World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany’s Left Party holds its congress: Verbal radicalism combined with calls for a strong state

ஜேர்மனியின் இடது கட்சி அதன் மாநாட்டை நடத்துகிறது வார்த்தையில் தீவிரவாதமும் அரசாங்கத்திற்கு அழைப்புக்களும் இணைந்துள்ளன

By Ulrich Rippert
27 October 2011
Back to screen version

கிழக்கு ஜேர்மனி சிறுநகரான ஏர்ஃபர்ட்டில் கடந்த ஞாயிறன்று முடிந்த இடது கட்சியின் மாநாடு  பெரும் களிப்பு, சுயபாராட்டு என்ற காட்சிகளுடன் முடிவுற்றது. பல பிரதிநிதிகள் தங்கள இருக்கைகளில் இருந்து துள்ளிக் குதித்து, சிவப்புக் கொடிகளை அசைத்து, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் கரவொலியையும் எழுப்பினர்.

இத்தகைய களிப்பிற்குக் காரணம் என்ன? 503 பிரதிநிதிகள் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு முன்வைத்த வரைவு வேலைத்திட்டத்திற்கு ஆதாரவாக வாக்களித்திருந்தனர். இது வாக்குப்பதிவு செய்யும் தகுதி உடையவர்களில் 96.9% என்பதுடன் பலரும் எதிர்பார்த்ததையும் விட மிகவும் அதிகமானது ஆகும். நான்கு பிரதிநிதிகள்தான் வரைவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 12 பேர் கூட்டத்தில் பங்கு பெறவில்லை. இடது கட்சித் தலைவர் கிளவ்ஸ் ஏர்னெஸ்ட் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டுஒரு வரலாற்றுக் கணம் என்று அதைக் குறிப்பிட்டார்.

முன்னதாக தற்பொழுதைய கட்சித் தலைவர் கிரிகோர் கீஸி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன் வழிநடத்தி, பல பேச்சாளர்களும் ஒற்றுமை தேவை என வாதிட்டனர். உட்கட்சிப் பூசல்கள் முடிவிற்கு வரவேண்டும் என்று கோரிய கீசி, “எனவே, உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன். திங்களன்று நாம் எமது சொந்தபிரச்சனைகளை மட்டும் பார்ப்பதை நிறுத்திவிடும் கட்டாயத்தைக் கொண்டுள்ளோம்.” என்றார்.

செய்தி ஊடகத் தகவல்கள்ஒரு சமரசம் ஏற்பட்ட மாநாடு என்று விவரித்தன. தன்னுடைய முடிவுரையில் லாபொன்டைன் கட்சியின் நிலைமை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிப்பாகிறது என்று அறிவித்தபோது, இது பரந்த முறையில் கட்சியின்சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்பட்டோரைக் குறைகூறுவது போல் இருந்தது. தேர்தலில் மோசமான நிலைமையை சமீபத்தில் அடைந்த பல முக்கிய பேர்லின் கட்சி நிர்வாகிகள்  அனைவரும் காணக்கூடிய வகையில் இக்கட்டத்தில் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினர். இடது கட்சி பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சியுடன்(SPD)  கூட்டணி அரசாங்கத்தை நடத்தியதைத் தொடர்ந்து கட்சி அதன் வாக்களார் தளத்தில் மூன்றில் இரு பகுதியினரின் ஆதரவை இழந்துவிட்டது.

பேர்லின் நிர்வாகத்தின் வலதுசாரி மற்றும் சமூக விரோதக் கொள்கைகள் கடுமையான உள்கட்சி அழுத்தங்களுக்கு வழிவகுத்தன. எல்லாவற்றிற்கும் மேலாக இடது கட்சி தேர்தல் அறிக்கைகள் மற்றும் உரைகளில் அடங்கியிருந்த உறுதிமொழிகளைத் தெளிவாக மீறிய கொள்கைகளைத்தான் செயல்படுத்தியது. இந்த அழுத்தங்கள் இன்னமும் கட்சியில் உள்ளன, ஆனால் ஓர் அரசியல் மறுசீரமைப்பு என்பது சமீபத்திய மாநாட்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. கடந்த காலத்தில், சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயான வேறுபாடு (இடது கட்சி எதிர்த்தரப்பில் இருக்கும்போது என்ன உறுதியளித்ததற்கும், அதிகாரத்தில் இருந்தபோது அது நடந்து கொண்ட முறை இவற்றிற்கு இடையேயான வேறுபாடு) மிகவும் வெளிப்படையாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த வார இறுதியில், கட்சியை ஓர்எதிர்த்தரப்பு என்று தீவிரவாதமான வார்த்தைகளில் காட்டிக் கொள்ளுவதற்குத்தான் வலியுறுத்தல் கொடுக்கப்பட்டது.

