World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Balibo: A war crime exposed

ஒரு யுத்த குற்றத்தை அம்பலப்படுத்தி இருக்கும் திரைப்படம்: Balibo

By Richard Phillips
17 August 2009

Back to screen version

ஜில் ஜோலிஃப்பியால் எழுதப்பட்ட the inside story of the Balibo என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் Balibo திரைப்படம், ரோபர்ட் கொனொலியால் இயக்கப்பட்டிருக்கிறது. கொனொலி மற்றும் டேவிட் வில்லியம்சன் இருவராலும் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

கிழக்கு திமோரின் மீது ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்திய இந்தோனேஷிய இராணுவத்தால், 1975 அக்டோபர் 16இல், ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக பணியாற்றிய ஐந்து செய்தியாளர்கள், அந்த சிறிய நாட்டில் எவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பது Baliboவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

கிரெக் ஷேக்லெட்டன், கேரி கன்னிங்ஹாம், மால்காம் ரென்னி, டோனி ஸ்டீவர்டு, பிரைன் பீட்டர்ஸ் ஆகிய ஐந்து செய்தியாளர்களுமே 30 வயதிற்கு குறைவானவர்கள். அவர்கள் Baliboவில் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. பின்னர் அவை இந்தோனேஷியாவிற்கு கொண்டு வரப்பட்டு, யாருக்கும் தெரியாத ஒரு சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

கதையாசிரியரும், இயக்குனருமான ரோபர்ட் கொனொலின் திரைப்படம் ஓர் அறிவுபூர்வமான படைப்பாக இருக்கிறது. அப்போது பிரதம மந்திரி கௌஹ் விட்லேமின் தலைமையில் இருந்த ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் கிழக்கு திமோர் மீது இந்தோனேஷியா தாக்குதல் நடத்த இருந்ததை நன்கு அறிந்திருந்தது என்பதுடன், அது இந்தோனேஷிய இராணுவத்திற்கு உளவுச் செய்திகளையும் அனுப்பியது; மேலும், ஐந்து செய்தியாளர்களின் படுகொலை குறித்து ஒன்றுமே தெரியாது என்று அது மூடிமறைக்கும் சிறிதே அறியப்பட்ட உண்மைகளையும் இப்படம் பரந்த மக்களிடையே கொண்டு வந்திருக்கிறது.

அப்போதிருந்தே ஆஸ்திரேலிய நிர்வாகங்களில் வெற்றிகரமாக இருந்துவரும் விட்லேமின் அரசாங்கம், "பலிபோ ஐவர்" துப்பாக்கிச்சூட்டில் தான் கொல்லப்பட்டார்கள் என்று வலியுறுத்தியது. உண்மையில், கிழக்கு திமோரில் சுமார் கால் நூற்றாண்டுகள் இருந்த இந்தோனேஷிய ஆக்கிரமிப்பின் போது அந்நாட்டில் நடத்தப்பட்ட பலவற்றில் ஒன்றாக இருந்த அந்தவொரு யுத்த குற்றத்தில் அவர்கள் நனவுப்பூர்வமாக இலக்காக்கப்பட்டார்கள். மதிப்பீடுகள் மாறுபடக்கூடும்; ஆனால் 180,000க்கும் மேலான கிழக்கு திமோதியர்கள் அல்லது அந்நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி மக்களுக்கும் மேலானவர்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக 1975 முதல் 1999க்கு இடையில் இறந்தார்கள்.

கிழக்கு திமோர் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஒரு போர்ச்சுகீசிய காலனி நாடாக இருந்தது. ஆனால் 1974இல் லிஸ்போனின் சலாஜர்-கெய்டனோவின் பாசிச ஆட்சியைத் தூக்கியெறிந்த பின்னர், போர்ச்சுக்கல் அதன் ஆப்பிரிக்க காலனி நாடுகளிலிருந்து திரும்பத் தொடங்கியது. சுதந்திரத்தைக் கோருவதற்காக, இஃப்ரீடிலின் என்றழைக்கப்படும் கிழக்கு திமோர் தேசிய விடுதலை முன்னனி (The East Timor National Liberation Front - Fretilin) உருவாக்கப்பட்டது.

