World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The unreality of the US presidential campaign

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையற்ற நிலை

Patrick Martin
December 2011
Back to screen version

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் இன்னும் மூன்று வாரங்களில், ஜனவரி 3ல், அயவோ மாநிலத்தில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உள்த்தேர்வு நடவடிக்கைகளுடன் அதன் உத்தியோகபூர்வ போட்டியை தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஒரு வாரத்தில் நியூ ஹாம்ப்ஷைரில் முதலாவது ஆரம்பத் தேர்தல் நடக்க உள்ளது.

இதுவரை குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையேயான விவாதங்கள், ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் விடையிறுப்புக்கள், பரபரப்பான செய்தி ஊடகத் தகவல்கள் என்று பிரச்சாரத்தின் முக்கிய கூறுபாடுகள் அமெரிக்க மக்களின் பெரும்பாலானவர்களின் அக்கறைகளில் இருந்து அமெரிக்க அரசியல் அமைப்புமுறை பிரிக்கப்பட்டுள்ளதன் அளவிடமுடியாத பெரும் பிளவிற்குத்தான் நிரூபணமாக உள்ளது.

பெரு வணிகத்தின் ஜனநாயக மற்றும் குடியரசு என்னும் இரு கட்சிகளுமே இன்னும் அதிகமாக வலதிற்கு நகர்ந்துள்ளன. இரண்டும் வோல்ஸ்ட்ரீட் பிணைஎடுப்பு, மற்றும் 2008 நிதியச் சரிவு ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவு ஆகியவை தோற்றுவித்த பற்றாக்குறையை ஈடு செய்வதற்குக் சமூகநலச் செலவுகளில் கடுமையான வெட்டுக்களைச் கோருகின்றன.

ஆனால் தொழிலாளர்களிடையே அரசியல் அபிவிருத்தியின் தன்மை இடதுபக்கம் செல்கிறது, வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களில் கருவெடுத்து தொழிலாளர்களிடையே ஆலைகளிலும், அலுவலகங்களிலும், மற்றும் வேலை கிடைக்காத தொகுப்பினரிடையேயும் சீற்றத்தை அதிகரித்துக் கொண்டுவருகிறது. Medicare, Medicaid சமூகப் பாதுகாப்பு இவற்றில் வெட்டுக்களுக்கும், மாநில, உள்ளூராட்சி மட்டங்களில் பிற சமூகநலத் திட்டங்களில் குறைப்புக்களுக்கும் மக்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பு உள்ளதை கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

2012 தேர்தல் பிரச்சாரத்தில் உண்மையற்ற தன்மையின் கூடுதலான சக்திதான் காணப்படுகிறது. ஒபாமா தேர்தல் பிரச்சார வகையிலான கடந்த புதன்கிழமை கன்சாஸில் பேசியதைக் கேட்டாலோ, அயோவாவில் குடியரசுக் கட்சியினரின் விவாதங்களைக் கேட்டலோ, அமெரிக்காவில் பல ஆயிரம் மில்லியன் தொழிலாளர்கள் வறுமையில் வாழ்கின்றனர், அன்றாட வாழ்வை பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மை ஆதிக்கம் கொண்டுள்ளது, அமெரிக்க சமூகம் அலையென பசிக் கொடுமை, வேலையின்மை, வீடுகள் விற்கப்படுதல், கல்வித்துறைச் சரிவு, சுகாதாரப் பாதுகாப்புக் குறைவு இன்னும் பல சமூகநலச் செலவுகளில் வெட்டுக்களை எதிர்கொள்ளுகிறது என்பவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது.

குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் மிகப் பிற்போக்குத்தன பிரிவினரின் சுயந நிதிய நலன்கள் மற்றும் முன்கருத்துக்களுக்குத்தான் அழைப்புவிடுகின்றனர். அதாவது நிதியப் பிரபுத்துவத்தின் மிகச் சிறியதட்டிற்கும், கிறிஸ்துவ அடிப்படைவாதிகளிடேயே குடியரசுக் கட்சியின் அடித்தளத்திற்கும்”, தீவிர வலதுசாரித்தன Tea Party இயக்கத்தினருக்கும்.

