World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Mid-East talks: A conspiracy against the Palestinians

அமெரிக்கா-மத்திய கிழக்குப் பேச்சுக்கள்: பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஒரு சதி

By Chris Marsden
2 September 2010

Back to screen version

இஸ்ரேலிய பிரதம மந்திரி பின்யாமின் நெத்தென்யாகுவிற்கும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் (PA) தலைவர் முகமத் அப்பாசிற்கும் இடையே வாஷிங்டனில் இன்று நடைபெற்ற பேச்சுக்கள் மத்திய கிழக்கில் தன் கொள்ளையடிக்கும் நலன்களை அதிகரிக்க முயலும் அமெரிக்காவின் வழிவகையாகும்.

ஒபாமா நிர்வாகம் தடையின்றி அப்பாஸ் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றவும், வார்த்தைகளில் இல்லை என்றாலும் நடைமுறையில் பாலஸ்தீனிய அதிகாரம் இஸ்ரேல் குடியேற்றக் கட்டமைப்பை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை தொடரப்படும் என்பதை கைவிடவும் அப்பாஸிற்கு அதிக அழுத்தம் கொடுத்துவருகிறது.

மேற்குக் கரையில் 10 மாத காலத்திற்கு குடியிருப்பு கட்டமைத்தல் முடக்கம் என்பது செப்டம்பர் 26ம் திகதி முடிவடைகிறது. நெத்தென்யாகு தன்னுடைய கட்சிக்கும் கூட்டணி அரசாங்க நட்பு கட்சிகளுக்கும் இது புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு ஏற்பட்டால் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று பாலஸ்தீனியர்கள் அச்சுறுத்துவதுடன் அதற்கான ஆதரவை வாஷிங்டனிடம் முறையிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பற்றி கவனிக்கும் நால்வர் குழுவான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மற்றும் ரஷ்யா குடியேற்றக் கட்டமைப்பு பற்றி பொதுவாக எதிர்க்கின்றன. ஆனால் இஸ்ரேலிடம் இது பற்றி அமெரிக்கா கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, மாறாக டெல் அவிவ் வலியுறுத்தியுள்ளதுபோல், “முன்னிபந்தனை இன்றி” பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று கூறுகிறது.

அமெரிக்காவிற்குச் சென்றுள்ள பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் பொதுப் பிரதிநிதிக்குழுவின் தலைவர் Maen Rashid Areikat, Ha'aretz பத்திரிகையால் இஸ்ரேலியர்களின் குடியிருப்பு முடக்கத்தை விரிவாக்கும் கோரிக்கையை கைவிட்டுவிடுமாறு பாலஸ்தீனியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டனரா என்று நேரடியாகக் கேட்கப்பட்டார். “இதை ஒரு அழுத்தம் என்று கூறமுடியாது” என்ற பதிலளித்த விதத்தில் நேரடி விடையை அவர் தவிர்த்துவிட்டார்.

பாலஸ்தீனிய அதிகாரமானது அமெரிக்காவின் ஆணைகளுக்கு அப்படியே உடன்பாட்டு பிரச்சினையை முற்றிலும் கைவிட்டுவிடாது என்பதை அவர் தெளிவாக்கினார். “சாதாரண பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கைகள் நடப்பதைக் காண்கின்றனர், பின்னர் பேச்சுவார்த்தைகள் பற்றி இஸ்ரேலியர்கள் உண்மையில் தீவிரமாக உள்ளார்களா என்று தான் வியக்கின்றனர். எங்களுக்கு எங்கள் அரசை அமைக்க இந்த நிலங்கள் வருமா என்று தான் நினைக்கின்றனர். எனவேதான் கட்டமைப்பை அவர்கள் தொடர்ந்தால் நாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது.”

