சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

From pseudo-left to New Right: The trajectory of France’s Jean-Luc Mélenchon

போலி-இடதில் இருந்து புதிய வலதிற்கு: பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை

By Alex Lantier and Kumaran Ira
18 October 2014

Use this version to printSend feedback

முன்னாளில் 1968க்குப் பிந்தைய தீவிரப்போக்கு மாணவரும், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி (PS) செனட்டரும், முன்னாள் PS அமைச்சரும், இப்போது புதிய இடது கட்சியின் (PG) முன்னாள் தலைவருமான ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை ஒரு அரசியல் எச்சரிக்கை ஆகும். முதலாளித்துவத்தின் முன்கண்டிராத அளவிலான உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், போலி-இடது கட்சிகள் வலது முகாமுக்கு நகர்ந்து கொண்டிருப்பதோடு நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) சுற்றுவட்டம் உட்பட்ட வலது-சாரி குழுக்களுடனான தமது உறவுகளைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 22 அன்று PG இன் தலைமையில் இருந்து விலகி ஆறாவது குடியரசுக்கான இயக்கத்தை (MSR) ஸ்தாபித்திருப்பதன் பின்னர், மெலோன்சோன், சோசலிசம் மற்றும் இடது மரித்து விட்டதையும், தொழிலாள வர்க்கத்தின் பொருத்தமின்மையையும், புரட்சி குறித்த தனது அச்சத்தையும், அத்துடன் மக்களுக்கான ஒரு அரசியல்வாதியாக அவர் உருமாறியிருப்பதையும் பிரகடனம் செய்திருக்கிறார். வரலாற்றுவழியாக அதி-வலது அரசியலுடன் தொடர்புபட்டதாக இருந்து வந்திருக்கும் இந்த நிலைப்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதானது போலி-இடதின் சீரழிவில் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. அவை புதிய வலதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பல தசாப்த காலங்களாக போலி-இடதுகள் வேலை செய்து வந்திருக்கும் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் புவி-மூலோபாய கட்டமைப்பு நொருங்கிப் போயிருப்பதால் மெலோன்சோன் இயக்கப்படுகிறார். போர்கள், பொருளாதார நெருக்கடிகள், முக்கிய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் உலக சக்திகளுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையிலான மாற்றங்கள், அத்துடன் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மீது பெருகிச் செல்லும் வெகுஜனக் கோபம் ஆகியவை பிரெஞ்சு அரசியலை ஸ்திரம்குலையச் செய்திருக்கின்றன. வெகுஜன எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் நிலையில் PS இன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருவதால், கிரீஸில் PASOK சிதறியதையும் ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) வீழ்ச்சியையும் தொடர்ந்து பிரான்ஸிலும் PS உருக்குலைந்து கொண்டிருக்கிறது, FN இன் வாக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

சோசலிசப் புரட்சி அபாயம் தான் மெலோன்சோனின் பிரதான அச்சமாய் இருக்கிறது. ஹாலண்டுக்கு எதிரான வெகுஜனக் கோபம் அவரது பதவிக்காலம் 2017 இல் முடிவடைதற்கு வெகு முன்பாகவே வெடித்துவிடும் என்ற கவலையையே ஜனாதிபதியை அகற்றுவதற்கான ஒரு கருத்துக்கணிப்புக்கு MSR விடும் அழைப்புகள் பிரதிபலிக்கின்றன என்பதை முற்றிலும் மக்கள் இறையாண்மையுடனான ஒரு ஆறாவது குடியரசுக்காக என்ற தலைப்பிலான Le Monde பத்திரிகை தலையங்கம் ஒன்றில் அவர் தெளிவாக்குகிறார். வாக்கெடுப்புகளின் படி (செப்டம்பர் 8-9 இன் IFOP) பிரெஞ்சு மக்களில் 62 சதவீதம் பேர் அவர் முன்னதாகவே அகல வேண்டும் என்று விரும்புவார்களாயின், தடையரண் போராட்டங்கள் அதிகரிக்காமலேயே அது சாத்தியமாக வேண்டும் என்று அவர் எழுதுகிறார்.   

மக்களின் சகாப்தம் என்ற அவரது புதிய புத்தகத்தில் அவர் எச்சரிக்கிறார்: ஒரு முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்கின்ற செறிந்த மக்களின் ஆற்றலானது எரிமலையின் மறுபக்கத்திலும் வெடிப்புகளுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை நான் நன்கறிவேன். 

இத்தகைய கருத்துகள் முதலாளித்துவத்தை எதிர்ப்புரட்சிகரமான வகையில் பாதுகாப்பதாகும். பிரெஞ்சுப் புரட்சியின் ஒளிவட்டத்தில் சுற்றிக் கொடுப்பதன் மூலமாக MSR க்கு ஒரு முற்போக்கு தேசியவாத முலாமைக் கொடுப்பதற்கான மெலோன்சோனின் முயற்சிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு அரசியல் மோசடி ஆகும். குடியுரிமைக்கும் பிரெஞ்சு இறையாண்மைக்கும் MSR புத்துயிரூட்டும் என்று அவர் கூறிக் கொள்கிறார்: 1789 முதலாகவே, அறநெறியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இறையாண்மையை செலுத்துவதில் அனைவரும் பங்கேற்பதையே நாம் குடியுரிமையாக வரையறை செய்கிறோம். 

