World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Financial markets plunge on fears of renewed recession

மந்த நிலை மீண்டும் ஏற்படும் என்ற அச்சங்களில் நிதியச் சந்தைகள் சரிகின்றன

By Alex Lantier
5 August 2011

Back to screen version

உலகப் பொருளாதாரம் இன்னும் கூடுதாக கீழ்நோக்கி செல்லும் என்ற அதிகரித்த அச்சங்களும், ஐரோப்பாவில் மிக அதிக கடன் நெருக்கடி வெளிப்படுதல் மற்றும் அமெரிக்காவின் டாலர் வலுவழிப்பது பற்றிய உலக அழுத்தங்கள் ஆகியவற்றானால் நேற்று ஐரோப்பாலும் அமெரிக்காவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.

அமெரிக்க Dow Jones Industrial Average 4.3 சதவிகிதம் குறைந்து, 512.61 புள்ளிகள் வீழ்ச்சியுற்றது. இது 2008 நிதியச் சரிவிற்குப் பின் மிக அதிகச் சரிவு ஆகும். மற்ற அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்னும் அதிகமாக விழுந்ன, தொழில்நுட்பத் தளம் கொண்ட NASDAQ 5.08 சதவிகிதம் இழந்தது, பரந்த S/&.P 500 குறியீடு அதன் மதிப்பில் 4.78 சதவிகிதத்தை இழந்தது. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தீவிர வீழ்ச்சிகள் இருந்தன. ஆனால் மிக அதிக இழப்புக்கள் மூலப்பொருட்கள், எரிசக்தி, பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் மற்றும் மூலதன பொருட்களின் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டன.

ஐரோப்பிய சந்தைகளும் தீவிரமாகச் சரிந்தன. இத்தாலிய பங்குச்சந்தை குறியீடு மிக அதிக இழப்பான 5.16 சதவிகிதத்தைக் காட்டியது. பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜேர்மனிய மற்றும் ஸ்பானிஷ் குறியீடுகளும் 3% க்கும் அதிகமாக இழப்புக்களைக் காட்டின. ஐரோப்பா முழுவதும் கடன் நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சங்களில் வங்கி பங்குகளும் பெரும் சரிவுற்றன.

Dow Jones இன் தகவல் செய்திகள் பங்கு, நாணயம் மற்றும் பாவனைப் பொருட்கள் சந்தையில் வணிகம் ஆகியவற்றைக் கிட்டத்தட்ட பீதியில் ஆழ்ந்தவைஎன விவரித்தன. சந்தை வாடிக்கையாக மூடப்படும் நேரத்தை விட மிலான் பங்குச் சந்தை 30 நிமிடங்கள் முன்னதாகவே செயற்பாடுகளை நிறுத்தியது. நியூயோர்க் பங்குச் சந்தையின் Euronext தற்காலிகமாக பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், ஆம்ஸ்டர்டாம் மற்றும் லிஸ்பன் பங்குச் சந்தைகளின் உடனடி தகவல்களை கொடுப்பதை நிறுத்தியது.

எண்ணெய் விலைகளும் பெரும் வீழ்ச்சியுற்று தொழில்துறை மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் இன்னும் கூடுதலான சரிவுகள் பற்றி அச்சங்ளைச் சுட்டிக் காட்டின.