அப்படி இருந்தும் பாலஸ்தீனிய வெகுஜனங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கின் முன் அனுமதி இல்லாத எதுவும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் கணிசமான சலுகைகள் கொடுக்கிறது என்ற கூற்றுக்கள் பிரச்சாரத் தாக்குதல்களாக வெளிவந்துள்ளன. பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் Ha'aretzற்குக் கொடுத்த பேட்டியில் தானும் நெத்தென்யாகுவும் “இரு அரசுகள், இரு தேசங்கள்” என்ற கருத்திற்கு கடமைப்பாடுடையவர்கள் என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு அரசு தோற்றுவிக்கப்படுவதை அடித்தளமாக கொண்ட எவ்வித தீர்வும் “பல தலைமுறைகளுக்கு உறுதியான யூதப் பெரும்பான்மை” என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியதுடன், மறுபுறத்தில் “பாலஸ்தீனிய அரசு இராணுவமற்றதாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். ஒரு உடன்பாடு, “குடியேற்றப் பகுதிகளை எங்களிடம் இருந்தும், ஒதுக்கமாக இருக்கும் குடியேற்றப்பகுதிகள் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்குள் இருக்கும் குடியேற்றப்பகுதிகளுடன் இணைக்கப்படும்.” பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு உரிமை இருக்காது என்றும் பாலஸ்தீனிய தேசத்திற்குத்தான் திரும்பலாம் என்றும் கூறினார்.

ஜெருசலப் பிரச்சினை பற்றி, “மேற்கு ஜெருசலம் மற்றும் 200,000 பேருக்குத் தாயகமாக இருக்கும் அருகிலுள்ள 12 பகுதிகளும் எங்கள் பகுதியாக இருக்கும். கிட்டத்தட்ட கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் உள்ள அருகில் இருக்கும் அரேபியப் பகுதிகள் அவர்களுடையதாக இருக்கும். பழைய நகரம், ஒலிவ்ஸ் மலை மற்றும் டேவிட் நகரத்தில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுடன் ஒரு விஷேட ஆட்சி அமைக்கப்படும்.”

“அண்டைப்பகுதிகள்” என்பதன் அடிப்படையிலுள்ள இச்சூத்திரம் கிழக்கு ஜெருசலம் ஒரு பாலஸ்தீனிய நாட்டின் தலைநகர் என்பதை ஏற்பதில் இருந்து வழுவி உள்ளது. இன்னும் முக்கியமானது, குடியேற்றதிட்டத்தின் மூலம் மேற்குக்கரையில் சிறந்த நிலங்கள் பலவற்றைக் கைப்பற்றியதை சட்டபூர்வமாக்குகிறது. “அரசியல், பொருளாதாரம், நிலப்பகுதிகள்” இவற்றின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு அரசு அமைவதற்கு இது அனுமதிப்பதில்லை. வரலாற்றளவில் பாலஸ்தீனம் என்று இருந்த பகுதியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான பகுதி மீது தான் பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாடு அளிக்கப்படும்.

கடந்த காலத்தில் பாரக்கைவிட இன்னும் ஒளிவுமறைவின்றி நெத்தென்யாகு இருந்துள்ளார். ஜெருசலம் இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக இருக்கும், இஸ்ரேல் பாதுகாக்கப்படக்கூடிய எல்லைகளைக் கொண்டிருக்கும், இதற்கு ஒரு வருங்கால பாலஸ்தீன அரசின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலிய பிரசன்னம் இருக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

குடியேறியவர்களின் இயக்கத்தின் முக்கிய அமைப்பான யேஷா குழுவின் (Yesha Council) உறுப்பினர் ஒருவரான டானி டேயன், நெத்தென்யாகு வாஷிங்டனில் இருந்த அதே நேரத்தில் அங்கு இருந்து, யூத மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் செல்வாக்கை நாடி அவர்களுக்கு இஸ்ரேலின் குடியேற்றப் பகுதிகள் இன்னும் அதிகமாக பாலஸ்தீனியப் பகுதியில் நிறுவப்படுதலின் முக்கியத்துவம் பற்றி அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இச்சூழ்நிலையில், வாஷிங்டனுக்கு அப்பாஸ் சென்றுள்ளது அவர் அமெரிக்காவிற்கு வளைந்துகொடுக்கும் கருவி என்ற பங்கைத்தான் உறுதி செய்கிறது. மேலும் தன்னையும் தன் குழுவையும் அதிகாரத்தில் அமைதியற்ற, விரோதப் போக்குடைய பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராகப் பதவியில் தொடர்ந்து பாதுகாக்க பாலஸ்தீனத்தின் பல மில்லியன்களை உடைய ஆட்சியாளர்களின் தயவை உத்தரவாதம் செய்வதற்கு வாஷிங்டன் ஆதரவைத்தான் நம்பியுள்ளார் என்பதும் உறுதியாகிறது.

