சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Indian Stalinists line up with national bourgeoisie on Sri Lanka’s Tamil issue

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்து நிற்கின்றனர்

By V. Sivagnanan
10 May 2012

use this version to print | Send feedback

இலங்கை தமிழ் சிறுபான்மையினர் பிரச்சினையிலும், மற்ற பிரச்சினைகளைப் போலவே, இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளின் நிலைப்பாடு, இந்திய முதலாளித்துவத்தின் தேசிய நலன்களை பாதுகாப்பதைத்தான் அடித்தளமாக கொண்டுள்ளது. இந்த முக்கியமான அரசியல் பிரச்சினையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)  இரண்டும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் புது டெல்லியில் உள்ள வகுப்புவாதக் கட்சிகளுடன்தான் இணைந்து நிற்கின்றன.

ஏப்ரல் ஆரம்பத்தில் கோழிக்கோட்டில் நடந்த CPM இன் 20வது தேசிய காங்கிரஸில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய தீர்மானம், தமிழ் பேசும் பகுதிகளுக்கு தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த அரசியல் தீர்விற்கு அழைப்பு விடுகிறது. அதாவது தீவின் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உயரடுக்குகளுக்கிடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டிற்கு அழைப்புவிட்டது

தமிழ் மக்கள் முழுமையாக மறுவாழ்வு, மறுகுடியேற்றம் பெறுவதற்குத் தேவையான அனைத்து அரசியல், இராஜதந்திர முயற்சிகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் CPM தீர்மானம் வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்தும் அதற்கு பொறுப்பேற்பது குறித்தும் கொழும்பு ஒரு சுயாதீன, நம்பகத் தன்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய உயரடுக்கு மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளின் உளுத்துப்போன வார்த்தைப்பிரயோகமான அரசியல் தீர்வு என்பது தீவின் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இந்திய ஆளும் உயரடுக்கு கொழும்பின் ஆளும்தட்டுடன் ஒருங்கிணைந்து செயற்படும் இலங்கை தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை பயன்படுத்தி இலங்கை விவகாரங்களில் அதன் அரசியல் செல்வாக்கை அதிகரித்திக் கொள்ள முயல்கிறது. அதே நேரத்தில், இலங்கையில் உள்ள அவர்களின் இனவழித் தொடர்புடைய தமிழர்களின் நிலை குறித்து கவலை கொண்டிருக்கும் சாதாரண தமிழ்நாட்டு மக்களின் சீற்றத்தைத் திசை திருப்பவும் முயல்கிறது.

இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியேற்றம் தேவை என்று CPM அழைப்புக் கொடுத்துள்ளதுடன்,மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை தேவை எனக் கூறுவது இலங்கைத் தமிழர்களுக்கு பரிவுணர்வு காட்டுவதற்காக அல்ல. புது டெல்லி மனித உரிமைகள் பிரச்சினையை ஒரு கருவியாக பயன்படுத்தி இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று CPM விரும்புகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து அமெரிக்கா  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு (UNHRC)  ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் முன்வைத்தபோது, CPM, CPI இனது நிலைப்பாடுகள் தெளிவாக வெளிப்பட்டன. CPI நேரடியாக தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தபோது, CPM  கொடுத்த ஆதரவு சுற்றிவளைத்துத்தான் வந்தது. ஆனால் அவற்றின் நிலைப்பாடுகள் இந்திய முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டைத்தான் முக்கியமாக ஒத்திருந்தன.

அதன் சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) முன்வைத்த குறைந்தபட்ச திட்டங்களையாவது கொழும்பு செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இறுதித் தாக்குதலின்போது அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களை மூடிமறைப்பு செய்வதற்காக இராஜபக்ஷ இக்குழுவை நியமித்திருந்தார்.

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் அழுத்தங்களை திசைதிருப்புவதற்காக டெல்லி இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தியாவின் மூலோபாய, பொருளாதார நலன்களுக்குச் சீனா இலங்கையில் கொண்டிருக்கும் பெருகிய செல்வாக்கு ஓர் ஆபத்து என்ற செய்தியையும் கொழும்புக்கு அனுப்பியது. சீனாவுடன் ஆக்கிரோஷக் கொள்கையை தொடரும் வாஷிங்டன் இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங்கிடம் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

மார்ச் 30ம் திகதி முடிவுற்ற CPI காங்கிரஸ், UNHRC யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பாராட்டி, அது இலங்கை மனிதாபிமான நடவடிக்கைகள் எடுக்கவும் போர்க்குற்றங்களைப் பற்றி விசாரணை நடத்தவும் மற்றும் ஓர் அரசியல் தீர்வு காண இலங்கையை வலியுறுத்த இந்தியாவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது எனக் கூறியது. அமெரிக்கத் தீர்மானம் இவற்றுள் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்கள் முற்றிலும் ஒருங்கிணைந்திராவிட்டாலும்கூட அவற்றை பாதுகாப்பதற்கே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

CPM காங்கிரஸ் தீர்மானமோ, இலங்கை குறித்து மார்ச் 13ம் திகதி UNHRC வாக்கெடுப்பிற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையோ, அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. இது, அதன் போலித்தனமான அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்குத்தான்.

CPI, CPM இரண்டுமே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தமிழ்நாட்டின் ஆளும் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் மறுமலரச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) ஆகியவற்றுடன் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அவற்றின் வகுப்புவாதப் பிரச்சாரத்துடன் இணைந்து வெட்கங்கெட்டுச் செயல்படுகின்றன.

மார்ச் 13ம் திகதி, CPM, CPI உட்பட இக்கட்சிகள் அனைத்தும் இந்தியப் பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானத்திற்கு புதுடெல்லி ஆதரவு கொடுக்க வேண்டும் எனக் கோரி, பாராளுமன்ற செயற்பாடுகளை முடக்கின. இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தன் அரசாங்கம் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கும் என அறிவிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளிய பல காரணங்களில் இந்த அழுத்தங்களும் ஒன்றாகும்.

