World Socialist Web Site www.wsws.org


SEP (Sri Lanka) public meeting: A socialist program to defend plantation workers

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) பொதுக் கூட்டம்: தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு சோசலிச வேலைத்திட்டம்

1 March 2016

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், தொழில் மற்றும் நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடுவதற்காக, மத்திய மலையக மாவட்டத்தில் ஹட்டனில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளன.

உலக தேயிலைச் சந்தையில் நெருக்கடியை சுட்டிக்காட்டும் பெருந்தோட்ட கம்பனிகள், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு சம்பள அதிகரிப்பும் கொடுக்க உறுதியாக மறுக்கின்றன.

மாறாக, 22 பெரும் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், தற்போதைய அற்ப ஊதிய முறையை மாற்றி, பண்ணை அடிமை முறைக்கு சமமான ஒரு வருமானப்-பகிர்வு திட்டத்தை ஸ்தாபிக்க முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் தொழிலாளர்களின் வருமானத்தை குறைப்பது மட்டுமன்றி, வேலைச் சுமை அதிகரிப்பதுடன் தற்போதைய ஓய்வூதிய மற்றும் நலன்புரி வசதிகளை அபகரிக்கும்.

இலங்கையின் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் அநேகமான பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், நாள் சம்பளத்தை 1,000 ரூபாவால் உயர்த்த வேண்டும் என்ற தமது மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கையையும் கூட கைவிட்டுவிட்டுள்ளன. அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளின்களின் திட்டங்களை முழுமையாக ஆதரிக்கின்றன. பல தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக போராட நடவடிக்கை எடுத்த போதிலும், தொழிற்சங்கங்கள் அவர்களைக் காட்டிக்கொடுத்து கம்பனிகளால் தூண்டப்படும் பொலிஸ் வேட்டையாடலுக்கும் ஒத்துழைப்பு அளித்தன.

தோட்டத் தொழிலாளர்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல், நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள செய்ய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக தமது உரிமைகளை பாதுகாக்க முடியாது, அதிகரித்துவரும் தாக்குதல்களை எதிர்த்துப் போராட ஒரு சோசலிச முன்னோக்கு அவசியம். நியாயமான சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.

தோட்டங்கள் தனியாரின் உடமையாக இலாபத்துக்காக இயங்கும் வரை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது சாத்தியமற்றது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட அழைப்பு விடுக்கின்றது. இது, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சியில் இருத்த, தொழிலாள வர்க்கம் ஒரு பொதுவான போராட்டத்தை முன்னெடுப்பதன் பகுதியாக மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., இந்த சோசலிச வேலைத் திட்டத்தை பற்றி கலந்துரையாட ஹட்டன் கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு பெருந்தோட்டங்கள் மற்றும் வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்க்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

இடம்: நகர மண்டபம், ஹட்டன்

நாள் மற்றும் நேரம்: மார்ச் 13, ஞாயிறு, பி.ப. 2 மணி