நீண்டகால சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் ஒரு மூத்த அரசியல்வாதியுமான லாபொன்டைனால் அனைத்தும் இயக்கப்பட்டன என்பது தெளிவாயிற்று. முன்னாள் இடது கட்சித் தலைவர் கடந்த ஆண்டு தன் பதவியை நோய்வாய்ப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இராஜிநாமா செய்திருந்தாலும், மாநாட்டில் அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்; பல முறை விவாதங்களில் குறுக்கிட்டுப் பேசினார்; நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார். மாநாட்டிற்கு முன்னதாக வேலைத்திட்டம் மற்றும் வரைவுக் குழுக்களில் இருந்த ஒரே முக்கிய கட்சி உறுப்பினரான சாரா வாகன்கினெக்ட் உடன் லாபொன்டைன் நெருக்கமாக உழைத்திருந்தார். வாகன்கினெக்ட் கம்யூனிஸ்ட் அரங்கம்” (“Communist Platform”) என அழைக்கப்படும் கட்சியின் தீவிர ஸ்ராலினிசப் பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்.

லாபொன்டைனும் வாகன்கினெக்ட்டும் இடது கட்சியை ஒரு வரலாற்று மரபியத்தின் உண்மையான வாரிசு, அதாவது மார்க்சிஸ, சமூக ஜனநாயகத்தின் வாரிசு எனச் சித்திரத்துக் காட்ட முற்பட்டனர். மாநாடு நடத்தப்பட்ட நேரம், இடம் ஆகியவை இதைக் கருத்திற்கொண்டுதான் தேர்ந்தெடுக்கப்பட்டன. இடது கட்சி மாநாடு வரலாற்றுத்தன்மை நிறைந்த சமூக ஜனநாயககட்சியின் ஏர்ஃபர்ட் மாநாட்டின் 120வது ஆண்டு நிறைவு விழாக் காலத்திலேயே நடத்தப்பட்டது. அக்டோபர் 1891ல் சமூக ஜனநாயகக் கட்சி ஒரு மார்க்ஸிய முன்னோக்கை, “ஏர்ஃபர்ட் திட்டம் என்று அறியப்பட்டதை ஏற்றது. வாகன்கினெக்ட், லாபொன்டைன் ஆகியோருடன் பல மற்ற பிரதிநிதிகளும் இந்த வரலாற்று நாள் பற்றிக் குறித்து முற்றிலும் நகைப்பிற்கும், பொருத்தமற்றதுமான சமாந்தரங்களை எடுத்துக்காட்டினர்.

உண்மையில், சமூக ஜனநாயககட்சியின் 1891 “ஏர்ஃபர்ட் வேலைத்திட்டத்திற்கும் இடது கட்சி ஏற்றுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இப்பொழுதுள்ளதைவிட அதிகமானது அல்ல. சோசலிச எதிர்ப்புச் சட்டம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வந்த முதல் ஏர்ஃபர்ட் மாநாடு, ஒகுஸ்ட் பேபல், வில்லியம் லீப்னெக்ட் என்று அப்பொழுது வேலைத்திட்டக்குழுவின் தலைவராக இருந்தோரால்  வழிநடத்தப்பட்டது. இது தொழிலாளர் வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான உறுதியான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஏர்ஃபர்ட் மாநாட்டில் சமூக ஜனநாயககட்சியின் பிரதிநிதிகள் 1875ம் ஆண்டின் கோத்தா வேலைத்திட்டத்தின் லஸ்சாலிய (Lassallean) நடைமுறைவாதக் கருத்தில் இருந்து உறுதியாக முறித்துக் கொண்டனர்.

இதற்கு முற்றிலும் மாறாக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஏற்கப்பட்ட இன்றைய இடது கட்சியின் வேலைத்திட்டம் இருக்கும் அமைப்புமுறையின் அஸ்திவாரங்களான ஜேர்மனிய அரசியலமைப்பு, முதலாளித்துவத் தனிச்சொத்து உரிமை, சர்வதேச ஏகாதிபத்திய அமைப்பின் நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அனைத்தையும் பாதுகாக்கிறது.

