சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions scuttle plantation workers struggle against workload increase

இலங்கை தொழிற்சங்கங்கள் வேலை அதிகரிப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை கீழறுக்கின்றன

By M. Vasanthan and W.A. Sunil
16 April 2012

use this version to print | Send feedback

மார்ச் 15 அன்று பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்துக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடானது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, பெரும் வர்த்தகர்களின் இலாப முயற்சிகளையே காக்கின்றன என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது.

இந்த உடன்பாடு, பொகவந்தலாவை பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான ஐந்து தேயிலை தோட்டங்களைச் சேர்ந்த 6,000 தொழிலாளர்கள் பல மாதங்களாக மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு முடிவு கட்டியுள்ளது. கொட்டியாகலை தோட்டத் தொழிலாளர்கள், டிசம்பரில் இருந்தே, நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவை 13 முதல் 15 கிலோகிராம் வரை அதிகரிக்க கம்பனி எடுத்த முடிவை எதிர்த்து வந்தனர். பெப்பிரவரி 13 முதல் பொகவந்தலாவை, நோர்வுட், கலபொட மற்றும் பிரெட்பெல் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் இணைந்துகொண்டனர்.

தன்னுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், கம்பனி நிர்வாகம் பழைய வேலை இலக்கை திருப்பி ஏற்றுக்கொள்ள உடன்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அறிவித்தது. இந்த கலந்துரையாடல்கள் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் நடைபெற்றுள்ளதால் முழு விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எவ்வாறெனினும், எதிர்காலத்தில் உற்பத்தியில் மாற்றங்களை செய்ய கம்பனி தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட முடியும் என இ.தொ.கா. உடன்பட்ட காரணத்தால், புதிய வேலைச் சுமைகளை கம்பனிகள் விலக்கிக்கொண்டுள்ளன. எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களின் சம்மதத்துடன் வேலைச் சுமை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் ஆபத்து உள்ளது.

ஏனைய தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் இ.தொ.கா.வால் கவிழ்க்கப்பட்ட இந்த போராட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் படிப்பினைகளை பெற வேண்டும். டிசம்பரில், கொழுந்து பறிக்கும் புதிய இலக்கை எதிர்த்து கொட்டியாகலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கிய போது, அதற்கு ஆதரவு கொடுக்க மறுத்த இ.தொ.கா., தொழிலாளர்கள் நிறுவனத்தின் இலக்குகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது. இ.தொ.கா. ஏற்கனவே பொகவந்தலாவை பெருந்தோட்டத்தின் மற்ற நான்கு தோட்டங்களின் தொழிலாளர்களை வேலைச் சுமை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) ஆகியவை எதிர்ப்புக்கு ஆதரவு கொடுப்பதாக பாசாங்கு செய்துவிட்டு, தொழிலாளர்களின் சீற்றத்தை திசை திருப்புவதற்காக அரசாங்க தொழில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டன.

கம்பனியின் புதிய நெறிமுறைகளின் படி வேலை செய்யாதமைக்கு தண்டனையாக நிர்வாகம் ஊதியத்தை வெட்டிக் குறைத்த போது, பொகவந்தலாவை பகுதியில் ஐந்து தோட்டங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். LJEWU, ம.ம.மு., NUW மற்றும் DWC, ஜனவரி முற்பகுதியில் தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அமைச்சர் இன்னொரு தேதியில் இதைப் பற்றி கலந்துரையாடுவார் எனக் கூறி, குறைக்கப்பட சம்பளத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தின.

தொழிலாளர்கள் குறைக்கப்பட்ட சம்பளத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், கம்பனி புதிய இலக்கை அல்லது சம்பள வெட்டை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது. கம்பனி உற்பத்தி அதிகரிப்பை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனினும், தொழிலாளர்கள் புதிய வேலைச் சுமைகளை நிராகரித்து தொடர்ந்தும் போராடியதால், தொழிற்சங்கங்களும் கம்பனியும் உணர்ச்சிவசப்பட்டுள்ளன.

இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்கள், கொட்டியாகலை தொழிலாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு ஏனைய தோட்டத் தொழிலாளர்களையும் ஈர்க்கும் ஒரு துருவமாகவிடக்கூடும் என அச்சமடைந்துள்ளன. அவர்களும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்வதோடு, அவர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்றது. அவர்களது சீற்றத்தை மேலும் கூட்டும் வகையில், அரசாங்கமானது எரிபொருள் விலையையும் மின்சாரக் கட்டனத்தையும் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரித்ததுடன் ரூபாயையும் மதிப்பிறக்கம் செய்ததால் அவர்களது வாழ்க்கை நிலைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தொழிற்சங்கங்கள், கம்பனிகளின் உற்பத்தி அதிகரிப்புக்கும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் எதிராக ஒரு பொதுப் போராட்டம் வளர்ச்சியடைவதை தடுத்துள்ளன.

கம்பனிகளும் அரசும் எதிர்கொள்ளும் அபாயத்தை கண்ட இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தொழிலாளர்களின் போராட்டத்துக்கு முடிவுகட்ட தலையீடு செய்ய முடிவெடுத்தார். தொண்டமான் கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்திக்கான அமைச்சரவை அமைச்சர் ஆவார்.

