சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stock market panic and the call for strong government

பங்குச்சந்தை பீதியும், பலமான அரசாங்கத்திற்கான அழைப்பும்

Peter Schwarz
10 August 2011
use this version to print | Send feedback

உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் கீழ்நோக்கி இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், ஊடகங்கள் தொடர்ச்சியாக பலமான அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

பிரிட்டனின் Daily Telegraph எழுதுகிறது: “ஒரு பாரிய விபத்தைத் தடுக்க வேண்டுமானால், அனுபவம், திறமை மற்றும் ஓரளவிற்கு அதிருஷ்டமும் தேவைப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த தகமைககளில் எதுவுமே இல்லையென்பது துன்பியலாக வெளிப்படையாக உள்ளது: மேற்கத்திய தலைவர்கள் எதுவுமே செய்யமுடியாதவர்களாக உள்ளனர்.”

ஜனாதிபதி பராக் ஒபாமாவை "சரியான நபர்தான், ஆனால் பிரயோசனமற்றவராக உள்ளார்" என்று விவரிக்கும் பழமைவாத நாளிதழ், “ஐரோப்பா முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் பேரழிவின் அளவையும் இயல்பையும் புரிந்துகொள்ளும் ஓர் அடிப்படை தகமைகூட இல்லாமல்" இருப்பதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெலை அது குற்றஞ்சாட்டுகிறது.

கடன் நெருக்கடி படிப்படியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஓர் உள்நாட்டு அரசியல் பிரச்சினையாக மாறிவருகிறது,” என்று ஜேர்மனியின் Süddeutsche Zeitung இதழ் குறைகூறுகிறது. அரசியல் கதாபாத்திரங்கள் எதிர்வரும் தேர்தல்களில் கவனம் செலுத்துவதாலும் அல்லது நாடாளுமன்ற பெரும்பான்மையை கவனத்தில் எடுக்க வேண்டியதிருப்பதாலும், சம்பவங்களின் அழுத்தங்களின்கீழ், அவர்கள் "எதிர்பாரா பலத்தைப் பெறுவார்கள்," என்று எதிர்பார்க்க முடியாது.

நாடுகளைப் தரவரிசைப்படுத்தும் Standard & Poor நிறுவனம், கடன் விகித பட்டியலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு அது வழங்கியிருந்த குறைந்த மதிப்பீட்டை, வாஷிங்டனில் உள்ள அரசியல் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்தியது: “அரசு செலவீன அதிகரிப்பைக் கட்டுப்பாட்டில் வைப்பதென்பது முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதையும் விட குறைவாக உள்ளது. மேலும் அதுவொரு நீடித்த நடைமுறையாக இருக்கும் மற்றும் சட்டபூர்வமான கடன் உச்சவரம்பு நிர்ணயத்தை உயர்த்துவதில் நீண்டகால முரண்பாடு இருக்கும் என நாங்கள் நம்புவதால், அமெரிக்காவை நாங்கள் நீண்டகால தரவரிசை பட்டியலில் கீழே இறக்கினோம்என்று S&P எழுதியது.

இத்தகைய அறிக்கைகள் எப்போதும் பகிரங்கமாக குறிப்பிடப்படுவதில்லை என்றபோதினும், இவற்றிலிருந்து கிடைக்கும் தீர்மானம் தெளிவாக உள்ளது. அதாவது, நெருக்கடியின் வெளிச்சத்தில், தேர்தல்கள், பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் ஏனைய ஜனநாயக நடைமுறைகள் அனைத்தும் தேவைப்படும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொருந்துவதாக இல்லை. ஜனநாயக விரோத அதிகாரங்களோடு கூடிய ஒரு பலமான ஆட்சிக்கான அழைப்பு தெளிவாக கேட்கக்கூடியதாக உள்ளது.

