World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Euro crisis deepens amid warnings of depression

மந்தநிலை பற்றிய எச்சரிக்கைகளுக்கு இடையில் யூரோ நெருக்கடி ஆழமடைகிறது

Nick Beams
30 November 2011
Back to screen version

ஒற்றை செலாவணியின் அதிகளவில் சாத்தியமான உடைவு ஐரோப்பிய மற்றும் உலக பொருளாதாரத்தில் நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு இடையில், புருசெல்ஸில் நடந்த யூரோ மண்டல நிதிமந்திரிகள் கூட்டம் ஆழமடைந்துவரும் யூரோ நெருக்கடிக்கு எவ்வித தீர்வுமின்றி மீண்டும் தோல்வியுற்றுள்ளது.

ஒரு மாதத்திற்கும் சற்று முன்னதாக, ஐரோப்பிய நிதிய ஸ்திரப்பாட்டு ஆணையத்தின் (EFSF) தகமையை, அதாவது யூரோ மண்டலத்தின் பிணையெடுப்பு நிதியை 1 ட்ரில்லியன் யூரோவிற்கு உயர்த்தும் ஒரு திட்டத்தை அப்பிராந்திய நிதிமந்திரிகள் முன்வைத்தனர். சீனாவிலிருந்தும், மத்தியகிழக்கின் நாடுகளின் சேமிப்பு நிதியங்களிலிருந்தும் (sovereign wealth funds) நிதியை ஈர்க்கும் முயற்சிகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக EFSFஇன் தலைவர் கிளொஸ் ரெக்லிங் அவர்களிடம் நேற்று தெரிவித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ரெக்லிங், “முதலீட்டாளர்கள் அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் நிறைய பணத்திற்கு பொறுப்பேற்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது,” என்று கூறி, ஒரு மோசமான நிலைமையை நல்லவிதமாக காட்ட முயன்றார். மேலும் அவர் கூறுகையில், "வலுச்சேர்ப்பது என்பது காலம் எடுக்கும் ஒரு நிகழ்போக்காகும்,” என்றார்.

கடந்தவாரம் ஜேர்மனியால் வெளியிடப்பட்ட தோல்வியுற்ற பத்திர பிரச்சினை எடுத்துக்காட்டுவதைப் போல, கிரீஸ், அயர்லாந்து மற்றும் போர்ச்சுக்கல் என விளிம்புகளில் தொடங்கிய நெருக்கடி, தற்போது யூரோ மண்டலத்தின் இதயப்பகுதிக்கு வந்துள்ளது. பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்டின் வொல்பின் சொற்களில், “அபிவிருத்தியடைந்த நாடுகளில் 2007 கோடையில் எழுந்த நிதியியல் நெருக்கடி, ஒரு புதிய மற்றும் கூடுமானளவில் மிகவும் நாசகரமான கட்டத்தை எட்டியுள்ளது,” என்ற எச்சரிக்கைகளை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஓர் ஒட்டுமொத்த பேரழிவு தடுக்கப்பட்டாலும் கூட, ஐரோப்பிய பொருளாதாரம் மந்தமடையுமென்று, உலகின் 34 பிரதான பொருளாதாரங்களை உள்ளடக்கிய பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) திங்களன்று எச்சரித்தது. “தீவிர வீழ்ச்சி அபாயங்களைச்" சுட்டிக்காட்டி அது கூறியது: ஒருபெரும் எதிர்மறை நிகழ்வு", பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு பகுதி முழுவதையும் பின்னடைவிற்குள் செலுத்தும் வாய்ப்புள்ளது.” அவற்றால் எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவையும் பாதிக்கப்படும்.

ஆனால் அதையும்விட மோசமான ஒன்று, அதாவது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளோ யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறும் என்ற அனுமானத்தின்படி, யூரோ மண்டலத்தின் ஓர் உடைவினால் ஏற்படக்கூடும். பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு பின்வருமாறு குறிப்பிட்டது: “பாரிய செல்வவள அழிவு, திவால்தன்மைகள் மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைவு மற்றும் கூட்டுழைப்பின் நம்பிக்கையில் ஏற்படும் ஒரு பொறிவு ஆகியவற்றோடு, ஐரோப்பாவில் இருக்கும் இத்தகைய கொந்தளிப்பு, வெளியேறும் மற்றும் தங்கியிருக்கும் யூரோ நாடுகள் இரண்டையுமே, அத்துடன் உலக பொருளாதாரத்தையும் ஓர் ஆழ்ந்த மந்தநிலைமைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு மிகவும் உள்ளது.”

