World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The police state 2012 Olympics

போலிஸ் அரசு 2012 ஒலிம்பிக்ஸ்

Patrick Martin
16 July 2012
Back to screen version

மானுட மாண்பை பாதுகாக்கின்ற அக்கறையுடனான ஒரு அமைதியான சமூகத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நோக்குடன், மனிதகுலத்தின் ஒத்திசைவான வளர்ச்சிக்கு சேவை செய்யுமிடத்தில் விளையாட்டை வைப்பதே ஒலிம்பிக்ஸின் நோக்கம் என்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

உயர்வாய் தொனிக்கும் இந்த வழக்கமான பல்லவி நெடுங்காலமாகவே, தேசியவாதம், பிரபலங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பணம் சம்பாதிக்கும் செயல் ஆகியவற்றின் நான்காண்டுக்கு ஒருமுறையான கொண்டாட்டமாக அதிகமாய் ஆகி விட்டிருக்கிறது. இது 2012 இலண்டன் ஒலிம்பிக்ஸைக் காட்டிலும் அப்பட்டமாய் வெளிப்பட்டதில்லை. இதில் போட்டிகளை நடத்தும் அரசாங்கமானது அமைதி, மானுட மாண்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை குறித்த கருத்துகளை எல்லாம் காலில் போட்டு நசுக்குவதை திட்டமிட்டு அரங்கேற்றுவதாய் தோன்றுகிறது.

ஒலிம்பிக்ஸில் பாதுகாப்புப் பணிக்காக இன்னும் 3,500 துருப்புகளை மேலதிகமாக கொண்டுவர இருப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் வியாழனன்று அறிவித்தது. இத்துடன் சேர்த்து இந்த நிகழ்வில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தரைப்படைவீரர்கள், விமானப் படைவீரர்கள் மற்றும் இராணுவப் போலிசாரின் மொத்த எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவில் 17,000 ஐத் தொடுகிறது. இது ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்தியப் போருக்காய் நிறுத்தப்பட்டிருக்கும் துருப்புக்களை விட மிகுந்த அதிகமான அளவாகும்.

17,000 துருப்புகள், 12,000 போலிசார் மற்றும் 20,000 அல்லது அதற்கு அதிகமான பாதுகாப்புக் காவலர்கள் என மொத்த சீருடைப் பணியாளர்களின் எண்ணிக்கையான இந்த 49,000 என்பது பிரிட்டன் 2003 இல் ஈராக் ஆக்கிரமிப்புக்கு பங்களிப்பு செய்த அவசரகாலப் படையளவைக் காட்டிலும் அதிகமாகும். 1956 சூயஸ் நெருக்கடிக்குப் பின் பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகள் ஒரேமுறையில் அதிகமாகத் திரட்டப்பட்டிருப்பது இப்போது தான்.

இத்தனை பெரிய இராணுவப் படை உபயோகத்தின் இலக்கு, பிரதமர் டேவிட் கேமரூனின் அரசாங்கம் கூறிக் கொள்வதைப் போல, இந்த பெரும் நிகழ்வின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருக்க முடியாது. அல் கெய்தாவுடன் (மேற்கு ஐரோப்பாவில் கடைசியாய் இவர்கள் நடத்திய முக்கியமான தாக்குதல் என்றால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மாட்ரிட் மற்றும் இலண்டனில் பொதுப் போக்குவரத்தின் மீது இவர்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலைத் தான் கூற வேண்டும்.)தொடர்புபட்ட குழுக்களின் அச்சுறுத்தலின் சாத்தியத்திற்கும் இந்த படைதிரட்டலின் அளவுக்கும் சிறிதும் பொருத்தமில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கம் திரட்டும் துருப்புகளின் எண்ணிக்கை புஷ் நிர்வாகம் 2002ல், அதாவது 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆறே மாதங்களுக்கு அடுத்தும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஊடுருவலுக்கு நான்கே மாதங்களுக்கு அடுத்தும் ஊத்தாவில், சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ்க்கு திரட்டிய எண்ணிக்கையை விட மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.

ஆயுதங்களின் தெரிவும் சிறு அளவிலான அல்லது தனி-நபர் பயங்கரவாதம் தான் பிரதானக் கவலை என்கிற கூற்றைப் பொய்யாக்கி விடுகிறது. அப்படியானால் இலண்டன் மீது சூப்பர்சானிக் டைஃபூன் ஃபைட்டர் ஜெட்டுகளைக் கொண்டு ஏன் ரோந்து சுற்ற வேண்டும்? மக்கட்தொகை செறிந்த கிழக்கு இலண்டனின் அருகாமைப் பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் காட்டிலும் அதிகமாய் அப்பாவி மக்களுக்கு சேதம் விளைவிக்கும் என்கிற நிலையில் விமான எதிர்ப்பு ஏவுகணையை ஏன் கூரைகளின் மேலே அமர்த்த வேண்டும்?

