சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Plantation workers oppose tea factory closure

இலங்கை: தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்க்கின்றனர்

By M. Vasanthan
8 June 2012

use this version to print | Send feedback

இலங்கை மத்திய தேயிலை தோட்டப் பகுதி நகரான நுவரெலியாவுக்கு அருகில் உள்ள பார்க் தோட்டத்தில், சுமார் 850 தொழிலாளர்கள் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி மே 28 அன்று தொடங்கிய வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். கொதிகலனை பழுதுபார்க்க வேண்டும் என கூறியே தோட்ட நிர்வாகம் ஜனவரி ஆரம்பத்தில் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தியது.நிர்வாகம் தொழிற்சாலையை முழுமையாக மூடி, தமது தொழில்களை அழிப்பதோடு அந்த வளாகத்தை ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்ட விரும்புகிறது என தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த தோட்டம் உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டத்தின் பகுதியாக இருப்பதோடு, பிஃன்லேஸ் என்ற பல் தேசியக் கம்பனிக்குச் சொந்தமானதாகும். இந்தக் கம்பனி இலங்கையில்
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்களையும், அதே போல் மர தோட்டங்களையும் கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை மூடப்படுவதற்கு எதிராக அல்லது தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியமையால், பார்க் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் செயற்பட்ட தொழிலாளர்கள், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் தொழிற்சங்கம் எதிர்க்கும் என்று தெரிந்துகொண்டு, தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்காமல் இருக்க முடிவு செய்தனர்.

முன்னூகித்தவாறே செல்வாக்கான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) எதிர்ப்புக்கு ஆதரவளிக்க மறுத்ததுடன் முன்கூட்டியே தங்களுக்கு அறிவிக்கவில்லை என தொழிலாளர்களை விமர்சித்தது. ஒரு அரசியல் கட்சியாகவும் இயங்கும் இ.தொ.கா., ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு அமைச்சரவை அமைச்சருமாவார். உற்பத்தி இலக்கு அதிகரிப்புக்கு எதிராக பல தேயிலை தோட்டங்களில் அண்மையில் வெடித்த வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிற்சங்க நடவடிக்கைகளை இ.தொ.கா. தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

மற்றொரு அரசாங்கப் பங்காளியான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), இலங்கை தொழிலாளர் முன்னணி (CWA) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பாட்டிலான இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) பார்க் தோட்டத் தொழிலாளர்களை ஆதரிப்பதாக பாசாங்கு செய்கின்றன. இந்த அமைப்புக்கள் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தலையீடு செய்யுமாறு கம்பனிக்கும் அரசாங்கத்திற்கும் பயனற்ற வேண்டுகோள் விடுக்கும் மட்டத்திற்கு இந்த எதிர்ப்பை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

தோட்ட நிர்வாகம் மற்றும் ம.ம.மு., CWA, LJEWU ஆகியவற்றுக்கிடையே நுவரெலியாவில் உள்ள அரசாங்க உதவி தொழில் ஆணையரால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் ஒன்று ஜூன் 1 அன்று நடந்தது. நிர்வாகம் ஒரேயடியாக தொழிற்சாலையை திறக்க மறுத்த போது, தொழிற்சங்கங்கள் வெறுமனே கம்பனியுடனும் தொழில் ஆணையருடனும் மேலதிக கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுத்தன.

ஜூன் 2 அன்று, தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து, அந்த அறுவடையை தொழிற்சாலைக்கு கொண்டுவந்து, தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும் என கோரி அங்கு உள்ளமர்ந்தனர். நிர்வாகம் உடனடியாக பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டவுடன் டசின் கணக்கான அதிகாரிகள் நுவரெலியா மற்றும் கந்தபளை பொலிஸ் நிலையங்களில் இருந்து அணிதிரண்டு வந்தனர். தொழிற்சாலை நிறுவனத்தின் சொத்து என்று அறிவித்த ஒரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரி, தொழிலாளர்களை வெளியேற்றினார்.

பொலிஸ் இப்போது தொழிற்சாலையை பாதுகாக்கும் அதே வேளை, தோட்டத் தொழிலாளர்கள் தமது எதிர்ப்பைத் தொடர்கின்றனர். சமீபத்தில், நிர்வாகம் தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை கொண்டு செல்ல பயன்படுத்தக் கூடும் என சந்தேகித்ததால் அவர்கள் ஒரு கொள்கலனை திருப்பி அனுப்பிவிட்டனர்.

ஒரு பெண் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறியதாவது: "தொழிற்சாலை மூடப்படுவதற்கு முன் இருந்தே நான் அதில் வேலை செய்கின்றேன். கொதிகலன் செயற்பட்டதோடு அதற்கு விறகு அல்லது மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. அது நல்ல நிலையில் இருந்தது. ஆனால் கொதிகலனை திருத்த வேண்டியிருப்பதால் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று நிர்வாகம் எங்களிடம் கூறியது. இது ஒரு முழு பொய். எழுபது தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் வேலை செய்தனர்."

தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டதுடன் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகள் மற்றொரு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பார்க் தோட்டத்தின் மற்றொரு பிரிவு மூடப்பட்டு, தோட்டத்தின் சுமார் 50 ஹெக்டேர்கள் காய்கறி உற்பத்திக்காக ஒரு வியாபாரிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

பார்க் தோட்டத்தில் புதிய வேலை முறைகளும் குறைந்த ஊதிய மட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது என அதே தொழிலாளி விளக்கினார். "நிர்வாகம் புதிய தொழிலாளர்களை பதிவு செய்வதில்லை, அநேகமானவர்கள் உற்பத்தி இலக்கின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு கிலோகிராம் கொழுந்து பறித்தால் அவர்களுக்கு 17 ரூபாய் மட்டுமே கிடைக்கும்," என்று அவர் கூறினார்

அதாவது ஒரு நாளுக்கு தொழிலாளர்கள் 20 கிலோகிராம் பறித்தால் இது கடினமான வேலை- அவர்களுக்கு 340 ரூபாய், அல்லது சுமார் 2.50 அமெரிக்க டொலர் மட்டுமே கிடைக்கும். இது சமீபத்திய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு தோட்ட தொழிலாளியின் கொடுப்பனவுகள் அனைத்தும் உள்ளடக்கிய நாள் சம்பளத்தை விட 175 ரூபாய் குறைவாகும்.

"நாளுக்கு நாள் நிறுவனம் எமது உரிமைகளை பறித்து வருகின்றது. நாம் இந்த தொழிற்சாலையை மூட அனுமதிக்க முடியாது, " என ஒரு தொழிலாளி கூறினார்.

தொழிற்சாலை முதலில் 1931ல் நிறுவப்பட்டு பின்னர் நவீனமாக்கப்பட்டதுடன் பல முறை புதுப்பிக்கப்பட்டது. 2005ல் இதற்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டது, என்று மற்றொரு தொழிலாளி WSWS நிருபர்களிடம் கூறினார்.

"தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய நிறையவே செய்துள்ளனர். 1985ல் நிர்வாகம் தொழிற்சாலையை மூட முயற்சித்த போதிலும் நாம் அதை எதிர்த்து நிறுத்தினோம். இந்த ஆண்டு ஜனவரி 17 அன்றும் நாம் வேலைநிறுத்தம் செய்தோம். ஆனால் இப்போது தொழிற்சாலை ஒரு ஆடம்பர ஹோட்டலாக மாற்றப்படவுள்ளதாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்," என்று அவர் விளக்கினார்.

முதலில் தோட்டத் தொழிற்சாலை பழுதுபார்க்க மூடப்படுகிறது என்று கூறிய முகாமையாளர்கள், இப்போது பாடலை மாற்றிப் பாடத் தொடங்கியுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சியின் காரணமாக தோட்டம் இப்போது நட்டத்தில் இயங்குகிறது அதனால் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று இப்போது கம்பனி கூறுகின்றது.

தொழிற்சங்கங்கள் "பயனற்றவை", மற்றும் அதன் அதிகாரிகள் தங்கள் வாக்குகளை பாதுகாக்க தேர்தல் காலத்தில் மட்டுமே தொழிலாளர்களை சென்று பார்ப்பார்கள் என்று ஒரு தொழிலாளி கூறினார். "நாங்கள் உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய 14 தோட்டங்களின் தொழிலாளர்களின் ஆதரவுடன் இந்த போராட்டத்தை தொடருவோம்," என்று அவர் கூறினார்.

பிஃனால்ஸ் வலைத் தளம், நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான "சமூகப் பொறுப்பை" ஏற்றுக்கொள்ளும் என்று கூறுகின்றது. ஆனால் நிர்வாகம் உள்ளூர் வைத்தியசாலையில் உள்ள மகப்பேற்றுப் பிரிவை மூடிவிட்டதுடன், போதுமான மருந்துகள் அங்கு இல்லை என்று தொழிலாளர்கள் நமது நிருபர்களிடம் கூறினர். ஊழியர்கள் முன்பு வைத்தியசாலையில் இருந்து இலவச கருத்தடை மருந்துகளை பெற்றனர். ஆனால் இப்போது 250 ரூபாய் செலுத்த வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் வீட்டு வசதி கூட கிடையாது. கடந்த ஆண்டு தோட்டத்தின் கந்தபளை பிரிவின் பல லயன் [வரிசை] அறைகளை தீ விழுங்கியது. தப்பி பிழைத்தவர்கள் இன்னமும் தோட்ட பாடசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

2010ல், பிஃனால் தேயிலை தோட்டத்தின் இலாபம் 352 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் உற்பத்தி 22 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலாபங்கள் வீழச்சியடைந்த நிலையில், பிஃனால் தலைமை நிர்வாகி தயான் மெதிவெல மே 22 அன்று ஊடகங்களுக்கு பேசும் போது, நிறுவனம் மேலும் உற்பத்தியை அதிகரிக்கும் என்று தெரிவித்ததுடன், அதன் இலாபத்தை அதிகரிக்க தேயிலை பறிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி பன்முகத்தன்மை பற்றியும் குறிப்பிட்டார்.


பார்க் தோட்டத் தொழிற்சாலை மூடலானது இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தமது தொழிலாளர் படை மீது தேயிலை கம்பனிகள் தற்போது மேற்கொண்டுவரும் பரந்த தாக்குல்களின் பாகமாகும்.

 
ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கின்றார்:

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தியது

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரி