சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to contest provincial council election

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
24 July 2012

use this version to print | Send feedback

சோசலிச
சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செப்டெம்பர் 8 அன்று நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. தேர்தல் சட்டத்தின் தொந்தரவுமிக்க நிபந்தனைகளின்படி, அரசியல் குழு உறுப்பினர் ஏ.ஆர். தவுலகல தலைமையில் சோ... சமர்ப்பித்த 21 வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார்.

தென் மேற்கில் அமைந்துள்ள சபரகமுவ மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றான கேகாலை, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களும் கலந்து வாழும், சுமார் 650,000 சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு கணிசமானளவு அரசாங்க ஊழியர்கள், அதே போல் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளும் வாழ்கின்றனர். உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, 18.4 சதவீதமான குடும்பங்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது விரிவான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, எதேச்சதிகாரமான முறையில் கிழக்கு, வட மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சபைகளை ஒரு ஆண்டுக்கு முன்னரே கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்புவிட்டுள்ளார். இதற்கு உத்தியோகபூர்வ விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்கனவே மூன்று சபைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவரான, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ஷ, டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த போது இதற்கான காரணத்தை சமிக்ஞை செய்தார்: "நாங்கள் அவ்வப்போது மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள வேண்டும்," என்றார். அரசாங்கம் எவ்வழியிலேனும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று, சுகாதாரம் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகளையும் விலை மானியங்களையும் வெட்டிக் குறைக்க சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டத்துக்கு வெகுஜன ஆதரவு இருப்பதாக கூறிக்கொள்வதற்கு இந்தத் தேர்தல் வெற்றிகளைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளது

உண்மையில், அரசாங்கத்துக்கும் அதன் கொள்கைகளுக்கும் விரோதமாக உழைக்கும் மக்களின் எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது. தமது வாழ்க்கை தரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், வேலையில்லா இளைஞர்கள் அல்லது மாணவர்கள் நாட்டின் சில பகுதிகளில் வீதிப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரு நாள் இருப்பதே அரிது. எரிபொருள் மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களின் பெரும் விலை அதிகரிப்பு, வாழ்க்கையை மேலும் மேலும் கடினமாக்குகின்றது.

தீவின் உள்நாட்டு போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், சமாதானம் மற்றும் சுபீட்சம் என்ற இராஜபக்ஷவின் வாக்குறுதிகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அனைத்துலக அளவிலும் சர்வதேச நிதி மூலதனம் கோரும் அதே கொடூரமான சிக்கன திட்டத்தினை அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இனவாத யுத்தத்துக்கு செலவிடுவதற்காக பெரும் கடன்களை வாங்கிக் குவித்த இராஜபக்ஷ, இப்போது ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகின் மீது சுமத்தி வருகின்றார்.

அரசாங்கத்தால் அதன் சிக்கன திட்டத்தை ஜனநாயக முறையில் செயல்படுத்த முடியாது. தொழிலாளர்கள் தமது ஊதியம், வேலை மற்றும் வாழ்க்கை தரங்களை காக்க முயற்சிக்கின்ற நிலையில், தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரம் தொழிலாளர்கள் மீது திருப்பப்பட்டு வருகின்றது. பெப்ரவரியில், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம், வேலை நிறுத்தம் செய்த சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும் பொலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

முந்தைய தேர்தல்களில் போலவே, சந்தேகமின்றி இராஜபக்ஷவும் அவரது ஆட்சிக் குழுவினரும், தமது வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தவும், வாக்குகளை வாங்கவும் மற்றும் எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவும் அரச வளங்களை பயன்படுத்துவர். தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான கபே (CAFFE) மற்றும் பெபரல் (PAFFREL) இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சான்றளித்துள்ளன.

