சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Lecture at Historians’ Convention: In Defense of Leon Trotsky

வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் உரை: லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து

By David North
4 October 2012
use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் ஜேர்மனியின் மைன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் வழங்கிய ஒரு உரையை இங்கு  வெளியிடுகிறோம். (காணவும்: ஜேர்மன் வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் லியோன்  ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து கூட்டம்)

மைன்ஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசியர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்குக் கிட்டிய வாய்ப்பை நான் வரவேற்கிறேன். குறிப்பாக வரலாற்று சர்ச்சைகளுக்குப் புதியவரல்லாதவரும் சர்வதேச  கௌரவத்துடனான ஒரு அறிஞருமான பேராசிரியர் மாரியோ கெஸ்லர் உடன் இந்த மேடையைப்  பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். யூத விரோதம் பற்றிய அரசியல் நோயறியும்  ஆய்விலும் மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்திக்கும் யூத மக்களுக்கும்  இடையிலான சிக்கலான உறவு குறித்த ஆய்விலும் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார். அவர் ஆர்வம் கொண்ட துறையின் தன்மையால் அவர் எதை வெளியிட்டாலும் அது நிச்சயமாக யாரையாவது புண்படுத்தும், சமயங்களில் அதில் அவரது நண்பர்களும் கூட இருப்பார்கள் என்பதை பேராசிரியர் கெஸ்லர் முன்கூட்டி அறிந்து வைத்திருக்கிறார். இந்த விடயத்தில் அவருக்கு என் னுபவத்தை தெரிவிக்க முடியும்.

ஜேர்மனியில் இத்தகையதொரு பரந்த பார்வையாளர்களின் கவனத்திற்கு எனதுலியோன்  ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து நூலை கொண்டு வந்த மேஹ்ரிங் புத்தகவெளியீட்டக எனது தோழர்களுக்கும் மற்றும் குறிப்பாக  வொல்வ்காங் வேபருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நூலின் இரண்டாம் பதிப்பு ஒன்று தயாரிப்பில் இருக்கிறது. இது ஒருவகையில் எனக்கு புதிய ஒரு அனுபவமாகும். பல பத்தாண்டுகளாய் எனது சோசலிச இயக்க அனுபவத்தில், எனது நூல்களினதும் துண்டுப் பிரசுரங்களினதும் முதலாவது அச்சுப்பிரதி வாசகர்கள் அனைவரையும் அடைவதற்கு ஒரு சில ஆண்டுகள் காத்திருப்பதென்பதெல்லாம் எனக்கு  ஒருவகையில் நன்கு பழகிய விடயமாகி விட்டது. ’லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து நூல் விடயத்திலோ, அதிலும் குறிப்பாக ஜேர்மன் பதிப்பில், எனக்கு அத்தனை காலம் காத்திருக்க  அவசியமில்லாமல் போய் விட்டது.

Habent sua fata libelli அதாவதுநூல்கள் தமக்கானதொரு தலைவிதியை கொண்டுள்ளன என்று பிரபலமான சொல்வழக்கு உண்டு. உண்மையில், இன்றைய உலகின் ஒப்பீடற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து நான் சமீபத்தில் அறிந்து கொண்டது என்னவென்றால், இந்த சொல்வழக்கு  பழங்காலத்தின் இலக்கண அறிஞரான டெரண்டியானஸ் மவுரஸ் எழுதியதாகக் கூறப்படுகின்ற ஒரு ஆழமான கூற்றின் சுருக்கப்பட்ட எளிமையான பதிப்பு தான் மவுரஸ் எழுதினார்:

”Pro captu lectoris habent sua fata libelli” (அதே வார்த்தை வரிசையில் சொல்வதானால், “வாசகர் என்ன விளங்கிக்கொள்கின்றார் என்பதில் நூல்களின் தலைவிதி தங்கியுள்ளது”) [1]

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வாசகர் ஒரு நூலின் தலைவிதியை உருவாக்குவதில் ஒரு செயலூக்கமிக்கவராக செயல்படுகிறார். ஒரு நூல் தனது வாசகர்களின் ஊடாகத் தான் இந்த  உலகத்தை அடைகிறது.

அதிர்ஷ்டவசமாக, ’லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து நூல் கோட்பாடுரீதியான ஏராளமான கல்வியறிஞர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து விட்டது. பேராசிரியர் பேர்ட்ராண்ட் பட்டனவ்ட் எனது புத்தகம் மற்றும் ரோபர்ட் சேர்விஸ் எழுதியிருக்கும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு ஆகிய இரண்டு நூல்களுக்குமான ஒரு இணைந்த திறனாய்வை எழுதினார். 2011 ஜூன் மாதத்தில் அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ (American Historical Review) சுற்றிதழில் வெளியாகிய இத்திறனாய்வு பெரும் கவனத்தைப் பெற்றது. அவரது திறனாய்வை தொடர்ந்து Suhrkamp பதிப்பகத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டது. அதில் பேராசிரியர்கள் ஹேர்மான் வேபர், மாரியோ கெஸ்லர், ஹெல்முட் டேமர் பேர்ன்ஹார்ட் பயர்லைன், ஹேய்கோ ஹவுமான், விலாடிஸ்லோ ஹெடலர், அந்திரேயா ஹர்டன், ஹார்ட்மட் மேஹ்ரிங்கர், ஓஸ்கர் நெஹ்ட், ஹான்ஸ் ஷ்வ்ரானெக், ஒலிவர் ரத்கோல்ப், பீட்டர்  ஸ்ரைன்பார்க், ரேய்னர் ரொஸ்ரோஃப் மற்றும் ரொல்ஃப் வோர்ஸ்டோபர்  கையெழுத்திட்டிருந்தனர்.

