சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan ex-lefts promote illusions in Tamil National Alliance

இலங்கை முன்நாள் இடதுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மாயைகளை பரப்புகின்றனர்

By K. Ratnayake
13 July 2011
Use this version to print | Send feedback

இலங்கையில் நவசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த போலி தீவிரவாதிகள், முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாதாரண தமிழர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியாக ஒரே கட்சியாக- முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய மற்றும் முற்றிலும் சந்தர்ப்பவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு செய்வதன் மூலம், நவசமசமாஜக் கட்சி மதிப்பிழந்துபோன தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகவும் தேவையான அரசியல் உதவியை வழங்குவதோடு மட்டுமன்றி, தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பின்னாலும் அணிதிரளுகின்றது.

தமிழ் செய்திப் பத்திரிகையான உதயன், இம்மாதம் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவை பேட்டி கண்ட போது, அரசாங்கம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை சுட்டிக் காட்டிய கருணாரட்ன, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள், ஏற்கனவே தமது வாக்குகளின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது ஏக பிரதிநிதிகளாக ஸ்தாபித்து விட்டனர், எனத் தெரிவித்தார். உண்மையில், 2010 ஏப்பிரலில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் வாக்காளர்கள் விலகியே இருந்துகொண்டனர். வடக்கில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில், 23 வீதத்தினரே வாக்களித்திருந்தனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைவாசிக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது.

குறைந்த வாக்களிப்பு வீதம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான ஒரு பொது வெறுப்பை வெளிப்படுத்தியது. அதற்கு முன்னதாக ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பதவியில் இருந்த மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்ததையிட்டு அநேக தமிழர்கள் சீற்றமடைந்திருந்தனர். புலிகளுக்கு எதிரான, பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் சாவுக்கு வழிவகுத்த, இறுதித் தாக்குதல்களை இராணுவத் தளபதியாக இருந்து பொன்சேகா வழிநடத்தியதோடு, இத்தகைய யுத்தக் குற்றங்களுக்கு இராஜபக்ஷவுடன் சேர்ந்து பொன்சேகாவும் பொறுப்பாளியாவார்.

யுத்தத்தின் பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 300,000 பேரை இராணுவம் பல மாதங்களாக தடுப்பு முகாங்களில் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அவர்கள் ஏறத்தாழ எந்தவொரு உதவியும் இன்றி அவர்களது அழிந்து போன நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புலி சந்தேக நபர்களாக இரகசியமான மீள்-கல்வியூட்டும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பகுதி நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. அரசாங்க-சார்பு கொலைப் படைகளினால் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது.

முன்னர் புலிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சாதாரண தமிழர்களின் உரிமைகளை காக்கவோ, அல்லது அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நெருக்கடியான நிலைமைகளை தணிக்கவோ எதவும் செய்யவில்லை. அரசியல் தீர்வு ஒன்றுக்காக அது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள், வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமான, சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப்-பகிர்வு ஒழுங்கு சம்பந்தமான சச்சரவை கொண்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்டஅரசியல் தீர்வுக்கு நவசமசமாஜக் கட்சி வழங்கும் ஆதரவு, ஏற்கனவே அழிவை ஏற்படுத்தியுள்ள இனவாத அரசியல் வரம்புக்குள் தமிழர்களை இறுக்கி வைத்திருக்கும் முயற்சியாகும். 2009ல் புலிகளின் தோல்வி அடிப்படையில் ஒரு இராணுவத் தோல்வி அல்ல. மாறாக தனியான தமிழீழ முதலாளித்துவ அரசுக்கான அதன் வங்குரோத்து முன்நோக்கின் விளைவே ஆகும். ஓய்வற்ற இராணுவத் தாக்குதல்களை எதிர்கொண்ட புலிகள், இலங்கையிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றவர்களாக இருந்தனர். மாறாக, புலிகளின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தை, அதாவது இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்த ஏகாதிபத்திய சக்திகளை தலையீடு செய்யுமாறு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதில் கடைசி நாட்களை கழித்தனர்.

