சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP open letter to the defence minister

இலங்கை: பாதுகாப்பு அமைச்சுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கடிதம்

By the Socialist Equality Party (Sri Lanka)
11 February 2012

use this version to print | Send feedback

பாதுகாப்பு அமைச்சருக்கு,

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஜனவரி 29 அன்று யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிட்டிருந்த கட்சியின் கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சு சட்டவிரோதமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்ததை கண்டனம் செய்கின்றது. இந்த தீர்மானம், முற்றிலும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒரு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியான சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ள அடிப்படை ஜனநாயக உரிமை மீதான தாக்குதலாகும். 

சோ.ச.க. பதிவுசெய்திருந்த வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகத்தை சந்திக்க இராணுவச் சிப்பாய்களுடன் வந்த பாதுகாப்பு அமைச்சு அலுவலர்கள், அங்கு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் என அவர்களுக்கு உத்தரவிட்டனர். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியுள்ள போதிலும், இராணுவம் யாழ்ப்பாணத்தில் நாட்டின் அரசியலமைப்பையும் சட்ட முறைமையையும் முழுமையாக அலட்சியம் செய்து எதேச்சதிகாரமான முறையில் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் ஒரு ஆக்கிரமிப்புப் படையாக தொடர்ந்தும் செயற்படுகின்றது.

குருநகர் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரு சோ.ச.க. உறுப்பினர்களை படையினர் தடுத்து வைத்து, அவர்களிடம் கட்சி உறுப்பினர்களின் விபரங்களை கோரிய மூன்றாவது நாளே சோ.ச.க.யின் பொதுக் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களை விடுவித்த அதே படையினர் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து அவர்கள் மீதான சரீரத் தாக்குதலையும் திட்டமிட்டிருந்தனர். மிகவும் அண்மையில், கட்சி உறுப்பினர்களை மேலும் அச்சுறுத்துவதற்காக படையினர் அவர்களது வீடுகளுக்கும் சென்றிருந்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவையாகும்.

இராணுவத்தினரின் நடவடிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைப் பற்றி சோ.ச.க. மிக விழிப்புடன் இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகள் பூராவும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர், மற்றும் சில சமயங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய மிக அதிகமான சம்பவங்களில் எவர் மீதும் குற்றஞ்சாட்டுவது ஒரு புறம் இருக்க, ஒருவரும் விசாரிக்கப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பு படையினரின் உடந்தையின் காரணமாக தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் இந்தக் கொலைப்படைகளால் செயற்பட முடிந்துள்ளது.

2007 மார்ச்சில், சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வேலைனையில் காணாமல் போயினர். அவர்களை கடைசியாக கண்டபோது ஒரு கடற்படை சோதனை நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஆயினும் அங்கிருந்த கடற்படை சிப்பாய்களை பொலிசோ அல்லது நீதிமன்றமோ விசாரிக்கவில்லை. அவர்களது தலைவிதிக்கான பொறுப்பை சோ.ச.க. தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தின் மீதுமே சுமத்துகிறது.

கட்சி பிரிவினைவாதத்துக்கு ஆதரவளிப்பதாக போலித்தனமாக குற்றஞ்சாட்டுவதன் மூலமே சோ.ச.க. கூட்டத்தை தடை செய்ததை பாதுகாப்பு அமைச்சு நியாயப்படுத்த முயற்சித்துள்ளது. உண்மையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் சோ.ச.க.யின் பிரச்சாரத்தை அரசாங்கமும் இராணுவமும் கடுமையாக எதிர்க்கின்றன. சோ.ச.க. அந்த பிரச்சாரத்தின் பாகமாகவே கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை, பிரதானமாக இளம் தமிழர்களை, அவர்களது அடிப்படை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பகிரங்கமாக மீறி, பயங்கரவாத சந்தேக நபர்களாக விசாரணையின்றி தடுத்து வைத்துள்ளது.

சோ.ச.க. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு கட்சியின் வேலைத் திட்டம் மற்றும் அதன் நீண்ட சாதனைகளுடன் நேரடி முரண்பாடானதாகும். சோ.ச.க. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) இலங்கைப் பகுதியாகும். சோ.ச.க.யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக, சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் இலங்கையிலும் தெற்காசியா பூராவும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த கடந்த நான்கு தசாப்தங்களாக உறுதியுடன் பிரச்சாரம் செய்துவந்துள்ளது.

தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்தை ஆரம்பத்தில் இருந்தே பு.க.க. மற்றும் சோ.ச.க.யும் எதிர்த்து வந்துள்ளன. ஆயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்கக் கோருவதில் கட்சி புலிகளின் தமிழ் பிரிவினைவாத வேலைத் திட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை. தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்க உழைக்கும் மக்களை அணிதிரட்டப் போராடுவதே எமது முன்நோக்கு.

சோ.ச.க. இடைவிடாது தமிழ் பிரிவினைவாதத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளதோடு தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் வர்க்கப் பண்பையும், சொந்தமாக ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் அவர்களது அவாவையும் அம்பலப்படுத்தி வந்துள்ளது. அதன் காரணமாகவே, எமது கட்சி தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க இடைவிடாது போராடி வந்திருந்தாலும், புலிகள் கட்சியை மௌனமாக்கும் முயற்சியில் 1998ல் நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை தடுத்து வைத்திருந்தனர். இறுதியாக அவர்கள் சோ.ச.க. மற்றும் நா.அ.அ.கு.வின் சகோதரக் கட்சிகளின் சர்வதேச பிரச்சாரத்தை அடுத்தே விடுவிக்கப்பட்டனர்.

அரசியல் அறிவுக்கூர்மை கொண்ட இலங்கையில் உள்ள எவரும் சோ.ச.க.யின் கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை நன்கு அறிந்திருப்பார். சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் 2005 மற்றும் 2009 ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிட்டதோடு சோ.ச.க.யின் தேர்தல் விஞ்ஞாபனம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துள்ளது. பிரதான அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகளின் கைவிடப்பட்ட வாக்குறுதிகளைப் போலன்றி, சோ.ச.க.யின் வேலைத் திட்டமே அதன் அரசியல் போராட்டத்துக்கு அடித்தளமாகும்.

அரசாங்கத்தின் சொந்தப் பொய்கள் நாடு பூராவும் உழைக்கும் மக்களின் கண்களுக்கு முன்னால் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகின்ற நிலையிலேயே சோ.ச.க. மீதான அரசாங்கத்தின் பகைமை அதிகரித்து வருகின்றது. யுத்தத்தின் முடிவு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் அர்த்தப்படுத்தும் என்று ஜனாதிபதி இராஜபக்ஷ கூறுவது பொய் என சோ.ச.க. எச்சரித்திருந்தது. இன்று தனது குற்றவியல் யுத்தத்துக்கு விலை கொடுக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கத் தள்ளப்பட்டுள்ளதோடு இப்போது நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகின்றது. அதே சமயம், சமூக ரீதியில் அழிவுகரமான தனது கொள்கைகள் மீது வளர்ச்சியடைந்துவரும் வெகுஜன எதிர்ப்பை தகர்ப்பதற்காக யுத்த கலாத்தில் கட்டியெழுப்பிய பொலிஸ்-அரச வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றது.

யுத்தம் முடிந்துள்ள போதிலும் அரசாங்கம் பாதுகாப்புச் செலவுகளை குறைக்கத் தவறியுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வயலங்களை அகற்ற அல்லது இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றவும் தவறியுள்ளது. அவசரகால நிலைமை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், அதே போன்ற ஜனநாயக-விரோத அதிகாரங்கள் சட்டத்துக்குள் நுழைக்கப்பட்டுள்ளன. நகர திட்டமிடல் போன்றவற்றின் மூலம் இராணுவத்தின் அதிகாரம் பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்குகள் மற்றும் அரசியலமைப்பை மீறி, பாரளுமன்றக் கட்டுப்பாட்டுக்கு வெளியில் இயங்கும் ஒரு அதிகாரத்துவ-இராணுவ சிறுகுழு ஆட்சியாகவே அரசாங்கம் இயங்குகின்றது.

