World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama wins reelection

ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுகிறார்

By Patrick Martin
7 November 2012
Back to screen version

கண்டத்தின் அமெரிக்கா முழுவதும் வாக்கு எண்ணுதல் முடிந்த நிலையில், ஜனாதிபதி பாரக் ஒபாமா தேர்தல் பிரதிநிதிகள் குழுவில் ஒரு வசதியான பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்குக் கடலோரப் பகுதிகளில் இருந்து முடிவுகள் வெளிவந்தபோது, நள்ளிரவிற்குப் பின் தனது வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவுடன் தொலைப்பேசித் தொடர்பு கொண்டு இரவு 1 மணிக்குச் சற்று முன் தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பின் அவர் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அவருடைய போஸ்டன் தலைமையகத்தில் இருந்து தோல்வியை ஒப்புக் கொண்ட  ஒரு தொலைக்காட்சி அறிக்கையைக் கொடுத்தார்.

இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலக நிதியச் சந்தைகளுக்கு 2000 ம் ஆண்டு பிரச்சனைக்கு உட்பட்ட தேர்தல்களுக்குப் பின் இருந்த அரசியல் வெற்றிடம் போல் இப்பொழுது இராது என்ற உறுதியைக் கொடுப்பதையும், இரு பெரு வணிகக் கட்சிகளும் விரைவில் கூட்டரசின் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்ற உத்தரவாதத்தைக் கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டது.

இரவு 2 மணிக்குச் சற்று முன்னதாகக் கொடுக்கப்பட்ட ஒபாமாவின் வெற்றி உரை இதே கருத்துக்களைத்தான் கொண்டிருந்தது. தன்னுடைய தேர்தல் வெற்றியில் இருந்து பெற்றுள்ள மக்கள் கட்டளையைப் பற்றி அதிகம் கூறாமல், இனி வரவிருக்கும்சிக்கலான சமரசங்கள் பற்றிப் பேசினார்.

ஆளுனர் ரோம்னியுடன் அமர்ந்து எப்படி நாம் ஒன்றாகச் செயல்பட முடியும் என்பது பற்றிப் பேசுவதாக அவர் உறுதியளித்தார்.

இரு கட்சித் தலைவர்களுடனும் இணைந்து செயல்பட்டு பற்றாக்குறையைக் குறைக்கவும் வரி முறையைச் சீர்திருத்தவும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளேன் என்று ஒபாமா அறிவித்தார். “நீங்கள் வழக்கம் போல் அரசியலுக்கு என்று இல்லாமல், நடவடிக்கைகளுக்காக வாக்களித்துள்ளீர்கள் என்று சேர்த்துக் கொண்டார். இது மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி காங்கிரசில் இருக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் வரவு-செலவுத் திட்டம் குறித்த உடன்பாட்டை விரைவில் அடைய நடவடிக்கை எடுப்பார் என்றும் அது வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்கு இணங்க இருக்கும் என்று அர்த்தப்படுகின்றது என அறியப்பட வேண்டும்.

தனக்கு வாக்களித்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் வகையில் ஒபாமா அவர்களுடைய வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளை பேரழிவிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவார். குடியரசுக் கட்சியுடன் பேச்சுக்கள் மூலம் கொள்ள இருக்கும்பெரும் பேரப்பேச்சு தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வரும். இதனால் சமூகப் பாதுகாப்பு, Medicare, Medicaid இன்னும் பிற சமூகநலத் திட்டங்களில் டிரில்லியன் கணக்கான வெட்டுக்கள் ஏற்படும்.

ஒசாமா பின் லேடனைக் கொன்ற சிறப்புப் படைத் துருப்புக்களையும் அமெரிக்க இராணுவத்தையும் ஒபாமா பாராட்டினார். அதே நேரத்தில் அவருடைய நிர்வாகம்போரை ஒரு முடிவிற்குக் கொண்டுவருகிறது என்றும் கூறிக் கொண்டார். இது ஆப்கானிஸ்தானைப் பற்றிய குறிப்பு ஆகும். ஆனால் அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். அதே நேரத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ள படைகள் சிரியா, ஈரான் அல்லது ஏகாதிபத்திய இராணுவத் தாக்குதலின் பிற இலக்குகளில் நிலைநிறுத்தப்படும்.

அனைத்து முக்கிய தொலைக்காட்சி இணையங்களும் ஒபாமா முக்கிய போர்க்கள மாநிலங்களில் பெற்ற வெற்றிகளை இரவு 11 முதல் நள்ளிரவு வரை காட்டின. இவற்றுள் நியூ ஹாம்ப்ஷைர், ஒகையோ, விஸ்கோன்சின், அயோவா, கோலோரொடோ மற்றும் நெவாடா ஆகியவை அடங்கும். புளோரிடா மற்றும் வேர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவிற்குத் தெளிவான, ஆனால் மிகவும் குறைந்த முன்னிலை இருந்தது. புதன் காலை இரு மாநிலங்களும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தன. ரோம்னி மிக நெருக்கமான போட்டி இருந்த மாநிலங்களில் ஒன்றே ஒன்றான வட கரோலினாவில்தான் வெற்றி பெற்றார்.

ரோம்னி பெற்ற 206 தேர்தல் பிரதிநிதிகள் குழு வாக்குகளுக்கு எதிரான ஒபாமா 303 வாக்குகளைப்பெற்றார். புளோரிடாவில் அவர் 29 தேர்தல் குழு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது ஜனாதிபதிக்கான போட்டியின் விளைவைப் பாதித்திருக்காது.

குடியரசுக் கட்சியின் பிரச்சாரகர்களும் வலதுசாரி செய்தி ஊடகப் பண்டிதர்களும் ரோம்னி பென்சில்வானியா, மிச்சிகன் அல்லது மின்னிசோடாவில் தாமதமான வெற்றியைப் பெறக்கூடும் அல்லது மூன்றிலும் பெறக்கூடும் என்று கூறிய நிலையில், ஒபாமா இம்மாநிலங்களில் கணிசமான வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இறுதியில் ரோம்னி 2008 குடியரசு வேட்பாளர் ஜோன் மக்கெயின் பெற்றதை விட இரண்டு மாநிலங்களான இந்தியானா, மற்றும் வட கரோலினாவைத்தான் அதிகமாகப் பெற்றார்.

மிக அதிக மக்கள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில், மைனில் இருந்து மேரிலாந்து வரை ஒபாமா பெரும் வெற்றி அடைந்தார். அதே போல் தொழில்துறை மேலை நடு மாநிலங்களிலும் (இந்தியானாதவிர) மற்றும் மேலைக் கடலோர மாநிலங்கள், அதிக மக்கள் கொண்ட கலிபோர்னியா உட்பட, வெற்றி கொண்டார். பெரும்பாலான தெற்கு மாநிலங்களில் ரோம்னி வெற்றி பெற்றார். அதிக மக்கட்தொகை இல்லாத மாநிலங்களிலும் வெற்றி பெற்றார். Rocky Mountain பகுதி மாநிலங்களில் வாக்குகள் துண்டாடப்பட்டன.

முன்னாள் பெயின் மூலதனத் -Bain Capital- தலைமை நிர்வாக அதிகாரி ரோம்னி பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடுக்கிற்கு உள்ள ஆழ்ந்த பரவலான விரோதப் போக்கின் வெளிப்பாடாக இந்த வாக்களிப்பு உள்ளது. அதாவது, 2008 நிதியச் சரிவு மற்றும் அதைத்தொடர்ந்த பொருளாதாரச் சரிவிற்கு பொறுப்பான நிதிய ஒட்டுண்ணிகள் மற்றும் குடியரசுக்கட்சியின் தீவிர வலது அரசியலுக்கு எதிரானது. மேலும் இது கடந்த நான்கு ஆண்டுகளாக ஒபாமா செயல்பட்டு வரும் முறையையும் மீறி ரோம்னிக்கும் நிதிய உயரடுக்கிற்கும் ஒரு மாற்றீட்டைத்தான் ஒபாமா பிரதிலிக்கிறார் என்னும் தொழிலாள வர்க்கத்தினுள் இன்னும் எஞ்சியுள்ள நப்பாசைகளை காட்டுகிறது. 2008ல் இருந்து ஒபாமாவிற்கு மக்கள் ஆதரவு கணிசமாகக் குறைந்போதிலும் இந்த நிலைப்பாடுதான் வெளிப்பட்டுள்ளது.

