சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political lessons of the Sri Lankan university teachers’ strike

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்

By the Socialist Equality Party (Sri Lanka)
14 November 2012
use this version to print | Send feedback

இலங்கையில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 அன்று தொடங்கிய வேலை நிறுத்தத்தை 100 நாட்களாகத் தொடர்ந்தனர். இது மூன்று தசாப்தங்களில் தீவில் நடந்த நீண்ட வேலைநிறுத்தங்களில் ஒன்றாகும். உலகம் பூராவும் நிதி மூலதனம் கோரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முயற்சிக்கின்ற நிலையில், உலகம் முழுவதும் எழுச்சி பெறும் தொழிலாள வர்க்க போராட்ட அலையின் ஒரு பகுதியே இந்தப் போராட்டமாகும்.

சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) வேலை நிறுத்தத்தின் போது தொடர்ந்து எச்சரித்தது போல், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (எஃப்.யூ.டீ.ஏ.), 20 சதவிகித ஊதிய உயர்வு மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் இலவசக் கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு உட்பட அது முன்வைத்த கோரிக்கைகளில் எதையும் வெல்லாமல் போராட்டத்தை வெட்கமின்றி காட்டிக் கொடுத்தது. எதிர்காலத்தில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசாங்கம் கொடுத்த வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தொழிற்சங்க தலைவர்கள் விரிவுரையாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பினர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்தின் பின்னர், வாக்குறுதிகள் அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன.

எதிர்வரவிருக்கும் தவிர்க்கமுடியாத வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராகும் பொருட்டு, இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த வேலை நிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இலங்கையிலும் உலக அளவிலும் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், சர்வதேச நாணய நிதியம் கோரும் திட்டங்களான தனியார்மயமாக்கம் மற்றும் கல்வி உட்பட அரசாங்க செலவுகளை வெட்டிக் குறைப்பதை அமுல்படுத்துகின்ற, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் அவசியத்தை ஆரம்பத்தில் இருந்தே பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்கொண்டனர்.

எஃப்.யூ.டீ.ஏ. தலைவர்கள் அத்தகைய போராட்டத்தை கசப்புடன் எதிர்ப்பவர்கள். தொழிற்சங்கம் போர்க்குணம்மிக்க தோரணை காட்டிய போதிலும், அது "ஆட்சி மாற்றத்துக்கு" அதாவது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு- முயல்கிறது என்ற அரசாங்கங்கத்தின் குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரித்தது.

பணவீக்கத்தாலும் கல்விக்கான செலவை அரசாங்கம் வெட்டிக் குறைத்ததாலும் தங்கள் ஊதியம் தொடர்ந்து அரித்துச் செல்லப்படுவது பற்றி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் உக்கிரமடைந்து வந்ததனால் மட்டுமே தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தது. உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கன செயற்பட்டியலை நடைமுறைப்படுத்தும் போது, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சலுகைகள் பெற முடியும் என்ற யதார்த்தமற்ற முன்நோக்கையே அனைவரும் போல் எஃப்.யூ.டீ.ஏ. தலைவர்களும் அபிவிருத்தி செய்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எதையும் கொடுக்க கடுமையாக மறுத்து வந்தது. உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சம்பள உயர்வு கோரிக்கையை மறுத்ததோடு கல்விக்கான செலவை அதிகரிக்கக் கோருவது பொருத்தமற்றது என தள்ளுபடி செய்தார். அவர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களையும் வேலைநீக்கம் செய்வதாக அச்சுறுத்தினார்.

எனினும் தீவு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். வேலைநிறுத்தம் இழுபட்டுச் சென்ற நிலையில், எஃப்.யூ.டீ.ஏ. தலைமை தலைதப்புவதற்கு வழி தேடியது. அதன் முந்தைய காட்டிக்கொடுப்புக்கள் உறுப்பினர்கள் மத்தியில் சந்தேகத்தையும் பகைமையையும் உருவாக்கிவிட்டிருந்தன.

முட்டுகட்டைகளை அகற்றும் முயற்சியில், எஃப்.யூ.டீ.ஏ. மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்க ஒன்றியமும், தெற்கில் காலியில் இருந்தும் மற்றும் மத்திய மாகாணத்தில் கண்டியில் இருந்தும் கொழும்புக்கு இரண்டு பேரணிகளை முன்னெடுத்தன. தொழிற்சங்கத்தை பொறுத்தவரையில், இந்த பேரணிகள் சீற்றத்தைத் தணிக்கும் ஒரு பகட்டு வித்தையாகும். ஆனால், தொழிற்சங்கம் அக்கறையே காட்டாமல் இருந்த விடயமான, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கான செலவை 1.8 சதவீதத்தில் இருந்து 6 வீதம் வரை அதிகரிக்கும் கோரிக்கையானது, விரிவுரையாளர்களின் பேரணி கடந்துவந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வறிய கிராமத்தவர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது.

உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை உழைக்கும் மக்கள் கண்ட நிலையில், அந்தப் பேரணிகளுக்கு வெகுஜன ஆதரவு கூடியது. எதிர் கட்சிகள் மற்றும் புத்தமத உயர்மட்டத்துடன் கூட்டுச் சேர்ந்த எஃப்.யூ.டீ.ஏ. தலைமைத்துவம், இந்த ஆதரவு அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு கட்டத்திலும் முயன்றது.

