World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா 

Maoist leader elected as prime minister in Nepal

நேபாளத்தில் மாவோயிச தலைவர் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

By W.A. Sunil
5 September 2011

Back to screen version

அரசியல் கட்சிகளிடையே இரண்டு வாரங்கள் மோதலுக்குப் பின், நேபாள-மாவோயிச ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (UCPN-M) துணைத் தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டாராய் ஆகஸ்ட் 28ம் திகதி நேபாளத்தின் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டார். 2008 தேர்தல்களுக்கு  பின் நான்காவது பிரதம மந்திரியாக பதவியேற்கும் பட்டாராய் ஓர் ஆழ்ந்த பிளவில் இருக்கும் பாராளுமன்றம், அவருடைய கட்சியிலேயே பூசல்கள் மற்றும் தொடரும் அரசியலமைப்பு நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்கிறார்.

இந்த அரசியல் கொந்தளிப்பின் மையத்தானமாக 2006ல் UCPN-M க்கும் நாட்டின் முக்கிய பாராளுமன்றக் கட்சிகளான நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN-UML) ஆகியவை கொண்டிருந்த உடன்பாடு செயல்படுத்தப்படாமல் தோல்வியில் போயுள்ளது. மாவோயிஸ்ட்டுக்கள் அவர்களுடைய ஒரு தசாப்த கால கெரில்லாப் போரை நிறுத்தி கூட்டணி அரசாங்கத்தில் சேருவதாக ஒப்புக் கொண்டனர்; இது நாட்டின் சர்வாதிகார முடிமன்னரான க்யானேன்ந்திராவைப் பதவியை விட்டு இறங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்திய தலைநகர் காட்மாண்டுவில் ஏற்பட்ட பெரும் எதிர்ப்புக்களை தொடர்ந்து வந்திருந்தது.

2008 தேர்தல்களில், மாவோயிஸ்ட்டுக்கள் அதிக இடங்களைப் பாராளுமன்றத்தில் கைப்பற்றி, முதலாவது கூட்டணிக்குத் தலைமை தாங்கினார்கள். ஆனால் அரசாங்கம் விரைவில் இராணுவத்துடன் மோதியது; அரசாங்கம் முன்னாள் மாவோயிசப் போராளிகளை 2008 விரிவான சமாதான உடன்பாட்டின் கீழ் தன்னுடைய படைகளில் ஏற்க மறுத்துவிட்டது. UCPN-M தலைவர் புஷ்ப கமல் டஹல் பிரதம மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்து, இரு உறுதியற்ற CPN-UML தலைமையிலான அரசாங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

பட்டாராய்க்கு முன் பதவியிலிருந்த CPN-UML ஐச் சேர்ந்த ஜாலா நாத் கானல் ஆகஸ்ட் 14ம் தேதி பதவியில் இருந்து விலகும் கட்டாயத்திற்கு உட்பட்டார்; அப்பொழுது மாவோயிஸ்ட்டுக்கள் அவருடைய அரசாங்கத்திற்குக் கொடுத்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். நாட்டின் நீண்டகால முதலாளித்துவக் கட்சியான நேபாளி காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கும் முயற்சியை பட்டாராய் தோல்வி அடையச் செய்தார். ஐக்கிய ஜனநாயக மதேசி மோர்ச்சாவுடன் (UDMM) அவர் உடன்பாட்டைக் கொண்டார்; அது இனரீதியான மதேசிகளின் ஐந்து பிரிவுகளை, நேபாளத்தின் தெற்குச் சமவெளியில் இருப்பவர்களைத் தளமாகக் கொண்டது.

இப்பொழுது பட்டாராய் கானல் எதிர்கொண்ட சங்கடத்தையே எதிர்கொள்ளுகிறார்எப்படி ஒரு புதிய அரசியல் அமைப்பிற்காக முக்கிய கட்சிகளுடன் உடன்பாட்டைக் கொண்டுவருவது என. முக்கிய கட்சிகளுக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் இடைக்கால அரசியலமைப்பு 2010 மே மாதம் காலாவதியானது. இடைக்கால ஆவணம் மூன்று மாதக் காலத்திற்கு மட்டுமே விரிவாக்கம் செய்யப்படும் என்ற உண்மை இருந்தும்கூட, பாராளுமன்றம் அந்தக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. சமீபத்திய கெடு ஆகஸ்ட் 31ம் திகதி முடிவடைந்த நிலையில், அரசர் சார்புடைய நேபாள ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி- (RPP-N) ஐத் தவிர அனைத்துக் கட்சிகளும் கடந்த திங்கன்று மற்றொரு 3 மாதங்களுக்கு இடைக்கால அரசியலமைப்பிற்கு நீட்டிப்பிற்கு வாக்களித்துள்ளன.

