சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளது

By Kapila Fernando
22 September 2011

use this version to print | Send feedback

அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் வளர்ச்சியடைந்து வரும் மாணவர்களின் மற்றும் ஏனைய ஊழியர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில், பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்தவாறே, பல்கலைக்கழக பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் இரு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இது மாணவர்களதும் ஏனைய ஊழியர்களதும் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் கடந்த மாதம் 29ம் திகதி அனுப்பிய கடிதத்தின் மூலம், அக்டோபர் முதலாம் திகதி முதல் சகல பல்கலைக்கழகங்களினதும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும்ரத்ன லங்கா மற்றும்எல்.ஆர்.டி.சீ என்ற இரு பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்படும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.

ரத்ன லங்கா பாதுகாப்பு நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட, பிரதானமாக பொலிஸ் இராணுவ குறிக்கோள்களுக்காக இயங்குவதாகும். நிறுவனத்தின் இணையத் தளம்,பிரதேச மற்றும் தேசிய மட்டத்தில் முக்கியமான அரச மற்றும் தனியார் துறைக்கு பாதுகாப்பு வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவின்றி முன்னெடுத்துச் செல்வதே நிறுவனத்தின் செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார பின்னடைவின்றி நடத்திச் செல்வது என்பது, வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட தொழிலாளர்களதும் மாணவர்களதும் போராட்டங்களை நசுக்கி, குறிப்பிட்ட நிறுவனங்களை நடத்திச் செல்வதே அன்றி வேறொன்றுமல்ல. ஆயுத பயிற்சி, உயர் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் முப்படைகளதும் விசேட அதிரடிப் படைகளதும் பயிற்சி அதிகாரிகளிடம் பயிற்சிகளைப் பெற்ற, அநேகமாக இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்ற மற்றும் ஓய்வு பெற்ற உறுப்பினர்களை இந்த பாதுகாப்பு நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. எல்.ஆர்.டி.சீ. நிறுவனமானது காணி சீர்திருத்த மற்றும் அபிவிருத்தி நிறுவனம் என்ற பெயரில் தனது பாதுகாப்பு பிரிவை நடத்தி வருகின்றது.

அரசாங்கம் முதலீட்டாளர்களுக்காக நிலங்களை விடுவித்துக்கொள்வதற்காக கொழும்பு நகரில் இருந்து குடிசைகளில் வசிக்கும் 75.000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு தயாராவதன் பாகமாக, கடந்த ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையையும் காணி அபிவிருத்தி அதிகார சபையையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தது. ஜயவர்தனபுர, பேராதனை, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ, ருகுணு மற்றும் ரஜரட்ட போன்ற பல்கலைக்கழங்கள், ரத்ன லங்கா நிறுவனத்துக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் எல்.ஆர்.டி.சி. நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த தீர்மானங்களை நியாயப்படுத்த நவரத்ன வெற்று வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார். “இதுவரை இருந்த பாதுகாப்பு நிறுவனங்கள், வயது கூடிய உறுப்பினர்கள் மற்றும் மது பாவனையாளர்களால் நிறைந்திருந்தன என அவர் சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இது உண்மையல்ல. டென்டர் அழைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு நிறுவனத்திடம், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் அனுமதியுடன் பாதுகாப்பு பகுதி நடவடிக்கைகளை ஒப்படைப்பதே வழமையான செயற்பாடாகும். இந்த வழமையை மீறியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி தனியார்மயமாக்கத்துக்கும் மற்றும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் வசதி பற்றாகுறைக்கும் எதிராக வளர்ச்சி கண்டுவரும் மாணவர்களின் எதிர்ப்பு உட்பட, பல்கலைக்கழக அமைப்பு முழுவதிலும் எழுச்சி பெருகின்ற போராட்டங்களுக்கு எதிராக இந்த புதிய பாதுகாப்பு சேவைகள் இயக்கப்படும்.

சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இரு மாதங்களுக்கும் அதிகமான காலம் போராட்டத்தை முன்னெடுத்த பின்னர், இப்போது நாடு பூராவும் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை அகற்றி சம்பள உயர்வு தருமாறு கோரி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், மாலபேயில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு மருத்துவர் பட்டத்தை (எம்.பி.பி.எஸ்) வழங்குவதற்கு அனுமதி கொடுத்தமைக்கு எதிராக, புதிதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையிலேயே இந்த பாதுகாப்பு பிரிவு மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ன லங்கா இப்போது அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுப்பேற்றுள்ளது. எண்ணெய் நிறுவனம், கொலன்னாவ கைத்தொழில் பேட்டை, செத்சிறிபாய, ஸ்ரீலங்கா டெலிகொம்மின் காலி, மாத்தறை, கண்டி உட்பட பல கிளைகள் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் அவற்றில் அடங்கும். அவப்பேறு பெற்ற அரசாங்க அமைச்சரான மேர்வின் சில்வா, தான் உரையாற்றி கூட்டத்தின் செய்தியை வெளியிடவில்லை எனக் கூறி ரூபவாஹினி கூட்டுத்தபானத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக, ஊழியர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ரத்ன லங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் சில்வாவுக்கும் அவரது குண்டர்களுக்கும் எதிராக எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், ரூபவாஹினி ஊழியர்கள் வேட்டையாடப்பட்டனர்.

அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் அலட்சியம் செய்து, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. இந்தச் செய்தியே மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ பட்டத்தை வழங்குவதற்கு அனுமதி கொடுத்ததன் மூலம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துகின்ற இராஜபக்ஷ அரசாங்கம், அரச பல்கலைக் கழகங்களுக்கான செலவுகளை குறைத்து, அவற்றை சீரழிப்பதற்கு செயற்படுகின்றது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக, மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் மற்றும் கல்விசாரா ஊழியர்களதும் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமடைந்துள்ளதை அறிந்துள்ள அரசாங்கம், அவற்றை நசுக்குவதற்கான தாயாரிப்பின் பாகமாகவே புதிய பாதுகாப்புச் சேவையை அமைத்துள்ளது.

இலாபத்துக்கான உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட உலக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியே மாணவர்கள் மற்றும் ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களின் மூல காரணமாகும். 1930களில் முகங்கொடுத்த ஆபத்தான பொருளாதார நெருக்கடியை இப்போது எதிர்கொண்டுள்ள உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள், இந்த நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் அந்த சர்வதேச தாக்குதலின் பாகமாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மீது இந்த நெருக்கடியை திணிக்கும் கைப்பொம்மையாக இலங்கையில் செயற்படுகின்றது.

புதிய பாதுகாப்பு சேவை, மாணவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை கையாள்வதற்கு முயற்சிப்பதன் மூலம் ஆத்திரமூட்டும் வகையில் செயற்படுவதற்கும், பொலிசை அழைப்பதற்கும், பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் செயற்பாட்டாளர்கள் பற்றி உளவு பார்ப்பதற்கும் அரச ஒடுக்குமுறையின் உபகரணமாக செயற்படும்.

கடந்த ஆண்டில் இருந்தே, அரசாங்கம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் மாணவர்களது சகல எதிர்ப்புக்களையும் தடை செய்கின்றபகிடி வதை எதிர்ப்பு சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் தனியார்மயமாக்கம், வசதி பற்றாக்குறை, மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீது கடும் பொலிஸ் தாக்குதலை நடத்தியதோடு டசின் கணக்கானவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் பினணயில் விடுதலை செய்யப்பட்ட போதும், மீண்டும் எதிர்ப்பில் ஈடுபட வேண்டாம் என நீதிமன்றம் அவர்களுக்கு அறிவுறுத்தியது.

அரசாங்கத்தின் தாக்குதல்களே மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. அரசாங்கத்தின் விருப்பின்படி நியமிக்கப்பட்ட சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மாணவர் அமைப்புக்களை தடை செய்வதற்கும் தேர்தல் நடத்துவதை நிறுத்துவதற்கும் அப்பால் சென்று, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத தாக்குல்களை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்.எல்.. கருணாரத்ன, பல மாணவர்களை எந்தவொரு சாட்சியும் விசாரணையும் இன்றி பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு வகை செய்தார். அவர்களில் மூன்று மாணவர்களுக்கு பயங்கரவதாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் சி.சி.டி.வீ. கெமரா பொருத்தப்பட்டுள்ளதோடு, கடந்த மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் வகுப்புகளை தடை செய்வதற்கு இந்த கெமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பல்கலைக்கழகங்களில் இராணுவமயமாக்கத்தை திணிக்கும் நடவடிக்கையாக இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்பட்ட மாணவர்கள் இராணுவ முகாங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் மூன்று வார பயிற்சிக்கு செல்லத் தள்ளப்பட்டார்கள். பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள், உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தபடி, பல்கலைக்கழகத்துக்குள் எந்தவொரு அரசியலும் செய்ய வேண்டாம் என இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தமது விரிவுரைகளில் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

முதலாளித்துவ வர்க்கத்துக்கும் அதன் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும், முப்பது வருடகால யுத்தத்துக்குள் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது. கடந்த காலத்தில் அவசரகாலச் சட்டத்தை அகற்றிவிட்டதாக கதையளந்த அரசாங்கம், அதே ஒடுக்குமுறை சட்டங்களை வேறு முறையில் கொண்டுவந்துள்ளது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் எதிர்கொண்டுள்ள இத்தகைய ஆபத்துக்கள் பற்றி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு உட்பட மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சமாசம் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கமும் இதுவரை உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. வளர்ச்சியடையும் அரச ஒடுக்குமுறைக்கு அவை அடிபணிந்து போயுள்ளதே இதில் இருந்து தெரியவருகின்றது.