பத்திரிகை விமர்சனங்களில் கோரப்படும் நடவடிக்கைகள் பிரத்தியேகமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திரும்பி உள்ளன. அமெரிக்க வரவு-செலவு திட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட, முக்கியமாக சமூக செலவினங்கள் பக்கம் திரும்பியுள்ள, 2.4 ட்ரில்லியன் டலார் வெட்டுக்களுக்கு பதிலாக Standard & Poor 4 ட்ரில்லியன் டாலரைக் கேட்கிறது. ஆனால் அனைத்து விமர்சகர்களும், தங்களின் குற்றத்தனமான ஊகவணிகத்தால் 2008 நெருக்கடிக்கு தூண்டிவிட்டு, பின்னர் அரசாங்க பிணையெடுப்பிற்கு நன்றிகூறி பணத்தைப் பெற்ற, வங்கிகளுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும் கவனத்திற்கெடுக்கவில்லை.

உலகளாவிய பின்னடைவுக்கு விடையிறுப்பாக கொண்டு வரப்படவேண்டிய அரசு திட்டங்கள் குறித்தோ அல்லது உயர் வருமானங்களையும், பெரும் செல்வவளத்தையும் கொண்டிருப்பவர்கள் மீது வரியை அதிகரிக்க வேண்டுமென்ற எந்த பேச்சுக்களோ அங்கே இல்லை. பெருமந்தநிலைக்கு விடையிறுப்பாக அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் D. ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கைகளின்-New Deal- கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பேசப்படக்கூடாத ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றன. அதற்கு பதிலாக, ஊடகங்களும் அரசியல்வாதிகளும் 1930களில் ஜேர்மன் அதிபர் ஹென்ரிச் புரூனிங்கின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்கின்றனர்.

1930 மார்ச் நிதியியல் நெருக்கடிக்கு மத்தியில், மத்திய கட்சி என்றழைக்கப்பட்ட Centre Party இன் புரூனிங் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அது அரசாங்க செலவினங்களில் கடுமையான வெட்டுக்களைச் செய்யும் அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தியதோடு, பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் கொண்டு போனது, அத்தோடு வேலைவாய்ப்பின்மையை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கொண்டு சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், புரூனிங் இன்னும் அதிகமாக ஜனநாயக விரோத அடக்குமுறை ஆட்சிக்கு வழி வகுத்தார். அது ஹிட்லரின் வருகைக்கு வழி வகுத்தது.

ஊடகங்களோடு சேர்ந்து, புரூனிங்கின் முன்னுதாரணத்தை உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் அனைத்தும் பின்தொடர்ந்து கொண்டு, புதிய சிக்கன முறைமைகளோடு நெருக்கடிக்கு அவற்றின் விடையிறுப்பைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஐரோப்பாவில் பழமைவாத கட்சிகள் போன்ற வலதுசாரி கட்சிகளைப் பொறுத்தமட்டில் மட்டும் அல்ல, மாறாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர், ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சியினர், பசுமை கட்சியினர், ஜேர்மனியின் இடது கட்சி, மற்றும் ஏனைய நாடுகளில் இருக்கும் இதுபோன்ற கட்சிகள் என பெயரளவிற்கு "இடது" கட்சிகளாக இருப்பவைகளாலும், அத்தோடு தொழிற்சங்கங்களாலும் கூட இதே விடையிறுப்பு காட்டப்படுகின்றது.

இவை அனைத்துமே மில்லினியர்கள் மற்றும் பில்லினியர்களின் ஒரு சிறிய கோஷ்டியாக விளங்கும் "நிதியியல் சந்தைகளுக்கு" முன்னால் மண்டியிடுகின்றன. நிதியியல் சந்தைகள் தடுமாறுகிறதென்றால், அவை அரசு கருவூலங்களில் இருந்தும், அத்தோடு சமூக வெட்டுக்களையும் சேர்த்து, “மீட்பு பொதி" என்ற பெயரில் அவற்றிற்கு நிறைய தியாகங்களைச் செய்யும். சமூக செலவினங்களை வெட்டுவதில், உழைப்பு சந்தையின் நெறிமுறைகளைத் தளர்த்துவதில் மற்றும் தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பதில் யார் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பார்ப்பதில்லை.