வியட்நாமில் அமெரிக்கா தோல்வியை முகங்கொடுத்ததைத் தொடர்ந்து, வாஷிங்டனும், கான்பெர்ராவும் அப்பிராந்தியத்தில் கிழக்கு திமோர் ஸ்திரமின்மைக்கான ஓர் ஆதாரமாக ஆகிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தீர்மானித்தன. ஜனாதிபதி சுஹர்டோ தலைமையிலான இந்தோனேஷிய இராணுவ சர்வாதிகாரம், இஃப்ரீடிலினை கம்யூனிஸ்டாக அறிவித்து, அதை நசுக்க கிழக்கு திமோரின் ஏனைய உள்நாட்டு அரசியல் கூட்டாளிகளுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கியது. கிழக்கு திமோரில் இருந்த கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களுக்காக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இரண்டுமே, அத்துடன் இந்தோனேஷியாவும் அந்நாட்டின் எதிர்காலம் குறித்து தீவிரமாக கவலை கொண்டிருந்தன.

ஒரு தொடர்ச்சியான முன்னிகழ்வு காட்சிகளினூடாக (flashback) ஐந்து இளம் செய்தியாளர்களின் தலைவிதியை Balibo படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த படுகொலைகள் நடந்து முடிந்த நான்கு வாரங்களுக்குப் பின்னர் Baliboவிற்குப் பயணமாகும் ஆஸ்திரேலிய செய்தியாளர் ரோஜர் ஈஸ்ட்டினுடைய (ஆண்டனி இலாபேக்லியா) கதையும் இந்த முன்னிகழ்வுகாட்சிகளோடு இணைத்துக் காட்டப்படுகிறது.

இந்தோனேஷிய கொடுமைகளின் சிலவற்றை கண்ணால் கண்ட ஒரு கிழக்கு திமோதிய பெண்மணியான ஜூலியானா கூறும் வாக்குமூலத்துடன் படம் தொடங்குகிறது. பின்னர் படம், 1975 அக்டோபர் இறுதிவாக்கில், வட ஆஸ்திரேலிய நகரமான டார்வினுக்குத் திரும்புகிறது. இங்கே இஃப்ரீடிலினின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜோஸ் ரமோஸ்-ஹோர்டா (ஆஸ்கார் ஐசக்) ரோஜர் ஈஸ்ட்டைச் சந்திக்கிறார்.

இருபத்திஐந்து வயது ரமோஸ்-ஹோர்டா தொலைக்காட்சி செய்தியாளர்களின் படுகொலை குறித்த ஒரு கோப்பை ரோஜரிடம் அளிக்கும் வரை, உலகின்மீது சலிப்புற்றிருக்கும் அந்த 51 வயது செய்தியாளர் கிழக்கு திமோர் குறித்து அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். கிழக்கு திமோர் செய்தியகம் என்ற புதிய அமைப்பிற்கு ஈஸ்ட் தலைமையேற்க ஒப்புக்கொண்டால், செய்தியாளர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்துச் செல்வதாக இஃப்ரீடிலினின் தலைவர் உறுதியளிக்கிறார்.

முன்னதாக 60களில் தென்னாபிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கையைக் குறித்தும், அமெரிக்க உள்நாட்டு உரிமை போராட்டம் குறித்தும் எழுதி வந்த ஈஸ்ட், இஃப்ரீடிலின் அளிக்கும் வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறார். அவர் Baliboவிற்கு ஓர் அபாயகரமான பயணத்தை மேற்கொள்கிறார். ஐந்து செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவ்விடத்திலேயே Australian Associated Pressக்கு முதல் அறிக்கையைப் பதிவு செய்கிறார். ஒருசில வாரங்களுக்குப் பின்னர், டிசம்பர் 8இல், கிழக்கு திமோரின் தலைநகரான டிலியின் ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்த்து ஈஸ்ட்டும் இந்தோனேஷிய இராணுவத்தால் படுகொலை செய்யப்படுகிறார். அவர்களின் உடல்கள் கடலில் வீசப்படுகின்றன.

