World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Damascus terror bombing: Made in the USA

டமாஸ்கஸ் பயங்கரவாத குண்டுத்தாக்குதல்: அமெரிக்கத் தயாரிப்பு

Bill Van Auken
12 May 2012

Back to screen version

கடந்தமார்ச் மாதம் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் கூட்டத்தில் உதவி வெளிவிவகார செயலர் ஜேப்ரி பெல்ட்மன், சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்படும் அந்தக் கட்டத்தை அடைவதை துரிதப்படுத்த முனைவதே நமது கொள்கை என்றார்.

இக்கொள்கையின் சமீபத்திய அவதாரத்தை வியாழன் கண்டது. டமாஸ்கஸில் 55 பேரைப் படுகொலை செய்து, கிட்டத்தட்ட 400 பேரைக் காயப்படுத்திய பேரழிவு ஏற்படுத்திய கார்க்குண்டுத்தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான, குற்றம் சார்ந்த ஏகாதிபத்தியப் பிரச்சாரத்தின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் சிரியாவில் ஆரம்பித்த எதிர்ப்பு இயக்கத்தை டமாஸ்கஸில் ஒரு கைப்பொம்மை ஆட்சியை இருத்துவதற்கான கருவியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட வாஷிங்டன் சிரிய நண்பர்களின் அமைப்பு ஏற்படுவதற்கு ஆதரவு கொடுத்தது. இது லிபியாவில் போருக்குத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சர்வதேச உருவாக்கம் ஒன்றைப் போன்றதுதான்.

சிரியத் தேசியக் குழு (Syrian National Council) என்னும் முஸ்லிம் சகோதரத்துவத்தில் -Muslim Brotherhood- இருந்து வந்துள்ள இஸ்லாமியவாத அரசியல்வாதிகள், பல மேற்குநாடுகளிகளின் உளவுத்துறை அமைப்புக்களில் இருக்கும் முதிர்ந்த புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் ஆகியவையின் கூட்டு ஆகும். 

இது சிரிய மக்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்று கூறப்படுவதுடன், சுதந்திர சிரிய இராணுவம்-Free Syrian Army- என்ற அழைக்கப்படும் அமைப்பு ஏற்படுத்தப்படுவதற்கும், சிரியப் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவையும் கொடுத்துள்ளது.

அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான நட்பு நாடுகள், சவுதி அரேபியா, கட்டார் ஆகிய சர்வாதிகார நிலமானித்துவ முடியரசுகள் $1000 மில்லியன் நிதி வழங்கி FSA  உறுப்பினர்களுக்கு நேரடியாகத்  ஊதியம் வழங்குகின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா தான் ஆயுதம் இல்லாத உதவிகளை இதே சக்திகளுக்கு அனுப்புவதாகவும், அவற்றுள் மிகநவீனமான தொடர்புத் துறைக் கருவிகள், இரவில் காண வசதியுடைய கண்ணாடிகள் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் உதவி ஆகியவை இருக்கும் என்றும் அறிவித்தது.

இவை எதுவுமே எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கவில்லை. FSA சிரிய இராணுவத்திற்குப் பல இடங்களிலும் பெயரளவு எதிர்ப்பையே கொடுக்க முடிந்தது. சிரியத் தேசியக் குழுவிற்கு ஆதரவாக மக்களின் பரந்த ஆதரவிற்கான அடையாளம் ஏதுமில்லை.

எனவே இப்பொழுது பயங்கரவாத முறையில் குண்டுத்தாக்குதல்கள் வந்துள்ளன. வியாழன் அன்று டமாஸ்கஸில் ஏற்பட்ட வெடிப்புக்கள் மிகவும் சமீபத்தில் நடந்ததும், கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் குண்டுத்தாக்குதல்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுமாகும். வெள்ளியன்று, சிரிய அரசாங்கம் மற்றொரு தற்கொலைத் தாக்குதலைத் தான் தடுத்துவிட்டதாக அறிவித்தது. இதில் வணிகத் தலைநகரான அலெப்போவில் ஒன்றரை தொன் வெடிமருந்துகள் நிரம்பியிருந்த கார் ஒன்றும் உள்ளடங்கியிருந்தது.

