சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The US pivot to Asia and the drive to war against China

அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பும்" சீனாவிற்கு எதிரான போர் உந்துதலும்

By Tom Peters
8 May 2015

Use this version to printSend feedback

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் நியூசிலாந்து சோசலிச சமத்துவ கட்சி குழுவின் முன்னணி உறுப்பினர் டோம் பீட்டர்ஸ் வழங்கிய பேச்சின் உரைவடிவமாகும்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவிற்கு எதிரான போருக்கு நனவுபூர்வமாக தயாரிப்பு செய்து வருகிறது என்பதை கடந்த ஆண்டின் இதே நாளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எச்சரித்தது. அத்தகைய தயாரிப்புகள் மிக வேகமாக நிகழ்ந்து வந்துள்ளன என்பதையே கடந்த 12 மாதகால அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதன் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, அமெரிக்க ஆளும் வர்க்கம் சீன தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சப்படும் இலாபங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தின் மூலவளங்களின் மீது, என்ன விலை கொடுத்தாவது, கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள தீர்மானகரமாக உள்ளது.

ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், நவம்பர் 2011 இல், ஒபாமா நிர்வாகம் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அறிவித்தது. இது, சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கவும், அப்பிராந்தியத்தில் அதன் பொருளாதார செல்வாக்கைப் பலவீனப்படுத்தவும் மற்றும் பெய்ஜிங்கை வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணிய நிர்பந்திப்பதற்குமான ஒரு பரந்த மூலோபாயமாகும். அந்த முன்னெடுப்பு அப்பிராந்தியத்தை பதட்டங்கள் மற்றும் விரோதங்கள் கொந்தளிக்கும் கொப்பறையாக மாற்றியுள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலின் பிரச்சினைக்குரிய பகுதிகளில் சீனாவின் "ஆக்ரோஷம்" மற்றும் "தன்முனைப்பு" என்றழைக்கப்படும் அமெரிக்காவின் முடிவில்லா குற்றச்சாட்டுக்களுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது பொறுப்பற்ற இராணுவ தயாரிப்பு இணைந்துள்ளது. சமீபத்தில் ஒபாமா குறிப்பிடுகையில், சீனா "எங்களுக்கு பாதகமான விதிமுறைகளைக் கொண்டு ஏனைய அப்பிராந்திய நாடுகளைப் பிணைப்பதற்கு" அதன் பரப்பெல்லையை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

அதுபோன்ற கூற்றுகளின் பாசாங்குத்தனம் மலைப்பூட்டுகிறது. அவை யதார்த்தத்தை தலைகீழாக்குகின்றன.

கடந்த மாதம் தான், வட கொரியா மற்றும் சீனாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா மிகப் பெரிய போர் ஒத்திகைகளை தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸூடன் சேர்ந்து நடத்தியது. அடுத்த ஐந்தாண்டுகளில் டஜன் கணக்கான ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் 29 இராணுவ ஒத்திகைகளை நடத்த வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது. அதே காலகட்டத்தில் அமெரிக்க கடற்படையின் 60 சதவீதம் அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்படும்.

அமெரிக்கா ஆயிரக் கணக்கான படையினரை பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய இராணுவத் தளங்களுக்குள் நிலைநிறுத்தி உள்ளது. சீனாவிற்கு எதிரான ஓர் அணுஆயுத போரில் வெற்றி பெறுவதற்கான பெண்டகனது மூலோபாயத்தின் பாகமாக, அது ஜப்பான் மற்றும் கொரியாவுடன் ஓர் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறையையும் அபிவிருத்தி செய்து வருகிறது.

இராணுவ ஆயத்தப்படுதலோடு சேர்ந்து, அமெரிக்க தலைமையிலான பசிபிக் நாடுகளுக்கு இடையிலான கூட்டு-பங்காண்மை (Trans-Pacific Partnership -TPP) உடன்படிக்கை, தற்போது 11 நாடுகளுடன் பேரம்பேசப்பட்டு வருகின்றது. இது, சீன-விரோத முன்னெடுப்பில் பொருளாதார மோதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்க பெருநிறுவனங்கள் ஆதாயமடையும் வகையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டங்களை திருத்தி எழுதுவதே அதன் நோக்கமாகும். பாதுகாப்பு செயலர் ஆஸ்டன் கார்டர் அதன் ஆக்ரோஷமான குணாம்சத்தை பின்வருமாறு அடிக்கோடிட்டு காட்டினார். அவர் கூறுகையில், அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்கின்ற ஓர் "உலகளாவிய ஒழுங்கமைப்பை" ஊக்குவிக்கும் பொருட்டு, TPP உடன்படிக்கை எனக்கு மற்றொரு விமானந்தாங்கி கப்பலை போல அதிமுக்கியமானதாகும்," என்றார்.

