சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Supreme Court rejects petitions against new anti-democratic laws

இலங்கை உயர் நீதிமன்றம் புதிய ஜனநாயக விரோத சட்டத்துக்கு எதிரான மனுவை நிராகரித்தது

By Panini Wijesiriwardane
28 October 2011

use this version to print | Send feedback

இலங்கை உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இராஜபக்ஷ கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த விதிகளை அறிவித்தார்.

அக்டோபர் 12 மற்றும் 13ம் திகதிகளில் இந்த மனுக்களை நிராகரித்த, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷவேந்திர பெர்ணான்டோவின் முறையீடுகளை ஏற்றுக்கொண்டது. இராஜபக்ஷ அரசாங்கம் தனது ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்.

1979 ஒரு தற்காலிக சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், 1982ல் நிரந்தரமாக்கப்பட்டது. இதன் கீழ் கைதிகளை விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருக்க முடியும். மற்றும் ஒரு சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரியின் "உத்தரவின்படி" தடுத்து வைக்கும் காலத்தை நீடிக்க முடியும். சித்திரவதைகளின் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரங்களாகப் பயன்படுத்தவும் பயங்கரவாத தடைச் சட்டம் அனுமதிக்கின்றது.

ஆகஸ்ட் 29 அன்று, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழர் புணர்வாழ்வு மீள்குடியேற்ற அமைப்பையும் தடை செய்வது மற்றும் "சரணடைந்தவர்களை மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களை" தடுத்து வைப்பதை நீடிப்பது உட்பட புதிய விதிகளை இராஜபக்ஷ வெளியிட்டார்.

அதே தினம், தனது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குவிந்து வந்த சர்வதேச அழுத்தங்களை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, இராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். அவசரகாலச் சட்ட விதிகள் வேறு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், "புலி சந்தேக நபர்களாக" முத்திரை குத்தப்பட்டுள்ள சுமார் 6,000 தமிழ் இளைஞர்களை நீண்டகாலம் தடுத்து வைக்க அனுமதிக்கின்றது.

இராஜபக்ஷ மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான ஏனைய சட்டங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் இருந்த அத்தியாவசிய சேவை விதிகளை மீண்டும் திணிப்பதற்காக, அவர் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை புதுப்பித்து மின்சார சபை ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தடை செய்தார். அவர் பொதுச் சேவைகள் கட்டளையின் கீழ் நாட்டின் 22 மாவட்டங்களிலும் ஆயுதப் படைகளை அனுமதிப்பதை அறிவித்தார். இது வேலை நிறுத்தங்கள் அல்லது ஏனைய வெகுஜன போராட்டங்களை தகர்க்க பயன்படுத்தக் கூடும்.

இலங்கை தமிழ் முதலாளித்துவத்தின் பிரதான கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமுமான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உயர் நீதிமன்றத்தில் முதலில் மனுவை தாக்கல் செய்திருந்தார். சமத்துவம் மற்றும் சட்டத்தில் இருந்து சம பாதுகாப்பு, மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை, எதேச்சதிகாரமான கைது மற்றும் தடுத்து வைப்பு உட்பட அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பு அமைச்சர் மீறியுள்ளதாக அந்த மனு குற்றஞ்சாட்டியது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பேணுவதற்கு ஜனாதிபதியால் விதிகளை சேர்க்க முடியாது என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (சி.பீ.ஏ.) நிர்வாக ஆணையரும் இரண்டாவது மனுதாரருமான பாக்கியசோதி சரவணமுத்துவும் அடிப்படை உரிமைகள் மீறலை மேற்கோள் காட்டியிருந்தார். இந்த கொடூரமான சட்ட விதிகளின் கீழ், புலிகளின் சார்பில் ஆதரவளிக்கும், ஆலோசனை தெரிவிக்கும், உதவி செய்யும் அல்லது செயற்படும் எவரும் 20 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கத் தள்ளப்படுவார். இந்த சட்டவிதிகள், கைதிகளுக்கான "தொழில்சார் சட்ட சேவைகளுக்கான வதிகளைக் கூட குற்றத்தன்மை உடையதாக்கும்" என சி.பீ.ஏ. வாதிட்டுள்ளது. அதன் மனு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் சட்டவிதிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு நீதவானுக்கு உள்ள அதிகாரத்தைக் கூட பறிக்கின்றது என மேலும் கூறுகின்றது.

முதல் மனுவுக்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சரணடைந்தவர்கள் என சொல்லப்படுபவர்களுக்கு மேலதிகமாக சுமார் 850 பேர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டார். ஆயினும், "மனுதாரர் பிறர் விடயங்களில் அநாவசியமாக தலையிடுகிறார் மற்றும் சரணடைந்துள்ள முன்னாள் போராளிகளின்" சுதந்திரமான சிந்தனைக்கும் மனசாட்சிப்படி நடப்பதற்கும் உள்ள உரிமையை "பறிக்கின்றார்" என அவர் வலியுறுத்தினார். கைதிகள் விரும்பியே இராணுவத்திடம் சரணடைந்தார்கள், அவர்களுக்கு "புனர்வாழ்வளிக்கப்பட" வேண்டும் என கேலிக்கூத்தான முறையில் அவர் கூறிக்கொண்டார்.