இப்பிரச்சாரத்தின் நோக்கங்கள் சிரிய மக்களை அச்சறுத்தல், அத்துடன் ஒருதலைப்பட்ச அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத் தடைகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை முடக்குதல், சமூக, அரசியல் உள்வெடிப்பிற்கான சூழலைத் தோன்றுவித்தல் என்பதாகும். அதே நேரத்தில் இது முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் கோபி அன்னான் தரகராக செயற்பட்டு கொண்டு வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வரமுடியாது என்பதை நிரூபிப்பதாகவும் உள்ளது.

டமாஸ்கஸ் தாக்குதல்களுக்கு இரு நாட்களுக்கு முன்புதான், ஐ.நா.வில் அமெரிக்கத் தூதராக இருக்கும் சூசன் ரைஸ் சிரியாவில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றிய  சிரிய எச்சரிக்கைகளை ஒரு திசைதிருப்பும் முயற்சி என்று உதறித்தள்ளி, அதே நேரத்தில் வாஷிங்டன் ஆட்சி மாற்றத்தில் கவனத்தை காட்டுகிறது என்றும் அந்த இலக்கை ஒட்டி ஆயுதங்கள் இல்லாத உதவியை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

அன்னானின் திட்டம் பற்றி ரைஸ், வாஷிங்டன் அதன் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்திருக்கவில்லை என்பதாகும் என்றார். இப்பொழுது சில முட்டைகள் உண்மையில் கார் குண்டுகளோ எனத் தோன்றுகின்றன.

டமாஸ்கஸ் குண்டுத்தாக்குதலுக்குப் பின், செய்தி ஊடகம் சிரியத் தேசியக்குழுவின் பொருத்தமற்ற கூற்றான அசாத் ஆட்சிதான் தாக்குதலை நடத்தியுள்ளது, தன்னுடைய பாதுகாப்புப் படையின் கணிசமான எண்ணிக்கையைக் கொன்றுள்ளது என்பதற்கு ஒருவித நம்பகத்தன்மையை முதலில் கொடுத்தது.

ஒரு வாடிக்கையான பயங்கரவாதக் கண்டனத்தை வெளியிடும் நிலைக்கு வெளிவிவகார அமைச்சு தள்ளப்பட்டது; கெடுதிவிளைவிப்பவர்கள்தான் இத்தாக்குதலில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டு, குண்டுவீச்சிற்குப் பொறுப்பை உறுதியாக சிரிய ஆட்சிதான் என்றும் உறுதியாகக் கூறிவிட்டது.

பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா வியாழன் அன்று, சிரியாவில் அல் குவேதா பிரசன்னம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதே நேரத்தில் பென்டகன் சிரியாவின் சாத்திமான அணுகுமுறைக்கு அனைத்துவித திட்டங்களையும் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி குறிப்பிட்ட வழிகளில் விடையிறுக்க வேண்டும் என்று எங்களிடம் கூறினால், அதற்கும் தயாராக உள்ளோம் என்றார்.

வாஷிங்டன் போஸ்ட்டின்  கருத்துப்படி இத்திட்டங்களில் சிரியக் குடிமக்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான உதவி போக்குவரத்துக்களுக்கு இராணுவப் பாதுகாப்பு, எதிர்த்தரப்பு சிரியா மீது வான் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு பாதுகாப்புப் பகுதி நிறுவப்படுதல் ஆகியவை அடங்கும்.