அதே நேரத்தில் இடது கட்சி தன் முதலாளித்துவ வேலைத்திட்டத்தை தீவிரவாத  ஒலிக்குறிப்பு காட்டும் சொற்றொடர்களில் மறைக்க முற்பட்டுள்ளது. உதாரணமாக வேலைத்திட்டம்அமைப்புமுறைகளில் ஒரு மாற்றம் தேவை என்று கூறுகிறது; ஏனெனில் தற்பொழுதைய அமைப்புமுறைசமத்துவமின்மை, சுரண்டல், முதலாளித்துவத்தின் விரிவாக்கம், போட்டி ஆகியவற்றைத் தளமாக கொண்டுள்ளது.” ஆனால் ஒரு சில பத்திகளுக்குப் பின் வேலைத்திட்டம்முதலாளித்துவ அமைப்புமுறையை கடப்பது என்பது இருக்கும் சமூக ஒழுங்கினுள்ளும், படிப்படியான சீர்திருத்தங்கள் மூலம் நடக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

இன்னும் நெருக்கமாக ஆராய்ந்தால், இடது கட்சியின் முக்கிய முன்னுரிமை அரசாங்கத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவது என்பது தெளிவாகிறது. வங்கிகளை அது குறைகூறுவது, மற்றும்தடையற்ற காசினோ முறை முதலாளித்துவம் பற்றிய குறைகூறல் ஆகியவை அரசாங்க கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும், அரசாங்க நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்புக்களுடன் இணைந்துள்ளன. இவ்வகையில் கட்சி எவ்விதத் தொழிலாளர் கட்டுப்பாட்டையும் நிராகரித்து இருக்கும் முதலாளித்துவ அரசாங்கம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுகிறது.

இடது கட்சி வில்லி பிராண்ட்டின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுநல அரசாங்கப் பாதுகாப்பு தேவை என்று குரல் கொடுப்பதும் இதே வகையைத்தான் சார்ந்துள்ளது. 1960களில் இரண்டாம் அரைப்பகுதியில், முன்னாள் சமூக ஜனநாயககட்சியின் தலைவரும் பின்னர் சான்ஸ்லருமான பிராண்ட் பாராளுமன்றத்திற்குப் புறம்பான இடதுசாரி எதிர்ப்பை (APO)அந்த நேரத்தில் சமப்படுத்துவதற்கு ஒரு சில சமூகச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சில காலத்திற்கு பிராண்ட் அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி, தற்காலிகமாக முதலாளித்துவ ஆட்சியை கல்வி, நீதித்துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்த வகையில் உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் இக்கொள்கைகள் நெருக்கமாக தொழிற்சங்க அதிகார்த்துவத்தை வலுப்படுத்துவதுடன் பிணைந்து இருந்தன. அதே நேரத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறை அமைப்புகள் தொழிலாளர் வர்க்கத்திடையே சோசலிச வளர்ச்சி பெருகுவதைத் தடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டன.

இடது கட்சியின் புதிய வேலைத்திட்டத்தின் வலதுசாரி உள்ளடக்கம் லாபொன்டைன் சர்வதேச வகையில் தீவிரமாகச் செயல்படக்கூடிய மனிதாபிமான  படை ஒன்று, “வில்லி பிராண்ட் படைப்பிரிவு என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்னும்போது இன்னும் தெளிவாயிற்று. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமாதான வழி என்பதில் இருந்து இராணுவவாதத்திற்குமனிதாபிமான ஐக்கிய நாடுகள் சபையின் துருப்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவு தருவதற்காக மாறிய பசுமைவாதிகளைத் தொடர்ந்து, இடது கட்சி இப்பொழுது தன்னுடையசமாதானக் கொள்கையை நியாயப்படுத்தும் வகையில், இராணுவத்தின்மனிதாபிமானப் பங்கை வலியுறுத்துகிறது. நேட்டோ பற்றிய இதன் முக்கிய விமர்சனம், இக்கூட்டு முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றால வழிநடத்தப்படுகிறது என்ற காரணத்தினாலேயே ஆகும்.