அரசியலமைப்பு, அரசியல் முட்டுச் சந்துப் போக்கை முறிக்கும் முயற்சியாக, பட்டாராய் தான் ஒருதேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவ முற்படப்போவதாக அறிவித்தார்; இதற்காக அனைத்து முக்கிய தீராத பிரச்சினைகளிலும் பிற கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளப்படும். குறிப்பாக அவர் நேபாளி காங்கிரஸ் மற்றும் CPN-UML ஐ அரசாங்கத்தில் சேருமாறு அழைத்தார்; ஆனால் அக்கட்சிகள் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டன. UDMM கூட்டுக் கட்சியுடன் ஒரு வாரம் பேரம் நடத்தியபின், பட்டாராய் இறுதியில் நேற்று தன்னுடைய கூட்டணி மந்திரி சபையை அறிவித்தார்.

இராணுவம் மற்றும் UCPN-M போட்டியாளர்கள் இருவருக்கும் முக்கிய சலுகை கொடுக்கும் வகையில், பட்டாராயின் முதல் நடவடிக்கையாக மாவோயிசக் கெரில்லாக்களின் பெரும்பாலான ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றிய அறிவிப்பாகும்; இவை முன்னதாக கண்காணிப்பின் கீழ் பூட்டி வைக்கப்பட்டிருந்தன; முதலில் ஐ.நா. கண்காணிப்பாளர்களும், பின்னர் இராணுவ இடைத்தொடர்பு சிறப்புக் குழுவும் (AISC) இதை மேற்கொண்டனர். ஆயுதங்கள் ஏழு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன; அவற்றின் சாவிகள் மக்கள் விடுதலை இராணுவத் (PLA) தளபதிகளிடம் கொடுக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை பட்டாராய் தலைமையில் நடந்த AISC கூட்டம் ஒன்றிற்குப் பின், PLA ஐந்து இடங்களின் சாவிகளை மறுநாள் கொடுத்துவிட்டனர்.

இந்த முடிவு கடுமையாக UCPN-M துணைத் தலைவர் ஒருவரான மோகன் பைத்யா என்பவரால் குறைகூறப்பட்டது; அவர் இதைதற்கொலைச் செயல் என்று விவரித்து, PLA வைக் கலைக்கும் நடவடிக்கை என்றும் கூறினார். பெரும்பாலான PLA ஆயுதங்களை ஒப்படைத்தபின், கட்சிக்கு இப்பொழுது பேரம் பேசுவதில் அதிக சக்தி இல்லை; அது இப்பொழுது முன்னாள் போராளிகள் இராணுவத்தில் ஒருங்கிணைப்பதில் இருக்கும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறது. கிட்டத்தட்ட 19,000 முன்னாள் கெரில்லாக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்பார்வைக்கு உட்பட்டுள்ள இராணுவ சிறப்பிடங்களில் வாடுகின்றனர்இது பெருகிய சீற்றத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது கடந்த வெள்ளியன்று ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டது பற்றி பைத்யா ஒரு எதிர்ப்பை ஏற்பாடு செய்தார்.

தன் முடிவை நியாயப்படுத்தும் வகையில் பட்டாராய் PLA தளபதிகளிடம் புதன் அன்று கூறினார்: “அவர்கள் [எதிர்க்கட்சிகள்] அமைதி, அரசியலமைப்பு பற்றி நாம் நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். சாவிகளை சிறப்புக் குழுவிடம் ஒப்படைப்பது நாம் செய்யும் தியாகம் ஆகும். இப்பொழுது அமைதி வழிவகைக்கு ஏதேனும் மோசம் ஏற்பட்டால் அவர்கள்தான் பொறுப்பு.”