பிரதான எதிர் கட்சிகள் முற்போக்கான மாற்றீடு எதனையும் வழங்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஆகியவை, புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், அதன் யுத்தக் குற்றங்களையும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதையும் நியாயப்படுத்தின. அவை உழைக்கும் மக்களுக்காக பேசுவதாக கூறிக்கொண்ட போதிலும், அதிகாரத்தில் இருந்த போது இரு கட்சிகளும் பெரும் நிறுவன கும்பல்கள் கோரிய சந்தை-சார்பு நிகழ்ச்சி திட்டத்தையே அமுல்படுத்தின.

யூ.என்.பீ.யும் ஜே.வி.பீ.யும், அரசாங்கம் முறையற்று மாகாணசபை தேர்தலை நடத்துவதாக கண்டனம் செய்து அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளை விமர்சித்த போதிலும், அது அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் அடிப்படையில் முரண்படவில்லை என்ற உண்மையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு மட்டுமே ஆகும். 1978 மற்றும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த போது, யூ.என்.பி. உள்நாட்டு யுத்தத்தை முடுக்கி விட்டு, சந்தை சார்பு மறுசீரமைப்பையும் தொடங்கி வைத்ததுடன், ஜனநாயக உரிமைகளை மீறுவதிலும் அது இழிபுகழ்பெற்ற கட்சியாகும்.

மத்தியதர வர்க்கத்தினரதும் நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி தீவிரவாத அமைப்புக்களதும் ஆதரவின் காரணமாகவே, யூ.என்.பீ. மற்றும் ஜே.வி.பீ.யால் தம்மை ஜனநாயகவாதிகளாகவும் உழைக்கும் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்ள முடிகின்றது. நவசமசமாஜ கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும்  வலதுசாரி முதலாளித்துவ கட்சியான யூ.என்.பீ.க்கு முற்போக்கு நம்பகத் தன்மையை வழங்கும் முயற்சியில் அதன் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் இணைந்துகொண்டன.

யூ.என்.பி., நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் புலிகளின் முன்னாள் பாராளுமன்ற ஊதுகுழலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்த கூட்டு எதிர்க்கட்சி என்று அழைக்கப்படுவது, வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என இராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய ஒரு தேர்தல், வடக்கில் அடக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்துவதற்கு இராஜபக்ஷவை நெருக்கும், என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையிலான அந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

சோசலிச சமத்துவ கட்சி இந்த தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி ஆகும். கேகாலை மாவட்டம் ஒருபுறம் இருக்க, உழைக்கும் மக்களின் எரியும் சமூகத் தேவைகளுக்கு இலங்கை எல்லைகளுக்குள் தீர்வே கிடையாது. உலக முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் நெருக்கடி 1930 களின் பெருமந்த நிலையின் பின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடியாகும். இது புதிய போர்கள், வெகுஜன வேலையின்மை மற்றும் வறுமையை உருவாக்குவதோடு ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரமடையச் செய்துள்ளது. உலகரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதன் பேரில் இலாப முறைமையை தூக்கி வீசுவதற்கான ஒரு கூட்டுத் தாக்குதலுக்காக சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் அதன் அடிப்படை உரிமைகளை காக்க முடியும்.

சகலவிதமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் எதிர்ப்பதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஸ்தாபிக்க முடியும். தமிழர்களுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்தை எதிர்ப்பதிலும் அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதிலும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செய்துள்ள நீண்ட சாதனையின் முக்கியத்துவம் இதுவேயாகும். தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி ஒன்று சேர்க்கவும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்களை அணிதிரட்டவும் சோ.ச.க. போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களுக்காக அன்றி, பெரும்பாலானவர்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, சமுதாயத்தை உச்சி முதல் அடி வரை மறு ஒழுங்கு செய்யும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் போராட்டங்களில் தலையீடு செய்வர். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமானது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதற்கான போராட்டத்துடன் முழுமையாக பிணைந்துள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அதன் சகோதர கட்சிகளுடன் இணைந்து சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கை அபிவிருத்தி செய்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எங்களது தேர்தல் பிரச்சாரத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவு தருமாறும், எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் புரட்சிகர கட்சியில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றது.