சீனாவிடமிருந்து கிடைக்கும் இலாபங்களைப் பங்குபோடுவது தொடர்பாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய சக்திகள் வாஷிங்டனின் ஆட்சேபனைகளை நிராகரித்து, சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியில் (Asian Infrastructure Investment Bank) இணைந்துள்ளன. உலகெங்கிலுமான அமெரிக்க போர்கள் மற்றும் தலையீடுகளில் தற்போது அத்தகைய நாடுகள் கூட்டாளிகளாக செயல்படுகின்ற அதேவேளையில், அவை அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்களைக் கொண்டுள்ளன. இது விரைவிலேயே அவற்றை அமெரிக்காவுடன் மோதலுக்கு கொண்டு வரும்.

இதற்கான வாஷிங்டனின் விடையிறுப்போ, ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தை பாதுகாக்க, முன்பினும் கூடுதலாக அதன் இராணுவ மேலாளுமையின் மீது பலமாக தங்கியிருப்பதாக இருக்கும்.

அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்படும் ஜப்பான், சீனாவில் தியாவு என்றும் ஜப்பானில் சென்காயு என்றும் குறிப்பிடப்படும் கிழக்கு சீனக் கடலின் பாறை தீவுகள் மீது பெய்ஜிங் உடனான அதன் முரண்பாட்டை மிகவும் ஆக்ரோஷமாக பின்தொடர்ந்து வருகிறது. மக்கள் வாழாத இந்த தீவுகளின் மீதான மோதலில் சீனாவுடன் போர் ஏற்பட்டால் அமெரிக்கா ஜப்பானுடன் இணைந்திருக்கும் என்பதாக ஒபாமா கடந்த ஆண்டு உறுதியளித்தார்.

இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஜப்பானின் மிகவும் வலதுசாரி இராணுவவாத அரசாங்கமான சின்ஜோ அபேயின் அரசாங்கம், மீள்ஆயுதமயமாகி வருவதுடன், போருக்கும் தயாரிப்பு செய்து வருகிறது. ஜப்பானிய இராணுவத்திற்கு இருந்த தடைகளை நீக்க அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளித்துள்ள அபே, ஜப்பானுக்கு வெளியே அமெரிக்காவுடன் அவர்களது இராணுவ நடவடிக்கையின் அளவை பரந்தளவில் விரிவாக்குவதற்காக, கடந்த வாரம் ஒபாமா உடன் புதிய பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளில் கையெழுத்திட்டார். இது மோதல் அபாயங்களை இன்னும் பாரியளவில் உயர்த்துகிறது.

டோக்கியோ தற்போது ஓர் அமெரிக்க கூட்டாளியாக உள்ளது என்றாலும், ஜப்பானிய ஆளும் மேற்தட்டு அதன் நீண்டகால ஏகாதிபத்திய அபிலாஷைகளை வாஷிங்டனுக்கு விட்டுகொடுக்க உடன்படாது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே 1941-45 பசிபிக் போரானது, சீனா மற்றும் ஏனைய ஆசிய பகுதிகள் மீது அவ்விரு ஏகாதிபத்திய சக்திகளில் யார் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்டதாகும்.

அப்பிராந்தியம் முழுவதும், ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் போர் உந்துதல் கைகோர்த்து செல்கிறது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய இடங்களில் மாவோவாத மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் உள்ளடங்கியஅரசியல் ஸ்தாபகம், சீன-விரோத தேசபற்றை தூண்டிவிட்டு தொழிலாளர்களது கோபத்தைத் திசைதிருப்ப முனைந்துள்ளன

அனைத்திற்கும் மேலாக, ஆளும் மேற்தட்டுக்கள் அவர்களது சொந்த மக்களைக் குறித்தே அஞ்சுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிராக ஆழ்ந்து உள்ளார்ந்த விரோதம் கொண்டுள்ளனர். பல நாடுகள் ஜப்பானிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளின் மரபால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தசாப்த அனுபவங்கள் வீணாகிப் போய்விடவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய படையெடுப்புகள், பாரிய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவது குறித்த பொய்கள் மீது அடித்தளமிட்டிருந்தன என்பதை மில்லியன் கணக்கானவர்கள் அறிந்துள்ளனர்.

இந்த காரணத்திற்காக தான், ஏகாதிபத்திய குற்றங்களை மூடிமறைக்க ஓர் ஒருமித்த முயற்சிகள் நடந்து வருகின்றன. வலதுசாரி ஜேர்மன் கல்வித்துறை, நாஜிகளது குற்றங்களைப் பெரிதுபடுத்தாது விட முனைந்து வருவதைப் போலவே, அபே அரசாங்கமும் ஜப்பானிய அட்டூழியங்களின் வரலாறை மூடிமறைக்க விரும்புகிறது.

ஜப்பானிய இராணுவத்தின் "ஆற்றுப்படுத்தும் பெண்கள்" (comfort women) குறித்து குறிப்பிட்டதற்காக அமெரிக்க வரலாற்று பாடப்புத்தக பதிப்பாளரை அபே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனிப்பட்டரீதியில் சாடினார். இந்த "ஆற்றுப்படுத்தும் பெண்கள்" என்பவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது கொரியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து பிடித்து வரப்பட்ட பாலியல் அடிமைகளாக இருத்தப்பட்டவர்கள் ஆவர். கல்வித்துறையில் உள்ள அபேயின் சித்தாந்த கூட்டாளிகள் சிலர், 1937 நான்ஜிங் கற்பழிப்பு சம்பவத்தையே மறுக்கின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இரண்டு அரசாங்கங்களுமே, முதலாம் உலகப் போரின் கொலைக் களங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததை பெருமைப்படுத்திக் கொள்ள நூறு மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகின்றன. இத்தகைய சித்தாந்தரீதியிலான பிரச்சாரங்கள் கூர்மையான எச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டும். புதிய தலைமுறைகளை ஒரு மூன்றாம் உலக போருக்குத் தயார் செய்வதற்கு, முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்கள் சுத்தப்படுத்தப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தயாரிப்புகளைச் செய்தாக வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய அன்ஜாக் தின கூட்டங்கள், போர் மீதான தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெறுப்புணர்ச்சிக்கு குரல் கொடுத்தன. தொழிலாள வர்க்கத்தின் இந்த வெறுப்பு எந்த நாட்டின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளிலும் வெளிப்பாட்டைக் காண்பதில்லை. சர்வதேச சோசலிச கோட்பாடுகள் மற்றும் ரஷ்ய புரட்சி படிப்பினைகளின் அடித்தளத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க அழைப்பு விடுத்தது.

நமது இயக்கம் மட்டுமே தனித்து முன்நிற்கிறது. 2003 ஈராக் படையெடுப்புக்கு எதிரான பாரிய போராட்டங்களை ஒரு முட்டுச்சந்துக்குள் கொண்டு செல்ல தலைமை கொடுத்த மத்தியதர வர்க்க போலி-இடதுகள் மற்றும் தாராளவாதிகள், ஏகாதிபத்திய முகாமில் இணைந்துள்ளன. இப்போது அவை, சீன மற்றும் ரஷ்ய "ஏகாதிபத்தியம்" என்றும், அவற்றின் "விரிவாக்கும் போக்கு" என்றும், வாஷிங்டனின் பாசாங்குதனமான குற்றச்சாட்டுக்களையே எதிரொலித்துக் கொண்டு, போர் உந்துதலுக்கு உதவி வருகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணையுமாறும், ஆசியா மற்றும் பசிபிக் முழுவதிலும் புதிய பிரிவுகளை கட்டமைக்கும் போராட்டத்தில் இணையுமாறும், இக்கூட்டத்தில் நாங்கள் உங்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். இது மட்டுமே, ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கு ஒரே வழியாகும்.