குடியரசுக் கட்சி வலதிற்கு நகர்ந்துள்ள விதம், அதன் தற்பொழுது முன்னணியில் இருக்கும் முன்னாள் மன்றத் தலைவர் நியூட் கிங்ரிச் மூன்று தசாப்தங்கள் அரசியல் பிற்போக்குத்தன சான்றுகளைக் கொண்டிருந்தும் சனிக்கிழமை விவாதத்தில் போதுமான பிற்போக்குத்தன்மை இல்லை என்று தாக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. ஒரு விடையிறுப்பின்போது கிங்ரிச் சிறுவர் உழைப்புக்கு எதிரான சட்டங்களை அகற்றுவதற்குத் தன் ஆதரவைக் கொடுத்திருந்தார். வேட்பாளர்கள் அனைவருமே செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்கான வரிகள் இன்னும் குறைக்கப்படும் என உறுதியளித்தனர்.

விவாதத்திற்குப் பின் வந்த செய்தி ஊடக விமர்சகங்கள், தன் எதிர்ப்பாளர்களில் ஒருவருக்குச் சவால் விட்ட, மாசச்சுஸட்ஸின் முன்னாள் ஆளுனர் மிட் ரொம்னியின் ஆராயாத குற்றம் எனப்படுவதின்மீது குவிப்பைக் காட்டின. டெக்சாஸ் ஆளுனர் ரிக் பெர்ரியை அவர் $10,000 பந்தயத்திற்குத் தயாரா என்று கேட்டார். சராசரி அயோவாத் தொழிலாளியின் மூன்று மாத ஊதியத்திற்குச் சமமான இத்தகைய உயர் நிதியைக் குறித்த அளவில், மில்லியனரான முதலீட்டு வங்கியாளர், வாக்காளரிடம் இருந்து அவர் விலகி நிற்கும் தூரத்தை ஆழமாகவும், வெளிப்படையாகவும் எடுத்துக்காட்டினார்.

மிகக் கொழுத்த வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள வேட்பாளர் என்னும் முறையில் ரொம்னி மிக வெளிப்படையான உதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அமெரிக்க அரசியலில் சேகரிக்கப்பட்டுள்ள செல்வம் கொண்டுள்ள மேலாதிக்கப் பங்கைத்தான் உருவகமாகக் கொண்டுள்ளார். முழு உத்தியோகபூர்வ அரசியல் முறையும், ஜனநாயகம் மற்றும் குடியரசு என்ற இருகட்சிக்காரர்களுமே, பெரும் செல்வந்தர்களின் கைகளுக்குள்தான் இருக்கின்றனர், ஒரு தீர்க்க முடியாத சமூகப் பிளவினால் தொழிலாளர்களின் தேவைகள் நலன்கள் ஆகியவற்றில் இருந்து தனிமைப்பட்டு உள்ளனர்.

குடியரசுக் கட்சியினர் வெட்கங்கெட்டவகையில் வெளிப்படையாக செல்வத்தின் பாதுகாவலர்களாக செயல்படுகையில், ஜனநாயகக் கட்சியினர் சற்று சிக்கல் வாய்ந்த பங்கைக் கொண்டுள்ளனர்; நிதியப் பிரபுத்துவத்திற்கு பாதுகாப்புக் கொடுத்து, அதே நேரத்தில்மத்தியதர வர்க்கம்”, ஏன்உழைக்கும் குடும்பங்களுக்கா கூட வாதிடுபவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர்.