எதிர்க் கட்சிகளே இலவசக் கல்வியின் பாதுகாவலர்கள் என்ற பொய்யை எஃப்.யூ.டீ.ஏ. தூக்கிப் பிடித்தது. ஆனால், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), கல்வியைத் தனியார்மயப்படுத்துவதை தொடங்கியதற்கு பொறுப்பாளியாவதோடு, அது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணியுடன் சேர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னாள் இடதுகளான நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் வலதுசாரி யூ.என்.பீ. உடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.) மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற, முன்னிலை சோசலிசக் கட்சியும், சந்தை-சார்பு கொள்கைகளை அமுல்படுத்திய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் 2004-05ல் பங்காளிகளாக இருந்தன.

பேரணிகளுக்கு கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, அரசாங்கத்தினதும் தொழிற்சங்கத் தலைமையினதும் கவலையைத் தூண்டிவிட்ட நிலையில், தொழிற்சங்கம் விரைவில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டது. ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ஷ, வேலைநிறுத்தத்துக்கு முடிவு கட்ட ஆவலுடன் வழி தேடிக்கொண்டிருந்த எஃப்.யூ.டீ.ஏ. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பணிக்கப்பட்டார். பேரணிகள் முடிந்த இரண்டே வாரங்களில், அக்டோபர் 12 அன்று, எஃப்.யூ.டீ.ஏ. அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை ஏற்று போராட்டத்தை கைவிட்டது.

எஃப்.யூ.டீ.ஏ. தலைவர் ரஞ்சித் தேவசிறி, "தொழிற்சங்கத்துக்குள் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் ஆபத்து இருந்தபோதும் கூட", தான் அரசாங்கத்துடனான உடன்படிக்கையை ஏற்பதாக அறிவித்ததில், வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்வதில் தொழிற்சங்க தலைவர்கள் மிகவும் உறுதியாக இருந்தமை வெளிப்படையானது. பல பல்கலைக்கழக வளாகங்களில், மிகப்பெருமளவில் எஃப்.யூ.டீ.ஏ. தலைவர்களின் முடிவுக்கு எதிராக வேலைநிறுத்தத்தைத் தொடர ஆசிரியர்கள் வாக்களித்திருந்தனர். தொழிற்சங்கம் இந்த வியாபார உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கு பொதுக் கூட்டத்தையோ அல்லது வாக்கெடுப்பையோ நடத்தவில்லை. "வேலைநிறுத்தத்தை தொடங்குவதை விட முடிவுக்கு கொண்டுவருவது கடினமான வேலையாகும்" என பின்னர் தேவசிறி ஒப்புக்கொண்டார்.

உண்மையில், அரசாங்கத்துக்கு எல்லா வகையிலும் ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாக இயங்கும் தொழிற்சங்கம், நடவடிக்கை நோக்கத்தை மட்டுப்படுத்தி, இராஜபக்ஷவுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் போராட்டத்தையும் தடுப்பதோடு, இறுதியாக வேலைநிறுத்தத்தை விற்றுவிட்டது. அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்த போதிலும், பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்க நிறுவப்பட்ட பொறிமுறைகளில் பங்கேற்பது மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் இராணுவப் பயிற்சிக்கு ஆதரவளிப்பது உட்பட கொடுக்கல் வாங்கலில் தம் பங்கை எஃப்.யூ.டீ.ஏ. தலைவர்கள் நிறைவேற்றுகின்றனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுவாக உழைக்கும் மக்களும் இந்த தீர்க்கமான அனுபவத்தில் இருந்து தேவையான முடிவுகளை பெற வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவற்றைப் போன்று, இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களும் மாற்றமடைந்திருப்பதோடு அவை எந்த அர்த்தத்திலும் இனி தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை உரிமைகளைக் கூட காக்கப் போவதில்லை. உலக பொருளாதார வீழ்ச்சியின் நிலைமையில், அவை நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான பொறிமுறைக்கு மாறிவிட்டன.

ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படை இன்றி தொழிலாள வர்க்கத்தால் மிக குறைந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை கூட பாதுகாக்க முடியாது. தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதும் மற்றும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக தொழிலாளர்களையும் மற்றும் அவர்களுக்குப் பின்னால் கிராமப்புற வறியவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டி ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதுமே எந்தவொரு போராட்டத்தினதும் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். ஒரு சோசலிச வேலை திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரின் பக்கம் திரும்புவதற்கான ஒரு வழிமுறையாக, வேலைத்தளங்கள் மற்றும் அயல் பிரதேசங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவ கட்சி அழைப்பு விடுக்கின்றது.

முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு சோசலிசத்திற்கான போராட்டத்தின் பரப்பு அனைத்துலக ரீதியானதாக இருப்பது அவசியமாகும். சோசலிச சமத்துவ கட்சி, தெற்காசியவிலும் உலகிலும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது. நாம் நமது முன்னோக்கைக் கற்குமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவ கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.