எனக்கும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட பேராசிரியர்களுக்கும் இடையில், இன்னும் சொன்னால் அந்தப் பேராசிரியர்களுக்கு இடையிலேயே கூட, ரஷ்யப் புரட்சிக்கான காரணங்கள் குறித்தும், 1917  அக்டோபரில் நடந்த போல்ஷிவிக் தலைமையிலான கிளர்ச்சிக்கான சமூக அடித்தளம் குறித்தும் சோவியத் ஆட்சியின் தன்மை குறித்தும், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்தாக்கங்கள் மற்றும் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை பேராசிரியர் கெஸ்லர் எழுதினால், என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும், அது நான் எழுதக் கூடிய ஒன்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட  படைப்பாக இருக்கும். அப்படி இல்லாமல் எப்படி இருக்க முடியும்? எங்களது முயற்சிகள் எங்களது  வெவ்வேறு கண்ணோட்டங்களை, வெவ்வேறு நலன்களை, அத்துடன் வெவ்வேறு அனுபவங்களை - சுருக்கமாய்ச் சொன்னால், எங்களது வெவ்வேறு வாழ்க்கைகளை பிரதிபலிப்பதாய் இருக்கும். ஆனால்  அப்போதும் நாங்கள் இருவருமே உண்மையான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இருந்துதான் வேலை செய்து கொண்டிருப்போம்.

உண்மையான வரலாறுகள் அனைத்துமே ஒரு புறநிலை நிகழ்வுபோக்கை மறுகட்டுமானம் செய்வதாகும். பொருள்விளக்க நிகழ்முறை வரலாற்றைத் தெளிவுபடுத்த முனைகின்றதே அன்றி, அதனைத் திரிப்பதற்கு அல்ல. ட்ரொட்ஸ்கி ஒரு புறநிலை சமூக மற்றும் வரலாற்று நிகழ்வுபோக்கின் ஒரு உண்மையான பங்கேற்பாளராய் இருந்தார். அவரது செயல்பாடுகளும் சிந்தனைகளும் ஒரு பெரும் ஆவணகாப்பகமாக பதியப் பெற்றிருக்கிறது. ஏராளமான மற்றும் பல்தரப்பட்ட ஆதாரங்களில் இருந்தான ஆவணங்கள் உள்ளன. இந்த அளவுக்கு முற்றுமுதலாய் மாறுபட்ட எதிர்வினைகளைத் தூண்டிய இன்னொரு மனிதரை நினைத்துப் பார்ப்பதும் கடினமே. ட்ரொட்ஸ்கியைப் பின்தொடர்ந்தவர்களின் நினைவுகளும் சாட்சியங்களும் இருக்கின்றன; அவரை வெறுத்தவர்களின் கண்டனங்கள் இருக்கின்றன. ட்ரொட்ஸ்கி அவரது காலத்தின் மிகப்பெரும் வீச்சுடனான எழுத்தாளராக இருந்தார். ஹார்வர்டில் உள்ள ஹஃப்டன் நூலகத்தில் இருக்கின்ற மிகப்பெரும் ஆவணகாப்பகத் தொகுப்பிலும் கூட அவர் எழுதிய அத்தனை படைப்புகளும் கிடையாது. அவர் எழுதியவற்றில் ஒரு கணிசமான பகுதி இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. ட்ரொட்ஸ்கியின் புத்தகங்களிலும், கட்டுரைகளிலும், செய்தித்தாள் கட்டுரைகளிலும் அத்துடன் விவாதங்களின் படியாக்கங்களிலும் கூட வெளிப்பாடு கண்டிருக்கிற அவரது சிந்தனைகள் எண்ணிறந்த நாடுகளின் அரசியல் மற்றும் புத்திஜீவித்தன வாழ்வின் மீது செறிவான மற்றும் நீடித்த செல்வாக்கை செலுத்தி வந்திருக்கின்றன.

ட்ரொட்ஸ்கியின் அளவுக்கு ஒரு உயர்ந்த வரலாற்று ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பிரம்மாண்டமான பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு வரலாற்றாசிரியர் தன்னை காப்பக ஆவணங்களுக்குள் அமிழ்த்திக் கொள்ளத் தயாரித்துக் கொண்டாக வேண்டும். அந்த மனிதரையும் அவர் வாழ்ந்த காலங்களையும் போதுமான அளவு புரிந்து கொள்வதற்கு அவசியப்படுகின்ற வருடங்களை இன்னும் சொன்னால் தசாப்தங்களையும் கூட அர்ப்பணிப்பதற்கு அவர் தயாரித்திருக்க வேண்டும், ஒரு சில மாதங்கள் போதாது.

ஒரு வரலாற்றாசிரியர், அவரது பணியின் காரணத்தாலேயே, தன்னை ஒரு பரந்த புறநிலை ஆவண வரலாற்றுக்குள் அமிழ்த்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார் என்பதே நான் வலியுறுத்த முயலும் புள்ளி  ஆகும். ஒவ்வொரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியருக்கும் ஒருநிலைப்பாடு இருக்கும் என்பது உண்மையே. ஆனால் அவரது இலக்குகளில் இருந்து மாறுபட்ட இலக்குகளைக் கடைப்பிடித்ததற்காக, அவரது பார்வைகளில் இருந்து மாறுபட்ட பார்வைகளைக் கொண்டிருந்ததற்காக, அத்துடன் அவர் வாழ்ந்த காலங்களில் இருந்து மாறுபட்ட காலத்தில் வாழ்ந்ததற்காக அவரது படைப்பின் பாத்திரத்துக்கு உபதேசவுரை நிகழ்த்துவதையும், பிரசங்கம் செய்யவும் மற்றும் அவரைக் கண்டிப்பதையும் தனது வேலையாக இவர் கொள்ளக் கூடாது. எழுதுபவர் அரசியல்ரீதியாக பழமைவாத ஆதரவு வரலாற்றாசிரியராக இருந்து, அவர் ஒரு ரஷ்ய கம்யூனிஸ்டை குறித்து எழுதும் பணியைக்  கையிலெடுக்கிறார் என்றால், அப்போதும் அவர் தனது படைப்பின் நாயகனின் சிந்தனைகளைச் செதுக்கிய செயல்களை தீர்மானித்த வரலாற்று மற்றும் சமூகச் சூழலை புரிந்து கொள்வதற்கு முயலவேண்டும். வரலாற்றாசிரியருக்கென்று அவரது சொந்த கருத்துகள் இருக்கும், இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அவரால் ஒரு சுவாரஸ்யமான படைப்பை உருவாக்க முடியாது. இருப்பினும் அவர் தனது படைப்பின் நாயகனின் சிந்தனைகளைப் புரிந்து கொள்வதுடன், குறைந்தபட்சம் அவை வெளிப்பாடாக அமைந்த வரலாற்று சூழ்நிலைகளையும் நிலைமைகளையும் புரிந்து கொள்ளும் பொருளிலேனும், அந்த சிந்தனைகளுக்கான அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும். E.H.கார் நினைவுகூர்ந்ததைப் போல, வரலாற்றாசிரியர் R.G.காலிங்வுட் கூறியதில் இருந்து ஒரு சொற்றொடரை இரவல் பெற்றுக் கூறுவதானால், “வரலாற்றாசிரியர் அவரது கையாளும் நபரின் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தவற்றை தன் தலையினுள் மறுபடியும் உருவகித்து பார்த்தாக வேண்டும்.....” [2]

ஒரு வரலாற்றாசிரியர் காப்பக ஆவணங்களையும் அத்துடன்உண்மைகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகின்ற ஒரு விரிந்த வகையின் கீழ் விழுகின்ற அத்தனையையும் அணுகின்ற விதத்தில் ஒரு அப்பழுக்கற்ற நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லவும் அவசியமில்லை. “வாசிக்க இயன்ற அத்தனையையும் வாசிக்க வேண்டும் என்கிற சொற்றொடர் மிகப் பிரபலமுடையது என்றாலும் கூட எந்த வரலாற்றாசிரியரும் எந்தவொரு முக்கியமான பாத்திரத்தின் வாசிக்க இயன்ற அத்தனையையும் வாசித்ததில்லை தான். ஆனால் அந்த வரலாற்றுப் பாத்திரத்தின் பன்முகத் தன்மையையும் மறுகட்டுமானம் செய்வதற்கு அவசியமான அத்தனையையும் தேடிக் கண்டுபிடிக்கவும் ஆராயவும் அந்த ஆசிரியர் முழு நம்பிக்கையுடன் முயலுவார். விபரங்களின் தெரிவு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாயும் தன்போக்கிலேயுமாய் இருக்கக் கூடாது, அவை துல்லியமாக வழங்கப்படல் வேண்டும். ஒரு வரலாற்றாசிரியர் சேகரித்த விபரங்கள் தவறானவை என்றோ, அவரது கூற்றுகளும் திட்டவட்டமான முடிவுகளும் அவர் மேற்கோளிடுகின்ற ஆவணங்களால் தாங்கி நிற்க முடியாத நிலையில் இருக்கின்றன என்றோ, அல்லது அவர் ஒரு முன்தீர்மானித்த விவரிப்பின் அனுமானிப்பு அவசியங்களுக்கு பொருத்தமான வகையில் வரலாற்று ஆவணங்களை பொய்மைப்படுத்தியுள்ளார் என்றோ கண்டுபிடிக்கப்படுவதைக் காட்டிலும் அந்த வரலாற்றாசிரியரின் மரியாதைக்கும் அவரது படைப்பின் நம்பகத்தன்மைக்கும் சீர்செய்யவியலாத சேதத்தைக் கொண்டுவரக் கூடியது வேறெதுவுமில்லை.

கடந்த மூன்று ஆண்டு காலத்தில், நான் சேர்விஸின் வாழ்க்கை வரலாறு குறித்த எனது முதல் பகுப்பாய்வை எழுதிய நாள் முதலாகவே, அவரது படைப்பு வரலாற்று எழுத்தினை கேலிக்கூத்தாக்குவதாய் அமைந்திருக்கிறது என்பது மறுக்கவியலா வண்ணம் நிறுவப்பட்டிருக்கிறது. அவரது புத்தகம், பதினான்கு வரலாற்றாசிரியர்களின் கடிதம் மிகத் துல்லியமாகக் கூறுவதைப் போல, “ஒரு கீழ்த்தரமான வசைப்பாடல்”. அதன்பின் பேர்லினில் இரண்டு உரைகளிலும் லைப்ஸிக்கில் ஒரு உரையிலும் என மேலதிக உரைகளின் வழியில் என்னுடைய விமர்சனத்தை கணிசமாக  விரிவுபடுத்தியிருக்கிறேன், இருப்பினும் கூட என்னால் சேர்விஸ் புத்தகத்தின் ஒரு தொகுதியில் சமாளித்துத் திணித்திருக்கும் பிழைகள், பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான சித்தரிப்புகளை மொத்தமாய் வகைப்படுத்தி விட முடியவில்லை. வரலாற்று ஆவணங்களின் தவறான சித்தரிப்புக்கு வெளிப்பட்ட காரணமேதும் இல்லாத இடங்களிலும் கூட அதனைச் செய்ய சேர்விஸ் நிர்ப்பந்தமுற்றிருக்கும் அளவுக்கு அவரின் விவரிப்பு முழுவதிலும் நேர்மையின்மையின் இழை ஆழமாய்ப் பின்னிப் படர்ந்திருக்கிறது.

உதாரணத்திற்கு, இன்றைய கூட்டத்திற்கு குறிப்புகள் தயார் செய்து கொண்டிருந்த வேளையில், நான் மீண்டுமொருமுறை சேர்விஸ் எழுதிய வாழ்க்கை வரலாற்றை பார்வையிட்டேன். எந்தப் பக்கமாயிருந்தாலும் ஏதேனும் ஒரு பிழையாவது கிடைத்து விடும் என்பது தெரியும் என்பதால் ஏதோ ஒரு அத்தியாயத்தை விருப்பம்போல எடுத்தேன். “போருக்கு எதிரான போர் என்கிற தலைப்பில் அத்தியாயம் 14. முதலாம் உலகப் போரின் வெடிப்பு ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மீது ஏற்படுத்திய பாதிப்புகளை இது கையாள்கிறது. 137 ஆம் பக்கத்தில் சேர்விஸ் விவரிக்கின்ற ஒரு சந்திப்பில் ட்ரொட்ஸ்கியும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹேர்மன் மோல்கென்புரும் சூரிச் வீதி ஒன்றில் சந்திக்கிறார்கள். போர் வேகமாய் முடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாக ஹேர்மன் தெரிவிக்கிறார். மோல்கென்புரின் மேற்கோள் வார்த்தைகளுக்கு உடனடியாக அடுத்து சேர்விஸ் பின்வரும் வாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறார்: “ட்ரொட்ஸ்கியின் பேரழிவுகரமான கணிப்பை ஒருகற்பனாவாதியின் தூற்றலாக மோல்கென்புர் கருதினார்.” இந்த மொத்த சம்பவமும் ட்ரொட்ஸ்கியின் எனது வாழ்க்கை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, சேர்விஸ் அடிக்குறிப்பையும் இணைத்திருக்கிறார்.

அந்தக் குறிப்பிடப்பட்ட பத்திக்குச் சென்றால், மோல்கென்புரின் வார்த்தைகளை ட்ரொட்ஸ்கி  நினைவுகூர்ந்தவாறே சரியாக சேர்விஸ் மறு உபயோகம் செய்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால்ட்ரொட்ஸ்கியின் பேரழிவுகரமான கணிப்பை ஒருகற்பனாவாதியின் தூற்றலாக மோல்கென்புர்  கருதினார் என்ற அடுத்துவருகின்ற பத்தி தான் ட்ரொட்ஸ்கி கூறுவதை கணிசமாய் மாற்றி விடுகிறது. “ட்ரொட்ஸ்கியின் பேரழிவுகரமான கணிப்பை ஒருகற்பனாவாதியின் தூற்றலாக மோல்கென்புர் கருதியதாக ட்ரொட்ஸ்கி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அவர் கூற்று வேறு விதமாய்ச் செல்கிறது. மோல்கென்புரின் மேற்கோளிட்ட வார்த்தைகளை தொடர்ந்து, ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

மோல்கென்புர் சொல்லியது சூழ்நிலை குறித்த தனது சொந்த மதிப்பீட்டை அல்ல என்பது வாஸ்தவமே; சமூக ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தைத் தான் அவர் வெறுமனே  வெளிப்படுத்தியிருந்தார். அதேசமயத்தில், செயின்ட் பீட்டர்ஸ்பேர்கிற்கான பிரெஞ்சுத் தூதர், போர் கிறிஸ்துமஸுக்கு முன்னால் முடிந்து விடும் என்று ஐந்து பவுண்டு ஸ்டெர்லிங்கை புக்கானனிடம் பந்தயம் கட்டியிருந்தார். இல்லை, ‘கற்பனாவாதிகளாகிய நாங்கள் சமூக ஜனநாயகக் கட்சியையும் இராஜதந்திர வட்டங்களையும் சேர்ந்த இந்த யதார்த்தவாத கனவான்களை விடவும் சற்று மேம்படவே விடயங்களை  முன்னெதிர்பார்த்தோம். [4]

ட்ரொட்ஸ்கி உண்மையில் எழுதியதைப் படித்தால் உருவாகும் காட்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதொரு காட்சியை சேர்விஸின் விவரிப்பு வாசகரின் மனதில் உருவாக்குகிறது. சேர்விஸின் விவரிப்பில், வாசகருக்கு கிடைக்கும் கற்பனையான காட்சியில் வயதான சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தனக்கு முன்னால் ஒரு தூற்றும் ட்ரொட்ஸ்கி பேரழிவுகரமான வார்த்தைகளை கக்கக் காண்கிறார். ட்ரொட்ஸ்கி ஒரு அரசியல் கேலிப்பாத்திரமாய் குறைக்கப்படுகிறார். ஆனால்  உண்மையான உரையில், ட்ரொட்ஸ்கி மோல்கென்புருக்கு உடனடியாக என்ன பதிலளித்தார் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாறாக, சந்தர்ப்பவாதிகள் மற்றும் இராஜதந்திரிகளின் தவறான வழிநடத்துதலுடனான அரசியல் கணக்குகளை நினைவுகூர்கையில் ஒரு நகைமுரணான தொனியை ட்ரொட்ஸ்கி கையிலெடுக்கிறார். இதில் யார்கற்பனாவாதிகள் என்று ட்ரொட்ஸ்கி வாசகரிடம் கேட்கிறார். அழிவுகரமான தாக்கங்களை முன்னெதிர்பார்த்த புரட்சிகரவாதிகளா அல்லது ஒரு சில மாதங்களில் எல்லாம் இயல்புநிலைக்குத் திரும்பி விடும் என்று நம்பியயதார்த்தவாதிகள் என்பவர்களா? சேர்விஸ் வரலாற்றுக் காட்சியை திரித்துக் காட்டுவது மட்டுமல்ல, மொத்த பத்தியின் அரசியல் விடயத்தையும் தவறவிடுகிறார்.

அடுத்த ஒரு சில பத்திகள் தள்ளி, சேர்விஸ் எழுதுகிறார்: “அவரது [ட்ரொட்ஸ்கியின்] வாழ்வில் முதன்முறையாக பிளெக்கானோவுடன் வாதக்களத்தில் நுழைந்தார், இப்போது பிளெக்கானோவை முழு அலட்சிய எண்ணத்துடன் பார்த்தார்.” [5] இந்த வாக்கியத்திற்கு அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ட்ரொட்ஸ்கி அவரை விடவும் வயதில் மிக மூத்த புரட்சிகரவாதியான பாவேல் பி.ஆக்செல்ராடுக்கு 1914 டிசம்பர் 22 அன்று எழுதிய கடிதத்தை மேற்கோளிடுவதாக சேர்விஸ் நமக்குத் தெரிவிக்கிறார். இது கலிபோர்னியாவின் பாலோ அல்டோவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஹூவர் இன்ஸ்டிடியூட்டில் -- ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கான தனது ஆராய்ச்சியின் அநேகப் பகுதியை சேர்விஸ் இங்கு தான் செய்தார் -- இருக்கின்ற பிரசித்திபெற்ற நிகோலெவ்ஸ்கி தொகுப்பின் பகுதியாக இருக்கிறது. முதன்முதலில் இந்தப் பத்தியை படித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது பிளெக்கானோவ் போரை ஆதரித்தமைக்காக ட்ரொட்ஸ்கி நிச்சயம் வருந்தினார் என்கிற அதேசமயத்தில்ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தையை அவர்முழுமுதல் அலட்சியத்துடன் எண்ணினார் என்பதைப் படிக்க  ஆச்சரியமாய் இருந்தது. போல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வந்த பின்னரும், ட்ரொட்ஸ்கி நெகிழ வைக்கும் பல கட்டுரைகளில் பிளெக்கானோவுக்கான தனது தீவிரமான மற்றும் தொடர்ந்த மரியாதையை உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் 1914 டிசம்பரில் ஆக்செல்ராடுக்கு ட்ரொட்ஸ்கி உண்மையில் என்ன தான் எழுதினார்? ட்ரொட்ஸ்கி ஒரு பழைய தோழருக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தில் பிளெக்கானோவின் அரசியல் காட்டிக் கொடுப்பினால் தூண்டப்பட்ட மன ஆவேசத்துக்கு  வடிகால் தேடியிருந்தாரா?

ட்ரொட்ஸ்கி ஆக்செல்ராடுக்கு எழுதிய கடிதத்தில் மூன்று சிறிய பத்திகள் இருக்கின்றன. இதில் முதல் பத்தியில் மட்டும் தான் பிளெக்கானோவுக்கான ஒரு குறிப்பும் இருக்கிறது. அதில்: பிளெக்கானோவின் துண்டுப்பிரசுரத்தை படித்தீர்களா? அதைக் குறித்து தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருக்கிறேன். என் வாழ்க்கையில் முதன்முறையாக பிளெக்கானோவுக்கு எதிராக  வாதக்களத்தில் இறங்குகிறேன். அவர் முன்பு எனக்கு உறுதியானவராக தோன்றியதுபோல் இப்போது  இல்லை. [6]

மூல ஆதாரத்திற்கு அணுகல் இல்லாத அநேக வாசகர்கள் சேர்விஸ் அவர் மேற்கோளிடும் கடிதத்தின் உள்ளடக்கத்திற்கு துல்லியமாக பொருள்விளக்கம் கொடுத்திருப்பதாகவே கருதக் கூடும். ஆனால் அத்தகையதொரு நற்சான்றிதழை சேர்விஸுக்குக் கொடுப்பது தவறானதாகும். பிளெக்கானோவ் குறித்த ட்ரொட்ஸ்கியின் மனோபாவம்முற்றுமுதல் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக ஆகி   விட்டிருந்ததாய் காட்டுகின்ற எதுவும் மேற்கோளிடப்பட்ட பத்தியில் இல்லை. ட்ரொட்ஸ்கியின் சொந்தப் பாத்திரத்தின் மீதும் பிரதிபலிக்கச் செய்யப்படுகின்ற இந்த உணர்ச்சி வெறுமனே சேர்விஸ் கண்டுபிடித்ததாகும். உண்மையில், இந்தச் சிறிய கடிதம் பிளெக்கானோவின்  பரிணாம வளர்ச்சியின் மீது ஒரு வருத்தம் மற்றும் விசனத்தின் தொனியையே வெளிப்படுத்துகிறது. அன்றைய சூழலில் இந்த உணர்ச்சிகள் சேர்விஸ் விசனத்துடன் சுட்டிக்காட்டுவதைக் காட்டிலும் மிக மிகப் பொருத்தமானவையாக இருக்கின்றன.

அடுத்த இரண்டு பக்கங்கள் தள்ளி, 1915 வசந்த கால சமயத்தில் ட்ரொட்ஸ்கி பாரிஸ் வந்து சேருவதை தெரிவித்த பின்னர், சேர்விஸ் எழுதுகிறார்:

பாரிஸில் தாங்கள் மிகவும் சிக்கனமான வாழ்க்கையை வாழ்ந்ததாக ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவியும் கூறினர். அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 1914 இல் அவர் ஆறு பெரும் கட்டுரைகளை கியவ்ஸ்கயா மிஸ்ல்க்கு (Kievskaya Mysl) அனுப்பினார். 1915-16 முழுமைக்கும் அந்த செய்தித்தாள் அவருக்குத் தொடர்ந்து வேலையளிக்கின்ற அளவுக்கு இக்கட்டுரைகளின் வெற்றி  அமைந்திருந்தது; அத்துடன் போரில் பிரான்சும் ரஷ்யாவும் கூட்டாளிகளாய் இருந்ததால் பாரிஸில் இருக்கும் அவரது வங்கிக் கணக்கிற்கு பிரச்சினையில்லாமல் பணம் வந்து சேர்வதற்கு அவருக்கு நம்பிக்கை கொள்ள முடிந்தது. போர்க்கால பிரான்சில் ட்ரொட்ஸ்கி குடும்பத்திற்கு பிரச்சினை பெரிய அளவில் இல்லை. [7]

ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தாலியா செடோவாவும் பாரிஸில் தங்களது வாழ்நிலைமை குறித்துப் பொய் கூறியதைப் போன்று சேர்விஸ் எழுதுகிறார். போரின் காலத்தில் இந்தத் தம்பதி கடும்சிக்கனத்துடன் வாழ்ந்ததாய் கூறுவதற்குஆதாரம் எதுவுமில்லை என்று  திட்டவட்டமாக அவர் கூறுகிறார். அப்படியானால் அவர்கள் எப்படித் தான் வாழ்ந்தனர்? ஆடம்பரமாகவா? ஒரு வசதியான நடுத்தர-வர்க்க வாழ்க்கையின் வசதிகள் அவர்களுக்கு கிட்டியதா? ட்ரொட்ஸ்கிக்கு தனிநபர் வருவாய் ஆதாரங்களாக சேர்விஸ் வழங்குகின்ற விவரங்கள் இவ்வளவு தான்: 1) 1914 இல் Kievskaya Mysl என்ற தாராளவாத செய்தித்தாளுக்கு அவர் ஆறு  கட்டுரைகளை எழுதினார்; 2) 1915-16 ஆண்டுகளிலும் கூட அவர் அதே செய்தித்தாளிடம் வேலை பெற்றவராய் இருந்தார். ட்ரொட்ஸ்கிக்கு கிடைத்த சன்மானம் எவ்வளவு என்பது குறித்த சரியான தகவல்கள் சேர்விஸ் வழங்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, “பணம் பாரிஸ் கணக்குக்கு பத்திரமாக மாற்றப்படுவதற்கு ட்ரொட்ஸ்கி நம்பிக்கை கொள்ள முடிந்தது என்று எந்தவித ஆதரவு ஆதாரமும் இன்றி சேர்விஸ் கூறுகிறார். அது தான் உண்மை என்று சேர்விஸ் அனுமானிப்பதற்கு  அடிப்படையாக இருந்த தகவல் விவரங்கள் என்ன?