இதுதான் கன்சாஸில் ஒசவடோமியில் ஒபாமா நிகழ்த்திய உரையின் முக்கிய பகுதியாகும். அங்கு அவர் பெருநிதிய நலன்களின் பெரும் விரோதியான தியோடர் ரூஸ்வெல்ட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதாகப் பாசாங்கு காட்டி, நிதிய நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட வேலைகள், வாழ்க்கைவசதிகள் மற்றும் வீடிழந்தவர்கள் என்ற பாதிப்பாளர்களுக்காக  பரிவுணர்வு கொண்டுள்ளதாகக் கூறினார். அதாவது ஒபாமா இவர்களை, “நிரபராதிகள், கடுமையாக உழைக்கும் அமெரிக்கர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்கள், ஆனால் இன்னும் வெற்றுப்பைகளைத்தான் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

இத்தகைய ஜனரஞ்சகப் பேச்சு அமெரிக்க மக்களின் புத்திஜீவித்தனத்திற்கு ஒரு அவமதிப்பு ஆகும். ஏனெனில் புஷ்ஷின் கீழ் தொடங்கிய வோல்ஸ்ட்ரீட் பிணைஎடுப்பை ஒபாமா தொடர்ந்தார், விரிவாக்கினார் என்பதைப் பற்றி எவரும் கவனிக்கவில்லை என்ற ஊகத்தில் இருந்து கூறப்பட்டுள்ளது. அதேபோல் கார்த்தயாரிப்பு முதலாளிகளை கார்த் தொழிலாளர்களின் ஊதியங்களை குறைத்த வகையில் பாதுகாத்தார், அமெரிக்க நிறுவனங்களுக்கு செலவுகளை குறைக்கும் வகையில் நோயுற்றவர்களுக்கான சேவைகளைக் குறைத்த வகையில் ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை இயற்றினார், பொதுக்கல்வி முறையை நேரடியாகத் தாக்குதல், பள்ளி ஊழியர்களைத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றியும் எவரும் கவனிக்கவில்லை என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பொதுமக்களுக்காக பரிந்து பேசுதல் நலிந்த தன்மையைக் கொண்டது; பெருகிய முறையில் அமெரிக்க உழைக்கும் மக்கள் அதை நன்கு புரிந்துள்ளனர். ஞாயிறு இரவு CBS நிகழ்வான “60 நிமிடங்களில் ஒரு பேட்டியில், நிருபர் ஸ்டீவ் க்ரோப்ட் ஒபாமாவை அவருடைய அரசாங்கம் செல்வந்தர்களைக் காக்கிறது என்று பெருகியுள்ள உணர்வு பற்றி வினவினார். சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் ஒபாமாவின் கொள்கைகளால் பெரும் நலன்களைப் பெற்றுள்ளனர் என்றும் காட்டினார். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான 42% னர் வோல் ஸ்ட்ரீட்தான் ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து நலன்களை அடைந்ததில் முதல் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் பெருகிய முறையில் அரை டஜன் அரசியல் பிற்போக்காளர்கள் குறித்து ஊகத்தைக் கொடுக்கிறது; இவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மக்களால் அறியப்படாதவர்கள்; ஒபாமாவை இவர்களில் எவர் எதிர்கொள்ளப்போகிறார், பொதுத் தேர்தலின் விளைவு எப்படி இருக்கும் என்பது பற்றிய ஊகங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் நவம்பர் 6, 2012 க்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. செய்தி ஊடகம் கணிப்பதைவிட நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டு விரிவடையக்கூடும்.

முதலாளித்துவ தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையற்ற தன்மை ஒரு புறநிலை ஆதாரத்தைக் கொண்டுள்ளது. அதாவது இரண்டில் எந்தக் கட்சியும், தீவிரமாக விவாதிப்பது ஒருபுறம் இருக்க, தேர்தல் மீது நிழல்போல் படர்ந்திருக்கும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி பற்றி ஒப்புக்கொள்ளக்கூட மாட்டாது. அதுதான் புதிய அதிர்ச்சி அலைகளை பொருளாதார, அரசியல், ஏன் இராணுவத்தில் கூடக் கொடுக்கும் உந்துதல் சக்தியாக உள்ளதுடன், இது ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரின் அரசியல் கணக்குகளை விரைவில் மூழ்கடித்துவிடும்.