ஏன் பிரிட்டிஷ் கடற்படையின் HMS ஓசன் என்கிற மிகப்பெரும் கப்பலை  ஹெலிகாப்டர்களைத் தாக்கும் 40 ஏவுகணைகளுடன் மற்றும் கனரக எந்திரத் துப்பாக்களுடன் கொண்டு வந்து தேம்ஸ் நதியில் நிறுத்தி வைக்க வேண்டும்? லிபியா மீது 2011 ஆம் ஆண்டில் நேட்டோ தாக்குதல் நடந்த சமயத்தில் தான் இந்த போர்க்கப்பல் கொண்டுபோய் நிறுத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாத அச்சுறுத்தலைக் குறித்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் இடைவிடாது செய்திமழை பொழிகிறது என்றாலும் கூட, இலண்டன் ஒலிம்பிக்ஸைச் சூழ்ந்திருக்கும் போலிஸ் அரசு சூழலானது பிரிட்டனில் வர்க்க உறவுகள் அதிகமான அளவில் பதட்டநிலைக்குச் சென்றிருப்பதற்கும் அத்துடன் உலகெங்கும் ஏகாதிபத்திய சக்திகள் இராணுவ வன்முறையில் இறங்குவது அதிகரித்திருப்பதற்கும் தான் அதிகமான சம்பந்தம் கொண்டிருக்கிறது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நான்கு குழந்தைகளின் தந்தை ஒருவர் நிராயுதபாணியான நிலையில் போலிசினால் கொல்லப்பட்டதற்குப் பின்னர் போலிஸ் அடக்குமுறைக்கும் அத்துடன் பேரழிவைக் கொண்ட வறுமைக்கும் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கும் எதிராக பரந்த மக்களின் கலகம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து ஒரு சில மைல்கள் தூரத்தில் தான் இப்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. டோட்டன்ஹாமில் இருந்து அந்த கலகம் நாடு முழுவதிலும் பிற நகரங்களுக்கும் பரவியது. கேமரூன் அரசாங்கமும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும், அத்துடன் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான ஊடகங்களும் எல்லோருமாய் இந்தக் கலகத்திற்கு எந்த சமூகக் காரணமும் இல்லையென மறுத்தனர். பரந்த ஒடுக்குமுறையும் கலகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்களை வரிசையாய்த் தண்டித்ததும் தான் (இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளின் மூலம் மொத்த மொத்தமாய் நீண்ட கால சிறைவாசத்திற்காய் அனுப்பப்பட்டது நீதியையே கேலிக்கூத்தாக்கியது)கலகத்திற்கான உத்தியோகபூர்வ பதிலிறுப்பாய் இருந்தது.  

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெய்லி டெலிகிராப் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், வடக்கு அயர்லாந்திலும் ஆப்கானிஸ்தானிலும் பல வருட காலமாய் நிறுத்தப்பட்டு கரங்களில் இரத்தம் தோயப்பட்டிருந்த பராசூட் ரெஜிமெண்டின் மதிப்பிற்குரிய மூன்றாவது படையணியைச் (Third Battalion of the Parachute Regiment)சேர்ந்த படைவீரர்கள் பிரிட்டனில் வருங்கால கலக நிலைமைகளுக்கான(இதில் 2012 ஒலிம்பிக் சமயத்திலான பதட்ட சாத்தியமும் அடக்கம்) தயாரிப்பாக Kent இல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அந்த செய்தியின் நிறைவாக கூறப்பட்டிருந்தது இதுதான்: பிரிட்டிஷ் நகரங்களில் மீண்டும் வன்முறை திரும்புமானால், அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திரும்புமானால், ஐக்கிய இராச்சியம் முழுவதிலும் இருக்கும் போலிஸ் படைகளுக்கு குறைந்த கால ஆதரவை வழங்கும் சரியான இடத்தில் பாராஸ் (Paras) படை இருக்கும் என்பதை பாதுகாப்புத் துறை செய்தி ஆதாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

2012 ஒலிம்பிக்ஸ்க்கான மொத்த செலவு 10 பில்லியன் பவுண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதே வேலைகளிலும், ஊதியங்களிலும், மற்றும் கல்வி, தேசிய சுகாதாரச் சேவை மற்றும் முதியோர் ஓய்வூதியங்கள் உள்ளிட்ட சமூக வேலைத்திட்டங்களிலும் இடைவிடாத வெட்டுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். இந்த மலைக்க வைக்கும் தொகையில் குறைந்த பட்சம் பாதித் தொகையேனும் பாதுகாப்பு தொடர்பான செலவுத் தொகை. இதில் போலிசுக்கு மட்டுமான 1.1 பில்லியன் பவுண்டுகளும், மற்றும் இராணுவம் மற்றும் உளவுத் துறை சேவைகளுக்கான 4.4 பில்லியன் பவுண்டுகளும் அடக்கம்.