சேர்விஸின் துரதிர்ஷ்டம், ட்ரொட்ஸ்கியின் சொத்துகள் மற்றும் பணத்துக்கு அவருக்கிருந்த சுலப அணுகல் குறித்த சேர்விஸின் சுய-திட்டவட்டமான கூற்றுகளை அதற்கு ஒரு பக்கத்திற்கு முன்னால்  அவர் குறிப்புதவி காட்டியிருக்கும் ஒரு கடிதத்தின் உரை மறுதலிக்கிறது. ட்ரொட்ஸ்கி டிசம்பர் 11, 1915 அன்று ஆக்செல்ராடுக்கு எழுதினார்:

உங்களிடம் ஒரு உதவி தேவை. 20ம் தேதிக்கு நத்தாலியா. இவ். ட்ரொட்ஸ்கயா ஒரு அச்சகத்திற்கு ஒரு பெரும் தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பணம் 200 ரூபிள் வரை அங்கிருக்கும்  தூதரக அலுவலகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது, எங்கேயெனெத் தெரியவில்லை. பணத்தை தந்தி வழியாக அனுப்புவதற்குகியவ்ஸ்கயா மைஸ்ல்க்கு (Kievskaya Mysl) நான் எழுதினேன். ஆனால்  பணம் உரிய நேரத்தில் வந்து சேராதென்று அஞ்சுகிறேன். உங்களின் உதவியில் அவருக்கு அதிகப்பட்சம் 10-12 நாட்களுக்கு ஒரு  கடனுதவி கிடைக்குமா? இது அவருக்கு தர்மசங்கடங்களை தவிர்க்க உதவும். மார்டோவ் எங்கிருக்கிறார்: சூரிச்சிலா அல்லது அவர் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பி விட்டாரா? [8]

இந்தக் கடிதத்தில் ட்ரொட்ஸ்கி ஆக்செல்ராடிடம் ஒரு கடனுதவி கேட்கிறார். ட்ரொட்ஸ்கியின் மனைவி அச்சகத்திற்கு கணிசமான ஒரு தொகை தர வேண்டியிருக்கிறது. அவர்கள் தமது தனிநபர்  வருமானத்தினை அரசியல் வேலைக்காய் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. சேர்விஸ் கூறுவதற்கு நேரெதிரான வகையில், ரஷ்யாவில் இருந்து பிரான்சுக்கு பணம் பரிவர்த்தனையாவது அவர் கூறுகின்ற அளவுக்கு பிரச்சினைகளில்லாத-விடயமாக இல்லை.  “தர்மசங்கடங்களைத் தவிர்க்க ட்ரொட்ஸ்கிக்கும் அவரது மனைவிக்கும் மிக அவசியமாக இருக்கின்ற 200 ரூபிள்கள் தூதரக அலுவலகத்தில் எங்கே சிக்கியிருக்கிறதெனத் தெரியவில்லை. ஆக சேர்விஸ் மறுபடியும் ஒருமுறை தவறாகச் சித்தரிப்பும் செய்திருக்கிறார், அத்துடன் காப்பகங்களில் இருக்கும் முக்கியமான விவரங்களை அவரது வாசகர்களிடம் காட்டாமல் மறைத்துமிருக்கிறார், காரணம் அவை  இவரது நேர்மையற்ற வகையில் இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தனது நோக்கங்களுக்காக விவரிக்கப்பட்ட கருத்துக்களுடன் மாறுபடுகின்றன.

ட்ரொட்ஸ்கி 1907 இல் சைபீரியாவில் இருந்து ஆச்சரியமூட்டும் வகையில் தப்பித்ததற்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் நாடுகடத்தப்பட்ட அரசியல் பிரஜையாய் அவர் செலவிட்ட அந்த சகாப்தத்தின் சமயத்தில் ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவியும் தாங்கிக் கொண்டு வாழ்ந்த வாழ்நிலைமைகள் குறித்து நமக்கு உண்மையாக என்ன தெரியும்? 1907 முதல் 1914 வரை ஏழு ஆண்டுகளுக்கு அவர் வாழ்ந்த வியன்னாவின் வாழ்நிலமை குறித்து ட்ரொட்ஸ்கி இந்த சுருக்கமான விவரிப்பை  வழங்கியிருக்கிறார் பாருங்கள்:

"கியவ்ஸ்கயா மிஸ்ல் (Kievskaya Mysl) பத்திரிகையில் எனது சம்பாத்தியம் எங்களது கண்ணியமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது. ஆனாலும் சில மாதங்களில் பிராவ்தாவுக்கான எனது வேலையால் வருமானம் தருகின்ற வரி ஒன்றை எழுதக்கூட நேரமில்லாது போய் விட்டது. நெருக்கடி புகுந்து விட்டது. அடகுக் கடைகளுக்கான வழியை என் மனைவி தெரிந்து கொண்டார், நான் ஓரளவுக்கு வசதியுடன் இருந்த நாட்களில் வாங்கியிருந்த புத்தகங்களை எல்லாம் புத்தகக் கடைகளில் விற்க வேண்டியதானது. எங்களது கண்ணியமான வசதிகளும் கூட வீட்டு வாடகை கொடுப்பதற்காக பறிகொடுக்கப்பட்ட சமயங்களும் இருந்தன. இரண்டு குழந்தைகள் எங்களுக்கு இருந்தன, ஆனால்  செவிலி கிடையாது; எங்களது வாழ்க்கை என் மனைவிக்கு இரட்டைச் சுமையாக இருந்தது. ஆயினும் என் மனைவி புரட்சிகர வேலையில் எனக்கு உதவுவதற்கான நேரத்தையும் சக்தியையும்  கண்டுபிடித்துக் கொண்டார். [9]

ரஷ்யப் புரட்சிகரவாதியான மோய்சியே ஓல்கினின் நினைவுகூரல்களில் இருந்து ட்ரொட்ஸ்கி சொன்னதை உண்மை என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவர் 1918 இல் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகளின் ஆரம்ப தொகுப்பு ஒன்றிற்கான முன்னுரையில், ஒரு நாடுகடத்தப்பட்ட பிரஜையாக ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை குறித்த ஒரு விவரிப்புக்கும் இடமளித்தார்.

வியன்னாவில் அவரது வீடு ஒரு ஏழையின் வீடாக இருந்தது, வாரத்திற்கு 18 டாலர்கள் சம்பாதிக்கின்ற ஒரு சாதாரண அமெரிக்கத் தொழிலாளியினுடையதைக் காட்டிலும் ஏழ்மை படைத்திருந்தது. ட்ரொட்ஸ்கி [10] வாழ்நாள் முழுவதும் ஏழையாக வாழ்ந்தார். வியன்னாவில் உழைக்கும் மக்கள் வாழ்கின்ற புறநகர்ப்பகுதியில் அவரது மூன்று அறைகளும் வசதிக்கு அவசியமானதை விடவும் குறைந்த மரச்சாமான்களையே கொண்டிருந்தன. அவரது ஆடைகள் ஒரு நடுத்தர வியன்னாவாசியின் கண்களில்நாகரீக மனிதராக அவரைக் காட்ட முடியாத அளவுக்கு மலிவானவை. நான் அவரது வீட்டுக்குச் சென்ற சமயத்தில், திருமதி.ட்ரொட்ஸ்கி வீட்டுவேலைகள் செய்து கொண்டிருந்தார். அவர்களது வெளிர்நிற முடி கொண்ட இரண்டு அருமையான பையன்களும் நிறையவே உதவி செய்து கொண்டிருந்தனர். அந்த வீட்டுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்த ஒரே விடயம் அதன் ஒவ்வொரு மூலையிலும் குவிந்திருந்த புத்தகங்களும் கண்ணுக்குப் புலப்படாத அவர்களது பெரும் நம்பிக்கைகளும் தான். [11]

சேர்விஸ் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நோக்கமின்றி தெரிவுசெய்த வெறும் நான்கு பக்கங்களில் இருந்தான வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் உதாரணங்களை மட்டுமே எடுத்துக்  கூறியிருக்கிறேன். இன்னும் இதுபோன்ற பல பத்து உதாரணங்களை எந்தச் சிக்கலுமின்றி என்னால் எடுத்துக் காட்ட முடியும். இந்தப் பிழைகளில் சிலவற்றை, தனியாகப் பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் அவை மிகச் சிறிதாய் தோன்றலாம். ஆனால் 500 பக்கங்களில் விரவியிருக்கும் அதன் ஒட்டுமொத்த விளைவைப் பார்த்தால், அது உண்மையான வரலாற்று நபர் ஒருவரை ஒரு குரூரமாக யதார்த்தத்தை திரிபுபடுத்துவதாக இருக்கின்றது. ஒரு சமகால கம்யூனிச-விரோதியின் நிர்ணயங்களுக்குப் பொருந்துகின்ற ஒருட்ரொட்ஸ்கியே வாசகர்க்கு வழங்கப்படுகிறார்.

சேர்விஸின் வேலையைப் பாராட்டுகின்ற உல்றிச் ஸிமிட் Neue Zürcher Zeitung இன் வலைப் பதிப்பில் வெளியிடப்பட்டிருக்கும் திறனாய்வு ஒன்றில், சிறு சிறு புள்ளிவிவரங்களில் இருக்கும் சிறு தகவல் பிழைகள் (அவர் “Monita" என்ற பதத்தை பயன்படுத்துகிறார்) இந்தப் படைப்பின்  ஒட்டுமொத்த மதிப்பில் இருந்து கணிசமாக விலகிச் செல்லச் செய்வதில்லை என்று வாதிடுகிறார். அந்நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அவர் பின்வருமாறு அறிவிக்கிறார்: “நோர்த்தும் சரி பட்டனவ்டும் சரி, ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர வெறி மற்றும் வன்முறை மீதான அவரது விருப்பம் ஆகியவற்றின் மீதான சேர்விஸின் அடிப்படையான விமர்சனத்தில் இருந்து கவனம் விலகுமளவுக்கான வாதங்கள்  எதனையும் முன்வைத்திருக்கவில்லை. ட்ரொட்ஸ்கி 1918 இல் இரும்புக்கரத்துடன் சிவப்பு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார் என்பதோடு 1921 இல் குரோன்ஸ்டாட் மாலுமிகள் கிளர்ச்சியை குருதிபாய ஒடுக்கவும் உத்தரவிட்டார்.” [12]

ஸிமிட் ஒரு வரலாற்றாசிரியராக வாதிடாமல் ஒரு குட்டி-முதலாளித்துவ நன்னெறிவாதியாக வாதிடுகிறார். சேர்விஸ் எழுதியிருக்கும் தகவல் பிழைகளையும் இட்டுக்கட்டல்களையும் அம்பலப்படுத்துவதென்பது  நன்னெறிரீதியான காரணங்களின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கியை அவர் கண்டிப்பதில் இருந்து கவனம் விலகச் செய்து விட முடியாது என்பது தான், ஒட்டுமொத்தத்தில், அவரது நிலைப்பாடாக இருக்கிறது.   ’அவ்வாறானால் சேர்விஸ்நான் ஏன் ட்ரொட்ஸ்கியை வெறுக்கிறேன் என்ற தலைப்பிலான ஒரு துண்டுப் பிரசுரத்தை தான் எழுதியிருக்க வேண்டும்; இந்தப் படைப்பை ஒரு வரலாற்று ஆளுமையின் வாழ்க்கைவரலாறாக கூறாமல், மாறாக நன்னெறி சார்ந்தவிடயம், அரசியல்விடயம் மற்றும் இன்னும் சொன்னால் மத உறுதிப்பாடுகள் விடயத்திலான தனது சொந்த தனிநபர் அறிக்கையாக இதை வெளியிட்டிருக்க வேண்டும் என்பது தான் மேற்கூறிய போக்கிலான வாதத்திற்கு உரிய பதிலாய் இருக்க முடியும். 1918  இல் சிவப்பு பயங்கரத்திற்கும் (போல்ஷிவிக் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் லெனின் மயிரிழையில் தப்பிய ஒரு மரணத் தாக்குதலுக்கும் பின்னர் இது தொடங்கியது) குரோன்ஸ்டாட்  கிளர்ச்சியை ஒடுக்குவதற்கும் ட்ரொட்ஸ்கி ஆதரவளித்தார் என்பது எவ்வாறு வரலாற்று ஆவணங்களை நேர்மையாக அணுகுவதற்கும் ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக் ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுத்த வரலாற்று சூழ்நிலைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை புரிந்து கொள்வதற்கு மற்றும் விளக்குவதற்கு சற்று முனைவதற்கும் சேர்விஸிற்கு இயலாமல் செய்தது என்பதை விளக்குவதற்கு உல்ரிஷ் ஸிமிட் தவறிவிடுகிறார்.

