சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை அரசாங்கம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு பட்டதாரி சான்றிதழ் வழங்கும் அனுமதியை வழங்குகின்றது

By Panini Wijesiriwardena
12 September 2011

use this version to print | Send feedback

பல்கலைக் கழகங்களை தனியார்மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் இன்னொரு பாகமாக, அரசாங்கம் சவுத் ஏசியா இன்ஸ்டிடியூட் ஓஃப் டெக்னோலஜி அன்ட் மெடிசின் (பிரைவேட்) லிமிடட்  (தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ கல்வி நிறுவனம்) எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு வைத்தியர் (எம்.பி.பி.எஸ்.) பட்டத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தப் பல்கலைக் கழக பட்டம், இலங்கைக்குள் மருத்துவ தொழில் செய்வதற்கான தகுதியான ஒன்று என ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை மருத்துவ சபையினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலமையின் கீழேயே, 2011 ஓகஸ்ட் 30ம் திகதி உயர் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள நிஸீனி நியூ கொரொத் ஸ்டேட் மெடிக்கல் அக்கடமியுடன் இணைந்த ஒரு நிறுவனமாக இயங்கும் இந்தக் கல்லூரி, 2007ம் ஆண்டு முதலீட்டுச் சபையின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த மாலபே மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது, சிகிச்சைப் பயிற்சிக்கான போதனா வைத்தியசாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் என அந்த நிர்வாகம் வெளிநாட்டு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பினும் கூட, கடந்த மூன்றாண்டுகளில் அத்தகைய வைத்தியசாலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இதன் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தேவையான ஆகக் குறைந்த தகைமை கூட இல்லாதவர்களாக காணப்படுவதுடன், இங்கு நிரந்தர விரிவுரையாளர்களாக சேவையாற்றும் சிலர் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் பகுதிநேர சேவையாளர்களாகவும் உள்ளனர். நிலமை இவ்வாறிருக்கையில், இந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஓருவர் தனது கல்வி நடவடிக்கையை நிறைவுசெய்து கொள்வதற்கு 65 இலட்சம் ரூபா வரையில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

தனியார் பல்கலைக்கழத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம், பண்புரீதியில் பூரணமான உயர்கல்வி ஒன்றை இலங்கைக்குள் ஸ்தாபிப்பதே தமது பிரதான இலக்காகும் என்று அரசாங்கம் பரப்பும் பொய் பிரச்சாரத்தின் உண்மை நிலைமை இந்த விடயங்களில் இருந்து அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிரச்சாரங்களுக்கு முற்றிலும் எதிராக  உண்மையில் நிகழ்வது என்னவென்றால், இலவசக் கல்விக்கு குழி தோண்டிவிட்டு கல்வியை இலாபமீட்டும் தொழிற்துறையாகவும் சில செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு வரப்பிரசாதமாக மாற்றும் நடவடிக்கையே ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பேரில் நலன்புரி சேவை, இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைக்கான செலவினங்கள் உள்ளடங்களாக அரச செலவீனத்தை வெட்டிக் குறைக்கும் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

2008ல் ஆரம்பமான உலக நிதி நெருக்கடி, தற்போது அரச கடன் நெருக்கடியாக உலகம் பூராகவும் பரவியுள்ள நிலைமையின் கீழ், தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மென்மேலும் சிக்கன வேலைத்திட்டங்களை தினிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏனைய அரசாங்கங்களைப் போலவே இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அரசாங்க பல்கலைக் கழகங்களில் நிலவும் பாரிய குறைபாடுகள் பற்றி கிஞ்சித்தும் அக்கறை செலுத்தாத அரசாங்கம், தனியார் பல்கலைக் கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் ஸ்தாபிப்பதற்கு தேவையான சட்டரீதியான வழிவகைகள் மற்றும் காணி உட்பட ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கி மிகவும் வளைந்து கொடுப்பதன் பின்னணியிலுள்ள காரணம் இதுவேயாகும்.

கல்வியின் சிறப்புப் பண்பு பற்றிய அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண ராவய பத்திரிகைக்குத் தெரிவித்த கருத்தில் மிகத் தெளிவாகப் புலப்பட்டுள்ளது. 1978 பல்கலைக்கழக சட்டத்தினால் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதற்கான அதிகாரம் உயர்கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறும் ஜயந்த நவரட்ண தெரிவிப்பதாவது: "ஆயினும் அந்த பட்டத்தை, மருத்துவ சபையால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப, போதனா வைத்தியசாலை பயிற்சியை சம்பந்தப்படுத்தி பார்க்கவில்லை. மாணவர்களைப் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பயிற்சியளிப்பது குறிப்பிட்ட கல்வி நிறுவனம் செய்ய வேண்டிய வேலையாகும்".

