ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Police kill young worker in northern Sri Lanka

வட இலங்கையில் இளம் தொழிலாளியை பொலிஸ் கொன்றது

By our correspondents 
14 July 2017

பருத்தித்துறைக்கு அருகில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் திங்கட்கிழமையும் செவ்வாயன்றும் ஒரு இளம் தொழிலாளி பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். யாழ்ப்பாண குடாநாட்டின் வட முனையில் அமைந்துள்ள இந்த நகரத்தில், தமிழ் பிரதேசவாசிகள் 1984ல் இனவாத பொலிஸ் வன்முறை மற்றும் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான யோகராஜா தினேஷ், ஒரு லொரிக்கு பின்னால் பயணித்த போது சனிக்கிழமை மாலை கொல்லப்பட்டார். லொரியில் ஏற்றப்பட்டிருந்த மணல் மீது அவர் உட்கார்ந்து இருந்தார். தகவல்களின்படி, பொலிஸ் T-56 ரக துப்பாக்கியால் சுட்டதில் அவர் மார்பு மற்றும் இடுப்பில் காயமடைந்தார்.


யோகராஜா. தினேஷ்

லொரியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்செல்லப்பட்டது என்றும், சாரதி உத்தரவுகளுக்கு பணியத் தவறிவிட்டதால் தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் கூறிக்கொண்டது. பொலிஸ் காவல் நிலையத்திலிருந்து இரண்டு அதிகாரிகள் வாகனத்தை மோட்டார் சைக்கிளால் துரத்தி அதன் மீது சுட்டனர் என்று போலீசார் ஒப்புக் கொண்டனர்.

சாரதியும் மற்றொருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களை கண்டு பிடிக்க பொலிசார் தேடுதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சாதாரண பொலிஸ் நடைமுறைகளின் கீழ், அதிகாரிகள் சந்தேக நபர்களை நிறுத்தி கைது செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் வேண்டுமென்றே தினேஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

செய்திகளின் படி, கோபமும் மனக்கலக்கமும் கொண்ட துன்னாலை கிராமத்தினரும் அருகிலுள்ள பிரதேசவாசிகளும் இப்பகுதியின் காவல் நிலையத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு பொலிஸ் ஜீப்பும் சேதமடைந்துள்ளது. கனரக ஆயுதமேந்திய விசேட அதிரடி படை (STF) உறுப்பினர்களும் ஒரு கவச வாகனமும் கிராம மக்களை அச்சுறுத்துவதற்கும் எதிர்ப்புக்களை முறியடிக்கவும் திரட்டப்பட்டனர்.

மெய்சிலிர்க்கும் படுகொலைகளை மூடிமறைக்கும் மற்றும் பிரதேசவாசிகளின் சீற்றத்தை தணிக்கும் முயற்சியில், பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர, “சம்பவத்தை விசாரிக்க” யாழ்ப்பாணத்திற்கு விசேட பொலிஸ் பிரிவை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு பொலிஸார் இடைநிறுத்தப்பட்டு ஜூலை 29 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர, அதிகாரிகள் "அதிகமான அதிகாரத்தை பயன்படுத்தினர்" என்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

யோகராஜா தினேஷின் மரணம் ஒரு விபத்து அல்ல, மாறாக வறுமை பீடித்துள்ள மற்றும் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட பிராந்தியத்தில் தற்போது நிலவும் பொலிஸ் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவே ஆகும்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டு இனவாத போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண மக்கள் இன்னும் ஏறத்தாழ இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், தொடர்ந்து போலீஸ் மற்றும் இராணுவ புலனாய்வு கண்காணிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) மௌன ஆதரவைக் கொண்ட கொழும்பு அரசாங்கம், மோதலின் போது நடந்த இராணுவத்தின் பல யுத்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை நசுக்கிவந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பல வறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் துன்னாலையும் ஒன்றாகும். பிரதேசவாசிகளுக்கு நிரந்தர வேலை இல்லை அதனால் அவர்கள் அனைத்து விதமான தற்காலிக வேலைகளையும் செய்வதன் மூலம் உயிர் வாழ முயற்சிக்கின்றனர். சில இளைஞர்கள் மணல் அகலும் தொழிலில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். லொரி உரிமையாளர்கள் அவர்களுக்கு ஒரு சுமைக்கு 300 ரூபாய் வரை செலுத்துகின்றனர். மற்றவர்கள் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான சதுப்பு நிலங்களில் விறகு சேகரிக்கவும், வீட்டுப் பயன்பாட்டிற்கு அவற்றை விற்கவும் செல்கின்றனர். அவர்கள் காடுகளை அழிப்பதாக குற்றம்சாட்டி பொலிஸ் அடிக்கடி இளைஞர்களை கைதுசெய்து வருகின்றது.

இந்த பகுதியில் இது போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களில் தினேஷின் குடும்பமும் ஒன்று. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது கல்வி கைவிட்டுவிட்ட இந்த இளைஞன், ஒரு அமைதியான மற்றும் அன்பான மனிதர், எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவர் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறினர்.

