சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands affected by floods in Sri Lanka

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

By our correspondents 
22 December 2012
use this version to print | Send feedback

இலங்கையில் திங்கள் முதல் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 36 பேர் காயமடைந்தும், சிலர் கவலைக்கிடமான நிலையிலும் இருப்பதோடு 14 பேர் காணமல் போயுள்ளனர்.

இந்த இயற்கை அனர்த்தம் இலங்கையின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களை பாதித்துள்ளது. வெள்ள நீர் மட்டம் குறைந்துள்ளதால் சில பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள போதும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் போதுமான உணவு, சுத்தமான நீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல், தேவாலயங்கள், பொது கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் தஞ்சம் கொண்டுள்ளனர். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏழை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களும் மற்றும் அவர்களது குடும்பங்களுமாவர்.


An inundated street

அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மையம் 328.913 பேர் அல்லது 82.687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உட்பட மத்திய மலையக மாவட்டங்களில் அநேக மரணங்கள் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ளன. மாத்தளையில் மட்டும் எட்டு பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 400 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதுடன் 4.782 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள சில வீதிகள் பாவனைக்கு உதவாதவையாகியுள்ளன.

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வழமையாக வட கிழக்கு பருவ மழையால் பெருவெள்ளத்தில் மூழ்கும் மாவட்டங்களில் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்துள்ளது. ஒழுங்காக பராமரிக்கப்படாத நீர்ப்பாசன குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வழிந்து, இயற்கை பேரழிவின் பாதிப்பை அதிகரித்துவிட்டன. அதிகாரிகள் ஆபத்துக்களை பற்றி முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கத் தவறிவிட்டனர்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி பணியகம் (NBRB), நிலச்சரிவு அபாயம் காரணமாக மக்கள் வெளியேறவேண்டிய சில பகுதிகளை குறிப்பிட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய கட்டிட ஆராய்ச்சி பணியகம் அத்தகைய அறிவிப்புகளை வெளிவிடுகின்றபோதிலும், அரசாங்கம் மக்களுக்கு சரியான மாற்று வீடுகளை வழங்க எதுவும் செய்யவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏழை மக்கள், முறையான மாற்று இடங்கள் இன்றி, இத்தகைய இடங்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஹாலி எல பிரதேசத்தில் ஹுனுகொல்ல தோட்டத்தில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இதனால் 22 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் ரத்தொட்டையில் மூன்று பேர் ஒரு நிலச்சரிவால் இறந்துள்ளனர்.

வடமேல் மாகாணத்தில், தெதுரு ஓய ஆறு பெருக்கெடுத்ததால் குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. சிலாபம் நகரம் பல நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருந்ததோடு பிரதேசத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பல நீர் சேமிப்பு தொட்டிகள் பல தசாப்தங்களாக திருத்தப்படாமையினால், நீர் கசியத் தொடங்கிவிட்டது. அநேகமான உள்ளூர் மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் இருக்கின்றனர். வட்டக்காகெலிய, சவரான, நாரியகம, திசோகம, மனுவன்கம மற்றும் ஜயபிம ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும்.

பல நாட்களுக்கு முன்பு மணல் மூட்டைகளைக் கொண்டுதிருத்தப்பட்டஒரு சேதமடைந்த நீர்த்தாங்கி நிரம்பி வழிந்ததை அடுத்து, வெள்ளம் பெருக்கெடுத்ததாக மக்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர். வட்டக்காகெலியவில் 55 வயது மேர்வின் பெர்னாண்டோ விளக்கியதாவது: "காலை 4 மணியளவில் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. காலை 6 மணிக்கு நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. 300,000 ரூபா (2, 300 டொலர்) மதிப்புள்ள உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. "

நமது நிருபர்கள் பார்வையிடச் சென்ற போது சிலாபம் நகரசபை சுகாதார தொழிலாளர்களின் டஜன் கணக்கான பலகைக் குடிசைகள் தண்ணீரில் மூழ்கி இருந்தன. ஒவ்வொரு குடிசையிலும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. ஆண்கள் வீதிகளில் நின்று தங்கள் குடிசைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள் ஒரு பாடசாலையில் அகதிகளாக தங்கியிருந்தன. "எங்களுக்கு இன்னமும் எந்த உணவும் கிடைக்கவில்லை. நாம் நகரசபையில் வேலை செய்தாலும் அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ இந்த பக்கம் வரவில்லை. எங்களுக்கு ஒரு நன்கொடையாளர் மூலம் உணவு கிடைத்தது," என ஒரு தொழிலாளி நமது நிருபரிடம் கூறினார்.