மற்றைய முக்கிய சக்திகளைப் போலவே இந்தியாவும் இராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்து, இராணுவ உதவி, தளவாடங்கள் உதவி ஆகியவற்றையும் கொடுத்தது. இராணுவத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், நூறாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதியுற்று, மருத்துவ உதவி கிடைக்காமல் துன்பப்பட்டது ஆகியவை குறித்து இந்தியா கண்களை மூடிக்கொண்டிருந்தது.

யுத்தத்தினுள் அகப்பட்டுக்கொண்ட தமிழ் மக்களின் நிலைமை குறித்து போலித்தனமாக கவலையை வெளிப்படுத்தியபோதும் CPM, CPI இரண்டுமே இந்த மிருகத்தனத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்திருந்தன. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் வலியுறுத்தினர். இத்தகைய அக்கறைகள் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்டன.

பெப்ருவரி 2, 2009ல் மதுரையில் செய்தி ஊடகத்திடம் பேசிய CPM பொதுச்செயலாளர் காரத் கூறினார்: தமிழ் குடிமக்களின் நிலைமை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கவலையாகும். அதன் பின் அவர், இலங்கை, அது இறைமை பெற்ற நாடு என்னும் முறையில் நாம் நல்ல அண்டை நாட்டு உறவைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், இந்தியா அதன் இராஜதந்திர, அரசியல் தலையீட்டை செய்து அங்கிருக்கும், போர்ப்பகுதியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் இறைமை குறித்து போலியாக கூறிக்கொண்டு, அவர்கள் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, இராஜதந்திர, அரசியல்ரீதியாக இலங்கையில் தலையீடு செய்ய இந்தியாவிற்கு உரிமை உண்டு என்றன.

CPM, CPI இரண்டும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்ததுடன், இந்திய முதலாளித்துவ தேசிய அரசாங்கத்தின் கொள்கையைக் பாதுகாப்பதுடன் இயைந்துதான் இருந்தது. அவை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டத்தை எதிர்த்ததற்குக் காரணம், அது ஒரு தேசியவாத முதலாளித்துவ வேலைத் திட்டம், தொழிலாள வர்க்கத்தை வகுப்புவாத அடித்தளத்தில் பிரிக்க உதவுகிறது என்பதற்காக அல்ல. உண்மையில் CPM, CPI இரண்டும் இந்தியத் தேசிய முதலாளித்துவத்தின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டன. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதம் இந்தியாவில் இருக்கும் அதே போன்ற பிரிவினைவாதப் போக்குகளுக்கு ஊக்கம் கொடுத்து இந்திய அரசிற்கு குழிபறித்துவிடும் என்பதால்தான்.

இலங்கைப் போருக்கு CPI, CPM கொடுத்த ஆதரவு மற்றும் இந்திய முதலாளித்துவ நலன்களுக்குக் கொடுக்கும் ஆதரவு ஆகியவை நீண்டகால வரலாற்றைக் கொண்டவை. அவ்வப்பொழுது தமிழ் மக்களுடைய பரிதாபமானநிலை குறித்து அவை கவலைகளை, வெளிப்படுத்தினாலும் அதிகாரப் பகிர்வு உடன்பாடு தேவை என்ற புது டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றின் பிரச்சாரத்தையே வலியுறுத்துன்றன.

இந்த இரு கட்சிகளும் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆகியோர் கையெழுத்திட்டதற்கு ஆதரவு கொடுத்தன. இந்த உடன்பாட்டின்படி, இந்திய அமைதிப் படை எனப்படுவது இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அழைக்கப்பட்டது வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மற்றும் தமிழர்களின் எதிர்ப்புக்களை நசுக்குவதற்கும்தான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பின்னர் இராணுவத்தை தென்பகுதியில் உள்ள கிராமப்புற அமைதியின்மையை அடக்கவும் 60,000 இளைஞர்களைக் கொல்வதற்கான தயாரிப்பிற்காக கொழும்பு அரசாங்கத்திற்கு தேவையான அவகாசத்தை கொடுத்து.

இந்த உடன்பாடு நீண்டகால இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை முன்னோக்கிய ஒரு சாத்தியமான படி ஆகும் என்று CPI  அதை வரவேற்றது. முறையாக அனைவராலும் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், இது தமிழர் பிரச்சினையை தீர்க்கும் என்று CPM கூறியது. தங்களைத் தமிழர்களின் பாதுகாப்பாளர்கள் எனக்காட்டிக் கொள்ள முயன்ற CPM, ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கங்களைத் தோற்கடிக்க இந்திய-இலங்கை உடன்படிக்கை தேவை என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் என்றும் கூறியது.

இந்த ஸ்ராலினிசக் கட்சிகள் மிகவும் நெருக்கமாக இந்திய முதலாளித்துவத்துடன் நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவர்களுடைய நலன்களைக் பாதுகாப்பதற்காக உழைக்கின்றன. அவற்றிற்கும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடுகள் உண்டு என்றால், அது எப்படி அந்த நலன்களைச் சிறந்த முறையில் செயல்படுத்துவது என்பது குறித்துத்தான். மத்தியிலும் பிராந்தியரீதியாக மாநிலங்களிலும் இருக்கும் அரசாங்கங்களை ஆதரிப்பதில் CPM, CPI  இரண்டுமே இழிந்த வரலாற்றைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் இக்கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடு, இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கு அவை ஏகாதிபத்திய சக்திகளால் முன்வைக்கப்பட்ட திட்டங்களுனும் இணைந்து செயல்படும் என்பதைத்தான் தெளிவாக்குகின்றது.