இன்று வெளியிடப்பட இருக்கும் அமெரிக்க வேலை நிலைமை பற்றிய அறிவிப்பு அமெரிக்கப் பொருளாதாரத்தில் கணிசமான சரிவைக் காட்டக்கூடும் என்று எண்ணெய் வணிகர்கள் கவலைப்படுகின்றனர். Barclays Capital நிறுவனத்தில் எண்ணெய்த் துறை பகுப்பாய்வாளராக உள்ள அம்ரிதா சென் உலக எண்ணெய் தேவையின் வளர்ச்சி பற்றிய தன் முன்கணிப்பை 1.56 மில்லியனில் இருந்து 1.1 மில்லியன் பீப்பாய்கள் நாள் ஒன்றிற்கு எனக் குறைத்துவிட்டார். பைனான்சியல் டைம்ஸிடம் அவர் கூறினார்: தற்பொழுது அமெரிக்கக் குறியீடுகள் மிகவும் வலுவிழந்து உள்ளன, இது உணர்வைப் பெரிதும் பாதிக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த தாக்குதல்களை நடத்தும் தன்மையைக் கொண்டவையும், மிகச் சமீத்தில் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரவு-செலவுத்திட்ட வெட்டுக்களில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டையும் உள்ளடக்கிய ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிதியப் பிரபுத்துவம் தொடரும் கொள்கைகள் உலகப் பொருளாதார மந்த நிலையை அதிகமாக்குகின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) யின் தலைவர் ஜோன் குளோட் திரிஷே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உரையில் ஐரோப்பிய அரசாங்கங்களின் புதுப்பிக்கப்படும் கடன் நெருக்கடி என்ற அச்சங்களின் மையத்தில் இத்தாலியும் ஸ்பெயினும் உள்ளன. ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய அரசாங்கங்களின் கடன் பத்திரங்களை விலைக்கு வாங்கும் என்றார் திரிஷே. இது அவற்றிற்கு திவால்தன்மையைத் தவிர்ப்பதற்குத் தேவையான பணத்தை வழங்கும். ஆனால் எவ்வளவு பணத்தை ஐரோப்பிய மத்திய வங்கி கொடுக்க முடியும்  எந்த நாடுகள் அவற்றைப் பெறும் என்பது பற்றிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அரசாங்கப் பத்திரங்களை வாங்குவது குறித்த ஆளும் குழுவின் முடிவு ஒருமனதாக ஏற்படவில்லை என்பதை திரிஷே ஒப்புக் கொண்டார். இது அரசாங்கங்களுக்கு பெரும் தொகை நிதியை வழங்க ஐரோப்பிய மத்திய வங்கி மறுக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

ப்ளூம்பர்க் நியூஸ் மற்றும் AFP ஆகியவை ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடுகளைக் கவனிக்கும் சந்தை தகவல்களை ஆதாரம்காட்டி உத்தியோகப்பூர்வமாக இவை இன்னும் இரகசியமாகத்தான் உள்ளன எனவும்,   ஐரோப்பிய மத்திய வங்கி அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் நாடுகளின் பத்திரங்களை மட்டுமே வாங்க உள்ளது எனத் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின்படி ஸ்பெயின், இத்தாலிய அரசாங்கங்கள் ஐரோப்பிய மத்திய வங்கி நிதியைப் பெறமாட்டா எனத் தெரிகிறது. ஆனால் இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் ஐரோப்பிய மத்திய வங்கி நிதி வழங்குமா என்பது பற்றி திரிஷே உறுதிபடுத்துவோ, மறுக்கவோ இல்லை.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை அதிகாரி, நிதியச் சந்தைகள் புதிய, ஆழ்ந்த தாக்குதல்களைத் தொழிலாளர் வர்க்கத்தின்மீது நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதையொட்டி யூரோப்பகுதியில் உள்ள நாடுகள், அரசாங்கங்களின் தலைவர்கள் அனைவரும் புதிதாக ஒப்புக் கொள்ளப்பட்ட நிதிய இலக்குகளைப் பின்பற்றுவதாக உறுதியளிக்க வேண்டும். பல நாடுகளைப் பொறுத்தவரை, இக்கோரிக்கை இன்னும் கூடுதலான தாக்குதல் நிறைந்த நிதிய சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துச் செயல்படுத்துவது முக்கியமாகும் என்று அவர் கூறினார்.

இது குறிப்பாக ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு ஆகும். ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸே சப்பத்தேரோ கடந்த வாரம் நவம்பர்மாதம் முன்கூட்டிய தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அவருடைய ஆழ்ந்த செல்வாக்கற்ற அரசாங்கம் செயல்படுத்தும் செல்வாக்கற்ற சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகத் தெருக்களில் தொடர்ந்து எதிர்ப்புக்கள் நடப்பதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஒரு தேர்தல் நேரத்தில் இன்னும் கூடுதலான சமூகநலச் வெட்டுக்களை சப்பத்தேரோ செயல்படுத்துவாரா என்பது தெளிவாக இல்லை.

இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியை பொறுத்தவரை, அவருடைய அரசாங்கம் கடந்த மாதம் ஆண்டுச் செலவுகளில் 79 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களைக் கொடுத்த சட்டத்தை இயற்றியது. ஓய்வூதியம் பெறத் தகுதி பெறும் வயதை உயர்த்துதல், மருத்துவக் கட்டணங்கள் உயர்த்தப்படல் மற்றும் சமூகநல, கலாச்சாரத் துறைகளில் செலவுக் குறைப்புக்கள் ஆகிய தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மூலம் இவை அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால், ஆகஸ்ட் 3ம் திகதி, இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பெர்லுஸ்கோனி இனி கூடுதல் வெட்டுக்களைச் செய்யப்போவதில்லை எனத் தெரிவிக்கும் உரையை நிகழ்த்தினார். வெட்டுக்கள் போதுமானவை என்று கூறிய அவர், இது ஒன்றும் ஒரு இத்தாலிய நெருக்கடி இல்லை, உலகம் முழுவதும் இருப்பதுதான். சந்தைகளின் நரம்புத் தளர்ச்சிகளை நாம் ஒன்றும் கவனிக்கத்தேவையில்லை என்று சேர்ந்துக் கொண்டார்.

இத்தாலிய மற்றும் ஸ்பெயின் அரசாங்கக் கடன் பத்திரங்களின் வட்டிவிகிதங்களை உயர்த்திய முறையில் முதலீட்டாளர்கள் இதற்கு முகங்கொடுத்தனர். இவ்வட்டி மட்டம் இரு நாடுகளையும் திவால்தன்மைக்கு தள்ளும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. ஏற்கனவே இத்தாலிக்கு கடன் பாக்கி 1.6 டிரில்லியன் யூரோக்கள் உள்ளன. இது 2009ல் இருந்து கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கிரேக்கம் அல்லது அயர்லாந்து போன்ற சிறு நாடுகளின் கடன்களைவிட மிக அதிகத் தொகையாகும். பிணையெடுப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நிதி ஸ்திரப்பாட்டு நிதியத்தில் இருந்து கொடுக்க முடியாத அளவிற்கு இத்தாலி 440 பில்லியன் யூரோக்கள் கடனைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி இத்தாலிக்கு நிதி கொடுக்க மறுத்தால் அது இறுதியில் அங்கு ஒரு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அதாவது இத்தாலியில் அரசாங்கத் திவால் பெரிய அளவில் ஏற்படும் அல்லது யூரோவில் இருந்து இத்தாலி வெளியேறும் நிலைகூட ஏற்படும். இதனால் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து விலகி சுயாதீனமாகத் தன் நாணயத்தை அது அச்சிட நேரிடும்.

இன்று வெளிவர இருக்கும் வேலைகள் பற்றிய அறிக்கையின் விளைவு பற்றி பதட்டநிலை இருக்கையில் அமெரிக்காவில் ஐரோப்பிய சந்தைச் சரிவு அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அமெரிக்க டாலரின் நிலைமைக்கும் தொடர்ச்சியான கெட்ட செய்திகளைத்தான் கூட்டியுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் கீழ்நோக்கிய வகையில் திருத்தப்பட்டன. இந்த ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு அது புறக்கணிக்கத்தக்க 0.4, 1.3 சதவிகிதம் என்று திருத்தப்பட்டுள்ளது. சமீபத்திய அமெரிக்க வரவு செலவுத்திட்ட உடன்பாடுகளின் விளைவாக தொழிலாள வர்க்கமும் முக்கியமான சமூநலத் திட்டங்களான மருத்துவ உதவி, உணவு நிதியங்கள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, சமூகநலச் செலவுகள் ஆகியவற்றில் ஆழ்ந்த வெட்டுக்களைப்பெறும்; இது அவர்களின் பொருளாதாரங்களையும் பரந்த பொருளாதார நிலைமையையும் இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

வாராந்திர முதல் வேலையின்மை நலன்களை நாடுவோர் எண்ணிக்கை 400,000 என்று வியாழன் அன்று வெளியிடப்பட்டது அமெரிக்காவில் வேலையின்மை, ஏற்கனவே 9.2% என ஆண்டிற்கு உயர்ந்தது அதிகரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. காங்கிரசின் கூட்டுப் பொருளாதாரக் குழு அறிக்கை ஒன்று அமெரிக்காவில் 14.2 மில்லியன் வேலையில்லாத தொழிலாளர்களில் 42% ஆனோர் குறைந்தபட்சம் 6 மாதங்களாக வேலையில் இல்லை என்றும் வணிகங்கள் இப்பொழுது நீண்ட காலமாக வேலையில் இல்லாமல் இருப்பவர்களைப் பணியில் இருத்துவதில்லை என்றும் கண்டறிந்துள்ளது.

