ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුවේ පොලිස්-මිලිටරි ආඥාදායක සැලසුම් පරාජය කරනු!

இலங்கையில் தற்போதைய தீர்க்கமான அரசியல் நிலைமை பற்றி சோ.ச.க./IYSSE நடத்தும் பொதுக் கூட்டம்  

15 May 2019

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் நிலவும் தீர்க்கமான அரசியல் நிலைமை பற்றி கலந்துரையாடுவதற்காக மே 22 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன. "அரசாங்கத்தின் பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத் திட்டங்களை தோற்கடி" என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், குண்டுத் தாக்குதல்களை சாக்குப் போக்காகப் பற்றிக்கொண்டு, நபர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்காக இராணுவம் மற்றும் பொலிசுக்கு மிகப் பரந்த அதிகாரங்களை வழங்கும் அவசரகால சட்டங்களை திணித்து, கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், இத்தகைய ஒடுக்குமுறை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் அதைச் சுரண்டிக்கொள்வதன் பேரில், அரசாங்கத் தலைவர்களும் பாதுகாப்புப் படைகளும் தாக்குதல்களை நடத்த அனுமதித்துள்ளன.

இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம், ஏப்ரல் 21 அன்று குண்டுத் தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமிய குழுக்கள் அல்ல. மாறாக அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் இறங்கி வரும் தொழிலாளர் வர்க்கம், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளே ஆகும். வளர்ந்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்ட அலையின் பகுதியாக, இலங்கை தொழிலாளர்களும் தங்களது வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்புபட்டுள்ளதை சுரண்டிக்கொண்டு, அரசாங்கமும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஏனைய கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்தவும் பிளவுபடுத்தவும் முஸ்லீம் விரோத இனவாதத்தை கிளறிவிடுகின்றன.

அமெரிக்கா, ஏப்ரல் 21 சம்பவத்தை பற்றிய விசாரணைக்கு உதவும் சாக்குப் போக்கில், எஃப்.பி.ஐ. மற்றும் பசிபிக் கட்டளையகத்தின் அதிகாரிகளை தீவுக்கு அனுப்பி, சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதல் திட்டங்களுக்கு இலங்கையை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைத்துக்கொள்ள இந்த பயங்கரவாத தாக்குதலை சுரண்டிக்கொண்டுள்ளது.

கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகளும் அவற்றைச் சூழ்ந்து நிற்கும் போலி-இடதுகளும், அரசாங்கத்தின் அவசரகாலச் சட்டங்களுக்கும், எனவே தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான அடக்குமுறை திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அணிதிரண்டுள்ளன.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் இன பிளவுகளைக் கடந்து ஐக்கியப்பட்டு, அரசாங்கத்தின் பொலிஸ்-இராணுவ சர்வாதிகார திட்டத்தை தோற்கடித்து, முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதன் பேரில், சுயாதீன அரசியல் சக்தியாக அணிதிரள்வதே தொழிலாள வர்க்கத்தின் முன் தற்போதுள்ள அவசர பணியாகும். இது தெற்காசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் பரந்த போராட்டத்தின் பாகமாகும். ஏகாதிபத்திய போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி இதுவே ஆகும்.

இந்த புரட்சிகர முன்னோக்கு பற்றி கலந்துரையாட கொழும்பில் நடத்தப்படும் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதி மற்றும் நேரம்: மே 22, புதன், மாலை 4 மணிக்கு

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்