ஒரு பாலஸ்தீனிய அரசு என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதன் இஸ்ரேல் அல்லாத எல்லையை கட்டுப்பாட்டிற்குள் கொள்ளவிருக்கும் எகிப்தும் ஜோர்டானும் அமெரிக்க ஊக்கம் பெற்றுள்ள சதிக்குத் தங்கள் பங்கை அளிக்கின்றன. எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் ஜோர்டானின் அரசர் அப்துல்லாவும் நேற்று இரவு நடந்த, ஒபாமா விருந்தளித்திருந்த, ஆரம்பப் பேச்சுக்களில் பங்கு பெற்றனர். அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் செவ்வாயன்று எகிப்திய வெளியுறவு மந்திரி அஹ்மத் அப்துல் கெய்ட் மற்றும் ஜோர்டனிய வெளியுறவு மந்திரி நாசர் ஜூடாவுடன் பேச்சுக்கள் நடத்தினார்.

இஸ்ரேல், சிரியா மற்றும் லெபனான் ஆகியவை அமெரிக்க மத்திய கிழக்குத் தூதர் ஜோர்ஜ் மிட்ச்சலுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது: “சிரியாவைப் பொறுத்தவரை, எங்கள் முயற்சிகள் இஸ்ரேல் மற்றும் சிரியா விவாதங்கள், பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும், அவை அங்கு அமைதிக்கு வழிவகுக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.”

எகிப்திய வெளியுறவு மந்திரி கெய்ட் இஸ்ரேலுடனான பேச்சுக்களுக்கு சிரியா தயார் என்றும் மத்திய கிழக்குச் சமாதான முயற்சிகளைக் கவிழ்க்க முற்படாது என்றும் கூறியதாக Hurriyet Daily News தெரிவித்துள்ளது. செய்தித்தாள் எழுதியதாவது: “சிரிய சகோதரர்கள் எதையும் தடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன் என்று சுதந்திர எகிப்திய நாளேடான Al-Masri Al-Yom இடம் தெரிவித்தார். சிரியாவில் உள்ள சகோதரர்கள் ஒரு அமைப்புக்கள், குழுக்கள் தலைமைக்கு ஏற்பாடு செய்கின்றனர், அது இத்திட்டமான நேரடிப் பேச்சுக்களை நிராகரிக்கிறது. ஆனால் சிரியா இஸ்ரேலுடன் பேச்சுக்களை நடத்தத் தயார் என்பதை நான் அறிவேன்.”

காசாப் பகுதியை ஆளும் இஸ்லாமியக் கட்சியான ஹமாஸ் பேச்சுக்களை எதிர்க்கிறது. செவ்வாயன்று அதன் ஆயுதப் பிரிவு நான்கு இஸ்ரேலியர்களை, ஒரு கர்ப்பிணி உட்பட, மேற்குக் கரை ஹெப்ரோன் அருகே கிர்யன் அர்பா என்ற குடியிருப்பிற்கு அருகே சுட்டுக் கொன்றது. இது நெத்தென்யாகுவிடம் இருந்து அச்சுறுத்தல்களை தூண்டியது. அவர், “நாங்கள் கொலைகாரர்களைக் கண்டுபிடித்து, அவர்களைத் தண்டிப்போம்” என்று அவர் எச்சரித்தார். பாலஸ்தீன மேற்குக்கரைக்குள் செயல்படும் அவர்களை “இராஜதந்திர தடுப்பு ஏதும் இல்லாமல்” செயல்படும் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் கொல்வோம் என்றார்.

அவர்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. ஏனெனில் பாலஸ்தீனப் பாதுகாப்புப் பிரிவுகள் பெரும் நடவடிக்கையை மேற்கோண்டு டஜன் கணக்கில் ஹமாஸ் உறுப்பினர்களைக் கைது செய்து ஹெப்ரோன் அருகே உள்ள கிராமங்களுக்கும் எவரும் செல்ல முடியாதபடி செய்துள்ளன. பாலஸ்தீன அதிகாரத்தின் அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள 250 ஹமாஸ் உறுப்பினர்கள் வீடுகளை சோதனை செய்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. தாக்குதலுக்கு எதிராக மேற்குக்கரையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாக யேஷாக் குழு கூறியுள்ளது.