நிகழ்ச்சித் திட்டத்தில் ஈழம் இல்லாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நவசமசமாஜக் கட்சியின் உதவியுடன், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடனான ஒரு தமிழ் மாகாணம் தமிழ் வெகுஜனங்களின் துன்பங்களுக்கு முடிவுகட்ட உதவும் என்ற மாயையை பரப்புகின்றது. அத்தகைய ஒரு தீர்வுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்கு வசதியளிப்பதன் பேரில் கொழும்பு அரசாங்கத்தின் ஒரு விசுவாசமான மாகாண பொலிஸ்காரனாக சாதாரணமாக இயங்கும்.

இந்த முன்நோக்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான மற்றும் சோசலிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்தில் தமது பொது வர்க்க நலனைச் சூழ சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதை நேரடியாகத் தடுக்கின்றது. விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவு சம்பந்தமாக தீவின் தெற்கில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைகின்ற அமைதியின்மையுடன், தமிழர்கள் மத்தியிலான பரந்த அதிருப்தி சந்திக்கின்ற ஒரு புள்ளியிலேயே நவசமசமாஜக் கட்சி சரியாக இந்த இனவாத சவாரியை முன்னெடுக்கின்றது.

நவசமசமாஜக் கட்சி, இலங்கை முதலாளித்துவத் தட்டினரின் நலன்களுக்காக மட்டுமன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகவும் சேவை செய்கின்றது. ஒரு பகமைச் சக்தியான சீனா, தனது நிபந்தனையற்ற இராணுவத் தளபாட மற்றும் நிதி உதவிகளின் ஊடாக கொழும்பில் கணிசமான செல்வாக்கைப் பெறுவதைக் கண்டதனாலேயே, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்தன.

யுத்தத்தின் கடைசி மாதங்களில், இலங்கை இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்த தமிழ் சிவிலியன்களின் தலைவிதி பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அக்கறையை வெளிக்காட்டத் தொடங்கிய அமெரிக்கா, பின்னர் இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு ஆதரவளித்தது. இந்தப் பிரச்சாரத்துக்கும் சாதாரண தமிழர்களை காப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெய்ஜிங்கிடம் இருந்து தானாகவே தூர விலகிக்கொள்வதற்காக இராஜபக்ஷவை தூண்டுவதன் பேரில் யுத்தக் குற்ற விசாரணை என்ற அச்சுறுத்தலை பயன்படுத்தி, வாஷிங்டன் தனது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக மீண்டும் மனித உரிமைகள் என்ற போலி பதாதையை தூக்கிப் பிடிக்கின்றது.

தொடர்ந்து, அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்து, இராஜபக்ஷ அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை மற்றும் ஒரு அரசியல் தீர்வுக்கான அதன் அழைப்புக்கு பின்னால் தனது பலத்தைப் பிரயோகித்துள்ளது. கொழும்பில் மேலும் அழுத்தங்களை திணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வாஷிங்டன் நோக்குவது தெளிவு. புது டில்லியைப் பொருத்தளவில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அது வழங்கும் ஆதரவு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கத் தவறியதாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து எழும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்கானதே ஆகும்.

இந்த தந்திரங்களை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற ஆபத்தான மாயையை நவசமசமாஜக் கட்சி பரப்புகின்றது. உதயன் பத்திரிகைக்கு கருணாரட்ன கொடுத்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரசாங்கம் அரசில் தீர்வை காலவரையறை இன்றி தாமதித்தால், அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவின் அரசாங்கத்தை வெளியேற்றும். அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்து, பெருமளவில் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதனால், அவர்கள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.

இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுக்கு நவசமசமாஜக் கட்சி வெளிப்படையாக வழங்கும் ஆதரவு, பொது மக்களின் பாதுகாப்புக்காக என்ற சாக்கில் லிபியாவில் நேட்டோவின் குண்டு வீச்சுக்களுக்கு பல்வேறு போலி-தீவிரவாதக் கருவிகள் வழங்கும் ஆதரவுக்குச் சமாந்தரமானதாகும்.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் நிலையில் இல்லாத அதே வேளை, கொழும்பில் அவர்கள் செய்யும் சூழ்ச்சித் திட்டங்களின் இலக்கு சூறையாடலாகும். தீவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் முக்கியமான இந்து சமுத்திர கடல் பாதையில் அதன் அமைவிடத்தையும் கோடிட்டுக் காட்டி, அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் 2009 அறிக்கை, அமெரிக்கா இலங்கையை நழுவவிடக் கூடாது என பிரகடனம் செய்தது.