மோசமான ஐரோப்பியப் பொருளாதாரச் செய்தியினால் யூரோவின் குறைவான வீழ்ச்சியின் ஓரளவு விளைவினால்தான் டாலர் தற்காலிகமாக உயர்ந்தது. ஆனால் ஜப்பானிய மற்றும் சுவிஸ் அதிகாரிகள் தங்கள் நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவதை மாற்றும் வகையில் மேற்கொண்ட முயற்சிகளால் இது பெரிதும் ஏற்பட்டுள்ளது. அதாவது பொறுப்பற்ற முறையில் அமெரிக்கா குறைந்த வட்டி விகிதத்தால் டாலரை மதிப்புகுறைத்து, நிறைய பணத்தைப் புழக்கத்தில் விட்டு நிலைமையை எளிதுபடுத்தும் கொள்கையினால் ஏற்பட்டது (அதாவது வங்கிகளுக்குப் பின்னர் கொடுப்பதற்காக நாணயத்தை அச்சிடுதல்).

2008 பொருளாதார நெருக்கடியின் வெடிப்பிற்குப் பின்னர் வோல் ஸ்ட்ரீட்டிற்கு தொழிலாள வர்க்கத்தின் செல்வத்தை மாற்றியதில் இக்கொள்கை மத்திய பங்கைக் கொண்டு இருந்தது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற இன்னும் பிற நாடுகளின் பொருளாதாரங்களையும் இது பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது. அவற்றின் நாணயங்கள் மதிப்பில் விரைவில் உயர்ந்தன. ஏனெனில் அமெரிக்க மற்றும் யூரோப் பகுதி முதலீட்டாளர்கள் இழப்புக்களைத் தவிர்க்கத் தங்கள் நிதிகளை ஒப்புமையில் உறுதியான ஜப்பானிய யென் மற்றும் சுவிஸ் பிராங்கில் முதலீடு செய்கின்றனர். ஆனால். எவ்வாறியினும் இது ஜப்பானிய மற்றும் சுவிஸ் ஏற்றுமதியாளர்களை அச்சுறுத்துகிறது.

நிதியப் பகுப்பாய்வாளர் மசாவூமி யாமாமோட்டோ ஜப்பானிய அதிகாரிகள் 39 டிரில்லியன் யென் செலவழித்து உலகச் சந்தையில் டாலர்களை வாங்கக்கூடும் என்று பைனான்ஸியல் டைம்ஸிடம் தெரிவித்தார். ஆனால் இது ஜப்பான் தன் நாணயத்தின் மதிப்பு உயர்வதை ஒரு மாத காலத்திற்குத்தான் தடுத்து நிறுத்த அனுமதிக்கும்.

இதேபோல் சுவிஸ் அதிகாரிகளும் குறுக்கிட்டு ஆகஸ்ட் 3ம் திகதி டாலர்களை வாங்கினர். இதற்காக 50 பில்லியன் சுவிஸ் பிராங்குகளைச் செலவழித்து முன்னோடியில்லாத அளவிற்கு டாலின் மதிப்பை 0.77 சுவிஸ் பிராங்குகள் என்னும் தரத்திற்கு உயர்த்த முற்பட்டனர். சுவிஸ் தேசிய வங்கியான (SNB), இந்த வாங்குதல்களை நடத்தியது. சுவிஸ் பிராங் பாரியமுறையில் கூடுதல் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிராங்கின் வலிமை சுவிஸ் பொருளாதாரத்தின் போக்கில் கணிசமான சரிவைத் தோற்றுவித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவின் டாலரை குறைமதிப்புச் செய்யும் கொள்கையின் திறன் டாலரின் கட்டுப்பாடற்ற சரிவிற்கு வகை செய்யக்கூடும், அதையொட்டி உலக நிதியக் கரைப்பு ஏற்படலாம் என்றும் நிதியப் பகுப்பாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் பல நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தங்கள் நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதற்கும் போட்டியிடும்.

ஸ்டாண்டர்ட் வங்கியின் ஸ்டீவ் பாரோ பைனான்சியல் டைம்ஸிடம் சுவிஸ் பிராங், யென் ஆகியவற்றிற்கு எதிராக டாலர் பெரும் தோல்வி அடைதல் என்பது உலக நிதிய உறுதிப்பாட்டை அச்சுறுத்தும், இதில் ஜப்பானிய வங்கியும் சுவிஸ் தேசிய வங்கியும் மட்டும் இல்லாமல் பிற மத்திய வங்கிகளும் பெரும் பாதிப்பை அடையும் என்ற வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.