இலாபேக்லியா மற்றும் ஐசக்கின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. படத்தின் ஆழமாக இழையோடியிருக்கும் வசனம், படத்தின் முக்கிய காட்சிகளை நிஜமாகவும், திருப்திகரமாகவும், மனதை உருக்கும் வகையில் காட்டவும் உதவி இருக்கிறது.

எவ்வாறிருப்பினும், கொனொலியின் இப்படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை. படத்தில் அந்த ஐந்து செய்தியாளர்களும் ஒருபோதும் உண்மையிலேயே முக்கியமான கதாப்பாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தங்களின் புதிய வேலைக்காகவும், கிழக்கு திமோரில் அவர்கள் ஆற்ற வேண்டிய காரியங்களுக்காகவும் அவர்கள் தங்களின் குடும்பத்தையும் மற்றும் தோழிகளையும் விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதாக நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்களின் தோற்றங்கள் அலங்கோலமாக இருக்கின்றன. கிழக்கு திமோரில் சேகரித்த செய்திகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல முயற்சிக்கும் செய்தியாளர் கிரேக் ஷேக்லெட்டனின் கடைசி முயற்சி சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது; செய்தியாளர்களைப் பிடித்து படுகொலை செய்வதும் சிலிப்பூட்டுகிறது. ஆனால் அந்த இளம் செய்தியாளர்களைப் பற்றிய விஷயங்கள் இன்னும் தேவைப்படுகின்றன.

கிழக்கு திமோரின்மீது இந்தோனேஷியா தாக்குதல் நடத்த பச்சைக்கொடி காட்டிய அமெரிக்க மற்றும் விட்லேம் அரசாங்களின் கதாபாத்திரங்கள், திரைப்படத்தின் காட்சிகளில் சிறப்பாக இருக்கின்றன. இருப்பினும் கூடுதல் விபரங்கள் இருந்திருந்தால், குறிப்பாக உண்மையிலேயே —ஆஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும்—என்ன நடந்தது என்பதை சிறிதளவு அறிந்திருந்த பார்வையாளர்களுக்கு அது இன்னும் உதவியாக இருந்திருக்கும்.

அமெரிக்க ஆதரவிலான வெகுஜன வாக்கெடுப்பில் இந்தோனேஷிய ஆட்சி முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட பின்னர், 1999இல், கிழக்கு திமோருக்கு ரமோஸ்-ஹோர்டா திரும்புவதுடன் Balibo முடிவடைகிறது. இஃப்ரீடிலின் தலைவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும் இறுதிக்காட்சியில், கிழக்கு திமோரிய மக்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக காட்டப்படுகிறது. உண்மையில், உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக விளங்கும் கிழக்கு திமோரைத் தலைமை தாங்கிவரும் தற்போதைய அந்நாட்டின் ஜனாதிபதி ரமோஸ்-ஹோர்டா, அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களின் பெரும் பங்களிப்பில் தொடர்ந்து குறுக்கிட்டுவரும் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுகளுக்கு அவருடைய ஆட்சியின் ஒத்துழைப்பை அளித்து வருகிறார்.

தங்கள் கணவர்களின், சகோதரர்களின், மகன்களின் படுகொலைக்குக் காரணமானவர்களை ஒரு யுத்த குற்றவிசாரணைக்குக் கொண்டு வர வேண்டும் என்று Balibo ஐவரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர். இவர்களுடன் இணைந்து இயக்குனர் ரோபர்ட் கொனொலியும், தயாரிப்பு நிர்வாகி ஆண்டனி இலாபேக்லியாவும் இதை வலியுறுத்தியுள்ளனர். இந்தோனேஷிய ஆளும் மேற்தட்டுடனான தங்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் ஜனநாயக உரிமை பிரச்சினைகள் தலையிடுவதை விரும்பாத ரூட் தொழிற்கட்சி அரசாங்கம், இந்த முறையீடுகளை சிறிதும் இரக்கமில்லாமல் ஓரங்கட்டிவிட்டது.