ஹமாஸின் இந்நடவடிக்கை இருந்தபோதிலும், திரைக்குப் பின்னால் வாஷிங்டனுடனான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. ஹமாஸ் தலைவர் ஹலீட் மெஸ்ஸால் Huffington Post வலைத்தள எழுத்தாளரிடம் அவருடைய அதிகாரிகள் அமெரிக்காவுடன் சில காலமாக மறைமுகப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என்று ஒப்புக் கொண்டார். “சில உத்தியோகபூர்வமில்லாத அமெரிக்க அதிகாரிகள், நாங்கள் சந்திப்பவர்கள், நிர்வாகத்திற்குத் தகவல் கொடுப்பார்கள் என்று நாங்கள் அறிவோம். அமெரிக்கர்களையும் மேலைத்தேய சக்திகளையும் காண்பதில் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம், ஆனால் இக்கூட்டங்கள் நடக்க நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை, இது பற்றிய அவசரமும் இல்லை.”

ஹெப்ரனில் தாக்குதல் நடந்த அன்றே, அமெரிக்கா சிரியாவுடன் பேச விரும்புவதாக மிட்சல் தெரிவித்தார். “இந்த உடனடி வழிவகையில் ஹமாஸிற்கு பங்கு இராது, ஆனால் ஹமாஸும் மற்றயத் தொடர்புடைய அமைப்புக்களும் அவை அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இணங்கி நடந்தால் முழுப்பங்கு பெறுவதை நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

பேச்சுக்கள் பற்றிய தூண்டுதலுக்கும், ஹமாஸ் உட்பட முன்பு தடைக்குட்பட்ட நாடுகள், இயக்கங்கள் பலவற்றுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது என்பது ஈரானைத் தனிமைப்படுத்தி மத்திய கிழக்கு மற்றும் அதன் எண்ணெய் வளங்களில் அமெரிக்கப் பிடியை பாதுகாப்பதற்கான முயற்சி ஆகும்.

ஒபாமாவின் அதிகாரிகள் தலைவரான ராஹம் எம்மானுவல் ஒரு பேட்டியில் கூறினார்: “இங்கு மூன்று பெரிய சதுரங்கக் காய்கள் உள்ளன. ஒவ்வொரு விதத்திலும் நாங்கள் வெற்றியை அணுகுகிறோம். ஒரு வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு வெற்றி வரும், வெற்றிகள் தொடரும்”

இஸ்ரேலில் அமெரிக்கத் தூதராக இருந்து, இப்பொழுது Brookings Institution ல் வெளியுறவுக் கொள்கையின் இயக்குனராக இருக்கும் மார்ட்டின் எஸ். இண்டிக், கூறினார்: “ஈராக்கில் உள்ள அரசியல் இக்கட்டுநிலையைத் தீர்ப்பதற்கான சமாதான வழிவகையில் முன்னேற்றம் வரும் என்று கூறுவது கடினம். அதேபோல் ஈரானியர்கள் தங்கள் அணுத்திட்டத்தை மறு பரிசீலிக்கக் கட்டாயப்படுத்துவதும் கடினம் ஆகும். ஆனால் ஈரானைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி ஓரளவிற்கு உள்ளது என்று கூறமுடியும், அப்பகுதியில் ஈரான் தலைமையை எடுத்துக்கொள்ள முயலும் நிலைப்பாடு சவாலுக்கு உட்படும் என்றும் கூறலாம்.”

அரச அலுவலக செய்தித் தொடர்பாளர் பிலிப் ஜே.க்ரோலி, “ஈராக் கடந்த காலத்திலும், தற்பொழுது ஈரானும் மத்திய கிழக்குப் பிரச்சினையைப் பயன்படுத்தி, தங்கள் நலன்களைப் பெருக்கிக் கொள்ள அக்கூறல்களை உபயோகிக்கின்றனர். ஒரு சமாதான உடன்பாடு இன்னும் ஒருங்கிணைந்த முறையில், அப்பகுதியின் வருங்காலம் பற்றி ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொடுக்கும்.”

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்களில் உண்மையான “முன்னேற்றம்” என்பதற்கான நிலைமைகள் இல்லை. ஆனால் கணிசமான பேச்சுக்கள் நடப்பது போன்ற நப்பாசைகள் வாஷிங்டனின் திட்டமான ஈரானுக்கு எதிரான ஆக்கிரோஷ நடவடிக்கை, இராணுவத் தாக்குதலுக்குத் தயாரிப்பு மற்றும் தாக்குதல் மேற்கொள்வதற்கு கூட அரேபிய அரசுகளை ஒரு அரசியல் அணிதிரளச் செய்வதில் ஒரு மத்திய பங்கு வகிக்க உதவும்.