என்ன அபத்தம்! அறநெறியை மெலோன்சோன் முன்வைக்கும் விதம் 200 ஆண்டுகளுக்கும் முன்பாக ரொபெஸ்பியர் முன்வைத்ததற்கு நேரெதிராக அல்லவா இருக்கிறது. பிரபுக்களை கில்லட்டினில் வைத்துக் கொல்வதையும் அவர்களது செல்வம் மறுவிநியோகம் செய்யப்படுவதையும் நியாயப்படுத்துவதற்காகவே பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் அறநெறியின் அவசியத்தை மேற்கோளிட்டனர். இந்த சாத்தியத்தைத் தான் மெலோன்சோனும் அவரது நண்பரான, வலது-சாரி பில்லியனர் சேர்ஜ் டாஸோவும், இன்று மிகக் பதட்டத்துடன் கட்டாயம் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாயினும், 19 ஆம் நூற்றாண்டில் மார்க்சிசமும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கமும் அபிவிருத்தி கண்டு விட்ட பின்னர், அறநெறிக்கான விண்ணப்பங்கள் இடது-சாரி அரசியலின் அடிப்படையாக இருப்பதெல்லாம் முடிந்து போய் விட்டது.

சோசலிசப் புரட்சிக்கு எதிராக தடுத்துக் கொள்வதற்கும், இடது-சாரி அரசியலை எதிர்ப்பதற்கும் அத்துடன் முதலாளித்துவ சொத்துடைமைகளைப் பாதுகாப்பதற்குமே மெலோன்சோன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மக்களின் சகாப்தத்தில் அவர் இடதின் மரணத்தை அறிவிக்கிறார். அவர் எழுதுகிறார்: ஏதேனும் பகுத்தறிவு அல்லது திட்டங்களை அது கொண்டிருப்பதாக அனுமானித்தாலும் கூட, வரவிருக்கும் உலகத்தின் யதார்த்தங்கள் எதுவும் அதில் காணமுடியாதபடி இருக்கிறது. PS சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற மதிப்பிழந்து விட்ட கண்ணோட்டத்தை மட்டும் தாக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, இடது அரசியலின் மொத்தமும் மரண ஓலத்தில் இருக்கிறது: நோயானது முற்றிய நிலையில் இருக்கிறது. உண்மை இடதினை போலி இடதில் இருந்து பிரித்தறிவதற்கான கற்றறிந்த விளக்கங்களை கொண்டெல்லாம் அதனைக் குணப்படுத்த முடியாது.

சோசலிசத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் தயார் நிலையில் மெலோன்சோன் இருக்கிறார். இடது அரசியலில் புரட்சிகரத் தொழிலாள வர்க்கம் ஆக்கிரமித்திருந்த இடத்தை இங்கே மக்கள் எடுத்துக் கொள்கின்றனர் என்று அவர் எழுதுகிறார். சோசலிசத்தை கடந்து செல்வதற்கு அவர் அழைக்கிறார். குடிமக்கள் புரட்சி, இது பழைய சோசலிசப் புரட்சி அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.

உண்மை தானே. சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவ சொத்துடைமைக்கு எதிராகத் தொழிலாளர்களால் தலைமை தாங்கப் பெறுவது, மெலோன்சோனின் புரட்சியோ தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக முதலாளித்துவ சொத்துடைமையை பாதுகாப்பதற்கான போராட்டமல்லவா. அவரது தேசிய குடிமக்கள் புரட்சிக்கு அவசியமான முக்கியமான விடயங்களை விளக்குகையில் அவர் ஆரம்பிக்கிறார்: முதலாவதாய், சொத்து! இது மிகவும் உணர்வுபூர்வமானதொரு விடயம். சிலரைப் பொறுத்தவரை, இது மனிதர்களின் ஒரு அடிப்படையான உரிமை. நம்மைப் பொறுத்தவரை, இது பயன்படுத்துவோர் உரிமைகளது ஒரு வடிவம் மட்டுமே.

இந்த அருவெறுப்பான வார்த்தை விளையாட்டு என்பது போலி-இடதை மொய்க்கின்ற வசதிபடைத்த சமூக அடுக்குகளுக்கு மெலோன்சோனின் வலது-சாரி லேகியங்களை இனிப்பானதாய் ஆக்குவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. FN, வலது-சாரி மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம் (UMP), மற்றும் PS ஆகியவை முதலாளித்துவ உடைமைகளைப் பாதுகாக்கின்றன. முதலாளிகளுக்கு பயன்படுத்துவோர் உரிமைகள் மட்டுமே இருப்பதாய் மெலோன்சோன் நம்புவதாக நம்மிடம் சொல்கிறார். எப்படியிருந்தாலும், இந்த நிலைப்பாடுகள் ஒரே வர்க்க நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றன.

வலது முகாமுக்கு மெலோன்சோனின் நகர்வை உந்தித்தள்ளுவது முதலாளித்துவத்தின் மரண ஓலம் குறித்தும் சோசலிசத்துக்காக தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டம் குறித்துமான அவரது அச்சம்தான் என்பதை மெலோன்சோனின் புத்தகம் குறித்த ஒரு ஆய்வு தெளிவாக்குகிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியால் மிரட்சி கண்டிருக்கும் அவர், உலகளாவிய நெருக்கடிகள் முடிவில்லாமல் தொடர்ந்து நிகழவிருப்பதைக் கணிக்கிறார், பொருளாதார உருக்குலைவு மற்றும் உலகப் போர் தவிர்த்து வேறெந்த வழியும் இருப்பதாக அவருக்குப் புலப்படவில்லை.