இதுபோன்ற மதிப்பீடுகளை பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு மட்டும் அளிக்கவில்லை. யூரோ பொறிந்தால், யூரோ மண்டலத்திலுள்ள பொருளாதாரங்கள் தற்காலிகமாக 50 சதவீதமளவிற்காவது வெளியீட்டின் இழப்பால் பாதிக்கப்படுமென்று சுவிஸ் வங்கியியல் நிறுவனமான UBSஇன் கணிப்பாளர்கள் அனுமானித்துள்ளனர். கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody's, யூரோவில் எந்தவொரு நாடு வெளியேறினாலும் அரச கடன் திவால்தன்மையை தொடர்ச்சியாக தூண்டிவிடக்கூடுமென்று எச்சரித்துள்ளது.

ஒரு காட்டுத்தீயைப் போல, ஒவ்வொரு தீய செய்திகளும் இன்னமும் நிறைய பிரச்சினைகளை உருவாக்கிவரும் நிதியியல் சந்தைகளில் மாற்றங்களுக்கு இட்டுச் செல்வதற்காக, நெருக்கடி அதன் சொந்த உந்துசக்தியை அதுவே உருவாக்குகிறது. புருசெல்ஸை மையமாக கொண்ட புரூகெல் சிந்தனைக்கூடத்தின் தலைவர் Jean Pisani-Ferry, “நிஜமான வியாபாரங்களும்" நிதியியல் சந்தைகளும் "ஓர் உடையும் நிலைமைக்கு" விலைசெலுத்த தயாராகின்றன என்று தெரிவித்தார். நிதியியல் நிலைமையின் பலவீனம் இம்மாதிரி உள்ளது. இந்த முடிவுகளே ஒரு முறிவைத் தூண்டிவிடும். “பேரழிவு எதிர்பார்ப்புகள் எழுச்சி பெற்றால், அதிலிருந்து தங்களைத்தாங்களே காப்பாற்றிக் கொள்ள முயலுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், விளைவுகள் இன்னும் வேகமாக இருக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.

இது வெறுமனே நிதியியல் என்று மட்டும் இருக்காது. யூரோ மண்டலத்தின் உடைவு "ஒரு யுக அழிவிற்கு சரிசமமாக இருக்குமென்று, திங்களன்று, போலாந்தின் வெளியுறவுத்துறை மந்திரி ரடாஸ்லோ சிகோர்ஸ்கி எச்சரித்தார். அவர் தொடர்ந்து கூறியது: “அவரவர் தம்மை தாமே பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற தர்க்கம் மேலோங்கத் தொடங்கினால், ஒவ்வொருவரும் ஒரு பொதுஉணர்வு வழியில் செயல்படுவாரென்றும், வர்த்தகம் போன்ற இதர பிரிவுகளில் பிரச்சினைகளை தீர்க்க உணர்ச்சிவேகத்தை குறைப்பாரென்றும் உண்மையில் நம்மால் எவரையேனும் நம்ப முடியுமா?” வர்த்தக முரண்பாடு அபிவிருத்தி அடைந்தால், பின்னர் நிலைமைகள் இராணுவ மோதல்களுக்கு வேகமாக அபிவிருத்தி அடையும்,” என்றார்.

பெரும்பாலான ஊடக விமர்சனங்கள், ஐரோப்பிய மத்திய வங்கி ஒரு கடைசி புகலிடமாக செயல்பட அனுமதிப்பதை அல்லது ஒவ்வொரு நாட்டின் கடன்களுக்கும் உத்தரவாதமளிக்கும் ஒரு வழியாக யூரோ பத்திரங்களை உருவாக்க ஜேர்மன் அதிபர் ங்கேலா மேர்கெலின் மறுப்பு யூரோ மண்டல நெருக்கடியை குறித்துக்காட்டுகிறது.

ஆனால் இந்த நெருக்கடியை ஜேர்மன் அரசாங்கத்தின் இணக்கமில்லாத தன்மைக்குள் கொண்டுசென்று நிறுத்திவிட முடியாது. முன்வைக்கப்பட்ட முறைமைகளுக்கு அதன் எதிர்ப்பு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அதிகபட்சம், குறுகிய-கால மீட்சியை மட்டுமே அளிக்கும் என்பதோடு, அதேவேளை நீண்டகால அடிப்படையில் ஜேர்மனியைச் சுழலுக்குள் இழுத்துவிடும் என்ற அச்சத்தின் அடித்தளத்தில் உள்ளது.

யூரோ மண்டல பொருளாதாரத்தின் இயக்கவியலைக் குறித்த ஒரு சுருக்கமான ஆய்வும் கூட, அந்த நெருக்கடியின் வேர்கள் ஜேர்மனியின் இணங்காமையை விட மிகவும் ஆழமாக உள்ளதென்பதைத் தெளிவுபடுத்துகிறது. கடன் நெருக்கடியானது, ஐரோப்பா முழுவதிலும் நிலவும் பொருளாதார வளர்ச்சியின்மையால் தூண்டிவிடப்பட்டுள்ளது.