இத்தாலியில், தொழிற்சங்கங்களும் மத்திய-இடது கட்சிகளும் அதன் வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் போதுமான அளவிற்கு தீவிரமாக இல்லை என்பதால் பெர்லொஸ்கோனி அரசாங்கத்தை வலதில் நின்றுகொண்டு தாக்குகின்றன. ஜேர்மனியில், சமூக ஜனநாயக கட்சியும், பசுமை கட்சியினரும் அரசியலமைப்புரீதியில் சமநிலையான வரவு-செலவு திருத்த மசோதாவோடு கடுமையாக இணங்கிய கடன்மட்டுப்படுத்தும் திட்டத்தை கொண்டு வரவேண்டுமென வலியுறுத்துகின்றன. அமெரிக்காவில் ஜனாநாயக கட்சி ஜனாதிபதி ஒபாமா அந்நாட்டின் வரலாற்றில் சமூக திட்டங்களில் மிகக்கூர்மையான வெட்டுக்களைக் கொண்டு வர உடன்பட்டுள்ளார்.

1930களில் இருந்த ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையில், ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியும் கூட சமூக விளைவுகளை தவிர்க்ககூடிய ஓர் முக்கிய நடவடிக்கையையும் முன்மொழிய விரும்பவில்லை; முன்மொழிய முடியவில்லை. மாறாக, அரசியலமைப்பில் இருந்த அனைத்து கட்சிகளும் நெருக்கடியை அதிகரிக்கும், நாட்டின் மோதல்களை உயர்த்தும், சர்வாதிகாரம் மற்றும் யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கொள்கையையே பின்தொடர்ந்தனர். இது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நாசகரமான குற்றப்பத்திரிக்கையாகும்.

1930களில் அமெரிக்க முதலாளித்துவத்திடம் போதியளவிற்கு பொருளாதார கையிருப்புகள் இருந்தமையால் அப்போது ரூஸ்வெல்டின் புதிய உடன்படிக்கை சாத்தியப்பட்டது. முதலாம் உலக யுத்த தோல்வியால் பலவீனப்பட்டிருந்த ஜேர்மன் முதலாளித்துவத்தால் அத்தகையவொரு கொள்கையைக் கொணர முடியவில்லை என்பதோடு, அது புரூனிங் மற்றும் ஹிட்லருக்கு பாதை அமைத்தது.

இன்று அமெரிக்க முதலாளித்துவமும் அத்தகையவொரு கொள்கையை நடைமுறைப்படுத்தும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை. அந்நாடு சர்வதேச நெருக்கடியின் மையப்புள்ளியில் உள்ளது. ஆழமான கடனில் உள்ள அதனிடம் பொருளாதார கையிருப்புகளும் இல்லை. அதேசமயத்தில் அதன் பாத்திரத்தை ஏற்கும் வேறொரு முதலாளித்துவ சக்திகளும் அங்கே இல்லை.

ஜேர்மன் பொருளாதாரம் ஒரு சர்வதேச பின்னடைவால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய ஏற்றுமதி தொழில்துறையைச் சார்ந்துள்ளது. நிதியியல் சந்தைகளின் அழுத்தத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியம் சிதைந்து கொண்டிருக்கிறது. சீனாவோ ஆழமான சமூக முரண்பாடுகளால் கிழிந்து போயுள்ளது.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளாக அதன் நலன்களை பேணிகாக்க முடியாது. பல நாடுகளில், சமூக நெருக்கடியானது புரட்சிகர எழுச்சிகளையும், சமூக போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது. ஆனால் இந்த இலாபகர அமைப்புமையைத் தூக்கியெறிந்து, ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான மற்றும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நனவுபூர்வமான போராட்டத்தை அவர்கள் கையிலெடுத்தால் மட்டுமே அவை வெற்றியடைய முடியும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க, தொழிற்சங்கங்கள் உட்பட முதலாளித்துவத்தை பாதுகாக்கும் எந்தவொரு அமைப்புடனும் தொழிலாள வர்க்கம் உடைத்துக் கொண்டு, ஒரு புதிய சர்வதேச சோசலிச கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த போராட்டத்திற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், சோசலிச சமத்துவக் கட்சியும் அவற்றை அர்பணித்துள்ளன.