World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Criminal attack on Sri Lankan Tamil political prisoners

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல்

By Subash Somachandran
6
December 2011
Back to screen version

இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 65 தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 27 அன்று சிறைக் காவலர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அரசியல் கைதிகள் மீதான இந்த புதிய இனவாத தாக்குதல், அரசியல் கைதிகளின் உடனடியான நிபந்தனையற்ற விடுதலையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்னெடுக்கின்ற பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசரத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.

ஊடகங்களுக்கு எட்டிய அரைகுறை செய்திகளின்படி, சுமார் 25 சிறைக் காவலர்கள் கைதிகளை அவர்களது ஆடைகளைக் கலையுமாறு நெருக்கியதோடு அவர்களை தாக்கினர். யுத்தத்தின் போது கை கால்களை இழந்த ஊனமுற்ற கைதிகள் உட்பட சுமார் 24 கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹரிகரன் மற்றும் தயா, வவுனியாவைச் சேர்ந்த சச்சி, திருகோணமலையைச் சேர்ந்த நிக்ஸன் ஆகியோர் மோசமாகக் காயமடைந்ததோடு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த புலிப் போராளிகளை நினைவுகூறும் முகமாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வே. பிரபாகரனால் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் கொண்டாடப்படும் தினமான, நவம்பர் 27 அன்றே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009 மே 18 அன்று ஏனைய தலைவர்களோடு பிரபாகரனும் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் வரை, இந்த தினம் பிரபாகரனால் கொண்டாடப்பட்டு வந்தது. அனுராதபுரத்தில் ஆத்திரமூட்டல் எதுவுமின்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல், தமிழர்கள் மீதான சிங்கள இனவாத இழிவுபடுத்தலை குறிக்கும் வகையில் குறிப்பிட்ட தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்கள் மத்தியிலும் ஏனைய வெகுஜனங்கள் மத்தியிலும் எதிர்ப்புக்கள் கிளம்புவதையிட்டு பீதியடைந்த அரசாங்கம், இந்த கொடூர ஒடுக்குமுறையை மூடி மறைப்பதற்காக பல்வேறு கதைகளை புணைந்து வெளியிட்டுள்ளது. சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசேன கஜதீர தெரிவித்ததாவது: சிறைச்சாலை அதிகாரிகள், மாவீரர் தினத்தை கொண்டாட சிறைக் கைதிகள் எடுத்த முயற்சிகளை நிறுத்தாமல் இருந்திருந்தால், கறுப்பு ஜூலை தினம் போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கக் கூடும். ஊடகங்கள் வேறுபட்ட கதைகளை பரப்புவதாக விளக்கம் எதுவும் தராமலேயே அவர் குற்றஞ்சாட்டினார். சிங்கள கைதிகள் தமிழ் கைதிகளை தாக்குவதற்கு தயாரானதாக அவர் மறைமுகமாக கூறினார்.

அவர் கருப்பு ஜூலை என்று குறிப்பிட்டது, 1983 ஜூலை மாதம் கொழும்பு சிறைச்சாலையொன்றில் குண்டர்களால் 59 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டதையே ஆகும். சிங்கள பேரினவாத குண்டர்கள், நாடு பூராகவும், குறிப்பாக கொழும்பில் தமிழர் படுகொலை தாக்குதலை முன்னெடுத்து ஆயிரக் கணக்கானவர்களை படுகொலை செய்துகொண்டிருந்த சூழ்நிலையிலேயே  சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் 13 சிப்பாய்களை புலிகள் கொன்றமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் சித்தரிக்கப்பட்ட போதிலும், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தன. இந்த தாக்குதல் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் தொடக்கத்தை குறித்தது.

எவ்வாறெனினும், பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக கொழும்பு நீதவானிடம் வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளது. புலி சந்தேக நபர்கள் தங்களைத்“ தாங்களே காயப்படுத்திக்கொண்டு, அந்தக் காயங்களை படம் எடுத்து சர்வதேச சமூகத்துக்கு அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சித்தனர்” என அவர்கள் கூறியதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சிறைச்சாலையை பரிசோதிக்கும் போது அதிகாரிகள் 19 கையடக்கத் தொலைபேசிகளையும், தொலைபேசி சார்ஜர்களையும், இரும்புக் கம்பிகளையும் மற்றும் கூர்மைப்படுத்தப்பட்ட தகரத் துண்டுகளையும் கண்டுபிடித்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொலிசார் கூறிய முறைப்படி, இந்த தாக்குதல் காவலர்களால் மேற்கொள்ளப்படவில்லை, மாறாக கைதிகள் தாங்களாகவே காயப்படுத்திக்கொண்டனர். இந்த வக்கிரக் கதை, இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரும் துரோகத்தனமாக இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்றனர் என்று அரசாங்கம் செய்யும் பிரச்சாரத்தின் வழியிலானதாகும்.

பாதுகாப்பு கோரியும் தங்களை வவுனியா சிறைக்கு மாற்றுமாறு கோரியும் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். எவ்வாறெனினும், ஒரு சமரசத்துக்காக அரசாங்கத்துடன் தாம் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று நினைத்த, பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த போராட்டத்தை நிறுத்த தலையிட்டது.

இந்தக் கைதிகள், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பல ஆண்டுகளுக்கு முன், சிலர் பத்து வருடங்களுக்கு முன், கைது செய்யப்பட்டனர். சுமார் 800 கைதிகள் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாத புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், இந்தக் கைதிகள் இழிநிலையிலான சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுக்கள் கூட பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படாமல் உள்ளமை, அவர்களுக்கு எதிரான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் பொலிசாரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்தக் கைதிகளுக்கும் மேலாக, இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கைது செய்து இரகசிய இடங்களில் தடுத்து வைத்துள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பக்கம் தப்பி வந்து, இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300,000 பொது மக்கள் மத்தியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட சுமார் 11,000 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அவர்களில் 5,000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. அவர்கள் கைது செய்யப்பட்டு 18 மாதங்களாகியும் எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டு தொடர்ச்சியான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பில் வாழ்கின்றனர்.

