சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS interviews tortured Tamil political refugee

சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் அரசியல் அகதியை உலக சோசலிச வலைத் தளம் பேட்டி கண்டது
By Athiyan Silva
30 July 2012

use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கங்களால் 1983 தொடக்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், இறுதியாக 2009  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இராணுவத்தால் புலிகள் நசுக்கப்பட்டதுடன் கொடூரமாக முடிவுக்கு வந்தது.

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் அதன் இராணுவமும் தமிழ் துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் புலிகளுடன் சிறிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களைக் கூட பிடிப்பதற்காக உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களைச் சுற்றி வளைக்கத் தொடங்கின.

11,000க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் இளைஞர்களும் பெண்களுமாவர். இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் சில நாட்கள் விசாரித்த பின்னர், அவர்கள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களது உடமைகளை சேகரிக்க ஒரு சில நிமிடங்களை கொடுத்த பின்னர், புனர்வாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அரசாங்கத்தின்படி, இந்த கைதிகளில் 5,000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் இன்னமும் இராணுவத்தின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் வாழ்கின்றனர். 6,000க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் இரகசிய முகாம்களிலும் மற்றும் புனர்வாழ்வு என்றழைக்கப்படும் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கூடுதலானவர்கள் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அரசியல் கைதிகளை எந்தவிதமான விசாரணையுமின்றி காலவரையறை இன்றி தடுத்து வைத்திருக்க முடியும்.

2009 மே மாதத்தில், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, யுத்தம் முடிவடைந்துவிட்டது என்றும், “புலிப் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் பெருமைபட்டுக் கொண்டார். ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில்புலி சந்தேக நபர்கள் தொடர்சியாக கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 21 அன்று, திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு படையினரின் சுற்றி வளைப்பின் போது, 160 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அவர்களது வீடுகளில் இருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 38 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள், “புனர்வாழ்வு என்று கூறப்படும் திட்டத்துக்குள் ஒரு ஆண்டு அளவான நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படுவர்.

2012 மார்ச் 14ல், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவித்ததாவது:தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்கள், இன்னமும் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். வடக்கில் இராணுவப் பிரசன்னம் பிரமாண்டமானதாக இருப்பதுடன், அது பொது மக்களை கட்டுப்படுத்த நிலைகொண்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஒரு வரலாற்றையே கொண்ட ஒரு உயர் பொலிஸ் பிரிவான விசேட அதிரடிப்படை, நாடு பூராகவும் தொடர்ந்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் கைதிகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதோடு மீண்டும் கைது செய்யப்படுவதுடன் சரீரத் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். புதிதாக விடுதலை செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் காணாமல் ஆக்கப்படுவது பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.

கடந்த வாரம், உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், 28 வயதுடைய முன்னாள் தமிழ் அரசியல் கைதியொருவரை பேட்டி கண்டார்கள். ஒரு மாதத்துக்கு முன்னர், அவர் தனது உயிரைக் பாதுகாத்துக்கொள்வதற்காக, அரசியல் அகதியாக ஐரோப்பாவுக்கு வந்துள்ளார். அவருடைய பாதுகாப்புக்காக, அவரின் பெயரை இங்கு குறிப்பிடவில்லை. அவர் பல்வேறுபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.

அந்த முன்னாள் கைதி, தனது முன்னைய வாழ்கையைப் பற்றி கூறினார். “நான் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திரபுரம் என்னும் இடத்தில் பிறந்தேன். அந்தப் பிரதேசம் 2008 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. நான் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றேன். எனக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். எனது தந்தையார் ஒரு கடை உரிமையாளர். தாயார் குடும்பத் தலைவியாக இருந்தார். எனது பெற்றோரும் ஏனைய பெற்றோர்களைப் போல், எமது கல்வியிலும் எமது சிறந்த எதிர்காலத்திலும் அக்கறை காட்டினர். ஆனால் உள்நாட்டு யுத்தம் எங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது.

 “வன்னிப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி அவர்களின் தலமையகமாக இருந்தது. இலங்கை இராணுவம், கனரக ஆயுதங்கள் மற்றும் யுத்த விமானங்களை உபயோகப்படுத்தி, எமது வீடு இருந்த கிளிநொச்சி மற்றும் வன்னிப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக, பலத்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. 2007இல் எமது தந்தையார் காயப்பட்டதுடன் ஒரு காலையும் இழந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் அவர் மரணமடைந்தார். பின்னர் நாங்கள் புலிகளின் இறுதிக் கோட்டையாக இருந்த முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்தோம்.”

அவர் தொடர்ந்தும் பேசினார்: கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் அநேகமானவர்கள் காயமடைந்தனர். 2009 ஏப்ரல் இறுதியில், நானும் எனது அம்மா மற்றும் சகோதரியும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த வட்டுவாசல் பகுதிக்கு போவதற்கு முடிவெடுத்தோம். அங்கு போனபின், தமிழ் துணை இராணுவக் குழுக்கள் செயற்பட்டுவந்த ஓமந்தை இராணுவ முகாமுக்கு, எங்களை இராணுவம் அனுப்பி வைத்தது. அங்கு கருணா குழுவைச் சேர்ந்த இசையருவி என்பவரால் நான் தாக்கப்பட்டேன். கருணா 2004 இல் இராணுவத்துடன் இணைய முன்னர் புலிகளுடன் இருந்தார். நான் ஒரு புலி ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு என்மேல் இருந்தது. பின்னர், இராணுவம் என்னையும், அம்மாவையும் மற்றும் எனது சகோதரியையும் மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தது. [2009 மே மாதம் இறுதிக் கட்ட யுத்தத்தில், சுமார் 300,000 தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 21ம் நுற்றாண்டில், உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பு முகாம் அது என நம்பப்படுகிறது.]