யுத்த குற்ற விசாரணைகளை ஜனாதிபதி ரமோஸ்-ஹோர்டாவும் கைவிட்டுவிட்டார். சமீபத்திய மெல்போர்ன் திரைப்பட விழாவில் அப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்த பின்னர் நடந்த ஒரு கேள்வி-பதில் அமர்வில் அவர் கூறியதாவது: "காலத்திடம் இதை விட்டுவிடுவோம் என்பதே எப்போதும் என்னுடைய பதிலாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் நிறைய காட்சிகள் மாறிவிட்டன. மேலும் இன்று இந்தோனேஷிய ஜனநாயகம், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் மிக முக்கியமானவைகளில் ஒன்றாக இருக்கிறது... இந்தோனேஷியா அதற்குத் தயாராகும் போது, ஐவர் படுகொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள்."

ஆஸ்திரேலிய உளவுப்பிரிவின் மற்றும் விட்லேம் அரசாங்கத்தின் இராஜாங்க தொடர்புகளின் தகவல்களை Baliboவின் இறுதி முடிவை மாற்ற பயன்படுத்தி இருக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், ஆஸ்திரேலியாவின் பிராந்திய நோக்கங்களுக்கு ஒத்திருக்கும் கிழக்கு திமோரின் அரசியல்-பொருளாதார முடிவுகளைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, ஆஸ்திரேலிய ஆளும் மேற்தட்டால் நடத்தப்பட்டு வரும் மோசமான அரசியல் உத்திகளும், தொடர்ச்சியான இராஜாங்க சூழ்ச்சிகளும் குறித்து அது ஆழமான கேள்விகளை எழுப்பி இருக்கும்.

அக்டோபர் 16, 1975இல்—"பலிபோ ஐவர்" கொல்லப்பட்ட அந்த நாளில்—ஆஸ்திரேலிய அரசாங்கத்திலிருந்து ஜகார்தாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு பேசப்பட்ட அழைப்புகளில் வெளிப்படையாக வெளியான ஒன்று குறிப்பிடுவதாவது: "நேற்று, அக்டோபர் 15இல், நடத்தப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து, [ஹேரி] இட்ஜனால் ஏற்கனவே எங்களுக்குக் கூறப்பட்டதை, நாங்கள் முன்னரே அறிவித்திருந்ததை [இந்தோனேஷிய] தளபதி முர்தானி உறுதிப்படுத்தினார். இந்த பிராந்தியத்தில் நம்முன் இருக்கும் நம்முடைய நீண்டகால நலன்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள, அடுத்த சில வாரங்களுக்கு, நாம் மிகவும் கடுமையாக செல்ல வேண்டியுள்ளது என்ற என்னுடைய ஆரம்ப வார்த்தைகளையே தான் என்னால் மீண்டும் கூற முடியும்."

பலியான "பலிபோ ஐவர்" படுகொலை குறித்து 2007 NSW கொரொனெர் விசாரணையில் விட்லேமின் அளித்த வாக்குமூலத்தைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு சாத்தியக்கூறும் இருந்தது. அது செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையே நிராகரிக்கிறது. தம்முடைய சாட்சியத்தில் விட்லேம், அந்த ஐந்த நபர்களின் படுகொலைக்கு தாம் எவ்வித பொறுப்பும் ஏற்க முடியாது என்று மறுத்தார். அத்துடன் கிழக்கு திமோருக்கு அவசரப்பட்டுச் சென்றமைக்காக, அவர்களை குறிப்பாக கிரெக் ஷேக்லெட்டனைக் குறைகூறவும் முயற்சித்தார்.

Balibo, வரம்புகளை மீறிய ஓர் ஆழமான படைப்பாகவும், சரியான திசையில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு மதிப்பார்ந்த படைப்பாகவும் இருக்கிறது. இது ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றின் இருண்ட பகுதிகளை வெளிப்படுத்திக் காட்ட இன்னும் நிறைய திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்பலாம்.