ஏர்ஃபர்ட்டில் இக்கொள்கை மாற்றத்தின் நோக்கம் இன்னும் பரந்த அரசியல் பொருளுரையை ஆராயும்போது வெளிப்படுகிறது. உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் சர்வதேச நிதிய மூலதனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்று முடிந்த வார இறுதியில் இம்மாநாடு நடைபெற்றது. கிரேக்கத்தில் தொழிலாளர்கள் PASOK அரசாங்கம் அறிமுகப்படுத்திய சமூகநலச் செலவுகளில் பாரிய வெட்டுக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை ஒரு இருநாள் பொது வேலைநிறுத்தம் நடத்தினர். இது 35 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ ஆட்சிக்குழு அகற்றப்பட்டபோது நிகழ்ந்த பெரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிகழ்ந்துள்ள மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.

தொழிலாளவர்க்கத்தின் உலகளாவிய இயக்கம் ஐரோப்பாவில் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி, யூரோவைக் காப்பாற்றும் திட்டம் பற்றிய உடன்பாட்டைக் காண்பதில் இருக்கும் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. சர்வதேச வங்கிகள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பொதுநலச் செலவுகளில் கோரும் கடுமையான வெட்டுக்கள் தவிர்க்க முடியாமல் பெருகிய எதிர்ப்பைத்தான் சந்திக்கும். ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில், எப்படி இதே கருத்தையுடையவர்கள் கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் பல தீய வெட்டுக்களை சமூகநலச் செலவுகளில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஏற்கனவே செய்கின்றனவோ அதே வகையில் சமூக  ஜனநாயகவாதிகள் அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்..

ஞாயிறன்று முன்னாள் சான்ஸ்லர் ஹெல்முட் ஷ்மிட்(SPD) ஒரு ஜேர்மனியத் தொலைக்காட்சியின் தோன்றி தன்னுடைய ஆசியை முந்தைய பெரும் கூட்டணியில் முன்னாள் நிதி மந்திரியாக இருந்த பீர் ஸ்ரைன்புரூக் சான்ஸ்லர் பதவிக்கு சமூக  ஜனநாயக கட்சியின் வருங்கால வேட்பாளராக நிற்பதற்குத் தன் ஆசிகளை வழங்கினார். இருவரும் சேர்ந்து படிப்படியாக (Step by Step) என்னும் புத்தகத்தை எழுதியுள்ளனர்; இந்த வாரம் அது வெளியிடப்பட உள்ளது. இந்நூலில் ஷ்மிட், “உலகத்திற்கான ஜனநாயகத்தின் முக்கியத்துவம் பற்றிக் மிகைமதிப்பீடு செய்யக்கூடாது என்று எழுதியுள்ளார். இதன் பொருள் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, ஷ்மிட் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிப் பாராட்டினார்; “ஐரோப்பிய ஜனநாயகம் கருத்துக்களை தளமாக கொண்டிருந்தால், இது சாத்தியமல்ல என்று அவர் விளக்கினார்.

சர்வாதிகார வகை ஆட்சியை இத்தகைய வெட்கம்ற தன்மையில் போற்றுவது சமூக  ஜனநாயக கட்சி தொடர்புடைய அரசாங்க ஆட்சிகளில் வருவதற்கு ஒரு தயாரிப்பாகத்தான் உள்ளது. ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் பல பிரிவுகள் சமூக  ஜனநாயக கட்சி கிறிஸ்துவ ஜனநாயகத்தினர் அல்லது பசுமை வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தால் இப்போதுள்ள அரசாங்கத்தைவிட திட்டமிடப்பட்டுள்ள சமூகத் தாக்குதல்களைச் செயல்படுத்தச் சிறந்த முறையில் செயல்படும் என்று நம்புகின்றன.

அதே நேரத்தில் கிரேக்க உதாரணம் தெளிவாக்குவது போல், அத்தகைய வளர்ச்சி தவிர்க்க முடியாமல் பாரிய எதிர்ப்பையும் கடுமையான சமூகப் மோதல்களையும் தூண்டும். ஒரு புதிய பாராளுமன்றத்திற்குப் புறம்பான எதிர்ப்பு வெளிப்படுவதைத்தான் தடுப்பதற்குத்தான் இடதுகட்சி தயாரிக்கப்படுகிறது; தொழிலாளர் வர்க்கத்தின் வருங்காலப் போராட்டங்களையும் அது கட்டுப்படுத்தும் என்ற நோக்கம் உள்ளது. இதுதான் அதன் தற்பொழுதைய முதலாளித்துவ எதிர்ப்பு வனப்புரையின் நோக்கம் ஆகும். ஆனால் அதில் நிபந்தனைகள் ஏதுமின்றி முதலாளித்துவ அரசாங்கத்தைக் பாதுகாக்கும் திட்டமும் இணைந்துள்ளது.