ஒபாமாவிற்கு வாக்களித்த பலரும் ரோம்னி மற்றும் குடியரசுக் கட்சியினரை வெளியே நிறுத்தும் எண்ணத்தில் அவ்வாறு செய்தனரே தவிர ஒபாமாவிற்கு இரண்டாம் வரைக்காலம் வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தப்படவில்லை.

ஒரு NBC கருத்துக் கணிப்பு இந்த மக்கள் உணர்வுகள் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தது; பேட்டி கண்டவர்களில் கணிசமான பெரும்பான்மையினர், 54 சதவிகிதம், அமெரிக்கப் பொருளாதார முறை அனைவருக்கும் நியாயம் என்பதைவிட செல்வந்தர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என நம்புகின்றனர். 52 சதவிகிதத்தினர், ரோம்னி செல்வந்தர்களுக்கு ஆதரவு கொடுப்பார் என்றனர், 35% அவர் மத்தியதர வர்க்கத்திற்கு ஆதரவு கொடுப்பார் என்றும் 2% அவர் ஏழைகளுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் கூறினர். ஒபாமாவைப் பற்றிய இதே வினா பெரிதும் வேறுபட்ட விடையிறுப்பைக் காட்டியது. 10 சதவிகிதத்தினர்தான் ஒபாமா செல்வந்தர்களை ஆதரிப்பார் என்றும் 43% அவர் மத்தியதர வர்க்கத்தை ஆதரிப்பார் என்றும் 31% அவர் ஏழைகளை ஆதரிப்பார் என்றும் கூறினர்.

நவம்பர் 6ம் திகதி வாக்கெடுப்பு அமெரிக்க அரசியல் தோற்றத்தைப் பற்றி செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறை ஜனநாயகக் கட்சி உட்பட--சித்தரித்துள்ள தன்மைக்கும் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளுக்கும் இடையே உள்ள பெரும் பிளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குடியரசு வலதின் செல்வாக்கு மற்றும் வலிமை குறித்துப் பெரிதும் உயர்த்திக் காட்டப்பட்ட Tea Party கட்சி ஆதரவு கொடுத்த வேட்பாளர் முக்கிய போட்டிகளில் தோற்றதை அடுத்து பிசுபிசுத்தது. போர்க்கள மாநிலங்கள் என அழைக்கப்பட்டவற்றில் ரோம்னி குறைவான ஆதரவைத்தான் பெற்றார்.

அமெரிக்க செனட் மன்றத்தில் குடியரசுக் கட்சி ஒரு தோல்வியை பெற்றது. அதில் அக்கட்சி கணிசமான ஆதாயங்களை எதிர்பார்த்தது; அதுவும் பணயத்தில் இருந்த 33 இடங்களில் 23 ஐ ஜனநாயகக் கட்சி பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில். மாறாக ஜனநாயகக் கட்சி உண்மையில் தன்னுடைய வித்தியாசத்தை அதிகரித்தது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் (மைன் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சியுடன் பிணைந்திருந்த ஒரு சுயாதீன வேட்பாளர் உட்பட) நெருக்கமான போட்டிகளில்தான் கிட்டத்தட்ட அனைவரும் வெற்றிபெற்றனர். குடியரசுக் கட்சியினர் பிடியில் இருந்த மாசச்சுசெட்ஸ், மைன், இந்தியானா தொகுதிகள் பலவற்றைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி வைத்திருந்த கனெக்டிகட், வேர்ஜீனியா, புளோரிடா, பென்சில்வானியா, ஒகையோ, மிசூரி, விஸ்கோன்சின், வட டகோடா, மோன்டனா மற்றும் புதிய மெக்சிகோ மாநிலங்களில் தங்கள் தொகுதிகளைக் காப்பாற்றிக் கொண்டனர்.

மிசூரி மற்றும் இந்தியானா விளைவுகள் குறிப்பிடத்தக்க வகையில் வியப்பாகும். ஏனெனில் Tea Party கட்சியின் ஆதரவு பெற்றிருந்த குடியரசுக் கட்சியினர் கடுமையான ஆரம்ப தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தனர், பின்னர் அவர்கள் வெற்றிபெறுவர் எனக் கருதப்பட்ட பொதுத் தேர்தல்களில் தோல்வியுற்றனர்.