தாக்குப்பிடிக்க முடியாத அமெரிக்க வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் மற்றும் இராணுவச் செலவினத்தையும், அத்துடன் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் வலு அதிகரித்துச் செல்வதையும் சுட்டிக்காட்டி மெலோன்சோன் எழுதுகிறார்: டாலர் உருக்குலையும், அதனுடன் சேர்ந்து அமெரிக்காவும் தான். ஆகுமா என்பதல்ல, எப்போது என்பது தான் கேள்வி. இந்த விடயத்தில், நிலைமைகள் வேகம் பிடிக்கின்றன. அமெரிக்கா தமது விதியில் இருந்து தப்பிக்க முழு மூச்சிலான போரைத் தெரிவு செய்யுமா என்பது தான் இப்போது தெளிவில்லாது இருக்கிறது. அல்லது, அவர்களது பொருளாதார அமைப்புமுறை உருக்குலையுமாயின், ஒன்றியத்தில் எத்தனை மாகாணங்கள் இருக்கிறதோ அத்தனை மாகாணங்களாய் அமெரிக்கா உடைந்து போய் விடாதா? 

எது நடந்தாலும், அது பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு நாசகரமாய் அமையும் என்று மெலோன்சோன் குறிப்பிடுகிறார். அது படிப்படியானதாகவோ அல்லது வலியற்றதாகவோ இராது என்று அவர் எழுதுகிறார். டாலர்களில் சொத்துகள் கொண்டிருக்கும் எவரையும் அது நாசம் செய்துவிடும். அத்துடன் அத்தனை உலகப் பரிவர்த்தனைகளையும் கூட ஒரு குழப்பகரமான வலிப்பில் முடக்கி விடும். பிரான்ஸ் மற்றும் சீனா இடையேயான ஒரு பணரீதியான ஐக்கியத்திற்கு மெலோன்சோன் உற்சாகமில்லாமல் ஆலோசனை சொல்கிறார், ஆனாலும் கூட அதில் தனது ஆழமான அவநம்பிக்கையை மறைக்க அவர் முயலவில்லை.

விரைவாக முடிவைப் பெறுவோம் (Lets get to the end fast) என்றதான தலைப்பு கொண்ட ஒரு பகுதியில், வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட் மீது நிதி ஒழுங்கைத் திணிப்பதன் மூலமாகவும் அத்துடன் அமெரிக்கத் தொழிலாளர்களின் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமாகவும் போர் மற்றும் உலகளாவிய பொறிவின் ஒரு காட்சியை தவிர்க்க முடியலாம் என்பதான ஒரு மெல்லியதான நம்பிக்கைக் கீற்றை அவர் ஆரம்பத்தில் தாங்கிப் பிடிக்கிறார். அவர் எழுதுகிறார்: நெருக்கமான உலக ஒத்துழைப்பின் மூலம் இந்தக் காட்சி தவிர்க்கப்பட முடியும். IMF மற்றும் உலக வங்கியின் மூலமாக வழக்கமாய் மற்ற நாடுகளிடம் இருந்து அமெரிக்கா கோருகின்ற அதே தியாகங்களை அது தன்மீதே சுமத்திக் கொள்வதற்கு ஒப்புக் கொண்டால்... ஆனாலும் இது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. ஆகவே பேரழிவு தவிர்க்கமுடியாதது என்று அவர் நிறைவு செய்கிறார்.

ஒரு பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கம் செய்யத்தக்க எந்தத் தலையீடு குறித்தும் பேசாத இத்தகைய கருத்துகள் மெலோன்சோன் போன்ற போலி-இடது அரைவேக்காடுகளின் ஒட்டுமொத்தமான விரக்திக்கு சாட்சியமளிக்கிறது. முதலாளித்துவ இடது கட்சிகள் மதிப்பிழந்து செல்வதில் மிரட்சியடைந்து, உலகப் போர் மற்றும் பொருளாதார உருக்குலைவினை தவிர்க்கவியலாதவையாக ஏதோ மர்மமான விடயங்களைப் போன்றதொரு வகையில் ஏற்றுக் கொள்வதன் மூலமும், தொழிலாளர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்காய் துடிப்பதன் மூலமும் சோசலிசம் இறந்து விட்டது என்பதாய் அவர்கள் வெறிகொண்டு வலியுறுத்துகிறார்கள். இது இன்னொரு அரசியல் மோசடி ஆகும்.

சோசலிசத்துக்கு தொழிலாள வர்க்கத்தில் வரலாற்றுவழியாக எவ்வளவு விசுவாசம் நிலவியது என்பதையும் 1968 பொது வேலைநிறுத்தம் மாதிரியான காலகட்டங்களில் அது வெடித்தெழுத்திருந்தது என்பதையும் மெலோன்சோன் நன்கறிவார். பிரான்சின் உத்தியோகபூர்வ இடது அரசியலில் தன்னைப் போன்ற பிற்போக்குவாதிகளே மேலாதிக்கம் செய்கின்ற நிலையிலும் கூட இந்த விசுவாசம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதையும் அவர் அறிவார். முதலாளித்துவத்தின் தோல்வி குறித்து விழிப்புணர்வு பெருகி வருவதற்கு இடையே, இன்று அவர் இடதிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் கண்டனம் செய்வதானது சோசலிசத்துக்கு ஆதரவான ஒரு புதுப்பிக்கப்பட்ட வெகுஜன இயக்கத்தின் சாத்தியத்திற்கு எதிராய் முந்திக் கொண்டு தாக்குகின்ற தாக்குதலாகும்

இது தொழிலாளர்களுக்கும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கும் அரசியல் முன்னோக்கு குறித்த அவசர கேள்விகளை முன்வைக்கிறது. உண்மையான இடதையும், போலி இடதையும் பிரித்தறிந்து அடையாளம் காணுகின்ற முயற்சி எதனையும் மெலோன்சோன் கண்டனம் செய்கிறார். உண்மையில் பார்த்தால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கின்ற உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கும் மெலோன்சோன் போன்ற மோசடியான, போலி-இடது பிற்போக்குவாதிகளது வலது-சாரி தேசியவாதத்திற்கும் இடையிலான பெரும்பிளவு தான் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கின்ற மையமான அரசியல் பிரச்சினையாக இருக்கின்றது.