கேமரூனின் உள்துறை செயலாளாரன தெரசா மே உள்நாட்டிற்குள்ளான கண்காணிப்பிற்குப் பொறுப்பளிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு மிகப்பெரும் உளவுத் தரவுத்தளத்தை உருவாக்கி வருவதாகவும் தேசிய அளவிலான ஒலிம்பிக் அச்சுறுத்தல் மதிப்பீடுகளை உருவாக்கியும் அலசியும் வருகின்ற ஒரு சிறப்பு மையத்தை அமைத்து வருவதாகவும் அவர் தம்பட்டம் அடித்திருக்கிறார்.

இவர்களுக்கு அச்சுறுத்தல்களைக் காட்டிலும் அதிக வன்முறை கொண்டதாய் இருக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எழுந்திருக்கும் அரசியல் எதிர்ப்பு. முகாமடிக்கும் பாணியிலான ஆர்ப்பாட்டங்களை ஒலிம்பிக் பகுதிகளுக்குள் நடத்துவதற்கு எதிராக பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முகாம்களையும் கருவிகளையும் அகற்றுவதற்கு போலிஸ் உடனடியாக செயல்படும் என்றும் மே கூறினார். உதாரணத்திற்கு மெட்ரோபோலிட்டன் போலிசார் பத்தாயிரக்கணக்கிலான இரப்பர் தோட்டாக்களை குவித்து வைத்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் மாதக் கலகத்தின் போது வெறும் 700 இரப்பர் தோட்டாக்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மற்ற எல்லா பெரிய முதலாளித்துவ சக்திகளையும் போலவே பிரிட்டனும் அதிகமான அளவில் ஏற்றத்தாழ்வு பெற்றதாக ஆகியிருக்கிறது. மொத்த வருவாயில் 9 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்ற இந்த தலைமைப் பணக்காரர்களின் ஒரு சதவீதத்தினர் தங்களது பங்கை 35 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட மும்மடங்காக்கி உள்ளனர். மக்கள் ஆதரவு அதிகமற்ற நிதி மற்றும் அரசியல் சிறு உயரடுக்கு, பரந்த உழைக்கும் மக்களுக்கு இன்னல் தரக்கூடிய ஒரு சிக்கன நடவடிக்கைக்கு சமரசமற்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது, அத்துடன் இது தனது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசு ஒடுக்குமுறையை நம்பியிருக்கிறது.

அதேபோல, இலண்டன் ஒலிம்பிக்ஸ் இராணுவமயமாக்கப்படுவதற்கு ஒரு சர்வதேசப் பரிமாணமும் உள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பிரிட்டிஷ் அரசாங்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கூட்டாளிப் பையனைப் போன்று தான் சேவை செய்தது, ஆனால் பிரான்சுடன் சேர்ந்து கொண்டு, முன்னாள் காலனித்துவ நாடுகளைச் சுரண்டுவதிலும் கொள்ளையடிப்பதிலும் பெரும் சக்தியை நிலைநாட்டுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டில் லிபியாவின் மீதான வான் தாக்குதலுக்கு தலைமை கொடுத்த பிரிட்டனும் பிரான்சும், சிரியாவிற்கு எதிராய் அதேபோன்ற நடவடிக்கைக்கான செலுத்தத்தில் முன்னால் நின்று கொண்டிருக்கின்றன. உலகளாவிய தொலைக்காட்சிகளில் விளம்பரம் பெறவிருக்கும் பிரிட்டிஷ் விமானப் படை சக்தி மற்றும் கடற்படையின் சக்தியானது சிரியா மற்றும் ஈரான் போன்ற உடனடி இலக்குகளுக்கு மட்டுமல்லாது, அவர்களின் முக்கியமான ஆதரவு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்கும்.

ஏகாதிபத்திய இராணுவ சக்தி படோடாபத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போலவே, இதிலும் அமெரிக்காவுக்கு சம்பந்தம் இருக்கிறது. நியூயோர்க் டைம்ஸ் ஞாயிறன்று குறிப்பிட்டதைப் போல, இலண்டன் ஒலிம்பிக்சுக்கான பிரிட்டிஷ் பாதுகாப்புத் திட்டங்கள் டிசம்பரில் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டன. ஒலிம்பிக்ஸ் தயாரிப்புகளை கவனித்து வருகின்ற FBI மற்றும் CIA அதிகாரிகளின் ஒரு சிறப்புக் குழுவிடம் இருந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் அபாயம் குறித்து வந்த எச்சரிக்கைகளின் வடிவத்தில் அமெரிக்காவிடம் இருந்து வந்த அழுத்தமும் இதற்கு ஒரு பகுதி காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலண்டனில் இராணுவவாதத்தின் பகட்டுக் காட்சியானது அமெரிக்காவின் அரசியல் நோக்கங்களுக்காய் சேவை செய்கிறது. பயங்கரவாதப் பூச்சாண்டியை மீண்டுமொருமுறை மேலே எழுப்புவதன் மூலமாக, 2012 ஒலிம்பிக்ஸ் மீது செலுத்தப்படுகின்ற கவனமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய இராணுவ சாகசங்களுக்கு மக்கள் கருத்தை தயாரிப்பு செய்வதற்கே உதவுகிறது.