அல் குவேடா பிரிவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சிரியாவில் ஒரு பயங்கரவாத பிரச்சாரத்தை அதிகரிக்கச்செய்ய கூடியுழைக்கின்றன என்றால், அது முதல் தடவையாக இருக்காது. லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடந்த போரில், அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவு கொடுத்த போராளிகளின் உயர்மட்டத் தளபதி அப்டெல் ஹகிம் பெல்ஹ்ட்ஜ் போருக்கு முன்னதாக CIA  இனால் கடத்தப்பட்டு, விமானத்தில் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உட்பட்டவர். ஏனெனில் அவருக்கு இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழு ஒன்றில் பங்கு இருந்தது.

இதே லிபிய பிரிவுகள்தான் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடைய, ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்புக்களுக்கு ஆயுதமளித்துப், பயிற்சியையும் கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருப்பதுடன், அந்நாட்டிற்குள் நேரடியாகப் போராடுபவர்களையும் அனுப்பி வைக்கின்றன.

ஒரு மனிதனின் பயங்கரவாதி , மற்றொருவரின் சுதந்திர வீரர் என பனிப்போர்க் காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட சொற்றொடர், சிரியாவில் ஒரே நேரத்தில் இரு பங்குகளையும் செய்யும் இப்பிரிவுகள் சிரியாவில் அமெரிக்கப் பங்கை மூடி மறைப்பதுடன் மட்டும் ஆரம்பிக்கவில்லை. ஒருபுறம் வாஷிங்டன் அல் குவேடா பிணைப்புடைய சக்திகளுக்கு அசாத் ஆட்சியைக் கவிழ்க்க ஆதரவு கொடுக்கிறது,  மறுபுறமோ அங்கு அச்சக்திகளின் பிரசன்னத்தை நாட்டில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்குப் போலிக் காரணமாகப் பயன்படுத்துகிறது.

இது, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கொள்கை இயற்றும் இயக்குனரும் ஒபாமாவில் நெருக்கமான ஆலோசகரும், மனிதாபிமான ஏகாதிபத்தியத் தலையீடுகள் பற்றி முக்கியமாக வாதிப்பவர்களில் ஒருவரான அன்ன-மரி சுலோட்டர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெளிவான வெளிப்பாட்டைக் காண்கிறது. National Public Radio இவர், சிரியாவில் ஜிகாத் குழுக்கள் பிரசன்னம் என்பது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் குறுக்கிடுவதைத் தடுத்துவிடக்கூடாது, மாறாக இது அவர்களை சிரியாவில் நீடித்த போராட்டம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களைப் பற்றித் தட்டியெழுப்ப வேண்டும் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. சிரியாவில் முக்கிய அச்சுறுத்தல் இரசாயன ஆயுதங்கள் அல் குவேதாவின் கரங்களில் சிக்கும் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வகையில், ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பிற்குத் தயாரிக்கப்பட்ட போலிக்காரணங்கள், இப்பொழுது வக்கிரமாக வேறு வடிவமைப்பில் கையாளப்படுகின்றன. வாஷிங்டன் ஆதரவைப் பெற்றுள்ள அல்குவேதா, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுவது ஆகியவை அமெரிக்க இராணுவத் தலையீடு என்பதால் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

இப்பிரந்தியத்தில் தெஹ்ரானின் முக்கிய நண்பரான அசாத்தை வீழ்த்தும் முயற்சி, ஈரானைத் தனிமைப் படுத்த முற்படும் முயற்சி ஆகும். ஈரான்தான் பாரசீக வளைகுடா, மத்திய ஆசியா என எண்ணெய் வளம் நிறைந்த, மூலோபாய வகையில் முக்கியப் பகுதிகளில் தன் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு முக்கியத் தடையாக வாஷிங்டனால் காணப்படுகிறது. அல் குவேடா, இராசயன ஆயுதங்கள், ஜனநாயகம், மனிதாபிமானம் என்ற போலிக்காரணங்கள் அனைத்திற்கும் பின்புலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய ஆக்கிரமிப்புப் போர்களுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது மத்திய கிழக்கு, அதற்கு அப்பாலும், கொடூரமான விளைவுகளைக் கொடுக்கும் என்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.