UDMM உடன் தன் கூட்டணி உடன்பாட்டில், பட்டாராய் இராணுவப் பிரிவுகளில் முன்னாள் கெரில்லாக்கள் இணைவது தொடர்பாக இன்னும் பல சலுகைகளையும் கொடுத்துள்ளார். முன்பு மாவோயிஸ்ட்டுக்கள் எண்ணிக்கையை 19,000த்தில் இருந்து 8.000 மாகக் குறைத்தனர். பட்டாராய் இன்னும் ஒரு 1,000 பேரை எண்ணிக்கையில் இருந்து நீக்கினார்; இது அவர் இன்னும் இறங்கி பேசத் தயார் என்பதற்கான குறிப்பைக் காட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகளும் இராணுவமும் இச்சலுகைகளை எடுப்பதுடன் இன்னும் அதிகம் கோரும் என்பது உண்மையே. நேபாளி காங்கிரஸ் தலைவர் ராம் ஷரன் மஹத் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆயுதங்கள் ஒப்படைப்பை வரவேற்று, இது காலம் தாழ்ந்தாலும், ஒரு நேரிய நடவடிக்கை என்று விவரித்தார். இராணுவம் இன்னமும் முன்னாள் மாவோயிஸ்ட்டுக்களை அதன் பட்டியலில் ஒருங்கிணைக்க மறுக்கிறது; துணைப் பாதுகாப்புப் பிரிவுகளில் குறைந்த பட்ச பதவிகளைத்தான் அளிக்க முன்வந்துள்ளது.

பட்டாராயின் செயல் அரசியலமைப்பு பற்றிய தேக்கநிலையை முறித்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. மாவோயிஸ்ட்டுக்கள் ஒரு நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தேவை என்கின்றனர்; நேபாளக் காங்கிரஸ் மற்றும் CPN-UML ஆகியவை ஒரு பாராளுமன்ற முறை அரசாங்கத்தை  நாடுகின்றன. பட்டாராய் அரசியலமைப்பை இயற்றுவது ஆறு மாத காலத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறுகிறார்; ஆனால் எப்படி வேறுபாடுகள் களையப்படும் என்பது பற்றி குறிப்பு ஏதும் கொடுக்கவில்லை.

UDMM உடன் உடன்பாடு காண்பதற்காக, பட்டாராய் இனரீதியான மதேசிக்களை நாட்டின் பொதுப் பணி மற்றும் இராணுவத்தில் சேர்க்க ஒப்புக் கொண்டார். UDMM ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு தேவை, அதில் அதிகாரங்கள் கணிசமாக பிராந்திய அடிப்படையில் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. UDMM தலைவரான பிஜய கச்சேடர் துணைப் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி உடன்பாட்டின் ஒரு கூறுபாடுநாட்டின் ஆயுத மோதலின் போது மனித உரிமைகளை மீறியவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதுசர்வதேச அமைப்புக்களால், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு உட்பட குறைகூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட13,000 பேர் இறந்து போனார்கள், மற்றும் 1,300 பேர் மோதலின் போதுகாணாமல் போனார்கள்”; இராணுவமும் மாவோயிஸ்ட்டுக்களும் பெரும் கொடூரங்களை இழைத்தன.

இரண்டாவது மாவோயிச அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது நேபாளி வணிக வட்டங்களில் குறைகூறல்களைத் தூண்டவில்லை. UCPN-M ஏற்கனவே முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் தன் விருப்பதை நிரூபித்துள்ளது; தனியார் சொத்துக்களுக்கு உறுதி கூறியுள்ளது; வெளிநாட்டு முதலீட்டை வளர்க்க முன்வருகிறது. முதல் மாவோயிச நிர்வாகத்தின் நிதி மந்திரி என்ற முறையில் பட்டாராய் அவருடைய வணிகச் சார்புடைய போக்கிற்குப் பெயர் பெற்றிருந்தார். 2008 தேர்தல்களுக்குப் பின் நேபாள் டைம்ஸிடம் உரையாடிய அவர், “மாவோயிஸ்ட்டுக்கள் அதிகாரத்திற்கு வந்தபின், முதலீட்டுச் சூழ்நிலை இன்னும் சாதகமாக இருக்கும் என்று அனைவருக்கும் நாங்கள் உத்தரவாதம் கொடுக்க விரும்புகிறோம். இதைப்பற்றி தேவையற்ற தவறான கருத்துக்கள் வேண்டியதில்லை என்றார்.