உண்மையில், 2009ல் புலிகளின் இறுதித் தோல்வியின் பின்னர், கிட்டத்தட்ட 280,000 தமிழ் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாங்களில் அச்சுறுத்தும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பின்னரே 11,000 பேருக்கும் அதிகமாக இராணுவத்திடம் சரணடையத் தள்ளப்பட்டனர். புலிகளுடன் கடந்த காலத்தில் தொடர்புகள் வைத்திருந்த எவரும் "புனர்வாழ்வுக்காக" சரணடைய வேண்டும் அல்லது 20 வருட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

பின்னர் இந்தக் கைதிகள் இராணுவத்தால் நடத்தப்படும் இரகசிய முகாங்களுக்கு அனுப்பப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூட இந்த முகாங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதுவரை விடுதலை செய்திருப்பதாக அரசாங்கம் கூறிக்கொள்ளும் 5,000 கைதிகளும் கூட இராணுவ மற்றும் பொலிஸ் காண்காணிப்பிலேயே உள்ளனர். அரச பழிவாங்கல்களுக்கு பயந்து, அவர்கள் தமது கைதை சவால் செய்து வழக்குப் பதிவு செய்யவோ அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்கவோ பயப்படுகின்றனர். 2009ல் இருந்து, அரசாங்கம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியதை மட்டுமே செய்துள்ளது. எதிர்க்கட்சி செயலுனர்கள் அடிக்கடி அச்சுறுத்தல்கள், சரீர ரீதியான தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா, சரணடைந்தவர்களின் உரிமைகளை பறிக்கும் அடுத்தவர் நடவடிக்கையில் தலையிடுபவர் என்ற அரசாங்கத்தின் கூற்றின் உண்மையான அர்த்தம், தடுத்து வைப்பு அல்லது ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத் தன்மையை சவால் செய்யும் உரிமை எந்தவொரு பிரஜைக்கும் கிடையாது என்பதாகும்.

சில கொழும்பு ஊடகங்கள் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டதை அங்கீகரிக்கும வகையில் செய்தி வெளியிட்ட அதே வேளை, ஏனையவை நீதிமன்றம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ்-அரச வழிமுறைகளை நியாயப்படுத்தி விரிவுபடுத்தியுள்ள போதிலும், இந்த தீர்ப்புக்கள் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

இந்தச் சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் என குறிப்பிட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும் சர்வதேச சக்திகள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை குவிக்கின்ற காரணத்தினால், அவசரகாலச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் அதன் உணர்வைத் தூண்டுவனவாகும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இரகசியமாக ஆதரித்த இந்த சக்திகள், ஜனநாயக உரிமைகளை ஆதரிப்பவை அல்ல. அவை தமது மூலோபாய நலன்களை மீண்டும் கைப்பற்ற, குறிப்பாக இலங்கையில் வளர்ச்சியடையும் சீனாவின் செல்வாக்கை தடுக்க மட்டுமே இந்த விவகாரங்களை பயன்படுத்துகின்றன.

ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் ஜனநாயக-விரோத ஆட்சி முறையை நாடிவந்த நிலையில், ஏனைய அரசாங்க நிறுவனங்களைப் போலவே இலங்கை நீதித் துறையும் முற்றிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நகர்வுகள் இராஜபக்ஷவின் கீழ் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அவரது அரசாங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பிரதான அதிகாரிகளை நியமிக்கும் பெரும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் அரசியலமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தின் ஊடாக கொண்டுவந்துள்ளது. அரசாங்கம் மேலும் மேலும் பொதுத் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை சட்ட விரோதமாக்குவது போன்ற தனது சொந்த நோக்கங்களுக்கு நீதித்துறையை பயன்படுத்தி வருகின்றது.

அடுத்து அடுத்து வந்த அரசாங்கங்களால், மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்கள், தமது தொழில், சம்பளம், நலன்புரி சேவைகள் மற்றும் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை பாதுகாக்க முயற்சிக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ்-இராணுவ அரசின் ஒரு நேரடி ஆயுதமாக நீதித்துறை மாற்றப்படுவது, உலகம் பூராவும் மற்றும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கம் முன்னைய ஜனநாயக ஒழுங்குகளின் தோற்றங்களில் இருந்து கூட தூர விலகி வருகின்றன என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்த பின்னர், இந்த வழக்கு ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்வதைப் பற்றி கவணம் செலுத்துவதாக தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் கூட்டமைப்பு, அரசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள அழுத்தம் கொடுக்கவும் மற்றும் அதற்காக சர்வதேச பெரும் வல்லரசுகளின் ஆதரவை வெற்றிகொள்ளவுமே இந்த மனித உரிமை மீறல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.

அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, அரசாங்கத்துக்கு எதிராகவும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் தோற்றுவாயாக இருக்கும் நெருக்கடி மிகுந்த முதலாளித்துவ முறைமைக்கு எதிராகவும் சோசலிச கொள்கையின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டும் அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற உடனடி விடுதலையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பிரதான நோக்கம் இதுவே. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக சகல உழைக்கும் மக்களையும் இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.