ஒரு உண்மையான வரலாற்றாசிரியர் நன்னெறி விடயங்களில் உணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் ஒரு நன்னெறி ரீதியான கண்டிப்பு என்பது சரியாக இருக்க வேண்டுமானால், அது அந்த விவரிப்பின் தர்க்கத்தில் இருந்தே இயல்பாக அழுத்தத்துடன் பீறிட்டு வெளிவருவதாய் இருக்க வேண்டும். மாறாக அந்த வரலாற்றாசிரியர் தனதுநன்னெறி விடயத்தை ஆக்கிக் காட்டும் பொருட்டு வரலாற்று விபரங்களை மறைப்பதோ பொய்மைப்படுத்துவதோ அவசியம் எனக் கருதக்கூடாது. இயன் கெர்ஷா போன்றதொரு உண்மையான வரலாற்றாசிரியர் ஹிட்லரை நோக்கி விரலைக் காட்டுவதற்கோ ஹிட்லர் எத்தனை பயங்கரமானவராக இருந்தார் என்று தனது வாசகருக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருப்பதற்கோ அவசியம் நேரவில்லை. ஹிட்லரின் குற்றவியல் அம்சங்களும் அவர் தலைமையிலான ஆட்சியின் பயங்கரமும் வரலாற்றாசிரியரின் விவரிப்பில் இயல்பாக வெளிப்பட்டன. ஆவண வரலாற்றிலும் இரண்டாம்நிலை இலக்கியத்தின் ஒரு பரந்த  அங்கத்திலும் கெர்ஷா கைதேர்ந்தவராய் இருந்தார் என்பது எப்போதும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்றாக இருக்கிறது. அதுவும் தவிர, ஒரு வரலாற்றாசிரியராகவும், ஹிட்லர் மீதான கெர்ஷாவின் ஆர்வம் வெறுமனே ஒரு தனிநபர் மீதானது இல்லை. எப்படி இத்தகையதொரு மனிதர் அதிகாரத்துக்கு வருவதற்கும் பரந்த மக்களின் போற்றுதலைப் பெறுவதற்கும் இயலுமாகியது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் விளக்குவதற்கும் அவர் முனைந்தார்.

ஒருவிதத்தில் பார்த்தால், கெர்ஷா எடுத்துக்கொண்ட விடயம், நன்னெறி விடயமாக இருக்கலாம். அவர் வரலாற்று ஆவணங்களை நேர்மையாகவும் திரிப்பின்றியும் அணுகும்போது ஹிட்லர் ஒரு குற்றவியல் ஆட்சிக்குத் தலைமை கொடுத்தார் என்ற முடிவுக்கு அது தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்கிறது. அவப் பெயர் சம்பாதித்த டேவிட் இர்விங் போன்று அந்த ஆட்சியை நியாயப்படுத்த முனைவோருக்குத்தான் திரிப்பதற்கும், பொய்மைப்படுத்துவதற்கும், பொய் கூறுவதற்கும்  வேண்டியிருக்கிறது.

இங்கே தான் சேர்விஸின் பிரச்சினைக்கான மூலம் அமைந்திருக்கிறது. ட்ரொட்ஸ்கியை ஒரு வெறுப்பூட்டுகின்ற, இன்னும் குற்றவியல் அரசியல் ஆளுமையாகவும் கூட சித்தரிப்பதற்கான சேர்விஸின் முயற்சிகளை நிலைநாட்டுவதற்கு அவசியமான விடயங்களை வரலாற்று ஆவணங்களில் இருந்து அவருக்கு எடுக்க முடியவில்லை. எனவே அவர் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, 1930களில் ஸ்ராலின் செய்ததைப் போல, இட்டுக்கட்டல்களுக்கும் பாதி-உண்மைக் கதைகளுக்கும் முற்றுமுதலான பொய்களுக்கும் இறங்க வேண்டியுள்ளது.

ட்ரொட்ஸ்கியின் மரியாதையை அழிப்பது என்ற, ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்தவர் சாதிக்கத் தோற்ற விடயத்தை, தான் வெற்றிகரமாய் முடித்திருப்பதாய் நம்புவதாக சேர்விஸ் ஒளிவுமறைவற்றதொரு தருணத்தில் அறிவித்திருக்கிறார். ஆனால் அவரது முயற்சி முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது. சேர்விஸின் வாழ்க்கைவரலாற்று புத்தகத்தினால் முற்றிலுமாய் சிதைக்கப்பட்டிருக்கின்ற மரியாதை அந்தப் புத்தக ஆசிரியரின் மரியாதை தான்.

Footnotes:

[1] See, en.wikipedia.org/wiki/Habent_sua_fata_libelli [back]

[2] What is History? (London: Penguin, 1990), p. 23 [back]

[3] Service, Trotsky, p. 137 [back]

[4] My Life (Mineola, NY: Dover, 2007), pp. 237-38 [back]

[5] Service, op cit., p. 138 [back]

[6] Translated by Frederick S. Choate [back]

[7] Service, op. cit., pp. 140-41 [back]

[8] Translated by Frederick S. Choate [back]

[9] My Life, p.232 [back]

[10] The English transliteration of Trotsky’s name with a “z” was common in the immediate aftermath of the Revolution. [back]

[11] See, www.marxists.org/archive/trotsky/1918/ourrevo/ch01.htm [back]

[12] “Streit um Trotzki,” February 21, 2012 [back]