Tea Party செய்தி ஊடகம் மற்றும் பெருநிறுவன உயரடுக்கு 2008ல் குடியரசுக் கட்சியின் சரிவிற்குப்பின், மிகத் தீவிர கொள்கைகளைச் செயல்படுத்தும் ஒரு கருவியாகவும், உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னும் வலதிற்கு மாற்றவும் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு. இந்த வலதுசாரிக் குழுக்களுக்கு மாபெரும் விளம்பரம் கொடுக்கப்பட்ட பின்னரும், மக்கள் ஆதரவு அதற்கு மிக மிகக் குறைவுதான்.

Tea Party ன் முக்கிய கருத்துக்களான குடியேறுவோருக்கு எதிரான தீவிர நாட்டுப்பற்று, இராணுவ வாதம், அரசாங்கத்தின் சமூகநலத் திட்டங்களை அகற்றுதல், வணிக நலன்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகியவை பெரும்பாலான மக்களுக்கு வெறுப்பைத் தந்தன.

உதாரணமாக நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்புக்கள் 2012 தேர்தலில் வாக்களித்தவர்களில் 65% ஆவணமற்ற குடியேறிய தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்திற்கு ஆதரவு கொடுத்தனர் என்றும் 28% தான் ஏராளமானோர் வெளியேற்றப்பட வேண்டும் எனக் கருதினர் என்று தெரிவிக்கிறது.

எப்பொழுதும் போல் ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் பெற்ற வெற்றியை மிகவும் நிதானத்துடனும் அடக்கத்துடனும்தான் விளங்கப்படுத்துவர். தன்னலக்குழுவை எதிர்க்க மக்கள் கொடுக்கும் ஆணை என்பதை அவர்கள் கடைசியாகத்தான் ஏற்பர். ஏனெனில் அவர்களுக்கும் இதே பெருவணிக நலன்கள் உண்டு. ஒலிவ் கிளையை அவர்கள் குடியரசுக் கட்சியை நோக்கி நீட்டுவர். வாஷிங்டனில் நிகழ்ச்சிநிரலை அமைக்க பிரதிநிதிகள் மன்றத்தில்- House of Representatives- குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டினை அனுமதிப்பர். அவ்வாறுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பிரதிநிதிகள் மன்றத்தில் உள்ள 435 இடங்களுக்கான போட்டிகளின் விளைவு கிட்டத்தட்ட எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.  ஜனநாயகக் கட்சியினர் அவர்கள் 2010ல் இழந்த இடங்களை மீண்டும் பெற்றுள்ளனர். குறிப்பாக வடகிழக்கில், இல்லிநோய்ஸ், புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில். ஆனால் தெற்கிலும் மத்திய மேற்கில் பரவலான பகுதிகளிலும் இடங்களை இழந்தனர். நிகர வெற்றிகளை தொகுதிகளில் கண்டாலும்கூட, கட்டுப்பாட்டைப் பெறும்  எண்ணிக்கையில் இருந்து 25 குறைந்து விட்டது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஒரு ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மன்றத்திற்கான முயற்சியை கிட்டத்தட்ட எடுக்கவில்லை. ஜனாதிபதி பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பில் தன்னுடைய தனிப்பட்ட ஆதரவை ஒரே ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குத்தான் கொடுத்திருந்தார்.

இரண்டு கட்சிகளுடைய செய்தித் தொடர்பாளர்களின் பிரதிபலிப்பு ஜனாதிபதி பதவிக்கான தோல்வி என்ற நிலையிலும் குடியரசு வலதின் ஆக்கிரோஷத்தையும் மற்றும் குடியரசுக் கட்சிக்கு சிறிதும் குறைவில்லாத ஆதரவைக் கொடுக்கும் ஜனநாயகக் கட்சியின் விருப்பத்தையும் நிரூபிக்கிறது. மன்றத்தின் தலைவர் ஜோன் போஹ்னர், வாஷிங்டனில் உயர்மட்ட குடியரசுத் தலைவர் தேர்தல்வரிகளை உயர்த்த எந்த ஆணையையும் கொடுக்கவில்லை என்றார். ஜனநாயகக் கட்சி சிறப்பு மாநாட்டில் முக்கிய பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலியன் காஸ்ட்ரோ, தேர்தல், “சமரசத்திற்கு ஓர் ஆணை என்றார்.