சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: பௌத்த பேரினவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டலை தூண்டுகின்றனர்

By Gamini Karunasena and Vasantha Rupasinghe
7 January 2013

use this version to print | Send feedback         

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், நாட்டின் ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில் உழைக்கும் மக்களை பிளவு படுத்தும் முயற்சியில், இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத ஆத்திரமூட்டல்களுக்கு மௌனமாக ஆதரவளிக்கின்றார். இம்முறை இந்தப் பேரினவாத குழுக்களின் பிரதான இலக்கு முஸ்லிம்களாவர்.

புது பல சேனா அல்லது பௌத்த சக்திப் படை எனப்படும் ஒரு அமைப்பு, நாட்டின் பலபாகங்களிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை திட்டமிடுவதில் முன்னணியில் செயற்பபடுகின்றது. ஆளும் கூட்டரசாங்கத்தின் ஒரு அங்கமான ஜாதிக ஹெல உறுய போல், இந்த புது பல சேனாவும் முஸ்லிம்கள் பௌத்த சமயத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார்களென கூறிக்கொள்கின்றது. "புத்த சமயத்தையும் அதன் மரபுகளையும் வலிமைப்படுத்தி பேணுவதே" அதன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நோக்கமாகும்.

இந்த அமைப்பானது அண்மையில் மத்திய மாகாணத்தின் கண்டி நகரலிருந்து சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பூவெலிகட என்ற சிறிய நகரில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிரான ஓர் ஆத்திர மூட்டலை தொடுத்துள்ளது. இந்த நகரில் பூர்வீகமாக செறிந்து வாழும் முஸ்லீம் சனத் தொகையில் சிறிய கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் அடங்குவர்.

பஸ் ஒன்றில் பிரயாணம் செய்த சிங்கள இளைஞர் குழுவொன்று வான் ஒன்று பாதையில் குறுக்காக நின்றதாக கூறியவாறு முஸ்லீம்களுடன் சச்சரவில் ஈடுபட்டது. அனேக முஸ்லீம்கள் இந்த மோதலில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் உடனடியாக இழிபுகழ் பெற்ற விசேட பொலிஸ் அதிரடிப்படையை அவ்விடத்தில் நிலைகொள்ளச் செய்தது. அதன் உறுப்பினர்கள், குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக, குண்டர்களுக்கு அனுதாபம் காட்டியுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பிரதேசத்துக்கு சென்றிருந்த போது, முஸ்லீம் வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளின் மீது பலவந்தமாக பௌத்த கொடிகளை பறக்க விட பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர். ஒரு முஸ்லீம் வர்த்தக கூடத்தில் ஒலிபெருக்கி பூட்டப்பட்டு மக்களுக்கு தொந்தரவளிக்கும் வகையில், புத்த மத கீதங்கள் ஒலிபரப்பப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.

"நம் சிங்களவருடன் சமாதானமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் இப்போது என்ன நடக்கப் போகிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது" என்று ஒரு குடும்பஸ்தர் தெரிவித்தார்.  மிகவும் வெறுப்படைந்திருந்த ஒரு முஸ்லீம் இளைஞர், "இம் மக்கள் ஒரு போதும் இவ்வாறு நடந்துகொண்டதில்லை. நேற்று இந்த ஒலி பெருக்கி சத்தத்தினால் எமது மதச்சடங்குகளை நிறைவேற்ற முடியாது நாம் பெரிதும் சங்கடப்பட்டோம்," என்று கூறினார்.

நிலைமையை சமாளிக்கும் ஒரு முயற்சியாக,  முஸ்லீம்  அமைப்புகள் பூவெலிகடையில் ஓர் புத்தர் சிலையை நிர்மாணிக்க உதவியுள்ளனர். ஆனால் தமது இனவாத கிளர்ச்சியை தொடரும் தீவிரவாத மத குருக்கள், முஸ்லீம்கள் சிங்களவருக்கு உரிமையான நிலங்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். நகரில் ஒட்டப்பட்டிருந்த முஸ்லீம் எதிர்ப்பு சுவரொட்டிகளை மக்கள் அகற்றியிருந்தனர். எவ்வேளையிலும் மீண்டுமொரு தாக்குதலோ அல்லது மோதலோ ஏற்படலாமென்ற பீதி அங்கு நிலவுகிறது.

நவம்பரில், கிழக்கில் அம்பாறை நகரில், ஓரு புத்த வழிபாட்டுத் தலம் இனம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்ட பின்னர், புது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான கலபொட அத்தே ஞானசேகர, முஸ்லிம் தீவிரவாதிகள் கிழக்கில் தனி அரசு ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர் என பிரகடனம் செய்தார். முஸ்லீம்களுக்கு எதிராக அடக்கு முறையை தூண்டும் கணிப்பைக்கொண்ட தனது கூற்றுக்கு எந்த ஆதாரங்களையுமே அவர் வழங்கவில்லை. புது பல சேனாவானது ஒரு உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் படை என தெரிவித்த அவர், அந்த அமைப்பு சட்டத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு வன் செயலை நாட ஆயத்தமாயுள்ளதை புலப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 2ம் திகதி, ஞானசார மக்களை ஹலால் முத்திரையுடைய பொருட்களை பகிஸ்கரிக்குமாறு தூண்டினார். அவரது குழு, 80 மில்லியன் ரூபாய்கள் கொண்ட இஸ்லாமிய மத நிதிகள் 'வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு பயன்படுத்துகின்றதா' என அரசாங்கம் ஆராய வேண்டுமென கோரிக்கை விடுத்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஒரு ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஜனவரி 4 அன்று, இஸ்லாமிய உலாமா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து, தேசிய புலனாய்வு பிரிவையும் பாதுகாப்பு அமைச்சையும் தனது கணக்கேடுகளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

முஸ்லீம் மதத் தலைவர்கள் பாதுகாப்பச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவை டிசம்பர் 25ம் திகதி சந்தித்து இதற்கு ஓர் முடிவுகாண வேண்டியுள்ளனர். அவர் அரசாங்கம் தீவிரவாத சம்பவங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என்றும் நிலைமையை தான் கவனிப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளார். முஸ்லீம் கவுண்சில் தலைவர் எம்.என். அமீன், முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்டும் 19 வலைத் தளங்களை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொள்ளும் முஸ்லீம் தலைவர்களின் முயற்சிகளுக்கு மாறாக, ராஜபக்ஷவின் உறுதிமொழிகள் பயனற்றவை. இந்த பௌத்த குழுக்கள் மென்மேலும் ஆத்திரமூட்டல்களைத் திட்டமிடுகின்றமை தெளிவு.  முஸ்லீம் விரோத உணர்வுகளை தூண்டிவிட நாடு முழுவதிலும் பல நகரங்களிலும் மத குருமார்களின் தலைமையின் கீழ் அது ஊர்வலங்களை நடத்த ஆரம்பித்துள்ளது.

புது பல சேனாவின் வலைத் தளத்தின்படி, பௌத்த வியாபாரத்தையும் முதலீடுகளையும் கட்டியெழுப்பி அவற்றை பேணிக் காப்பதே அதன் குறிக்கோள்களில் ஒன்று. அது ஏழை மக்களை இன மத ரீதியாக ஒருவரை ஒருவர் பிளவுபடுத்தி வைக்கின்ற அதே சமயம், அது சிறிய மற்றும் பெரிய வர்த்தகர்களின் நலன்களுக்கு சேவை செய்கின்றது.

ஞானசேகர, ஆளும் கூட்டணியின் பங்காளியான ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவராவார். அவர், ஹெல உறுமய புத்த சமயத்தை பாதுகாக்குமளவு போர்க்குணம் கொண்டதல்ல எனக் கூறி, இன்னொரு பிக்குவான கிரமா விமலஜோதியுடன் சேர்ந்து, ஹெல உறுமயவில் இருந்து பிரிந்து புது பல சேனாவை அமைத்தார். முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஓரு அங்கமாக, தடம்புரண்டு போயுள்ள ஏழைகள் மற்றும் இளைஞர்களை அதிரடிப் படைகளாக சேர்த்துக்கொள்வதே அந்த அமைப்பின் ஆத்திர மூட்டல்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இந்த அமைப்புக்கும் ஏனைய பௌத்த மற்றும் சிங்கள தீவிரவாத குழுக்களுக்கும் சுதந்திரமாக செயற்பட இடமளிப்பது ஒன்றும் தற்செயலானதல்ல. இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை இனவாத ரீதியில் பிரித்து வைக்க இனவாத பாராபட்சங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளன.      

தசாப்த கால உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாராபட்சமானது பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுடனான நீண்டகால இரத்தக்களரி யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. இப்போது, புலிகளின் தோல்வியின் பின் கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு பின்னர், புலிகள் தலைதூக்குகின்றனர் எனக் கூறிக்கொண்டு தமிழர்-விரோத உணர்வை கிளறும் நோக்குடனான ஒரு பிரச்சாரத்தை இராணுவமும் அரசாங்கமும் தொடுத்துள்ளது.

பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ள நிலையின் கீழ், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் மீண்டும் திரும்பி, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்பார்க்கின்றது. எந்தவொரு கடனைப் பெறவும், கடந்தமுறை சர்வதேச நாணயத்தின் பிணையெடுப்பின் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய கொடூரமான சிக்கன நடவடிக்கைகளிலும் பார்க்க மோசமானவற்றை அமுல்படுத்துவது அவசியமாகும்.

இதுவரை காலமும் தொழிற்சங்கங்களது உதவியுடன் அடக்கிவைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் அமைதியின்மை வெடிக்கக் கூடும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.

தொழிலாளர் எல்லாவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிக்க வேண்டும். சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மீள் கட்டுமானம் செய்வதற்கு தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காக ஐக்கியப்பட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்க முடியும்.