2011ம் ஆண்டு மத்திய கிழக்கு, ஐரோப்பாவில் பெரும்பகுதி, இன்னும் சமீபத்தில் ஷ்யா என்று பல இடங்களிலும் அரசியல் எழுச்சிகளைக் கண்டது. அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு என்னும் இரு கட்சிகளின் வலதுசாரக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் முதல் எழுச்சிகளையும் அது கண்டதுவிஸ்கோன்சின் இன்னும் பிற மாநிலங்களில் பொதுத்துறை ஊழியர்களின் எதிர்ப்புக்கள் வெளிவந்தன, அதன் பின் இலையுதிர்காலம் முழுவதும் மையப் பகுதியைக் கொண்டிருந்த வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்புக்கள் வந்தன.

2012ல் நிதிய நெருக்கடியின் புதிய வெளிப்பாடுகள், புதிய போர்கள், மக்கள் எதிர்ப்பின் புதிய வெடிப்புக்கள் என இன்னும் பெரிய நிகழ்வுகள் வரவுள்ளன. இந்நிகழ்வுகள் அமெரிக்காவில் அரசியல் உறுதித்தன்மையை முறிக்கும்உண்மையான பெயரில் கூற வேண்டும் என்றால், அமெரிக்க நிதிய உயரடுக்கு நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் அரசியல்மீதான இரும்புப் பிடியை முறிக்கும்; அதேபோல் உழைக்கும் வர்க்க மக்கள் திரளினர் அரசியல் வாழ்வில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதையும் அகற்றும்.

1960களின் கடைசியில் நடந்த அமெரிக்க சமூக, அரசியல் நெருக்கடியின்போது குடியுரிமை குறித்த மக்கள் எழுச்சி மற்றும் வியட்நாம் போருக்கு எதிரான எழுச்சி ஆகியவை முதலாளித்துவ கட்சிகளுக்குள்ளேயே உட்பூசல்கள் என்ற வகையில், குறிப்பாக ஜனநாயகக் கட்சியில் வெளிப்பாட்டைக் கண்டன.

இன்று அத்தகைய போக்கு ஏதும் இல்லை. தொழிற்சங்கங்கள் மற்றும்இடது தாராளவாத பிரிவின் உதவியுடன், நிர்வாகம் திறமையுடன் உழைத்து ஜனநாயகக் கட்சி மீண்டும் ஜனாதிபதிப் பதவிக்கு ஒபாமாவை வேட்பாளராக நிறுத்துவதை தடுப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியப் போர்களுக்கு எதிர்ப்பு, அரசாங்கத்தின் கொள்கையாக சித்திரவதை, படுகொலை ஆகியவை இருப்பதற்கு எதிர்ப்பு வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பு மற்றும் சமூகநலப் பணிகள் தகர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை தற்பொழுதுள்ள அரசியல் நடைமுறைக்குள் எந்தவகை வெளிப்பாட்டையும் காணவில்லை.

இப்பிரச்சினைகள் உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதே இரு கட்சி முறையின் திவால் மற்றும் பிற்போக்குத்தன்மையை நிரூபிக்கிறது. அமெரிக்க நிதிய உயரடுக்கின் கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பு அமெரிக்கத் தேர்தல்கள் மற்றும் இரு உத்தியோகபூர்வ கட்சிகளின் வடிவமைப்பிற்கு வெளியே வெடிக்கும் என்பதை இது உறுதிபடுத்துகிறது.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் வெகுஜனப் போராட்டங்களில் தலையிடுவது என்பது அரசியல் தெளிவுபடுத்தல் போராட்டத்துடன் அக்கம்பக்கமாக இணைந்து நிற்கிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியிடம் கொண்டிருந்த போலித் தோற்றங்களில் இருந்து முறித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் சோசலிசக் கொள்கைகளைத் அடித்தளமாக கொண்ட ஒரு மாற்றீட்டின் தேவையை பெருகிய முறையில் காண்கின்றனர்.

2012ல் வரவிருக்கும் போராட்டங்களில், முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு என்னும் முறையில், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்யும்.