சோ.ச.க.க்கு எதிரான வேட்டைக்கு பாதுகாப்பு அமைச்சு தயாராவதன் புறச் சூழ்நிலை இதுவேயாகும். ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக வெகுஜனங்களுக்கு ஒரே பொருத்தமான மாற்றீட்டை வழங்கும் சோ.ச.க.யை மௌனமாக்குவதே அதன் குறிக்கோளாகும்.

சோ.ச.க. பயந்துவிடாது. எங்களை மௌனமாக்குவதற்கு அரசாங்கங்களும் எமது அரசியல் எதிரிகளும் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்ப்பதில் நீண்ட மற்றும் கௌரவமான சாதனைகளை நாம் செய்துள்ளோம். கடந்த காலத்தைப் போலவே, வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரந்த பிரச்சாரத்தின் பாகமாக கட்சியைக் காப்பதற்கு உள்நாட்டிலும் அனைத்துலகிலும் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களும் அணிதிரள்வர் என நாம் நம்புகிறோம்.

* புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டு வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள், 1971ல், அரசாங்கம் அதன் வெளியீடுகளை தடை செய்ததோடு கட்சி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக போலிக் குற்றச்சாட்டை சுமத்தியது. பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது இரு கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதிலும், பு.க.க. அதன் அடித்தளத்தில் நின்றுகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆளும் கூட்டணிக்கு எதிரான அதன் அரசியல் போராட்டத்தை தொடர்ந்தது.

* 1983 ஜூலையில் தமிழர்களைப் படுகொலை செய்வதில் அரசாங்கத்தின் பங்களிப்பை பு.க.க. அம்பலப்படுத்தியதோடு அது உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுப்பதை எதிர்த்ததை அடுத்து, 1984ல், புலி பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் பு.க.க.யின் வெளியீட்டாளர் ஆனந்த வக்கும்புறவை பொலிஸ் கைது செய்தது. பு.க.க. மக்கள் ஆதரவை அணிதிரட்டியதை அடுத்து அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

* 1986ல், இலவசக் கல்வியைப் பாதுகாத்து கூட்டமொன்றை நடத்திக்கொண்டிருந்த போது அவசரகாலச் சட்டத்தின் கீழ் வீஜே டயஸ் மற்றும் ஏனைய இரு கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பு.க.க. மற்றும் நா.அ.அ.கு. முன்னெடுத்த விரிவான அனைத்துலக பிரச்சாரத்தினை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அடிப்படை உரிமைகளை மீறி கைது செய்யப்பட்டதாக பின்னர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தகைய ஒவ்வொரு சம்பவத்தின் போதும், பு.க.க./சோ.ச.க. மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் அரசாங்கத்தின் ஆழமான அரசியல் நெருக்கடி இருந்துகொண்டிருந்தது. இன்றும் நிலைமை அதுவே.

சோ.ச.க. தற்போதைய அச்சுறுத்தல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. ஐக்கிய அமெரிக்காவை முன்னணியாகக் கொண்டு உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டில் இராணுவவாதத்தையும் உள்நாட்டில் சமூக எதிர்ப் புரட்சியையும் நாடுகின்ற நிலையில் ஜனநாயக-விரோத வழிமுறைகளை கையாள்கின்றன. ஆனால் உறுதியான ஒரு பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து சக்திவாய்ந்த பதிலிறுப்பை வெற்றிகொள்ளும் என நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

உலகின் சோசலிச மாற்றத்துக்காக உள்நாட்டிலும் அனைத்துலகிலும் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசியல் ரீதியில் கல்வியூட்டுவதற்கும் அவர்களை அணிதிரட்டவும் உள்ள எமது நியாயமான ஜனநாயக உரிமையை காப்பதில் சோ.ச.க. எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைச்சின் மற்றும் இராணுவத்தின் தொந்தரவுகள் மற்றும் அச்சுறுத்தல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.