெருக்கடியின் பிற்போக்கின் பாகமாக கடந்த 1947ல் தெற்காசியாவில் இரு அரசுகளிற்கிடையிலான வகுப்புவாத பிரிவினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு நீண்ட வரலாற்று காய்நகர்த்தல்கள் முயற்சி சம்பவங்களை கொண்டிருக்கிறது. பிரிவினை ஏற்பட்ட உடனேயே ஜம்மு-காஷ்மீரின் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. இப்போரின் முடிவு, முன்னாள் இளவரசிற்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டிற்கும் உரியதாக பிரிக்கப்பட்டு காஷ்மீரி மக்களைத் துண்டாட வழிவகுத்தது.

ஜம்மு-காஷ்மீர் அரசியலில் பாகிஸ்தான் தனது செல்வாக்கைப் பயன்படுத்த பல தசாப்தங்களாக முயற்சித்தும் சிறிய பலன்தான் கிடைத்தது. காஷ்மீரைத் தனிமைப்படுத்தி, பதட்டத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சூழ்ச்சியை செயல்படுத்தும் வகையில், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீரி மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட இந்தியாவின் உயர்தட்டினர் வெறுப்புடன் நிராகரித்தும், புறக்கணித்தும் வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பல வாரங்களாக ஜம்மு-காஷ்மீரின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஆகஸ்ட் 10ந் தேதியன்று மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளின் மகாநாட்டை கூட்டிப் பேசியதுடன், தொலைக்காட்சி மூலம் உருதுமொழியிலும் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நாட்டுக்கு ஆற்றிய உரையிலும் அவர் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகளைக் குறிப்பிட்டார்.

பிரதமர் ஆற்றிய உரைகளின் போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவது, அந்த மாநிலத்துக்கு கூடுதல் சுயாட்சி வழங்குவது, வன்முறையைக் கைவிடும் எந்தக் காஷ்மீர் தலைவருடனும் பேச்சு நடத்துவது, இராணுவத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரச் சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெறுவது என பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

ஆகஸ்ட் 10ந் தேதியன்று பிரதமர் ஆற்றிய உரையின் போது, ``இளைஞர்கள் காஷ்மீர் வீதிகளில் இறங்கிப் போராடும் அளவுக்கு விரக்தி- கோபத்துடன் உள்ளதைப் புரிந்து கொள்வதாகவும், அவர்களின் வேதனையை உணர்வதாகவும்’’ தெரிவித்தார். அதே நேரத்தில் கொலைகார இராணுவப் படையினரை அவர் பாராட்டத் தவறவில்லை. ``வெவ்வேறு சூழ்நிலைகளில் கடும் சவாலான நிலைப்பாட்டை சமாளிக்கின்றனர்’’ என அவர்களுக்காக வாதாடினார் சிங்.

இந்தியாவிற்குட்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி வழங்குவோம் என சிங் பேசியதற்கு, இந்து மேலாதிக்கக் கட்சியான பாரதிய ஜனதா உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது. உண்மையைக் கூறவேண்டுமெனில், இந்திய ஐக்கியத்திற்குட்பட்டு ஏற்கனவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசாங்கமும் ஆளும் தட்டினரும் இந்த சாசனத்தை நடைமுறையில் மீறித்தான் நடந்து வந்திருக்கின்றன.

பல ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் அளித்துவந்த வாக்குறுதிகளைப் போன்றுதான் மன்மோகன் சிங்கின் வாக்குறுதிகள் அமைந்திருப்பதாகவும், மாநிலத்தில் அரச அடக்குமுறை தொடர்ச்சியாக நிகழ்வதை மூடிமறைக்க மட்டுமே இவை பயன்பட்டிருப்பதாகவும் பல்வேறு பொது தொடர்புச் சாதனங்களும் கருத்துக்கூறுபவர்களும் ஒத்துக் கொள்கின்றனர்.