பட்டாராய் பதவியில் இருத்தப்பட்டுள்ளது வாஷிங்டனால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரச அலுவலகச் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா ந்யூலந்த் மாவோயிசத் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்காநேபாளத்துடன் நாம் கொண்டுள்ள உளமார்ந்த, ஆக்கப்பூர்வ உறவுகளைத் தொடரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதுஇவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சமாதான வழிவகை மற்றும் அரசியல் அமைப்பு இயற்றுவதற்கு உகந்த புதிய வேகத்தை அளிக்கும் என நம்புகிறோம் என்றார்.

2006க்கு முன்பு அமெரிக்கா மாவோயிச கெரில்லாக்களுக்கு எதிரான போருக்கு ஆதரவைக் கொடுத்து நேபாள இராணுவத்திற்கு ஆயுதங்களையும் பிற உதவிகளையும் அளித்தது. புஷ் நிர்வாகத்தின் கீழ், மாவோயிஸ்ட்டுக்கள் முறையாக ஒருபயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டு, கட்சியின் மீது அழுத்தம் தொடர்வதற்கு வழிவகையாக இன்னமும் அமூலிலுள்ளது. தற்பொழுது வாஷிங்டன் நேபாளத்துடன் நெருக்கமான உறவுகளை நாட முற்பட்டுள்ளது; இது சீனாவைச் சுற்றிவளைக்கும் அதன் பரந்த மூலோபாய விழைவின் ஒரு பகுதியாகும்; அதற்காக அது நெருக்கான பங்காளித்தனங்கள், கூட்டுக்கள் ஆகியவற்றை நாடுகிறது.

மாவோயிஸ்ட்டுக்களுடன் போராட நேபாள இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கிய சீனாவும் இதேபோல் பட்டாராயின் நியமனத்தை வரவேற்றுள்ளது. நேபாளத்திற்கு கொடுக்கப்படும் உதவி மற்றும் முதலீடுகளை பெய்ஜிங் அதிகப்படுத்தியுள்ளது; இதற்குக் காரணம் தன் அரசியல் செல்வாக்கை உயர்த்துவதும், அமெரிக்கா, இந்தியா போன்றவை இதே போல் செய்யும் முயற்சிகளுக்கு மாற்றீடாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியா, சீனா எல்லைகளில் இருக்கும் நேபாளத்தை புது டெல்லி தன் செல்வாக்கு மண்டலத்திற்குள் இருப்பதாகக் கருதுகிறது. இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் பட்டாராய்க்குச் சொந்தக் கடிதம் ஒன்றை எழுதி அவரைப் பாராட்டி இந்தியாவிற்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார் இந்தியா நேபாளத்துடனான அதன் உறவுகளுக்குமிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது என்று  சிங் அறிவித்துள்ளார்.

முன்பு மாவோயிஸ்ட்டுக்கள் அவர்களுடைய தேசியவாதக் கொள்கையின் கூறுபாடாக குறிப்பிடத்தக்க வகையில் இந்திய-எதிர்ப்பைக் கொண்டிருந்தது; மேலும் நாட்டின் மீது இந்தியாவின்  மேலாதிக்கத்தையும் கண்டித்தது. இந்தியாவில் கல்விகற்று, வசித்துள்ள பட்டாராய் இந்திய நலன்களுக்கு இன்னும் கூடுதலான பரிவுணர்வைக் காட்டுவார் என்று புது டெல்லி நம்புகிறது.

காட்மாண்டுவில் செல்வாக்கிற்கான இத்தகைய ஆழ்ந்த போட்டி புதிய அரசாங்கத்தை எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்தத்தான் செய்யும். நாட்டின் தீவிர அரசியல் பிளவுகளைத் தீர்க்கும் வகை ஏதுமின்றி, பட்டாராயின் பிரதம மந்திரிப் பதவிக்காலம் அவருக்கு முன்பு இருந்தவருடையதைப் போலவே குறுகிய காலம்தான் இருக்கும்.