"நாங்கள் ஒரு ஏழை குடும்பம்," என்று தினேஷின் சகோதரி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். "எங்கள் அப்பா குழந்தை பருவத்திலேயே எங்களை விட்டுவிட்டு சென்றதால் நாம் தாயுடன் வாழ வேண்டியிருந்தது. அவர் பல்வேறு வேலைகளை செய்திருந்தாலும், அவருக்கு சரியான ஜீவனோபாயம் கிடைக்கவில்லை. எங்கள் மாமன்மார்கள் நமக்கு உதவினர். எங்கள் சிறுவர் பருவம் மிகவும் சோகமாக இருந்தது.

"எனது சகோதரர் தினேஷ் சவுதி அரேபியாவுக்குச் சென்றார், அங்கு அவர் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தார். அந்த வேலைக்கு அவரை அனுப்ப பணத்தை முழுமையாக கொடுக்க முடியவில்லை. அதனால் நாங்கள் கடன் வாங்கினோம். சவுதி அரேபியில் அவர் விபத்துக்குள்ளாகி மூன்று மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றார். அவர் விடுமுறைக்காக இங்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் திரும்பப் போகிவிருந்தார். இப்போது அவர் பொலிஸால் கொல்லப்பட்டார்."

தினேஷின் மாமா ஒருவர் கூறியதாவது: "[முடிந்த] போரைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், ஆனால் படுகொலைகள் இன்னும் நடக்கின்றன. நாம் [ஜனாதிபதி] மைத்திரிபால சிறிசேன மற்றும் [பிரதமர்] ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தோம், ஆனால் எங்களது வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை.

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறது; அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன, எமது மக்களுக்கு சரியான தொழில்கள் இல்லை. [வட மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தலைவர்] சி.வி. விக்னேஸ்வரன், எமக்கு தமிழ் பொலிஸ் தேவை எனக் கூறியிருக்கின்றார். ஆனால், தமிழ் பொலிஸ் தமிழ் மக்களைக் கொல்வதையே நாங்கள் பார்த்தோம்."

தினேஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பொலிஸ் நடவடிக்கைகளை கண்டனம் செய்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "பொலிஸ் ஒரு வாகனத்தை நிறுத்த முடியும், ஆனால் எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் மக்களை சுட முடியும்? இப்போது போர் நடக்கவில்லை, ஆனால், ஏன் பொலிசார் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள்? போலீஸ் அடக்குமுறை எங்கள் பகுதியில் தொடர்கிறது, நாங்கள் அதை எதிர்க்கிறோம். இங்கு சரியான தொழில் இல்லை, அதுதான் முக்கிய பிரச்சினை."

தற்போதைய போலீஸ் மற்றும் இராணுவ அடக்குமுறைகள் மாகாணத்தில் வெடிநிலையில் உள்ள சமூக மற்றும் அரசியல் நிலைமையை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த அக்டோபரில் பொலிசார் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர். புவுன்ராஜ் சுலக்ஷன், நடராசா கஜன் ஆகிய மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சுடப்பட்டனர். வாகனத்தை நிறுத்துவதற்கு மாணவர்கள் மறுத்துவிட்டதாக பொலிசார் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு இன்னும் இழுபட்டு வருகிறது.

தினேஷ் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழ் தலைவர்கள் என கூறிக்கொள்பவர்கள் முதலைக் கண்ணீர் வடித்தனர். தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவர் எம்.ஏ. சுமந்திரன் "பொலிஸ் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது. சட்டவிரோத மணல் அகல்வில் தனிநபர்கள் ஈடுபட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்கள் உயிர்களை பறிக்க முடியாது," என்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், "ஒரு தமிழ் இளைஞனை தமிழ் பொலிஸ் சுட்டுக் கொன்றதால் இந்த சம்பவத்தை நாம் சகித்துக் கொள்ள முடியாது,” எனத் தெரிவித்தார்.

அதிகளவில் தமிழ் பொலிசாரை நியமிக்க பிரச்சாரம் செய்யும் விக்னேஸ்வரன், அவர்கள் தமிழ் மக்களுக்கு “சேவை” செய்வர் என கூறிக்கொள்கின்றார். ஆனால் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் அடக்குமுறை இயல்பும் நடவடிக்கைகளும் வேறுபட்டவை அல்ல. அது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தால் அல்லது பிற ஆளும் செல்வந்த தட்டினரால் நிர்வகிக்கப்படுகின்றதா என்பது பிரச்சினை அல்ல.

அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழர்கள் வாழும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயக-விரோத அடக்குமுறையை பராமரிக்க உதவுகின்ற முக்கிய கருவியாகும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

Sri Lanka’s Punguduthivu: An island devastated by war
[24 June 2015]

Sri Lanka: Tamil parties launch communal campaign to divert social tensions
[9 February 2017]

Infighting in Tamil party signifies deep political crisis in Sri Lanka
[21 June 2017]