2002ல் சர்வதேச ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இலங்கை இராணுவம் பகிரங்கமாக மீறியதை அலட்சியம் செய்து, 2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பித்த யுத்தத்துக்கு அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக ஆதரவளித்தன. புலிகள் தோல்வியை நெருங்கிய கடைசி மாதம் வரை, இராணுவம் ஜனநாயக உரிமைகளை மோசமாக மீறுவதைப் பற்றி வாஷிங்டனும் புது டில்லியும் அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இராணுவ உதவிகளையும் வழங்கின.

எவ்வாறெனினும், அமெரிக்காவினதும் மற்றும் அதன் பங்காளிகளதும் புதிய மனித உரிமைகள் பாசாங்கை ஒரு நல்ல சந்தர்ப்பமாக நவசமசமாஜக் கட்சி வெட்கமின்றி முன்வைக்கின்றது. கடந்த மாத கடைப் பகுதியில் வீரகேசரி பத்திரிகைக்கு கருணாரட்ன எழுதிய பத்தியில் தெரிவித்ததாவது: இன்று [இலங்கை அரசாங்கத்தின் மீது] சர்வதேச அழுத்தம் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சர்வதேச சமூகத்தின் நோக்கம், யுத்தத்தால் நாசமாக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயக நடவடிக்கைகள் உட்பட மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே.

சர்வதேச ரீதியிலும் நவசமசமாஜக் கட்சி இது போன்ற வகிபாகத்தையே ஆற்றுகின்றது. கடந்த ஆண்டு கடைப் பகுதியில் பிரிட்டனுக்கு கருணாரட்னா சென்றிருந்த போது, தனது பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்காக மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பகிரங்கமாக இரந்து கேட்கும் ஒரு முதலாளித்துவ தமிழ் புலம்பெயர் அமைப்பான பிரிட்டிஷ் தமிழ் பேரவையுடன் ஒரு இடது முன்னணியை அமைக்க உடன்பாடு கண்டார். இந்த பிரிட்டிஷ் தமிழ் பேரவை, 2010 பெப்பிரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றக் கட்டிடத்தில் லேபர் அரசாங்கத்தினதும், டோரி எதிர்க் கட்சியினதும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினதும் ஆசீர்வாதத்துடன் நடந்த உலகத் தமிழ் பேரவை ஆரம்ப விழாவில் பிரதான வகிபாகம் ஆற்றியது. தமது ஏகாதிபத்திய-சார்பு திசையமைவுக்கு ஒரு இடது முகத்தை கொடுக்க ஆவல்கொண்ட பிரிட்டிஷ் தமிழ் பேரவை, கடந்த நவம்பரில் நடந்த அவர்களது வருடாந்த மாவீரர் தின நிகழ்வுக்கு ஒரு விசேட அதிதியாக கருணாரட்னவுக்கு அழைப்பு விடுத்திருந்ததோடு அவரும் தயார் நிலையில் இருந்து அதை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை முதலாளித்துவத்தின் பல்வேறு தட்டினரின் தேவைகளுக்கு எப்பொழுதும் சேவையாற்றிய சந்தர்ப்பவாத கூட்டணிகளை அமைப்பதில் நவசமசமாஜக் கட்சிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 2009ல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பீ.) சுதந்திரத்துக்கான மேடையில் இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சி, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டிக்கொள்ள யூ.என்.பீ.க்கு உதவியது. இப்போது எந்தவொரு விளக்கமும் இன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் மாயைக்கு உயிரூட்ட நவசமசமாஜக் கட்சி முயற்சிக்கின்றது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் நவசமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்களையும் அது அடித்தளமாகக் கொண்டுள்ள இனவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும். சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் பாதுகாக்க முடியும். இந்த முன்நோக்குக்காகவே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.