அவர் திடீரென தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தலைகீழாக மாறினார். தோரணை ஒன்றைக் காட்டிய தொண்டமான், பிப்ரவரி 13 அன்று,  கொட்டியாகலை தொழிலாளர்களை எதிர்ப்பைத் தொடருமாறு கூறியதோடு மற்ற நான்கு தோட்ட தொழிலாளர்களையும் அதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் கொழும்பு ஏலச் சந்தைக்கு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை அனுப்பப்படுவதையும் தடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொண்டமானின் இந்த தலைகீழ் மாற்றம் தொழிலாளர்கள் மீதான அனுதாபத்தினால் வந்ததல்ல. தொண்டமான் அத்தகைய தோரணையின் மூலம், தொழிலாளர்கள் மத்தியில் கடுமையாக அவப்பேறு பெற்றுள்ள இ.தொ.கா.வின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிப்பதோடு போராட்டம் ஏனைய தோட்டங்களுக்கும் பரவும் ஆபத்தை தடுப்பதற்காக வேலை நிறுத்தத்துக்கு முடிவுகட்ட தயாராகினார்.

நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னர், மார்ச் 13 அன்று தொண்டமான் தனிப்பட்ட முறையில் பொகவந்தலாவைக்குச் சென்று, நிர்வாகம் பழைய வேலை முறைக்குத் திரும்ப "ஒப்புக்கொண்டுள்ள" நிலையில் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். அதை "ஒரு பெரிய வெற்றி" என தொழிலாளர்களிடம் கூறிய அவர், தடுத்து வைக்கப்பட்டிருந்த 250,000 கிலோ தேயிலையையும் விடுவிக்குமாறு அறிவுறுத்தினார்.

த ஐலண்ட் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த பொகவந்தலாவை பெருந்தோட்டத்தின் தலைவர் தினேஷ் அம்பானி, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியதனால் "நிலைமை வழமைக்குத் திரும்பி இருந்தது" என்றார். தொழிற்சங்கங்களுக்கு நன்றி கூறிய அவர், "தொழிற்சங்கங்களுக்கும் தமது நிறுவனத்துக்கும் இடையேயான கடந்த கால நல்லுறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார். தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் துரோகத்தால் ஊக்கமடைந்துள்ள தோட்டக் கம்பனிகள், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தீர்த்ததற்கான பெருமை, நியாயமாக தொழிற்சங்கத் தலைவர்களையே சாரும் என தெரிவித்தன.

தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க தொழிற்சங்கங்களின் பாத்திரம் முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இ.தொ.கா. கம்பனிகளுக்கு காட்டியுள்ளது. அது தொழிலாளர்கள் மீது உற்பத்தி அதிகரிப்பு, வறிய மட்டத்திலான சம்பளம் மற்றும் ஏனைய தாக்குதல்களை திணிப்பதில் தொடர்ச்சியாக துரோக பாத்திரத்தை ஆற்றி வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில், இ.தொ.கா. தலைமையிலான தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதில், உற்பத்தியை அதிகரிக்க கம்பனிகள் உள்ளூர் தொழிற்சங்க கிளைகளுடன் கலந்துரையாட முடியும் என்ற ஒரு பிரிவையும் உள்ளடக்கியுள்ளன.

இ.தொ.கா., NUW மற்றும் ம.ம.மு.வும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பங்காளிகளாகும். LJEWU வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியின் (யூ.என்.பி.) கட்டுப்பாட்டில் உள்ளதுடன், DWC யூ.என்.பி.யின் வழியில் பயணிக்கின்றது. இவை அனைத்தும் முதலாளிகளின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

கடந்த காலத்தில் போல், இந்த நேரத்திலும் கூட, இ.தொ.கா. மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொண்டிருந்தது. அவை தொழிலாளர்கள் கோபத்தை திசை திருப்ப உதவின. அவை முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக ஏனைய தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டன. மாறாக, அவர்கள் துரிதமாக எதிர்ப்பை நிறுத்துவதற்காக அரசாங்கத்துடனும் தொழில் அதிகாரிகளுடனும் செயற்பட்டனர். வட்டவளை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் உள்ள வெலி ஓயா தோட்டத்தின் தொழிலாளர்கள், இத்தகைய தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பின் காரணமாக, முதுகை வளைக்கும் வேலைச் சுமைகளை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கென்யா, சீனா, இந்தியா மற்றும் வங்காள தேசம் போன்ற ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடனான அதிகரித்துள்ள போட்டியின் கீழ், இலங்கை தேயிலை தயாரிப்பாளர்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது சமூக நலன்கள் இருக்குமெனில் அவற்றை குறைத்து, புதிய வேலை இலக்குகளை அறிமுகம் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் கொழுந்து பறிக்கும் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் போன்று, மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற உழைப்பை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

கம்பனிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்துவருவதானது, சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுத்துள்ள தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டில் தொழிலாளர்கள் பங்குபற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இங்கு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்கள் போன்ற புதிய வடிவிலான அமைப்புக்களை அமைப்பதைப் பற்றியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய தலைமையை உருவாக்குவது பற்றியும் கலந்துரையாடப்படும். நாம் மே 20 அன்று காலை 10 மணிக்கு ஹட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டுக்கு வருகை தருமாறு தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.