மெலோன்சோனின் கணிப்புகளது மதிப்பு எத்தனை மட்டுப்பட்டதாக இருந்தபோதிலும், முதலாளித்துவத்தின் முன்கண்டிராத அளவிலான மற்றும் மரணகரமான நெருக்கடி இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அத்தனையையும் எழுப்பி நிற்கின்றதான ஒரு நிலைக்கு உலகத் தொழிலாள வர்க்கம் முகம் கொடுத்து நிற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதார உருக்குலைவும் உலகப் போரும் உழைக்கும் மக்களின் தலைக்கு மேல் எந்தநேரமும் அறுந்து விழக்கூடிய அபாயங்களாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையே கடுமையடைந்து வரும் நிதி நெருக்கடிகளும், சீனாவை தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய திருப்பமும், அத்துடன் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான நேட்டோவின் இராணுவ மோதலும் எடுத்துக் காட்டுகின்றன

ஆயினும் நான்காம் அகிலத்தின் அகைத்துலகக் குழு தனது சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அறிக்கையில் எழுதியதைப் போல, ஏகாதிபத்தியத்தை விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கும் அதே முரண்பாடுகள் தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை உந்துதலையும் வழங்குகின்றன. உற்பத்தியின் உலகமயமாக்கமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய பெருக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. எந்தவொரு தேசத்திற்கும் விசுவாசத்திற்குக் கடமைப்பட்டிராத இந்த ஒரு சமூக சக்தி மட்டுமே போருக்கு மூலக் காரணமாக இருக்கின்ற இலாப அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற திறம் படைத்ததாகும். இந்த அறிக்கையின் மூலமாக, போர் அபாயத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சோசலிசப் போராட்டத்திற்கான தலைமையாக நான்காம் அகிலத்தின் அகைத்துலகக் குழுவை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் கட்டியெழுப்புவதற்கு அது தன்னை அர்ப்பணித்துக் கொண்டது

தடையரண்களின் மறு பக்கத்தில், மெலோன்சோன் சோசலிசத்தைக் கண்டனம் செய்து கொண்டும்  வலது-சாரி சக்திகளுடன் வெளிப்படையாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறார். சர்ச்சைக்குரிய அதி-வலது பத்திரிகையாளரான Eric Zemmour ஐ புகழ்கிறார், Patrick Buisson போன்ற தேசியவாத UMP மூலோபாயவாதிகளிடம் நட்பு பாராட்டுகிறார், FN தலைவரான மரின் லு பென் ஐ நோக்கி புதிய நட்புக்கான சமிக்கைகளை செய்கிறார்.

ஆழமாய் ஊழலடைந்த போலி-இடது மற்றும் முதலாளித்துவ இடது அரசியலில் மெலோன்சோனின் தொழில்வாழ்க்கையின் உச்சகட்டமாகத் தான் இதனைப் புரிந்து கொள்ள முடியும். சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), நான்காம் அகிலத்தின் அகைத்துலகக் குழுவில் இருந்தும் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் முறித்துக் கொண்டதற்கு ஒரு ஆண்டுக்குப் பின்னர்அதாவது 1972 இல், ஒரு மாணவ இளைஞராக அவர் OCI இல் இணைந்தார். ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியையும் (PCF) புதிதாக உருவாக்கப்பட்டிருந்த PS ஐயும் இடதுகளின் ஐக்கியம் ஒன்றில் கரம்கோர்ப்பதற்கு நெருக்குவதன் மூலமாக ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்பதான தேசியவாத மற்றும் வர்க்க-சமரசவாத முன்னோக்கினை அந்த சமயத்தில் OCI கொண்டிருந்தது.

அந்த சமயத்தின் பல OCI உறுப்பினர்களைப் போலவே, மெலோன்சோனும் OCI இல் இருந்து விலகி 1976 இல் PS இல் சேர்ந்தார். PS தலைவரும் பின்நாளில் பிரெஞ்சு ஜனாதிபதியுமான பிரான்சுவா மித்திரோனின் உரைகளால் அவர் வென்றெடுக்கப்பட்டதாக அவர் பின்னர் தெரிவித்தார். மித்திரோன் 1983 இல் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றதான தனது சிக்கன நடவடிக்கை திருப்ப த்தை நடத்தியதற்குப் பின்னர் மெலோன்சோன் ஒரு செனட்டராக ஆனார். அரசியல் மூலோபாயத்தை கலந்துபேசுவதற்கு இவர்கள் இருவரும் மீண்டும் மீண்டும் சந்தித்தனர். பின்னர் வெகுஜன வெறுப்பைச் சம்பாதித்த PS தலைமையிலான பன்மை இடது லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தில் (1997-2002) அவர் ஒரு அமைச்சராகவும் ஆனார். அதன்பின் PS இல் இருந்து விலகி PS இன் ஒரு போலி-இடது சுற்றுக்கோளாக PG 2009 இல் ஸ்தாபித்தார்

PS இல் இருந்த முன்னாள் OCI உறுப்பினர்கள் OCI இல் இருந்து தேசியவாத வாய்வீச்சுக்கான ருசியைத் தக்க வைத்துக் கொண்டனர், மித்திரோனிடம் இருந்து அவர்கள் ஐரோப்பிய பாசிசத்தின் மிகப் படுபயங்கர குற்றங்களுக்கான தொடர்புகளைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் போது பாசிச விச்சி ஆட்சியில் மித்திரோன் ஒரு நிர்வாகியாக இருந்திருந்தார், அதன் Francisque பதக்கமும் வென்றிருந்தார். போருக்குப் பின்னர் அவர் செல்வம் படைத்த விச்சி ஆதரவு தொழிலதிபர் குடும்பங்களுடனும் விச்சி போலிஸ் தலைவராக இருந்திருந்த René Bousquet [1942 குளிர்காலத்தில் Gestapo உடன் சேர்ந்து பாரிஸில் இருந்து அவுஸ்விற்ஸ் மரண முகாமுக்கு 13,000க்கும் அதிகமான யூதர்கள் அனுப்பப்பட ஏற்பாடு செய்வதில் உதவியவர்] போன்ற நபர்களுடன் தனது தொடர்புகளைப் பராமரித்து வந்தார்.

இந்தத் தொடர்புகள் எல்லாம் 1980களின் பின்பகுதியில் வெடித்து வெளிவந்தன. வெகுஜன வெறுப்புக்குள்ளான கொள்கைகளை நடத்தியிருந்த போதிலும் கூட இரண்டாவது முறையாக பதவிக் காலத்தை பெறுவதற்கு மித்திரோன் FN ஐ பயன்படுத்திக் கொண்டார். வலது-சாரி வாக்குகளை பிரித்தார். 1988 ஜனாதிபதி தேர்தலில் FN ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்று பழமைவாதிகளிடம் இருந்து வாக்குகளைப் பிரிக்கின்ற வகையில் FN க்கான ஊடக வெளிச்சத்திற்கு பச்சைக் கொடி காட்டியதோடு தேர்தல் சட்டங்களையும் மாற்றினார். தொடர்ச்சியான இருதரப்பு சந்திப்புகளின் மூலமாக இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. மித்திரோனின் வலது-கரமாகக் கருதப்பட்ட ரொலோண்ட் டுமா வுக்கும் FN தலைவரான ரொலோண்ட் கவுச்சருக்கும் இடையிலான கலந்தாலோசனைகளும் இதில் அடங்கும். (காணவும் Cahuzac tax scandal, neo-fascist ties stagger Frances ruling Socialist Party).

இந்தக் காலகட்டத்தில் மித்திரோனின் விச்சி ஆதரவுப் பின்புலம் தொடர்பாக எழுந்த பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இடையில், மித்திரோன் Bousquet ஐ ஆதரித்தார். (மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காய் குற்றம் சாட்டப்பட்டிருந்த  இவர் இறுதியில் விசாரணைக்குச் செல்வதற்கு முன்பாக Christian Didier என்ற மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஒரு எழுத்தாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.) இது மித்திரோனின் இரண்டாம் பதவிக் காலம் நிறைவடைகின்ற சமயத்தில் 1993 இல் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் PS வசம் போலி-இடது சரணாகதி அடைந்ததன் முழுமையான அரசியல் மற்றும் வரலாற்று தொடர்புகளை அம்பலப்படுத்தின. அவை தொழிலாளர்களின் எதிர் பக்கத்தில் தடையரண்களின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருந்தன என்பதோடு மித்திரோனின் நெருங்கிய கூட்டாளிகளாய் இருந்த பல்வேறு முன்னாள் OCI உறுப்பினர்களும் கூட இந்த விவகாரத்தில் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இது குறித்து லியோனல் ஜோஸ்பன் சத்தமில்லாத குரலில் பின்வருமாறு கருத்துக் கூறினார்: 1970கள் மற்றும் 1980களில் பிரெஞ்சு இடதின் தலைவராக இருந்த மனிதரது பயணப்பாதை இன்னும் எளிமையாகவும் இன்னும் தெளிவாகவும் இருந்திருக்கலாம் என்றே ஒருவர் கனவு காண விரும்புவார்.

மித்திரோன் ஜனாதிபதியாக இருந்தபோது அவருடனான உறவை மெலோன்சோன் எவ்வாறு கருதினார் என்று மெலோன்சோனிடம் பின்னர் கேட்ட சமயத்தில், மெலோன்சோன் பதிலளித்திருந்தார்: எனது அன்புணர்வினாலும் அவரது அண்மையில் நான் இருப்பதை பெரும் காவியமாக உணர்ந்த நிலையினாலும் நான் குருடாக்கப்பட்டிருந்தேன். ஆயினும் எதற்காகவும் நான் வருத்தப்படுவதில்லை.

கூட்டாளிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட குற்றவியல் வரலாற்று மரபினை முழுமையாக ஒதுக்கித்தள்ளுகின்ற இந்தத் திறன் தான் முதலாளித்துவ இடது அரசியலில் மெலோன்சோனின் பாத்திரத்தில் முக்கியமான பங்காற்றியது என்பது தெளிவு. இன்று PS இன் உருக்குலைவு மற்றும் மதிப்பிழப்பினால் தூண்டப்பட்டிருக்கும் நெருக்கடிக்கு இடையே அதிவலது கூறுகளுடன் அவர் கொள்கின்ற தொடர்புக்குக் கீழே அமைந்திருப்பது இதுதான்

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஹாலண்டுக்கான ஆதரவு 13 சதவீதமாக சரிந்து விட்டிருக்கிறது, PS க்கும் PASOK இன் கதி நேர்ந்து அது அரசியல் வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய நிலைக்குத் தள்ளப்படுமோ என்று போலி-இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) உள்ளிட்ட PS இன் கூட்டணிக் கட்சிகளே கூட வெளிப்படையாகக் கேட்கின்றன. இந்த உட்பொருளில், PS க்கு NPA உடன் மட்டுமல்லாது, அதி-வலது வட்டாரங்களுடனும் கூட பாலம் அமைத்துத் தருவதற்கான மிக வெளிப்படையான இடைத்தரகர்களில் ஒருவராக மெலோன்சோன் எழுந்திருக்கிறார். பிரான்சில் அதி-வலது அரசியலை பிரதான அரசியல் விவாதத்திற்குள் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தில் இவர் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறார்.

அதி-வலது பத்திரிகையாளரான Zemmour ஐ மெலோன்சோன் பொதுவில் பாதுகாத்துப் பேசியுள்ளார். விச்சி காலத்து பிரான்சின் மிகவும் மரியாதைக்குரிய வரலாற்றாசிரியரான Robert Paxton Zemmour இன் சமீபத்திய புத்தகமான பிரான்சின் தற்கொலை (The Suicide of France) பிரெஞ்சு விரோதி என்று தாக்குகிறது. 2010 இல் கனால்+ தொலைக்காட்சியில் இனவெறிக் கண்ணோட்டத்தை பாதுகாத்துப் பேசியதற்காக Zemmour பொது விமர்சனத்துக்கு ஆளானார். அவர் தொலைக்காட்சியில் கூறியிருந்தார்: மற்றவர்களை விடவும் புலம்பெயர்ந்த பிரெஞ்சு மக்களை போலிசார் அதிகம் நிறுத்தி சோதிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அநேக போதைமருந்து கடத்தல்காரர்கள் கறுப்பினத்தவர்களாகவும் அரபுக்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். இதுவே உண்மை. 

மெலோன்சோன் கருத்துரைத்தார்: எனக்கு Zemmour ஐத் தெரியும். தவறு செய்து விட்டதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த மனிதர் இனவெறி கொண்டவர் அல்ல. இவர் ஒரு அற்புதமான புத்திஜீவி, ஆனால் எல்லா புத்திஜீவிகளையும் போலவே இவரும் பெரும் பிடிவாதம் கொண்டவர். 

பிரதியுபகாரம் இருந்தது என்பது 2012 இல் Le Point இல் வெளிப்பட்டது. பாரிஸில் உள்ள அரபுலக நிறுவனத்தில் UMP இன் ஹென்றி கேய்னோவை சந்திப்பதற்கான அழைப்பு மெலோன்சோனுக்குக் கிடைக்க Zemmour உதவினார். அப்போது வலது-சாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் (அவர் ஒரு பிற்போக்குவாத தேசிய அடையாள விவாதத்தை ஏற்பாடு செய்து FN வாக்கு வங்கிக்கு விண்ணப்பிக்கின்ற ஒரு மூலோபாயத்தை முன்தள்ளிக் கொண்டிருந்தார்) தலைமை ஆலோசகர்களில் ஒருவராய் இருந்த கேய்னோ மதிய உணவு விருந்தில் மெலோன்சோனை வெகு கவனம் செலுத்தி சந்தித்தார்.

Le Point கூறியது, இது இரண்டு மணி நேரம் நீடித்தது, நேட்டோ இராணுவத் தலைமையில் பிரான்சின் பாத்திரம், ஐரோப்பா, மற்றும் பிரெஞ்சு அரசியல் வாழ்க்கை ஆகியவை உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டன, இருவருக்கும் இடையில் ஏராளமான விடயங்கள் பொதுவாக இருந்ததை இருவரும் கண்டுகொண்டனர்.... இந்த விருந்து  முதலாவதாய் பெயர்குறிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், பிரெஞ்சு குடியரசின் இரண்டு ஆர்வமான பாதுகாவலர்கள் இடையே ஒரு உண்மையான ஒத்துழைப்பைக் கொண்டுவந்தது.....  

சார்க்கோசியின் UMP க்கு உள்ளிருந்த அதி-வலதுக்கு அனுதாபமான சக்திகளுடன் மெலோன்சோனுக்கு இருந்த ஒரே இணைப்பு அல்ல இது. சார்க்கோசியின் இன்னுமொரு முதன்மையான ஆலோசகரான பாட்ரிக் புய்சோன் உடனும் அவர் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொண்டார். இந்த பாட்ரிக் புய்சோன் அதி-வலது வாரப் பத்திரிகையான Minute இன் முன்னாள் பத்திரிகையாளர் என்பதோடு, இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய யூத-விரோத பிரச்சாரகரும் அதி-வலது Action Française உறுப்பினருமான சார்ல் மோறாஸின் சீடரும் ஆவார். சார்க்கோசியின் தேசிய அடையாளப் பிரச்சாரத்திற்கும் புய்சோன் ஆதரவளித்திருந்தார்.

2007 இல் புய்சோன் Legion of Honor விருது பெற்றபோது அந்த விழாவில் பங்கேற்க ஒரு நண்பராக அவர் மெலோன்சோனை அழைத்திருந்தார் என்ற செய்தியை 2012 இல் மெலோன்சோன் இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சமயத்தில்  Le Nouvel Observateur வெளியிட்டிருந்தது. Le Nouvel Observateur விளக்கியது: இடது முன்னணியின் வேட்பாளருக்கும் அதி-வலது சார்க்கோசியின் ஆலோசகருக்கும் இடையில் 2007க்கு முன்பிருந்தே, அவர்கள் இருவரும் LCI தொலைக்காட்சியில் ‘Politiquement show நிகழ்ச்சியில் ஒன்றாகத் தோன்றிய போதே, நட்புறவு இருந்தது.

எப்படியிருந்தபோதிலும் அதிவலதின் திசையில் மெலோன்சோனின் மிக வெளிப்படையான முன்னெடுப்பு என்றால், அது சந்தேகத்திற்கிடமில்லாமல், மரின் லு பென்னுடன் அவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்குபெற்று வந்திருப்பது தான். மரின் லு பென் 2011 ஜனவரியில் Tours நடந்த காங்கிரஸ் ஒன்றில் தான் FN தலைவராக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். FN க்கு உள்ளிருக்கும் கூறுகள் இதனை கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபகம் செய்த 1920 Tours காங்கிரஸ்  உடன் ஒப்பிட்டுக் கடந்து செல்ல முயன்றன

FN க்கு, அதன் முந்தைய தலைவரும் மரின் லு பென்னின் தந்தையுமான Jean-Marie கொண்டுவந்ததைக் காட்டிலும், ஒரு கூடுதல் பொது ஏற்புடைய முகத்தைக் கொடுப்பதே மரின்னின் பாத்திரமாக இருந்தது. யூதப் படுகொலையை கேள்வி கேட்பது அல்லது மறுப்பதான Jean-Marie இன் தொடர்ந்த நடவடிக்கைகள் பிரெஞ்சு மக்களில் ஒரு பரந்த பெரும்பான்மை மக்களின் அவநம்பிக்கையையும் வெறுப்பையும் அவருக்குச் சம்பாதித்துத் தந்திருந்தது.

FN மீதான வெறுப்பைக் களைவதற்கான இந்த பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளின் மிக முக்கியமான உடந்தையாளர்களில் மெலோன்சோனும் ஒருவராக இருந்தார். 2011 பிப்ரவரி 14 அன்று BFM-TV இல் மரின் லு பென் உடன் ஒரு ஆரம்ப விவாதத்திற்கு அவர் ஒப்புக் கொண்ட பின்னர், தொடர்ச்சியாக மேலும் பல விவாதங்களில் பங்குபற்றி, மரின் லு பென் உடனான அரசியல் வாய்ப்புகள் திறந்திருப்பதை உறுதி செய்து கொண்டார்.

2012 ஏப்ரலில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் Direct8 இன் தொலைக்காட்சி கேமராக்களின் முன்பாக இருவரும் ஒரு நட்பான காணொளிக் கைகுலுக்கலுக்காய் சந்தித்துக் கொண்டனர். அமைப்புமுறை நடுங்குவதைக் கண்டு உங்களுக்குக் கட்டாயம் மகிழ்ச்சியாய் தான் இருக்கும் என்று மரின் லு பென் மெலோன்சோனிடம் கூறினார். உங்கள் மீதான அழுத்தம் மிகக் கனமானதாய் இருக்கும் என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

உங்கள் மீது அது இன்னும் அதிகமாய் இருக்கும் என்று பதிலளித்த மெலோன்சோன் இன்னுமொரு விவாதத்தை ஏற்பாடு செய்வதற்கும் முன்வந்தார்.

அவருக்கு நன்றி கூறிய மரின் லு பென் ஆனால் தான் ஒரு பாசிஸ்ட் என்று அழைக்கப்படுவதை கேட்டுக் கேட்டுக் களைப்படைந்து விட்டதாகக் கூறினார் (இந்த சந்திப்புக்கு முந்தைய வாரங்களில் மெலோன்சோன் அவரை அப்படித் தான் அழைத்திருந்தார்). 

மெலோன்சோன் பதில் கூறினார், மரின் லு பென் ஆதரவாளர் என்று அழைக்கப்படுவதைக் கேட்டு நானும் களைப்படைந்திருப்பதால், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சோசலிசத்தைக் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கும் மெலோன்சோனின் சமீபத்திய முடிவின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வதற்கு இத்தகைய பரிவர்த்தனை உரையாடல்கள் அர்த்தசூழலை வழங்குகின்றன. அவர் தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் PS இன், சமூக சிக்கன நடவடிக்கைகளின், அத்துடன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார் தான். ஆயினும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடிக்கும் பிரான்சுக்குள்ளாக PS இன் முன்காணாத உருக்குலைவுக்குமான பதிலிறுப்பாக, மெலோன்சோன் அரசியலில் திரும்பிவரவியலாத ஒரு எல்லையைக் கடந்து கொண்டிருக்கிறார்.   