மருத்துவர்கள் சங்கத்தின் செயற்பாடு

பல்கலைக் கழகத்தினை தனியார்மயமாக்குவதற்கு எதிராக, வைத்தியர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்புக்கு மத்தியில், மாலபே மருத்துவக் கல்லூரிக்கு பட்டதாரி சான்றிதழ் வழங்கும் அனுமதி பற்றிய வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்றும், அதனை உடனடியாக நீக்குமாறும், அக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதை தற்காலிகமாக நிறுத்துமாறும் கோரி, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் தரத்தை உயர்த்தி, இலவசக் கல்வியைப் பாதுகாத்து, முறையான தரத்துக்கு ஏற்ப தனியார் பல்கலைக் கழகங்களை நடத்திச் செல்வதற்கு தமது சங்கம் போராடி வருவதாக வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான டாக்டர். உப்புல் குணசேகர உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரி உட்பட, தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவும் அரசாங்க கொள்கை தொடர்பாக மருத்துவ சபையின் நிலைப்பாட்டை அவர் பின்வருமாறு விவரித்தார். "இலங்கையை அறிவின் மையமாக ஆக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது, அதன் அத்தியாவசிய அம்சமாக தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ வேண்டியிருக்கும். ஆயினும் அவை தரம் மிக்கவையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்காகவே நாம் போராடுகிறோம்.

இலவசக் கல்வியைப் பாதுகாத்துக்கொண்டே, தனியார் பல்கலைக் கழகங்களையும்  இயக்குவது தொடர்பான இந்த சூத்திரமானது, பொதுமக்களின் கண்களில் மண் தூவுவதற்காக அரசாங்கம் நடத்தும் அதே பித்தலாட்டமாகும். பல்கலைக் கழகங்களுக்குத் தேவையான மானியங்களை வெட்டி, சிறப்புப் பண்பைச் சீர் குலைத்து, இறுதியில் அவற்றினை மூடிவிடும் அல்லது தனியார் துறைக்கு கையளித்துவிடும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொள்கின்றது. மருத்துவ பீடத்துக்கு மிகவும் இன்றியமையாத பேராசிரியர்கள் பிரிவு கூட, அரசுக்குச் சொந்தமான ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஸ்தாபிக்கப்படாமை உட்பட, ஒரு தொகை குறைபாடுகளை சுட்டிக் காட்டி, குணசேகர முன்வைத்த புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலத்துக்கு வருவது இதுவேயாகும்.

இறுதி ஆய்வில், இலங்கையை அறிவாற்றல் மையமாக ஆக்குதல் என்ற பெயரில், கல்வியை இலாமீட்டும் தொழிற்துறையாக மாற்றியமைக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து நடைபோடும் மருத்துவகள் சங்கம், இலவசக் கல்வியை வெட்டித் தள்ளுவதற்கு எதிராக வைத்தியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்பினை வேண்டுமென்றே கரைத்து விடுவதில் ஈடுபட்டுள்ளது.

தமது பிரச்சாரத்தின் பாகமாக, மருத்துவர்கள் சங்கத்தால் செப்டம்பர் 7ம் திகதி தீவு பூராவும் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் தினம் நிருபர்கள் மாநாட்டைக் கூட்டிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்கவும் நடத்துவதற்கும் அனுமதியை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்று என்றும், அதற்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது எனவும் கூறினார். 

இந்த அரசியல் சவால் விடுக்கப்பட்ட உடனேயே, வேலை நிறுத்தத்தினை கைவிட்ட மருத்துவகள் சங்கம், அதனை நியாயப்படுத்துவதற்காக, அப்பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக சுகாதார அமைச்சருடன் செப்டெம்பர் 6ம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவித்தது. இரு மாதங்களில் குறிப்பிட்ட மருத்துவ கல்லூரியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவை நிறுவுதல், அக்கால கட்டத்துள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருத்துவ கல்லூரிக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்சத் தகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஸ்தாபித்தல் மற்றும் அதுவரையும் புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையை நிறுத்தி வைத்தல் என்ற மூன்று காரணங்களின் அடிப்படையிலேயே இணக்கப்பாடு ஏற்பட்டதாக அது தெரிவித்தது.