சான்றாக, அரச கடன்மீது வாங்கும் செலவுகள் தற்போது வழக்கமாக 7 சதவீதத்திற்கும் மேலாக செல்லும் இத்தாலியில் (அதுவும் திங்களன்று 8 சதவீதத்தைத் தொட்டது), வெறுமனே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு தற்போதைய அரச கடனைத் தக்கவைக்க வேண்டுமானால் அதன் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் அவசியமாகும். கடந்தகாலத்தில், செலாவணி மதிப்பை மாற்றியும், ஏற்றுமதிகளை உயர்த்தியும் அரசாங்கங்கள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்தன. ஆனால் யூரோ ஆட்சியின்கீழ் அவ்வாறு செய்வது சாத்தியமல்ல.

மறுபுறம், நிதியியல் சந்தைகளில் இத்தாலிய கடன்களுக்கான வாங்கும் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன முறைமைகள், பொருளாதாரத்தை ஆழமாக மந்தநிலைமைக்குள் தள்ளுகிறது. அதன்விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்கிறது; கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் உயர்கிறது; வாங்கும் செலவுகள் அதிகரிக்கிறது. சிக்கன நடவடிக்கை, வளர்ச்சி குறைவு, வரவு-செலவு பற்றாக்குறைகள் அதிகரிப்பு மற்றும் உயர்ந்துவரும் வட்டிவிகிதங்களின் ஒரு சுயசுழற்சி-நீடிப்பு (self-perpetuating cycle) அமைந்துவிடுகிறது.

இத்தகையவொரு நச்சுத்தன்மையான சுழற்சிகள் இருப்பதென்பது, கடன் மற்றும் யூரோ நெருக்கடி சரியான கொள்கைகளை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தி தீர்க்கக்கூடிய ஒரு இணைவான பிரச்சினையல்ல என்ற உண்மையையே குறிக்கிறது. மாறாக, அது ஒட்டுமொத்த முதலாளித்துவ திரட்சியின் நிகழ்போக்கின் முறிவால் எடுக்கப்பட்ட வடிவமாகும்.

1999இல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகளவில் கடன் சார்ந்திருந்தது. பொருளாதார அபிவிருத்தி சமச்சீரற்று நிகழ்ந்தது. விளிம்பிலிருந்த நாடுகள் என்றழைக்கப்பட்ட சில நாடுகள் செலுத்துமதி நிலுவையில் சென்றுகொண்டிருந்தன; அதேவேளையில் மைய நாடுகள் அனைத்திற்கும் மேலாக ஜேர்மனி, உபரியில் (surpluse) சென்றுகொண்டிருந்தது. இந்த உபரிகள் பின்னர் விளிம்பிலிருந்த நிதியியல் அமைப்புகளால் மறுசுழற்சி செய்யப்பட்டன; அங்கே அவர்கள் தோற்றுவித்த செலவுகள் மைய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளின் அடித்தளத்தில் உருவானது.

மலிவுக்கடன் நிலைமைகளின்கீழ், யூரோ அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு விரிவடையும் ஐரோப்பிய சந்தைக்கான நிலைமை தோற்றுவிக்கப்படுவதாக தோன்றியது. அது சீனாவிலிருந்து அமெரிக்க நிதியியல் அமைப்பிற்குள் ஏற்றுமதி உபரிகளின் மறுசுழற்சியால் சாத்தியப்பட்ட, 2001 மந்தநிலைமைக்குப் பின்னர் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியால் தூண்டிவிடப்பட்ட மலிவுக்கடனைப் போன்றே இருந்தது.

ஆனால் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவு, சர்வதேச நிதியியல் அமைப்புமுறையின் இதயத்தில் இருந்த அழுகல் மற்றும் சீரழிவை உரித்துக்காட்டியது. அத்தோடு ஐரோப்பிய பொருளாதாரத்தின் கடன்-வழங்கும் விரிவாக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தது.

ஐரோப்பிய முதலாளித்துவம் பேரழிவை நோக்கி நகர்கிறது என்ற அதன் சொந்த அமைப்புகளே எச்சரிக்கின்ற நிலையில், அந்த நெருக்கடிக்கு அதனிடம் எந்த தீர்வும் இல்லை. அதிகாரத்தை கைப்பற்றி, தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபித்து, வங்கியியல் மற்றும் நிதியியல் அமைப்புமுறைகளைக் கைப்பற்றி, ஐரோப்பிய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் பகுத்தறிவார்ந்த திட்டமிடலைத் தொடங்குவதற்கான அரசியல் அதிகாரத்தை எடுப்பதற்கான போராட்டத்தின் மூலமாக ஒரு முற்போக்கான தீர்வை தொழிலாள வர்க்கம் மட்டுமே முன்னெடுக்க முடியும்.