20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் குற்றங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் FN க்கு சளைக்காமல் சமரசப்பட்டு விட்டிருக்கக் கூடிய போலி-இடது நபர்களால் தலைமை தாங்கப் பெறும் ஒரு வன்முறையான பிற்போக்குத்தனமான புதிய வலதின் எழுச்சிக்கு தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கிறது. போலி-இடதைச் சேர்ந்த பிற்போக்குத்தனமான சக்திகளில் இருந்து சுயாதீனப்பட்டும், அவற்றுக்கு எதிராகவும் மட்டுமே, தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகளது சரியான தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

PS க்கும் ஒரு உண்மையான இடது-சாரிக் கட்சிக்கும் இடையிலான அரசியல் வெளியில் ஏதோவொரு இடத்தில் அமைகின்றதொரு கட்சியாக மெலோன்சோன் தனது MSR ஐ உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக முதலாளித்துவத்திற்கான வெகுஜன எதிர்ப்பை நோக்குநிலை தவறச் செய்கின்ற, அதனை வலது-சாரிக் கட்சிகளுடனான முட்டுச்சந்து கூட்டணிகளுக்குள் தள்ளுகின்ற ஒரு கட்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்பெயினில் ஸ்தாபிக்கப்பட்ட Podemos என்ற ஒரு புதிய பிற்போக்குவாத போலி-இடது கட்சிக்காக மெலோன்சோன் காட்டும் ஆர்வத்தின் கீழ் அமைந்திருப்பது இதுதான். இக்கட்சி அதன் தலைவரான Pablo Iglesias மற்றும் NPA இன் ஸ்பானிய கூட்டாளிகளான முதலாளித்துவ-எதிர்ப்பு இடது (IA) ஆகியவற்றைச் சுற்றிய ஸ்ராலினிசப் பேராசிரியர்களால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். வெனிசூலாவில் மறைந்த ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் ஆட்சிக்கு ஆலோசகர்களையும் Podemos அமர்த்தித் தந்திருந்தது. பாரிய ஊடக விளம்பரம், அத்துடன் PSOE மற்றும் ஸ்ராலினிச ஐக்கிய இடது (IU) ஆகியவை மதிப்பிழந்தது ஆகியவற்றை அனுகூலமாக்கி Podemos வாக்கெடுப்புகளில் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறது. வாக்கு வங்கி விடயத்தில் இது PSOE ஐ விஞ்சி விடும் நிலைக்கு வந்திருக்கிறது.  

PSOE உடன் மட்டுமல்லாது, இராணுவத்துடனும் மற்றும் ஜனரஞ்சகக் கட்சியுடனும் (PP) [பாசிச சர்வாதிகாரியான ஜெனரலிஸ்மோ பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தேசிய இயக்கத்தில் இருந்து எழுந்த வலது-சாரிக் கட்சிஉட்பட எவரொருவருடனும் இணைந்து வேலை செய்ய விருப்பமாக இருப்பதாக Podemos அறிவிக்கிறது. சென்ற மாதத்தில் Iglesias அறிவித்தார், PSOE மற்றும் PP உடன் பேசுவதற்கு Podemos தயாராக இருக்கிறது, ஏனென்றால் அரசுக்கான பொறுப்பே எங்களை நகர்த்துகிறது... நாங்கள் குறுங்குழுவாதிகள் அல்லர். வேலைத்திட்ட பிரச்சினைகளில், எங்களுக்கு எவரொருவருடனும் பிரச்சினைகள் இருக்காது.

மாட்ரிட்டில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் கூடியிருந்த தொழிலதிபர்கள் இடையே பேசும்போது Iglesias தன்னை ஒரு தேசப்பற்றாளன் என்று அறிவித்ததன் பின்னர், Podemos ஸ்பெயின் இராணுவத்தில் இருந்து ஆளெடுக்கத் தொடங்கியது. இராணுவத்திற்குள் இருக்கும் அதன் கிளை ஆகஸ்ட் 20 அன்று ஆன்லைனில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அறிவித்தது: இன்று இராணுவம் அவசியமானதாகும், இராணுவ-விரோத விவாதத்திற்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, இராணுவத்திற்குள் இருக்கக் கூடிய அத்தனை சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக நாங்கள் நம்புகின்ற ஒன்றின் அடிப்படையில் ஆட்களை எடுக்க அது அழைப்பு விடுத்தது.

1936-1939 ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் ஸ்பெயின் குடியரசை நசுக்குவதற்கான ஒரு எதிர்ப்புரட்சிகர கிளர்ச்சியில் நூறாயிரக்கணக்கான ஸ்பெயின் மக்களைக் கொன்று குவித்த பிராங்கோவின் இராணுவத்தின் வழித்தோன்றலே இன்றைய ஸ்பெயின் இராணுவம் என்ற விதத்தில், இத்தகைய ஒரு கருத்து மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

எப்படியோ, Iglesias இன் கருத்துகள் மெலோன்சோனின் ஆர்வத்தைப் பற்றவைத்து விட்டன. ஆகஸ்ட் இறுதியில் PG இன் கோடைப் பள்ளியில் பங்கேற்க அவர் Podemos இன் பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரிப் பத்திரிகையான LHumanité இன் விழாவில், Podemos மீது தான் கொண்டிருக்கும் உயர்ந்த மரியாதையை மெலோன்சோன் ஊடகங்களிடம் தெரிவித்தார்

நான் ஒருபோதும் கூறத் துணியாததை அவர்கள் கூறுகிறார்கள் என்று அவர் அறிவித்தார். அவர்கள் ஒரு புதிய மோதலின் பாதையை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய கருத்துகளில் இருந்து சமூகப் பிற்போக்குத்தனத்தின் துர்நாற்றம் தான் எழுகிறது. PSOE, PP மற்றும் இராணுவத்திற்குள் நிலவும் அத்தனை சித்தாந்தங்களின் அடிப்படையில் ஸ்பெயின் இராணுவப் படைகளுக்குள் வென்றெடுக்கப்படுகின்ற ஆட்கள் இவர்களை கூட்டுச்சேர்ப்பதன் அடிப்படையில் என்ன வகை மோதலை Podemos ஏற்பாடு செய்யப் போகிறது? வெறுக்கப்படுகின்ற ஒரு அரசியல் ஸ்தாபகத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலாகவே அது இருக்கும்.