 “பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர், சிப்பாய்களும் மற்றும் கருணா குழுவினரும் எமது கொட்டகைக்கு வந்து, எனது தாயார் மற்றும் சகோதரிக்கும் முன்னால் என்னைக் கைது செய்தனர். அவர்கள் தங்களால் முடிந்தவரை கத்திக் குழறி என்னைப் பாதுகாக்க கடும் முயற்சி செய்தும் அது முடியாமல் போய்விட்டது. அவர்கள் என்னைநெல்லுக்குளம் புனர்வாழ்வு நிலையத்தில் நான்கு மாதங்களாக தடுத்து வைத்திருந்தார்கள்.

அங்கு நிலமைகள் மோசமாக இருந்தன. அந்த முகாமுக்குள் 2,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அது நிரம்பி வழிந்தது; எல்லோரும் தண்ணீர் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். நல்ல உணவு கிடைக்காது, “சாம்பாருடன் சோறு மட்டும் தினமும் கிடைக்கும். சில நேரங்களில் மீன் அல்லது இறைச்சிக் கறி கிடைக்கும். நாங்கள் நிலத்தில் தான் தூங்கினோம். கழுவுவதற்காக அவர்கள் ஒன்றரை லீட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கினார்கள். அங்கிருந்த 2000 பேருக்கு 10 மலசல கூடங்கள்தான் இருந்தன. அங்கு நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் மலசல கூடத்துக்கான நீண்ட வரிசைகளை பார்க்க முடியும்.

 “பின்னர் அவர்கள் என்னைகாமினி மகா வித்தியாலய நிலையத்துக்கு மாற்றினார்கள். அங்கு நான் 600 கைதிகளுடன் இருந்தேன். ஒரே மாதிரியான நிலமைகளுடன், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அங்கு இருந்தேன். பின்னர், “பம்பைமடு நிலையத்துக்கு என்னை மாற்றினார்கள். அது ஒரு காட்டுப் பிரதேசமாகும். இந்த நிலையத்தில், 2000 ஆண்கள் மற்றும் 1000 பெண்கள் வெவ்வேறாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். நான் அங்கு 2010 ஏப்ரல் வரை இருந்தேன்.

 “இறுதியாக அவர்கள், என்னை வவுனியா தமிழ் மகா வித்தியாலய நிலையத்துக்கு மாற்றினார்கள். அது மற்றைய முகாம்களை விட மிகவும் மோசமானதாக இருந்தது. அங்கு நாங்கள் 400 பேர் இருந்தோம். இராஜபக்ஷ அரசாங்கம், அந்த முகாமை வெளிநாட்டவர்களுக்கு காட்டி அங்கு கைதிகளுக்கு கல்வி வழங்கப்படுவதாக கூறியிருக்கும். ஆனால் உண்மை நிலை வேறு. நாங்கள் ஒருவரோடொருவர் பேச முடியாது. ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டியதுதான். கைதிகளின் மத்தியில் பல புலனாய்வாளர்கள் ஊடுருவி இருந்தார்கள் என நான் நம்புகின்றேன். இராணுவப் புலனாய்வாளர்கள் என்னை மோசமாக நடத்தியமையினால் நான் தற்கொலை செய்வதற்கு கூட முயற்சி செய்தேன். அந்த வழி மட்டுமே எனக்கு அப்போது இருந்தது.

 “நான் இந்தபுனர்வாழ்வு முகாம்களில் இருந்தபோது, இராணுவப் புலனாய்வாளர்களினால் நான் விசாரணைக்காக வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமுக்கு பலதடவை கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை ஓய்வின்றி அடித்து சித்திரவதை செய்தார்கள். ஒருநாள் நான் அவர்களிடம் கேட்டேன்:முன்னாள் புலிகளின் தலைவர்களான கருணா, கே.பத்மநாதன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் போன்றோர் எந்தவிதமான விசாரணைகளுமற்று இராஐபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்கிறார்கள். நீங்கள் ஏன் எங்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறீர்கள்? நாங்கள் அப்பாவிகள்.

ஏனைய அரசியல் கைதிகளைப் போல், இந்த இளைஞனும் கருணா மற்றும் ஏனைய இராணுவத் துணைக் குழுக்களால் விசாரிக்கப்பட்டது தற்செயலானதல்ல. தமிழ் முதலாளித்துவத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள், தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர் வர்க்கத்தினை பிரிப்பதற்காக, தமிழ் பிரிவினைவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டு, சிங்கள முதலாளித்துவத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.

புலிகளின் எச்ச சொச்சங்கள் உட்பட, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக கூறுகிறார்கள். ஆனால்விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற அவர்களுடைய கோரிக்கை, பொது மக்களை தடுத்து வைப்பதற்கான சட்டங்களை அங்கீகரிப்பதாகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின்புனர்வாழ்வு பிரச்சாரம் மோசடியானது என்பதை இந்த இளைஞனின் பேட்டி வெளிப்படுத்துகிறது.

இலங்கையின் சமூக நெருக்கடிகள் கூர்மையடைந்து வருகின்ற நிலையில், அரசாங்கம் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களைப் பிரிப்பதற்காக மேலும் மேலும் சிங்கள இனவாதத்துக்குள் அடைக்கலம் தேடுகின்றது. தசாப்த காலமாக, ஆளும் தட்டுக்களின் ஆட்சியை தூக்கிப் பிடிக்கும் ஒரு பிரதான கருத்தியல் உபகரணமாக தமிழர்-விரோத இனவாதம் இருந்து வருகின்றது. இராஜபக்ஷ யுத்தக் குற்றம் புரிந்தவர் என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்நகர்த்தியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து அரசியல் கைதிகளையும், நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றது.