சிறையில் உள்ள கைதிகள் அனுராதபுரம், கொழும்பு, கண்டி, பதுளை, பூஸ்ஸ மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில், அவர்கள் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரி அடிக்கடி போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்கள் கொடூரமான தாக்குதல்களால் அல்லது அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளால் நசுக்கப்பட்டன.

2010 ஜனவரி முற்பகுதியில், விடுதலையும் நிவாரணமும் கோரி நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் எட்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது கோரிக்கை பற்றி அக்கறை செலுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வாக்குறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆயினும், வழமை போல் அதுவும் போலி வாக்குறுதியாகியது.

இந்த ஆண்டு ஜனவரியில், அனுராதபுரம் சிறையில் 20 கைதிகள், தரங்குறைந்த நிலைமைகளைக்கு எதிராக கூரை மீது ஏறி உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போது ஏற்பட்ட மோதலில் காவலாளிகள் இரு கைதிகளை சுட்டுக் கொன்றனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் பின்னர் உயிரிழந்தார். ஒரு தொகை கைதிகளும் பல காவலாளிகளும் காயமடைந்தனர். 

கடந்தவார தாக்குதலானது, நாட்டின் இறைமையைக் கீழறுக்க இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புலம்பெயர்ந்துள்ள புலிகள் பிரச்சாரம் செய்கின்றனர் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தை அது உக்கிரப்படுத்தியிருந்த சூழ்நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் உள்ள புலிகளின் மிச்ச சொச்சங்களின் பிரச்சாரம் புதியதல்ல.

ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய அரசாங்கத்தின் பிரச்சாரம் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்குவதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வறியவர்களின் மத்தியில் அதிகரிக்கும் அதிருப்தியை திசை திருப்பி, நசுக்கவும் இராணுவமயமாக்கலை பலப்படுத்தவும் அரசாங்கம் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.

சோ.ச.க. வலியுறுத்தியது போல், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரமானது உழைக்கும் மக்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்டத்துடன் வேறுபடுத்த முடியாமல் பிணைந்துள்ளதையே அனுராதபுரம் சிறைச்சாலை தாக்குதல் மீண்டும் வலியுறுத்துகின்றது.

பி. அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இ. சரவணபவன் உட்பட ஆறு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். முதலைக் கண்ணீர் வடித்த அரியநேந்திரன், அவர்கள் [கைதிகள்] உயிரிழப்பதை நாம் [கூட்டமைப்பு] விரும்பவில்லை. அவர்கள் அதைக் கேட்டு விரதத்தை முடித்துக்கொண்டனர், என பெருமையாகக் கூறிக்கொண்டார். தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும் சர்வதேச சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்துடனும் சர்வதேச சக்திகளுடனும் பேசுவது பயனற்றது என்பது தமிழ் கூட்டமைப்பு நன்கு அறிந்த விடயமே. அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகள், மனித உரிமைகள் பற்றி பாசாங்குத் தனமாகப் பேசும் அதே வேளை, தமது மூலோபாய நலன்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் யுத்தக் குற்றங்களைச் செய்கின்றன. தமிழ் முதலாளித்துவத்துக்கு சிறப்புரிமைகளை எதிர்பார்த்து, அரசாங்கத்துடனும் மற்றும் அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகளுடனுமான தமது சிடுமூஞ்சித்தனமான நகர்வுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு இந்த அரசியல் கைதிகளின் தலைவிதியைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ் கூட்டமைப்பு விரும்புகிறது.

தமிழ் கூட்டமைப்பைப் போலவே, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசனும், அமைச்சரவை அமைச்சர்கள் --டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகம் தொண்டமான்கைதிகள் விவகாரம் பற்றி இராஜபக்ஷவுடனும் சர்வதேச சமூகத்துடனும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டு தன் கைகளைக் கழுவிக்கொண்டார்.

தேவானந்தாவும் தொண்டமானும் யுத்தத்தை ஆதரித்தவர்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பீ.டி.பீ.) தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருப்பதை ஆதரிப்பதோடு தனது கட்சியின் துணைப்படைக் குழுவோடு இராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றார். பெருந்தோட்டத்தை தளமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டமான், தோட்டங்களில் தனது காட்டிக்கொடுப்புக்களை எதிர்க்கும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை கைது செய்வதற்காக பொலிசுக்கு பெயர் பட்டியல் கொடுப்பதில் இழிபுகழ் பெற்றவர்.

அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கு குறுக்கு வழிகள் கிடையாது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் பின்னால் செல்வது என்பது ஒரு பொறிக்கிடங்காகும். ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை இராஜபக்ஷ அரசாங்கம் எதற்காகவும் நிறுத்தப் போவதில்லை. இது ஒரு காலத்தில் இராஜபக்ஷவின் பங்காளியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்ததன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆளும் தட்டின் ஒரு பகுதியினருக்காக, தனது சொந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இராஜபக்ஷவை சவால் செய்தமையால், பொன்சேகா சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

உலக நெருக்கடியின் பாகமாக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியை திணிப்பதன் பேரில் இராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீது மேலும் மேலும் தாக்குதல் தொடுக்கின்றது. அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதன் பேரில் சோசலிசப் புரட்சியின் பாகமாக மட்டுமே அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியும். சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்தையே முன்வைக்கின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும், டிசம்பர் 8 அன்று, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.