Workers walking through a flooded hospital

பிரதேசத்தின் பிரதான மருத்துவமனையினுள்ளும் வெள்ளம் பெருக்கெடுத்தது. சில நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் மேல் மாடிகளுக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு அவர்களுக்கு படுக்கைகள் இல்லாத நிலையில் தரையில் படுக்கத் தள்ளப்பட்டனர்.

அநேக பகுதிகளில் மக்கள் அரசாங்கத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்தினர். விமர்சனங்களை திசை திருப்பும் முயற்சியாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, தான் "நெருக்கடி நிலைமையின் போது தங்கள் பொறுப்பை அலட்சியம் செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு", பொது நிர்வாக அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினார். வழக்கம் போல், அரசாங்கம் அதிருப்தியை திசை திருப்ப பலியாடுகளைத் தேட முயல்கிறது.

குருணாகலையில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய நகரான இப்பாகமுவையைச் சேர்ந்த ஒரு தனியார் துறை தொழிலாளி, தான் பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருப்பதைப் பார்த்ததாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். “கமல்வத்த மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். மாவட்ட செயலாளரும் அங்குதான் வசித்து வந்தார். அவரது வீடு பாதிக்கப்பட்டுள்ளதைக் கேட்விப்பட்ட தேசிய மருத்துவ அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அவரைப் பார்வையிடச் சென்ற போதிலும், பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களை பார்க்கச் செல்லவில்லை,” என அவர் மேலும் கூறினார். இதைக் கண்ட பொது மக்கள், அவரது இரக்கமற்ற போக்கை கண்டனம் செய்தனர்.

மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான நிமால் விஜேசிங்க, சுற்றுலா பயணிகள் போல் தனது குடும்பத்துடன் கரந்தகொல்ல கிராமத்துக்குச் சென்றார். மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் பாய்ந்துவிட்டதாக அவரிடம் கூறிய பிறகு, பாராளுமன்ற உறுப்பினர் உதவி வழங்குவதாக வாக்குறுதியளித்தார். "எங்களுக்கு போலிக்கதைகள் தேவையில்லை. எங்களுக்கு உணவு கிடையாது. தண்ணீர் கிணறுகள் சேதமாகிவிட்டன," என ஒருவர் கூறினார்.

மாத்தளையில் இருந்து ரிதீகம வரையான பிரதான வீதியின் பாலம் மோசமாக சேதமடைந்துள்ளது. பின்னர், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகாரசபை, "வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது," என்ற அறிவித்தல் அடையாளம் ஒன்றை அங்கு அமைத்தது. இந்த பாலம் பல ஆண்டுகளாக பாழடைந்திருந்த போதிலும், அது திருத்தப்படவில்லை.

பிரதான நெல் செய்கை மாவட்டமான பொலன்றுவை மாவட்டமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவற்றில் ஒன்றாகும். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இடம்பெயர்ந்த 10,237 பேர் 33 முகாம்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர். பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதி தண்ணீரில் மூழ்கி போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடுமையான வரட்சியினால் பயிர்கள் நாசமான நிலையில் அங்குள்ள விவசாயிகள் ஏற்கனவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டையில், 30 வயது சாரதி ஒருவர் விளக்கியதாவது: "நாங்கள் வலவே ஆற்றுக்கு நீரை அனுப்பும் வான் கதவு திறக்கப்பட்டதனால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் எதிர்பாராத வகையில் அகப்பட்டுக்கொண்டோம். என் தந்தையின் பாகற்காய் பண்ணை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. மற்ற விவசாயிகளும் அதே நிலைமையை எதிர்கொண்டனர். அரசாங்கம் எங்களுக்கு இழப்பீடு கொடுக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை. "

அம்பாந்தோட்டை மாவட்டத்தை துறைமுகம் மற்றும் விமான நிலையத்துடன் அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பிரமாண்டத் திட்டத்தின் பகுதியாக, பிரதான வீதிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கிராமங்களுக்கான சிறிய பாதைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை இராஜபக்ஷவின் சொந்த ஊராகும்.

"வரிச்சல் கட்டி மண் பூசப்பட்ட பல வீடுகள் அங்கு இன்னமும் இருக்கின்றன. சவர்க்காரத் துண்டு வாங்க முடியாத மக்கள் அங்குள்ளனர். அரசாங்கம் சாதாரண மக்களை கவனிப்பதில்லை. விலைவாசி உயர்ந்து செல்கின்றது," என அந்த சாரதி கூறினார். " அரசாங்கத்தில் இருந்து எங்களை பார்க்க யாரும் வரவில்லை. அவர்கள் பொதுவாக தேர்தல் காலங்களில் மட்டுமே வருவர். இந்த மாதிரி பேரழிவின் போது யாரும் எங்களுக்கு உதவுவது கிடையாது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும்," என அவர் மேலும் கூறினார்: