சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Fierce controversy over banking union

ஜேர்மனி: வங்கிகள் ஒன்றியம் குறித்துக் கடுமையான கருத்து வேறுபாடுகள்

By Peter Schwarz
16 July 2012

use this version to print | Send feedback

ஜூன் 28-29 திகதிகளில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஜேர்மனியில் ஒரு மூர்க்கமான கருத்துமோதலை தூண்டிவிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுனர்கள் ஒரு கையெழுத்திட்ட அறிக்கையில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலைக் கடுமையாக குறைகூறியுள்ளனர். அறிக்கையின் முதல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “ஐரோப்பிய நாடுகள் உச்சிமாநாட்டில் சான்ஸலர் தன்னை உடன்பட கட்டாயப்படுத்தப்பட்டு எடுத்த தீர்மானங்கள் தவறானவை.”

பொருளாதார வல்லுனர்கள் குறிப்பாக உச்சிமாநாட்டின் முடிவான ஐரோப்பிய வங்கிகள் ஒன்றியம் ஒன்றை அமைக்கும் முடிவைக் கண்டித்துள்ளனர். ஏனெனில் இதன் பொருள் “யூரோ அமைப்புமுறையில் இருக்கும் வங்கிகளின் கடன்களுக்குக் கூட்டுப் பொறுப்பு” என ஆகும். அவர்கள் இதைத் தேசியவாத காரணங்களினால் நிராகரிக்கின்றனர்.

 “வலுவான ஐரோப்பிய நாடுகள்” “நெருக்கடிக்குட்பட்ட” நாடுகளின் வங்கிக் கடன்களுக்கு உத்தரவாதம் கூறும் பொறுப்பிற்குத் தள்ளப்படக்கூடாது என்று அறிக்கை கூறுகிறது. “வங்கிக் கடன்களுக்கான பொறுப்பை எல்லோருக்கும் பொதுவாக்குவது” என்பது எப்பொழுதும் “வலுவான நாடுகளை” கடன்பட்டுள்ள நாடுகளின் “அழுத்தங்களுக்கு” உட்படத்திவிடும். அதுவும் “யூரோப் பகுதியில் கடன்பட்ட நாடுகள் கட்டுமானரீதியாக பெரும்பான்மை” கொண்டிருக்கும் நிலையில். மேலும், அத்தகைய இழப்புக்களை ஏற்றல் என்பது யூரோவிற்கு வலுவும் கொடுக்காது, ஐரோப்பிய ஒற்றுமை என்பதற்கும் வலுக் கொடுக்காது; மாறாக இது “வோல் ஸ்ட்ரீட், சிட்டி ஆப் லண்டன்” ஆகியவற்றிற்குத்தான் உதவும்.

மற்ற பேட்டிகளிலும் கட்டுரைகளிலும், அறிக்கையை முன்னெடுத்த  இருவரான மூனிச் நகரை தளம் கொண்ட Ifo Institute உடைய இயக்குனர் ஹன்ஸ்-வேமர் சின், டோர்ட்முண்ட் நகர புள்ளிவிபர பேராசிரியர்  வால்ட்டர் கிரேமர்  ஆகியோர் இன்னும் கடுமையான தேசியவாதக் குரல்களில் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர். வணிக ஏடான Handelsblatt  இல் வேமர் சின் கடன் பிரச்சினை இருக்கும் நாடுகள் “சூனிய வேட்டையை அமைத்துள்ளனர்” என்றும், “இது நம் பணத்தைப் பெறுவதற்கும், ஜேர்மனி ஏகாதிபத்திய விழைவுகளைக் கொண்டுள்ளது என்ற குற்றத்தைச் சாட்டவும், நமக்கு எதிராக மக்கள் எதிர்ப்பைத் தூண்டுவதற்கும்” நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பழைமைவாத Frankfurther Allgemeine Zeitung பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கூட்டுக் கட்டுரையில் சின்னும் கிரேமரும் மற்றநாடுகளும் ஜேர்மனியை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ”இதன் விளைவு எப்பொழுதும் ஒரே மாதிரிதான். முதலில் அரசியல் தடைகள், நன்னடத்தை விதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம் பணப்பையைத் திறக்க வைக்கப்படுகிறோம். பணப்பை மேசை மீது வைக்கப்பட்டவுடன் அரசியல் தடைகளைக் கைவிடுமாறு நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம்.”

பொருளாதார வல்லுனர்களின் அறிக்கை முன்பு முன்னாள் BD தலைவர் ஹன்ஸ் ஓலாவ் ஹெங்கல் சமூக ஜனநாயக கட்சி (SPD) அரசியல்வாதி திலோ சாரசின், மற்றும் ஆளும் கட்சிகளான CDU, CSU, FDP ஆகியவற்றின் தனிமைப்பட்ட பிரதிநிதிகள் ஆதரவுகொடுத்த நிலைப்பாடுகளை எடுத்துக் கொள்கிறது. இவர்கள் ஜேர்மனியின் சுய நலன்களை மேற்கோளிட்டு கடன் பிரச்சினைகள் உடைய நாடுகளுக்கு நிதிய உதவி அளிப்பதை நிராகரிக்கின்றனர். சிலர் யூரோவைக் கூடக் கைவிட விரும்புகின்றனர். இதுவரை இது சற்றே தனித்தன்மை உடைய தனிநபர்கள் கருத்துக்களாகத்தான் இருந்து வந்தது. இப்பொழுது முதல்தடவையாக நிறைய உயர்கல்விக்கூடத்தினரும் அத்தகைய அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஹெங்கல், சாரசின்னைப் போலவே, பொருளாதார வாதிகள் இங்கள் அறிக்கையை ஜனரஞ்சகவாத கருத்துக்களுடன் பிணைத்துள்ளனர். அவர்கள் அரசாங்கத்திற்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எழுதவில்லை; ஆனால் “அன்புள்ள சக நாட்டு மக்களுக்கு” என எழுதியுள்ளனர். தங்கள் தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்: “நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நம் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் ஆபத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.”

முதலாளித்துவ சொத்துரிமை மற்றும் தடையற்றச் சந்தைக்கு உறுதியான பாதுகாவலர்களாக இருப்பவர்களையும் கையெழுத்திட்ட தொகுப்பு அடக்கியுள்ளபோதும், அவர்கள் வங்கிகளுக்கு எதிரான வார்த்தைஜால சாடல்களைச் செய்துள்ளனர். “கடன்கள் சமூகமயமாக்கப்பட வேண்டும்” என்பதை அவர்கள் நிராகரித்து, “வங்கிகள் தோற்க அனுமதிக்கப்பட வேண்டும்.” திவால்தன்மையின் சுமை கடன் கொடுத்தர்களால் ஏற்கப்பட வேண்டும், “ஏனெனில் அவர்கள்தான் வேண்டுமென்றே முதலீட்டு அபாயத்தை எடுத்துக் கொண்டனர். அவர்களிடம்தான் தேவையான சொத்துக்கள் உள்ளன.”

பொருளாதார வல்லுனர்களின் அறிக்கை, அரசாங்கம், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்து மட்டுமல்லாது, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் ஆகியோரால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. அவர்கள் சான்ஸ்லர் மேர்க்கெலின் போக்கிற்கு ஆதரவாக நிற்கின்றதுடன், பிணையெடுப்பு நிதிகளுக்கு ஆதரவுகொடுத்து, ஒரு வங்கிகள் ஒன்றியம் மற்றும் இதே போன்ற யூரோவைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறார். ஆனால் அவை தொழிலாள வர்க்கம் அதற்கான செலவினை ஏற்கும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்கும் சூழலில் செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.

இதை இயற்றியவர்களை ஐரோப்பிய உச்சிமாநாட்டு முடிவுகளைச் சரியாக வாசிக்கவில்லை என்று மேர்க்கெல் குற்றம் சாட்டியுள்ளார்.  இக்கூற்றை அவர்கள் சீற்றத்துடன் FAZ பத்திரிகை வெளியிட்ட கூட்டுக் கட்டுரையில் நிராகரித்துள்ளனர். நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள குறைகூறலைப் “பொறுப்பற்றது” என்று விவரித்து, கையெழுத்திட்டுள்ளவர்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். CDU பொதுச் செயலாளர் ஹெர்மன் குரோஹ “அச்சத்தைத் தூண்டிவிடுபவர்கள்” எனக் கூறி, “இந்த அறிக்கை அச்சங்களைத்தான் தூண்டுகிறது, பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு வழியைகூட  கொடுக்கவில்லை” என்ற புகாரையும் எழுப்பியுள்ளார்.

முதலாளிகள் சங்கத்தின் தலைவரான டீட்டர் ஹுண்ட் Handelsblatt பத்திரிகையிடம் “தான் எப்படி சான்ஸ்லர் தன்னுடைய நிலைப்பாடுகள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தி வெற்றி காண்கிறார் என்பது குறித்து வியப்பதாகவும்”, அவருக்குப் “பெரும் மரியாதையை” அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அதே தாளில், BMW உடைய தலைமை நிர்வாகி நோர்பெர்ட் ரைட்ஹோவர் ஐரோப்பிய உச்சிமாநாட்டு முடிவுகள் “தீர்வின் ஒரு பகுதிதான்” என்று கூறினார்.

தொழிற்சங்கங்களுக்கு நெருக்கமாக இருக்கும் பொருளாதார வல்லுனர் பீட்டர் போபிங்கர், Spiegel Online இடம் இந்த அறிக்கை “ஜேர்மனியப் பொருளாதார அறிவியல் குறித்த வெளித்தோற்றத்திற்கு சேதம் விளைவித்துள்ளது” என்றார். Institute of Economic Research என்னும் வணிகச் சார்புடையமைப்பு அறிக்கையை “முழுப் பிரச்சாரம்” என விவரித்துள்ளது. Institute for Macroeconomic and Economic Research உடைய இயக்குனர் இது “தேசியவாத சாயம்பூசிய ஜனரஞ்சகவாதம்” என்றார்.

பேர்லின் பேராசிரியர் பிராங் ஹைனமான் ஐ சுற்றியுள்ள பொருளாதார வல்லுனர்கள் குழு ஒன்று  எதிர் அழைப்பீடு ஒன்றை வெளியிட்டு, வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் முடிவுகளை வரவேற்று, வங்கிகள் ஒன்றியத்திற்கான திட்டத்தையும் வரவேற்றுள்ளது. இதில் இப்பொழுது 150 பொருளாதார வல்லுனர்கள் உள்ளனர். அதில் 9 பேராசிரியர்களாவது அறிக்கைகள் மற்றொன்றிற்கு முரணானதாக இருந்தாலும் இரு அறிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

சின் மற்றும் கிரேமர் வெளியிட்டுள்ள அறிக்கை சமரசத்திற்கு இடமின்றி ஒன்றிற்கு ஒன்று எதிராக இருப்பதுபோல் தோன்றும் கிறிஸ்துவ ஜனநாயக வலதுசாரிகளிடமும் இடது கட்சியினரிடம் இருந்தும் ஆதரவை பெற்றுள்ளது. 

CSU வின் பொதுச் செயலாளர் அலெக்சாந்தர் டோபிரிண்ட் அறிக்கையை “உச்சிமாடு குறித்த எச்சரிக்கை நிறைந்த பங்களிப்பு எனவும் மாநாட்டு தீர்மானங்களை தவறான திசையில் அர்த்தப்படுத்தப்பட கூடாது” என்று பாராட்டியுள்ளார்.  இடது கட்சியின் துணைத் தலைவர் ஸாரா வாஹென்கிநெக்ட் இதை வரவேற்று, “அவர்கள் எங்கு சரியாக இருக்க வேண்டுமோ, அங்கு சரியாக உள்ளனர்” எனக்கூறியுள்ளார்.

வாஹென்கிநெக்ட் பொருளாதார வல்லுனர்களின் அறிக்கைக்குக் கொடுத்துள்ள ஆதரவு இடது கட்சியின் தன்மை பற்றி நிறையக் கூறுகிறது. அதேபோல் வாஹென்கிநெக்ட் மற்றும் ஒஸ்கார் லாபொன்டைன் ஆகியோரை சுற்றியுள்ள “இடது” என அழைக்கப்படுபவர்களைப் பற்றியும் நிறையக் கூறுகிறது. இவர்களிடையே தனிப்பட்ட உறவும் உண்டு.

பொதுவாக வாஹென்கிநெக்ட் அரசாங்கம், வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்துக் கடுமையான குறைகூறுபவர்போல்தான் செயல்படுவார். ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய நிதிய உடன்பாடு பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் அவர் மேர்க்கெல் அரசாங்கத்தை வங்கிகளின் கைப்பாவை என அழைத்தார். குடிமக்களை மிரட்டுகிறது, “அதையொட்டி பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களைக் பாதுகாக்க முற்படுகிறது, நிதியச் சூதாட்டம் தொடர உதவுகிறது” என்று அதன்மீது குற்றம் சாட்டினார். மேர்க்கெலின் ஐரோப்பா “ஜனநாயகம், சமூகநீதி இவற்றை அழிப்பதற்கான திட்டம், தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றும் திட்டம், ஊதியங்கள், ஒய்வூதியங்களைக் குறைக்கும் திட்டம், Deutsche Bank, Goldman Sachs, Morgan Stanley ஆகியோர் ஐரோப்பாவில் வரிசெலுத்துபவர்களைக் கொள்ளையடிக்கும் திட்டம்” என்றார்.

ஆனால் வாஹென்கிநெக்ட் அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடது, வலது இவை காட்டும் எதிர்ப்பிற்கு இடையே வேறுபாட்டைக் காட்டவில்லை. இன்னும் துல்லியமாக: அவருடைய முதலாளித்துவ எதிர்ப்பு வார்த்தைஜாலங்கள் இருந்தபோதிலும் கூட, அவர் வலதுசாரி அரசாங்கங்களுடன் சேருகிறார். அவர்களோ மேர்க்கெலின் ஐரோப்பியப் போக்கை மிகைப்படுத்தப்பட்ட ஜேர்மனிய தேசியவாதத்தின் பெயரில் எதிர்க்கின்றனர்.

பொருளாதார வல்லுனர்களின் அறிக்கையுடைய ஆசிரியர் ஹன்ஸ்-வேமர் சின் இடம் வாஹென்கிநெக்ட் கொண்டுள்ள நெருக்கம் ஒன்றும் புதிதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Die Zeit  இருவருடனும் ஒரு கூட்டு நேர்காணலை நடத்தியது. செப்டம்பர் 2010ல் சின் ப்ராங்பேர்ட் நகரில் வாஹென்கிநெக்ட் உடன் ஒரு மேடை விவாதம் ஒன்றில் இடது கட்சியின் விருந்தாளியாக தோன்றினார்.

பல கருத்து வேறுபாடுகளையும் மீறி இருவரையும் இணைப்பது ஆர்டோ தாராளவாதம் (ordo-liberalism- இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னரான சமூக சந்தைப் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக இருந்தது.) என அழைக்கப்படும் வால்ட்டர் ஒய்க்கன், அல்பிரட் முல்லர்-ஆர்மாக் ஆகியோரின் பொருளாதாரப் படிப்பினைகள்தான். இவற்றின் அடிப்படையில்தான் போருக்குப் பிந்தைய சான்ஸ்லர்களான கொன்ராட் அடிநவர் மற்றும் லுட்விக் ஏர்ஹர்ட் (இருவருமே CDU), தங்கள் கொள்கைகளைத் தளம் கொண்டிருந்தனர். இந்த குறிப்பிடத்தக்க ஜேர்மனிய வகைத் தாராளவாதம் தடையற்ற சந்தையை ஒரு வலுவான அரசுடன் பிணைக்கிறது. இந்த அரசு சந்தைக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகின்றது.

அவருடைய 2011ல் வெளியிடப்பட்ட புத்தகமான முதலாளித்துவத்திற்கு பதிலாக சுதந்திரம் (Freedom Instead of Capitalism) என்பதில் வாஹென்கிநெக்ட் தான் முன்பு பெயரளவிற்கு மார்க்ஸிற்குக் காட்டிய உதட்டளவு மரியாதையையும் கைவிட்டு, வெளிப்படையாக லுட்விக் ஏர்ஹர்டிற்கு ஆதரவைக் காட்டியிருந்தார். “ஒருவர் முதல் உண்மையான சந்தைப் பொருளாதாரக் கருத்தாய்வை நினைத்தால், அதன் இறுதி வரை சிந்திக்கவேண்டும்”, “அது நேரடியாகச் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அவர் எழுதினார். (See: “‘Left’ figurehead of German Left Party praises meritocracy and the market”). இது அவருக்கு வலதுசாரி முதலாளித்துவ முகாமில் பல ஆதரவாளர்களைக் கொடுத்தது.

மிக இகழ்வுற்ற வலதிற்கும் வலதான CSU வில் வலதுசாரி தனித்தன்மை உடையவர் எனக் கருதப்படும் பீட்டர் கௌவைலர் இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பிற்கு Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு பாராட்டு விமர்சனத்தை சமீபத்தில் கொடுத்துள்ளார். அதில் “இந்தப் புத்தகத்தின் மிகப் பரபரப்பான கூறுபாடு ஜேர்மனியில் அனைத்து இடதுகளுக்கும் பல தசாப்தங்கள் இது முற்றிலும் தேவையான ஒன்றாக இருந்த  முன்னாள் ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் எதிர்மறையான பார்வையுடனான கம்யூனிஸ்ட் அரங்கின் முன்னாள் தலைவரின் தீவிரமான முறிவாகும்.”

இந்த ஆண்டு மே மாதம் கௌவைலர் இப்புத்தகம் பேர்லின் Kulturbrauerei இல் வெளியிட்டுவைத்தபோது வாஹென்கிநெக்ட்டுடன் ஒன்றாகத் தோன்றினார். மேடையில் இருந்த மூன்றாம் நபரான FAZ வெளியீட்டாளர் பிராங்க் ஷியர்மாஹெர் ஆவார். அவர் முன்பு இந்நூலை கன்சர்வேடிவ் ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் முக்கிய பதிப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார். FAZ ஐப் படிக்கும் சிறு வணிகர்கள் அதற்கு ஆர்வத்துடன் வரவேற்பளித்தனர் என்று வாஹென்கிநெக்ட்டிடம் ஷியர்மாஹெர் உறுதியளித்தார்.

பொருளாதார வல்லுனர்களின் அறிக்கையும், அதைச்சுற்றி வந்துள்ள கருத்து வேறுபாடுகளும் ஜேர்மனியில் இருக்கும் ஆழ்ந்த அரசியல் மாற்றங்களின் அடையாளம் ஆகும். மேர்க்கெல் அரசாங்கம் ஐரோப்பாவின் சமூக எதிர்ப்புரட்சியை “யூரோவைக் காப்பாற்றுதல்” என்ற பெயரில் முன்னேற்றுகிறது. அவருடைய வலதுசாரிக் குறைகூறுபவர்கள் மிகவும் அண்மித்துவரும் யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தோற்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கான ஒரு கொள்கைகளை வளர்க்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே கூட்டாட்சி ஜேர்மனியின் அரசியல் மேற்கு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்பதற்கு அது கொண்டுள்ள நோக்குநிலையினால் குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது. இது ஜேர்மனியப் பொருளாதாரத்தை இராணுவ வன்முறைப் பயன்பாடு இல்லாமல் சர்வதேச அரங்கில் பெருமித நிலையை மீட்க உதவியது. உள்நாட்டின் சமூக அமைதியைத் தக்க வைத்துக்கொள்ள உதவியது. இந்த வடிவமைப்பு முறிந்தால், வன்முறைச் சமூக எழுச்சிகளும், தேசியவாதம், இராணுவவாதம் ஆகியவற்றின் எழுச்சியும் தவிர்க்க முடியாத விளைவு ஆகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில், இடது கட்சி தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றி, நசுக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். இது கொள்கையற்ற தேசியவாதத்தை ஒரு வலுவான அரசுக்கான அழைப்புடன் இணைக்கின்றது. வாஹென்கிநெக்ட் தன்னுடைய முந்தைய ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனிபால் கொண்டிருந்த ஆர்வத்திற்குப் பதிலாக கூட்டாட்சியின் குடியரசின் முதலாளித்துவத்திற்கு ஆதரவைக் கொடுக்கிறார். மேலும், இடது கட்சியில் லாபொன்டைன்-வாஹென்கிநெக்ட் பிரிவு தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மிக நெருக்கமான பிணைப்புக்களைத் கொண்டுள்ளது. நெருக்கடிக்காலத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவம் எப்பொழுதும் தேசியவாதத்தின் ஊற்றாகவே  இருந்துவந்துள்ளது.

மேர்க்கெல் அரசாங்கத்திற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான இடது சாரி, சோசலிச எதிர்ப்பு என்பது இடது கட்சியின் அரசியலுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். அத்தகைய எதிர்ப்பு முற்றிலும் சர்வதேசியவாதத்தையும், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகவே இருக்கும். இது ஐரோப்பிய தொழிலாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்கு எதிராக ஒன்றுபடுத்தி, தொழிற்சங்க, அரசியல்வாதிகளின் கைக்கூலிகளில் இருந்து முறித்துவிடும். அது பெருநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்ய போராடுவதுடன், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்குப் பதிலாக திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவும். அது தனியார் இலாப நலன்கள், முதலாளிகளின் இலாப நலன்கள் என்று இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு சேவைசெய்யும். அது தொழிலாளர்களுடைய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதைநோக்கமாகக் கொண்டிருக்கும்.