இந்த உடன்படிக்கைக்கு அடித்தளம் கிடையாது. தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவும் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் சங்கம், தனது அங்கத்தவர்களை இலவசக் கல்விக்குத் தாக்குதல் தொடுக்கும் அரசாங்கத்துடனும் முதலாத்துவ முறைமையுடனும் கட்டிப்போட்டுள்ளது. முதலாளித்துவ முறைமைக்குள் தீர்வைத் தேடும் தொழிற்சங்கம் இங்குதான் முடிவுக்கு வருகின்றது.

கல்வியை இலாமீட்டும் தொழிற்துறையாக ஆக்குவதற்கு மென்மேலும் நடவடிக்கை எடுக்கப் போவதாக சபதம் செய்து மேற்குறிப்பிட்ட நிருபர்கள் மாநாட்டில் பேசிய திசநாயக்க, மேலும் இரு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இப்போதே காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் இந்த வேலைத்திட்டத்தினை தளராது முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய நிலமைகளுக்கு மத்தியில், தொழிற்சங்கங்களால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்பட முடியாது என்று அமைச்சர் திசநாயக்க தெரிவித்தமை, பாரிய உள்ளர்த்தத்தைக் கொண்டுள்ளது. அவரது இந்த மிரட்டல், உண்மையில் தொழிற் சங்கங்களுக்கு எதிரானது அல்ல. மாறாக பல்கலைக் கழகக் கல்வியை தனியார் மயமாக்குவது உட்பட அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் உட்பட இத்தொழிலின் நிபுணர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகும். பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் அண்மைய சம்பளப் போராட்டத்திலும், வசதிகள் மற்றும் இலவசக் கல்வி உள்ளடங்கலான ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும், இராஜபக்ஷ அரசாங்கம், தனது ஒடுக்குமுறை கருவியின் மூலமே பதிலடி கொடுத்தது. தற்சமயம் அது சம்பள அதிகரிப்பு கோரி போராடிக்கொண்டிருக்கின்ற பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் பக்கம் கவனத்தை திருப்பிவருகின்றது.

இது வெறுமனே பல்கலைக் கழக துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சட்டம் எனப்படுவதற்கு விரோதமாக கிளர்ந்து எழுந்த ஆயிரக்கணக்கான சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு பொலிஸ் இராணுவப் பலம் பயன்படுத்தப்பட்டதோடு துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி பலியானார்.

பொதுக் கல்வி மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு ஒரு அரசியல் வேலைத் திட்டம் அவசியம் என்பதே இவையாவற்றிலும் இருந்து தெளிவாகின்றது. மருத்துவர்கள் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் உட்பட ஏனைய சகல தொழிற் சங்கங்களுக்கும் எதிர்ப்புப் போராட்ட சூழ்ச்சியில் ஈடுபடுவதைத் தவிர, அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்கும் திராணியுள்ள முன்னோக்கு எதுவும் கிடையாது.

தனியார் பல்கலைக் கழகத்தினை ஏற்றுக் கொண்டு, அரச மற்றும் தனியார் என்ற இரு வகையிலான பல்கலைக் கழகங்களினதும் சிறப்புத் தரத்தை பாதுகாத்துத் தருமாறு மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்கள் சங்கமானது தனியார் பல்கலைக்கழகங்ளுக்கு எதிராக இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறு, தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதே தமது கொள்கை என்று உறுதியாக கூறும் அதே அரசாங்கத்துக்கு நிர்பந்தம் செய்கின்றது.

சகலருக்கும் இலவச, சிறந்த தரம்வாய்ந்த கல்வியும், கல்விசார் ஊழியர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளை ஸ்தாபிக்கும் ஒரு பல்கலைக் கழக முறைமையை ஸ்தாபிக்க பில்லியன் கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகின்றது. இலாபமீட்டும் முதலாளித்துவ முறைமையினை, சோசலிச உற்பத்தி பொருளாதார முறையினால் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே இதனை உறுதிப்படுத்துவது சாத்தியமாகும்.

சோசலிச வேலைத் திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்க்தினை ஆட்சிக்கு கொண்டுவருவதன் பேரில், சுயாதீன அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப தொழிலாளர்கள் முன்னணிக்கு வரவேண்டும். அத்துடன் அந்த இயக்கத்தினைச் சூழ மருத்துவர்கள், மாணவர்கள், விரிவுரையாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.  

சோசலிச மாற்றீடு ஒன்றுக்கான பரந்த அரசியல் போராட்டத்தினை தடுப்பதற்கு, இராஜபக்ஷ அரசாங்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகளை நம்பியிருக்கின்ற அதே வேளை, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அவர்களிடமிருந்து விலகி வேறுபடுவது அவசியமானதாகும்.